அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


வெள்ளி முளைக்கிறது!

சென்னை சர்க்கார் எதற்கெடுத்தாலும் எங்களிடம் பணம் இல்லையே! என்ன செய்வது? என்ற பல்லவியைத்தான் பக்கத் துணைக் கழைக்கிறது. ஒரு நாட்டை நல்ல முறையில் ஆள்வதற்குப் பணம் தேவை என்பதை எவரும் மறுக்க முடியாது. ஆனால், தேவையான செலவினங்களுக்குப் பணம் தேவைப்படும் போது, அந்தத் தேûயைப் பூர்த்தி ùய்வதற்கு வரி போடுவது ஒன்றுதான் வழி என்ற முறையில் நடந்துகொள்ள முற்படும் போது தான், ஒரு சர்க்காருக்கும் அதன் எதிர்க்கட்சியினருக்கும் கருத்து வேறுபாடுகள் உண்டாகின்றன. மக்களுக்குத் தேவையான வசதிகளை ஒரு சர்க்கார் செய்து கொடுக்க முன் வரும்போது, அதற்கு மக்கள் ஆதரவளிப்பதையும், அவர்களாலான உதவியைச் செய்வதையும் எவரும் ஆட்சேபிக்க மாட்டார்கள்.

ஆனால், சர்க்கார் ஒரு காரியத்தைச் செய்ய முற்படும்போதும, அந்தக் காரியத்தைச் செய்து முடிப்பதற்குப் பணம் தேவை என்று கூறும்போதும், சர்க்காரால் செய்யப்பட இருக்கும் அந்தக் காரியம் மக்களக்குத் தேவையா? அதனால் பலன் உண்டாகுமா? அதற்காகப் பணம் செலவிடலாமா? என்பனவற்றை முதலில் அந்தச் சர்க்கார் யோசிக்க வேண்டும். அங்ஙனமின்றிச் சர்க்கார் சரி என்று நினைக்கும் காரியங்களை எல்லாம் மக்களும் சரி என்று நினைப்பர் - ஒத்துக்கொள்வர் - ஆதரிப்பர் என்று கருதுவதும், அதற்கேற்பக் காரியங்களை நடத்திச் செல்வதும் மக்களாட்சி முறைக்குப் புறம்பான ஏகாதிபத்தியக் கொடுங்கோலாட்சி முறையாகும். மக்கள், தங்களுக்கு நல்லது - தேவை என்று விரும்பும் காரியங்களைச் செய்யும் சர்க்காருக்கே மக்கள் சர்க்கார் என்று பெயர்.

மக்களின் ஆதரவால் மன்றமேறி மன்பதையை ஆள்பவர்கள், மக்களின் விருப்பத்தை அறிந்து, அதன்படி நடக்க முடியவில்லையென்றாலும், அவர்களின் தேவைகளை உணர்ந்து அதற்கேற்றபடியாவது நடக்க முயலவேண்டும்.

சென்னை மாகாணத்தில், படிக்கக் கூடிய பருவத்திலுள்ள பிள்ளைகள் எழுபது இலட்சம். ஆனால், இப்போது பள்ளிக்கூடத்துக்குச் செல்பவர்க் முப்பத்தெட்டு இலட்சம்தான் இன்னும் முப்பத்திரண்டு இலட்சம் பிள்ளைகளைப் பள்ளிக்கூடத்தக்கு அனுப்பிப் படிக்கச் செய்யவேண்டும். இது, நாடாள வந்தவர்கள் நாட்டுக்குச் செய்யúவ்ணடிய தேவையான காரியங்களில் முதன்மையானதாகும். இதற்குச் சர்க்கார் பணம் செலவிட்டால், அதனைத் தவறு என்று எந்த மட்டரகப் பேர்வழியும் கூறமாட்டான். ஆனால் மக்களின் தேவைக்குப் புறம்பான துறைகளில் இறங்கி, ஆவற்றிற்காக மக்களின் பணத்தை வாரியிறைக்கும் போதும், அதற்காக வரிகளை உண்டாக்கும் போதும் தான் சர்க்காரைக் கண்டிக்கவும் குறை கூறவுமான நிலை ஏற்படுகிறது.

மக்களின் தேவை - விருப்பம் என்ற இரண்டிற்கும் உள்ள வேறு பாட்டையும் அதனால் ஏற்படும் நன்மை தீமைகளையும் உணராத எந்தச் சர்க்காரும், தனக்குக் கிடைத்துள்ள அதிகாரம் ஒன்றை மட்டும் துணைக்கு வைத்துக்கொண்டு காரியங்களைச் செய்ய முனையக்கூடாது. அங்ஙனம் செய்தால் நல்லாட்சி நலியும் - மக்களாட்சி மங்கும் - மமதை ஆட்சி மன்றமேறும். அப்போ மக்களின் பரிவும் பாசமும் அந்த ஆட்சிக்கு ஏற்படாது.

எடுத்துக்காட்டாகத் தென்னாட்டவர் வடநாட்டு மொழியான இந்தியûப் படிக்கவேண்டுமென்று கூறுவது, தேவை - விருப்பம் என்ற இரண்டில் எது அதற்கு ஏற்புடைய என்பதை முதலில் தெரிந்து கொள்ள வேண்டும். இங்குள்ள மக்களுக்கு இந்தி படிக்க விருப்பமுண்டா என்பதையும், அது இன்றியமையாத தேவைகளில் ஒன்றுதானா என்பதையும், இம்மாகாணத்திலுள்ள பிள்ளைகளில் முப்பத்திரண்டு இலட்சம் பிள்ளைகள் தங்களுக்கு இன்றியமையாத ஆரம்பப் படிப்பான தாய்மொழிக் கல்வியைப் படிக்க முடியாத நிலைமையில், அதற்கான ஏற்பாடு எதுவும் செய்யாமல் இந்தி என்னும் ஆயல் மொழியைக் கற்கச் சொல்வது முறையா என்பதையும், அதற்காகப் பணம் செலவிடுவது நேர்மையா என்பதையும் மக்கள் பெயர் கூறி, அவர்களின் ஆதரவைப் பெற்று ஆளவந்தவர்கள் நடு நின்று எண்ணிப்பார்க்க வேண்டும். தாய் தஞ்சையில் பிச்சையெடுக்கும்போது தனயன் கும்பகோணத்தில் கோதானம் செய்து போல், தாய்மொழியில் ஆரம்பக்கல்வி கூடக் கற்பிக்க முடியாமல் முப்பத்திரண்டு இலட்சம் குழந்தைகளைக் குப்பைமேட்டில் தவழவிட்டு விட்டு, வடநாட்டு இந்தியைப் படியுங்கள் - கட்டாயமாகப் படியுங்கள் - இல்லையேல் நம்ம கதி ஆதோகதிதான் என்று கூறுவம், அதற்காகப் பணம் செலவிடுவதும் எந்த முறையில் நேர்மையானது என்று கேட்கிறோம்.

தாய்மொழிக் கல்வி, அதிலும் ஆரம்பக் கல்வி முதலில் தேவையா? அல்லது வேற்றுமொழிக் கல்வி தேவையா? என்பதனை எண்ணிப் பார்க்கவேண்டாமா? படிப்பு, உத்தியோகம் கிடைக்கும் என்ற குறிக்கோளுடன் அமையக்கூடாது. அறிவைப் பெறும் நோக்கத்துடனேயே அமையவேண்டும் என்று அறிவுரை கூறும் அமைச்சர்கள், உத்தியோகத்திற்காக இந்தியைப் படியுங்கள்- இல்லையேல் உத்யோகம் கிடையாது என்று ஏன் மிரட்டுகிறார்கள்?

ஆண்மையில், தமது முதலமைச்சர்.

“இந்தி கற்றவர்களுக்குத்தான் உத்தியோகம் கொடுக்க வேண்டும் என்று சட்டம் செய்வதாகச் சர்க்கார் உத்தேசித்திருக்கிறது”.

என்று பேசியிருக்கிறாரே! இதன் பொருள் என்ன? முன்னர், உத்யேகத்திற்கு ஆங்கிலம் தேவைப்பட்டது - இப்போது உத்தியோகத்திற்கு இந்தி தேவைப்படுகிறது - என்றால், நம் தாய்மொழி எதற்கு - எப்போது தேவைப்படும் என்பது தெரியவில்லையே! இல்லை - தெரிகிறது யாருக்கு? நமக்கு ஆனால் ஆளவந்தவர்களுக்குத் தெரியவில்லை - தெரிந்துகொள்ளும் தெளிவு இன்னும் பிறக்கவில்லை. அன்று ஆங்கிலம் நம்மை ஆண்டது. இன்று இந்தி நம்மை ஆளுகிறது. இனிமேல்தான் தமிழ் நம்மை ஆளப்போகிறது என்ற உண்மையை இன்னும் ஆளவந்தார்கள் உணரவில்லை. ஆனால் உணருங்காலம் நெருங்கி வருகிறது என்ற நம்பிக்கை மட்டும் நமக்கிருக்கிறது. இந்தி படிக்காவிட்டால் நம்முடைய கதி ஆதோகதிதான் என்று கூறியவர்களே, இன்னும் சில காலம் பொறுத்து, “இந்தி படித்தால் நம்முடைய கதி ஆதோகதியாகிவிட்டது” என்று கூறிக் குமுறி வேதனைப்படும் நிலைமை ஏற்படப்போகிற தென்பதில் நமக்கு அசைக்கமுடியாத நம்பிக்கை இருக்கிறது. அந்த அறிகுறிகள் இப்பவே தென்படத் தொடங்கிவிட்டன. சாவடியிலிருந்து சட்டசபை வரையிலே அந்த அறிகுறிகள் தென்படுவதைக் காண்கிறோம். டில்லி சென்னையைப் பொருளாதாரத் துறையில் ஆட்டிப்படைக்கிற வரையில் நம்மால் எந்த நல்ல காரியத்தையும் செய்ய முடியாது என்று அமைச்சர்களே முணுமுணுக்கும் நிலைமை ஏற்பட்டுவிட்டது - இந்த முணுமுணுப்பு முச்சந்திக்கு வரும் என்பது நமக்குத் தெரியும். அப்போது தான் நாம் அவர்களின் கண்களில் காணப்படுவோம்.

அந்தச் சமயத்தில், இன்று.,
“இந்தி கற்றால்தான் வடநாட்டாருடன் வியாபாரம் செய்ய நம்மால்முடியும்”

என்று கூறும் முதலமைச்சரே தம்முடைய வாயாலேயே.

“தமிழ் கற்றுக்கொண்டு வந்தால் தான் இனி வடநாட்டவர் நம்முடன் வியாபாரம் செய்ய முடியும்”.

என்று கூறும் நிலை ஏற்படும். அது மட்டுமல்ல.

“தமிழ்நாடு தனியாக நிற்க முடியுமானால் தான் நாம் இந்தியைப் புறக்கணிக்க முடியும்”.

என்று, இன்று கூறும் முதலமைச்சரே இன்னும் சிலகாலம் பொறுத்து,

“தமிழ்நாடு தனியாக நிற்கமுடியும், அதற்கு யாருடைய தயவும் தேவையில்லை”.

என்று கூறப்போகிறார். அவர் கூறாவிட்டாலும் - கூற விரும்பாவிட்டாலும், நாடு அவரைக் கூறும்படி செய்யும். அதன்பின்னர் தமிழ்நாடு மட்டும் தனித்து நிற்கமுடியாதென்ற உண்மையும், தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஆகிய மொழிகளைக் கொண்ட அனைவரும் ஒன்றாக நின்று அரசியலை நடத்தினால், எவருடைய தயவுமின்றி நம்மால் நல்வாழ்வு நடத்த முடியும் என்ற உண்மையும் புலப்படும். பொருளாதாரத் துறையில் தென்னாடு வடநாட்டால் சுரண்டப்படுரூ க்ஷகுழடமையை இப்பொழுதே உணரத்தொடங்கிய அமைச்சர் களுக்கு, இன்னும் சில காலம் போனால், தென்னாடு வடநாட்டின் தொடர்பை அறுத்துக் கொள்ளúவ்ணடியதே என்ற நிலை ஏற்படத்தான் போகிறது. அவ்விதம் ற்படுவதில் உள்ள சிக்கல்களையும் ஆவற்றைத் தீர்ப்பதற்கான வழிவகைகளையும்தான் திராவிடர் கழகம் இப்போது விளக்கிக் கொண்டு வருகிறது. இந்த விளக்கம் இப்போது வேம்பாகத் தோன்றினாலும், நம்முடைய பிரசாரம் காலப்போக்கில் அதனை அவர்களுக்குக் கரும்பாக்கிவிடும்.

நம்மிடம் எவ்வளவு குரோதம் இருந்தபோதிலும், சென்னையிலள்ள சௌகார்பேட்டை போன்ற மார்வாடி முகாம்களையும் அங்கு நடக்கும் வியாபார முறைகளையும் நமது அமைச்சர்கள் தங்களுடைய ஒய்வு நேரங்களில் சிறிது சிந்தித்துப் பார்ப்பார்களேயானால்.

“இவர்கள் எல்லோரும் வடநாட்டில் இருந்து இங்கு வியாபாரம் செய்ய வந்தபோது, இந்நாட்டு மொழியான தமிழைக் கற்றுக் கொண்டு வரவில்லையே! நாம் மட்டும் வடநாட்டாருடன் வியாபாரம் செய்யப் போவதாய் இருந்தால் ஏன் இந்தி மொழியைக் கற்றுக் கொண்டு போகவேண்டும்?.”

என்ற எண்ணம் உண்டாகாமல் இருக்க முடியுமா?

இந்தியா ஒரு தேசம் - அதைப் பிரிக்க முடியாது - கூடாது என்றவர்களே அது இரண்டாகப் பிரிந்து இருப்பதைப் பார்க்கிறார்கள். இந்தியாவைப் பிரிப்பது பசுவை வெட்டுவது போலாகும் என்று கூறியவர்களே, இன்று இந்தியப் பசு இருகூறாக வெட்டப்பட்டு வெவ்வேறாக இருப்பதைப் பார்க்கிறார்கள்.

இப்போது நாம் திராவிட நாடு திராவிடருக்கே ஆகவேண்டும் என்று கூறுவதற்குக் கூறப்படும் கண்டனங்களையும், மறுப்புகளையும் விட அதிகமான அளவிலே, பாகிஸ்தான் பிரிவினைக் கிளர்ச்சியின்போது கண்டனங்களும் மறுப்புக்களும் கிளம்பின. பின்னர் அவையெல்லாம் பயனற்ற கூச்சல் என்பû உணர்ந்து பிரிவனைக்குச் சம்மதித்தனர். இதே நிலைமை நம்முடைய நியாயமான கோரிக்கைக்கும் ஏற்படும் என்ற நம்பிக்கை நமக்கிருப்பதாலேயே நாம் நம்முடைய நோக்கத்தில் சிறிதளவும் விட்டுக் கொடுக்காமல் நடந்து வருகிறோம். பசுவையே வெட்டியான பிறகு அதன் வாலை வெட்டுவது பாபம் என்று கூறும் பக்தனைப் போல் நடந்து கொள்பவர்களின் போக்கைக் கண்டு பரிதாபமும் வேதனையும் ஆடைகிறோம்.

வடநாடு தென்னாட்டை ஆட்டிப்படைக்கிறது என்பதனை அமைச்சர்க்ள உணர ஆரம்பித்துவிட்ட பின்னர், வடநாட்டுத் தொடர்பு தென்னாட்டுக்கு ஏன் என்ற கேள்வியும், தென்னாடு வடநாட்டிலிருந்து பிரிந்து நிற்கமுடியும் என்ற பதிலும் கிளம்பாமல் இருக்க முடியாது. விடிவெள்ளி முளைத்துவிட்டது, பொழுது விடிவதற்கு இன்னும் சில நாழிகையே இருக்கிறது.

வடநாட்டுத் தொடர்பாகிய இருட்டில் இருப்பவர்களுக்கு, அந்த இருட்டில் இருந்து கொண்டு செய்யும் காரியங்கள் தெளிவாகவும், பயனுள்ளதாகவும் செய்ய முடியாமல் இருக்கிறதே என்ற கவலை பிறந்துவிட்டது. இந்தக் கவலையைப் போக்குவதற்கான மருந்து எங்கே கிடைக்கும் என்று தேடும் கட்டத்துக்கு வந்துவிட்டார்கள் அதற்கு முதற் சிகிச்சையாக இந்தி என்ற நச்சுணவை உட்கொள்ளாமல் இருக்க வேண்டும் இந்த நச்சுணவை நீக்கியபின்னர், நமது தாய்மொழியே நமது வாழ்க்கைக்கு வழிகோலும் என்பதை உணரவேண்டும். அதன் பின்னர் வாழ்க்கûயின் குறிக்கோளை ஆடைவதற்கு நம்முடைய நாட்டை நாமே ஆளவேண்டும் என்பதை உணரவேண்டும். இவை உணரப்பட்டுவிட்டால், அதன் முடிவு திராவிடநாடு திராவிடருக்கே என்பதைத் தவிர வேறு எந்த விதமாகவும் இருக்க முடியாது என்பதை ஆளவந்தார்கள் உணர வேண்டுகிறோம் - உணரும் நிலை ஏற்பட்டே தீரும்.

(திராவிடநாடு - 27.3.49)