அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


வெட்கப்படுகின்றோம்

சர்க்கார் நிதி அமைச்சர் தோழர் ஆர்.கே. சண்முகம் அவர்கள், ஸ்டர்லிங் இருப்புப்பற்றிய பேச்சு வார்த்தைகளை நடத்துவதற்காக இப்போது இலண்டனுக்குப் போய் இருக்கிறார். இந்தச் சமயத்தில் அவருக்கு இலண்டனில் ஒரு நல்ல வாய்ப்புக் கிடைத்தது. தமிழ் மக்கள் பெருமையும் மகிழ்ச்சியும் அடையக்கூடியவிதத்தில் அந்த வாய்ப்பு அமைந்தது. அதாவது, இலண்டனிலுள்ள தமிழ்ச் சங்கத்தில் பேசும் வாய்ப்புத் தோழர் சண்முகம் அவர்களுக்குக் கிடைத்தது. எனவேதான் இதனை ஓர் அரிய வாய்ப்பு என்று கூறினோம். எனவே இலண்டனிலுள்ள தமிழ்ச் சங்கத்தில் தோழர் சண்முகம் அவர்கள் பேசியபோது,

“எல்லாப் பொருளும் இதன்பால் உள, இதன்பால் இல்லாத எப்பொருளும் இல்லையால்” என்ற முதுமொழிக்கிணங்கிச் செவிக்கும் வாய்க்கும் சிந்தைக்கும் இனியவாய் சிறந்த சொற் செறிவும், உயர்ந்த பொருட் பொலிவும் பொருந்தி விளங்க எழுதப்பட்ட நமது தமிழ் நூல்களிற் காணப்படும் அமிழ்த மயமான அற ஒழுக்கங்களையும், பொருள் நுணுக்கங்களையும் அறிந்து நுகர்ந்து மகிழ்வடைவதே மக்கட் பிறப்பின் மாண் பயனாகும். கண் பெற்றிருந்தும் காணாத மக்களைக் குறித்தும், காது பெற்றிருந்தும் கேளாத மக்களைக் குறித்தும் ஏசுநாதர் விவிலிய நூலுட் கூறிப் போயுள்ளவை பலரும் அறிந்தவையே. அக்குறிப்புகளைப் போன்ற பலவற்றை நந்தமிழ் நூல்கள் பலவற்றுட் பரக்கக் காணலாம். உறுப்புக்களான மக்களை ஒத்துப், பண்பினால் அவரை ஒவ்வாத
வரும், ஊணும் உடையும் பிறவுமுடையராயினும், உண்மையை அறிய அஞ்சுபவரும் மக்கள் அல்லர் என்பது நமது தமிழ் ஆன்றோர் கொள்கை.

உண்மைகளை உள்ளபடி கூறி மக்களை நல்வழிப்படுத்தவல்ல ஆற்றலோடு கூடிய தமிழ் அறிஞர் பலர் அஞ்ஞான்று இருந்தாராயினும், அவருட் பெரும்பாலார் பொருள் வருவாய்க்கு வழி யில்லாமையாற், செல்வர் சிலரை அடுத்து, அவரைப் பலவகையாலெல்லாம் புகழ்ந்து பாடிக் காலங்கழித்து வந்தார்கள். இத்தகைய இரங்கத்தக்க நிலை இப்போதும் முற்றும் ஒழிந்து போயிற்றென்று சொல்லுதற்கில்லை. இஞ்ஞான்றும் கற்றறிந்தவர்கள் என்று காணப்படுவோருட் பலர் தம் வறுமை கருதியோ அல்லது உண்மை உணர்ச்சி இல்லாத சிலரின் புகழ் உரைகளைப் பெற விரும்பியோ, அல்லது நாம் அல்லாத ஏனையோரெல்லாம் ஒன்றும் அறியாத முட்டாள்களென நினைத்தோ தம் வாய்க்கு வந்தவாறெல்லாம் முன்னுக்குப் பின் முரணாக உள்ளதை இல்லையென்றும் இல்லதை உள்ளதென்றும், உண்மை நூல்களிற் காணப்படுவனவற்றைப் நீக்கியும், காணப்படாதனவற்றைப் புனைந்தும் பேசிவிடுகின்றனர். இத்தகைய அருவருப்பான விரிவுரைகளைக் கேட்டுக் கொண்டிருக்கும் அவைக் குழுவினரும் அவர் பேசியதில் உண்மைக்கு மாறான பல புனைந்துரைகள் காணப்படுகின்றனவே என்று அறியும் ஆற்றலில்லாத இயல்போடு கூடினவர்களாய்க் கைகொட்டி ஆரவாரஞ் செய்துவிடுகின்றனர். இவ்வித அறியாமையைக் கண்டு உண்மையை உள்ளபடி சொல்ல வேண்டுமென்ற கருணையுடன் எவரேனும் முன் வருவார்களானால், அவர்களை அங்ஙனம் பேசவிடாது தடுப்பதற்கு எத்துணை இயலுமோ அத்துணை இடர்களும் செய்து விடுகின்றனர். ஐயகோ! இது பெரிதும் இரங்கபாலாது, நிற்க,

கற்றார் முதற் கல்லாதார் ஈறாகச் சிறு மகரும் பெண்டிரும் உட்பட எல்லாராலும் பேசப்படுவதே மொழியெனப்படுமன்றி, நூல்களிற் கற்றார்பால் மட்டும் வழங்குவது மொழியெனப்படாது. வல்லோசை இல்லாத நந்தமிழ் இத் தமிழ்நாட்டின் கண் இன்னகாலத்தில் இருந்துதான் பேச்சுவழக்கில் வந்ததென்று எவராலும் ஆராய்ந்தறிய முடியாததாய்த், தன் இளமை குன்றாது, கல்லாதாராலும், கற்றாராலும், சிறு மகாராலும், பெண்டிராலும் பேசப்பட்டு வருகின்றதென்பதை எவரே அறியாதார்!

இனித் தமிழ்மொழியின் சொற்களும் சொற்றொடர்களும் இப்படித்தான் பேசவும் எழுதவும் படல் வேண்டுமென்னும் முறைகளையும் நுட்பங்களையும் நுண்ணிதின் ஆராய்ந்து, அவைகளை ஒரு வரம்பிற்குட்படுத்தி ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்னேயே பல சிறந்த இலக்கண நூல்கள் எழுதப்பட்டிருக்கின்றன. தொல்காப்பியத்திற்கும் முன்பே எழுதப்பட்ட இலக்கண நூலாசிரியர்களின் கருத்தோடிணங்கி அவர் தம் சொற்களையும் சொற்றொடர்களையும் வேறுபடுத்தாது, அவர்க்குப் பின்வந்த “தொல்காப்பிய” ஆசிரியர் தம் காலத்து வழக்கும் உடன் சேர்த்துத் “தொல்காப்பியம்” என்னும் நுண் பொருள் விரிந்ததோர் இலக்கண நூலை இயற்றினார். தொல்காப்பியத்திற்குப் பின் தோன்றிய பவணந்தி முனிவரும் தொல்காப்பியர் கருத்தோடிசைந்து “நன்னூல்” என்னும் ஓர் அரிய இலக்கண நூலை இயற்றினார். இவ்வகையானே, நம் பண்டைத் தமிழர் அவ்வக்காலத்து இயல்பிற்கு இசைகின்ற விடத்தும், தம் முன்னாசிரியர் கருத்தோடு மாறுபடாமற், சொற்களையும் சொற்றொடர்களையும் ஒழுங்குபடுத்தி இலக்கண நூல்கள் எழுதி வைத்தமையாலன்றோ நந்தனித் தமிழ் பண்டை நாள் தொட்டு இன்றை நாள் வரையும் சிறிதும் வேறுபடாமற் பேசவும் எழுதவும் எளிதாய் இருக்கின்றது.

இனி, ஆரிய மொழியிற் பழைய முனிவரால் இலக்கண நூலுட் கூறப்பட்டுள்ள சொற்களையும் சொற்றொடர்களையும், அவர்க்குப் பிற்காலத்து வந்தோர் வேறு திரித்துப் பலவேறு வகைப்பட வழங்கினமையின், அவற்றிற்கேற்பப் பிற்காலத்து இலக்கண நூல்கள் எழுதப்பட்டன. பாணினீயம் எழுதப்பட்ட காலத்தில் ஆரிய மொழி ஒரு தன்மைத்தாயும், காளிதாசர் காலத்து வேறு தன்மைத்தாயும் இருந்தது. இங்ஙனம் பாணினீயம் எழுதப்பட்ட காலத்தில் வழங்கிய ஆரிய மொழியையும், பாணினீயத்திற்குப் பிற்பட்ட காலத்தில் வழங்கிய சமஸ்கிருத மொழியையும், உற்று நோக்கின், அவை ஒன்றற்கொன்று தொடர்பின்றி வெவ்வேறு மொழிபோற் காணப்படு கின்றன. இங்ஙனமே, ஆங்கில மொழியும் “சாசர்” காலத்தில் ஒருவகையாயும், “கேட்மன்” காலத்தில் வேறொரு வகையாயும், இப்போது மற்றொரு வகையாயும் எழுதப் பட்டிருக்கின்றது.

இலக்கண நூல்களைப் பண்படுத்திச் செவ்வையாக எழுதி மொழிகளை ஒரு வரம்பிற்குட்பட நிலை நிறுத்துவதற்கு மக்களின் நாகரிகமும் இன்றியமையாது வேண்டப்படும். எவ்வாறெனின், ஆரியர் தமக்கென ஊர் ஒன்றின்றி, ஊணும் உடையுமின்றி, ஊர் ஊராய்த் திரிந்து துன்புற்றமையின், அவர்கள் இடரின்றி ஓர் ஊரில் அமர்ந்து அமைதியோடு ஆராய்ந்து, தம் முன்னோர் வகுத்த சொற்களையும், சொற்றொடர்களையும் ஒப்பிட்டு நோக்கிப் பார்த்து, இலக்கண நூல்கள் எழுதுவதற்கு நேரமும், செல்வமும், கல்வியும் போதாமையின், ஆரிய மொழியில் அவ்வக்காலத்து வேறுபட்ட அவ்வத்திரிபுகளுக்கு ஏற்ப இலக்கிய இலக்கணங்கள் எழுதுவாராயினர். அதனால் அவ்ஆரிய மொழி ஒவ்வொரு காலத்தும் ஒவ்வொரு மொழியாய் வேறு வேறு திரிந்து ஒன்றற்கொன்று இயைபின்றிக் கடைசியில் இறந்துபட்டது.

அன்றியும் இந்தியாவில் வந்து குடியேறிய ஆரியர்க்கு எழுதத் தெரியாதென்றும், அதனால் அவர்கள் தமக்குத் தெரிந்த உரைகளையும் பாட்டுகளையும் நெட்டுருச் செய்து நினைவில் வைத்துக்கொண்டார்களென்றும், அதனால் அவர்களுடைய நூல்களுக்குக் காதாற் கேட்கப்படுவது என்பதன் பொருளின் “சுருதி” என்னும் பெயரும், நினைவில் வைக்கப்படுவது என்பதன் பொருளில் “ஸ்மிருதி” என்னும் பெயரும் வழங்கி வந்தன வென்றும்; அக்காலத்திருந்த தமிழர்கள் எழுத்தெழுதவும், கணக்குப் போடவும் வல்லவர்களாய் இருந்தார்களென்றும், தமிழர்க்குப் பழைய நூலாகிய தொல்காப்பியத்தில் எழுத்துக்கள் எழுதும் முறைகள் சொல்லப்பட்டிருப்பதே அதற்குப் போதிய சான்றாகுமென்றும்; ஆகவே, தமிழரே ஆரியர்க்கு எழுத்தெழுதும் முறையினையும், கணக்குப்போடும் முறையினையும் கற்பித்துக் கொடுத்தனரென்றும் சரித்திர (வரலாற்று) ஆராய்ச்சி நூல் வல்லார் சொல்லுகின்றார்கள். மற்றை நாட்டவர்களெல்லாம் விலங்கினங்களைப்போல் இருந்த பண்டை நாளில் எழுதவும் கணக்குப்போடவும் தெரிந்திருந்த நந்தமிழ் மக்களை நாகரிகமற்றவர் என்று கூற எவரே முன்வருவர் அன்பர்களே!

அன்றியும், “சாந்தோக்கியம்,” “பிருகதாரிணியம்” முதலிய பழைய உபநிடதங்களில் ஆரியப் பார்ப்பனர், அஜாத சத்ரு முதலான ஏனை வகுப்பினர்க்குரிய அரசர்பாற் சென்று உயர்ந்த மெய்ப்
பொருள்களைக் கேட்டுத் தெளிந்தாரென்றும், அங்ஙனம் அவற்றை அவ்வாரியப் பார்ப்பனருக்கு அவ்வரசர்கள் அறிவித்த பிறகு, “இம்மெய்ப் பொருள்களை ஆரியப் பிராமணர் எவரும் இதற்கு முன் அறியார். இவை எம்மவர்க்கே உரியனவாய் இருந்தன; இவற்றை முதன் முதல் யாமே உமக்கு அறிவுறுத்தினோம்” என்று அவ்வரசர்கள் கூறினார்களென்றும் சொல்லப்பட்டிருக்கின்றனவென அறிவுடையோர் கூறுகின்றார்கள். அஃது அங்ஙனமாகவும், ஆரியரே பிறர்க்கு மெய்ப்பொருள்களை அறிவுறுத்தினார்களென்று கொள்வது யாங்ஙனம் பொருந்தும்?

இன்னும், ஆரியர் இந்தியாவுக்கு வருமுன் தெற்கே குமரி முனையில் இருந்து பலுஜிஸ்தானம் வரை பரவியிருந்தவர் தமிழரே யென்றும், தமிழ்மொழியே முதன்மையான மொழியென்றும், தமிழ் மொழி ஒன்றே நாளடைவில் திரிபடைந்து தெலுங்கு, கன்னடம், மலையாளம், பிராகுவி, பாலி, துளுவு, தோடா முதலான மொழிகளாய் மாறிவிட்டனவென்றும், தமிழ் மொழியை நன்கு ஆராய்ந்த சீனிவாச அய்யங்கார் அவர்கள் தாமெழுதிய நூலிலும் நன்கு விளக்கிக் காட்டியிருக்கின்றார்.

இனி, வடமொழியினிடத்து மிகுந்த பற்றுவைத்து அதனை உயர்த்திக் கூறுவோர் அம்மொழியைத் தம் பெண்டிர் பிள்ளைகள் முதலான எல்லார்க்கும் கற்பித்து அம்மொழியிலேயே அவருடன் பேசுதல் வேண்டும்; அதுவே அதன்பால் வைத்த உண்மைப் பற்றுதலுக்கும் அழகாகும். அன்றி, வடமொழியைத் தம் சுற்றத்தார் எல்லாரோடும் முற்றும் பேசத் தெரியாத அவர், அதன்பாற் பாராட்டும் பற்று வெறும் போலியே அல்லாமல் ஏதும் பயனுடையதாகக் காணப்படவில்லை. எனவே, உலக வழக்கிற்குப் பயன்படாத வடமொழி மேல் வைத்த போலிப்பற்றால் வளம் நிறைந்த தூய தமிழைக் கெடுக்க முந்துதல் அறிவுடைமைக்குச் சிறிதும் முறையாகாது.

இன்னும், பிறமொழிகளில் இருக்கும் நூல்களைத் தமிழில் மொழி பெயர்ப்பார் சிலர் தமிழில் திருந்திய அறிவு விளங்கப் பெறாமையால் தாம் மொழி பெயர்க்கும் நூல்களிலுள்ள சொற்களையும் சொற்றொடர்களையும் பின் எடுத்துக் காட்டப் பட்டிருக்கிற தொடர் மொழிகளைப் போலவே நெடுக எழுதி விடுகின்றனர். அதாவது, “ப்ரத்யட்சமாகத் தோணுகிற சர்வ ஜகத்தையும் மிதயா எனச் சொல்லும் ஏகாத்மவாதிகள் தமக்குப் பிரமக்ஞானம் லயித்துவிட்டது என்பர்” என்றும், “ஒன்றிற்குத் தாத்பர்யம் சத்தியார்த்தத்திலிருக்குமே ஒழிய லக்ஷியார்த் தத்திலிருக்க முடியாதென்று கூற முடியுமா” என்றும் தமிழிற் பிற மொழிகளைச் சேர்த்து எழுதுவதால் இக்காலத்துத் தமிழ் நடை தன் இனிமையும் தூய்மையும் பழைமையும் குன்றியிருப்பதை எவரே உணராதார்!

தமிழ் அல்லாத மற்ற மொழிகளில் வருத்தப்பட்டுச் சொல்லும் சொற்களும், கோபம் துன்பம் வந்தாற் பிறக்கும் உரத்த ஓசைகளும், இளைத்த ஒலிகளும் நிரம்பிக் கிடத்தலால் அவையெல்லாம் செயற்கை மொழிகளென்றும், தமிழில் வருத்தமின்றி இயல்பாற் பிறக்கும் சொற்களே நிறைந்து, கோபத்தாற் பிறக்கும் வெடுப்போசையும், துன்பத்தாற் பிறக்கும் இளைப்பொலியும் இன்றி, எல்லாம் இனிய குணத்திற் பிறக்கும் மெல்லோசைகளாய் இருத்தலின், தமிழ் இன்ப வடிவாய் விளங்கும் இன்பம் வாய்ந்த மொழியாம் என்பதை அன்பர்கள் கருத்திற் பதிய வைத்து அதனை வளரச் செய்வதற்கான எல்லா முயற்சியுங் குறைவறச் செய்தல் வேண்டும்.

எனவே, உலகில் நாம் தமிழ் மக்களாய்ப் பிறந்ததற்கு அடையாளமாக நம்மைப்பற்றியும் நம் மொழியைப் பற்றியும் நம் கொள்கையைப் பற்றியும் நன்றாக ஆராய்ந்து கொள்ளல் இன்றியமையாத தொன்றாம். ஆதலாற், பழமை தொட்டு நாகரிகத்திற் சிறந்த தமிழ் நன்மக்கள் வழியிற் றோன்றிய நம்மனோர், தமது சிறப்பையும் நாகரிகத்தையும் நிலைநாட்டி, அவற்றைப் பிறரும் பின்பற்றுமாறு செய்வார்களானால், அவர்கள் தமக்கும் பிறர்க்கும் பயன்பட்டவராய்ப் புகழ் ஓங்கி வாழ்வர்.” என்றுதான் பேசியிருப்பார் - தமிழ் மொழியைத் தாய்மொழியாகக் கொண்ட தோழர் சண்முகம் அவர்கள் தமிழ் மொழியின் சிறப்பைப் பற்றியும், அதன் தொன்மை - இனிமை பிறமொழிகளின் உதவியின்றித் தனித்தியங்கும் தனிச் சிறப்பைப் பற்றியும் மேற்கண்டவாறு தான் பேசியிருப்பார் என்று நீங்கள் கருதுவீர்கள்.

தமிழ்நாட்டிலிருந்து இங்கிலாந்து முதலான மேலை நாடுகளுக்குப் போகின்றவர்களை நோக்கி அங்குள்ளவர்கள், “உங்களுடைய நாட்டுக்கும், கலை, நாகரிகங்களுக்கும் சிறப்புத் தரும் நூல்கள் என்னென்ன” என்று கேட்கும் போதெல்லாம், அவர்கள், “எங்களிடம் பாகவதம் - பகவத் கீதை - இராமாயணம் - பாரதம் - ஆகமம், உபநிஷத் ஆகிய ஒப்புயர்வற்ற நூல்கள் பல இருக்கின்றன” என்று கூறிப் பூரிப்படைவது போலத், தோழர் சண்முகம் அவர்கள் கூறியிருக்கமாட்டார் என்றும், அவர், “எங்கள் நாட்டுக்கும், கலைக்கும், நாகரிகத்துக்கும் சிறப்புத் தரும் நூல்கள், இதுவரை நீங்கள் அறியாதது - அறிவிக்கப்படாததுமான பல பழம் பெரும் நூல்கள் நம்மிடம் உள்ளன. அவை: திருக்குறள் - தொல் காப்பியம் - புறநானூறு - அகநானூறு - கலித்தொகை - கலிங்கத்துப் பரணி - ஐங்குறுநூறு - சிலப்பதிகாரம் - சீவகசிந்தாமணி போன்ற இன்னும் பல தனித் தமிழ் நூல்கள், நம்மிடம் உள்ளன” என்று கூறித் தமிழுக்கும், தமிழ் மக்களுக்கும் பெருமையும் மகிழ்ச்சியும் தரக்கூடிய முறையில் பேசியிருப்பார் என்றும் கருதுவீர்கள். ஆனால் நமது அன்பர் சண்முகம் அவர்கள் அந்தப் பெருமை தரும் பணியினைச் செய்து, அவருக்குக் கிடைத்த அரிய வாய்ப்பினை நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ளவில்லை என்பதை வருத்தமும் வெட்கமும் கலந்த குரலில் கூறவேண்டியிருக்கிறது.

இலண்டலிலுள்ள தமிழ்ச் சங்கத்தில் பேசிய தோழர் சண்முகம் அவர்கள், “பிறமொழிப் பதங்களின்றி எந்த மொழியும் வளர்ச்சி அடைய முடியாதாகையால, பிறமொழிப் பதங்களைச் சேர்த்துக்கொள்வதில் தமிழர்கள் வெட்கப்படக்கூடாது” என்பதாகப் பேசியிருக்கிறார். இவ்வாறு சண்முகம் அவர்கள் பேசினார் என்பதைச் செய்தித் தாள்களில் படித்தவுடன் உண்மையாகவே நாம் வெட்கப்பட்டோம். தோழர் சண்முகம் அவர்கள் இத்தகைய தமக்கு மிஞ்சிய தம்மால் ஆகாத பணியில் ஏன் ஈடுபட்டார் என்று வருத்தமும் அடைந்தோம். அவர் எந்த வேலைக்காகப் போனாரோ, அந்த வேலையை மட்டும் சரிவர முடித்துக்கொண்டு திரும்பியிருக்கலாமே என்றும் எண்ணினோம்.

தமிழில் பிறமொழிச் சொற்களைச் சேர்ப்பதில் தமிழ் மக்கள் வெட்கப்படக் கூடாதென்ற வெட்கங்கெட்ட பேச்சை அவர் பேசியிருக்க வேண்டியதில்லை. உலகில் உள்ள மொழிகளில் தமிழ் மொழி ஒன்றுதான், பிறமொழிச் சொற்களை எந்த ஏதுவைக் கொண்டும் இரவல் வாங்காமல் தனித்து இயங்கக் கூடிய தென்பதையும், எந்தவிதமான புதுச் சொற்களுக்கும் தமிழில் சொற்களை ஆக்கிக்கொள்ளும் திறமை தமிழ் மொழி ஒன்றுக்கு மட்டும் உண்டு என்பதையும் தோழர் சண்முகம் அவர்கள் அறியாமல் பேசியது கேட்டு நாம் உண்மையாகவே வெட்கப்படுகின்றோம்.
“தமிழ் ஒன்றுதான் பிறமொழிச் சொற்களின் உதவியின்றித் தனித்தியங்கும் வாய்ப்பைப் பெற்றுள்ளது” என்று கூறிய மேல்நாட்டறிஞர்களான டாக்டர் போப், டாக்டர் கால்ட்வெல் முதலானவர்கள் இன்று இருந்தால், இலண்டனில் தோழர் சண்முகம் அவர்கள் பேசியதைக் கேட்டு, அவர்களும் வெட்கப்பட்டிருப்பார்கள்.

இலண்டனிலுள்ள பெரிய நூல் நிலையத்தில், விவிலிய (ஙிவீதீறீமீ) நூலுக்குப் பக்கத்தில், இரண்டாவது நூலாக இடம் பெறும் பேற்றைப் பெற்றுள்ள திருக்குறள், தோழர் சண்முகம் அவர்களைக் காண நேர்ந்து - அதற்குப் பேசவும் வாயிருந்தால், அதுவும் அவரின் அறியாமையைக் கண்டு வெட்கப்பட்டுக் கைகொட்டி நகைத்திருக்கும்.

“உங்கள் போன்றவர்கள் என்னைப்பற்றி இப்படியெல்லாம் தப்பும் தவறுமாகக் கூறுவதாலேதான், நான் இன்று இந்தக் கீழ்நிலையை அடைய நேரிட்டது - ‘தண்ணீரை’ ஜலம் என்றும், ‘சோறு’ என்பதைச் சாதம் என்றும், ‘மலர்’ என்பதைப் புஷ்பம் என்றும், ‘கண்கூடு’ என்பதைப் பிரத்தியட்சம் என்றும் ‘கறி’ என்பதைப் பதார்த்தம் என்றும், ‘சாறு’ என்பதைச் சாம்பார் என்றும், ‘மிளகு நீர்’ என்பதை ரசம் என்றும், ‘முதுகுன்றம்’ என்பதை விருத்தாசலம் என்றும், ‘மறைக்காடு’ என்பதை வேதாரண்யம் என்றும், தமிழ் மக்களால் மிக எளிதாகச் சொல்லக்கூடிய தூய தனித் தமிழ்ச் சொற்கள் எல்லாம் வடமொழிச் சொற்களாக ஆக்கப்பட்டுவிட்டன” என்று, தோழர் சண்முகம் அவர்களைப் பார்த்துத் தமிழ் மொழியும் வெட்கப்பட்டிருக்கும்.

விஞ்ஞான முறையால் உண்டாகும் புதுப்புதுச் சொற்களுக்குக் கூடத், தனித் தமிழ்ச் சொற்களைக், கருத்து மாறுபடாமல் உண்டாக்கிக் கொள்ள முடியும் என்பது தமிழ் மொழி வல்லுனரின் முடிந்த முடிபாகும். இந்த நிலையில் நமது மதிப்புக்குரிய தோழர் சண்முகம் அவர்கள், தமிழில் பிறமொழிச் சொற்களைச் சேர்ப்பதில் தமிழ் மக்கள் வெட்கப்படகூடாதென்று பேசியது கேட்டு, நாம் உண்மையாகவே வெட்கப்படுகின்றோம். இதனைப் படித்த பின்னர் தோழர் சண்முகம் அவர்களும் வெட்கப்படுவார் என்பதில் ஐயமில்லை, அவரும் தமிழ் மகன் என்ற காரணத்தால்.

20.6.1948