அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


விலங்கிட்டனர், நடத்திச் சென்றனர்

காங்கிரஸ் ஆட்சியில் இந்தக் கொடுமை!
வீரர்கள் எழுவரும், திருச்சி சிறையில்
நாரணமங்கல வழக்கு எதிரொலி

அரியலூர் டிச்.8 இன்று நாரணமங்கலம் 144 தடையுத்திரவை மீறி பேச்சுரிமை காத்த பெருவீரர்களெழுவரையும் தோழர்கள் ஏ.பி.தர்மலிங்கம், என்.சாம்பு அண்ணாமலை, எஸ்.வி.லிங்கம், முத்துகிருஷ்ணன், வீரர்களின் பெற்றோர்கள், மேலப்பழுவூர் செல்லப்பா மற்றும் பலர் சென்று கண்டனர். தோழர்கள் முகமலர்ச்சியுடனிருக்கின்றார்கள்.

தண்டனை பெற்ற செய்தியைத் துண்டு வெளியீடுகள் மூலம் திருச்சி, நாரணமங்கலம், துறையூர், செயங்கொண்டம், பெரம்பலூர், லால்குடி, டால்மியாபுரம், திருமானூர் இன்னும் பல ஊர்களில் பரப்பப்பட்டது. திருச்சி மாவட்டத்தின் முக்கிய ஊர்களுக்கு நேற்று இரவே செய்தி அனுப்பப்பட்டு, அங்கங்கே பெரிய போர்டுகள் மூலம் விளம்பரப்படுத்த ஏற்பாடு செய்யப்பட்டது.

இரண்டு குற்றங்களைச் சாட்டிற்று, இந்த அரசாங்கம் ஒவ்வொன்றிற்கும் மூன்று மாதக் கடுங்காவல் தண்டனை ஆனால் ஒரே சமயத்தில் இரண்டு தண்டனைகளையும் அனுபவிக்க உத்திரவிடப்பட்டது.

இன்று பகல் 12.30 மணிக்கு அரியலூர் சப்ஜெயிலிலிருந்து கண்ணியத்தை கேடயமாகக் கொண்ட நமது தோழர்கள் ஆணவ மிகுந்த ஆட்சியாளர் வீசிய அடக்குமுறையை அலட்சியப்படுத்தி அறப்போர் தொடுத்த ஆர்வமிக்க அடலேறுகள் எழுவரையும் கரங்களிலே விலங்குகளிட்டு, நடத்தியே இரயிலடிக்கு அழைத்துச் சென்றனர். இந்தக் கோரக் காட்சி கருத்துள்ளோர் எவரையும் இரத்தக் கண்ணீர் வடிக்கத்தான் செய்யும் தோழர்களோ, கரங்களிலே விலங்கிட்டதைக் கண்டு அலட்சிய புன்னகை வீசி, நாட்டிற்காக நம் கடமையைச் செய்கிறோம் என்ற பெருமிதத்துடன் நடத்தனர்.

அரசியல் கைதிகள் அவர்கள் ஆனாலும் விலங்கிட்டு, வீதிவழியே நடத்திச் சென்றனர். இந்த காட்டு மிராண்டிப் போக்கைக் கண்டு பொதுமக்கள் ஆத்திரப்பட்டனர். கண்ணியமிக்க அரசியல் அறிவுபடைத்தவர் ஆச்சர்யப்பட்டனர். மாணவர்களோ, குமுறும் நெஞ்சுடன் கூடவே தொடர்ந்து சென்றனர். தோழர்களை, திருச்சி சிறைச்சாலைக்கு அழைத்துச் சென்றனர்.

அன்று மாலை திருச்சி டவுன் ஸ்டேஷனில், சிறை செல்லும் தோழர்களை, திருச்சியிலுள்ள கழக பிரமுகர்கள், தொண்டர்கள், பெருவாரியாகக் கூடி வரவேற்றனர்.

தோழர்கள் எழுவரையும் பொன்மலை வரையில் இரயிலிலும் பிறகு சிறைச்சாலைவரை நடத்தியுமே அழைத்துச்சென்றனர்.

(திராவிடநாடு 17.12.50)