அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


வாழ்த்துகிறோம்! வரம் கிடைக்கிறது!

நல்லவரே! நண்பரே! நாடாள வந்துள்ள நன்மனம் படைத்தோரே! மக்களாட்சியின் மாண்பினை மதித்திடும் மனப்பான்மை உள்ளவரே! மக்களின் குரல் கேட்டுக் குறைதீர்க்க முன்வரும் குணாளரே! உழைத்து உயரிடம் பெற்ற உத்தமரே! மாற்றுக்குறையாத மறத் தமிழரே! பாண்டிய மண்டலம் கண்ட பண்பாளரே! சீர்திருத்த வேட்கை கொண்ட செம்மலே! தொண்டர்தம் அதுயர் துடைக்கும் தூய்மையாளரே!

வாழ்த்தகிறோம் இதுபோவும், இதற்கு மேலாகவும்!

மகிழ்ந்தே வாழ்த்துகிறோம் - மனமார வாழ்த்துகிறோம் - மற்ற மற்றக் கட்சிக்காரர்கள் என்னென்ன கூறுகின்றனர், என்பது பற்றிய கவலையுமற்று, உள்ளத் தூய்மையோடு வாழ்த்துகிறோம், பெருமைக்குரிய சொற்றொடரை மாலையாக்கி அணிவித்து மகிழ்கிறோம், சொந்தக் கட்சியினரும் சூட்டாத நல்லுரை மாலை தொடுத்து அணிவிக்கிறோம், அகம்களிக்கிறோம்! நாடே திடுக்கிடுகிறது, கட்சிகள் பலப்பல ஆச்சரியத்தால் வாய்பிளந்து நிற்கின்றனர், நாம் இவ்விதம் புகழ் மாலைகளைச் சுமை சுமையாகத் தந்து பூரித்து, வாழ்த்துவது கண்டு.

இடையக்கோட்டை தி.மு.க. வாழ்த்துரைகளில், எல்லோரையும் மிஞ்சிடும் நிலை சென்று, வருங்காலத் திராவிடத்தின் முடிசூடா மன்னரே! வருக! என்று வாழ்த்தி வரவேற்கிறது.

தூ! தூ! கண்ணீர்துளிகளின் போக்கே இததன் என்று பன்னீர்த்துளிகளின் பாதுகாவலர் பதவியை அமைத்துக் கொண்டு அதில் அமர்ந்தவண்ணம் (சம்பளத்தோடுதான்) ஆரசோச்சம் அன்பர் கூறிட மாட்டார். ஏனெனில், நூற்றுக்கணக்கான கழகக் கொடிகளை ஏந்திக் கொண்டு, வாடிப்பட்டி திராவிடர் கழகத்தோழர்கள், வரவேற்பு நடத்தி வாழ்த்தி இருக்கிறார்கள்.

தி.க., தி.மு.க. இத்தகைய திருப்புகழ் பாடுகிறது!

திருஊலா நடத்தும் திருவாளரே திகைக்கும் அளவுக்கு வாழ்த்துகிறோம்!

இவவ்ளவு வாழ்த்துரைகளையும் பெறுபவர், முதலமைச்சர் காமராஜர்!

வாழ்த்துகிறோம்! வரமும் கிடைக்கிறது! கிடைத்த வண்ணம் இருக்கிறது.

தி.க., தி.மு.க., வேறு எந்தக் கட்சியும் மேற்கொள்ளாத ஓர் அரும்பணியில் ஈடுபட்டுள்ளன! முன்னது, பின்னதைக் குறைகூறுகிறது, ஆமாம்! ஆனால், தி.மு.க. தி.க.வின் பணி அதுமட்டும்தான் என்று கருதிடவில்லை, திராவிடத் திருநாடு காணும் அரும்பணி ஐந்தாறு சிறுவர்களை அழித்திடும் ஆதிமுக்கியமான பணியைவிட, அவசியமானது, முக்கியமானது என்று எடுத்துக்காட்டியபடி இருக்கிறது, இரு கழகங்களுக்கும் இடையே உள்ள காதலும் மோதலும், எவ்வண்ணமிருப்பினும், இரு கழகமும் மேற்கொண்டுள்ள அரும்பணி ஒன்று இருக்கிறது, அதுவே திராவிட நாடு திராவிடருக்காதல்.

இந்த அரும்பணியை மதிக்கிறார், இதற்கான இலட்சியத்தை அறிந்து கொள்ள முயற்சிக்கிறார் என்பதற்காக அல்ல இவ்வளவு வாழ்த்துக்களும்!

இந்த நம் இலட்சியத்துக்கு இக்கம் தராவிட்டாலும் இதனை அழித்துவிட முன்வர மாட்டார் என்ற உறுதி கிடைத்தபிறகு அல்ல, இவ்வளவு வாழ்த்துக்களும்.

நீண்டகாலத் தொண்டுக்குப் பிறகு, நேர்மையான பொ வாழ்வில் பன்னெடுங்காலம் பங்கேற்றபிறகு, செல்வம், குலப்பெருமை பெரும் பத்திரிகைக்காரரின் விளம்பர வலிவு என்பன போன்றவைகளை ஏணியாகக் கொண்டு உயரிடம் ஏறாமல், தாமாகவே படிப்படியாக முன்னேறி, பெரும் பதவி வகிக்கும் வாய்ப்பினைப் பெற்று, பெற்றதால் ஆர்ப்பரிப்பும் ஆர்ப்பாட்டமும் கொள்ளாமல், பொறுப்புணர்ச்சியும் அடக்கமும் அணிகலன் எனக்கொண்டு கோலோச்சுகிறாரே என்பதற்காகவே, வாடிப்பட்டி தி.க.வும் இடையக்கோட்டை தி.மு.க.வும் சொரிந்தது போன்ற வாழ்த்துக்களை, முதலமைச்சர் காமராஜர் பெறுகிறார்!

கிழ மன்னன் ஓர் கடும் உத்தரவு பிறப்பித்தான், திடீரென்று - நாட்டிலே நாயகர்கள் என்று மதிக்கப்பட்ட நாலாறு பிரமுகர்களைச் சிறையில் ஆடை! சித்ரவதை செய்! பிறகு தூக்கில் போடு! என்று காரணம் எதும் காட்டவில்லையாம்! ஊர் கொதித்து! நல்லோர் மனமெலாம் ஆனலிடு மெழுகாயிற்று! மக்கள் மனம் குமுறினார்! மன்னனை ஏசாதார் இல்லை! பாதகன் என்றனர், காதகன் என்றனர், மிருகம் என்றனர், மிலேச்சன் என்றனர்! ஒரே கொந்தளிப்பு!
மன்னன் மகனுக்கே மனம் ஏரிமலையாகிவிட்டது. “தந்தையே! இதென்ன காரியம்” என்று வெகுண்டுரைத்தான். அனுபவமற்றவனே! எல்லாம் உன் நன்மைக்குத்தான்! எனக்கோ வயதாகிவிட்டது! இனியும் ஆட்சிப்பீடத்தில் இருப்பதென்பது இயலாக் காரியம்! நீயன்றோ இனி அரசாள வேண்டியவன்! அரும்பு மீசையின் அழகிலும் கரிபரி ஏற்றக் கவர்ச்சியிலும், ஆசை நுகர்ச்சியிலும், இன்ப இரவுகளிலுமே நீ மனதைச் செலுத்தி வருகிறாய்! ஊர் மக்கள் இதை அறிவர் மிக நன்றாக அறிவர்! ஆட்சிப் பொறுப்பை ஏற்கவேண்டிய நீ ஊஊர் நிலையையோ மக்களின் போக்கையோ, ஊராளும் முறையையோ, உருப்படியான திட்டத்தையோ கவனிக்காது, இடை நெளிவையும் கடை சிகப்பையும் கண்டு கண்டே களியாட்டம் தனில் ஈடுபட்டு வருகிறாய், எனவே, ஆட்சிக்கு நீ வந்ததும், நாடு நலியும், நலம் குலையும் வளம் வரண்டொழியும், வாழ்வு இருண்டுவிடும் எதும் செய்ய இயலாது நீ, இருகை விரித்துக் காட்டுவாய், என்றெல்லாம், மக்கள், உன்னைப் பற்றிப் பேசிடக் கேட்டேன்! ஆளும் தகுதியும் திறமையும் உனக்கு இல்லை என்ற எண்ணம் எப்போது மக்கள் உள்ளத்திúலே வேகமாகப் பரவிவிட்டதோ, அது பேராபத்தாகவன்றோ பின்னர் உருவெடுக்கும் எனவேதான், மகனே! உன்னை மக்கள் புகழ்ந்து கொண்டாடவும் பூரித்து வாழ்த்தவும், அகமகிழ்ந்து அடிபணியவும், சிரம் தாழ்த்திச் சேலை புரியவும், அன்பரே! நண்பரே! அறநெறி அறிந்தோனே! என்றெல்லாம் அர்ச்சிக்கவும், ஒரு வாய்ப்பு, ஒரு வழி செய்து வைத்திருக்கிறேன்! அடுத்த கிழமை உனக்கு முடிசூட்டுவிழா! நாள் குறித்துவிட்டேன், நாட்டவரக்கு நாளைத்தினம் அறிவிக்க இருக்கிறேன். நான் ஆடவி செல்வேன், அங்கு அதற்கான விடுதி தயாராகிவிட்டது! பட்டம் ஏறியதும, பாலகா! நான் பிறப்பித்த கொடி உத்தரவை ரத்து செய்! சிறைப்பட்ட சீலர்களை விடுதலை செய்! பார், பிறகு! வாழ்த்துக்கள் உன்னைத தேடித்தேடி வந்து கொஞ்சும்! வறுமையை மறந்து, வாட்டமூட்டும் வாழ்க்கைச் சிக்கல்களை மறந்து மக்கள் உன்னை மகான் என்பர், மன்னரில் மாணிக்கம் என்பர், தருமத்தில் இவர் புத்தர் என்று புகழ்வர், தந்தை செய்த கொடுமையினைத் துடைத்திட்ட தர்மசொரூபி, தயாபரன் என்பர், எதும் அறியாதார் போலிருந்துவந்த இந்த இளவலின் இதயம், எத்தணை நற்பண்புக்கு இருப்பிடம் காணீர் என்பர், மலர் கொய்திடும் மதிமுகவதிகளின் இதழ் காய்துகிடந்த இந்த இளவசரன், மக்கள்பால் இத்துணை அன்புகொண்டு, மாண்பும் பண்பும் அறிந்தோனாக இருத்தல் எங்ஙனம் இயலும் என்றல்லவா எண்ணிக் கிடந்தோம்! இதோ பாரீர் அவர்தம் பெரும் செயலை! தந்தை தருமத்தை வெட்டி வீழ்த்த முனைந்தான்! மகன் அறம்காத்தான், அவனி எங்கும் அவன் புகழ் பரவப்பாடுவோம் வாரீர், என்றெல்லாம் கூறிக் குதூகலிப்பர், கொண்டாடுவர்! வாழ்த்துக்களை வாரி வாரி வழங்குவர், ஒரே நாளில் நீ, மக்களின் அன்புக்கும் ஆதரவுக்கும் பாத்திரனாகி விடுவாய்! மக்களின் நன்மதிப்புப் பெறுவாய்! ஆட்சித் தொல்லையின்றி நடைபெறும்! எதிர்ப்பு முளைக்காது! ஏளனம் பிறவாது! ஏத்தி ஏத்தித் தொழுவர்! என் மகனே! உனக்கு, ஆட்சியின் துவக்கத்திலேயே, பெரும்புகழும் பெறறக்கரிய வாழ்த்தும் கிடைத்திட வேண்டும் என்பதற்காகவே, நான் இந்தக் கொடிய உத்தரவு பிறப்பித்தேன்! நான் மக்களின் மனக்கொதிப்பைக் கிளறியது, உன்பால் பிறகு மக்கள் அன்பு பெய்திடவேண்டித்தான்! தந்தை மகனுக்குச் செய்யும் தியாகத் திருத்தொண்டடா இது! நான் கொடியவன் ஆகிறேன், உன்னை நல்லவன் இக்குவதற்காக! என் ஆட்சிக்குப் பெரும்பழி தேடிக் கொள்கிறேன், உன் ஆட்சிக்கு வாழ்த்துப் பிறக்க வேண்டும் என்பதற்காக என்று கூறினானாம் மன்னன், மன்னனாக வேண்டியவன், ஆச்சரியத்தால் மூர்ச்சை யானானாம்.

மேலே சொல்லப்பட்டது கதை!!

ஆச்சாரியார், இதுபோலத் திட்டமிட்டுக் காரிய மாற்றவில்லை, என்ற போதிலும் அவர் ஆண்ட காலத்தில் செய்த ஆடாத காரியம், கதையில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது போன்றதோர் சூழ்நிலையை உண்டாக்கிவிட்டது! அவர் மக்களின் மனதை ஏரிமலையாக்கிடும் ஓர் கல்வித் திட்டத்தைப் புகுத்தினார்! எதிர்ப்புகளைத் துக்கமென்றார்! ஏனென்று கேட்டோரைச் சிறையில் ஆடைத்தார்! கிளர்ச்சி நடைபெற்றது! பிணம் கீழே வீழ்ந்தது! பெரும் செயல்புரிந்தீர்கள், பெருமைக்குரிய அதிகாரிகளே! என்று தட்டிக்கொடுத்தார்! இப்படியும் ஒரு ஆட்சியா என்று மக்கள் வெறுப்புடன் கேட்டனர் - வெகுண்டெழுந்தனர் - வேதியர் விலகினார், காமராஜர் அரியாசனம் ஏறினார், குலக் கல்வித் திட்டத்தை ரத்து செய்தார், வாழ்த்துக்கள் குவியலாயின!

திராவிட இயக்கம், பொதுப்பணியில் பூந்தோட்டப் பகுதி எதுவென்று தேடிடும் போக்கிலே, என்றுமே இருந்ததில்லை. எதிர் நீச்சலிடும் இயக்கம்! எத்தணையோ ஏளனங்கள்! ஏவரெவரோ ஏசுவர்! எதுமறியாதவர், இவர்கட்கென்ன தெரியும் என்று ஆறுமாந்து கேட்பர், எல்லாம் புரிந்துவிட்டதாக எண்ணிடும் மக்கள், கெக்கலி செய்வர்! நாலும் நாலும் அறியார்கள், பாலும் வேலும் தெரியார்கள், காலும் வாலும் காண்பார்கள் என்று கதைப்பார், கவிதை இயற்றித் தோற்றவர், வசைபாடுவதாக எண்ணிக் கொண்டு! நண்பன் என்றே நம்புவோம் அவர் பிறகு நயவஞ்சகம் புரிவார்! வேண்டியவர் என்று கொண்டாடுவோம், அவர் வேற்றாருக்கு ஆடைப்பம் தாங்கச் சென்று விடுவார்! ஆதரவு கிடைக்கும் இடம் என்றெண்ணி அருகே செல்லுவோம், ஆடுத்துக் கெடுப்போன் படமெடுப்பான்! இப்படிப் பலப்பல இடர்ப்பாடுகளுக்கு இடையிலே இருந்து பணியாற்றும் இயக்கம். எனவேதான், யாரேனும், எந்தச் சிறுஅளவேனும், நம் பக்கம் நிற்பவர் போலக் குறிகாட்டினாலும், குதூகலப்படுகிறோம், வாழ்த்துகிறோம்! துணை தேடிடும் நிலையில் உள்ளவர்கள், வலிவற்றவர்கள் என்பதால் அல்ல. நாம் தூய்மையுடையது என்று கருதும் இலட்சியத்திலே, நமக்கு உள்ள பிரேமை எங்கெங்கு, யாரார், அந்த இலட்சியத்திடம் அன்பு காட்டுகிறார்கள் என்று இவலோடு தேடச் செய்கிறது! எளிதிலே கிடைக்கும் இலந்தை என்றாலும் இன்பவல்லியிடம் தந்தால் அவள் மகிழ்வாளே, என்று எண்ணும் காதலன், கனியினைக் கருவூலம் என்றெண்ணி அல்லவா, இல்லம் எடுத்துச் செல்கிறான்- அதுபோல! யாராக இருப்பினும், ஒருதுளி, நமது இலட்சியத்தை ஆதரிப்பவராகத் தெரிந்தால், நாம் அவர்பால் இதயத்தைப் பறிகொடுத்து விடுகிறோம் - நல்ல பண்பு, இல்லை என்பார் இல்லை - எனினும் நமது நிலையை நாம் புரிந்து கொள்ளந்தானே வேண்டும்! ஆதரவாளராக நமக்குத் தோற்றமளிப்பவர், காட்டும் குறி, உதட்டு அசைவா அல்லது உள்ளம் சிந்துவதா என்று ஆராயக்கூட நமக்கு முடிவதில்லை. எனவேதான், சங்கராச்சாரியார் இந்தியைக் கண்டிக்கிறார் - சர்மா மத்ய சர்க்காரைச் சாடுகிறார் - சகலகுண நாயுடு, கோயில்கள் போதும் என்று இடித்துரைக்கிறார் - டில்லியின் ஆதிக்கம் அதிகம்தான் என்று திருமலாச்சாரி கூறுகிறார் - என்றெல்லாம் பேசியும் எழுதியும் மகிழ்கிறோம்! இவர்கள் கூறுவதன் நோக்கம் என்ன, எந்த நிலைமையில் - இவைபற்றிக்கூட எண்ணுவதில்லை.

அவள் தந்த முத்தம் மழலைமொழியும் மரகதமணிக்குத் தான், ஆனால் பார்த்திடும் காதலனுக்கு, தன் கன்னத்தில் அல்லவா, அந்த அழகி முத்தம் பதிப்பதுபோல ஓர் பிரேமை உண்டாகிறது - மயக்கம் - சந்தேகமில்லை - எனினும் அதிலே ஓர் தனியான சுவை இருக்கத்தான் செய்கிறது! என் செய்வது!

திராவிட இயக்கம் இத்தகைய நிலையில் இருப்பதால் யாரார், தன் இலட்சியத்துக்கு ஆதரவு காட்டக் கூடியவர்கள் என்று தேடுகிறது நாடுகிறது, அவரக்ளிடம் அன்பு காட்டுகிறது, அவர்களின் உயர்வுக்கும் வெற்றிக்கும் பாடுபடுவதிலே அகமகிழ்கிறது, ஆனால் அந்தோ அவர்களில் பலர் மாணிக்கவேலர்களாகிவிடத்தான் செய்கிறார்கள், வேதனைப்படுகிறோம். வெகுண்டெழுகிறோம் எனினும் எங்கேனும் வேறோர் பேர்வழி நடிக்கக் காண்கிறோம், இதோ ஓர் நண்பர்! இவர் மிக நல்லவர்! என்று கூறிக்கொண்டு, திக்குநோக்கி நடக்கிறோம், திருப்புகழும் பாடுகிறோம். ஏமாளிகள் என்பதல்ல இதன் பொருள், இலட்சியத்திலே அவ்வளவு பாசம் கொண்டுவிட்டோம் என்பதுதான் உண்மையான பொருள். இந்தப் பாசம்தான், திராவிட இயக்கத்தை என்று காமராஜருக்கு வாழ்த்துரைக்க வைக்கிறது! இலட்சியத்தில் எத்தணைப் பாசம் இருந்தால் இடையக்கோட்டை தி.மு.க. தோழர்கள் காமராஜரே வருங்காலத் திராவிடத்தின் முடிசூடா மன்னரே! என்று கூறியிருப்பர்!

வாழ்த்துகிறோம், காரணவிளக்கம் மேலே தரப்பட்டிருக்கிறது, பலன் கீழே காண்க!

வாழ்த்துகிறோம், வரம் கிடைக்கிறது! என்ன வரம் என்று கேட்கிறீர்களா?

ஆதோ, நெல்லையில் கூண்டேறி நிற்கிறார்கள் நமது தோழர்கள், தூத்துக்குடி வழக்கு! வழக்கு வாபஸ் உண்டா? இல்லை!

டால்மியாபுரம் கல்லக்குடி இக்கப்பட்டதா? இல்லை.

துப்பாக்கிக் குண்டுக்குப் பலியான தோழர்களின் குடும்பப் பாதுகாப்புக்கு ஏதேனும் உதவி கிடைத்ததா, சர்க்காரிடமிருந்து? இல்லை! எண்ணம் இருப்பதாகக் கூடத் தெரியக்காணோம்.

கிடைக்காதததை அல்லவா கூறுகிறாய் - என்று கேட்பீர்கள். சரி! கிடைத்ததையும் கேளுங்கள்.

நடிகவேள் ராதாவின் இராமாயண நாடகத்துக்குத் தடை!

அன்பின் வெற்றி அல்லது ஆரிய சூழ்ச்சி, என்ற நாடகத்தக்குத் தடை! இது, சிற்றூர் பலவற்றிலே, செங்காட்டூர் நாடகக்குழுவினர் நடத்தி வந்த நாடகம். இக்குழுவினரில் சிலர் தி.மு.க. நடத்திய போராட்டத்தில் கலந்துகொண்டு சிறை சென்றவர்கள்!

இரு நாட்களுக்குத் தடை!

இரு நாடகங்களும் திராவிட இயக்கக் கருத்தளிப்பவை!

ராதாவின் ராமாயணம் நடைபெற்றது, ஆராய்ச்சியாளர்கள் அது ஆபத்தம் என்று கூறியது கேட்டோ, ரசிகர்கள் அது கசக்கிறது என்று குறைகூறியோ அல்ல, தடை!

நாடகம் நடத்துவதாக அறிவித்தார் - தடை பிறந்தது.

கண்டேன், கவனிப்பதாகச் சொன்னார், தடை நீக்கப்படலாம், என்று நடிகவேள் கூறியதாகச் செய்தி காண்கிறோம், மகிழ்கிறோம்.

அன்பின் வெற்றிக்கும் தடைதான் - ஆனால் பாவம், ஆ;த நடிகர்கள் காமராஜரைக் கண்டு பேசும் வாய்ப்புப் பெறவில்லை.

கிடைத்திருக்கிற வரம் இது! வாழ்த்துகிறோம், வரம் கிடைக்கிறது!

(திராவிடநாடு
- 12.9.54)