அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


வெறிப்பாதை விசித்திரம்!

வெந்தபுண்ணிலே வேல்!

எதேச்சாதிகார வெறிப் பாதையில் அகிம்சா மூர்த்திகள் புகுந்து விட்டனர். மனிதாபிமானமின்றி எட்டுமுறை சுட்டுப் பொசுக்கியது போதாதென்று. 27 தோழர்களைப் பிடித்து, அவர்கள் மீது வழக்கும் தொடர்ந்துள்ளனர். கலவரத்தை மனதிலும் நினையாத கழக வீரர்கள் மீது கலவரம் உண்டாக்கியதாகக் குற்றச்சாட்டாம்!

அதிகாரவெறி, காங்கிரஸ் ஆட்சியை, கொடுங்கோலர்களாக்கு கிறது. கண்மண் தெரியாமல் கூத்தாடுகின்றனர். அழிவுப்பாதை நெருங்குகிறது! நெருங்கிக் கொண்டேயிருக்கிறது!! அதன் ‘அத்தியாயம்’ குன்றத்தூரில் துவக்கப்பட்டு நாள் தோறும் வளர்ந்து கொண்டேயிருக்கிறது. காங்கிரஸ் ஆட்சியைப்போல கொடுமைகளால் கூத்தாடிய சாம்ராஜ்யாதிபதிகள் எல்லாம் சரிந்து ஒழிந்திருக்கின்றனர்! அந்தச்சரித்திரச் சித்திரத்தை மறந்து சதிராடுகின்றனர். இங்கே, இவர்கள்!!

வெந்த புண்ணிலே வேலைப் பாய்ச்சுகின்றனர்! குன்றத்தூரில் எட்டுமுறை சுட்டுப் பொசுக்கியதோடு ‘எதேச்சாதிகார வெறி’ அடங்கி விடவில்லை இந்த ‘அகிம்சாமூர்த்திகளுக்கு. ‘நமது கழக வீரர்கள் பலரைக் கைது செய்து, அவர்கள் மீது இல்லாத குற்றச்சாட்டுகளையெல்லாம் சுமந்த முயன்று வருகிறது அதிகார ஆதிபத்யம்.

பேச்சுரிமை நிலைநாட்டச் சென்ற வீரர்கள் மீது ‘கலவரம் செய்யத் தூண்டினர்’ என்ற குற்றச்சாட்டாம்!

வேதனை நிரம்பிய வேடிக்கை! உண்மைக்குத் திரை போடும் உளுத்துப்போன முறை! எதேச்சாதிகாரிகளெல்லாம் சென்று வீழ்ந்து ஒழிந்த பாதை! அதிலேயே இந்த வீரப்பிரதாபி’கள் வெகு வேகமாக முன்னேறிக் கொண்டுள்ளனர்!

குன்றத்தூர் கொடுமையின் போது தடியடி தர்பார்க்காளாகி மண்டையில் படுகாயமடைந்த காஞ்சி டி. சபாபதி, குன்றத்தூர் தி.மு.க. செயலாளர் தோழர் டி.எம்.நடராசன், பக்கிரிசாமி ஆகியோர் மீது வழக்கு தொடரப்பட்டு 7.11.50 அன்று சென்னை சைதாப்பேட்டை சப்டிவிஷனல் மாஜிட்டிரேட் கோர்ட்டில் விசாரிக்கப்படுமென அறிவிக்கப்பட்டிருந்தது.

அன்று, மேற்படி தோழர்கள் மூவரும் கோர்ட்டிற்கு வந்திருந்தனர். எந்த விதமான விசாரணையும் நடத்தப்படாமலேயே மேற்படி வழக்கு 14.11.50 க்கு ஒத்திவைக்கப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டது.

14.11.50
முன்பு அறிவிக்கப்பட்டபடி 14.10.50 அன்று சப் டிவிஷனல் மாஜிஸ்டிரேட் கோர்ட்டில் குன்றத்தூர் பேச்சுரிமைப் போர் சம்பந்தமான வழக்கு விசாரிக்கப்படுமென அறிவித்ததற்கிணங்க, கைது செய்யப்பட்ட தோழர்களில் பதினெட்டு பேரும் கோர்டில் ஆஜராகியிருந்தனர்.

சைதாப்பேட்டை சிறையில் வைக்கப்பட்டிருந்த ‘திராவிடன்’ ஆசிரியரும், மத்திய கழகப் பிரச்சாரக் குழு செயலாளருமான தோழர் என்.வி.நடராசன், குன்றத்தூர் பாலசுந்தரம் ஆகியோர் கைகளில் விலங்கிடப்பட்டு கோர்ட்டுக்கு கொண்டுவரப் பட்டிருந்தனர்.

வழக்குக் குறித்து எவ்வித விசாரணையும் துவக்கப்படவில்லை வழக்கு 24.11.50 ஒத்தி வைக்கப்பட்டிருக்கிறது.

கோர்ட்டுக்கு ஏராளமான கழகத் தோழர்கள் வந்திருந்தனர். கழகத் தோழர்கள் சார்பில் நடவடிக்கைகளைக் கவனிப்பதற்காக சென்னை வக்கீல் தோழர் அனந்தராமன் வந்திருந்தார். டாக்டர். கணேசன், கண்ணபிரான், பாண்டியன், ரத்தினம், கண்ணன், காஞ்சி. ஆர். கே. மூர்த்தி முதலாய பல இயக்கத் தோழர்களும் வந்திருந்தனர்.

27-பேர்மீது
குன்றத்தூர் பேச்சுரிமைப் போர் சம்பந்தமான வழக்கில் மொத்தம் 27 தோழர்களின் மீது வழக்குத் தொடரப்பட்டிருப் பதாகத் தெரியவருகிறது.

இவர்களில் ஐந்து தோழர்கள் சென்னை மத்திய சிறையில் கொண்டுபோய்ப் பூட்டப்பட்டுள்ளனர், குண்டடிபட்டு, குருதி கீழே கொட்ட, குற்றுயிராகச் சென்னை ஜெனரல் ஆஸ்பத்திரியில் கொண்டு போய் போடப்பட்டு, படுக்கையில் கிடக்கும் இருதோழர்கள் மீதும“ வழக்குப் பதிவு செய்யப்பட்டிருக்கிறதாம்!

குன்றத்தூரில்!
கடந்த 1.11.50 அன்று நள்ளிரவில் குன்றத்தூரில் தி.மு.க. செயலாளர் தோழர் டி.எம்.நடராசனை போலீஸ் அதிகாரிகள் 14 போலீஸ் கான்ஸ்டேபிள்களுடன் சென்று கைது செய்தனர்.

(திராவிடநாடு 19.11.50)