அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்விலை ஏறிவிட்டது!
கதை, ஒரு நிலத்தைக் குறித்துத் தான்!

ஊரின் பெயர், கடூர்! உறுப்பினர்கள் இந்தக் கூத்தில்:-
மிராசு தணிகாசலம் பிள்ளை சந்தைக் கடை சதாசிவம், அவர் மருமகன் தம்பி தரக தாண்டவப்பிள்ளை, ஆசிரியர் அருமைநாதன், கண்ணப்பன்.

இனிக் கூத்து நடந்தபடி தீட்டுகிறேன் - கவனப்படுத்துகிறேன். கொட்டகையில் அல்ல நாட்டில் நடந்தது! நடந்தது. என்று இறந்த கலத்தோடு நிறுத்திவிட முடியாது. படித்து முடித்த பிறகு, நீங்கள் திருத்துவீர்கள், நடந்தது நடக்கிறது, என்று.
***

காட்சி 1.
இடம் : - களத்து மேடு.

இருப்போர் : - மிராசு தணிகாசலம்.

சந்தைக்கடை சதாசிவம் நிலைமை : - (உழைத்தலுத்த உழவனை உரத்தகுரலில் மிரட்டிவிட்டு ஊரப் பெரிய தனக்காரராக உள்ள தணிகாசலம். சம்போ! மகாதேவா! என்று கூறிக்கொண்டிருக் கையில், இயற்கையாகச் சதாசிவம் என்றவார்த்தையு புறப்பட்டது - ஆனால் எதிலே நிஜமான சதாசிவம் - சந்தைக்கடைக்காரர் வந்து விடவே, சதாசிவம் என்ற வார்த்தையின் உச்சரிப்பு முறைமாறிற்று. பேச்சுத் துவக்கமாயிற்று. இதோ பேச்சு.)

த : - சதாசிவம்! வாரும்! ஆமாம்! ஏம்பா! உன் மருகனிடம் என்ன புதுப் பணமோ?

சதா : - ஏனுங்க!

த : - இல்லை கண் மண் தெரியாமே காசைப் பாழாக்கறானேன்னுதான் கேட்டேன்.

சதா : - என்ன சொல்றீங்க?

த : - எப்படியோ, குல்லா போட்டுவிட்டானே, ஆசாமி. ஆறுமாதமாக வந்த நிலத்தை யார் தலையிலை கட்டலாமென்று அலைந்து கொண்டிருந்தான் கண்ணப்பன். யாரும் கிடைக்கவில்லை, அவன் வலையிலே. கடைசியிலே பாவம், உம்ம மருகப்பிள்ளை வந்து சேர்ந்தார். அவர், இந்த மாதிரி விஷயத்திலே ரொம்பப் பழக்கமில்லாதவர் போலிருக்கு. யாரையும் கேட்கவில்லை, சொல்லவுமில்லை அவசரப்பட்டு, யோசிக்காமே அவன் சொன்ன ஐயாயிரத்து முன்னூறும் கொடுத்துவிட்டு அந்த உபயோகமற்ற மண்ணை வாங்கிக் கொண்டார் ஏன்ன செய்யறது! அவருடைய வேளை அப்படிப் போலிருக்கு.

சதா : - அப்படிங்களா? அவரசக் காரப்புள்ளெ என்னிடம் ஜாடை மாடையாகச் சொன்னான். விவரம் தெரியாது.

த : - என்னமோப்பா! வீண் நஷ்டம். நாலு பேரைக் கலந்து தானே நிலம் நீரு வாங்கவேணும். நான்தான் இருக்கறனே இங்கே, ஒரு பேச்சு கேட்டா, என்ன? நிலம், தாளிக்கை உண்டு, இல்லைன்னு சொல்லியிருக்கமாட்டேனா? அவசரம். அவசரம்னு கூடச் சொல் வதற்கு இல்லை... நீ கோபிக்காதே, இதெல்லாம் இந்தப் புதுப்பணம் செய்கிற வேலை.

சதா : - என்னமோ போங்க. சங்கடமத்தான் இருக்கு. நான் வருகிறேன்.
***

நிலத்தை வாங்கிக் கொண்டாலும் நிம்மதியைப் பெற, நானா விடுவேன் என்று மிராசுதாரர் மனதுக்குள் சொல்லிக் கொண்டார். சந்தைக் கடைக்காரனிடம், நிலத்தின் விலை அதிகமாகக் கொடுத்துவாங்கி விட்டதாகச் சொல்லி அவர் சோகமாகச் செல்ல அதுகண்டு திருப்தியுடன், மிராசுதார், “பயல் போய் அந்தப் பயலைக் கண்டிப்பான். மனம் இடியும்!” என்று எண்ணி அந்தச் சந்தோஷத்தைப் பூரணமாக அனுபவிக்க, வீடு சென்றார்.

காட்சி 2.
இடம் : - மிராசுதாரர் வீடு.

இருப்போர் : - மிராசுதாரர் தணிகாசலம், தரகு தாண்டவப்பிள்ளை..

(தரகு தாண்டவப்பிள்ளை. வந்ததாக வேலையாள் சொன்னதும், ஊஞ்சலில் சாய்ந்து கொண்டிருந்த மிராசுதாரர், ‘எங்கேடா அந்த எருமைக்கடா’ என்று ஒரு குரல் கொடுத்தார் வேலையாலை நோக்கி. பிறகு ஜாடை காட்டினார், தரகு அளை உள்ளே அழைத்துவரச் சொல்லி. வந்தவர் ஒரு அசட்டுச் சிரிப்புடன் நின்றார். மூண்டது கோபம் மிராசுதாரருக்கு. அதன் வேகம், வார்த்தைகளாக வெளிவந்தன.)

“போதும் போதும், எழுந்து போய்யா! மகாயோக்யன்தான். தரகுப் பணத்தைப் பத்தி நமக்குள்ளே தகறாருவந்தா என்ன? அடே! இருநூறு கேட்டே. அப்பா அவ்வளவு முடியாது ஒரு ஐம்பது குறைச்சுக்கோன்னு சொன்னேன். அதற்குள்ளேமுன்னே பின்னே இருந்த சினேகிதத்தைக் கவனிக்காமே, எவனோ வெளியூரான், அவன் ஒரு நூறுரூபா அதிகமாகத தரகு தருகிறானேன்னு, அவனுக்கு நிலைத்தை முடிச்சுவைச்சே - இது தான் ஒழுங்கா? நான், இந்த நிலத்தை வாங்கறதுன்ற யோசனை யாலே, பக்கத்திலே இருந்தமுக்கா காணித்துண்டை, உன்பேச்சை நபி முன்நூறு ரூபாய்க்கு வாங்கித் தொலைச்சேன். அதை என்தலையிலே கட்டிவிட்டு, பக்கத்துநிலம், அயன் நிலமா வருது. வாங்கிப் போட்டு வைய்யுங்கோ, ஒரே சதுரமா இருக்கும், மெஷின்வைக்கலாம்னு ஆசைகாட்டி, கடைசியிலே மோசம் செய்தே. பத்து வருஷ சினேகிதம் நமக்கு. பணம் தான் உனக்குப் பெரிசாகத் தோணிவிட்டது. போ! போ! உன்முகத்திலேகூட எனக்கு முழிக்க இஷ்டமில்லை.
***

தரகுகாரர், ஏதோ முணுமுணுத்தார் ஆனால் என்ன சமாதானம் கூறினாலும் பயன்படாது என்று தெரிந்துகொண்டு மெள்ள அந்த இடத்தைவிட்டே நழுவினார். வேறோர் நிலத்து விஷயமாகத் தான் தரகர் பேசவந்தார சமயம் சரியில்லை என்று எண்ணிக்கொண்டு போய்விட்டார். ஆத்திரம் தீரத் தரகுக்காரரைக் கண்டித்தாலும் கூட, மனதிலே நிம்மதி ஏற்படவில்லை மிராசுதாரருக்கு; நிலம், கடைசியில் பட்டணத்தானுக்குப் போய் விட்டதே என்ற எண்ணம் வேதனையைத் தந்தது. கூத்துக் கொட்டகைக்குச் சென்றாவது மகிழ்ச்சியைத் தேடுவோம் என்று அங்கு சென்றார்....

காட்சி 3.
இடம் : - கூத்துக்கொட்டகை.

இருப்போர் : - மிராசுதாரர், கண்ணப்பன்.

(கண்ணப்பனுக்குக்கண் கொஞ்சம் சிவந்திருந்தது - வார்த்தையும் குளறிக்கொண்டுதான் வெளிவந்தது. காரணம்? தெரியவில்லையா? நிலம் போனதுகூட, அந்த நீரு“’ செய்த சேஷ்டையால்தான். கண்ணப்பனைக் கண்டதும் மிராசுதாரருக்கு, மீண்டும் கொதிப்பு, மனதிலே! பிடித்தார் ஒருபிடி)

“என்னய்யா அவசரம்! எப்படிப் பட்ட அயன்நிலம் - எவனோ வெளியூரானுக்கு, அந்த விலைக்கு வித்து விட்டாயே. நான், எட்டாயிரம்னாலும் தருவதற்குச் சித்தமாக இருந்தேன், அந்தத் தரகுக்ரான் சும்மா இருங்கோ நான் ரொம்பக்குறைச்சல் விலைக்கு முடிச்சுத் தருகிறேன்னு சொன்னதாலே நான் பார்க்க லாம்னு இருந்தேன். கடைசியிலே தரகன் தேவையே இல்லை, நாமே நேரிலேயே போய்க் கேட்போம்னு எண்ணிக்கிட்டே இருக்கிறேன், நீ அவசரப்பட்டு ரொம்பக் குறைஞ்ச விலைக்கு, வெளியூரானுக்கு விற்றுவிட்டே. என்னய்யா இது ஊரிலே நாங்களெல்லாம் உன் கண்ணிலேயே தெரியலையா? ஒரு வார்த்தை என்னைக் கேட்டுவிட்டுத் தான் வித்துவிடக் கூடாதா? போய்யா, போ. கொஞ்சம் கூட முன்யோசனையே இல்லை உனக்கு.”
***

கண்ணப்பன், ஏதேதோ பேசினான் மடையன், ராஸ்கல் போனாப் போவுது, எவன் என்னைக் கேட்க முடியும், ஆயிரம் ஏக்கர் ஆறாம் மாசம் வாங்குவேன், உங்க நிலம் தான் அதுவும், இப்படிப் பலபல சொற்கள் தொடர்பற்று, பொருளற்று வந்த வண்ணமிருந்தன- இவைகளைத் துரத்திக்கொண்டு வெளிவந்தது, குடியின் நாற்றம். மிராசுதார் பேச்சை வளர்த்துவானேன் என்று, விட்டுக்கே திரும்பினார். கண்ணப்பானோ, “நிலத்தை இவன்கிட்டவா கொடுப்பேன்! அவன் கிட்டவாவது கொடுக்கிறேன்! எங்க அப்பனுக்கு இவனாமவன்? போடா! என் இஷ்டம்!” என்றுகுளறிக் கொண்டே கிடந்தான்.
***

காட்சி 4.
இடம் : - சந்தைக்கடைக் காரர்வீடு .

இருப்போர் : - சதாசிவம், அவர் மருமகன் தம்பி.

(அதிகவிலைகொடுத்துத் தன்மருமகன் நிலத்தை வாங்கினதாக அறிந்து ஆயாசமடைந்த சதாசிவம் தன் மருமகன், தம்பியிடம் பேசுகிறார். தம்பி என்பது செல்லப்பெயர்.)

ச : நிலம் தாளிக்கை இல்லையாமே?”

த : யாரு சொன்னது?

ச : மிராசு முதலி.

த : எவ்வளவு அதிகம் கொடுத்து விட்டோமாம்?

ச : இது ஒருகணக்கா தம்பி ஐந்நூறு ரூபா அதிகம்னு அவர் அபிப்பிராயப் படுகிறாரு.

த : இருக்கட்டுமே அப்படியும் நமக்கு ஒண்ணும் நஷ்டமில்லையே

ச : என்ன நஷ்டமில்லை? அடே, அந்த நிலத்துக்கு ஐந்நூறு ரூபா அதிகவிலை கொடுத்து விட்டோம்னு ஒரு அனுபோகஸ்தர் சொல்றாரு...

த : அதுசரி, மாமா!அப்படியே இருந்தாக்கூட, நஷ்டமில்லேன்னு தானே சொல்றேன்.

ச : என்ன சொல்றே நீ?

த : மாமா! நிலத்தை நமக்கு விற்பனை செய்தாரே அவர் ஒருபச்சைக்கல் மோதிரம் விலைக்கு வாங்கினாரேல்லோ?

ச : ஆமாம்

த : அதுநம்மது தானே? அதிலே 750 வந்துதில்லே?

ச : போகட்டும், வந்த இலாபம் போயிட வேணுமா என்ன? கிடாகு; நிலம் அவ்வளவு நல்லது இல்லையாமே?

த : மிராசுதாரர் சொன்னாரா?

ச : ஆமாம்.

த : அவரும் சொல்வாரு, கண்ணப்பரும் அப்படித்தான் நினைப் பாரு.

ச : ஏன்?

த : அதுக்கு ஐம்பது ரூபால்லோ செல்ல!

ச : என்ன கதை அது?

த : எந்த நிலம் பிரயோஜனமில்லைன்னு மெஷின் கம்பெனி ஆளைவிட்டே சொல்லச் சொன்னேனே, நாமே சோணால தானே கம்பெனி ஏஜண்டு ஒரு ஐம்பது தட்டினேன் வந்தான்; கண்ணப்பர் தான் வரவழைச்சாரு - மெஷின் போடணும், அதுக்கு நிலம் ஏத்ததுதானான்னு பார்க்கச் சொல்லி. இங்கே அவன் வருவதற் குள்ளே நம்ம ஐம்பது போயிடுத்தேல்லோ அவன் பாக்கட்டிலே. அவ்வளவு தான். இந்த நிலத்துக்கு ஏன்சார், மெஷின்? நிலம், ரமா இல்லையே, செலவு கட்டிவாரதேன்னு சொல்லிவிட்டேன். வெளியே இதைச் சொல்லாமேன்னு கேட்டுக் கொண்டாராம் சும்மா கேட்டுக் கொண்டாபோதுமா, ஒரு இருபது கொடுத்தார். சோணாசல கோட்டுப்பாக்கட்டு, முணுஇல்லையா? நேரே, மிராசுதாரரையும் பார்த்துவைச்சால் - அவரும் என்னமோ போட்டாரு - விஷயத்தைத் தெரிந்து கொள்ள - அவரிடம் நிலம் ரொம்ப தரமானதுன்னு சொல்லிவிட்டான்; ஆக நான் கிளம்பின வதந்தி பரவி நிலத்தச் சொந்தக்காரரே, அவர் நிலப் பிரயோஜன மில்லைன்னு நம்புவதாய் நேரிட்டுச் சூட்சமம் இருக்காது.

ச : - அப்படியா விஷயம்? ஆமாம் தம்பி! இதெல்லாம் சரிதான் - நீ வெளியூரலே இருந்து கிட்டு, எப்படி நிலத்தைக் கவனிச்சிக்க முடியும்? நிலம் பார்க்காமே போனா பாடுபடாமபோனா வீணாபாழாயிடுமே.

த : - கானேல நிலத்தை வைத்துக்கொண்டு இருக்கப்போறேன்; பைத்யம்! எனக்கு ஏன்நிலமும் நீரும்? அடுத்த வருஷத்திலே இலாபத்துக்க வித்துத்தீத்துவிட மாட்டானா?

ச : - அது எப்படிப்பா அதுக்குள்ளே விலை ஏறு?

த : - ஏறுது பாருங்கோ.
***

ஒரு வருஷத்திலே நடைபெற்ற பல சம்பவங்களில் ஒன்று குறிப்பிட வேண்டிய சம்பவம். ஆசிரியர் அருமைநாதர் ஒன்பவர் பூதத்துவ ஆராய்ச்சி நூல் ஒன்று வெளியிட்டார். வெளியிடு
வதற்கு முன்பு ஒரு நாள் அவரும் - தம்பியும் பேசினது வருமாறு:

த : - என்ன செல்வாகும்! புத்தக வெளியிடா?

அ : - சாதாரணமான முறையில் அதிக அலங்காரமில்லாமல்...

த : - வேண்டாமய்யா! நல்ல முறையிலேயே சொல்லும்.

அ : - ஒரு ஐந்நூறு ரூபாய்...

த : - சரி, தருகிறோர். புத்தகத்தின் விலை ஐந்து ரூபாய் இருக்க வேண்டும்.

அ : - ஐந்து ரூபாயா?

த : - ஆமாம். குறைவாக இருக்கக்கூடாது எவ்வளவு பிரதிகள் அச்சிடவேண்டுமு“ என்று யோசனை?

அ : - இரண்டாயிராவது...

த : - பைத்யக்காரத்தனம்! 500 பிரதிகள் போதும். விலை ஐந்து ரூபாய்தான். விற்பனையானாலும் ஆகாவிட்டாலும், உமக்குக் கவலை வேண்டாம், மொத்தச் செலவு என்னுடையது.

அ : - தங்கள் சிறந்த சேவையை நாடு நிச்சயமாகப் பாராட்டும். பூதத்துவ ஆராய்ச்சி இப்போது நமது நாட்டிலே தத்தும் குழந்தைப் பருவத்திலே இருக்கிறது. கவனிப்பாரில்லை. தங்களின் பேருதவி, எனக்கல்ல, என் நூலுக்கு அல்ல, நாட்டுக்கு, அறிவுத் துறைக்கு, ஆராய்ச்சிக்கு! புத்தகத்திலே தங்கள் படம்...

த : - இருக்கக்கூடாது. நான் பணம் கொடுத்ததாகவே தெரியக் கூடாது.

அ : - எவ்வளவு சுயநலமற்ற சுபாவம். ஆனால், தங்கள் திருஉருவ பொறிக்கப்பட விட்டால் என் மனம் எப்படித்திருமதி அடையும்? புகழையும் விரும்பாத புனிதர் நீர்.

த : - என்படம், உமது வீட்டில் இருக்கட்டும் புத்தகத்தில் கூடாது -என் பெயரைப் பற்றிய பிள்தாபமே கூடாது. என் மனைவி தனக்கு ஒரு வைர ஓலை வேண்டுமென்று வற்புறுத்தினாள். இல்லை இல்லை என்று கூறிவந்தேன் ஆனால் எப்படியாவது வாதத்தது வேண்டுமென்ற ஆவலால் பணம் சேகரித்து வந்தேன். அதைத்தான் உமக்க உயரிய நூலுக்கு உதவித் தொகையாய அளிக்க உத்தேசம் ஆகவே, நான் பணம் கொடுத்த விஷயம் வெளியானார், பிறகு, வீடு, களமாகு!

அ : - ஆஹா! என்னென்று புகழ்வேன்! தாங்கள் வள்ளல்! பெருந்தகையின!...

த : - நிபந்தனையின்படி நடந்து கொள்ளுவர். இதோ ஐந்துநூறு ரூபாய் நோட்டுகள். புத்தகம், விரைவிலே வெளிவர வேண்டும்.

அ : - தடை ஏது? இரவு, பகலாக வேலை செய்து, என் நூலை வெளியிட்டு விடுகிறேன். என் மனோபீஷ்டம் நிறைவேறிவிட்டது. நான், எவ்வளவு கவலையில் மூழ்கினேன். காதல் கதை, சினிமாக்கதை இவை களுக்கு ‘போஷர்கள்’ போட்டி யிட்டுக் கொண்டு வருகிற இந்தப் பொல்லாத உலகிலே பூதத்துக் ஆராய்ச்சிக்குக் கைகொடுப்பார், ஒருவரும் இல்லையே என்று ஏங்கினேன்.

த : - சரி புத்தகம் வெளியானதும், வந்து பாரும்.

அ : - இடையிலேயும், அடிக்கடி வந்து காண்கிறேன்.

த : - சிரமம் ஏன், பாவம். தங்களுக்கு ஆமாம்! தங்களுடைய ஆராய்ச்சி நூலில், இன்னின்ன இடத்திலே இன்னின்ன பொருள் கிடைக்கும், என்று திட்டமாகக் கூறி இருக்கிறீர்களல்லவா?

அ : - ஆமாம்! மறுக்க, எவரும் முன்வர முடியாது. படித்துக் காட்டுகிறேன்...

த : - வேண்டாம! சொன்னாலே போதும் ஒரு வேடிக்கை மட்டும் நடத்திப்பார்க்க வேண்டும் என்று எனக்கு ஆசை. என்ன தெரியுமா? தங்களுடைய உண்மையான ஆராய்ச்சியுடன் ஒரு கற்பனையை, வேண்டுமென்றே ஒரு பொய்யுரையைச் சேர்த்து வெளியிடுவது. இந்த நாட்டிலே, சரியான ஆராய்ச்சிகாரர்கள் இருக்கிறார்களா இல்லையா என்பதைக் கண்டறிய, அது ஒரு வழி. யார் ஒருவர், திறமை மிக்க ஆராய்ச்சிக்காரரோ அவர் சொல்லிவிடுவாரல்லவா, ஆசிரியர் எழுதியதிலே, இந்தப் பகுதி சரியில்லை என்பதை.

அ : - ஆஹா! அறிஞர்கள் இல்லாமலா போவார்கள்! ஆனால் ஒரு சிறுபொய்யும்...

த : - கூடாதுதான்! அடுத்த பதிப்பிலே திருத்துவது - அதே போது - இந்தத் தவறும் எந்த நோக்கத்துக்காகச் செய்தது என்பதையும் வேடிக்கையாக விளங்குவது தமாஷ்! எனக்கொரு பொழுது போக்கு இப்படிப்ட்ட விஷயத்தில்

அ : - அதற்கென்ன செய்வோம்! ஆனால் எப்படி?
த : - ஒரு உதாரணம் சொல்கிறேன் கேளுமே. இப்போது உமது நூலிலே, சித்தூர் ஜில்லாவில் சீமைக்கரி கிடைக்கும் என்ற ஆராய்ச்சி உண்மையை வெளியிடுகிறீர் என்று வைத்துக் கொள்ளுங்களேன். அதே நூலில், வேண்டுமென்றே, தென ஆற்காட்டில் பூமிக்க அடியில், ஒருவகையான பளபளப்பான கல் கிடைக்கும். அதைச் சித்த வைத்திய முறைப்படி பஸ்பம் ஆக்கினால் காயகல்பமாகும், என்று ஒரு சரடு விட்டுவைப்பது. பார்க்கலாமே, யார், இந்தத் தவறைக் கண்டு பிடிக்கிறார்கள் என்று!

அ : - வேடிக்கையாகத்தான் இருக்கும். ஆனால் நான் எல்லா ஜில்லாவையும் ஆராய்ச்சி செய்து எழுதிவிட்டிருக்கிறேன்.

த : - அடஜில்லா வேண்டாமய்யா! ஒரு ஊர் போ போடுவது!!

அ : - போடலாம்...

த : - போடுமய்யா, கடூர் கிராமத்திலே, இருக்கிறது காயகல்பக் கற்கள் என்று. வேடிக்கையாக இருக்கும்! பாருமே, எத்தனை பத்திரிகாசிரியர்கள் கொட்டை எழுத்திலே கடூர் கிராமத்தில் காயகற்பக்கற்கள்! என்று பெருமையாக எழுதுவர், தெரியுமா! பிறகு, அந்தப் பத்திரிகைகளை நாம் கிண்டல் செய்யலாம். தமாஷ்தானே!

அ : - ஆஹா! செய்வோம். இதெல்லாம் சரி, ஆனால் தங்கள் படம்?

த : - இதோ பாருமய்யா! எனக்கு இந்த விளம்பரம் துளிகூடப் பிடிக்காது.
***

புத்தகம் வெளிவந்தது! எங்கும் அதற்குக் கண்டனம். ஆனால் 500 புத்தகங்களிலே, இருநூறு உடனடியாகச் செலவாகி விட்டன. விலைதான் பிரதி ஒன்றுக்கு ஐந்து ரூபாய்! இலாபம் சரியானபடி. ஆனால், ஆசிரியர் அருமைநாதருக்கு மட்டும் பெருங்கவலையாகிவிட்டது, “பூதத்துவ ஆராய்ச்சியின், அ, ஆ, கூடத்தெரியாத ஆசாமி!”

இது ஒரு கண்டனம்.

“கண்டபடி எழுதிவிடும் கன்னாபின்னா கோஷ்டியைச் சேர்ந்த இந்த ஆசிரியர் பூதத்துவ ஆராய்ச்சியில் இறங்குவதற்கு முன்பு புத்தி ஆராய்ச்சியில் இறங்குவது நல்லது.”

இந்த அளவுக்குச் சென்றார். இன்னோர் கண்டன கர்த்தா!

எல்லோரும், கடூர் காயகற்பக் கற்களைப் பற்றிக் குறிப்பிட்டுவிட்டுக்கேலி செய்தார்கள்.

ஒரு சித்தவைத்தியர் சீற்றத்தோடு “கற்களைக் கொண்டா காயகல்பம் செய்கிறோம்? - என்ன எண்ணிக் கொண்டார் இந்தப் பேனாக்காரர்?” என்று கண்டித்தார்.

ஆசிரியர், கைபிசைந்து கொண்டார் - கண் கசக்கினார் - “பாவி! தமாஷ், தமாஷ்! என்றான். என்னமோ பணம் தருகிறானே என்றெண்ணி, அவன் சொன்ன பைத்யக்கார யோசனைக்கு இணங்கினேன். படாதபாடுபடுகிறேன். இனி நான் வெளியிட வேண்டிய, விண்ணால் மண், காலில் தலைபோன்ற நூற்களை எப்படி நாடு ஏற்றுக்கொள்ளும். ஒரே ஒரு பொய்தானே என்றான் - அது என் பெயரையே கெடுத்துவிட்டதே! - என்று எண்ணி ஏக்க முற்றார்.
***

“பல இடங்களிலே, புதிய புத்தகத்தைப் பற்றிய உரையாடல் நடைபெற்றது.” பதம் பார்க்க ஒன்று தரப்பட்டிருக்கிறது.
***

“காய கற்பம் வேண்டுமா? கடூர் போவதுதானே!”

“எவனோ ஒரு முட்டாள் எழுதினான் அதுபோல....”

“ஏன், இப்படி எழுத வேண்டும்?”

“மூளைக்கோளாறு”

“ஆனால், ஏதாவது ஒருவகைக் கல் இருக்கும் அந்த ஊரில்”

“இதிலென்ன ஆச்சரியம்? எல்லா ஊரிலுந்தான் இருக்கும்!”

“சாதாரணக்கல் அல்ல. ஏதாவது விசேஷம் இருக்கும் அந்தக் கல்லில். இவன் சொன்னதுபோல காயகற்பகத்தக்கப் பயன்படாது. அது சுத்தப்பிசகு. வேறு ஏதாவது உபயோகமாகக் கூடிய, மருந்து சக்தியுள்ள கல்லாக இருக்கலாம்”

“என்னமோ யார் கண்டார்கள்! பூமிக்கு அடியிலே தங்கம் இருப்பதுகூட வெட்டி எடுத்த பிறகு தானே தெரிகிறது...”

“ஆமாம், கரி முதற்கொண்டு வைரம் வரையிலே அப்படித் தான்!”
***

கண்டனம்! கேலி!

ஆனால், எங்கும் புத்தகத்தைப் பற்றியே பேச்சு.

கடூர் கற்கள் ரொம்பப் பிரபல்யமாகிவிட்டன!!

யாரார், பலமாகக் கண்டித்தார்களோ, ஆராய்ச்சி என்ற பெயரால் புளூகினான் என்று கடமையாகத் தீட்டினார்களோ, அவர்களிற் பலரே, கடூர் மீது காதல் கொண்டனர் கடூர் நிலத்தின் விலை மளமளவென்ற ஏறிவிட்டது! பலத்தபோட்டி! கொழுத்த இலாபம்.

தம்பியின் நிலத்தை, வாங்கப் பலர் முன்வந்தனர்.

காயகற்பக் கற்களைச் சரக்குக் காட்டி, விலையைத் தூக்க முடிந்தது.

கொண்டையைப் போட்டு வராலை இழுக்கிறோம் என்றெண்ணி, பணம் படைத்தோர் வேலைசெய்தனர்.

நிலம், நல்ல விலைக்கு விற்றாகிவிட்டது....
***

காட்சி 5.

இடம் : - சந்தைக் கடைக்காரர் வீடு.

இருப்போர் : - சதாசிவம், தம்பி.
(தம்பி, பெருநஷ்டமடைவான் என்றபீதி போய்விட்டது. பெருமகிழ்ச்சி சதாசிவத்துக்கு. மருமகன் அதிர்ஷ்டசாலி என்று எண்ணுகிறார். தம்பி, விளக்கம் தரப்பேசுகிறான்.)

“மாமா! நிலத்தின் விலை....”

“பைத்யக்காரத்தனமாக இருக்கே! மள மளவென்று ஏறி விட்டதே!”

“நான்தான் முதலிலே சொன்னேனே! மொத்தத்தில் இப்போது நமக்கு இலாபம் என்ன தெரியுமா?”
“ஆறாயிரம்!”

“இல்லை! அதிலே ஒரு ஐந்நூறு தள்ளிவிடணும்”

“ஏன்? கமிஷனா!”

“ஒரு வகையிலே கமிஷன் போலத்தான். பூதத்துவ அருõய்ச்சி நூல் எழுதினவனுக்கு 500 ரூபாய் கொடுத்தேனே! அவன, கடூர் நிலத்தைப் பற்றி எழுதினது, நான் சொல்லித் தானே! விலை அதனால்தானே இவ்வளவு ஏறிவிட்டது!”

“அட, தந்திரக்காரா!!”

“இல்லாவிட்டால், எப்படி மாமா பிழைக்கமுடியும்! உலகமோ பொல்லாதது - நல்லதற்கும் காலமில்லை”


“எமகாதகனப்பா நீ! இந்த நிலத்தை வாங்கினவோது நான் பயந்தே போனேன்.”
“நான் தான் சொன்னேனே, நிலத்தின் விலை ஏறுகிறது பார். என்று நிலம்மட்டுமல்ல, மாமா, தந்திரத்தாலே எந்தப் பொருளையும், விலையை ஏற்றிவிடவும் முடியும், இறக்கிவிடவும் முடியும்! அதெல்லாம், தெரியாவிட்டால், எப்படி! இது என்ன பிரமாதம். கண்ணாலே சரக்கு இருப்பதைப் பார்க்காமலேயே, வியாபாரம் நடத்தி, விலையை, இஷ்டப்படி ஏற்றியும் இறக்கியும் ஜாலவித்தை போலச் செய்கிற வியாபாரம் இருக்கே! இலட்ச இலட்சமாகப்பணம் குவியும் அதிலே”

“ஆமாம, கேள்வி, தான்.”

“மார்வாடி, குஜராத்தி ஆட்கள் இந்த ஜால வேடிக்கை வியாபாரத்திலே ரொம்பத் தேறினவர்கள்.”

“எப்படியே, அப்பா! நிலத்தின் விலையை ஏற்றிவிட்டு விட்டே”

“இது என்ன பிரமாதம்! காற்று விலையையும் நீரின் விலையைக்கூடா,நம்ம இஷ்டப்படி ஆட்டிவைக்க முடியு”, ஆனா நம்ம ஜனங்களுக்கு மட்டும் இப்போ இருக்கிறது போல, யார் எதைச் சொன்னாலும் நம்புகிற சுபாவம் இருக்கவேணும்” அது இருக்கிறவனயிலே. கஷ்டமில்லை. அந்தச் சுபாவம் மாறிவிட்டா நிலத்த விலை கிடக்கட்டும் மாமா! சம்பள வங்க நிலை÷கே ரொம்பமட்டமாகிவிடும்!

(திராவிடநாடு - 23-3-1947)