அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


வெற்றிச்சிந்து

கருப்புக் கொடிகளைக் கண்டு, திவாகர் கவலைப்பட வில்லையாம்.

அவர் அவ்விதம் சொன்னதமாகப் பத்திரிகை நிருபர்கள் தகவல் தருகிறார்கள்.

கருப்புக் கொடிகளைக் கண்டு, திவாகர் என்ன எண்ணுகிறார், மருட்சி அடைகிறாரே, மனவேதனை கொள்கிறாரா, ஏன் இந்த நிலை பிறந்தது நமது கட்சிக்கு என்று ஏக்கமடைகிறாரா, என்ற கவலை நிருபர்களுக்கு ஏற்பட்டிருக்கிறது.

எனவேதான், அவர்கள், திவாகரைப்பேட்டி கண்டு கேட்டிருக்கிறார்கள். கருப்புக்கொடி காட்டினார்களே, தாங்கள் அதைப்பற்றி என்ன கருதுகிறீர்கள் என்று.

நிருபர்கள், திவாகரைச் சூழ்ந்துகொண்டு, அவருடைய எண்ணம் என்ன என்று கேட்டுத் தெளிவு பெறவேண்டிய சூழ்நிலையை, கருப்புக்கொடிச் சம்பவம், ஏற்படுத்திவிட்டது.

“ஐயோ! நான் பயந்து போனேன்-இப்படி இருக்கும் என்று தெரிந்திருந்தால் தான் வந்திருக்கவே மாட்டேனே! என்று பீதியுடன் பேசுவாரா, ஒரு மந்திரி! எதிர்பார்க்கலாமா அப்படி அவர் பேசுவார், என்று! ஒரு சமயம் அவர் மனதிலே அதுபோல எண்ணமும் பீதியும் ஏற்பட்டிருக்கக்கூடும் வெளியே சொன்னால் வெட்கக்கேடல்லவா-சொல்வாரா! சொல்லத்தான் மாட்டார் சொரணை கெட்டவர்கள்கூடச் சொல்ல மாட்டார்கள் பதவியில் இருக்கும் ஒரு மந்திரி சொல்வாரா?

கவலைப்படவில்லை-என்றுதான் கூறுவார். அதுதானே மதியூகி கூறக்கூடிய பேச்சு!

அவர்மீது பாபம், குற்றமில்லை-அவரிடம் சென்ற கேள்வி கேட்டார்களே, நிருபர்கள் என்ன எண்ணுகிறீர் என்று அவர்கள் இலேசான பேர்வழிகளல்ல! மந்திரியை ஒரு கணம், திணறவைத்து விட்டார்கள்!

நிருபர்கள் ஏன் கேட்டார்கள்

அந்தக் கேள்வியை?

கருப்புக்கொடி காட்டுவது என்பது கவலை உண்டாக்கக்கூடிய சம்பவம் அல்லவானால், அந்தக் கேள்வி கேட்கவேண்டிய அவசியமே எழாது.

கருப்புக்கொடி காட்டினவர்கள் ‘ஏனோதானோக்கள்’ ஆக இருந்திருந்தால், திவாகரைப் பேட்டி கண்டு நிருபர்கள், கேள்வி கேட்க வேண்டிய அவசியம் ஏற்பட்டிராது.

காட்டப்பட்ட கருப்புக்கொடிகளும், மிக மிகக் குறைந்த எண்ணிக்கையுள்ளதாக, இங்கொன்று அங்கொன்றாக இருந்திருந்தால், நிருபர்கள் ஓடோடிச்சென்று திவாகரைக் கண்டு என்ன எண்ணுகிறர்கள், என்று கேள்வி கேட்டிருக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டிராது!

கருப்புக்கொடி காட்டுவது முக்கியமான சம்பவம் திராவிடரின் உரிமை உணர்ச்சிக்கு எடுத்துக்காட்டு அதற்கான தீர்மானம் செய்த கட்சியும், மக்கள் மன்றத்திலே மாண்புடன் உள்ளது. காட்டப்பட்ட கருப்புக்கொடிகளும் ஏராளம்-அதுபோது இருந்த எழுச்சியும் உள்ளத்தை உருக்கக்கூடியது எனவேதான். நிருபர்கள், திவாகரைக் கேட்டிருக்கிறார்கள். என்ன எண்ணுகிறீர் ஐயா! என்று மந்திரியும் நிருபர்களும் கூடிய பேசவேண்டிய சூழ்நிலையைக் கருப்புக்கொடிச் சம்பவம் உண்டாக்கி விட்டது.

பலமான அடியோ? என்று ஒருவவைப் பார்த்து இன்னொருவர் கேட்கிறார் என்றால், என்ன பொருள்? கீழேவிழுந்திருக்கிறார் அல்லது கலகத்தில் சிக்கியிருக்கிறார் ஏதோ ஒருவிதமான விபத்து என்றுதானே பொருள்.

ஒரு காரணமுமின்றி, ஒரு நிகழ்ச்சியுமில்லாத போதா, ஒருவர், இன்னொருவரைப் பார்த்து பலமான அடியா என்று கேட்பார்.

அதுபோலத்தான், திவாகரைப் பார்த்து நிருபர்கள், என்ன உமது கருத்து இந்தக் கருப்பு கொடிச் சம்பவத்தைப் பற்றி, என்று கேள்வி கேட்டதற்குக் காரணம் பலமாக இருக்கிறது.

திராவிட முன்னேற்றக் கழகச் செயற்குழுவின் தீர்மானம், வடநாட்டு மந்திரிகளுக்குத் திராவிடர்கள், கருப்புக்கொடி காட்ட வேண்டும் என்பது.

இது கவனிக்கப்படவேண்டிய விஷயம் அல்ல. என்பது இந்த நிருபர்களின் எண்ணம். எனவே கோயில்பட்டித் தீர்மானத்தை இருட்டடிப்புச் செய்துவிட்டனர். பூனை கண்ணை மூடிக்கொண்டது!
தீர்மானம் போட்டுவிடலாம் வாய் வீரத்துக்குப் பஞ்சமா காரியத்தில் ஈடுபடும்போது தானே தெரியும். இதுகளாவது தைரியமாகக் கருப்புக்கொடி பிடிப்பதாவது என்று எண்ணினர் அரசியல் உலகிலே உள்ள ‘அசடுகள்’.

தீர்மானம் போட்டுவிட்டோமே, ஒப்புக்காகவாவது இரண்டொரு கொடிகளாவது காட்டவேண்டாமா என்று பயந்துகொண்டு, “இதுகளில் சிலதுகள்” கருப்புக்கொடி காட்டக்கூடும் ஆனால், “மஹாஜனங்கள்” ஆதரிக்கவே மாட்டார்கள். என்று அரசியல் உலகிலே நடமாடும் ‘அலறல்கள்’ பேசின.

திராவிட முன்னேற்றக்கழகம், தன் கடமையைச் செவ்வனே செய்தது எனவேதான், இந்த நிருபர்கள், ஓடோடிச் சென்று திவாகரைப் பேட்டி கண்டு, பேச நேரிட்டது.

இருட்டடிப்பு ஏளனம் சாபம்-எதுவும் ‘இதுகளை’ ஒன்றும் செய்யக்காணோமே, எங்கிருந்தோ கிளம்பி வருகின்றனவே படைகள் என்ற ஏக்கம், இந்த ‘பேட்டி’யை அவசியப்படுத்தி இருக்கிறது.
காரணமின்றி, அடி பலமா? என்று யாரும் கேட்கமாட்டார்கள் அதுபோலவே கருப்புக்கொடி கண்டு கருத்திலே அரிப்பு ஏற்படாமல் நிருபர்கள் இதுபற்றிப் பேசமாட்டார்கள்.

அடிபட்டிருந்தாலும் வெளியே சொல்ல வெட்கப் பட்டுக்கொண்டு ‘ஒன்றுமில்லை’ என்று பதில் கூறுவதுதானே உலக வழக்கம். அதே முறையிலே திவாகரும் பதில் கூறி இருக்கிறார் கருப்புக்கொடி கண்டு நான் கவலைப்படவில்லை என்று.

கருப்புக்கொடி காட்டும் காரியம், வெற்றிகரமாகவும் கோரிய பலன் கிடைக்கும் விதமாகவும் நடைபெற்றுவிட்டதால் திவாகர் கவலைப்பட வில்லை என்று எழுதுவதன“ மூலம், இதன் முக்கியத்துவத்தை மறைக்கலாம் என்று எண்ணுகின்றனர் அரசியல் ஏமாளிகள்.
சென்னை அறியும், அன்றைய சம்பவத்தின் அருமையை!

தினசரி கிடையாது நமக்கு-கருப்புக்கொடி நாள் குறித்து அறிவுப்புகள் தொடர்ந்து வெளியிட.

வசதி கிடையாது ஏற்பாடுகள் செய்ய.

நாட்கள் அதிகம் கிடையாது. இது குறித்துப் பிரசாரம் செய்ய
ஒரே ஒரு பொதுக்கூட்டம் அதுவும் பாதை ஓரத்தில் மேடை தான் போட முடிந்தது.

இந்த அளவுதான் முன்னேற்பாடு எனினும் அடைந்த வெற்றி, சோர்ந்த உள்ளங்களிலே புது உற்சாகத்தையும் விசை ஒடிந்த தேகத்துக்கு வன்மையையும் தருவதாக அமைந்திருந்தது.

ஆடவரும் பெண்டிரும், முதியவரும் இளைஞரும், மாணவரும் பாட்டாளிகளுமாக இன்று ஆர்வத்துடன் கலந்துகொண்ட காட்சியை எவரும் மறக்க முடியாது.

திவாகர் கவலைப்படவில்லையாம்! திவாகர் தீரர், ஆகவே கவலைப்படவில்லை என்று அவர் வீரத்துக்குச் சிந்து பாட்டும், அரசியல் பூனைகள் நமக்குக் கவலையில்லை.

கோயில்பட்டியிலே தீர்மானித்தோம் சென்னையில் செய்து காட்டினோம்!

வடநாட்டு மந்திரிக்குக் கருப்புக்கொடி காட்டுவது என்பது தொடர்ச்சியாக இனி நடைபெற்றுக்கொண்டுதான் இருக்கும்.

திவாகர்கள் கவலைப்டுகிறார்கள், இல்லையா, என்பதல்ல, நமது பிரச்சினை வடநாட்டு ஏகாதிபத்தியத்தை எதிர்க்கும் உரிமை உணர்ச்சி, அறிவாற்றல், செயல் திறம், திராவிடப்பெருங்குடி மக்களுக்கு இருக்கிறதா இல்லையா, என“பதே நமது பிரச்சினை! அதிலே நாம் மகத்தான வெற்றியைப் பெற்றிருக்கிறோம்.

ஊர் பேர் தெரியாத திவாகர் வருகிறபோதே, இந்த அளவு நாம் செய்துகாட்ட முடிந்தது இனி வடநாட்டு ஏகாதிபத்தியத்தின் மூலவர்கள் வருகிறபோது, அளவும் அழகும் எவ்வளவு இருக்கும். என்பதை எண்ணும் போதே, இதயம் களி நடனமாடுகிறது.

எஃகு கம்பிகளே! திராவிட ஏறுகளே! செயலாற்றிய செம்மல்களே! தீரத்தாய்மார்களே! உங்கள் பணி கண்டு, பெருமையடைகிறது திராவிடம் உங்கள் அறிவாற்றலின் துணைகொண்டு நடத்தப்பட இருக்கும் அறப்போரின் விளைவாக திராவிடத்தின் மீது பூட்டப்பட்டுள்ள தளைக் நொறுக்கப்பட்டு விடும் விடுதலை கிடைத்துவிடும் என்ற நம்பிக்கை ஏற்படுகிறது.

உங்கள் அனைவருக்கும் எமது நன்றி.

திவாகர் அறியார் திராவிடரின் உரிமைப்போர் உணர்ச்சியை அறிந்தாலும் வெளியே கூற மனம் இடம் தராதல்லவா!

நாம் அறிவோம்-நாடு அறியும்-அது போதும்
தொடர்ந்து பணியாற்றுங்கள்-வெற்றி நமதே!

(திராவிடநாடு 17.9.50)