அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


வாழ்க சோவியத்

“இதோ இந்த மாமிசப் பிண்டத்தைப் பாருங்கள்! இவனுடைய மாளிகையைப் பாருங்கள். இவனுக்கு இரண்டாயிரம் ஏக்கரா நிலம். எடுபிடி ஆள் இருநூறு. பாரிசிலே பத்து பங்களா! இலண்டன் கம்பெனிகளிலே பங்கு! கொஞ்சிக்குலவும் கோகிலங்கள் பத்து. இவன் வயதோ அறுபது! நான் வாலிபன். வாழ்க்கைக்கே வழியில்லை. வீடில்லை; வேலையில்லை. உணவு இல்லை. கொஞ்சிட யாரும் இல்லை. கோவெனக் கதறினாலும், தேறுதல் கூறுவார் இல்லை.”

“தோழனே! புலியைப் பிடித்தானபிறகு, அதற்குப் போதனை புரிந்து அதன் சுபாவத்தை மாற்ற முடியவா போகிறது - பிடி துப்பாக்கியை அவன் மார்புக்கு நேரே. ஒழியட்டும் ஜாரின் கூலி. அழியட்டும் அக்ரம ரஸ்புடினுக்குப் பரமானந்த சீடனாக இருந்தவன். பிடி! சுடு!!

ஒரு வேட்டுச் சத்தம்! ஒரு கதறல். ஒரு பிணம் கீழே! ஒரு கூட்டத்தின் ஆரவாரம்.

“போர்வீரனா நீ! விம்மிக்கொண்டிருக்கும் என்னைச் சுட்டுத் தள்ளுவதுதான் உன் வீரமா? என்னைப்போல் ஏழை நீ. என்னைப்போல் நீயும் ஓர் அடிமை! ஜாரின் கொடுங்கோன்மையிலே நீயும் இருக்கிறாய். கூலிக்காக உன் கூடப்பிறந்த தோழர்களைச் சுடப் போகிறாயா? வீரனானால், அக்ரமக்காரர் மார்பிலே உன் ஈட்டியைச் செலுத்து! போரிடும் வகை தெரிந்தவனானால், புறப்படு இப்போதே, போக போக்கியங்களிலே புரண்டு கொண்டு, புழுப்போல் துடிக்கும் மக்களைக்கண்டு, மமதையோடு, “தடிப்பயலை எங்காவது போய் மூட்டை தூக்கச்சொல்லு, வண்டி இழுக்கச் சொல்லு, வாசலிலே நின்றுகொண்டு வரட்டுத் தவளைபோல் கத்துகிறான். விரட்டு அவனை” என்று வேலையாட்களுக்கு உத்தரவிட்டு விட்டு, திராட்சைரசம் ஊறிக்கிடக்கும் அழகியின் அதரத்தைச் சுவைத்துக் கொண்டிருக்கும் சீமானுடைய மாளிகையை மண்மேடாக்கு! அது போர், அது வீரம்! பசி துரத்த, பதைத் தோடி வரும் என்னை ஜாரின் கூலிக்காச் சுடுவது, கோழைத்தனம், கொடுமை, மடமை, துரோகம்.”

“தங்கையே! என் தவறை உணர்ந்தேன். வயற்றுக்காகத்தான் இந்தக் கோலம் பூண்டேன். என் ஈட்டி இது உன் இருதயத்திலே பாயாது. என் இனத்தவரை அது இனி தீண்டாது. இந்த ஈட்டி, ஏழை அழுத கண்ணீர் ஏழைகளின் பெருக்கத்துக்குக் காரணமாகவும், ஏழைகளின் உழைப்பை உறிஞ்சும் அட்டைகளாகவும் உள்ள ஜாரின் தர்பார் தளுக்கர்களின் தசைகளை இது இனி பசிதீரத்தின்னும். இதோ கிளம்புகிறேன்!”

ஒரு வீரனின் மனமாற்றம்! விவேகமுள்ள வனிதையின் முகமலர்ச்சி!!
* * *

“நான் டூமா மெம்பர்!”

“டூமா தூளாகிறது. உன் முடிவும் நெருங்குகிறது.”

“ரஷிய மக்களை ஆட்சி செய்ய அதிகாரிகளின் பீடம், டூமா. தெரியுமா?”

“ஆட்சி செய்யும் அதிகாரியின் அக்ரம ஓநாயே! உன்னிடம் பேச நேரமில்லை. நீ இத்தனை நாட்களாக ஆண்டதற்கு இதோ இந்தக் குண்டுதான் காணிக்கை.”

ஒரு வெடிச்சத்தம்! ரஷிய பார்லிமெண்ட் (டூமா) மெம்பரின் மார்பிலிருந்து இரத்தம் பீறிட்டு வெளியே வருகிறது. ஒரு கோரக்கூக்குரல்......

தோற்காது! வால்கா நதிக்கரையிலிருந்து, விளாடிவாஸ்டாக் வரையிலே, ஜெர்மானியர், தமது பிணங்களைக் குவித்து, அதன்மீது நடந்து செல்ல வேண்டும்!! ஓர் அடி ரஷிய நிலத்துக்கு, ஒரு ஜெர்மானியனின் உயிர்தான், ரஷியா விதித்துள்ள விலை! சோவியத்தை இந்த முறையான விலை கொடுத்து வாங்க, மக்களின் உயிரை மண்ணென மதிக்கும் ஹிட்லராலும் முடியாது!

மண்டை மீது ஓங்கி அடித்தாலும், வெறிநாய் தனக்குச் சாவுநிச்சயம் என்பதை உணர்ந்து ஓடாது. வெறி அதிகரித்து, மேலும் பாயும்! விவேகமிருப்பின், நாஜிகள், ஸ்டாலின் கிராட் சமரிலேயே பாடம் தெரிந்து கொண்டு ஓடியிருப்பர். ஆனால், வெறிநாய்கள் வோல்கா நதிக்கரையை விட்டு ஒழியவில்லை! அவர்களை விரட்டியடிக்கா முன்பு வீரரஷியரும் ஓயப்போவதில்லை. நிலங்களை நாசமாக்குவது எளிது, ரஷிய நினைப்பை நாசமாக்க முடியாது. அது ஜார் கொடுமை எனும் நெருப்பிலே வெந்து, புரட்சிச் சம்மட்டியால் அடித்துக் கூராக்கப்பட்ட அரிவாள்! அது நாஜியின் நினைப்பை அறுத்தொழிக்கும் என்பதை அறிவாளிகள் அறிவர்.

ஜோயா பதினெட்டாண்டு பாவை! காதல் மொழியும், கட்டித் தழுவுவதும் முத்தமும், சரசமும் பெற்று வாழ வேண்டிய வாலிப வனிதை! மாஸ்கோவிலே, படித்துக் கொண்டிருந்தாள் ஜோயா! மாஸ்கோவை நோக்கி ஜெர்மன் பட்டாளங்கள் செந்நாய்க் கூட்டம் போல் சீறிவருவதைக் கேட்டதும், சிந்தனையிலே சிங்கம் குடி புகுந்தது. நாட்டை நாசமாக்க விரோதிகள் முனையும் போது ஏடு தூக்கிக் கிடப்பதா? என் நாட்டினருடன் நானும் சேர்ந்து நாஜியை நசுக்குவேன் என்று கூறினாள் ஜோயா! வாலிபத்தை மறந்தாள், வாழ்க்கையை மறந்தாள். அவள் மனதிலே காதல் மணம் இருந்திருக்கவும் கூடும். யாரறிவார்! எழில் பூத்த இளமங்கை, நான் மாஸ்கோவுக்கு வெளியே நின்று மாற்றானை எதிர்க்கும் மறவருடன் போய்ச்சேருவேன் என்று கூறினாள். சென்றாள்! பெட்ரிஷ்ஷெவோ என்ற கிராமம், மாஸ்கோ அருகே உள்ளது. அதுதான் ரஷியர்களின் முகாம். பதுங்கிப்பாயும் கொரில்லா வீரர்களின் கூடாரம். ஜோயா அதிலே தங்கினாள்! நாஜிகளைத் தாக்குவது, நாஜிகளின் முகாம்களைக் குலைப்பது, தீயிடுவது, போக்குவரத்துகளைப் பொசுக்குவது, இவை ஜோயாவின் காரியம். பகலெல்லாம் காட்டிலே வாசம். இரவிலே வெளியே நடமாட்டம். ஜோயாவின் நடமாட்டம், நாஜிகளுக்குத் திண்டாட்டம் தந்தது. “எவளோ ஒரு பெண்! இளமங்கையாம். அவள் செய்யும் துணிகரம், பயமூட்டுகிறது” என்ற பேச்சு நாஜிவட்டாரத்திலே கிளம்பிற்று. சுந்தரி ஜோயா, சுவஸ்திகக் கொடியருக்கு, பயங்கரமான பிரச்னையானாள். அவள் தனது தீரத் திருவிளையாடலைச் செய்து கொண்டிருக்கையில், ஜெர்மானியரிடம் ஓர் நாள் பிடிபட்டாள், அன்று ஜெர்மன் போக்குவரத்து வண்டிகளைக் கொளுத்தச் சென்றாள், சிக்கிக்கொண்டாள். சிக்கினது ஜோயா என்று தெரிந்ததும், சீறினர் ஜெர்மானியர். சித்திரவதை செய்தனர். மற்ற கொரில்லா வீரர்கள் பதுங்கியருக்கும் இடம் எது, கூறு, என்று கேட்டனர் ஜெர்மானியர். ஜோயா வாய் திறக்கவில்லை!

கடுமையான பனி. ஜோயா அரை நிர்வாணமாக்கப்பட்டாள். அந்தப்பனிப்பாதையிலே, பாதரட்சையின்றி ஜோயாவை நடக்கச் செய்தனர். நடந்தாள், ஆனால், நண்பர்கள் எங்கே உள்ளனர் என்பதைமட்டும் கூறவில்லை. நாக்கு உலர்ந்து விட்டது நங்கைக்கு. பருகநீர் கேட்டாள், பாதகர்கள் கிரோசின் கொடுத்தனர், கிண்டலுக்கு. சித்திரவதை கோரிய பலன் தராமற்போகவே, நடுத்தெருவிலே, தூக்குமரம், நாட்டி, ஜோயாவைத் தூக்கிலிட்டனர். இந்தக்கோரத்தைக்கண்டு கலங்கினர் பெட்ரிஷ் ஷெவோ என்ற பட்டியின் மக்கள். ஜோயா, “தோழர்களே, துயறுறாதீர்! தீரமாக நின்று போரிட்டு, நாஜியை நாசம் செய்யுங்கள், சுட்டெறித்து விடுங்கள், துரத்துங்கள் சுவஸ்திகக் கொடியரை. சாக நான் அஞ்சவில்லை. மக்களுக்காக மாள்வதை நான் மதிப்புக்குரிய காரிய மாகக் கொள்கிறேன்” என்றுரைத்தாள். ஜெர்மானியரைப் பார்த்தாள், “என்னைத் தூக்கிலிடுவீர்! நான் ஒண்டி ஆசாமியன்று! நாங்கள் இருபதுகோடி பேர் இருக்கிறோம். இவ்வளவுபேரையும் தூக்கிலிட உங்களால் முடியாது. பழிக்குப்பழி வாங்க வேறு பேர் வருவர். ஜெர்மன் சோல்ஜர்களே! சரணடையுங்கள், உங்கள் காலம் முடிவதற் குள். செஞ்சேனை வெற்றிபெறப்போவது உறுதி” என்றுரைத்தாள்.

தூக்குக்கயிறு கழுத்திலே ஏறிக்கொண்டது. கீழே காலைத் தாங்கிக்கொண்டிருந்த பெட்டியை ஜெர்மானியன் உதைத்து எடுக்கிறான். ஊசலாடுகிறாள் அந்த வீரமங்கை அந்த நேரத்திலே உரைத்தாள் “தோழர்களே! விடை கொடுங்கள், போரிடுங்கள். பயம் விடுங்கள். ஸ்டாலின் நம்மிடையே இருக்கிறார். உங்களை விடுவிக்க அவர் வருவார்.”

ஸ்டாலின் படைகள், ஜோயாவின் கடைசி மொழியின்படியே அவர் பெட்ரிஷ்ஷேவோ கிராமத்திலே பின் நுழைந்து, ஜெர்மன் படைகளை விரட்டி அடித்துவிட்டனர். அப்போதுதான், சோவியத் சர்க்கார், இள வீரமங்கையைப் பற்றிக் கிராமத்தினர் கூறக்கேட்டு, அவள் புகழ்பரப்ப “சோவித்தின் வீரர்” என்றபட்டத்தையும், லெனின்பதக்கம், தங்க நட்சத்திரப் பதக்கம் ஆகியவற்றையும் மாண்மணிக்கு அர்ப்பணம் செய்து மாஸ்கோமுதல் விளாடிவாஸ்ட் வரையிலே அவள் நாமம் விளங்க செய்தனர்! ஜோயாவின் உறுதி போதாதா, சோவியத் ஒருபோதும் தோற்காது என்பதை விளக்க.

எத்தகைய இடுக்கண்வரினும் சமாளிக்கும் சக்தி சோவியத் மக்களுக்கு இயற்கையாகவே இருக்கிறது. பாடுபடாது பொருள் ஈட்டியவன் கொள்ளையடித்துக் குபேரனானவன் சொத்தின் அருமை அறியாது, கண்டபடி ஆடிக்கெடுவதுபோலவே, தியாகத்திலேயே மூழ்கி விடுதலை பெறாமல், கவலையற்றுத் தூங்கும் நேரத்திலே மரத்திலே இருக்கும் கனி காற்றடித்துக் காலடியிலே வீழ்வதுகேட்டு விழித்தெழிந்து அதனை எடுத்துக்கொண்ட கதைபோல், விடுதலை பெறும் மக்கள், அதன் அருமையையும் நொந்துகொள்ளார், அதற்கு ஆபத்தும் கீழே வீழ்கிறது - புரட்சிக்காரன் புது இறை தேடிக் கொண்டு வெளியே போகிறான்.
* * *

“எட்டாம் நம்பர் பட்டாளத்துத் தலைவனா! வாடா வகைகெட்ட முட்டாளே. மக்களைச் சுட்டுத்தள்ள உத்தர விட்டாயே, இதோ இப்படித்தானே சுடவேண்டும்!”

மற்றோர் வெடிச்சத்தம். பதக்கங்கள் அணிந்த படைத் தலைவன் பிணமாகக் கீழே வீழ்கிறான், படையிலே இருந்த போர் வீரன், சிரித்தபடி, மற்றத்தோழர்களைப் பார்த்து, “இதோ எட்டாம் பட்டாளத்துத் தலைவன், எப்படிப் பெற்றான் இந்தப் பதக்கம்? வீரம், திறம் காட்டியா? இல்லை! அவன் தங்கை ஒரு நடன சுந்தரி! தர்பாரிலே ஆடினாள், அவள் கண் சுழல்வது கண்டு காமம் சுழன்று ஜாரின் பிரதானி ஒருவன் இலயித்தான். இந்தக்கணம், நமது படைக்குத் தலைவனாக இருக்கநேரிட்டது. ஒழிந்தான் உலுத்தன்.” என்று கூறுகிறான்.
* * *

“ரொட்டி! ரொட்டி! மலைபோல ரொட்டிக்குவியல். பசிதீரத் தின்னுங்கள், பாட்டாளிகளே உயிர் வாழுங்கள்.”

“அநீதிக்கு அரண்களாக உள்ள அதிகார பீடங்களை அழியுங்கள். அடங்கிக்கிடந்த தோழர்களே! பயமின்றி வெளியே வாருங்கள். பழமை பறந்தோடிவிட்டது. பாதகர்கள் பிணமாயினர். புது ஆட்சி பிறக்கிறது. பசி தீரும் காலம். நமது உழைப்பு நமக்குப் பயன் தரும் காலம். ஊராள்வது ஊராரை மாளச்செய்வதற்கே என்று ஊளையிட்டோரின் தலைகள் உருளும் காலம். ஊமைகள், பிரசங்கியாகலாம். கோழைகளும், வீரராகவும், கோட்டைகள் தூளாகின்றன. தர்பார் தவிடுபொடியாகி விட்டது. அதர்மத்துக்கு உடந்தையாக இருந்த பாதிரிக்கூட்டம் பச்சை இரத்தத்திலே நீந்திச் சாகின்றனர். பொழுது வந்தது! புரட்டு ஒழிந்தது! புது ஆட்சி பிறந்தது! புறப்படுங்கள், புன்னகைபூத்த முகத்துடனே!”
* * *

ஜாரின் உல்லாச ரயில் வண்டி, பெட்ரோகிராடுக்கு வந்து சேரவில்லை. புரட்சி செய்தி கேட்டதும் ஜாரின் மனதிலே கவலை தோன்றிவிட்டது. எங்கோ கிராமத்திலே ஒளிந்துகிடக்கிறான் ஜார்.”

இவையும் இவைபோன்ற வேறு பலவுமான காட்சிகள், பேச்சுகள், நிகழ்ச்சிகள், பெட்ரோகிராட் நகரிலே, ஓர் நாளிரவு நடந்தது; இருபத்தைந்து ஆண்டுகளுக்குமுன்பு! 1917 பிப்ரவரி 27ந் தேதி! அன்று தான் ரஷியப்புரட்சியின் உதயம்! அன்று தான் முதலாளித்தனம் மூலையில் உட்கார்ந்திருப்பதாகக்கூறினாலும் போதாது, மூட்டை முடுச்சுடன், டான், வோல்கா, நதிகளைத் தாண்டி, ரஷிய எல்லையையே கடந்து, எங்காவது சென்று தீரவேண்டும் என்று ரஷியமக்கள் உத்திரவு பிறப்பித்தனர்! அன்றுதான், அநியாயத்துக்குத் தூக்குத்தண்டனை. அக்ரமக்காரருக்கு அந்தமான்! செல்வச்செருக்கர்களுக்குச் சிரச்தேம்! உல்லாச வாழ்வினருக்கு மரணச்சீட்டு. ஊராண்ட ஜாருக்கு இறுதி அறிக்கை! உலகம் கேட்டுத்திடுக்கிட்ட திருநாள் அது. 25 ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது, ரஷியப் புரட்சி. ரஷியப் புரட்சியின் 25ம் ஆண்டு விழாவை, இவ்வாண்டு, ஸ்டாலின், வேட்டொலியே பக்கமேளமாகக் கொண்டு, கொண்டாடியிருக்கிறார். அன்று உள்நாட்டு அக்கிரமக்காரரை ஒழிக்க அவரும் அவரது தலைவர் லெனினும், பிறரும் உத்திரவு பிறப்பித்தது போல், இன்றும் ஸ்டாலின், ரஷிய மக்களுக்கும், பாட்டாளி உலகு பூராவுக்கும், உலகத்திலேயே புதியதோர் அக்கிரமத்தைப் புகுத்த முனையும் பெர்லின் ஜார் தர்பாரை, தவிடு பொடியாக்குக என்று உத்தரவிடுகிறார். ஜாரின் கூலிகள், ஜார் பரம்பரைக்குப் பல்லக்குத் தூக்கிகள், ஜாரின் சுபாவக் காரருக்குச் சுருதிப்பெட்டிகள், ஜாராட்சி போன்ற ஆட்சியிலே அடைப்பம் தாங்கும் “பேறு” பெற வேண்டுமென்ற நினைப்பு கொண்ட நாடி நடுங்கிகள் தவிர, மற்றையோர், “சபாஷ்! ஸ்டாலின்!!” என்று அவரைப் புகழ்ந்து, அவர் மொழி வியந்து, அவர் விழியைத் தம் வழியெனக்கொண்டு, அவரது ஆள்காட்டி விரலைத் தம் சட்டமென்று கருதி அவர் கூறும் காரியத்திலே நம்மாலான பங்கு செய்வோம் என்று முன்வருவர்! முயல்கள் புதருக்குள் பதுங்கட்டும்! நரிகள் பொந்துகளைத் தேடட்டும். சமதர்மச் சிங்கங்களே! நீங்கள் உங்கள் குகையை விட்டு வெளியே வாருங்கள்! ஸ்டாலினின் குரல் கேட்டும், வெளி வராதவர்கள், கோழைகள் மட்டுமன்று, ஜாரின் கூலிகள், சமுதாயச் சாக்கடைப் புழுக்கள்!!

“240 டிவிஷன் ஜெர்மானியர், ரஷியாவைத் தாக்குகின்றனர்! நெப்போலியன், மாஸ்கோவைத் தாக்கியபோது அவனிடமிருந்த போர் வீரர், 30,000! இன்று செஞ்சேனையை 30 இலட்சம் நாஜிகள் தாக்குகின்றனர். செஞ்சேனைக்கு இன்றுள்ள மகத்தான ஆபத்து என்னவென்பது இதிலிருந்து விளங்கும். இத்தகைய ஆபத்தில், ரஷிய வீரர்கள் காட்டும் வீரம், எவ்வளவு அபாரமானது! வேறு எந்த நாடும், வேறு எந்த சேனையும், நம்மைப்போல, நாஜிக்கொள்ளைக் கூட்டத்தை எதிர்த்து நிற்கமுடியாது.

தோழர்களே, நாம் விடுதலைப் போரிலே ஈடுபட்டிருக் கிறோம். நேசநாடுகளுடன் சேர்ந்து போரில் ஈடுபட்டிருக்கிறோம். மனித சமுதாயத்தின் கொடிய விரோதிகளை, முறியடித்து, வெற்றிபெற்றே தீருவோம்.

ஹிட்லராட்சியைத் தவிடுபொடியாக்கித்தீர வேண்டும், தவிடு பொடியாக்குவோம். யுக்ரைனிலே, அக்ரமநாஜிகள் செய்யும் கொடுமையை நான் அறிவேன். பாதுகாப்பற்ற நமது பாட்டாளி களைச் சித்திரவதை செய்கிறார்கள். சொத்தைச் சூறையாடு கிறார்கள். சொல்லொணாக் கஷ்டம் நம் மக்களுக்கு. நம் சுந்தரிகள் கற்பழிக்கப்படுகின்றனர்.” - என்று ஸ்டாலின் கூறுகிறார். பாட்டாளிகளின் இலட்சிய பூமி, நாஜிக்குக் குச்சு வீடா! வீரர்களின் கோட்டம் வெறியர்கட்கு வேட்டைக்காடா! நெப்போலியனை நடுங்கவைத்த நாடு, நொந்து நலிவதா! அதைக்கேட்ட பின்னர், உலக ஏழை மக்கள், தங்களுக்கு “விமோசனம்” உண்டு என்று எண்ணிடவாவது, முடியுமா! ரஷிய ரணகளத்திலே, ஹிட்லரின் ஜெயக்கொடி நாட்டப்பட்டு விட்டால், பாட்டாளி மக்கள் ஆட்சி ஏற்பட முடியும் என்ற எண்ணத்துக்கு சவக்குழி வெட்டப்பட்டது என்று தான் ஆகும். சோவியத் சுருண்டபிறகு, “சோற்றுக்கில்லாதார்” என்ற சொல்லம்பால் தொல்லைப்படும், உலகப்பாட்டாளி மக்களின் எதிர்காலம் சுருண்டே போகும்!

சோவியத் மக்கள் விடுதலைபெற்றது, வீரத்தால், விவேகத்தால் எனவே அந்த விடுதலைக் காக்கவும் வகை அறிவர், வீரமே மந்திர விளக்குக்கு நெய் என்பதை அறிவர். எனவே எத்தகைய ஆபத்தையும் பொருட்படுத்துவதில்லை. ஸ்டாலின் கிராட் சரிந்துவிட்டது என்று பறைசாற்றி, எத்தனை நாட்களாயின. இப்போதும் நடப்பது என்ன? சமர்! எப்படி முடிந்தது? சோவியத் சுபாவம் அது. ஸ்டாலின் கிராடின் வெளி அரண்களைத் துளைத்துக்கொண்டு நாஜிகள் புகுந்தனர். கல்டிமோஷேங்கோ, ஸ்டாலின் கிராடிலிருந்து காகசஸ்வரையிலே பெரும் களத்தைக் காத்து வருபவர். ஸ்டாலின் கிராட் நகருக்கு ஜெர்மானியர் புகுந்தனர் என்ற ஊர்கோட்டையாகட்டும்! வீடு களமாகட்டும்! வீட்டுக்குள் இருவரும் ஒவ்வோர் அறையும் கொலைக்களமாகட்டும் என்று உத்திரவிட்டுவிட்டார். ஸ்டாலின் கிராடிலே, நடுவழியாகவும், வடமேற்கு எல்லைவழியாகவும் ஜெர்மன் படைகள் புகுந்து கொண்டிருந்தன. ஜெர்மன் விமானங்கள், வட்டமிட்டு, குண்டு வீசிக் கொண்டிருந்தன. பெர்லின் ரேடியோ, ஸ்டாலின்கிராட், வீழ்ந்துவிட்டது என்று பிரசாரம் செய்துகொண்டிருந்தது.

உலகமே, தீர்ந்தது ஸ்டாலின்கிராட் என்று கூறிப் பெருமூச் செறிந்தது. அதே நேரத்தில், வால்கா நள்ளிரவிலே, நீந்திக்கொண்டு வந்தன செம்படைகள். மேஜர் ஜெனரல் அலெக்சாண்டர் ரோடிம்ஸ்டீவ் என்றவர், தமது படைகளுடன், தீப்பிடித்தெறியும் நகருக்குள் நுழைந்தார். வயது! சமதர்மிகளுடன் மாட்ரிட் அருகே, பாசீசப் படைகளுடன் தீரமாகப் போரிட்டவர். கல்டிமோஷேங் கோவிடம் பாடம் படித்தவர். பயமறியாத வீரன்! புரட்சி ரஷியாவின் புதல்வன்! புகை ஸ்டாலின் கிராடுக்குள் புகுந்து, புண்பட்ட தோழர்களைப் போர்வீரர்களாகக் கொண்டு, பிளந்து போன பாதைகளை அரணாக்கி, இடிந்துகிடந்த வீடுகளிலே கோட்டைகள் அமைத்து, உள்ளே நுழைந்த ஜெர்மானியரை விரட்டலானார்! ரோடிம் ஸ்டீவ், ரஷியரின் வீரத்திற்கோர் எடுத்துக்காட்டு, தியாக வல்லி ஜோயாவும், வீரவர்மன் ரோடிம்ஸ்டீவும், இத்தகையவர்களைத் தோழர்களாகக் கொண்ட ஸ்டாலினும், இருக்கும்போது, ஏன் சோவியத் ஜெயிக்குமா, தோற்குமா, என்ற சந்தேகம் பிறக்க வேண்டும்! யுக்ரைன் போயிற்றே, காகசசிலே குடைந்துவிட்டனரே, கிரைமியாக விழ்ந்ததே, இனி ரஷியாவிலே தொழிற்சாலைகள், ஆயுத உற்பத்திச்சாலைகள், இயற்கைப் பொருளுக்கு இடம், எங்கே என்றும் அயரத் தேவையில்லை. சோவியத் தலைவன், இதிலும், தனது திறமையைக் காட்டாது போகவில்லை.

ஐரோப்பா கண்டத்திலே, சோவியத்நாடு ஓர் அற்புதபுரி! சுற்றிலும் முதலாளி ஆட்சி, வஞ்சக வல்லரசு வர்த்தக வலை வீசிகள், மக்களின் வாட்டத்தைப்பற்றிய கவலையற்றவர்கள்! சோவியத் ஒன்று மட்டுமே, சோற்றுக்கில்லையே என்று சோர்ந்து கிடந்தவர்களின் சொர்ணபுரி!

பதினைந்து கோடி போர் வீரர்களின் “பாரா” கொடுக்கும் வீரபுரி. ஆகவேதான், வீறாப்புக்கொண்ட ஹிட்லர் கூட்டம், சம்மட்டி அடியினால், சாய்கிறது.

வாழ்க சோவியத்! வெல்க சோவியத்!!

15.11.1942