அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


வெண்ணெய் வைத்துக்
கொக்குப் பிடிக்கும் வேடிக்கை!
வெண்ணெய் வைத்துக்
கொக்குப் பிடிக்கும் வேடிக்கை!
பேச்சுக்கடைக்காரரின் பூச்சு வேலை
புராணப்புரட்டுக்குப் புது வக்கீல்கள்

சித்தத்தைச் சிவன்பால் வைத்துச் சத்தமிட்டுச் சொன்னாராம், புதுப்பக்தரொருவர், “பெரியபுராணத்திலே சீர்திருத்தக் கருத்துக்கள் உள்ளன - நான் சத்தியம் செய்கிறேன்” என்று. அத்தோடு விட்டாரே ஐயன், அரைப்பலம் கற்பூரத்தையும் எடுத்துக் காட்டாமல், அதுவரை எனக்கு மகிழ்ச்சி. சத்தியம் செய்கிறேன் என்று அந்த நண்பர் கூறிய, பெரியபுராணம் சீர்திருத்தக் கருத்துக்கான ஏடு என்பதை உறுதி செய்யும் சொல் அல்ல; அவர் பாபம், அவ்விதம் நம்பியிருக்கக் கூடும். வயது ஏறஏற, எடுப்பார் கைப்பிள்ளையாகவே இருப்பவர் - என்றும் இளையவர் பகுத்தறிவுத்துறையில், எனவே அவர், உண்மையாகவே, பெரிய புராணத்திலே சீர்திருத்தக் கருத்துக்கள் ஏராளமாக உள்ளன என்று நம்புபவராக இருக்கக்கூடும். ஆனால், “சத்தியம்” செய்வது, வாதத்துக்கு அரணா? இல்லை! அவர் வாய்மொழிவதை நம்புபவர் இல்லை, என்பதைத் தெரிந்து கொண்டதால் ஏற்பட்ட திகைப்பு, அவரைக் கூவச் செய்தது; “சத்தியம் செய்கிறேன், அப்போதாவது என் சொல்லை நம்புங்கள்” என்று கெஞ்சச் செய்தது. பரிதாபமான நிலைதான்! படிப்பாலும் பண்பாலும், அறிவு ஆராய்ச்சியாலும், மன்றிலிருப்போரின் மனதிற் சரியெனப்படக் கூடியவைகளை எடுத்துக் கூற வேண்டியதுமுறை; அவரோ பாபம் “சத்தியம்” செய்கிறார்; அவ்வளவு நம்பிக்கைக் குறைவு மக்களிடை உண்டாகிவிட்டது, அவர் உரையில் அவர் உரைக்க எடுத்துக் கொண்ட பொருளில்.

“நிச்சயமாக எடுக்கலிங்க”

“போடா தடிப்பயலே, நீ தவிர வேறுயார் இருந்தார்கள் இங்கே, நீதான் எடுத்துக் கொண்டு இருப்பாய்”

“இல்லிங்க, என்னை நம்புங்க. நான் திருடுவது கிடையாதுங்களே”
“ஆஹா! மஹா யோக்யன்தான்! மூடுடா வாயை. நீதான் செய்திருப்பாய் அந்தத் திருட்டு வேலையை. உள்ளதைக் கூறி விடு, உதைவிழுமுன்.”
“சத்தியமாகச் சொல்றேனுங்க நான் எடுக்கவில்லை பணத்தை”
இந்தச் “சத்தியம்”, வேலைக்காரனுக்கும் எஜமானுக்கும் இடையே, களவு நடக்கும் சமயத்திலே, கிளம்புவதுண்டு. அதன் எதிரொலி, பெரும்பாலும் அழுகுரலாக இருக்கும். பணியாளின் பரிதாபப் ‘பாணி’யில், வாதாடும் வேலையினர், போராடும் பருவத்தினர், நூல்நாடும் பண்பினர், நா அடினால் நாடு ஆடும் என்ற நினைப்பினர், நண்பர் கே.எம். பால சுப்பிரமணியம்,பேச நேரிட்டது கேட்டு, அவருடைய முன்னாள் முடுக்குத் தெரிந்த நான் வருத்தமடையாது இருக்க முடியுமோ! தீப்பொறி பறக்குமே அவருடைய பேச்சிலே முன்பு; திரு. ஏகம்பனின் திரு அருளைத் தீருநீற்றுப் பூச்சிலே காண்பதாகக் கூறிக்கொள்ளும் இந்தச் சமயத்திலே, ஏனோபாபம், கசிந்து கண்ணீர் மல்கி, சத்தியம் செய்கிறேன், என்று கூப்பிய கரத்தராய்க் காட்சி தரவேண்டும்! ஏன், சொல்லுக்கு அரணாகச் சத்தியம் செய்து தீரவேண்டிய நிலை பிறந்தது? ஏன் அவ்வளவு சோடையான பொருளை விற்கக் கிளம்பினார்? இதைவிடச் சும்மா இருந்தே சுகம் பெறலாமே! நண்பருக்கு, என் வேண்டுகோள் இது : “தோழா! தோடுடைய செவியனின் புகழ், அந்தத் துறையிலே அதிக அனுபவம் பெற்ற நா வாணிபர்களால் நாட்டுக்கு எடுத்துக் கூறப்பட்டு விவேகிகளால் தள்ளப்பட்டு விட்டது, ஏன், “புதுபோதைக் காரராகிய (சிவ போதையைக் குறிப்பிடுகிறேன், வேறொன்று கூறேன் பராபரமே!) நீர், அந்த வேலையிலே வீணாக நுழைகிறீர். குண்டலமணிந்து, குறுநடை நடந்து, சிறுமதி பூண்டவனின் சிந்துபாட, பாடி இட, ஏடு எந்திகள் ஏராளமாக உள்ளனர், அதே வேலைக்கு நீர் செல்வானேன்! ஜினிவா செல்வாய்! அமெரிக்கா போவாய்! தமிழரின் வீரத்தின் தூதனாய், பகுத்தறிவின் பாதுகாவலானாய் என்று எதிர்பார்த்த காலம் ஒன்று இருந்ததே, மறந்தனையோ? இன்று “மந்திரமாவது நீறு” என்று கூறவும் துணிந்தனையே! இதிலே, முதலிடமும் கிடைக்காதே, முதல் வரிசையிலும் இடமிராதே, கொடி தாங்கி வேலைக்குத் தானே ஆள்தேவை அங்கே. அதிலேயும் ஓர் ஆனந்தம் காண்கிறீரோ? ஏன்? இந்த வீண்வேலை, கே.எம்.பி. இருக்கிறாரே அவர் எந்த விஷயத்தையும் பேசக்கூடியவர் அழகாக என்று பெயர் எடுத்தது போதும்” என்று கூறுகிறேன், நட்பு காரணமாக. அவரோ, “நான் வாதாடவும் தயார்; இதுபற்றி” என்று யாரிடமோ முழக்கமிட்டதாகக் கேள்வி. குருநாதர் துணையுடன் அவர் அதற்கு என்றையத் தினம் தயாரானாலும், அவருடன் வாதிட ஆட்கள் உள்ளனர், அவர்கள் என் நண்பரின் இனிய நடை அழகு இல்லாதவர்களாக இருக்கலாம், ஆனால் நண்பரின் நாறிப்போன சரக்கை, உரறியச் செய்யும் அளவுக்கு, அந்த விஷய விளக்கத்தைத் தெரிந்து வைத்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். மன்றமேற அவர் அசைவதானால், மகிழ்ச்சியே, இதுவெறும புகழ்ச்சியில்லை, உண்மை!!
* * *

நண்பர் கே.எம். பாலசுப்பிரமணியம், புலவர் ஆராசமாணிக்கனாருடன், கச்சி ஏகம்பன் வாழும் காஞ்சியிலே, சென்ற கிழமை வந்திருந்தாராம். இருவரும், மக்களை ஒரு மாடியிலே கூட்டி வைத்து, பெரிய புராண போதனை புரிந்தனராம், வீரமும், இரசமும் சொட்டச் சொட்ட! புலவர் ஆராசமாணிக்கனார், காவியச்சுவை மட்டுமல்ல, சரித நுட்பங்கள் உள்ளன என்பதை எடுத்துக் காட்டினாராம்.
* * *

பெரிய புராணத்திலே சீர்திருத்தக் கருத்துக்கள் உள்ளன என்று கூறினாரே, அது உண்மை என்றே வைத்துக் கொள்வோம், இருந்தால் என்ன? சீர்திருத்தக் கருத்துகள் எங்கெங்கு தேடினாலும் காணக் கிடைக்காத தங்கம் போலவும், அதைத் தேடித்தேடி உலகு அலுத்துப்போனது போலவும், அவர் ஏதோ, “உலக நன்மைக்காக”, புராணச் சுரங்கத்துக்குள் நுழைந்து, அங்கு சீர்திருத்தச் செம்பொன்னைக் கண்டுபிடித்துக் காட்டுவது போலவும், பேசுகிறாரே, இன்று சீர்திருத்தக் கருத்துக்களின் குவியல் கண் எதிரே கிடக்க, புராணக் குப்பையைக் கிளறிக் கிளறிக் கண்டேன் சீர்திருத்தம் என்று கூவுவது, விவேகத்தின் அறிகுறியா, பண்பின் பட்டயமா, பொதுநல நோக்கப் பதக்கமா, என்ன, அதன் பொருள்? சீர்திருத்தவாதிகள், அவர்கள் செப்பிய மொழிகள் உள்ளன, அந்த ஏடுகளை நாட்டவருக்கு எடுத்துக் கூறுவதைவிட்டுப் புராணத்தில் புகுந்து சீர்திருத்தக் கருத்துக்களைக் கொய்தேன், இதோ தந்தேன் என்று பேசுகிறார்களே, ஏன் இந்தப் பித்தம்! கல்யாணி ஆராகமும் காம்போதியும் இப்படி இருக்கும், என்பதை விளக்க இசை வாணனை நாடட்டும், இசைநூலைப் படிக்கட்டும் என்று கூறுவது முறையாகுமே தவிர, ஆராக இலட்சண ஆராய்ச்சியைக் கண்டறிய நடுநிசியிலே கொசு ஆராய்ச்சியிலே உடுபடுவது முறையாகுமா? இந்த நண்பர்கள், தமது அடுத்த அலுவலாக “ஆசையும் கொசுகும்” என்று ஆரம்பித்தாலும் ஆச்சரியப் படுவதற்கில்லையே. இவ்வளவு விழிப்பு ஏற்பட்ட இந்த நாளிலே, எவ்வளவு துணிவுடன், கூச்சத்தை மறந்து, பேச்சழகராக இருக்கவேண்டும் என்ற ஆசையால் தூண்டப்பட்டு, பெரிய புராணமும் சீர்திருத்தமும் பெரிய புராணமும் சரித்திரமும் என்று பேசுகிறார்கள்! இனி, ‘கொசு ஆசை’ ‘மூட்டை பூச்சியின் போர்த் தந்திரம்’ என்று புதிய பிரச்னைகளைப்பற்றி, ஆழ்ந்த கருத்துக்களை ஆராய்ச்சி பூர்வமாகப் பேசத் தலைப்பட்டு விடக்கூடும். எனக்கே, வெட்கமாகத்தான் இருக்கிறது. என் நண்பர்களின் நா அசைவின் போக்கைக் கேட்க. “அதிலே இது” என்ற எண்ணமும், பேச்சும் பிறப்பானேன்; “அது இது” என்று கூற முடியாத நிலைதானே அதற்குக் காரணம்! பெரியபுராணத்திலே, சீர்திருத்தம் தேடுவானேன், தனியாகச் சீர்திருத்தக் கருத்து இல்லையா, ஏடுகளிலே. பெரிய புராணத்திலே சரிதம் தேடிக் கிடப்பானேன், சரித ஏடுகள் இல்லையா தனியா? “அதிலே இது” தேடுவானேன். அதற்கு என்று தனித்தனியாக ஏடுகள் இருக்கும் போது? அவர்கள் அந்தக் காரியத்திலே இறங்குவானேன்? சரிதப் பேராசிரியர் சரிதம் பேசட்டும். புராணம் படித்தவர், அதை மட்டும் பேசுவது, ஏனோ அவர் கற்ற வித்தை என்றுபோகும். புராணத்திலே சரிதம் காட்ட ஒரு தமிழ்ப்பண்டிதர் முயல்வானேன், சரிதம் இருக்க, சரிதப் பேராசிரியர்கள் இருக்க? அந்தத் துறைக்கு அவர் நுழைவானேன்? அதிலும் புராணப்பளுவைச் சுமந்து கொண்டு வருவானேன்?
* * *

காரணம் ஒன்று இருக்கிறது! காலையிலே விற்பனையாகாத இட்லியை, உடைத்து உதிரியாக்கி, மாலையிலே கொஞ்சம் மசாலா போட்டு மாறுபெயரும் வைத்து விற்கமுயலும், ஊர்கோடி உண்டிக்கடைக்காரனின் உள்ளப் போக்கு, நமது நண்பர்களுக்குப் பிறந்துவிட்டது. புராணப்பிரசங்கம், விலை போகாமல், ஜில்லிட்டுப்போன “இட்லி”, நமது நண்பர்கள் நடத்தும் பேச்சுக் கடையிலேயே வேறுபண்டம் இல்லை, என்ன செய்வார்கள்? கைவசம் தங்கிவிட்ட பண்டத்தை விற்காவிட்டாலோ, கைமுதலுக்கு நஷ்டம், எனவே, மசாலா போடுகிறார்கள், கொஞ்சம் சரித்திரம், கொஞ்சம் சீர்திருத்தம் இவைகளைக் கலந்து, புதுஉருவாக்கி, விற்பனைக்குக் கொண்டு வருகிறார்கள். வீண்வேலையாகவே இதுவும் முடியப்போகிறது என்பதையும் விரைவிலே உணரப்போகிறார்கள்!
* * *

புலவர் ஆராசமாணிக்கனார், பேசினாராம், “சேக்கிழார், சாமான்யரில்லை; மந்திரி! ஆகவே அவருக்கு நாடெங்கும் சுற்றிப் பார்க்கும் வாய்ப்பு இருந்தது. எனவே அவருடைய நூலிலே வரலாற்று உண்மைகள் மிளர்கின்றன” என்று. இதிலே ஆச்சரியம் என்ன இருக்கிறதோ எனக்குத் தெரியவில்லை! மந்திரியாக இருந்தது ஆச்சரியப்பட வேண்டிய செய்தியா, இல்லை. அவர்நாடு சுற்றிப்பிறகே ஏடு எழுதினார் என்பது ஆச்சரியத்துக்கு உரியதா? எதைக் கருதிப் புலவர், மூக்கின்மேல் விரல் வைக்கிறார், நம்மை எல்லாம் வைக்கச் சொல்லுகிறார் என்று எனக்குத் தெரியவில்லை. சேக்கிழார் மந்திரியாக இருந்து, மண்டலம் பல சுற்றியே, நூல் எழுதினார் என்று இருக்கட்டும், அது போதுமா, ஏடு, நாடு ஏற்றுக் கொள்ளவேண்டியது, இன்றியமையாதது, இந்தக் காலத்துக்கு ஏற்றது, என்று விளக்க! மந்திரியாரா எழுதினார், அப்படியானால் மறுமொழி பேசாமல் அந்த நூலைக் கண்ணிலே ஒத்திக் கொள்ளவேண்டியதுதான், என்று எண்ணும், ஏமாளிகளின் புன்சிரிப்பும் கைதட்டுதலும் சிரக்கம்பமும், பெறுவதற்கா இவ்வளவு படிப்பு, பட்டம், பாடு, ஆராய்ச்சி, செச்சே! நான் அந்த நண்பருடைய வரவு செலவுக் கணக்குப் புள்ளி போட்டுப் பார்த்துக் துக்கமடைகிறேன் - கொஞ்சம் வெட்கம்கூடத் தான்; எவ்வளவு வீண் வேலை அவருக்கு! போகட்டும், இந்தக் கருத்தையாவது, அவர் கண்டுபிடித்துக் கூறினாரா, என்னமோ அவருடைய சக்திகேற்ற அளவு அவரும் ஆராய்ச்சி செய்தார் என்று மகிழ! அதுவுமில்லை! பெரிய புராணத்திலே சரித உண்மைகள் புதைந்து உள்ளன என்று கூற்று, புலவர் கூறுவதற்குப் பன்னெடு நாட்களுக்கு முன்பு, “பழைய பண்டத்தைப் புது உருவாக்கும் பலசரக்குக் கடையின்” ஆதீன கர்த்தா போன்ற, திரு.வி. கலியாண சுந்தரனார், தமது ‘பெரியபுராணம்’ எனும் ஏட்டில்.
“பெரிய புராணம் பௌராணிகத்தை வித்தாகக் கொண்டு எழுந்த நூல் அன்று. அது சரித்திரத்தை வித்தாகக் கொண்டு எழுந்த காவியம். கல்வெட்டுக்களையும், வேறு பல சான்றுகளையும் ஆராய ஆராயப் பெரியபுராணம் சரித்திரத்தை அடிப்படையாகக் கொண்ட நூல் என்பது நனி விளங்கும்” என்று தீட்டிவிட்டார். அந்தத் திருவாய் மொழியினைக் கூறுவதுதானா, இந்த ஆராய்ச்சியாளரின் திருப்பணி! ஆமெனில், இதனை ஏழு ரூபாய் செலவிலே தெரிந்து கொள்ளலாமே, இரவு பகல் படித்து, இன்னின்ன பரீட்சைகளுக்கு இன்னின்ன பட்டம் என்று அறிந்து, தேகம் இளைக்கப் படித்துத் தேறியது, வீணாகிறதே. மலையைக் கல்லி எலி பிடிப்பானேன், அதுதான் வயல்வெடிப்பிலே உலவுகிறதே!
* * *

சரித்திரம், என்றால் என் நண்பர்கள் என்னவென்று கருதுகிறார்களோ தெரியக் காணோம். எதிலும் அதுதேடும் வேலையிலே ஈடுபடுகிறார்கள். ஏனோ? சரித்திரத்தைக் தனியாகக் கூறும் ஏடுகள், படிக்கச் சுவை இல்லையோ புரியவில்லையோ என்றும் கேட்பேன், கோபிப்பரே, என்று கேளாது விடுகிறேன். தமிழகத்தின் தாழ்நிலை இப்படியா இருக்க வேண்டும். வரலாற்றுக்காக வளை பல நுழைந்து தீருவேண்டுமாமே! நுழைந்து தான் தொலைகிறார்களே! தமது நுண்ணறிவினால் கண்டுபிடித்த வரலாற்றுத் துண்டுகளைத் தொகுத்து வெறும் சரித நூலாக்குவதுதானே! ஏன் பழைய புராணத்தோடு அதனை மறுபடியும் கலந்து பரிமாறுகிறார்கள்! காரணம் இதற்கும் இருக்கிறது. தமிழ்ப்புலவர், வரலாறறுப் போதாகாசிரியர் வேலை செய்வதை, பெரும்பாலோர் ஏற்கமாட்டார்கள் அல்லவா? டாக்டருக்கு தோட்டச்சுவர் எப்படிக் கட்டவேண்டும் என்று தெரிந்திருக்கலாம், ஆனால், ஆவரிடம் மருந்துக்குப் போவார்களே தவிர, கட்டிடப் பிளானுக்குப் போகமாட்டார்களல்லவா! அதுபோலவே, இதுவும். மேனாட்டுப் புலவர்கள் யாராவது இன்று “பால்பாடிய பாவும் பசிபிக் கடலும்”, “பீடர் பாடிய பாசுரமும் பிரிட்டானிய சரிதமும்” என்று பேசிக் கொண்டிருக்கிறார்களா? குங்கிலியக்கலய நாயனாரும் குறுநில மன்னர் வரலாறும் என்று இங்கு அவர்கள் பேசிக் கொண்டிருப்பது போல. புலவர் என்றால், துறைகளைப் பிரித்துக் கொண்டனர் அங்கு. இங்கு புலவர் என்றால் பாமரனிடம் தமது பேச்சழகைக் காட்டுபவர் என்ற அளவிலே நிறுத்திக் கொண்டனர். இல்லை என்றால், எந்த ஆதாரத்தைக் கொண்டு, சரிதத்துறைக்கென்று தனி ஆராய்ச்சியாளர்கள் இருக்கும்போது, புராண ஏடு படித்தோர், சரித உண்மைகளைச் சபைகளிலே வீசத்துணிகிறார்கள் என்று கேட்கிறேன். கணித மேல் படிப்பிலே நேர்க்கோடு, குறுக்குக்கோடு, வட்டம் முதலியன உண்டு, அதற்கான பேராசிரியர்களும், பாடப் புத்தகங்களும் உண்டு; ஆனால், நீறுபூசியும் நாமதாரியும் பொட்டுக்காரரும், குறுக்குக்கோடு, நேர்க்கோடு, வட்டம் என்ற கணித சாஸ்திர உண்மைகளையே நாங்கள் தரித்துக்கொண்டு இருக்கிறோம், ஆகவே, மதக்குறிகளிலே கணித உண்மைகள் உண்டு என்று பேசுவது முறையா? பேசினால் நண்பர் பொறுத்துக் கொள்வாரா?
* * *

அப்படித்தான், அவர் காட்டிய அரிய பெரிய சரித உண்மைகள் என்ன? பெரிய புராணத்திலே “தொண்டர்கள்” இருந்த இடங்களும், அங்கு நடைபெற்ற சிலபல நிகழ்ச்சிகளும், ஆண்ட அரசர்களும், வரலாற்றுத் துண்குகள்தான், என்பதை விளக்கக் கல்வெட்டுக்கள் உள்ளனவாம்! இருக்கட்டுமே கல்வெட்டுக்கள்! அவைகளிலே, இயற்கை இல்லக் கிழத்தியை இறைவன்பின் அனுப்பியதும், சிறுத்தொண்டன் சீராளனைக் கறியாக்கியதும், நாள் நேரத்தோடு பொறிக்கப் பட்டும் இருக்கட்டுமே, அதனால் என்ன ஏற்பட்டுவிடும்? அதைக்கூற எந்த உண்மையை ஸ்தாபிக்க விரும்புகிறார்? ஜார்மன்னன், மக்களை அடிக்க உபயோகித்த சவுக்குக் கண்டு பிடிக்கப்படுகிறது என்று வைத்துக் கொள்வோம், அதனால் ஜார், உத்தமன் என்று தீர்ப்பளிப்பதா? இன்றுள்ள நிலையிலே, புராணக்கதைகள் தேவையா? அவைகளிலே காணப்படும் செய்திகள் நடைமுறைக்கும் நாட்டு முன்னேற்றத்துக்கும் ஏற்றதா? நல்லறிவாளர், நாதனுக்கும் ஜீவனுக்கும் இருக்கவேண்டிய தொடர்பை, அந்தக் கதைகளைக் கொண்டு நிர்ணயித்துக் கொள்வதா, என்பது பிரச்னையாயிருக்க, சேக்கிழார் மந்திரி, ஊர் நாடு சுற்றினார், சரித உண்மைகள் உண்டு, கல்வெட்டும் காணலாம் என்று கதை பேசுவது, நேரக்கொலையே தவிர, அறிவுக்கு விருந்தா என்று கேட்கிறேன். பக்திக்கும் பித்தத்துக்கும் வித்தியாசம் இல்லையோ என்று எண்ணக்கூடிய கதைகளையும், நாட்டு மக்களிலே, என் நண்பர்போல் அந்தப் புராணங்கள் கிடைத்தற்கரிய பொக்கிஷங்கள் என்று நம்புபவர்கள் உட்பட, யாக்கும் அனுபவ சாத்திய மாகாததும், இவைகளின் விளைவு இது என்று எந்த நலனையும் காட்ட முடியாததுமான, நடவடிக்கைகளை விஞ்ஞானம் ஓங்கி, விடுதலைக் கிளர்ச்சி வலுத்து, பகுத்தறிவு பூத்திருக்கும் இந்த நாளிலே பேசுவது பயன் உள்ள செயலா? பேசுபவர் கேட்பவர் இருவரிலே யாருக்காவது பயன் உண்டா? ஏன் இந்த வீண் வேலை என்றுதானே கேட்கிறது வாலிப உலகு. கல்வெட்டு இருக்கிறது என்பதுதானா அதற்குப் பதிலுரை. என் நண்பர் புதுவை நாகமாணிக்கம்கூட, எனக்குக் கூறியிருக் கிறார், நண்பர் ஆராசமாணிக்கம் அவர்களுக்குள்ள விசேஷ ஆராய்ச்சி ஆர்வத்தைப்பற்றியும், அதற்கான சிலபல பிரத்யேக வசதிகளைத் தானே முன்னின்று அவருக்குச் செய்து தந்ததையும். அந்த ஆராய்ச்சி முடிவுகளைப் புராண ஆபாசத்துக்குப் புத்துயிர் தரவா பயன்படுத்துவது? வயோதிகன் சாப்பிடும் தங்கபஸ்பம், வாலிபத்தைத் தருவதில்லை, நரம்புக்குத் தளர்ச்சியைக் கொடுக்கும் நாளாவட்டத்தில் என்று மருத்துவர் கூறுவர். அது போலவே, புராணக் கிழத்துக்கு அவர் போன்றார் எட்டும் மருந்தும், நின்று மாய்க்கும் நஞ்சாகுமேயன்றி நிலைத்து வாழச் செய்யும் மருந்தாகாது. நண்பர் விரைவிலே டாக்டர் ராஜமாணிக்கம் ஆகக்கூடும். மற்றோர் பரீட்சைதேறி, ஆனால் மருந்து வகை இதுபோலவே இருந்ததால், அவருடைய பராமரிப்பிலே விடப்பட்ட புராண நோயாளி பிழைக்கமாட்டான். கைதேர்ந்த வைத்யர்கள், கைவிட்டனர், கடைசி காலத்திலே அவர்தன் ‘கைராசியை’ நம்புகிறார், பாவம்.
*****

சேக்கிழார், தமிழகமெங்கும் சுற்றுப்பயணம் செய்த அருமையைப் பெரிய புராணம் உணர்த்துகிறது என்று பெருமை கொள்வதற்கு மில்லை. சேக்கிழார் மந்திரி, எனவே வசதி இருந்தது. சீன நாட்டிலிருந்து இங்கு வந்து, நாட்டு நிலையை அறிந்து, இன்று நமக்கும் உபயோகமாகச் கூடிய அரிய உண்மைகளைத் தமது குறிப்புகளிலே தீட்டிய பாகியான், யுவான்சுவாங் போன்றவர்களை, இன்று அறிவு உலகம் நமக்கெல்லாம் அறிமுகப்படுத்திவிட்டது. தமிழகத்திலேயே, காஞ்சியில் அரச பரம்பரையினரான போதிதமர் என்றும் பௌத்த போதகாசிரியர் சீனா, ஜப்பான் நாடுகள் சென்று தத்துவ போதனை செய்தார் என்று அறிகிறோம். இல்பரினி, பார்போசா இபின்படூடா, அப்துர் ஜனாப் போன்றவர்கள் தமிழகம் மட்டும் சுற்றித் தாளச் சத்தத்தை மட்டும் கேட்டுக் கதை தீட்டியவர்களல்ல - நெடுந்தூரம், பலநாடுகள் கடந்து சென்று நாடு பலவற்றின் வரலாறுகளை வரைந்தவர்கள்! இந்நிலையிலே, மந்திரியாக இருந்த சேக்கிழார் தமிழகத்தைச் சுற்றிப் பார்த்தார் என்பதை உச்சிமீது வைத்துக் கொண்டாட முடியுமா? அப்படித்தான் சுற்றினாரே, அவரோ ஒரு மந்திரியார், ஏடும் எழுதினார், அதிலே, நாட்டுநிலையை, பல்வேறு நிகழ்ச்சிகளைத் தீட்டும் பாகியான் டைரிபோல் தயாரிக்கக் கூடாதா, பல்கலைக் கழகங்களிலே, கொலு இருக்குமே. பக்தர்களைப்பற்றி தீட்டினார், இதனைக் கொஞ்சம் புலமையுள்ள எந்தப் பண்டாரமும் தீட்டலாமே, மதியுள்ள ஒரு மந்திரியாரா இந்த வேலையில் உடுபட வேண்டும்? ஆநபாய சோழனின் அருமை மந்திரியார் சேக்கிழார், அவர் எழுதியது, ஆநபாயன் சரிதமல்ல, சோழ மன்னர் வரலாறு அல்ல, சோழ நாட்டு வரலாறுமல்ல, சோறிட்டுச் சோர்ந்து போன பக்தன், நீறுகண்டு நிலைதவறிய மன்னன், துணிவுபெற்று மண்டையை மோதிய பக்தன், மனைவியின் தாலியை விற்று குங்கிலியம் வாங்கிய நாயனார், உருண்டு உடல் தேய்ந்த ஆம்மையார், பெண்டுபிள்ளையைக் கொன்று பெம்மானைக் கண்ட பெருவீரன், கண்ணைத் தோண்டிக் கற்சிலைக்கு அப்பிய வேடன், இத்யாதி, இத்தியாதி...! இது மந்திரியார் தீட்ட வேண்டிய வரலாறா?
*******

ஏதோ ஒன்று அவரால் இனகாரியம் அது, நாடு சுற்றி நாயனார்களைப் பற்றி ஆராய்ச்சி செய்து தீட்டினார் ஒரு நூல் என்றாவது திருப்தி கொள்வதற்குண்டா? இல்லை! அவர் தீட்டியது முதல் நூலுமல்ல, வழி நூல்! நமது மொழியா அது? இல்லை, புலவர்கள் போற்றும் மொழியினைக் கொண்டு கூறுகிறேன்.

“திருநாரையூரில் நம்பியாண்டார் திருவந்தாதி கடைப்பிடித்து” என்பது என் மொழியல்ல. நம்பியாண்டவர் நம்பி என்பவர், இந்தத் தொண்டர்களைப்பற்றி முன்பே கூறினார். அதைக் கடைப்பிடித்து சேக்கிழார் எழுதினார். நம்பியாண்டார் நம்பி கதைகளைக் கூறினார் என்பது சரி, ஆனால் அதனைக் “காவி யரசனையோடு” பாடிய பெருமை சேக்கிழாரு டையதல்லவா, என்று கேட்பார் நணபர். அதற்கும் வழியின்றி, எப்படிப் பாடுவது என்று சேக்கிழார் தில்லையிலே நின்று நடன சபேசனை வேண்டியதாகவும், அவர் அருள் பாலித்து, உலகெலாம் என்று முதலடி எடுத்துக் தந்ததாகவும், அவரே கூறுவார். ஆகவே பெருமைக்குரியது, ஐயனின் அருட் செல்வமேயன்றி, மந்திரியாரின் புலமையாமோ? அதும் இலாது போகிறது. போகட்டும், நம்பியாண்டார் நம்பியாவது, தொண்டர் பெருமையைக்கண்டு அறிந்து கூறினாரா? அதுவுமில்லை. அவருக்குப் பொல்லாப் பிள்ளையார் (அதாவது தானாகக் தோன்றிய விநாயகர்) கூறினார், என்பது கதை. திருநாரையூரில் பூஜாகாரியத்தைக் கவனித்துக் கொள்ளும்படி, நம்பியாண்டவர் நம்பிக்குக் கூறினார் அவருடைய தந்தை, நம்பி சோறு படைத்தானாம் பிள்ளையாருக்கு, பிள்ளையார் சாப்பிடவில்லை, எப்போதும் போல, நம்பியோ விடவில்லை. என் தகப்பனார் தரும்போது சாப்பிட்டுக் கொண்டிருந்தாயே, இப்போதும் சாப்பிடத்தான் வேண்டும் என்றாராம்ட. இதற்குப் பெயர் பக்தி! அவரும் சாப்பிட்டாராம்! இந்த அற்புதத்தைக் கேள்விப்பட்ட அரசன், பரீட்சித்தானம், பக்தரின் பெருமையை அறிந்தானாம், மேலும் பரீட்சிக்கவேண்டி, அப்பர், சுந்தரர், சம்பந்தர் ஆகியோர் இக்கிய தேவாரத்தை எங்கு இருக்கிறது என்று பிள்ளையாரைக் கேள் என்றாராம். நம்பிகேட்கப் பிள்ளையார் தேவாரம் இருக்குமிடத்தையும் கூறித் தொண்டர் பேறும் சாற்றினாராம், அதைக் கொண்டுதான் நம்பி, நாட்டுக்கு உரைத்தார், என்பது கதை. அதற்கு அதாரமான செய்யுள் இது,
“வார்ந்தருட்கண்நீர் சொரிய நம்பிகேட்ப
வண்தமிழ்கள் இருந்தஇடம் மன்றுளாடும்
கூர்ந்த இருட்கண்டர் புறக் கடையின் பாங்கர்
கோல மார்கைகள் ஆடையாளமாக
சார்ந்தன என்று அருள்செய்து
தொண்டர் பேறும் சாற்றுதலால்.....

ஆகவே, ஆரம்பக் கட்ட முதல் புலமைக்கு வேலை இல்லை, அருள் வேலை செய்கிறது. எனவே, சேக்கிழாரின் காவிய ரசனையைப் பாராட்டவும் வழி இல்லாமற் போகிறது. எந்த நம்பி மூலம் தொண்டர் பெருமையைத் தெரிந்து கொண்டாரோ, எந்த நம்பிக்குப் பிள்ளையார் பிரத்யட்சமாகும் அளவு அருள் கிடைத்து அற்புதம் நடத்திக் காட்டினாரோ, அந்த நம்பியாண்டர் நம்பியைத் தொண்டர் புராணத்திலே, சேக்கிழார் சேர்க்கவில்லை, காரணமும் கூறவில்லை, நானும் அதைக் கேட்கப் போவதில்லை! பாடலுக்கு இலக்கான “தொண்டர்களைப்” பற்றியே சில கேட்க விரும்பிகிறேன். 8-வது நூற்றாண்டுக்கும் பத்தாம் நூற்றாண்டுக்கும் இடையில் தொண்டர் புராணத்துள் கூறப்படும், “நாயன்மார்கள்” இருந்திருக்கக் கூடும் என்கிறார்கள், சேக்கிழார் 12 அல்லது 13-ம் நூற்றாண்டுக்காலத்தவர் என்கின்றனர். இந்த “தொண்டர்கள்” காவியக்கவசம் பெறவேண்டிய காரணம் என்ன? ஆநபாய சோழன், சமணரை ஆதரித்து, சீவகசிந்தாமணியைப் புகழ்ந்து வந்ததாகவும், அதுகண்டு சேக்கிழார் சைவ மெய்யன்பர்களின் பெருமையை மன்னனுக்குக் கூறி, மன்னனைச் சைவக் சீலனாக்கியதாகவும் கூறுவர். அது எப்படியோ இருக்கட்டும், சேக்கிழார், படம்பிடிக்கும் “தொண்டர்கள்” ஏதனால் பெருமை ஆடைகிறார்கள்? அவர்கள், ஏதாவது அதுவரை மக்கள் அடைந்திராத நலன்களைப் பொழிந்தனரா? இல்லை! மக்களை, மிருகத்தனத்திலிருந்து மெய்யுணர்வுக்குத் திருப்பினரா? இல்லை! அதுவரை யாரும் அறியாத மதத்தை ஸ்தாபித்தனரா? இல்லை, ஏசு, முகமதுநபி, கௌதம புத்தர், மகாவீரர்போலக் கோடிக்கணக்கான மக்களுக்குப் புதுமார்க்கம் வகுத்தனரா? இல்லை! மார்க்கங்கள் புதிதாக ஏற்படுத்தாவிட்டாலும் போகிறது, பிரம்மசமாஜம், ஆரிய சமாஜம் போன்ற புதிய முறைகளைப் புகுத்தினரா? இல்லை! தொண்டர்களிலே சிலர், சமண மார்க்கத்துக்கு இருந்த செல்வாக்கை அழித்தனர்! கழுவும் ஏற்றினர்! இஅதன்றி, அவர்கள் ஆற்றிய அரும்பெரும் காரியம் என்ன? அருமையான பாசுரங்கள் பாடினர், என்று கூறலாம். உண்மை. ஆனால் பாடல் பாடுவோர், முன்பும் அவர்களுக்குப் பின்னரும் இருந்தனர், அவர்களுக்கென்னு தனியான முக்யத்துவம் கற்பிக்கக் காரணம் என்ன? ஏற்கனவே இருந்துவந்த சைவ மதத்தைக் கடைப்பிடித்தார்கள், சிவனைத் தொழுதார்கள், சிவதோத்திரப் பாடல்களைக் கோத்தார்கள். சைவத்தின் மெருகுக் குலையும் போது கொஞ்சம் ‘நகாசு’ வேலை செய்தனர். இஅதன்றி வேறு என்ன தனிப்பட்ட காரியம் நடந்தது? அவருக்கு முன் யாரும் கூறாததை ஏசு சொன்னதுபோல், உருவ வணக்கம் நிறைந்த உலகிலே, உருவ வணக்கம் தவறு என்று கூறிய முகமதுபோல், அரசுகள் பலவும் ஆரியத்திடம் அடிமைப்பட்டிருந்த காலை, ஆரிய மார்க்கமாகிய யாகாதிகளைக் கண்டித்த கௌதமர் போல், “தொண்டர்கள்” என்ன புதுமையைக் காட்டினார்கள்! பொன்னார் மேனியனைப் பாடி, நீறுபூசி, நிகண்டு படித்தனர், மார்க்கம் எதும் புதிதாகக் காணவில்லை. மோட்டார் கண்டுபிடிக்கப்பட்டு, ஓடும்போது, இகாய விமானம் கண்டு பிடித்தவன் புகழப்படுகிறான் மோட்டார் கண்டுபிடித்தவனைவிட அதிகமாக. அந்த நிலையிலே மோட்டாருக்கு, “புது மெருகு” பூசியவனுக்குப் பொற்பதக்கம் தருவதா, செயல்கரிய செய்தான் என்று. அதுபோல், உலகிலே புதுமார்க்கங்களைக் கண்டவர்கள் வேறுவேறு. தொண்டர்கள் ஏற்கனவே இருந்த சைவத்திலே பூச்சு வேலைக்காரர்கள், அவ்வளவுதானே? இல்லை, இல்லை, அவர்களெல்லாம் ஐயனின் அருள் பெற்றவர்கள் என்று கூறுவார் நண்பர், நம்ப வேண்டுமா, சரி, நம்புகிறோம், ஆனால், ஒன்று கேட்கிறோம், ஆண்டவனின் அருளைப்பெற்றவர்கள், அவர்களுக்கு முன்பும் அவர்கள் காலத்துக்குப் பிறகும் இல்லையோ? உண்டு! இன்றும் உண்டு, இனியும் இருக்கும், என் நண்பர் கே.எம்.பி.யே தனக்கு ஆண்டவன் அருள்பாலித்து விட்டதாகக் கூறுகிறார். ஆனால் எந்த ரூபத்திலே என்று கூறவில்லை! ஆகவே, அவர்கள் அருள் பெற்றவர்கள், எனவே பிரத்யேகப் பெருமைக்கு உரியவர்கள் என்று கூறுவதும், முன்னாள் புராணங்களைப் பழிப்பதுமாகும். வேறு என்னதான் காரணம், தொண்டர்கள் கதையிலே காணப்படும் அற்புதங்களைக்காட்டப் பிரியப்படுவார் நண்பர். இந்த அற்புதங்களின் ‘இலட்சணம்’ ஒருபக்கம் இருக்கட்டும், இவை உண்மை என்றே வைத்துக் கொள்வோம், இருப்பினும் என்ன, இதைவிடப் பிரமாதமான அற்புதங்கள், இந்தத் தொண்டர்கள் காலத்துக்கு முன்பே நடைபெற்றுள்ளனவே! ஆகவே இந்தத் தொண்டர்களின் அற்புதங்கள், இதுவரை உலகில் ஏற்படாததுத என்றும் கொண்டு பெருமைப் படுவதற்கில்லையே. இடபவாகனரூபராய் இந்தத் தொண்டர்களுக்குக் காட்சிதந்த முக்கண்ணன், இதற்கு முன்பு, எவ்வளவோ முறை பக்தர்களுக்காக அற்புதங்களை நடத்திக் காட்டிக் காட்சி தந்து, மோட்சம் அளித்தார் என்று வேறு பலப்பல புராணங்கள் உள்ளன. எந்த ஒரு தனிப்பட்ட குணவிசேஷத்தையும் இந்தத் தொண்டர் களுக்கென்று குறித்துக் காட்ட முடியாது. எத்தனையோ ஆயிரமாயிரம் பக்தர்களிலே அவர்கள் சிலர். அவர்கள் மற்றவர்களைவிட எந்த வகையிலே சிலாக்கியமானவர்கள் என்பதற்கு அதாரமே காணோம்.
*****

ஆண்டவன் இத்தொண்டர்களைச் சோதிக்கிறார், பல கஷ்டங்களை வாழ்க்கையிலே ஏற்படுத்தி, நெருக்கடிகளை உண்டாக்கி, அந்தச் சமயங்களிலே இந்த அடியார்கள், அரன்மீது பக்திகொண்டு, ஆபத்துக்களைப் பொருட்படுத்தாது இருந்திடவே, சிவனார் அவர்தம் சிவபக்தியைக் கண்டு மெச்சி, காட்சி தந்து முக்தி அருளுகிறார். இதுவே எல்லாத் தொண்டர் கதையிலும் காணப்படும் சாரம். சோதனையும், அதனைத் தாங்கிக் கொள்ளுவதும், இத்தொண்டர்களுக்கு மட்டும் நேரிட்டது என்று இருந்தலாவது, அவர்கள் பெருமைக்கு உரியவர் என்று கொள்ளலாம். ஆனால் இதுபோன்ற சோதனைகள், வேறு பல பக்தர்களுக்கு வாழ்க்கையிலே நேரிடும், நெருக்கடிகளை எல்லாம், “பகவான் சோதிக்கிறாôர்” என்றுதான் கூறுகின்றனர், தொண்டர்கள் எப்படிச் சோதனை காலத்திலே, பக்தியைக் கைவிடாது இருந்தனரோ அதுபோன்றே இன்றும், எவ்வளவோ மக்கள் உள்ளனர்.

காசநோய் தீரவில்லை.. கையிருப்புக் கரைந்து விட்டது, கடன் கொடுப்பார் இல்லை, அந்நிலையிலே, நோயாளி, பகவான் சோதிக்கிறார் என்று தான் கூறுகிறான்.

குடிவெறியால் கொண்ட கணவன் தன்னை நையப்புடைக்கும்போது புலம்பும் பத்தினி, அடுத்தவீட்டு மங்கையிடம், ‘இதெல்லாம் பகவான் சோதனை’ என்றுதான் கூறுகிறாள். வியாபாரத்திலே குவிந்த இலாபமும் போய் கைமுதலும் போய் பராரி நிலைவந்தபோது, செல்வவானாக இருந்தவன் பகவான் சோதனை என்றுதான் கூறுகிறான். அதிகாரிகளிடம் சிக்கும் போது, மைந்தனுடன் சண்டையிடும்போது, வாழ்கையிலே கஷ்டம் வருகிறபோதெல்லாம், பகவான் சோதிக்கிறார் என்றுதான் ஒவ்வொருவரும் கூறுகின்றனர். எனவே, சோதனைக்கு ஆளானவர்கள், இந்தத் தொண்டர்கள் மட்டுந்தான், என்று கூறியும் அவர்களைப் பெருமைப் படுத்துவதற்கில்லை. வேறு என்ன கூறுவரோ? சோதனை என்ற தத்துவத்தின் பொருளும் அதனால் இந்நாட்டவருக்கு ஏற்பட்ட மனமருளும் ஓர்புறம் இருக்கட்டும். அறிவு வளர்ச்சி ஏற்பட்டுள்ள இன்று, இந்த பக்திமான்களின் கதைகளைத் தெரிந்து கொண்டு, மக்கள் அடையப்போகும், பிரத்யேகப்பலன் என்ன? அவர்களே சோதனைக்கு ஆளாகிறார்கள், ஆகவே புதியபாடம் பெறப் போகிறார்கள், முன்னாளில் சோதனைக்கு ஆளானவர் கதை கேட்பதால்? சோதனைகளிலே வெற்றி பெற்ற தொண்டர்களுக்கு, மோட்சம் கிட்டியதாகக் கதை முடிகிறதே தவிர, அத்தகைய தொண்டரின் அருளால் நாட்டின் குறைகள் நீங்கின என்று கதை இல்லையே. ஆகவே, வெற்றி பெற்ற தொண்டரானாலும், வேறொரு வருக்கும் அதனால் பலன் இல்லையே! இந்நிலையிலே இதற்குமுன் எவ்வளவோ அற்புதங்களை நடத்தியவர்கள் இருந்ததாகப் புராணம் இருந்தும், இந்தத் தொண்டர்களைப் பற்றிச் சேக்கிழார், தனிப்புராணம் ஒன்று பாடவேண்டிய அவசியம் என்ன? பாடியதால் வந்துற்ற பலன் என்ன? அவர் பாடியதை எடுத்துக் கூறும் புலவர்கள் மொழி, மக்களுக்கு என்ன வழியைக் காட்டும்? இயற்பகையும் சிறுத் தொண்டனும் சென்ற வழி செல்க என்று அவர்களே கூடச் சொல்லத் துணியார். மற்றையொரில் யாருடைய வழிதான். காட்டுவர், எந்த வழி நடக்க, மக்கள் அசைவர்? பக்தியாலோ, அருளாலோ, பூர்வஜென்மப் பலனாலோ, விசே=ம் எதுவும் பெறாமல், இரயிலையும், தந்திக் கம்பியையும், மின்சாரத்தையும், வானொலியையும், விஷக்குருமிகள் போக்கும் வித்தையும், வேறு பல விஞ்ஞான முடிவுகளையும் கண்ட அறிஞர் பெருமக்களால், இன்று அவர்களின் பெயரையும் கேட்டறியாத மக்களும் வாழ்க்கைச்சுகம் பெறுகின்றனர். ஏனாதியும் எறிபத்தரும் தத்தம் பிறவிப்பிணியைத் தீர்த்துக் கொண்டதாகக் கூறலாமேயன்றி, மக்கள் அவர்களால் அடைந்த பலன் ஏதாவது உண்டா?
****

உலக மாவீரர்கள், மண்டலங்களைச் சமைத்தனர் வீரத்தால் - விஞ்ஞானிகள், இயற்கையின் சேஷ்டைகளைக் கட்டுப்படுத்தி எல்லாரும் இன்புற்று வாழ வழி சமைத்தனர். அறிஞர்கள், ஆட்சிமுறை, மக்கள் வாழ்க்கை முறை, பொருள் முறை என்பனவற்றிலே, புதுமுறைகள் கண்டு, மக்களுக்கு மாபெருந்த தொண்டு ஆற்றினர். அவர்களை மக்கள் அறியார். அறிவை ஆபாசப் புராணங்களுக்குப் பயன்படுத்தும் அன்பர்கள் ஏன், அந்த அறிஞர்களின் வாழ்க்கையும், அவர்களால் மக்கள் சமுதாயம் அடைந்த நலனையும் எடுத்துக்கூறி, இன்பமுறச் செய்யக்கூடாது! அமெரிக்கக் கண்டத்தைக் கண்டுபிடித்த கொலம்பஸ், இந்தியாவுக்குக் கடல்மார்க்கம் கண்ட வாஸ்கோடகாமா, ஆப்ரிக்காவில் மண்டலங்கள் பலகண்ட லிவிங்ஸ்டன், அடிமை வர்த்தகத்தை ஒழித்த இபிரகாம்லிங்கன், போன்ற தொண்டர்களின் பெருமையைப் பேசுவதால் படிப்பதால், மேனாட்டவர், பலன் பெற்று வாழ்கின்றனர். இங்கு நமது புலவர்கள், கோட்புலிûயுயம் கோவணத்தை ஏடைபோட்ட பக்தன் கதையையும் அன்றோ நமக்குப் படித்துக் காட்டுகிறார்கள். பயனற்ற வேலை, இதற்குப் புலமை பயன்படுகிறதே, என்பதுதான் எனக்குள்ள வருத்தம். மேனாட்டவரின் பெருமையைப் பேசுவது இழுக்கு என்பரேல், இந்நாட்டுப் பெருமக்கள், நம் நாட்டு வீரர்கள் கதைகள் உள்ளனவே, எடுத்துக் கூறுவதுதானே. கரிகாலன், வேந்தர் தலைவர்களை பற்றியாவது பேசினால், வீரமாவது பிறக்க வழி ஏற்படலாம், அதைவிட்டு, சந்தனம் காண முழங்கையைத் தேய்த்தவன் கதையும், ஓடுமறைய ஓலமிட்டவன் கதையும், பண்டராங்கட்குச் சோறிட்டுப் பராரியானவரன் கதையும், பெண்ணின் கூந்தலைப் பெரு மானுக்குத் தந்தவன் கதையும், மூக்கறுத்தவன் நாக்கறுத்தவன் கதையும் பேசிக் காணப்போகும் பயன் என்ன? இதற்கு ஆராய்ச்சி செய்தேன். கல்வெட்டுக் கண்டேன், சரித, உண்மை தெரிந்தேன் என்று பெருமை பேசிக் கொள்ளவும், மனம் இடங்கொடுக்கிறதே, மக்கள் சமுதாயத்தை எவ்வளவு மட்ட ரகம் என்று மதிப்பிட்டிருந்தால், அணுக்குண்டுக்கான ஆராய்ச்சியை நடத்திவிட்ட நாட்களிலே அமர்நீதி நாயனார் கதையிலே புதைந்துள்ள சரித உண்மையைக் கண்டுபிடித்து விட்டேன் என்று கூறிக்கொள்ளத் துணிவு பிறந்திருந்திருக்கும்! இவ்வளவும் செய்வது, தமிழர் வரலாற்றுக்குத் துணைதேடவும், சீர்திருத்த ஆர்வத்தைப் புராண மூலம் காணவுமேயாகும் என்றும் செப்புகின்றனராம், செந்தமிழைச் சத்தற்ற காரியத்துக்குப் பாழாழக்கும் அன்பர்கள். அவர் தம் போக்கு மாறாவிட்டால், நண்பன் என்ற முறையில் மாற்ற வேண்டிய பொறுப்பு எனக்கு ஏற்படுகிறதே. அதைக் கூறுவதே இக்கட்டுரையின் நோக்கம், முதல் முயற்சி. அவர்கள் மேலும் முனைவரேல், தொண்டர்கள் ஒவ்வொருவராகப் பகுத்தறிவுத் தராசிலே நிறுத்தி வைக்கப்பட்டு, அறிவு உலகுக்குக் காட்டப்படுவர், புராணம் பேசுவோரின் போக்கினால் நாடு அடைந்த நாசத்தின் தன்மையும் விளக்கப்படும். நண்பர்கள், நடை அழகு காட்ட, வேறு பொருளை நாடி, நாட்டைப் பாழாக்காது இருக்க வேண்டுகிறேன். என்சொல், நண்பனின் நல்லுரை, தவறாக எண்ணிப்பழைய வழியே நடப்போம் என்று பிடிவாதம் பேசுவரேல், நண்பர்களால் காப்பாற்றப்பட முடியாத அளவுக்கு, நாட்டுமக்களின் எதிர்ப்புச் சக்தி கிளம்பும் என்பதையும் கூறுகிறேன்.

நண்பர்கள் புராணத்திலே புகுந்து சரிதம் காண்பது வெண்ணெயைத் தலையிலே வைத்துக் கொக்குப் பிடிப்பத என்கிறார்கள், அது போன்றது! இது ஆற்றலுக்கு அறிகுறியல்ல.

(திராவிடநாடு - 6.1.46)