அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


வழக்காட

“திராவிட நாடு” இதழிடம் ரூ.3000.0.0 ஜாமீன் தொகையாகப் பறிக்க முற்பட்டு, அடக்குமுறை ஆயுதத்தைக் கட்டவிழ்த்து விட்டிருக்கும் சென்னை அரசியலாரின் போக்கைக் கண்டிப்பதோடு, நாம் வழக்காடு மன்றம் ஏறி, வாதாடி, நீதிகோரி நிற்கவேண்டியது அவசியமாகும் என்பதை வற்புறுத்தி அன்பர்களும் ஆதரவாளர்களும் பலர் நம்மை ஊக்குவித்து வருகிறார்கள்.

“திராவிட நாடு” மீது அரசியலார் தொடுத்திருக்கும் குற்றச்சாட்டு, 1931 ம் ஆண்டின் இந்தியன் பிரஸ் (அவசர அதிகாரங்கள்) சட்டம், (1913ம் ஆண்டின் சென்ட்ரல் ஆக்ட் XXIII பிரிவு 4 விதி (1) (5) படியாகும். (Indian Press Act (Emergency Power) Act. 1931 (Central Act
XXIII of 1931) Section 4(1) (2) இந்த விதியின் கீழ்ச் செய்திருப்பதாகக் கருதப்படும் குற்றத்திற்காக, அதே சட்டம் பிரிவு 7 விதி (3) படி. (Same Act Section 7 (3) ரூ. 3000 ஜாமீன் தொகை கட்டியாக வேண்டும் என்று உத்தரவு இடப்பட்டது.

குற்றமுடையனவாகக் கூறப்படும் கட்டுரைகள், 4.4.48 இதழில் வந்த “காந்தி ராமசாமியும் பெரியார் ராமசாமியும்” என்ற தலையங்கமும் 18.4.48 இதழில் வந்த ‘வெள்ளி முளைக்க 8 ஆண்டுகள்! ‘வகுப்புவாதம்’ சோகத் தொடர் கதை” என்ற தலையங்கமுமாகும்.

கடமையைச் செய்தோம் என்ற களிப்பைப் பெறுவதற்காவது மன்றம் ஏறி வாதாடி நின்று பார்க்கலாம் என்றே எண்ணுகிறோம்.

“திராவிட நாடு” இதழ் மீது ஆதரவு காட்டி வரும் கொள்கைப் பற்றுடைய வழக்கறிஞர்கள், மேற்குறித்த கட்டுரைகளைப் படித்தறிந்து வழக்காடுவது பற்றிக் கூறக்கூடிய தங்கள் ஆலோசனைகளை அறிவிக்க முன்வருவார்களாயின், அவற்றை அன்புடன் ஏற்று, சிந்தித்து முடிவு செய்யக் கடமைப்பட்டிருக்கிறோம். ஆலோசனைகளை விரைவில் எதிர்பார்க்கிறோம்.

வழக்கு, சென்னை உயர்நீதி மன்றத்தில் தொடுக்கும்படியான நிலை ஏற்பட்டால், கொள்கைப் பற்றுடைய வழக்கறிஞர்களில், யார் யார், சென்னைக்கு வந்து வழக்காடலுக்கு உதவி செய்ய இயலும் என்பதையும் அதற்கான நிபந்தனைகளையும் அறிவிக்க வேண்டுகிறோம்.

21.6.49 நாளன்று ஜாமீன் தொகை ரூ.3000/-ம் கட்டப்பட்டு விட்டது.

கேட்ட தொகைக்கு மேல் அன்பர்கள் நன்கொடையாகக் கொடுத்த கொடுத்துவரும் தொகை வழக்கு நிதியில் சேர்க்கப்பட்டுக் குறிக்கப்பட்டு வருகிறது.

இதுவரை நன்கொடை கொடுத்துதவிய தோழர்களுக்கும், இப்போது கொடுத்து உதவிவரும் தோழர்களுக்கும் எமது நன்றி.

ஆசிரியர்

(திராவிடர் நாடு-26.6.49)