அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


வீர வாழ்வு

குதித்துக் கூத்தாடும் குரங்கு, வேல் பாய்ந்து வீழ்ந்த வேங்கை, இரண்டிலே, எதைக்கண்டு, மக்கள், வியந்து நிற்பர்? வாடிய மல்லி ஒருபுறத்திலும், வாடாத எருக்கம் பூ மற்றோர்புறத்திலும் இருப்பின், எதை விரும்பி எடுப்பர்? எதைக்கண்டு மதிப்பர், வளைந்த வாளைக்கண்டா, தலைகுனியா நாணலைக்கண்டா? கள்ளர் குகையைக் கண்ணியப்படுத்துவார்களா, கலமான கோட்டையைக் கண்டால், கண்ணியப்படுத்துவார்களா? இவைகட்கு ஒரே பதிலே இருக்க முடியும். அதுபோலவே, ஆர்ப்பரிக்கும் கோழையை யாரும் மதியார், ஆவி இழந்தபிறகும் வீரனைப் போற்றுவர். நடமாடும் பேடிகளை நானிலம் போற்றாது, பிணமானாலும் வீரர்களைப் போற்றும். வீரவாழ்வுக்கு வணக்கம் செலுத்தாத விவேகி எவருமிரார். இன்று அத்தகைய வணக்கத்துக்குரிய, பிணமொன்று, மத்ய தரைகடல் தழுவி முத்தமிடும் ஜிப்ரால்டர் எனும் கடற்கோட்டையிலே, கிருஸ்தவ ஆலயத்திலே, காட்சியளிக்கிறது. வீரவாழ்வின் எல்லையைக் கடந்த வயோதிகரொருவரின் உடல், உலகுக்கு ஓர் எடுத்துக்காட்டாக இருக்கிறது. போலந்து முதல்வர், சிகோர்ஸ்கியின் சவம் அங்கு கிடக்கிறது. அவரது புகழோ எங்கும் பரவுகிறது.

ஜெனரல் சிகோர்ஸ்கி போலந்து நாட்டின் முதலமைச்சர். போரில் புலி, போர்த்தந்திரத்தில் நிபுணர். போகப் பொறியிலே புகுந்து, அடிமைச் சங்கிலி பூண்டு, எதிரிக்கு ஆலவட்டம் வீச மறுத்து, கட்கம் இழந்தாலும் கரம் உண்டு போரிட. கரம் போனாலும், கண் உண்டு, என எதிர்ப்பைக்காட்ட என்று கூறும், அஞ்சாநெஞ்சமும், சளையாத ஊக்கமும் கொண்ட தளபதி. அவர் இறந்து விட்டார், நோயால் அன்று, விண்ணில் விமானத்தில் சென்றார், விமானம் முறிந்தது, அந்த விபத்திலே அவர் உயிர் பிரிந்தது. போலந்து நாட்டுச் சுதந்திரத்தைச் சுவஸ்திகச் சூறாவளி சிதைத்தது
போல், போலந்து பிரதமரின் உயிரை விமான விபத்துக் குடித்துவிட்டது.

போலந்து ஹிட்லரிடம் பிடிபட்டதும், சிகோர்ஸ்கி, தமது சகாக்களுடன் பிரிட்டன் சேர்ந்தார். அங்கிருந்தபடி, போலந்து மீட்சிக்கான காரியத்தைச் செய்து வரலானார். வயோதிகப் பருவம், ஆனால் குன்றாத வீரம் அவருக்கு. போலிஷ் படைகள், இருக்குமிடமெங்கும் சென்றார், போரிடுக, போரிடுக, நேசநாட்டினருடன் சேர்ந்து, நாஜியை நசுக்குவீர்களாக, என்று உற்சாகமூட்டி வந்தார், பிரிட்டனிலிருந்து, அமெரிக்கா செல்லவோ, ஈராக், ஈரான், சிரியா முதலிய இடங்களுக்குச் செல்லவோ, அவர் தயங்கினாரில்லை. பலமுறை ஆபத்துகள் அவரை அண்டினவாம், நண்பர்கள் அவரைக் கெஞ்சியும் அவர் தமது கடைமையைச் செய்வதில் சளைக்க மறுத்தார். ஜூலை 4ந் தேதி அவரும் அவருடைய ஒரே புதல்வியும், சகாக்களுமாக, ஜிப்ரால்டரிலிருந்து, விமானத்தில் கிளம்பினர். மேலே கிளம்பிய விமானம், முறிந்து கீழே வீழ்ந்தது. வீரவயோதிகரும் அவருடைய புதல்வியும் 16 சகாக்களும் சவமாயினர், சிகோர்ஸ்கியின் வீர வாழ்வு, கடமையை நிறைவேற்றுகையிலேயே முடிந்தது. போலந்து மக்களின், சுதந்திரத்தை மீண்டும் காணாமுன்னர் கண்மூடிக்கொண்டார். களத்திலே போர்வீரன் மாள்வது போன்று, சிகோர்ஸ்கி, கடமை
யைச் செய்யும் நேரத்திலே, எதிர்பாரா விபத்தால் மாண்டார். இச்செய்தி, போலந்து மக்களின் மனதை மிக மிக வாட்டும். ஆனால், அந்த வாட்டத்திலிருந்தும் ஓர் வீர உறுதியும் பிறக்கும்! சிகோர்ஸ்கியின் மரணத்துக்குக் காரணம், சுவஸ்திகா! ஆம்! அதற்குச் சவக்குழி தோண்டப், போலந்து, புது ஆவேசம் பெற்றே தீரும்.

11.7.1943