அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


விபரீதப்பாதை

ஆதிக்க வெறி! இந்தப் பாதையில் சென்றோர். வீழ்ச்சியைக் கண்டதாகச் சரித்திரம் சாற்றுகிறது!

மக்களின் அதிருப்திப் புயல் முன் ஆதிக்கக்காரர்களின் ஆணவமும், வீண் கர்வமும், பட்டழிந்தனவே யன்றி, துளிர்த்ததில்லை.

இந்த உண்மையை, நன்கு தெரிந்தவர்கள் காங்கிரஸ் கட்சியினர் என்று நம்பியிருந்தோம். ஏனெனில், வெள்ளை ஆதிபத்தியத்தின் அஸ்தமிப்பைத் தங்கள் கண்ணுக்கெதிரே கண்டவர்கள் அவர்கள் என்பதால்.

ஆனால் ஆட்சிப் பீடத்தில் அமர்ந்தது முதல் அவர்கள் நடந்து செல்லும் பாதையைக் காணும் போது, அந்த உண்மையை உணராதவர்கள் மட்டுமல்ல; உன்மத்தப் பாதையில் உருண்டு சென்று சரிந்த அரசுகளின் பட்டியலில் தங்களது ஆட்சிக் காலத்தையும் பொறித்துக் கொள்வார்களென்றே தோன்றுகிறது.

தடியடியும் துப்பாக்கியும் நல்லாட்சியில் தேவைப்படா அன்பும் அதனால் வரும் அமைதியும் தான். அவர்கள் ஆட்சியை நடத்திச் செல்லுமே யொழிய அட“டகாசமும் ஆவேச வெறியும் அவர்கள் மத்தியில் மலராது மணக்காது.

ஆனால் இங்கோ! நல்லாட்சி என்ற அறிகுறி இல்லாதது மட்டுமல்ல; பொல்லாத ஆட்சி என்ற “புகழை”யும் அதிகரித்துக் கொண்டேயிருக்கிறது காங்கிரஸ் ஆட்சி.

மக்களைத் தடியடியால் தாக்குவதும் துப்பாக்கிகளால் மிரட்டுவதும் தங்களது அதிகார அம்புகளை ஏவி, விரட்டுவதுமாக விபரீதப் பாதையில் இவர்கள் செல்லும் வேகத்தைக் காணும்போது வேதனையும் சிரிப்பும் கலந்து வருகிறது நமக்கு.

பசுவைப் பாம்பு என்று கருதுவோனை ‘பார்வை பழுதானவன்’ என்று சொல்வார்கள்.

பாதை வழியே செல்பவன் மீது பாய்ந்து தாக்குபவனை ‘வெறியன்’ என்று அழைப்பார்கள்.

மல்லிகைத் தோட்டத்துள் புகுந்து மலரையும் செடிகளையும் மிதித்துக் குதிப்பவனைக் கண்டால், “பைத்யம்! பைத்யம்!!” என்று கூறத் தோன்றும்.

‘இந்த ரகத்தில் எந்த ரகமோ ‘இவர்கள்!’ என்று கண்டுபிடிக்க முடியவில்லை நம்மால்.

வீண் கர்வத்தோடு திரிவதும், வீம்பை விலைக்கு வாங்குவதும், கனியை விஷம் எனக்கருதுவதும், விபரீதத்தையும் விபத்தையும் தரும்.

நிலவை, நெருப்பெனக் கருதிக் கொண்டு குதித்துக்கூத்தாடு கின்றனர்! கையில் அதிகாரம் இருக்கும் காரணத்தால் மனம் போன போக்கில் தங்களது அதிகார அம்புகளின் மூலம், அடாது செய்கிறார்கள். அடக்குமுறை! அடக்குமுறை!! என்று ஆணவத் தர்பார், நடத்துகிறார்கள்.

என்.வி.நடராசன்
கே.கோவிந்தசாமி
வி.முனுசாமி
ரத்தினம்

நமது கழகத் கண்மணிகளான இந்நால்வரும் சிறையிலே வாடுகிறார்கள்! சென்னைச் சிறை, இந்த சிங்கங்கள், உலவுமிடமா கியிருக்கிறது.

தோழர் என்.வி.நடராசன்-திராவிட முன்னேற்றக் கழகத்தின் அமைப்பாளர். ‘திராவிடன்’ வார இதழின் ஆசிரியர். பொறுப்புள்ளவர் அவரது புன்னகையும், பொதுப் பணியில் காங்கிரசிலிருந்த நாள் முதல் இன்று வரை அவர் கொண்டுழைக்கும் ஆர்வமும், மக்கள் மத்தியிலே அவரை மாவீரனாக ஆக்கியிருக்கின்றன! அந்த மாணிக்கத்தைச் சிறையிலே போட்டிருக்கின்றனர்.

தோழர் கே.கோவிந்தசாமி சென்னை மாவட்டத் திராவிட முன்னேற்றக் கழகத்தின் செயலாளர்-அவரது உருவம் அன்பின் சிகரம்! பிறர் மனதுக்குச் சிறிது சங்கடம் ஏற்பட்டாலும் துவண்டுவிடும் சுபாவம் அவருடையது. கண்ணியம்-நேர்மை இவையிரண்டுமே, அவருடைய கண்கள். அத்தகைய சாத்வீக வீரரையும் தள்ளி பூட்டியிருக்கின்றனர்!

தோழர் வி.முனுசாமி-சென்னை கார்ப்பரேஷனில் கவுன்சிலர் சென்னை மக்களால் தேர்ந்தெடுத்து அனுப்பப்பட்டவர். அதிலும் பலமும் சக்தியும் வாய்ந்த ‘பழம்புலி’ யாம் ஒரு காங்கிரஸ்காரரை எதிர்த்து வெற்றி கண்ட வீரர் அவர்! எப்போதும், ஏதாவது தன்னால் செய்ய முடியுமா பொது மக்களுக்கு, என்ற ஆர்வத்தோடு, பணிபுரிபவர். அவரையும் நெஞ்சிலே உரமும், நேர்மைத் திறனும் கொண்ட நமது கழகக்காளையான தோழர் ரெத்தினத்தையும் கொண்டுபோய்ப் பூட்டி வைத்திருக்கிறது. இந்த ஆட்சி.

பொறுப்பானவர்களைக் கொண்டு போய்ப் பூட்டி வைத்திருக்கிறது!

தீரர்கள்-சிறையிலே கிடக்கின்றனர்.

பொறுப்புள்ள, பொதுமக்களின் தொண்டர்கள், பூட்டப்பட்டு விட்டனர், சிறைக்குள்.

மாகாண அமைப்பாளர்.
சென்னைச் செயலாளர்.
சென்னை நகரப் பிதா

ஆகியோரை காராக்கிரகத்திலே தள்ளி வைத்திருக்கிறது. காங்கிரஸ் ஆட்சி.

அரசாங்கத்தைக் கவிழ்க்க இவர்கள் சதி செய்யவில்லை. இப்போதிருக்கும் சர்க்கரை மாற்றிவிட்டு வேறு சர்க்கார் அமைக்கப் புறப்படவில்லை அமைதியான முறையில், தங்கள் அதிருப்தியைக் காட்டச் சென்றார்கள்.

அதற்கு-சிறைவாசம் பட்டினி தரும் மந்திரி முன்ஷிக்குக் கருப்புக் கொடி காட்டச் சென்றதற்கு பரிசு சிறைச்சாலை!

பிப் 1 ந் தேதி சென்னைக்கு வந்த டில்லி மந்திரி முன்ஷிக்குக் கருப்புக்கொடி பிடித்தோர்-பல்லாயிரக் கணக்கானோர். ஆனால் ஏழு வீரர்களை மட்டும் பிடித்துச் சென்றிருக்கின்றனர், சிறைச்சாலைக்கு.

செல்வக்கண்ணம்மாள், எம்.ஆர்.பாண்டியன், முத்துசாமி முதலானோரையும் பிடித்துச் சென்று வழக்குப் பதிவு செய்து கொண்டு விட்டுவிட்டனர்.

கருப்புக்கொடி காட்டச் சென்ற வீரர்கள் மீது வழக்கு வீரர்கள் அமைதியோடு நடந்து கொள்கிறார்களா என்று கண்காணிக்கச் சென்ற தலைவர்களுக்குச் சிறைவாசம் வழக்கு!

விசித்திரமான காட்சி! விபரீதம் நிரம்பிய போக்கு!

சிறையிலே உலவும் நமது, செயல் வீரர்கள், எதையும் தாங்கும் இதயம் கொண்ட மக்களின் மாணிக்கங்கள் அவர்கள் ஆர்வமும் பொதுச் சேவையும் இந்தச் சிறைக் கம்பிகளால் தீப்போல வளருமே யொழிய, தணியாது! அணையாது!!

வாழ்விழந்து கிடக்கும் தங்கள் இன விடுதலைக்காகத் தங்களைத் தத்தம் செய்துவிட்ட அம்மாவீரர்களை எந்த ஆதிக்க வெறியும், எதுவும் செய்துவிட முடியாது. திராவிடக் காளைகள் வெற்றியின் செல்வர்கள் எதிர்காலத்தின் சிருஷ்டிப் புருடர்கள்!

இதை, வெறிப்பாதையில் வேகமாகச் செல்லும் சர்க்கார் உணர வேண்டும்.

“அமைதியான முறையில் பொதுப்பணி, செய்வது கூட பிடிக்கவில்லையா-இந்த அகிம்சாவாதிகளுக்கு?” என்று நாடு கேட்கத் துவங்கிவிட்டது.

இந்தக் குரலொலி சாதாரணமானதல்ல இதை உணரவேண்டும் இந்த ஆளவந்தார். வெறிப்பாதை செல்வது, இவர்கள் எதிர்காலத்தைப் ‘புலியின் வாய்க்குள்’ தள்ளுவது போலாகும். வீழ்ந்த ஜார், மறைந்த லூயி, ஒழிந்த ஹிட்லர், மடிந்த முசோலினி ஆகிய ஆதிக்க வெறியர்களின் “கதி” ஏற்படுவது, எளிதல்ல, ஆதிக்கப் பாதை செல்வோருக்கு அது, வெகு விரைவில் கிடைத்து விடும்.
அந்தப் பாதை-பொல்லாதது.

இதை இந்த ஆட்சியாளர் உணர்வது, நல்லது நிலைமை மோசமாகுமுன்.

(திராவிடநாடு 11.2.51)