அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


வசந்தகாலத் தாக்குதல்

இதுவரையில், நாம், கலை, காவியம் என்ற காரணம் காட்டியும், கற்பனைச் சுவை காலக்கருத்து என்ற சாக்குக் கூறி, கம்பஇராமாயணம் பெரிய புராணமெனும் ஆரிய ஏடுகளைத் தீயிலிடுவதைத் தடுக்க முனைந்த தோழர்கள் விடுகணைகளை ஏற்று நின்றதுடன், அவர்களின் காரணங்கள் வெறும் போலி என்பதனை விளக்கி வந்தோம். இனி, நாம் இக்கலைவாணரின் கணைகள் வரின் வரவேற்கத் தயாராகவே இருக்கிறோம், என்றாலும், இனி நாமும் ஓரளவு தாக்குதலில் இறங்காமுன்னம், கலை, கலை, என்ற சல சலப்புக் காட்டிக்கொண்டு, சந்து பொந்துகளிலிருந்து கிளம்பும் பேர்வழிகளின் கூச்சலை ஆதரித்தவராவோம் என்று அஞ்சியே வசந்தகாலத் தாக்குதலைத் துவக்கத் தீர்மானித்துள்ளோம். இனி, அடுத்தடுத்துவரும் இதழ்களில், நாம்விடும் வினாக்களுக்கு விடையிறுக்க, கலைவாணர் முன்வர வேண்டுகிறோம். அவர்களின் விடைகளை, “திராவிடநாடு” வெளியிட்டுத் தமிழகத்தின் தீர்ப்புக்கு எதிர்நோக்கி நிற்கும் என்று உறுதி கூறுவோம்.

சித்திரத் தமிழை எத்துறைக்கேனும் பயன் படுத்துவதே நோக்கமெனக்கொண்டு விருதுநகர் சுயமரியாதை மாநாட்டிலே, வீரச்சுவையைக் காட்டினோம், இதுபோது சைவரும் அதிசயிக்கச் சைவம் பேசிப் பண்பாடிடுவோம், வைதீகரும் வியக்கும் விதமான வறட்டு வாதத்தைக் காட்டுவோம், அஞ்சுவது யாதொன்றுமில்லை இனி அஞ்சவருவதுமில்லை என்று கூறுவோம், என்று பேசிடும் சமயச் சைவர்கள், விடும் வினாக்களையல்ல நாம் குறிப்பிடுவது. அவை நமக்கு ஓய்வு நேர விளையாட்டுக்குப் பயன்படட்டும். அந்த இளந்தூயமணிகளையல்ல நாம் காணவிரும்புவது; உண்மை யிலேயே நாம் தவறான கொள்கை கொண்டிருக்கிறோம் என்பதை ஆதார பூர்வமாக விளக்கி நாம் தவறு செய்பவராகத் தோன்றினால் நம்மைத் தடுத்தாட்கொள்ளக்கூடிய உரிமையும் தகுதியும் படைத் செந்தமிழ்ப் புலவர்களையே நாம், அன்புடன் அழைக்கிறோம், விடையளிப்பீராக என்று. இராமாயணம் என்பது ஆரிய திராவிட போராட்ட காதை என்றும்; இராமன் ஆரியன், இராவணன் தமிழன் என்றும், நாம் கூறுகிறோம். இதை மறுத்திடும் அன்பர்களை மூன்று கேள்விகள் கேட்கிறோம்.

1. இராமாயணம் ஆரியதிராவிடப் போராட்டம் என்ற ஆராய்ச்சிக் கருத்துகளை வெளியிட்டவர்களை நீவிர் இதுவரை மறுத்துக் கூறி, உமது வாதத்தைச் சரித இலக்கிய ஆராய்ச்சியாளர் மன்றம் ஒப்புக்கொள்ளச் செய்ததுண்டா? இல்லையேல், இனியேனும் செய்யும் உத்தேசமுண்டா?

2. ஏற்கெனவே ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்ட முடிவுகளைத் திருத்தவும், அடியோடு மாற்றவும் உங்கட்கு, அந்த ஆராய்ச்சி யாளர்களுக்குக் கிடைத்த சான்றுகளை விட, வேறு விசேஷமான சான்றுகள் கிடைத்துள்ளனவா? உண்டெனில், அவையாவை?

3. நீவிர் இதுபோது வெளியிடும் புதுமையான கருத்தைச், சரித ஆசிரியர்கள், கல்லூரிகள், ஆகிய பீடங்களிலே ஒப்புக்கொள்ளச் செய்ய முன் வருவீர்களா?

இராமாயணம் ஆரிய திராவிடப் போராட்ட காதை என்றும், இராவணாதியர் தமிழர், இராமனாதியர் ஆரியர் என்றும், இதுவரை கூறியுள்ள ஆராய்ச்சியாளர் பலர். அவர்களிற் சிலரின் மொழிகளை ஈண்டு தருகிறோம். நம்மிடம் போரிடும் புலவர்கள், இந்த ஆராய்ச்சி அரண்களைத் துளைத்துத் தகர்த்துவிட்டுப் பிறகு நம்மீது பாயட்டும், என்பதற்காக.

“தாம் செய்த வெறியாட்டு வேள்விகளை அழித்தமை பற்றியே, அவ்வாரியர் பெரிதுஞ் சினங்கொண்டு, அவ்வேளாளரையும் அவருள் அரசரான வேளிரையுந் தாசியர் இராக்கதர், அசுரர், என்று இகழ்ந்து கூறி அவரைத் தாழ்த்துதற் பொருட்டுப் பொய்யான பல புராணக் கதைகளையும் எழுதிவைப்பாராயினர்.

“இராமன் காலத்தில் தென் இந்தியா “தஸ்யூக்கள்” என்ற ராக்ஷசர்களுக்குச் சொந்தமாக யிருந்தது. இவர்கள் ஆரிய முனிவர்கள் செய்து வந்த யாகத்தை எதிர்த்தார்கள். இருந்தாலும் வட இந்தியாவிலிருந்து வந்த ஆரியர்களைப்போலவே இந்த ராக்ஷசர்கள் என்பவர்களும் நாகரிக மடைந்திருந்தார்கள்.

“காடுகளிலிருந்த மக்கள் யாரென்பது இராமருக்கும் அவரைச் சேர்ந்த ஆரியர்களுக்கும் தெரியாது. அழகில்லாதவர்களைக் குரங்குகளென்று அழைத்தார்கள். அவர்களிலேயே மிகுந்த பலமும் தைரியமும் செல்வாக்கு முடையவர்களை அரக்கர்களென்று அழைத்தார்கள். தென் இந்தியாவில் வசித்த மக்களே இப் பெயர்களால் அழைக்கப்பட்டார்கள்.

“இராமாயணக் கதையானது புரோகித வகுப்பாருக்கும் யுத்த வீரர் கூட்டத்திற்கும் உண்மையாகவே நடந்த சச்சரவையும் சண்டையையும் குறிப்பதாகும். இவ்விஷயமானது இலக்கிய உருவத்தில் உபநிஷத்துகளிலுமிருக்கிறது. ராமன் தென் இந்தியாவிலுள்ள ஆரியரல்லாத கூட்டத்தோடு நட்புக் கொண்டான். அவர்களே குரங்குகளென்றும், கரடிகள் என்றும் வர்ணிக்கப் பட்டிருக்கிறார்கள்.

“இராமாயணகதைக் காலத்தில் தென் இந்தியா முழுதும் ஆரியரல்லாதார் வசித்து வந்தார்கள். இவர்களைத்தான் இராமாயணத்தின் ஆசிரியர் குரங்குகளென்றும், கரடிகளென்றும், இலங்கையி
லுள்ள ஆரியரல்லாத மக்களை அசுரர்களென்றும் வர்ணித்து எழுதி இருக்கிறார்கள்.

“ஆரியரல்லாத தேச மக்கள் காடுகளுக்குள் விரட்டப் பட்டார்கள். அதுவும் போதாதென்று அவர்களை ராக்ஷசர்கள் என்றும் அசுரர்கள் என்றும் ஆரியக் கவிகளும், ஆரியப் புரோகிதர்களும் நூல் எழுதிவைத்தார்கள். ஆரியரல்லாதார்களுக்கு, ஏற்கனவே இருந்த தஸ்யூ அல்லது விரோதி என்ற பெயர் நாளடைவில், பிசாசு, பூதம், ராக்ஷசன் என்ற பெயர்களாக மாற்றப்பட்டது.

“இராமாயணக் கதையானது ஆரியர்களுடைய பலத்தைக் குறிப்பிடவும் அவர்களுடைய எதிரிகளும் விரோதிகளுமாகிய திராவிடர்கள் எவ்வளவோ உயர்ந்த நாகரிகத்தை அடைந்திருந்துங் கூட, அவர்களை மிக மோசமான, கேவலமான முறையில் சித்தரித்துக் காட்டுவதற்காகவும் எழுதப்பட்டதாகும்.”

“வெற்றி பெற்றவர்களுக்கு இயற்கையாக ஏற்படும் அகங்காரத்தில் பிராமணர்கள் தங்கள் விரோதிளாகிய தஸ்யூக்களைக் குரங்குகளென்றும், கரடிகளென்றும், எழுதி வைத்தார்கள்.”

“இராமாயணக் கதையின் உட்பொருள் என்னவெனில் ஆரிய நாகரிகத்தின் தலைவனுக்கும் இராவணனுக்கும் நடந்த சண்டையே யாகும்.”

“இரண்டு இதிகாசங்களும் ஆரியர்கள் பரவிய பருவங்களை வெகு தெளிவாய்க் குறிப்பிடுகின்றன. மகாபாரதம் கங்கை நதி வெளியில் அவர்கள் பரவியதையும், இராமாயணம் தென் இந்தியாவை அவர்கள் கைப்பற்றியதையும் உணர்த்துகின்றன.”

இன்னோரன்ன பிற ஆராய்ச்சியாளர்களின் ‘தீர்ப்பை’ நம்மை எதிர்க்குமுன், கம்பதாசர்கள் தகர்த்தெறிய வேண்டாமா? அதனை இதுவரை செய்தனரில்லை. இனியேனும் செய்ய இயலுமா? எங்கே பார்ப்போம்!

(திராவிடநாடு - 02.05.1943)