அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


வீசுகிறார்கள் சுயராச்யம்!

டோக்கியோ ரேடியோவிலே சொன்னானாமே, சுயராச்யம் தருகிறேன், எங்களோடு சேருங்கள் என்றுரைத்த ஏமாளிக் கூட்டத்தின் கருத்து, கல்கத்தாவிலே, ஒரு முறைக்கு மும்முறை நிலவொளியிலும், விடியு முன்னரும், ஜப்பானியர் குண்டு வீசினர் என்ற செய்தி கேட்ட பிறகேனும் கருத்து துலங்கியிருக்கும் என்று நம்புகிறோம். ஜப்பானியர் குண்டு வீசுவது, நம் நாட்டு மக்களை, “மோட்ச சாம்ராஜ்யத்துக்கு” அனுப்ப வேண்டுமானால் பயன் படுமே தவிர, சுயராஜ்யத்துக்குப் பயன்படாது. குண்டுகள் வெடிக்குமே யொழிய, அவைகளினின்றும் சுயராச்யம் கொத்தாகப் பூக்காது!

கல்கத்தாக் குண்டு வீச்சு, ஜப்பானின் கபடம் என்ன வென்பதைக் காட்டி விட்டது. அம்மட்டோ! வங்கச் சிங்கம், வரண்டு விடாது என்பதையும் காட்டுகிறது.

இப்போது ஜப்பானியர் ஒரு விமானத்தோடு இங்கு வந்தால் நேசநாடுகள் ஒன்பது விமானங்களை, விண்ணிலே வட்டமிடச் செய்து, கொட்டும் ஜப்பானின் கொடுக்கை நறுக்கும் நிலைமை இருக்கிறது. எதிரியின் 9 விமானத்துக்குக்குப் பதில்கூற ஒரு விமானங்கூட இல்லாத நாட்களிலே, இந்தக் குண்டுவீச்சு நடைபெறாமல், நேசநாடுகள் நிமிர்ந்து நின்று போரிடக்கூடிய இந்நாட்களிலே, நேரிடுவது கண்டு நாம் மகிழ்கிறோம்.

பர்மாவுக்குள் நேசநாட்டுத் துருப்புகள் முன்னேற முன்னேற, ஜப்பானியரின் முகாம்களிலே கிலி அதிகரிக்கும். கிலியின் காரணமாக அவர்களுக்கு, எங்கேனும் கண்டு வீசுவோம், என்று பதைப்புச் சுபாவம் தோன்றக்கூடும். அத்தகைய நேரங்களிலே, கல்கத்தா தாக்கப்பட்டதுபோல, மற்ற இடங்கள் தாக்கப் படக்கூடும், வங்கத்தார் போலவே, மற்றையோரும் சிங்கமென்று இருத்தல் வேண்டும். இன்று நாம் ஆதரவற்றவர்களல்லர். வீர ரஷ்யரின் தோழர், சீனரின் நண்பர்கள், பிரிட்டனின் பராமரிப்புக்குரியர், அமெரிக்கரின் ஆதரவும் கிடைக்கப் பெற்றுள்ளோம். எனவே அச்சமில்லை! அச்சமில்லை! என்று உரைப்போம், ஆண்மையுடன் நிற்போம், வெற்றிபுரி நடப்போம். வீரரின் வழி அதுவே! வீர ரஷ்யர், ஜெர்மன் படைகளை டான் நதி தீரத்திலே நொறுக்குகிறார்கள். ரணகளச் சூரன் ரோமில் ஓட்டப் பந்தயத்திலே இத்தாலியரை விஞ்சி விட்டான். எங்கும் நேசநாடுகளின் வெற்றிக்கான நிலைமை உண்டாகிவிட்டது. இங்கும் நாம் உறுதியுடன் நின்றால், வெற்றி நமதே! அஞ்சேல்!

27.12.1942