அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


விஞ்ஞான விளைவு
விஞ்ஞானமென்பது மக்களுடைய பஞ்சேந்திரியங்களாகிய மெய், வாய், கண், மூக்கு, செவிகளாலும் பாஷையாலும் மக்கள் அடைந்துள்ள அனுபவமென்று கூறலாம். மக்காளகிய நாம், பிரபஞ்சப் பொருள்களாகிய சேதன (உயிருள்ள) அசேதனப் (உயிரற்ற) பொருள்களில் ஒன்று. பிரபஞ்சமென்பது, சேதன, அசேதனப் பொருள்களை உடையது. இக்திபாதி பிரபஞ்சத்தில் நாம் ஒன்று. இந்தப் பொருள்களைத் தவிர, வேறு எந்தப் பொருள்களாகிலும் உண்டோவெனில், அது நமக்குத் தெரியக் கூடியவை அல்ல. ஏனெனில், நமது புலன்களுக்கும், நாம்பேசும் பேச்சுக்கும் அதீதப்பட்ட ஏதாகிலும் இருந்தால், அவைகளைத் தெரிந்து கொள்ள நமக்கு வழி யாதேனுமில்லை. நாம் அடைந்துள்ள ஞானமெல்லாம், நமது புலன்களுக்குத் தோன்றும் பொருள்களும், அவைகளுக்கு நாம் கொடுக்கும் பெயர்களும் அடங்கிய ஞானமே யொழிய, வேறு எந்த ஞானமுமில்லை. ஆதலின், பிரபஞ்சத்தைத் தெரிந்து கொள்ள வேண்டுமானால் நமது புலன்களால் தான் தெரிந்து கொள்ள முடியும். எனவே, நமக்குத் தெரிந்திருக்கும் பிரபஞ்சத் தைப் பற்றிய ஞானமெல்லாம் நமது புலன்களால் தெரிந்து கொண்டவைகளே. ஒரு வேளை நமது புலன்களுக்கத் தோன்றா விடில் சிற்சில கருவிகளைக் கொண்டு தெரிந்து கொள்ளு கின்றோம். எந்த இயந்திரங்களைக் கொண்டு பிரபஞ்சத்தைத் தெரிந்து கொண்டாலும், கடைசியில் புலன்களால்தான் அறியக் கூடும். ஆகையால், நமக்கு இது வரை பிரபஞ்சத்தைப் பற்றித் தெரிந்துகொண்ட விஷயமெல்லாம், புலன்கள் மூலமாகவும் அவ்விதமாகத் தெரியவந்து வஸதுக்களை அழைக்கு பெயர்களாலு தெரிந்து கொண்ட ஞானமே. மனத்தால் வந்த ஞானம் என்றாலும், பக்தியால் வந்த ஞானமென்றாலும், அதுஞான மாகா ஏனெனில், இவ்வித ஞானமென்று கூறுவதெல்லாம் வெறும் சொற்களாக முடிகின்றனவேயொழிய, ஞானத்திற்கு எந்தப் பொருளும் இல்லை. புலன்களுக்குத் தோன்றாத பொருள்கள் இருக்குமாயின், எந்தக் காலத்திலாகிலும் அந்தப் பொருள்கள் உண்மையில் இருந்தால், அவை புலன்களுக்குத் தோன்றவேண்டும். புலன்களுக்குத் தோன்றும் பொருள்களைப் பற்றியும், தோன்றப்போகும் பொருள்களைப் பற்றியும், நாம் அடைந்த ஞானமொன்றேதான் மெஞ்ஞானமென்று அழைக்கப் படும். மதங்கள் கூறும் ஞானம் என்பதும், தத்துவங்கள் கூறும் ஞானமென்பதும் வெறும் சொற்களே ஒழிய வேறல்ல. இவ்வித மத, தத்துவ ஞானங்களால் மக்களுக்கு யாதொரு பயனும் விளைந்ததாகக் கூற இடமில்லை. ஆனால், மெய்ஞ்õனத்தால் அடைந்த பிரபஞ்ச ஞானத்தால் மக்களுக்கு விளைந்த நன்மைக்கும், விளையப்போகின்ற நம்மைக்கும் கணக்கே இல்லை. அதன் பலனையும் சுருங்க விளக்குவோம்.

ஆதிமனிதன், மிருகமாய் இருந்த காலையில். நெருப்பின் உபயோகத்தையும், குளிரைப் போக்க ஆட்டு மயிரின் உபயோகத் தையும் தெரிந்து கொண்டவனல்லன். இதன் உபயோகங்களைத் தெரிந்த பிறகே, மனிதனாக மாறிவர இடங்கொடுத்தது. இது மனிதன் அடைந்த ஆதி விஞ்ஞானம். ஆதியில் வில், அம்பு, கத்தி, அரிவாள் முதலிய ஆயுதங்களைக் கண்டுபிடிக்க, பகைகளாகிய கொடிய மிருகங்களை வென்று வந்தது ஆதிவிஞ்ஞானத்தால் என அறிதல் வேண்டும்.

உழுது பயிரிடுவதற்குக் கலப்பை முதலிய கருவிகளைக் கண்டுபிடித்தது மூலமாகவே நாகரிகமேற்பட்டது. நாள் முழுமையும், கையால் கீறிக்கொண்டு சொற்ப விளைவுகளைக் கொண்டு எட்டும் எட்டாத உணவை உண்டாக்கிக் கொண்டிருக்கதிலிருந்து......................... விளைவித்து வந்த படியால், ஓய்வும், அவகாசமும் ஏற்பட்டு, வேறுவித வேலைகளைச் செய்யவும், பிரபஞ்சத்தின் இரகசியங்களைத் தெரிந்துகொள்ளவும் வழி பிறந்தது. ஆதிமனிதன் ஆதியில் அடைந்த விஞ்ஞானங்களில், பயிரிட்டு உண்ணும் ஞானம் மிக முக்கியமானதாகும்.

‘கட்டை மிதக்கும்; கட்டையை ஒரு பக்கம் சுரண்டி பள்ளமாக்கினால் படகாகும், ஓடங்களையும், கப்பல் தோணி களையும், புகைக்கப்பல்களையும் உண்டாக்கினர். உலக யாத்திரைக்கு வசதிகள் உண்டாயின். வர்த்தகமும் வளர்ச்சி அடைந்தது.

தண்ணீரை நெருப்பில் காய்ச்சினால், அது ஆவியாகுமென்ற ஞானத்தால் ரயில் வண்டிகள் உண்டாயின. ஆவி இயந்திரங்கள் பலகோடி உண்டாயின. இவைகளால் மக்களுக்க விளைந்த நன்மைகளைச் சொல்லவும் வேண்டுமா?

செம்பு, ஈயம், பித்தளை, இரும்பு முதலிய உலோகங்களை நெருப்பில் காய்ச்சினால், மெதுவாகுமென்ற ஞானத்தைக் கொண்டு, பலவித பாத்திரங்களையும், இரும்புச்சாமான்களை
யும் செய்ய மக்களுக்குச் சக்தி வாய்த்தது. இந்த ஞானத்தின் பயனை உணராதார் யார் உலகில் உளர்?
பஞ்சை நூற்று, தறியின் மூலமாகவிட்டால் ஆடை உண்டாகும். எனும் ஞானத்தின் உபயோத்தை யார் உணராதார்?
சற்று ஆகாயத்தை உற்றுப்பார்ப்போம். ஒரு காலத்தில் நமது முன்னோர்கள், இடியைக் கண்டு பயந்தார்கள். ஆனால் இடி உண்டாகும் காரணங்களைத் தெரிந்தபிறகு, அதன் காந்த சக்தியைக்கொண்டு இடிவிழுந்தாலும் மக்களுக்குத் தீமை உண்டாகாமல் செய்ய முடிந்தது. இது இந்த விஞ்ஞானத்தால் மக்கள் பெற்றபெரும்பாக்கியமாகும். காந்தக் கம்பியால் கோடானு கோடி மாளிகைகள் காப்பாற்றப்படுகின்றன.

சூரியனையும், சந்திரனையும், நட்சத்திரங்களையும், தேவதைகள் என்று வணங்கி வந்தோம். ஆனால் தூரதிருஷ்டிக் கண்ணாடி மூலமாக, அவைகள் நமது பூமியைப் போன்ற உலகங்கள்தான் என்றும், அவைகளிடத்தில் யாதொரு தெய்வீக மும் இல்லை என்றும் அறிந்தோம். முன்னிருந்த மூடநம்பிக் கைகளை விட்டொழித்து வருகின்றோம்.

மழை, வருணபகவானால் உண்டாகும் காட்சி என்றும், காற்று மாருதியால் உண்டாகும் தோற்றம் என்றும் எண்ணி வந்தோம். ஆனால் நீராவியின் குணத்தையும், காற்றின் குணத்தையும், தெரிவிக்கும் விஞ்ஞானத்தால், மழை பெய்யும் காலத்தையும், புயல்காற்று, சீதோஷ்ண நிலைமைகளையும் தெரிந்துகொண்டு வருகின்றோம். இந்த விஞ்ஞானத்தால், மக்களுக்கு விளைந்துவரும் நன்மையைவேண்டாமென்பார் யார்? இந்த ஞானத்தால் கோடானு கோடி பொருள்கள் நாசமாகாமல் நிலைபெற்று வருகின்றன.

பூமியினுள் நுழைந்து பார்ப்போம் பூகர்ப்ப ஞானத்தால், நமது முன்னோர்களுக்கு பொன், வெள்ளி முதலிய உலோகங்கள் இருக்குமிடங்கள் தெரியவந்தன. கரிச்சுரங்கங்கள் கண்டு பிடிக்கப் பட்டன. பூகம்பங்களின் மூலாதாரம் தெரிய வந்தது. இன்றைக்குப் பூகர்ப்ப நூலின் ஞானத்தால், உலக நாணய முழுமையும் நடந்துகொண்டு நிலைத்து வருகிறது. உலகச் செல்வமும் அதிகரித்து வருகின்றது.

உயிரைப்பற்றிப் பேசும் ஞானத்தால் ஆடு, மாடு, குதிரை, பன்றி, கோழி முதலிய சீவன்கள் வளர்த்துப் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. இந்த ஞானத்தால் உலகில் கறக்கும் பால், நமது முன்னோர்கள் காலத்திலும் கோடிப் பங்கு அதிகமாயிற்று. ஒரு காலத்தில் காட்டு மிருகமாய் இருந்த முரட்டுப் பசுவை, நமது இஷ்டம்போல் பால் கொடுக்கச் செய்தவனுடைய ஞான மொன்றே கோடானு கோடி பிள்ளைகளுக்குப் பால் உதவக் காரணமாய் இருந்தது.

இரசாயன ஞானத்தால் விளைந்து வரும் நன்மையைச் சற்று நோக்குவோம்.

பிரபஞ்ச வஸ்துக்கள் இரண்டு வகையானப் பிரிக்கப்படு கின்றன. இரசாயன குணங்களைப் பற்றிய வஸ்துக்களென்றும், பௌதிக குணங்களைக் குறித்த வஸ்துக்களென்றும் இருவகைத்து, ஒரே வஸ்துவை, இரசாயன குணத்தைப் பொறுத்தமட்டில் விசாரித்து அறியலாம் அல்லது பௌதிக குணத்தைப் பொருந்தியபட்டும் விசாரித்து அறியலாம். இதனை ஒரு திருஷ்டாந்திரத்தால் விளக்கிக்காட்டுவோம். சாதாரண ஜலத்தை எடுத்துப் பார்ப்போம். ஜலம் குளிர்ந்திருப்பது, ஜலவடிவைப் பெற்றிருப்பது, அதனுடைய பௌதீக குணம். அதாவது குழம்பிய குணங்கள், அதனுடைய பொதீக குணங்கள். அதனை அதன் அணுக்களாகப் பிரித்தாவ், நீராவி மயமாகவும் பிராணவாய்வு மயமாகவும் பிரிவது, ரசாயன குணமாகும்.

இவ்விதமாக, ரசாயன ஞானத்தால் பிரிக்கப்பட்ட வஸ்துக்களால், வைத்தியம் மிகவும் அபிவிருத்தி அடைந்து வருகின்றது. சுத்தமும் சுகாதார ஞானமும் மக்கள் அடைந்து வருகின்றார்கள். நோய்களுக்குத் தகுந்த சிகிச்சைகளுக்கு ரசாயன ஞானம் இன்றியமையாததாய் இருக்கிறது. மின்சாரவிளக்கு, சண்டைக்கு வேண்டிய மருந்துகள், பாணவேடிக்கைக்கு வேண்டிய ‘பாணங்கள், இவகைள் யாவும், ரசாயன ஞானத்தால், உண்டாகின்றன.

ரசாயன ஞானத்தால் ஒரு கை புல், பத்து, நூறு, கைப்புல்லாக விளையவும் செய்யலாம். உணவு முதலிய விளை பொருள்கள் யாவும், ரசாயனஞானத்தால் பதின்மடங்குவிளையச் செய்து வருகின்றனர். ரசாயன ஞானத்தால் போட்டோ கிராப்கண்டு பிடிக்கப்பட்டது. நேற்றுத் தோன்றிய சினிமாக்களும் உதித்தன ரசயனஞானத்தால்.

பௌதிக ஞானத்தால், நேர்ந்த உலக நன்மையை அனுதினமும் கண்ணால் பார்த்து வருகிறோம். காற்று இயந்திரங் கள் பல இயந்திரங்கள், பல இயந்திரங்கள், தானிய மில்கள், கனத்த வஸ்துக்களைத் தூக்கும் லீவர்கள், புல்லிகள், எண்ணிறந்த சக்கரங்கள், கெடியாரங்கள், காற்றுப் பம்புகள், ஜலப் பம்புகள், வஸ்துக்களின் பௌதிக ஞானத்தால் உண்டானவை. மேட்டார் கார்களும், ஆகாய ரதங்களும் பௌதிக ஞானத்தால் பெறப் பெற்றவை. இந்த ஞானத்தால்தான் பெரிய கர்டாகள் தாங்கும் வாராவதிகளும், மகாநதிகளின் அணைகளும், ரயில் ஓடும் பாதைகளும் உண்டாகின்றன. இந்த ஞானத்தால்தான், உலக மகா பட்டணங்களில் பெரும் பெரும் மாடமாளிகைகள் கட்டச் சத்யமாகின்றது. பஞ்சாலைகளும், சணற்சாலைகளும், இரும்புச் சாலைகளும், தொழிற்சாலை முழுமையும், தற்காலபௌதிக விஞ்ஞானத்தால் உண்டானவை பிரபஞ்ச முழுதையும் வஸ்துக் களின் ரசாயன பௌதிக குணங்களால், ஆளப்பட்டு வருவதை உணர்ந்த பிறகே நமது மூடநம்பிக்கைகள் நம்மைவிட்டு நீங்கி வருகின்றன.

இதுவரை, மகத்தான வஸ்துக்களால் உண்டாகும். நன்மை களைக் கவனித்து வந்தோம். இனி அணுப்பொருள்களின் நன்மையை நோக்குவோம்.

அணுமய உயிர்களென்று, சில உயிர்கள் உண்டு. அவைகளைக் குறித்த ஞானத்தால், கொடிய வியாதிகளாகிய பேதி, மகாமாரி, வைசூரி (அம்மை) விஷசுரம், டைபாய்ட், இன்னும் பலவித கொடிய கொடிய வியாதிகளின் காரண கர்த்தாக்களைக் கண்டுபிடித்து, மக்களுக்கு இந்நோய்களிலிருந்து விலக வேண்டி, தகுந்த சிகிச்சைகள் கண்டுபிடிக்கப் பட்டுவரு கின்றன. மக்களைக் கொள்ளை கொள்ளும் வியாதிகள், இந்தச் சிறு கிருமிகளைப் பற்றிய ஞானத்தால் மக்களை அணுகவொட்டாமல் செய்யப்பட்டு வருகின்றது.

இதுவரை பிரபஞ்ச வஸ்துக்களின் தனி உபயோகத்தின் மகிமைகளைத் தெரிவித்து வந்தோம். இனி, கடைசியாக, சமூக வாழ்க்கையின் ஞானத்தைச் சுருக்கமாக விசாரித்தறிவோம்.

சமூக வாழ்க்கைக்கு இன்றியமையாதது, நன்னடக்கை, நன்நீதி, நல்லொழுக்கம், நல்வினியோகம் என்பவைகளே. இதுகாறும், இந்நடத்தைகள் யாவும் தேவர்களாலும், முனிவர் களாலும், கடவுள்களாலும் அமைக்கப் பெற்றவை, அவைகளின் படி நடந்தே தீரவேண்டுமென்று நினைத்து வந்தோம். ஆனால் மெஞ்ஞான விசாரணையால் சமூகநடவடிக்கைகள் யாவும், மக்களின் பழக்கவொழுக்கங்கள் எனவும், அந்தந்தக் காலத்துப் பொருளாதார நிலைமையின்படி, இத்தியாதி நடவடிக்கைகள் மாறி வருகின்றனவென்றும், அவைகளைக் காலதேச வர்த்தமானப்படி மாற்றிக் கொண்டு நடக்க வேண்டியதென்றும், விளக்கப் பெற்றது. திருஷ்டாந்திரமாக, திடுகிறவன் அவன் தலைவிதியால் திருடுகின்றானெனவும், வறுமையும், செல்வமும் அவனவன் பிராப்தம் என்றும், எந்த முயற்சியும் “அவனன்றி ஓர் அணுவும் அசையாதெனவும்” எண்ணி வந்தோம்.

இந்த எண்ணங்கள் யாவும், தப்பிதமென்றும், சமூக நடவடிக்கைக்கு, அந்தந்த காலத்துப் பொருளாதார நிலைமையே காரணமென்றும் சமூக விஞ்ஞானம் விளக்கிக் காட்டி வருவதைப் பார்க்கிறோம். இதனை காரல் மார்க்ஸ், லெனின், முதலிய பெரியோர்கள் விளங்கக் காட்டியுள்ளார்கள். திருடுகிறவனும், கொலையாளியும், மோசக்காரனும், பொருளாதாரக் குறைவால் உண்டாகின்றார்களே யொழிய, அவனவன் தலைவிதியால் அல்லவென்று, சமுகமெஞ்ஞானம் எடுத்துக்காட்டி வருகின்றது. இந்தச்சமுக மெஞ்ஞானத்திற்குச் சமதர்மமென்று பெயர். இதனை யாவரும் உணர்ந்து, உலகில் கள், களவு, சண்டை, போர், மோசம், நாசம் ஒழியவு - சாந்தமும், சமாதானமும், சந்துஷ்டியும் உலகில் நிலவவும் இந்த மெஞ்ஞானமொன்றோ துணையென அறிக. வேறு வழிகள் யாவும் பாழ்வழிகளெனவும் அறிக.

“கானற்கரையில், கதலிவனம் போலுமே ஈனச்சுருதி சொல்லும்.”

“கொங்கைக் கரையில் கதலிவன் போலுமே துங்கச்சுருதி சொல்லும்.”

இந்தத் துங்கச் சுருதியே மெஞ்ஞானமெனப்படும்.

(திரவிடநாடு - 14.12.1947)