அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


வெட்டுப் போர்!

``ஆளுக்கொரு கத்தரிக்க்கோல்! மற்றொரு கரத்திலே ஈரத் துணி. இரண்டுடனும், தெருக்கோடி, திருக்கோயில் குளத்தங்கரை, மடம், சத்திரம் ஆகிய இடங்களிலே நிற்க வேண்டும். ஒரு வெட்டு! ஒரு துடைப்பு! ஒழிந்தது பீடையின் அறிகுறி, பேதைமைச் சின்னம், பிளவை உண்டாக்கும் வளைவுகள், வைதீக விளம்பரம், இனச் செருக்கு, ஆரிய அழுக்கு!’’

வீரன், சற்றுக் கோபத்துடன், காரசாரமாக இதைக் கூறிக் கொண்டு என் எதிரே நின்றான்.

யாரோ, ஏதோ விஷமம் செய்து விட்டார்கள் என்று எனக்குத் தெரிந்து விட்டது. விஷமம் செய்யாதவரையிலே, வீரன் வெளி வருவதில்லை. வேட்டை கிடைத்தாலோ அவனுக்கு விட்டுவிடும் வழக்கமுமில்லை. எனவே, ``யாரப்பா, வீரா, வம்பு செய்தார்கள்? என்ன நேரிட்டது?’’ என் கத்தரிக்கோல்!’’ என்று நான் கேட்டேன்.

``ஓஹோ! கத்தரிக்க்கோல் என்றதும், கேலியான நினைப்புக் கொண்டாயா, பரதா! நான் கேட்பது நீ நினைப்பது போல, ``சைனா பஜார் வேலைக்கு அல்ல’’ என்று கூறி சிரித்துவிட்டு, ``ஒரு புதுப்போர் ஆரம்பிக்க எண்ணுகிறேன். அதற்கே இந்த ஆயுதபாணிகள் தேவை!’’ என்றான்.

``புதுப் போரா?’’ என்று நான் கேட்டேன். ``ஆமாம்! நாம் போர் தொடுக்காமல் இருப்பதால், வலிய நமக்கு அழைப்பு விடவும் வந்துவிட்டார் கள். நோட்டுகளிலே, கண்டதை எழுதுகிறார்கள் என்பதைத் தடுக்க, சர்க்கார், கண்டிப்பாக, கோணல் புத்திக்காரரின் கீறல்கள் இருக்கும் நோட்டுகளை ஒப்புக்கொள்ள மாட்டோம் என்று கூறி விட்டார்களல்லவா! அது குறித்து, எழுதிற்று ஆனந்த விகடன். ஆனால், சர்க்கார் மீது பாயத் தொடங்கி, நம் மீது பாய்ந்துவிட்டது. நீ, ஏதோ, ஆனந்த விகடன், அரசியல் நிருபராக மட்டுமே குரங்கை அமர்த்திக் கொண்டிருப்பதாகக் கூறினாய். சேட்டை தவிர வேறு சரக்கு ஆனந்த விகடனுக்கு ஏது? சர்க்கார் நோட்டுகள் சம்பந்தமாகப் போட்டுள்ள புது உத்தரவை மீறி, நோட்டுப் போர் ஆரம்பிக்க வேண்டுமாம். யார்? இந்தி எதிர்ப்பாளர்கள், நாம். கேட்டாயா, கேட்டை, மூட்டை கேது ராகு செய்யும் கேலியை, அதற்காகத் தான், தம்பி விகடா! போரிட நாங்கள் காகிதக் கோடல்ல. புதிதான போர் தொடுக்கிறோம். பூசுர கூட்டம் புனிதமானது என்று கருதிக் கொண்டிருக்கும் அந்த உச்சிக் குடுமி மனதிலே மமதையைப் புகுத்தும் மார்பிலே புரளும் முகவரி. இரண்டையும் கண்டு கபடத்தின் குறி இவை என்பதை உணராது, மக்கள் கைகட்டி, வாய் பொத்தி நிற்கின்றனரே அந்தச் சின்னங்களைக் கத்தரிக்கோல் கொண்டு, அறுத்திடவும், நெற்றியிலே நீட்டிக் கொண்டுள்ள மதக் குறிகளை ஈரத்துணி கொண்டு அழித்திட வும் ஆளுக்கொரு கத்தரிக்கோலும், ஈரத்துணியும் வைத்துக் கொண்டு போர் களங்களிலே நிற்க ஒரு காலம் வருமானால், உஞ்சி விருத்திக் கூட்டம் ஊளையிட்டுக் கொண்டு ஓடாதா என்று கேட்க என் மனம் துடிக்கிறது என்று வீரன் கூறிட, விலா நோகச் சிரித்தான். இதுதான் புதுப் போர்த் திட்டமா என்று கேட்டேன். ஏன், இதற்கென்ன சரியில்லையா? குதிரைவால் போல், குடுமி தொங்கிக் கொண்டிருக்கத்தான் வேண்டுமா? சூடிட்ட மாடுகள் போல, நெற்றியிலே குறிகள் இருக்கத்தான் வேண்டுமா? இவைதான் நாகரிகமா? ஆப்பிரிக்கா நாட்டு நீக்ரோக்கள், முகத்திலே பலவர்ணங்களைப் பூசிக் கொண்டு கழுத்திலே எலும்புகளையும், மிருகத்தின் பற்களையும் கோர்த்து மாலைகள் போல் கட்டிக் கொண்டிருப்பதை, அநாகரிகம், காட்டுமிராண்டித் தனம் என்று அறிஞர்கள் கூறவில்லையா! அவர் களின் செயலுக்கும், அரகர மகாதேவா என்று கூறி உருத்திராக்கமாலை அணிவதற்கும், ரகுபதிராகவ ராஜாராம் என்று கூறி துளசி மாலை அணிந்து கொண்டிருப்பதற்கும் என்ன வித்தி யாசம் இருக்கிறது, நீதான் சொல்லு கேட்போம். இத்தகைய வேடங்கள் புனையாவிட்டால், ஈசனருள் கிட்டாதாமே! இதை நம்ப வேண்டுமாம். இதற்குப் பெயர் பக்தியாமே! புத்தியுள்ளவர்கள் இதைப் போற்ற முடியுமா? என்று வீரன் வெகுண்டு விட்டு, மேலும் சொன்னான், வெட்டுப் போர் ஆரம்பிக்க வாரீர் என்று நம்மவரைப் பார்த்து அந்த `தோ நேக்குகள்’’ நையாண்டி செய்கிறனவே, அதுகளின் போக்குமாற, இத்தகைய புதுப் போர் ஆரம்பிக்கதானப்பா வேண்டும். சமயம் வரட்டும் என்றுதான் பார்த்துக் கொண்டிருக்கிறேன். சீனாவிலே, ஆண்கள், சீவி... தலைவாரி, ஜடை போட்டுக் கொண்டுதான் வெளியே வருவார்கள். அந்த ஆபாசத்தை விட்டு விடச் சொல்லி சீன அறிஞர்கள், எவ்வளவோ இதமாக எடுத்துச் சொல்லித்தான் பார்த்தார்கள். கேட்கவில்லை! சீர்திருத்த சிங்கம் சன்-யாட் சென் இதமாகக் இடித்தும் கூறினார். அவருடைய சீடர்களும் எவ்வளவோ முயன்றும் ஜடை போடுவதை சீனர்கள் கைவிடவில்லை. பிறகு ஆளுக்கொரு கத்தரிக் கோலுடன் வீதியில் சிலர் கிளம்பினர். ஜடை போட்ட சீனன் நடந்தால், ஜடையைப் பிடித்து இழுப்பாராம். ஒரு சடக் ஜடை போகும் பத்து நூறு, இடங்களிலே இது நடந்தது ஜடை போடும் வழக்கம் சொல்லாமல் ஓடிவிட்டதாம். அதுபோலவே இங்கும் முடியும் என்று வீரன் கூறினான்.

``தம்பீ வீரா! உனக்கிருக்கும் ஆர்வத்திலே- சட்டத்தை மறந்து விடாதே’’ என்று நான் எச்சரித்தேன்.

``சட்டத்தை மீறித் தானோ நோட்டுப் போர் நடத்த வாரீர் என்று சவுண்டிகள் நம்மை அழைக்கின்றன. சட்டத்தை மீறிக் காரியம் செயலாற்றினால், இந்தச் சனாதனக் கொடுக்கும் வெட்டும் காரியத்தைத்தான நாம் செய்ய வேண்டும். ஆகவே, நீ தெரிவித்துவிடு, இந்தி எதிர்ப்பாளர்களின் அடுத்த போர், நோட்டுப் போராக இராது, வெட்டுப் போராக இருக்கும் என்று, என் வீரன் விளம்பினானா ``எனக் கேனப்பா வீண் வம்பு! நீயே போய்க்கூறு’’ என்று நான் சொல்லி தப்பித்துக் கொண்டேன். வீரன் ``வெட்டுப் போர்’’ அறிக்கையை என்றும் வெளியிடுவானோ தெரியாது!

(திராவிட நாடு - 22.11.1942)