அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


வெல்க ஜனநாயகம்!

இந்தி எதிர்ப்புப் போராட்டம் தற்காலிக மாக நிறுத்தப்பட வேண்டுமென்று திருச்சியில், 16.9.48ல் கூடிய திராவிடர் கழக மத்தியக் கமிட்டி யினர் முடிவு செய்திருந்தனர். போராட்டம், துவக்கப்பட்ட நாளிலிருந்து மிக வெற்றிகரமாக நடைபெற்று வந்தது. அதுவும் குறிப்பாகச் சென்ற 22.8.48ல் தலைவர்களைக் கைது செய்ததற்குப் பிறகு தமிழ் நாடெங்கும் உணர்ச்சியும் உற்சாக மும் பெருக்கெடுத்தோடியதை அனைவரும் கண்டோம். இந்தி எதிர்ப்பியக்கத்தினரைக் கைது செய்யாமல், விட்டுவிட்டால், இயக்கம் `புஸ்' என்று போய்விடும் என்று சொன்ன சர்க்கார், இயக்க வளர்ச்சியைக் கட்ட்டுப்படுத்த அடக்கு முறையைக் கையாண்டு தீர வேண்டிய நிலைக்கு வந்தனர்.

இன்றைய நிலைமையில் இயக்கத்தின் பேரால், நூற்றுக்கணக்கானவர்கள் சிறைக் கம்பிகளுக்குப் பின்னால் இருண்டிருக்கிறார்கள். 15.9.48ல் எல்லா ஊர்களிலும் அடையாள மறியல் மிக மிக வெற்றிகரமாக நடைபெற்றிருக்கிறது. இயக்கம், தொடர்ந்து நடைபெற்றால், விரைவில் வெற்றிகாணுவதற்கான எல்லா அறிகுறிகளும் இருந்தன. இந்த நிலைமையில் திடீரென இயக்கத்தை நிறுத்தியதானது பலருக்கு, ஏமாற்ற மாகவும், வருத்தமாகவும் தோன்றியிருக்கலாம். ஆனால், இயக்கத்தை நிறுத்தி இருந்ததற்கான காரணங்களை நம் கழகத் தோழர்கள் சற்று விரிந்த மனப்பான்மையுடன் பார்க்க வேண்டும்.

சென்ற சில காலமாகவே ஐதராபாத் பிரச்னை வலுத்து வந்தவை நாம் அறிந்திருந் தோம். ஐதராபாத் மக்கள், ஒரு காட்டு மிராண்டி ஆட்சியிலேயே காலந் தள்ள வேண்டிய அவசியத்திற்குள்ளாகிவிட்டனர். ரஸாக்கர்களின் அட்டூழியம் சகிக்க முடியாத எல்லைக்கு வளர்ந்து விட்டது. ரஸாக்கர் படையைக் கலைத்து விடுமாறு இந்திய சர்க்கார் கூறிய புத்திமதிகளை நிஜாம் சர்க்கார் ஏற்றுக்கொள்ள மறுத்து விட்டனர். ஆகவே ஐதராபாத்திலுள்ள மக்களை, குண்டர் களின் ஆட்சியிலிருந்து காப்பாற்ற வேண்டிய நிர்ப்பந்தத்திற்குள்ளாயினர். யூனியன் படைகள், நேரடியாக யுத்தத்திலிறங்கி, வெற்றிகரமாக நிஜாமைப் பின்வாங்கும்படி செய்துவிட்டனர்.

ஐதராபாத் போரில், நம்முடைய மாகாணத் தின் பொறுப்பு, ஐதராபாத் சமஸ்தானத்தைச் சுற்றியுள்ள மற்ற மாகாணங்களுக்கிருப்பதைக் காட்டிலும் சற்று அதிகமானது என்பது வெளிப்படை. நம் மாகாண சர்க்கார் சென்ற சில காலமாகவே இந்த யுத்தத்தை எதிர்நோக்கி அதற்கு முன்னேற்பாடாகப் பல காரியங்கள் செய்து வந்திருந்ததும் நாமறிந்ததே. நமது இயக்கம் நேரடி நடவடிக்கையிலிறங்குவதற்கு முன், பிரதமர் ஓமந்தூராரும் தலைவர் பெரியாரும் சந்தித்துப் பேசிய பொழுதுகூட, இயக்க வளர்ச்சி யின் நிலை எப்படி இருந்தாலும், ஐதராபாத் போரில் சர்க்கார் இறங்கிவிட்டால், இந்திய எதிர்ப்பு சம்பந்தமான, எல்லா நடவடிக்கைகளை யும் நிறுத்தி வைப்பதாக பெரியார் அவர்கள் வாக்களித்திருந்தார்கள். ஐதராபாத் பிரச்னையில் நம் சர்க்காரோடு ஒன்றுபட்ட கருத்துக் கொண்ட வர்கள் நாம். இந்தப் பிரச்னையில், சர்க்கார் ஈடுபட்டிருக்கும்போது, சர்க்காருடைய முழுக் கவனமும் போரை வெற்றிகரமாக நடத்துவதில் முனைந்திருக்கிறபோது, நாம் ஒரு பக்கம் இயக்கத்தையும் நடத்திக்கொண்டு இருக்கக் கூடாது.

ஆகவேதான், ஐதராபாத் போரில் சர்க்கார் வெற்றி பெற நம்மாலான எல்லா உதவிகளையும் செய்வதென எண்ணி இந்தி எதிர்ப்பு நேரடி நடவடிக்கைகள் அனைத்தையும் தற்காலிகமாக நிறுத்தி வைப்பதென்னும் மேலான முடிவை நம் மத்திய கமிட்டியினர் செய்தனர். நமது கழகம் செய்த இந்த முடிவானது நாம் அரசியலின் பெயரால், ஆட்சியாளர்களுக்கு, வீண் தொல்லை களைத் தருகிறவர்களல்ல என்பதையும், நெருக்கடியான நேரத்தில் நாட்டுப் பற்றுக்கும், பாதுகாப்புக்குமான காரியங்களைச் செய்ய நாம் பொறுப்புணர்ச்சியுடனும், கவலையுடனும் முன் வருகிறவர்கள் என்பதையும் விளக்கும் சிறந்த தோர் முடிவாகும்.

எதேச்சாதிகாரம் எந்த ரூபத்தில் எங்குத் தலை தூக்கினாலும் மக்களாட்சியின் மாண்பை உணர்ந்த நாம், அதைத் தடுக்க நமது சக்தியை பயன்படுத்தியே தீருவோம். நமக்கும், ஆட்சி யாளர்களுக்கும் இந்தி மொழி சம்பந்தமாகவும், வேறு பல பிரச்னைகள் காரணமாகவும், கருத்து வேற்றுமை இருக்கத்தான் செய்கிறது. நம்முடைய கொள்கைகளுக்கும், திட்டங்களுக்கும் ஊறு தேடும் வகையில் ஆட்சியாளர்கள் நடந்து கொள்வதைக் கண்டு நாம் வாளாயிருக்க முடியாது. ஆகவேதான் நமது மக்களின் எதிர் கால வாழ்வைக் கெடுக்கக் கூடிய இந்தி நுழைப்புத் திட்டத்தை ஒழிக்க நேரடி நடவடிக்கை யிலீடுபட்டோம். இது ஜனநாயக ஆட்சி முறையில் யாருக்குமுள்ள மறுக்க முடியாத உரிமையாகும். அந்த உரிமையைக் கூட இது சமயம் நாம் விட்டுக் கொடுத்ததற்குக் காரணம், நாட்டில் அமைதி, பாதுகாப்பு, மக்கள் வாழ்வு, ஆகியவைகளைப் பாதிக்கக் கூடிய பெரியதோர் நெருக்கடி ஏற்பட்டிருக்கும் கால நிலையை உத்தேசித்துதான், பொறுப்புணர்ச்சியுடன் நமது கழகம் செய்த இந்த முடிவை ஜனநாயகக் கோட்பாட்டில் அக்கறை கொண்ட யாரும் வரவேற்பார்கள். ஆதரிப்பார்கள் என்பதில் ஐயமில்லை.

ஒருபுறத்தில் பாஸிசமும், அராஜகமும் உள்ளே நுழையுமோ என்ற கவலை தரும் நிலை இருக்கும்போதும் இந்தி நுழைவை எதிர்ப்பதை மட்டுமே கவனித்துக்கொண்டிருக்க முடியாது. இதை நமது தலைவர் அறப்போரின் துவக்கத்தின் போதே தெளிவுபடுத்தியிருக்கிறார். கழக அன்பர் கள் இதைக் கவனித்துக் கொள்ள வேண்டு மென்று கேட்டுக் கொள்ளுகிறோம். இந்த நெருக்கடியான நேரத்தில் கழகம், நேரடி நட வடிக்கைகளை நிறுத்தி வைத்தது என்பது மட்டுமல்ல, மற்றோர் தீர்மானத்தின் மூலம் ஐதராபாத் சம்பந்தமாக இந்திய சர்க்கார் எடுத்துக் கொண்டுள்ள முயற்சியை, ஆதரித்துமிருக்கிறது.

``ஐதராபாத்தில் ஏற்பட்டுள்ள சீர்குலைவைத் தடுத்து, அங்கு நல்லாட்சி ஏற்படுத்த இந்திய சர்க்கார் எடுத்துக் கொண்டுள்ள நடவடிக்கையை இக்கமிட்டி வரவேற்கிறது.''

என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சமஸ்தானத்தில் சீர்குலைவு ஏற்பட்டிருப்பது மறுக்க முடியாத உண்மை. அத்தகைய சீர் குலைவை யாரும் அனுமதித்துக் கொண்டிருக்க முடியாது- கூடாது. எனவே சீர்குலைவைத் தடுக்க எடுத்துக் கொள்ளப்படும் முயற்சியை, மக்களுக்கு அமைதியும், ஆனந்தமுமான வாழ்வு கிடைக்க வேண்டும் என்ற கொள்கையில் தளராத நம்பிக்கைக் கொண்ட நாம் ஆதரித்தாக வேண்டும். அதுபோலவே சமஸ்தானத்தில் இப்போது நல்லாட்சியில்லை. ஒரு சிறு சமூகத்தார் சகல அதிகாரங்களையும் கைப்பற்றி, பெரும் பான்மையான மக்களை ஆட்டிப் படைக்கும் அரசமுறை, ஆகமத்தின் பேரால் அமைக்கப் பட்டாலும் அல்லாவின் பேர்கூறி நடத்தப் பட்டாலும், ரிஷிகள் முன்னின்று நடத்தினாலும், ரஜ்விகள் முன்னின்று நடத்தினாலும் குடியரசுக் கோட்பாட்டில் நம்பிக்கை கொண்டவர்கள் அத்தகைய ஆட்சியை நல்லாட்சி என்று கூற முடியாது.

ஐதராபாத் சமஸ்தானம் மொகலாயர் காலத்தில் இருந்துவந்த தர்பார் முறையில் நடப்பது ஜனநாயக காலத்தையே கேலி செய் வதாகும். ஜனநாயகத்திற்கு மதிப்பளிக்க மறுக்கும் ஒரு நிஜாமும், அவரைச் சூழ்ந்து கொண்டுள்ள பிரபுக் கூட்டமும், எந்த நியாயத்துக்கும் ஒத்து வராத முறையில் நடந்துகொள்ளும் ரஸாக்கர்க ளும், ஒரு நாட்டின் மதிப்பைக் கெடுக்கக் கூடியன என்பது மட்டுமல்ல, அந்த நாட்டு மக்களின் வாழ்வை நாசமாக்கக் கூடியவை எதேச்சாதி காரத்தையும் மக்களாட்சியை மறுக்கும் மன்னர் களின் கோலாகலத்தையும், வகுப்பின் பேரால் நடத்தபப்டும் அநீதியையும், பிரபுக்களின் ஆதிக்கத்தையும், ஒழிக்கும் பெரும் பணியில் காங்கிரஸ், திராவிடர் கழகம், சோசியலிஸ்டு என்ற கட்சி வேற்றுமைகள் குறுக்கிடக்கூடாது. பழைய முறை ஆட்சிக்கும், புதிய ஜனநாயக சக்திக்கும் இடையே மூளும் போரில் திராவிடர் கழகம் ஜனநாயக முகாமிலும் முன்னணியிலும் நிற்கும், நல்லாட்சி என்று நாம் குறிப்பிடுவது மக்களின் ஆட்சியையேயாகும். அத்தகைய ஆட்சியை அமைக்கும் நோக்கத்துடன் இந்திய சர்க்கார் ஈடுபட்டதால் நாம் அந்த முயற்சிக்கு முழு ஆதரவையும் தருவதெனத் தீர்மானித் தோம். அதன்படி இந்தி எதிர்ப்பு நடவடிக்கையும் நிறுத்தி வைத்தோம். எதிர்பார்த்தபடி ஐதராபாத், போர் நடவடிக்கைகளை நிறுத்தி இந்திய யூனியனிடம் சரண் அடைந்துவிட்டது. ஐதராபாத் நிலைமை இன்னும் சில தினங்களில் நேராகி விடும். ஐதராபாத் நிலைமை ஒழுங்கான ஜனநாயக முறையில் நல்ல முடிவு காணப்பட்ட பின்னரும், சென்னை சர்க்கார், இந்தி எதிர்ப்பை பொறுத்தவரையில் பழைய பல்லவியையே பாடிக் கொண்டிருக்குமானால், திராவிடர் கழகச் செயற் குழுவினருக்கும், அவர்கள் விட்ட இடத்தில் இருந்தே அறப்போரை நடத்தும் நிலைமையே ஏற்படும்.

எனவே, தோழர்கள், திராவிடர் கழகச் செயற்குழுவினரின் அடுத்த தீர்மானத்தை எதிர் பார்த்து, மீண்டும் இந்தி எதிர்ப்பு அறப்போரில் ஈடுபட்டு வெற்றிகாணத் தயாராக இருக்கும் படி கேட்டுக்கொள்கிறோம். வாழ்க ஜனநாயகம். வெல்க ஜனநாயகம்.

(திராவிட நாடு - 19.9.48)