அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


வெட்கப்படாமல் வேறென்ன செய்வது?

காலும் காலும் அரை காலும் அரையும் அரையும் முக்கால். முக்காலும் காலும் ஒன்று. இந்த ஒன்றை ஒன்றேகால் ஆக்க வேண்டுமா னால் மேற்கொண்டும் ஒருகால் சேர்க்க வேண்டும். அப்பொழுது ஒன்றும் காலும் ஒன்றே கால் என்றாகின்றது. ஒன்றேகால் என்பது ஒன்றுக்கு மேற்பட்ட கணக்கைக் குறிப்பதாகும். ஒன்றுக்கு மேற்பட்டு ஒன்றேகால் ஆன கணக்கை அதோடு நிறுத்திக் கொள்ளாமல், விரும்பினால், மேலும் மேலும் வளர்த்துக் கொள்ளலாம். இங்ஙனம் அந்தக் கணக்கை வளர்ப்பதற்கு இரண்டு முறைகளைக் கையாள லாம். ஒன்று கூட்டுதல், இன்னொன்று பெருக்குதல் எடுத்துக்காட்டாக நாலுடன் ஆறைச் சேர்த்தல் பத்தாகிறது. இது கூட்டல் கணக்கு. ஆனால், நாலை ஆறால் பெருக்கினால் இருபத்தி நாலாகிறது. இது பெருக்கல் கணக்கு. ஆனால், நாலை ஆறால் பெருக்கினால் இருபத்து நாலாகிறது. இது பெருக்கல் கணக்கு. எனவே கூட்டல் முறையைப் பார்க்கிலும் பெருக்கல் முறை தொகையை மிக விரைவில் அதிகப் படுத்திக் காட்டுகிறது.

சென்னை அரசாங்கத்தின் இன்றைய அடக்குமுறை இருக்கிறதே அது, நாம் மேலே எடுத்துக்காட்டிய கூட்டல் முறையில்தான் சென்னை அரசாங்கம் தன்னுடைய அடக்கு முறைக் கணக்கை மிக மிக விரைவில் அதிகப்படுத்திக் கொண்டு போகிறது. அதிகப் படுத்துவதில் கூட ஒரு அளவு இருக்குமே, அந்த அளவையும் மீறிச் செல்கிறது சென்னை அரசாங்கத்தின் அடக்குமுறை அந்நிய ஆட்சி ஒழிந்து, சுதந்திர ஆட்சி கிடைத்தால் என்னென்ன நன்மைகள் நமக்குக் கிடைக்கும் என்று மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்தார்களோ, அந்த ஆவலை நிறைவேற்றி வைக்கும் முறையில், ``இதோ பாருங்கள் எங்கள் ஆட்சி முறையை, ஆங்கிலேயனுடைய அருளால், அவன் அன்புக் காணிக்கையாக நமக்களித்த அடக்குமுறைப் பாணங்களை எல்லாம் அள்ளி அள்ளி உங்கள் மீது வீசுகின்றோம். அன்போடு வரவேற்றுக் கொள்ளுங்கள், ஆங்கிலேயனாவது நாலும் ஆறும் பத்தென்ற கூட்டல் முறையில் தன்னுடைய அடக்குமுறைப் பாணங்களை உங்கள் மீது வீசினான். நாங்கள் அப்படியல்ல, நாலாறு இருபத்து நாலு என்ற பெருக்கல் முறையில் எங்களுடைய அடக்குமுறைப் பாணங்களை வீசுகிறோம், நீங்கள் ஆவலோடு எதிர்பார்த்தது நடக்கிறது. எனவே, எங்களை ஆதரியுங்கள்'' என்று இன்றைய `ஜனநாயக' அரசாங்கம் மக்களை நோக்கிக் கூறுகின்றது.

சென்னை அரசாங்கம் இவ்விதமாகத்தான் இன்று தன்னுடைய ஆட்சி முறையை மேற் கொண்டுள்ளது என்று நாம் சொன்னால், எதிர்க் கட்சிக்காரர்களாகிய நாம் இப்படித்தான் கூறுவோம் என்று காங்கிரசன்பர்கள் தங்கள் கண்ணையும், கருத்தையும் மூடிக் கொண்டு கதறுவார்கள். ஆனால், சென்னை அரசாங்கத் தின் ஆட்சி முறை எப்படி இருக்கிறதென்பதைக் காங்கிரஸ் சர்க்காரை முழுக்க முழுக்க ஆதரிக்கும் ஒரு காங்கிரஸ் ஏதே விளக்கி இருக்கிறது.

``ஜனநாயக சர்க்கார் என்று சொல்லிக் கொள்ளும் நமது சர்க்கார் கூடச், சில பல சமயங் களில், பாதை தவறி நடந்து விடுவதை நாம் கண்டிக்காமல் இருக்க முடியவில்லை. சுதந்திரப் போராட்ட சமயத்தில் நம்மை அடக்க அந்நிய சர்க்கார் என்னென்ன முறைகளைக் கையாண் டார்களோ, அதே முறைகளை நாமும் கையாண் டால் அது கண்டிக்கப்பட வேண்டியதாகிறது'' என்று எழுதியிருக்கிறது. எந்தக் காங்கிரஸ் ஏடு இவ்விதம் எழுதியிருக்கிறதென்பதை அறிய ஆவல் கொள்வீர்கள். அதனையும் கூறிவிடுகி றோம். காங்கிரஸ் வட்டாரத்திலேயே எழுத்தாளர் களில்ல் மிகச் சிறந்தவர் என்று கருதப்படும் தோழர் ம.ப.பெரியசாமித் தூரன் அவர்களை ஆசிரியராகக் கொண்டு வெளிவரும் `காலச் சக்கரம்' என்ற பத்திரிகையில்தான 5-9-48ல் இவ்விதம் எழுதப்பட்டிருக்கிறது. தோழர் பெரியசாமித் தூரன் அவர்கள் ஏதாவதொன்றை எழுதுகிறார் என்றால், அந்த எழுத்து, கருத்தற்ற- காகிதத்தை நிரப்பும் வெறும் எழுத்தாக மட்டும் இருக்க முடியாதென்று, அவரை எழுத்தாளர் களில் சிறந்தவராக மதிக்கும் எவரும் எண்ணியே தீருவர். இந்தி எதிர்ப்பாளர்களைக் காடுகளில் கொண்டுபோய் விடும் காட்டுமிராண்டி முறையைக் கண்டிப்பதாகக் கருதி, `போலீசாரின் பழைய புத்தி இன்னும் போகவில்லை' எனறு எழுதிய `தினசரி'யின் கருத்தற்ற- கசட்டெழுத் தாகத் தோழர் பெரியசாமித் தூரன் அவர்களின் எழுத்தை எண்ணிவிட முடியாது. இவருடைய எழுத்துவன்மை வெறும் ஏட்டுச் சுரைக்காயாக மட்டும் இல்லாமல், எண்ணத்தில் எழுச்சியையும் மாறுதலையும் உண்டாக்குவதோடு, உண்மை களை உள்ளபடியே வெளியிடும் உரத்தையும் பெற்றுள்ளதென்றே நாமும் கருதுகிறோம்.

சென்னை அரசாங்கத்தின் ஜனநாயகப் போக்கைக் கண்டிக்க முன்வந்த தோழர் பெரியசாமி தூரன் அவர்கள், தம்முடைய கண்டன உரையைத் தொடங்கும்போதே,

``ஜனநாயக சர்க்கார் என்று சொல்லிக் கொள்ளும் நமது சர்க்கார்.''

என்று தொடங்கியிருக்கிறார். இந்தச் சொற்றொடரைக் காங்கிரசன்பர்கள்- அதிலும் இன்று நடைபெறும் ஆட்சி முறை ஜனநாயக முறையில் நடக்கிறதென்று திட்டவட்டமாக முடிவு கட்டிக் களிப்புக் கடலில் மூழ்கி இருக்கும் காங்கிரசன்பர்கள் மிகவும் நன்றாய் ஊன்றிக் கவனிக்க வேண்டும். `ஜனநாயக சர்க்கார் என்று சொல்லிக் கொள்ளும் நமது சர்க்கார்' என்று எழுத்தாளர்களில் தலைசிறந்த பெரியசாமித் தூரன் அவர்கள் எழுதியுள்ளதில், அந்த
`என்று'

என்று சொல்லை மிக மிக ஊன்றிக் கவனிக்க வேண்டுகிறோம். அதே சமயத்தில் தோழர் பெரியசாமித் தூரன் அவர்கள் யார்- எப்படிப்பட்டவர் என்பதை மறந்துவிட வேண்டா மென்றும் கேட்டுக்கொள்கிறோம்.

``ஜனநாயக சர்க்காராகிய நமது சர்க்கார்'

என்று கூறாமல், அவர்

``ஜனநாயக சர்க்கார் என்று சொல்லிக் கொள்ளும் நமது சர்க்கார்''

என்று ஏன் கூறினார்? இதில் அடங்கியுள்ள பொருள் என்ன? `என்று சொல்லிக் கொள்ளும்' என்பதற்குரிய தனிப் பொருள் என்ன? என்பன வற்றைக் காங்கிரசன்பர்கள் தங்கள் அமைதியை ஓரளவுக்காவது வரவழைத்துக் வைத்துக் கொண்டு ஆராய்ந்து பார்க்க வேண்டுகிறோம்.

இன்றைய சர்க்கார் உண்மையாக ஒரு ஜனநாயக சர்க்கராய் இருந்தால், அத்தகைய ஒரு சர்க்காரை அவர் ஜன நாயக சர்க்கார் ``என்று சொல்லிக் கொள்ளும்.''

நமது சர்க்கார்ர் என்று எழுதுவாரா? ஏன் அந்த, என்று சொல்லிக் கொள்ளும்' என்ற சொற்றொடரை அங்கு அமைத்தார்?

இப்பொழுது நடப்பது ஜனநாயக சர்க்கார் அல்ல. ஆனால், ஜனநாயக சர்க்கார் என்று சொல்லிக் கொள்ளுகிறது.

என்பதையன்றோ தோழர் பெரியசாமித் தூரன் அவர்கள் தம்முடைய கருத்து நிரம்பிய எழுத்துவன்மையால் விளக்கியிருக்கிறார்.

கருத்துக் குருடர்களும் அறிவு விளக்கம் பெற வேண்டுமென்று கருதிய `காலச் சக்கர' ஆசிரியர் மேலும் கூறுகிறார்.

``நமது சர்க்கார்கூடச் சிலபல சமயங்களில் பாதை தவறி நடந்து விடுகிறது.''

என்ற எழுத்தோடு கருத்தையும் பொதிந்து பொதுமக்களுக்கு வழங்க விரும்பிய தூரன் அவர்கள், தம்முடைய சர்க்கார் நடந்து கொள்ளும முறையை இங்கு நன்கு விளக்கியுள்ளார். மேலே உள்ள சொற்றொடரில், நாம் இக்கட்டுரையின் தொடக்கத்தில் குறிப்பிட்டுள்ள கூட்டல்- பெருக்கல் கணக்குத் தொக்கி நிற்பதைக் காணலாம்.

ஜனநாயக சர்க்கார் என்று சொல்லிக் கொள்ளும் நமது சர்க்கார் கூடச் சில சமயங்களில் பாதை தவறி நடந்துவிடுகிறது என எழுதலாம் என்று குறிப்பிட முன்வந்த ஆசிரியரை, அவருடைய அறிவு, உண்மைக்கு மாறாப் போகக் கூடாதென்று நடைசெய்து,

சில
என்ற சொல்லுக்குப் பக்கத்திலேயே,
பல
என்று சொல்லையும் சேர்த்து, ``நமது சர்க்கார்கூட'' அதாவது ஜனநாயக சர்க்கார் என்று சொல்லிக்கொள்ளும் நமது சர்க்கார்கூடச் சில பல சமயங்களில் பாதை தவறி நடந்துவிடுவதை நாம் கண்டிக்காமல் இருக்கமுடியவில்லை என்று எழுதும்படி செய்திருக்கிறது. `சில' என்ற கூட்டல் கணக்கில் மட்டுமல்ல, `பல' என்ற பெருக்கல் கணக்கிலேயே இன்றைய சர்க்கார் அடக்குமுறை களைக் கையாளுகிறது என்று தோழர் பெரிய சாமித்தூரன் அவர்கள் விளக்கியுள்ளார்.

இவ்வளவு தொலைவு இன்றைய ஜனநாயக சர்க்காரைக் கண்டித்த தோழர் பெரியசாமித் தூரன் அவர்களே இந்தி எதிர்ப் பியக்கம் பிடிவாதத்துக்காகச்செய்யப்படுகிற தென்றும், அந்த இயக்கம் எந்த நியாயமான வாதத்தின் அடிப்படையிலும் நடக்கவில்லை யென்றும், இந்தி கட்டாயப்பாடமாக இல்லை என்பதற்கான விளக்கத்தை ஏற்கெனவே திட்டவட்டமாகச் சொல்லி விட்டோம் என்றும் குறிப்பிட்டிருக்கிறார். இவ்வாறு அவர் எழுதிய தற்குக் காரணம் இல்லாமலும் இல்லை. அண்மை யில் சென்னைக்கு வந்துபோன கவர்னர் ஜெனரல் இராசகோபாலாச்சாரியார் அவர்கள்.

``இனம் இனத்தைக் காக்க வேண்டும்.''

என்ற பழமொழியைக் காங்கிரஸ்காரர்கள் மறந்துவிடக் கூடாதென்று சொன்னதை மனத்தில் வைத்துக் கொண்டுதான் போலும், தோழர் தூரன் அவர்கள் தாம் ஒரு காங்கிரஸ் இனமாய் இருப்ப தால், காங்கிரஸ் சர்க்காரின் இந்தித் திட்டத்தில் தலையிட்டு, அதனைக் கண்டிக்கக் கூடாதென் பதற்காகவே அவ்விதம் எழுதினார் என்று நினைக்கிறோம். என்றாலும் இனம் இனத்தைக் காக்க வேண்டுமென்பதில் எவ்வளவு பற்றுதல் இருந்த போதிலும், உண்மையை மறைத்து இனத்தைக் காக்கும் இயல்பு எவருக்குமே இருக்கக்கூடாது. `காலச் சக்கரமும்' காங்கிரஸ் ஏடுதான் அதன் ஆசிரியர் தோழர் பெரியசாமித் தூரன் அவர்களும் காங்கிரஸ் இனம்தான். இதுபோலவே, `பிரசண்ட விகடன்' என்ற பத்திரி கையும் காங்கிரஸ் ஏடுதான். அதன் ஆசிரியர் தோழர் நாரண துரைக்கண்ணன் அவர்களும் காங்கிரஸ் இனம்தான். தோழர் பெரியசாமித் தூரன் அவர்கள்.

``இந்தி எதிர்ப்பு இயக்கம் என்பதாக ஒரு குறிப்பிட்ட கட்சி வேலை செய்து வருவது எல்லோரும் அறிந்ததுதான். இந்தி கட்டாயப் பாடமாக்கப்படவில்லை என்று பல தடவை சென்னை சர்க்கார் விளக்கமாக எடுத்துச் சொல்லியும், இந்தி கட்டாயப் பாடமாகத்தான் வைக்கப்பட் டிருக்கிறது' என்றே சாதிக்கிறார்கள் இவர்கள். நம்மைப் பொறுத்தவரை, `இந்தி எதிர்ப்புக் கிளர்ச்சி அர்த்தமற்றது- அவசிய மற்றது' என்றும், இந்தி கட்டாயப் பாடமாக இல்லை என்பதற்கான விளக்கத்தையும் ஏற்கெனவே திட்ட வட்டமாகச் சொல்லிவிட்டோம்.

என்று எழுதுகிறார். ஆனால் தோழர் நாரண துரைக்கண்ணன் அவர்கள்,
``நம் செந்தமிழ் மொழி இந்தி நுழைவால் கெடும் என்பதை உணர்த்துது அறப்போர் தொடுத்திருக்கும் தலைவர் களை நாம் வாழ்த்துகிறோம்.''

இந்தி கட்டாயமில்லை என்று சொல்வது சட்டப்படி சரியாக இருக்கலாம். ஆனால், நடைமுறையில் இந்தி கட்டாயப் பாடந்தான் என்பத விளக்கி ஏற்கெனவே இப்பத்திகளில் நாம் தெளிவாக்கி இருக்கிறோம். இந்தியை எதிர்த்து அறப்போர் தொடங்கப் பெற்றபிறகு, அம் மாவட்ட முதலமைச்சர் அவர்களும் செப்பனீடு பகுதியின் அமைச்சராக இருக்கும் ஸ்ரீபக்த வத்சலம், ஸ்ரீ கோபால் ரெட்டி போன்ற மந்திரி மார்களும் எந்த இடத்தில் எதை பேசுவது என்ற சம்பந்தா சம்பந்தமில்லாமல் இந்திக்கு `வக்கா லத்து' வாங்கிக் கொண்டு பேசியிருக்கிறார்கள். இது ஒன்றே இந்தியைக் கட்டாயமாக்கி இருக்கிறார்கள் என்பதற்கு மேலும் கிடைத்த ஒரு ருசுவாகும்' என்று எழுதியிருக்கிறார். காலச் சக்கரம் காங்கிரஸ் ஏடு. `பிரசன்ட விகடனும்' காங்கிரஸ் ஏடு. தோழர் பெரியசாமித் தூரனும், ஒரே முகாம்- ஒரே இனம் (கட்சி)- ஒரே கொள்கை ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட இருவரும் இந்தியைப் பற்றிய தங்கள் கருத்துக் களை ஒன்றுக்கொன்று எந்தவிதத்திலும் பொருந் தாத முறையில் வெளியிட்டுள்ளார். இதில், இன்னொன்று குறிப்பிடத்தக்கது என்னவென் றால், இருவரும் எழுத்தாளர்களில் சிறந்தவர்கள் மட்டுமல்ல, இருவரும் எழுத்தாளர் மாநாட்டுத் தலைவர்கள்- தோழர் பெரியசாமித் தூரன் அவர்கள் முதலாவது எழுத்தாளர் மாநாட்டுத் தலைவர். தோழர் நாரணதுரைக் கண்ணன் அவர்கள் இரண்டாவது எழுத்தாளர் மாநாட்டுத் தலைவர்.

இதில் ஒரே ஒரு வேறுபாடுதான். அதாவது `காலச்சக்கரம்' என்ற இதழ் ஓராண்டை முடித்து இரண்டாவது ஆண்டாக இப்பொழுது நடை பெற்றுக் கொண்டிருக்கிறது. `பிரசண்ட விகடன்' பதினாறு ஆண்டுகளை முடித்து பதினோழாவது ஆண்டாக இப்பொழுது நடைபெற்றுக் கொண்டி ருக்கிறது. இதைத் தவிர வேறு எந்தவிதமான வேறுபாட்டையும் இரு எழுத்தாளர்களுக்கும் இடையே காண முடியாது. என்றாலும் சென்னை சர்க்காரின் இந்தித் திட்டத்தில் இருவருக்குமுள்ள கருத்து வேறுபாடுகளை மலைக்கும், மடுவுக்கும் உள்ள வேறுபாட்டை விடப் பெரிதாகவே இருக்கிறது. தோழர் பெரியசாமித் தூரன் அவர்கள்.

``இந்தி எதிர்ப்புக் கிளர்ச்சி அர்த்த மற்றது- அவசியமற்றது- இந்தி கட்டாய பாடமாக இல்லை'' என்று கூறுகிறார். ஆனால் தோழர் நாரண துரைக்கண்ணன் அவர்கள்,

``நம் செந்தமிழ் மொழி இந்தி நுழைவால் கெடும் என்பதை உணர்ந்து அறப்போர் தொடுத்திருக்கும் தலைவர் களை நாம் வாழ்த்து கிறோம்... நடை முறையில் இந்தி கட்டாயப் பாடந்தான்.''

என்று கூறுகிறார். இந்தி எதிர்ப்பை ஒருவர் வைகிறார். ஒருவர் வாழ்த்துகிறார். இது, கால அளவையும், அறிவின் எல்லையையும், அனுபவத்தையும் பொறுத்து அவரவர்களுக்கு ஏற்பட்ட கருத்தாக ஒருவேளை இருக்கலாம். பத்து ஆண்டுகளுக்கு முன் இந்தி எதிர்ப்பு நடந்த போதும் `பிரசண்ட விகடன்' இந்தி எதிர்ப்பை ஆதரித்தது. ஆனால், அப்போது `காலச் சக்கரம்' இல்லை. இன்று நடக்கும் இந்தி எதிர்ப்பைக் `காலச் சக்கரமும்', `பிரசண்ட விகட'னும் ஒருங்கே காணும் வாய்ப்பைப் பெற்றுள்ளன. அன்றைய இந்தி எதிர்ப்பு, அரசியலாரால் ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் சிறைக்கு அனுப்பப்பட்டும், இரு தமிழ் வீரர்களின் உயிர் பலி வாங்கப்பட்டும் வெற்றி பெற்றது. ஆனால், இன்றைய இந்தி எதிர்ப்புக்கு அரசியலாற் கையாளும் நடவடிக் கைகள், இந்தி எதிர்ப்பாளர்களை உயிரோடு சித்திரவதை செய்வது என்ற முறையில் உள்ளன. கொலையைப் பார்க்கிலும் சித்திரவதை மிகவும் மோசமானது- கொடுமையானது.

எனவே இந்தி எதிர்ப்பை ஆதரிக்கும் `பிரசண்ட விகட'னைவிட ஒருபடி மேலே போய் இந்தி எதிர்ப்பை எதிர்க்கும் `காலச் சக்கரம்' இன்றைய சர்க்காரின் அடக்குமுறையைக் கண்டித்திருக்கிறது.

அநாகரிகம்
ஏகாதிபத்ய வெறி
வெட்கம்
மிருகத்தனம்
கொடுஞ்செயல்
கெடுபிடி

என்ற இன்னபிற சொற்களால் `காலச் சக்கரம்' என்ற காங்கிரஸ் இதழ் இன்றைய ஜனநாயக சர்க்காரைக் கண்டித்திருக்கிறது. 5.9.48ல் வெளிவந்த இதழில் எழுதப்பட்டிருப் பதைக் காங்கிரசன்பர்களின் பார்வைக்குத் தருகிறோம்.

``ஆகஸ்டு 26ந் தேதியன்று மறியல் செய்து விட்டுத் திரும்பிய தொண்டர்களைப் போலீசார் நடத்தியவிதம் மிகவும் கண்டிக்கத்தக்கதாகும். மறியல் முடிந்த பின்னர் அணிவகுத்துப் புறப் படுகையில், போலீசார் அவர்களை லாரியில் ஏற்றிச் சென்னைக்கு அப்பால் 32 மைல் தொலைவில் கொண்டு போய், எட்டு மாதக் கர்ப்பிணி ஒருவரையும் உட்பட ஒரு சவுக்கு மரக் காட்டில் இறக்கி விட்டுவிட்டு வந்தார்கள் என்ற செய்தியைக் கேட்டு உண்மையிலேயே நாம் மனம் வருந்துகிறோம். இந்த மிருகத்தனமான செயலை, அந்தக் காலத்தில் வெள்ளை ஏகாதி பத்ய சர்க்கார் செய்தது. அதே பாடத்தைப் பொது ஜன சர்க்கார் செய்தது. அதே பாடத்தைப் பொது ஜன சர்க்கார் என்று சொல்லிக் கொள்ளும் நமது சர்க்காரும் திருப்பிப் படித்தால் இதைவிட வெட்கக் கேடு வேறு ஒரு காரியம் இருக்க முடியாது. அமைதிக்கும், ஒழுங்கிற்கும் பங்கம் ஏற்படும் முறையில் தொண்டர்கள் நடந்திருந்தால் அவர்களைக் கைது செய்து அவர்கள் செய்த குற்றத்தை விசாரணை செய்து தண்டனையளிக்க வேண்டியது நியாயமாயிருக்க, வெள்ளைக்கார ஆட்சியில் நடந்தது போல், மைல் கணக்கில் லாரியில் ஏற்றிச் சென்று எங்காவது நடுக்காட்டில் விட்டுவிட்டு வருவது போன்றதுமான அநாகரிக மான, ஏகாதிபத்திய வெறிபிடித்த ஆட்சிக் காரர்கள் செய்வது போன்ற நடவடிக்கைகளை இன்றைய அரசாங்கம் செய்து வருவதைக் கண்டால் நாம் வெட்கப்படுவதைத் தவிர வேறு வழியில்லை.

சட்டத்தை மீறியதாகக் கருதப்படுபவர் களைக் கைது செய்தால், குற்றமிருந்தால் விசாரித்துத் தண்டிப்பதுசட்ட வரம்பிற்குட்பட்ட செயல். நகர எல்லைக்கு அப்பால் கொண்டு போய் விடும் முறையை வெள்ளையர் கையாண் டனர்- ஆனால் அவற்றையெல்லாம் மீறிக் கைது செய்தவுடன் எங்கோ நெடுந் தொலைவில் கொண்டு போய்விடுவது எந்த முறையில் பொருந்தும் என்று நமக்குத் தெரியவில்லை. அந்தக் காலத்தில் வெள்ளையன் செய்தபோது, எவ்வளவு கடுமையான சொற்கள் இருக்குமோ அவ்வளவையும் சேர்த்து நாம் கண்டித்தோம். ஆனால் அதே முறையை இன்று நாம் கையாண்டால் அதன் பொருள் என்ன?

இதில் இன்னொரு முறையும் கையாளப் படுவதாகத் தெரிகிறது. அப்படித் தொலை தூரத்தில் கொண்டுபோய் விடுபவர்களை, எந்த `பஸ்ஸும், வண்டியும் ஏற்றி வரக்கூடாது என்பது போலீஸ் அதிகாரிகளின் கண்டிப்பு. வழி நெடுக மறியல் தொண்டர்களைத் திரும்பி நகர் வந்து சேர, கால்நடையல்லாமல் வேறு சாதனங்கள் பெற முடியாவண்ணம் கண்டிப்புச் செய்வது கொடுஞ் செயலாகும். இவ்ளவு தூரம் `கெடுபிடி செய்ய உண்மையிலேயே அந்த அதிகாரி களுக்குச் சர்க்கார் உத்தரவளித்திருக்கிறதா? அப்படி உத்தரவளிக்காமலிருந்தால், இம்மாதிரி முறைகளைத் தான் தோன்றித்தனமாகக் கையாளுகிறார்களா என்று நமக்குத் தெரிய வில்லை. பொதுஜன சர்க்காரில் இது மாதிரியான நிகழ்ச்சிகள் நடைபெறுவதைக் கண்டு நாம் வெட்கப்படுகிறோம்.''

என்று எழுதியிருக்கிறது. `வெட்கப் படுகிறோம்' என்ற தலைப்பில் `காலச் சக்கரம்' எழுதிய கண்டனத்தைக் கண்டு சென்னை அரசாங்கம் வெட்கப்படுகிறதோ இல்லையோ அது நமக்குத் தெரியாது. என்றாலும் தோழர் பெரியசாமித் தூரன் சென்னை அரசாங்கத்தின் அடக்குமுறையைக் கண்டு `வெட்கப்படுகிறோம்' என்று எழுதியதின் பொருள், எழுத்தாளர்கள் அனைவருமே வெட்கப்படுகின்றனர் என்பதா கும். ஏனென்றால், அவர் எழுத்தாளர்களால் முழு மனத்துடன் தேர்ந்தெடுக்கப்பட்டு, எழுத்தாளர் மாநாட்டுக்குத் தலைவராய் இருந்தவர். எனவே, அவர் விடுக்கும் கண்டனம் எழுத்தாளர்கள் அனைவரும் விடும் கண்டனமாகும் என்பதை நாம் குறிப்பிடாமல் இருக்க முடியாது. ஆகையால், இந்தக் கண்டனத்தைப் படிக்கும் எந்த அறிவுள்ள மனிதனும், சென்னை அரசாங் கத்தின் மிருகத்தனமான அடக்குமுறையைக் கண்டு வெட்கித் தலைகுனிந்து வேதனைப்படா மல் இருக்க முடியாது.

(திராவிட நாடு - 12.9.48)