அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


வாழ்த்துகிறோம்!
2

இவ்வாண்டுப் பட்டமளிப்பு விழாவிலே நமது கெழுதகை நண்பர்களும், பிரமுகர்கள் பலரும் பட்டங்கள் பெற்றுள்ளனர். சலியா உழைப்பிலே ஈடுபட்டு, நீதிக்கட்சியின் நிகரிலா எழுத்தாளராகி, ஜஸ்டிஸ்பத்திரிகையின் ஆசிரியராக வீற்றிருந்து, ஆரியத்தின் அட்டகாசத்துக்கு அடிமேல் அடிகொடுத்து வந்தவர், தோழர் டி.ஏ.வி.நாதன் அவர்கள். திலகர் சுயராஜ்ய நிதி மோசடி பற்றித் தமிழகம் மட்டுமல்ல, இந்திய உபகண்டமே உணர்ந்து கொண்டது, தோழர் டி.ஏ.வி. நாதன் அவர்கள். அதுபற்றி ஜஸ்டிஸ் பத்திரிகையிலே முன்பு தொடர்ச்சியாக எழுதிவந்த அரிய தலையங்கங்களாலேயேயாகும். தன்மான இயக்கத்திலே தளராத ஆரவம் அவருக்கு எப்போதும் மன்ற நடுவே வந்திருந்து பிறருக்குத் தம்மைக் காட்டிக்கொள்ளவேண்டும் என்ற மனப்பான்மையே அற்றவர், ஓய்வின்றி உழைப்பார், பிறர் அறியாவண்ணம். தீப்பொறி பறக்க ஆங்கில மெழுதுவார், தேன்மொழியில் நண்பர்களுடன் பேசுவார், அடக்கமான சுபாவம், ஆளும் ஆஜானுபாகுவல்ல! இந்தி எதிர்ப்பு இயக்கத்திலே ஈடுபட்டுப் பணியாற்றியவர், இந்தி ஒழிக என்ற முழக்கத்துடன் தோழர் டி.ஏ.வி.நாதன், பல ஆயிரக்கணக்கான மக்கள் புடைசூழ, சென்னை இந்து தியாலாஜிக்கல் பள்ளி முன் நின்ற மறியல் செய்ததும், கைது செய்யப்பட்டதும், பலர் அச்சமயம் கண்ணீர் வடித்தமும், இன்றும், அன்று பார்த்தவர்களின் மனக்கண்களைவிட்டு அகன்றிராது. வாலிபரின் உள்ளத்திலே புதியதோர் எழுச்சியை உண்டாக்னிர், அமைதிலே உருவானது போன்ற நமது அருமை நண்பர், இதுபோது சென்னையில் யுத்த சஞ்சிகையின் ஆசிரியராக அமர்ந்திருககிறார், ஜனநாயக வெற்றிக்கு உழைக்கும் அரும்பணியாற்றி வருகிறார். அவருக்குச் சர்க்கார் ராவ்சாகிப் பட்டத்தை வழங்கியுள்ளனர். பட்டம் என்ற சொபல்கேட்டதும் தொட்டால் பாவம் தீண்டும என்று கூறும் வேடதாரிகள் சிலருண்டு, கிடைத்ததும், எட்டிப்பிடித்து விட்டோம் இணையில்லாக் கௌரவத்தை என்று இறுமாந்திடுவோரும் சிலருண்டு. தோழர் நாதன், அவர்களின் இயல்பு அறிந்தவருக்குத் தெரியும் அவர் இந்த இரண்டு ரகத்தையும் சார்ந்தவரல்ல, பட்டம் அவருக்குக் கௌரவம் தருவதா என்று கூறுவதைவிட, அத்தகையவர்களைச் சென்று அடைத்தால் பட்டத்தின் மதிப்பு உயருகிறது என்று உரைப்பது பொருத்தமாக இருக்கும் எனவே, நாம் நண்பருக்குப் பட்டம் நல்கியதற்காகச் சர்க்காரை நாம் பாராட்டுகிறோம். சர்க்கார் அவர் போன்றாருக்குப் பொறுப்பான பணிபுரியும், வசதியும் நிரம்பிய அலுவல்களைத் தந்து அத்தகையவர்களின் ஆற்ல் பொதுமக்கட்கு நன்கு பயன்படும வழிசெய்வது இன்றியமையாததாகும் மற்றும் பட்டம் பெற்ற அன்பர் பலருக்கும் நமது வாழ்த்துக்களை வழங்குகிறோம்.

(திராவிடநாடு - 11.06.1944)