அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்வாழ்க வசவாளர்கள்!

கபடன்
காமுகன்
கலகம் விளைவிப்போன்
கட்டுக்கடங்காதவன்
கள்ளச் சிந்தையன்
காசாசைக்காரன்
காட்டிக் கொடுப்போன்
சதிகாரன்
பதவிப் பித்தன்
சுரண்டிப் பிழைப்போன்
சுயநலக்காரன்
குருத்துரோகி
கூடிக் கொடுப்போன்
பயங்கொள்ளி
எத்தன்

இவைகளைவிடக் கடுமையும் கொடுமையும் நெளியும் ‘வசவுகள்‘ இருக்க முடியாது – எவ்வளவு நீண்டகால விரோதியாக இருந்தாலும் இதைவிட இழிவாகக் கண்டிக்க முடியாது.

இவ்வளவும் இதற்கு மேலும்தான் தி.மு.கழகம் துவக்கப்பட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டவுடன் கழகம் அமைத்தாக வேண்டும் என்ற ஆர்வம் கொழுந்துவிட்டெரியும் உள்ளம் கொண்ட உறுதியாளர்களான இளைஞர்களும், பணிபுரிந்து நரைத்த முதியவர்களும், இலட்சியத்தைக் காத்திடத் தயங்கோம் என்று முழக்கமிட்டவர்கள் அனைவரும் அன்புடன் கரம் பற்றி இழுத்ததால், சரி எனத் தயக்கத்துடன் முன் வந்த தோழர் அண்ணாதுரைக்குக் கிடைத்த அன்புரைகள்!

சொரணை கெட்ட ஜென்மங்கள் கூடத் தாங்கிக் கொள்ள மறுக்கும் கடுமொழிகளே வீசப்பட்டன – எந்த மனிதரையும் வெறியனாக்கி விடக்கூடிய வசவுகள்.

தமிழ்நாட்டு அரசியலிலே மட்டுமல்ல, வேறு எந்த நாட்டு அரசியலிலேயும் – அரசியல் துறையிலே மட்டுமல்ல, எந்தத் துறையிலேயும், கருத்து மாறுபாடு காரணமாகப் பிரிந்தவர்களை, இவ்விதமான இழிமொழி மூலம் தாக்கினவர்கள் கிடையாது ஆனால், இவ்வளவுடன் விடவில்லை, எதிர்ப்பு வீசியோர்!

வரலாறு தீட்டினர் – ஆரூடம் கூறினர் எப்படித்தான் இப்படிப்பட்ட துரோகிகளைச் சகித்துக் கொண்டிருக்கிறீர்கள் அன்பர்களே! தோழர்களே! என்று தீட்டி எதிர்ப்பு முனைகள் அமைத்தனர்.

அவ்வளவுடன் விடவில்லை! கொலை செய்யவும் பின் வாங்காத கொடியவர்கள் இந்தத் துரோகக் கூட்டத்தார் என்று கூறினர்.

காட்டு முறையில் கைதேர்ந்த பண்ணை முதலாளியிடம் உழைத்து உருக்குலையும் உழவன் கேட்டிருக்க மாட்டான். இவ்வளவு இழிமொழிகளை – பழிச்சொற்களை, விஷவார்த்தைகளை! இவைகளை வீசினர் – விட்டு விட்டு அல்ல – தொடர்ச்சியாக – இங்கோர் நாள் அங்கோர் நாள் என்றுகூடி அல்ல, எங்கும், ஒவ்வொரு நாளும்! தமிழகத்திலே, வேஷ எந்தத் தனிமனிதனுக்கும், இவ்வளவு அர்ச்சனை நடந்திராது என்று கூறலாம். இந்த வசை மொழிகளில் ஏதேனும் ஒன்றிரண்டே போதும், யாரையும், நமக்கென்ன ஏன் வீணான தொல்லை, எதற்காக ஏசலைக் கேட்கவேண்டும் என்று சலிப்புடன் கூறிவிட்டுப் பொதுவாழ்க்கையில் இருந்து ‘சன்யாசம்‘ வாங்கிக் கொண்டிருந்திருப்பர் எண்ணற்ற இளைஞர்களம், இயக்கத்தின் நெருக்கடியான கட்டங்களில் கை கொடுத்துதவிய கண்ணியவான்களும், ஏராளமாகத் திரண்டதாலும், வளர்ந்ததாலும்தான், இவ்வளவு ‘இடி‘களையும் தாங்கிக் கொள்ள முடிந்தது – இவ்வளவு இழி சொல்லும் இதயத்தைத் தகிக்க முடியாமல் போயிற்று! கடுமொழி கேட்டுக் கண்ணீர் தளும்பிற்று எனினும் கலங்காதே நண்பனே! என்று கூறி, ஆயிரமாயிரம் இளைஞர்கள் சூழ நின்று ஆர்வம்தந்தால் புன்னகையும் மலர்ந்தது.

இழிமொழி, அண்ணாத்துரைக்கு மட்டுமல்ல – உடன் சேர்ந்தவர் அனைவருக்கும், சராசரியாக வேக வேகமாக! கடுமொழிக்கு மேல் கடுமொழி! மனப்புண் ஆறுவதற்குள் மற்றோர் தாக்குதல்! இதயத்திலே பாய்ச்சியபடி இருந்தனர். ஏசல் ஈட்டிகளை – கொட்டிய குருதியைத் துடைக்கக்கூட அவகாசம் அளிக்கவில்லை. இதோ வாங்கிக்கொள் – இன்னமும் வாங்கிக்கொள் – மேலும் தருகிறேன் பெற்றுக்கொள் – சுடச்சுட சுரீல் சுரீலென்று! என்று சொல்லிச் சொல்லிக் கசையடி தருவதுபோல இருந்தது வசவு வீச்சு! இவ்வளவையும் தாங்கிக் கொண்டனர். தி.மு.கழகத்தினர்! இனி யாரும் எந்தக் காரணம் கொண்டும், இவைகளைவிடக் கடுமையான ‘வசவு‘ வீசமுடியாது. பழிசுமத்த முடியாது – இரண்டாம் பதிப்பு, மூன்றாம் பதிப்பு மலிவுப் பதிப்பு என்ற முறையிலே, வசை புராணத்தை மீண்டும் மீண்டும் ஆசை தோன்றும் போதெல்ாம், வெளியிடலாமேயொழிய, புதிதாக, கேட்டவுடன் நெஞ்சம் திடுக்கிடக் கூடியதாக, வேறுயாரும், எந்த வசவும் வீசுவதற்கில்லை. பழிசுமத்துவதற்குமில்லை, அவ்வளவு ‘சம்பூரணமாக‘ நடந்தேறிவிட்டது. வசவு!! தாங்கிக் கொண்டனர், திராவிட முன்னேற்றக் கழகத்தினர் – தமிழகத்திலே மட்டுமல்ல, எங்கும் இதைப்போலக் கண்டிருக்க முடியாது தாங்கிக் கொண்டனர் – காரணம் என்ன – அந்த ‘வசவுகள்‘ அவ்வளவும் சேர்ந்து தி.மு.க.வின் வளர்ச்சியைக் கெடுக்கவோ, அதன் அமைப்பாளர்களின், ஆதரவாளர்களின் மன உறுதியைக் குலைக்கவோ முடியவில்லை. பழி பலத்தைத் தேடிக் கொடுத்தது. இழி சொல், நம் இதயங்களிலே புதிய வலிவை ஊட்டிற்று! நாம் தாக்கப்பட்டோம், வளர்ந்தோம்! எண்ணற்ற இளைஞர்கள் தந்த கண்ணீர் காணிக்கை வீண் போகவில்லை – வளர்ந்தேம், வளருகிறோம். விரோதத்தை வளர்த்துக் கொள்ளவில்லை. சுழலும் சுறாவும் தாக்கிக் கொண்டிருப்பினும் பாதை அறிந்து கலம் விடுவோன் போல, பழி, இழிவு, வசவு எனும் சூழ்நிலைக்கு இடையிலேயே தி.மு.கழகத்தைத் துவக்கினோம், இரண்டாண்டுகளுக்குப் பிறகு, எண்ணிப் பார்க்கும் போது, நம்மையுமறியாமல், மனம்துள்ளி விளையாடுகிறது – கழகம், கண்ணியமான முறையிலே தழைத்திருக்கக் காண்கிறோம்.

தி.மு.கழகத் துவக்கத்தின் போது, நமது தோழர்களின் ஒவ்வொரு சொல்லும் திரித்துக் கூறப்பட்டது. ஒவ்வொரு செயலுக்கம், ஒரு இழிவான நோக்கம் இருப்பதாக எடுத்துக் காட்டப்பட்டது ஒன்றாக இருந்த காலை மலராகக் கருதப்பட்ட சொல்லும் செயலும், பிரிந்தோம் என்ற ஒரே காரணத்துக்காக, மலத்தினும் கேவளமானதாகப் பொது மக்களிடம் கூறிவிடப்பட்டன. தமிழ் நடையின் மாண்புக்கு ஓர் எடுத்துக்காட்டு – என்றனர் – பிரியா முன்பு! பிரிந்தோம், சுவைதெரு மொழியில் பேசியும் எழுதியும் வரும் சூதுக்காரர் என்ற தூற்றப்பட்டோம்.

சிறுகதை உலகிலே பெரியதோர் மாறுதல், என்று சிறப்புரை தந்தனர், குடும்பம் ஒன்றாக இருந்தபோது – வெளியேறினோம், கதை எழுதும் கயவன், என்று கண்டிக்கப்பட்டோம். நாடு திருத்த நாடகமாடுகிறார்கள் என் நல்ல பிள்ளைகள் என்று பாராட்டுதல், பிரியா முன்பு – பிரிந்தோம், கூத்தாடும் கூட்டம் சேர்த்து வயிறு கழுவும் வக்கற்றதுகள், என்ற ‘விருது‘ தரப்பட்டது. புயலெனச் சுற்றித் தென்றலெனப் பேசி வருகிறார்கள் என் ரத்தினங்கள் மாணிக்கங்கள் என்று புகழப்பட்டோம், பொறுக்கித் தின்றதுகள் போக்கிட மத்ததுகள் என்று தாக்குதல் கிளம்பிற்று எல்லாம். தாங்கிக் கொண்டோம். அதன் பயனாக எதையும் தாங்கும் இதயம் பெற்றோம்.

நாலு நாள் கூத்து – என்று கூறினர், பெரியதோர் அணி வகுப்பாகி விடக்கூடாது தி.மு.க. என்பதற்காக! பார்த்துக் கொண்டே இருங்கள், பயல்கள் ஓடி ஓடி அலுத்து, ஏதேனும் ஒரு கட்சியிலே தஞ்சம் புகுந்து கட்டியம் கூறிக் காலந்தள்ளப் போகிறார்கள், என்று ‘ஜாதகம்‘ கூறினர் – தோழர்களின் இடைவிடாத முயற்சியால், தி.மு.க. சோரம் போய்விடவில்லை. வீரர் கோட்டமாகவே விளங்குகிறது.

ஆதரிக்க ஆள் யார்? அதுவும் இதுவும் கத்திவிட்டால் இயக்கமாகி விடுமா – அங்கே இங்கே கூத்தாடினால் காரியம் நடந்துவிடுமா – என்று கூறினர் – தி.மு.கழகம் தமிழத்தில், எல்லா மாவட்டங்களிலும் சிறப்பான முறையிலே, மாநாடுகள் நடத்தி, தனிப் பிரச்சினைகளுக்கும் மாநாடுகள் நடாத்தி, இப்போது மாநாட்டைச் சென்னையில் நட்துதும் நிலைக்கு வளர்ந்திருக்கிறது.

ஒரு இயக்கத்தை நடத்திச் செல்ல, பணம் வேண்டாமா இதுவக் பணக்காரர்களிடம் சென்று பல்லளித்தால் கூடப் பணம் தருபவர் யார். எனவே துவக்கப்பட்ட கழகம் துவண்டு விடும் வெகு விரைவில் என்று பேசப்பட்டது. கழகம் துவண்டு போகாதது மட்டுமல்ல, புயலையும் சமாளிக்கம் நிலையைப் பெற்று வருகிறது. பணம் தேடிச் சென்று பல்லிளிக்கவில்லை. பணிபுரிந்து காட்டி, பாட்டாளித் தோழர்களிடம் மடிப்பிச்சை எடுத்தது. பகுத்தறிவு ததும்பும் நாடகங்களை நடாத்திக் காட்டி, சீர்திருத்த வேட்கையினரிடம் செம்பொன் கேட்டது – கிடைத்தது. இன்று வயிறு வளர்க்கவே வேறு கட்சி துவக்கியவர்கள் – என்ற வசவுக்கு ஆளான தோழர்கள், சென்னை நகரில் சுமார் நாலுமனை அளவுள்ள இடத்தில் அமைந்துள்ளதும், காணாக்காட்சியாகவும், பணிமனையாக அமைந்திட வசதி நிரம்பியதும் முப்பதாயிரம் ரூபாய் விலை யுள்ளதுமான, சொந்தப் பணிமனையைப் பெற்றுள்ளனர். தி.மு.கழகத்துக்கு ‘கண்ணீர்த்துளிகள்‘ இதோ நமது பாசறை, நமது உழைப்பின் உருவமாக விளங்கும் பணிமனை, என்று பெருமையுடன் உலாவ ஒரு இடம்!! நம்மிலே பெரும் பாலானவர்களுக்கு உள்ள வீடுகள், சாமான்யமானவைகள்! ஆனால் நம் அனைவருடைய கூட்டு முயற்சியால், பொது ஆர்வத்தால், நமது கழகத்துக்கென அமைந்துள்ள வீடு, மாளிகை போன்றது! பழி, பலத்தைத் தந்திருக்கிறது – அதுதான், பொது வாழ்வுத்துறையிலே உள்ள ‘அதிசயம்‘ தாங்கிக் கொள்ளம் சக்தி வேண்டும். அதே போது திருப்பி தாக்கினால்தாம் நமது நெஞ்சிலே உள்ள நமைச்சல் அடங்கும் என்ற சபலம் தலைகாட்டக் கூடாது. இந்த ‘மனநிலை‘யைப் பெற்றிருக்கிறோம் – பெற்றுள்ள இந்தச் செல்வத்தை மேலும் வளமுள்ளதாக்குவோம்.

உண்மையை உரைப்பதால், ஊரும் பழியும் துரத்தி வந்து தாக்குமே என்று அஞ்சுபவர்களால், பொதுவாழ்விலே வெற்றிகாண முடியாது.. பொதுநலப் பணியாற்ற முடியாது. அத்தகைய அச்சம் நம்மைத் தீண்டாதபடி, நம்மை நாம் பாதுகாத்துக் கொண்டோம் – இனியும் நமது பாதை, அதுவாகவே இருக்க வேண்டும். தூற்றுவோர் தூற்றட்டும் – தூபமிடுவோர் தாரளமாகச் செய்யட்டும் – எங்கோ கிடந்ததுகள் இன்று எல்லோராலும் கவனிக்கப்பட வேண்டியவர்களாகி விட்ட, விந்தை, உருவானதற்குக் காரணம், இழிமொழியும் பழிச்சொல்லும் கேட்டு இதயம் குமுறி, வழி தவறிச் செல்லாமல் ‘வசவுகளை‘ வெறும் வாயோசை என்ற அளவிலே கொண்டு, நமது பணி, வசவுகளுக்கு மறுப்புகள் கூறுவதல்ல, திராவிடச் சமுதாயத்தின் விடுதலைக்கு வழி காண்பதாகும், என்று திட மனதுடன், கண்ணியத்துடன் நமது சக்திகேற்ற வண்ணம், உழைத்துக் கொண்டிருப்பதுதான்! தி.மு.கழகத்தின் துவக்கத்தின் போதே மலைமலையாகப் பழிமொழியும் இழி சொல்லும் துரத்தித் துரத்தித் தாக்கியது. ஒரு வகையிலே நன்மைக்கே தான். துவக்கத்தின்போதே, இவ்வளவும் தாங்கிக் கொள்ள வேண்டிய நிர்ப்பந்த நிலை ஏற்பட்டு விட்டதால், கழகத்துக்கு எதிர்பார்க்கக் கூடியதைவிட அளவிலும் வகையிலும் அதிக சிறப்பானதான வலிவு கிடைத்துவிட்டது. இனி, பழி போட்டுத் தலைவாங்காலம் என்று எவர் எண்ணினாலும் இழிமொழி வீசி இடுப்பை ஒடிக்கலாம் என்று எவர் நினைத்தாலும், பலன் காணமுடியாது! யார் எவ்வளவு கேவலமாகப் பேசுவதாக எண்ணிக் கொண்டு எதைக் கூறினாலும், பதறவேண்டிய நிலையில் இல்லை, நமது முன்னாள் இருப்பிடத்தின் இன்றைய அலுவலர்கள், நமக்கு, பழி கேட்டுப் பதறா உள்ளத்தைப் பெறும், பயனுள்ள பாடத்தைப் போதித்து விட்டனர்! நாம் அந்தப் பரீட்சையில் தேறிவிட்டோம் – எனவே, இடர்கள் எது வரினும் நமக்குக் கலக்கம் ஏற்படக் காரணம் இல்லை. கரி, தன் குட்டிக்கு வீரமும் திறமும் வருதற்குகாகத் துதிக்கையால் குட்டியை இழுத்துத் தள்ளியும், தட்டியும் கொட்டியும் பயிற்சி தரும் என்கிறார்கள். தி.மு.கழகத்துக்கு, அத்தகைய பயிற்சியைத் தந்திருக்கிறது திராவிடர் கழகம், பயிற்சி போதவில்லையோ என்று ஒருவேளை எண்ணிக் கொண்டு மறுபடியும் பயிற்சி தர முன்வரக்கூடும். அதைத் தவறாகக் கருத வேண்டாம். பன்னெடுங்காலமாகப் பலப்பல பகைவர்களால் பாழாக்கப்பட்ட திராவிடச் சமுதாயத்திலே பணியாற்றக் கிளம்பியிருக்கிறோம்- பழிகளைத் தாங்கிக் கொள்ளும் மனப்பண்பு இந்த அறப்போருக்குத் தேவையான ஆயுத்ம். அந்த மனநிலையை நாம் பெறுகிறோம். ‘வசவுகள்‘ மூலம் வாழ்க வசவாளர்கள்! வாழ்க போதகாசிரியர்கள்!.

!திராவிட நாடு – 2-11-51)