அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


வாழ்க எத்திராஜ்!

எல்லோரும் எக்காலத்தும், எவ்விதத்திலும் கல்வியை கருத்தனமாகக் கருதிக் கற்கவேண்டியது அவசியம். அதிலும் இனமையிலேயே, அறிவுக் கல்வியைப் போதித்து நல்லொழுக்கத்திலும், நன்னடக்கையிலும் சீர்திருத்தித் தங்கள் குழபிகளைப் பிற்கால அறிஞராகவும், அரசராகவும், வீரராகவும், விததகராகவும் ஆக்குபவள் தாயேயாகலின் அவள் கல்வித்துறையில் தலைசிறந்து விளங்கவேண்டுவது அவசியத்தினும் அவசியம்.

இக்கருத்து பற்றியே தோழர் வி.எல்.எத்திராஜ் அவர்கள் மாதர் கல்லூரிக்கு மகிழ்ச்சியுடன் 10 லட்ச ரூபாய் நன்கொடையளித்திருக்கிறார். கல்விக்காகப் பல பெரியார்கள் பொருளுதவி புரிந்திருககிறார்களெனினும், பெண் கல்வி வளர்ச்சிக்காகப் பெரும் பணம் தந்துதவிய தோழர எத்திராஜ் அவர்களின் தன்னலங்கருதாத் தகைமைக்குணத்தை எவரும் போற்றாதிருக்க முடியாது.
வாழ்க எத்திராஜ் நீடூழி! வளர்க அவர்தம் நல்லறம்! மலர்க மாணவ மணிகள்! மிளிர்க மகளிர் மாண்பு!

வேலூர் நகராண்மைக் கழகத்தில் அன்னாரை வரவேற்கவும், வாழ்த்துத்தாள் வாசித்துக் கொடுக்கவும் தீர்மானிக்கப்பட்டது போற்றத்தக்கது.

இனியேனம் நம் நாட்டுச் செல்வந்தர்கள் தாங்கள் பாடுபட்டு ஈட்டிய பொருளை, அர்த்தமற்ற தானங்கள் தருதல், ஆலயம் அமைத்தல், அபிடேகம் செய்தல், ஆரிய வேதபாட சாலைகள் நாட்டுதல் என்பன போன்ற பயனற்ற வழிகளில் பாழ்படுத்தாமல் அறிவாலயம் அமைக்கச் செய்வாராக! அண்ணல் எத்திராஜ் அவர்களைப் பின்பற்றி நடப்பார்களாக!

(திராவிடநாடு - 24.12.1944)