அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


வெற்றி விழா!
முப்பது ஆண்டுகளுக்கு மேலாகப் பொதுமக்கட்கு, பரிதாபத்துக்குரியவர்கட்காகப் பேசித் தமிழரைத் தட்டி ஏழுப்த் தளராது உழைத்து, தாடி முளைக்காத காலத்திலே துவக்கிய அந்த அரும்பணியைத் தாடி வெளுத்துக் காட்சி தரும் இன்றுவரை அயராமல் ஆற்றிவரும் அஞ்சா நெஞ்சினர்.

எங்கும் எதிர்ப்பு! ஏத்திக்கிலிருந்தும் ஏகல்! மேடை ஏறினால் ஜோடிக் காளைகள் கூட்டத்துள் துரத்திவிடப்படும் துடுக்கர் கூட்டம்! கல்லடி! சொல்லடி! இவ்வளவுக்கும் இடையே நின்று எதிர்ப்பு கண்டு அஞ்சாது, ஏன் உரிமை ஏன் மனதிற் பட்டதைக் கூறுவது என்று ஏக்காளமிட்டு வரும் ஒரு இணையில்லாத் தலைவர்.

ரிஷியானாலும் என்ன, தவசியானாலும் என்ன, வழிகாட்டியானாலென்ன, வைகுண்ட வாசியானாலென்ன, வண்டவாளங்களை வெளியிட்டே தீருவேன், வந்தது வரட்டும், வறண்ட மதியினர் வந்தனம் செலுத்தமாட்டார்கள் என்பதற்காக, வஞ்சகரின் அடிபணிவதா அதுவா வீரத் தொண்டாற்ற விழைபவரின் கடமை? என்று சொல்லித் தியாகத் தீயிலே குதித்துத் தமிழருக்குப் புதுவாழ்வு தந்த தந்தை.

நாடு முழுவதும், நான்கு ஜாதிகள் நான்முகன் கட்டளை என்று நம்பி அதிலே திராவிட மக்களாம் நாம், நாலாம் ஜாதி பார்ப்பனருக்குச் சேவை செய்த் தோன்றயவர் என்று எண்ணி ஏமாந்திருந்த நேரத்தில் ஜாதி ஏதப்பா? அது எத்தர் செய்து வைத்த சூதப்பா! நான் சொல்வது தப்பா? என்று யோசித்துப் பதில் கூறப்பா! என்று முழக்கமிட்டு முறுக்கேற்றித் திராவிட முரசு ஒலித்திடச் செய்த ஒப்பற்ற தலைவர்.

எட்டுமுறை சிறை சென்ற தீரன், தமிழனின் தீரத்தைப் பாடி, ஆச்சாரியார் ஆட்சியைச் சாடி, சிறைச்சாலை சென்று அறுபதாம் ஆண்டிலே வெஞ்சிறை புகுந்த வெற்றிவீரன் வாலிபர் தோழன், வற்றாத பகுத்தறிவின் காவலன்.

இனத்தை அறியாது அதன் இயல்பும் தெரியாது, மதம் எதுவென்று உணராது, ஆரியர் மதத்தைக் கொண்டு மக்களை அடிமை கொண்டவிதம் தெரியாமல், நமது மக்கள், நினைப்பு கெட்டு, நிம்மதியற்றுக் கிடந்த நேரத்தில், வெள்ளத்தை எதிர் நீச்சால் கடந்து, வீரப்பணி புரிந்து, நம்மை நாம் உணரவும், நமது இனம் இதுவெனத் தெரியவும், அதன் விடுதலைக்குப் பாடுபடவும், அந்தப் போரிலே பிணமானாலும் சரி கவலையில்லை என்ற உறுதியை நாம் பெறவும் உழைத்த உத்தமன்.

மதகுருமார்களும், மடத்து அதிபரும் கோயில் குருக்களும் வக்கீல் ஐயரும் ஆளும் வர்க்கமும் ஒஸ்வரியும் பெற்றோரும் அவரை எதிர்த்தனர் ஆற்றல் அரண் அமைத்துக் கொண்டு அறிவெனும் வாளேந்தி உழைப்பெனும் புரவி ஏறித் தமிழகத்திலே உலவி ஆரியக் காட்டை அச்சம் தயை தாட்சணியமின்றி அழித்தொழிக்கும் பெரியார், தமக்கு எதிரிடையாக அமைக்கப்பட்ட எதிர்ப்பு மன்னணியைக் கண்டு, ஏஅகு உள்ளம் கொண்ட நமக்கு இந்த எதிர்ப்பு எம்மாத்திரம் என்றுகூறி, களத்திலே போரிட்டபடி மாண்டாலும் மாள்வேனேயன்றி கனபாடிகளின் காட்டுகூச்சலைக் கேட்டு, வீட்டுக்கோடி ஒளியமாட்டேன் என்று வீரமொழி புகன்று இனம் வாழ வழி அமைத்துத் தந்ôர். அவர் காணாத களம் இல்லை வெற்றி பெறாதா போரில்லை! வீணரின் ஊரை அவரை விரட்டியதில்லை.
அவருக்கு இக்கிழமை 68ம் ஆண்டு.

இந்தக் கிழமையை விழாவாக கொண்டாடும் தோழர்கள், பெரியாரின் பெருந்தொண்டினைப் பற்றிப் பேசிவிட்டுப் பெருமூச்செறிவர். ஏன்? இலேசாக நமது தோழர்கள் உள்ளத்திலேயே கூட ஒரு சந்தேகம் - கொஞ்சம் சஞ்சலம் உண்டு - அதாவது இந்த உழைப்பு, தக்கதோர் வெற்றியைத் தந்துவிட்டதோ, அல்லது சூதினரின் சூழ்ச்சியின் காரணமாக, உழைப்பு வீணாகி விட்டதா என்ற எண்ணம்.

பத்திரிகைப் பாராட்டுதல், பாமாலை, பூமான்களின் பவுன்மாலை, சர்க்கார் தரும் பட்டம் பதவிமாலை ஆகியவைகளை வெற்றிச் சின்னமெனக் கொள்வதாயின், பெரியார் வெற்றி பெற்றவரல்ல.,. ஆனால் வாலிப உள்ளங்களின் நன்றி கலந்த ஆபிஷேகமே வெற்றிக்கான சின்னம் எனில், பெரியார் பெருவெற்றியை நெடுநாட் களுக்கு
முன்னதாகவே பெற்றுவிட்டார் என்று திட்டமாகக் கூறலாம்.
சட்டசபைக்கு அழைத்துச் செல்லமாட்டார், பட்டம் வாங்கித் தரமாட்டார், பதவியில் நம்மை உட்கார வைக்கமாட்டார். பணம் காசு தரமாட்டார், ஒரு பாராட்டுரைக்கூட வழங்கமாட்டார் என்பதை அனுபவபூர்வமாகத் தெரிந்திருந்தும், ஆயிரமாயிரம் இளைஞர்கள் அவருக்குத் துணை நிற்பது - வேறு எங்கும் காண முடியாத அற்புதம் - பெரியாரின் பெரு வெற்றி அது. வாலிபர்களைத் தன்பக்கம் இழுத்துவிடும் ஓர்வகை ஆபின் இருக்கிறது அந்தக் குறுகுறுப்பான பார்வையிலே, கொச்சை மொழியிலே, பச்சை பட்டவர்த்தனமாக இருப்பதைக் கூறிடும் úப்சசிலே. இந்த ஆபின், எண்ணற்ற பத்திரிகைகளின் பிரசார பலத்தையும் விட மேலானது எத்தனையோ, வாலிபர்களை வாழ்க்கைப் பூந்தோட்டத்திலிருந்துத, போர்க்களத்துக்கு இழுத்து வந்து விட்டது.

பிற கட்சியாளர்கள், குறிக்கோள் மட்டும் கொண்டவர்களல்ல, நடைமுறைக்கான, அன்னாட வேலைத் திட்டமும் உடனடியாக நடத்தியாக வேண்டிய வேலைத் திட்டமும் உடையவர்கள். எனவே அவர்களுக்கு இலாப நஷ்டக் கணக்குப் பார்த்துக் கொள்ள அதற்கு ஏற்றபடி திட்டத்தைத்திருத்த, மாற்ற, புதுப்பிக்க வசதி உண்டு. பெரியார் துவக்கி நடத்திவரும் கட்சிக்கு, உடனடி வேலைத் திட்டம் என்று ஒன்றுமில்லை - உழைத்து உழைத்து மெருகேற்றி, அந்த மெருகு ஏறினதன் பலனாகப் பிறகு, சமூகமே ஓர் புதிய பயனுள்ள தோற்றம் அளிக்கவேண்டும் - இந்தக் குறிக்கோள் கொண்டவரானதால், அவ்வப்போது இலப நஷ்டக் கணக்கு பார்க்க முடியாது - வசதி கிடையாது, கதிர்தோன்று முன்புவரை, புல்லுக்கும் நெல்லைத்தரப் போகும் பச்சைக்கும், பார்க்கும்போது வித்யாசம் தெரியமுடியாதல்லவா! அதுபோல, கதிர்காணா முன், கணக்குப் பார்க்க முடியாது வெறும் பச்சை என்று எண்ணிடுவோர் ஏமாளிகள் - கதிர்முளைக்க வேண்டும், அதற்காகப் பயிரைக் கசக்கிப் பார்க்கவேண்டும் என்று நினைப்பவர், கோமாளிகள், பெரியாரின் உழவு முறையை மட்டும் தெரிந்து கொண்டால் போதாது, வயலிலே இருப்பது, ஆறுமாதப் பயிரல்ல, ஒரு தலைமுறைப் பயிர் பல தலைமுறைகளாகக் கறம்பாகிக் கிடந்த வயலிலே, உள்ள பயிர் ஆறுவடைக்குக் காலம் பிடிக்கும்!

இடைக்கால சர்க்கார்? நாம் இல்லை சட்டசபை? தொடர்பு இல்லை பத்திரகை பலம்? தத்தும் குழவிநிலை அமைப்பு? முடிச்சேறின கயிற்றின் நிலை, முறுக்கேறின கயிறல்ல., பிரச்சாரம்? காட்டுவெள்ளத்தின் முறை, கொள்கைள்? வேட்டுப் போடும் விதமானவை.

நாம் இவைகளை மறைக்கத் தேவையில்லை - சொல்வதிலே குற்றமில்லை - கூச்சமும் வேண்டாம். ஏனெனில் இத்தனை சஞ்சலத்துக்கும், அப்பால், நாம் சந்தோஷப்படும் அளவுக்கு நமக்கு வெற்றி இருக்கிறது.

இவ்வளவு இடையூறுக்கிடையே நாம் பணியாற்ற முடிந்தது.

இடையூறுகள் ஒழிந்தால்? எண்ணும் போதே, பெருமூச்சு புன்னகைக்கு இடம் தரும். எண்ணிப்பாருங்கள்!

நாம் மேற்கொண்ட வேலை, ஆயிரங் காலத்துப் பயிர் என்பார்களே, அதுபோன்றது, எனவேதான், உடனடியாகக் கண்ணுக்குத் தெரியக்கூடிய, மற்ற கட்சிகாரர்கள் காட்டுவது போன்ற, அன்றாட வெற்றிகள் நமக்கு இல்லை. ஆனால் நாம் அடைந்துள்ள வெற்றி, கறம்பைத் திருத்தி வயலாக்கி இருக்கிறோம் - ஆம்! - சூழ்நிலையை மாற்றி இருக்கிறோம் - எதிரிகள் என்று நாம் தவறாக எண்ணிக் கொண்டிருக்கும் பலர் நமது கொள்கைகளின், வக்கீல்கள்! நீ மட்டுந்தானா? நான் என்ன ஆரிய அடிவருடியா? உனக்குத்தானா சீர்திருத்த ஆர்வம்? நாங்களென்ன குளத்தங்கரை குப்பன்களோ! உனக்குத்தானா சுயமரியாதை வேண்டும்! நாங்கள் அதனை விரும்பாதவர்களோ? நீ மட்டுந்தானா வடநட்டின் படை ஏடுப்பைத் தெரிந்து கொண்டவன்? நாங்கள் அறியமாட்டோமா? இவைகள் காங்கிரஸ் - கம்யூனிஸடு வட்டாரங்களில் இருந்து கிளம்பும் வார்த்தைகள் வார்த்தைகளை வீசிவிட்டுக் கூடவே இரண்டோர் கற்களையும், தீப்பந்தம், திராவகம், கத்தி முதலியவற்றையும் கூடத்தான் வீசுகிறார்கள், ஆனால் சூழ்நிலை மாறிவிட்டது, கொள்கைக்கு அவர்களும் ஒப்புக் கொண்டனர், என்பதைத்தானே இந்நிலை காட்டுகிறது, இது பெரியாரின் பெருவெற்றி. எனவே, நண்பர்கள் ஆயாசப்படவோ, எல்லாம் சரி, ஆனால் எங்கே பலன் என்று கேட்கவோ தேவையில்லை.

அதுவே, பெரியார் வார விழா கொண்டாடும் அன்பர்களுக்கும் நாம் தரும் செய்தி.

வெற்றி பெற்றாயிற்று. பெரியார் பெருந்தொண்டு பயன் தந்தாகிவிட்டது - என்று உறுதியுடன் கூறலாம் - மகிழ்ச்சியுடன் சொல்லலாம். பெரியாருக்கு உள்ம் கனிந்த நன்றியைத் தெரிவிக்கலாமே, தெரிவிப்பதுடன், பெரியாரே! தாங்கள் அரும்பெரும் உழைப்பினால் உண்டாக்கி வைத்த சூழ்நிலையை நாங்கள் இனிப்பயன்படுத்துவோம். தங்களுக்கு மேலும் úலும் தொல்லை நிறைந்த வேலை தரமாட்டோம். இந்தச் சூழ்நிலையை ஏற்படுத்தத் தங்கள் ஒருவரால் மட்டுமே முடியும். உண்டாக்கினீர்கள். இனி நடக்க வேண்டிய காரியம், கிடைத்த சூழ்நிலை கெடாதபடி பாதுகாத்துக் கொள்வதுடன் அன்றாட வேலைகள் உடனடித் திட்டங்கள் ஆகியவற்றைச் செய்வது அதனை நாங்கள், தாங்கள் மகிழும் வண்ணம் செய்து முடிப்போம் என்று உறுதிகூறி, அவருக்கு மனதில் வெற்றிகிட்டி விட்டது இனிவேலை நடக்கும்! அதற்கான அருமை மக்கள் உள்ளனர். என்ற மகிழ்ச்சியுடன் கலந்த நம்பிக்கை பிறக்குமாறு செய்திடுவதுதான் பெரியார் வார விழாவின் முக்கியமாக நோக்கமாக இருக்கவேண்டுமே. தவிர விடுதலை குறிப்பிட்டது போலவோ, தோழர் ஆர்ஜ÷னன் அவர்களின் அறிக்கையைப் போலவோ, நிதி அல்ல முக்கியமானது. இன்னமும் நமது செவியில் ஒலித்தபடி இருக்கிறது திருச்சியில் திரண்டு வந்த 40 ஆயிரம் மக்களும் சந்தோஷத்தால் நர்த்தனமாடும் விதமாகப் பெரியார், அப்படியும் இப்படியுமாக, வீடு வாங்கியும் அதனையே இலாபத்துக்கு விற்றும், செட்டாகச் செலவு செய்தும், இப்படி எல்லாம், கொஞ்சம் பணம், ஒரு பத்து நாற்பது ஆயிரம் ரூபாய் சேர்த்துதான் வைத்திருக்கிறேன். யாருக்கு? கட்சிக்குத்தானே! என்று கூறினதும், அதுகேட்டு மக்கள் ஆனந்த ஆரவாரம் செய்ததும். ஆகவே, கட்சிக்கு நிதி திரட்டித்தான் ஆகவேண்டும், பெரியார் விழாவின் முக்கிய வேலை அதுதான் என்று நிதியை முன்னணியில் நாம் நிறுத்தவில்லை - நாம் கூறுவது - நாம் வெற்றி பெற்றிருக்கிறோம். - வீணுக்கு உழைத்தோமில்லை - விசாரப்பட வேண்டியதில்லை - என்பதை விளக்க வேண்டும், என்பதுதான்.

அது மட்டுமல்ல, நாம் பெரியாரின் பெருந்தொண்டின் பலனைப் பெற்று, சூழ்நிலையை மாற்றிக் கொண்டோம். இனி சூழ்நிலையை மாற்றும் வேலை மட்டுமல்ல நமக்கு வோறோர் கட்டம் ஆரம்பமாகிறது நமது இயக்கத்துக்கு என்பதை அறியவேண்டும்.

சுரங்கத்திலிருந்து, சிரமப்பட்டு, தங்கத்தைத் தோண்டி எடுத்தாகிவிட்டது. பெரியாரின் பெருவெற்றி அது. எடுத்துப் பார்க்கும்போது, பாறை போலத்தான் தோன்றும். அடுத்த கட்டம், வெட்டி எடுக்கப்பட்ட பாறை உருவில் உள்ளதை ரசாயன, விஞ்ஞான முறைப்படி, உடைத்து பிரித்து துடைத்துத் தங்கம் என்று சகலரும் தெரியும்படிச் செய்வதுடன் அதனால் பயனுள்ள பணிகள் செய்து காட்ட வேண்டும். சுரங்கத்திலிருந்து பொன்னை வெட்டி எடுத்து வரும் காரியம், ஆபத்தானது, சிரமமானது, அதற்கு அலாதியான திறம் முறைவேண்டும், கருவிகளும் அதற்குத் தனி, பெரியாரிடம் இவைகளுக்கான திறம் ஏராளம் - எனவே, அவரால் முடிந்தது - நமது நன்றி அதற்காக.

ஆனால் வெட்டி எடுத்துக் கொண்டு வந்த தங்கத்தை பதம் செய்ய, பக்குவம் செய்ய, முறை கருவிவேறு செய்ய வேண்டிய பொறுப்பையும் பெரியாரிடமே தருவது நமது கையாலாகாத் தனத்தைக் காட்டிக் கொள்வதாகும் - மீண்டும் மீண்டும் மேலும் மேலும் சுரங்கம் தோண்டும் வேலையையே செய்யும்படிப் பெரியாரைத் தூண்டிக் கொண்டிருப்பதும், நன்றி கெட்ட செயலாகும்.

எனவே விஞ்ஞான ரசாயன முறைப்படி, பாறை உருவிலுள்ள பொன்னைப் பதமாக்கும் பணியை மற்றவர்கள் மேற்கொள்ள வேண்டும். மேற்கொள்ளும்போது, சுரங்க வேலைக்காகப் பெரியார் கையாண்ட அதே முறைகளும், கருவிகளும் இருக்கவேண்டுமென்று எண்ணுவது, கிடைத்த பொற்கட்டியைக் கெடுக்கும் விதமாக முடியும். முறையும் கருவியும், வேறுதான் இதற்கு இதனை உணர்ந்து, புதுப்பணியினை மேற்கொள்வோம், நீர் கவலையற்று. களிப்புடன், நம்பிக்கையுடன் எங்கள் வேலையைக் கவனித்துக் கொண்டு, தட்டிக் கொடுத்துக் கொண்டு பெருமையுடன் எங்களைப் பார்த்துக் கொண்டு இருங்கள் என்று இந்த விழாவன்று நாம், பெரியாருக்குக் கூறவேண்டும். அதுவே அவருக்கு நாம் காட்டவேண்டிய மரியாதை முறையாகுமேயொழிய, மேலும் மேலும் போராட்டம் வருகிறது - பெரியார் நம்மை நடத்திச் செல்வார் - என்று இன்றும் கூறி, அவருக்கு இந்த வயதிலும், சுரங்க வேலையும், சூறாவளியிலும் உழலும் வேலையும் தந்து, மேலும் அவருடைய உழைப்பை உறுஞ்சும் காரியத்தில் இறங்குவதாக இருக்கக் கூடாது.


ஒரு பெரிய இயக்கம், பல பத்திரிகைகளின் துணையுடன், கட்டுக்கோப்புள்ள விதமாக உள்ள அமைப்பின் பக்க பலத்துடன், சாதிக்கக் கூடியதைவிட, மேலான, மகத்தான வெற்றியை, சூழ்நிலையை மாற்றி அமைக்கும், அடிப்படைக் காரியத்தைப் பெரியார் ராமசாமி தமது 30 ஆண்டு தொண்டினால், பெற்றார் - நமக்கு அளித்தார் - அதனால் நாம் பயன்பெற்றோம் - நமது நன்றி அறிதலைத் தெரிவித்துக் கொள்கிறோம், பணிவும் அன்பும் கலந்து.

(திராவிட நாடு - 29-9-46)