அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


வழக்குத் தொடரப்படும்!

“திராவிட நாடு“ இதழில் வெளி வந்த கட்டுரைகள், கதைகள், ஆகியவற்றினைத் தொகுத்தும், சிதைத்தும் நூல்வடிவாக்கி சி.என்.ஏ. புத்தகங்கள் என்று பல வெளியீடுகள் சமீப காலத்தில் கிளம்பியுள்ளன. நேர்மையான நோக்கமற்ற பணந்தேடிகளின் இந்தத் தீயசெயலுக்குப் பொறுப்பு வாய்ந்த சில பிரசுராலயங்கள், ஆதரவு காட்டியதால் சுயநலக்காரர்கள், பணம் பறித்துக் கொள்ள முடிந்ததுடன், பொதுமக்களுக்கும் வீணான செலவும் ஏற்பட்டிருக்கிறது. இத்தகைய மோசடிகளைத் தடுக்க சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது என்பதை அனைவருக்கும் தெரிவித்துக் கொள்கிறேன்.

என் அனுமதிச் சீட்டோ, கையொப்பமோ இன்றி என் பெயரால் புத்தகம் வெளிவர அச்சியற்றியவர்க்ளும், சட்டப்படி தவறு செய்தவர்களே ஆகிறார்கள்.

ஒருவர் பெயரால் ஏதேனும் புத்தகம் வெளியிடுவது என்றால், அவருடைய சம்மதக் கையொப்பமின்றி அச்சடித்துக் கொடுப்பது பொது நாணயத்துக்கு உகந்ததல்ல – சட்டப்படியும் தவறு.

எப்படியாவது பக்கங்களை அதிகப்படுத்திக் காட்டி விலையைக் கூட்டி விடவேண்டுமென்று, தொடர்பு, பொருத்தம், விளக்கம் அற்றமுறையிலே இந்த வெளியீடுகள் உள்ளன.

கருத்துக்கள் சிதைக்கப்பட்டும் திரித்தும் வெளியிடப்படுவது எத்தகைய கேடுகளை விளைவிக்கும் என்பதை எண்ணிப் பாராமல், பொது மக்களுக்கு இந்தத் துரோகம் இழைக்கிறார்கள் – இவ்வளவும் பணத்துக்காகச் செய்யப்படுகிறது – இந்த இழிசெயலை ஒழித்தாக வேண்டும் என்ற முடிவுக்கு வந்திருக்கிறேன்.

நான் ஏற்கனே சில பிரசுராலயத்தாருக்கு உரிமையாக்கியுள்ள சில கட்டுரைகளும் இந்த வெளியீடுகளிலே உள்ளன – ஆகவே அவர்களும் வழக்குத் தொடுக்க முன் வந்துள்ளனர்.

சில சுயநலமிகள், நேர்மையான பிரசுராலயத்தாரை அணுகி, அண்ணா சம்மதம் தந்திருக்கிறார், ஆகவே வெளியிடுங்கள் என்று கூறி, பணம் பறித்திருக்கிறார்கள்.

எனவே, இத்தகையவர்களை நாடு அறியவும், கேடுகள் களையப்பட வேண்டும் என்பதற்காகவும், வழக்கு தொடரப்படுகிறது.

இதுவரை, இவ்வித எத்தர்களிடம் சிக்காதிருக்கும் பிரசுராலயங்களும், அச்சகங்களும், எச்சரிக்கையாக இருந்து இவ்வித ‘பொதுஜன விரோதிகளை‘ அம்பலப்படுத்தும் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டுகிறேன்.

கழகங்கள், வாசக சாலைகள் ஆகியவற்றின் வளர்ச்சிக்காக என் நூலை வெளியிடவேண்டுமென்று கேட்டபோது, நான் யாருக்கும் தடைகூறாமல், தாராளமாகவே தந்திருக்கிறேன்.

தனிப்பட்ட முறையிலே நண்பர்களின் உதவிக்காகவும் பல ‘ஏடுகளைத்‘ தந்திருக்கிறேன்.

பதிப்பகங்களுக்கும் பல ஏடுகளைத் தந்திருக்கிறேன்.

நாட்டுக்குத் தேவையான கருத்துக்கள் யாவை, அவை எவ்விதம் தொகுக்கப்படவேண்டும் என்பனவற்றை நானே கவனித்து வெளியிடப்பட்ட அந்த ஏடுகள், போன்றதல்ல இந்தக் ‘களவு‘ ஏடுகள். இதேவிதமான அநீதி தங்களுக்கு இழைக்கப்பட்டிருப்பதாக நமது கழக எழுத்தாளர் சிலரும் என்னிடம் கூறியிருக்கிறார்கள். தீயசெயல் முளைத்திருக்கிறது. எனவே தமிழ்நாட்டிலே முளைத்துவரும் இந்தத் தீயசெயலை முளையிலேயே கிள்ளி எறிய என்னுடன் ஒத்துழைக்கும்படி, பிரசுராலயங்களையும், அச்சங்களையும், பொது மக்களையும், இயக்க ஏடுகளையும் கேட்டுக் கொள்கிறேன்.

அன்பன்
அண்ணாதுரை


திராவிட நாடு – 30-3-52