அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


வில்லாளன் தந்தையார் மறைவு

நமது தோழர் தில்லை-வில்லாளன் அவர்களது தந்தையார் 5.11.52 அன்று தமது 72வது வயதில் காலமானார் என்கிற செய்தியைத் தோழர்களுக்கு வருத்தத்தோடு தெரிவித்துக் கொள்கிறோம்.

சில நாட்களாக அவர் நோய்வாய்ப்பட்டிருந்ததை அறிந்த சி.என்.ஏ. விருதுநகர் கூட்டத்துக்குச் சென்று, அங்கிருந்து சிதம்பரம் வந்து, வில்லாளன் தந்தையாரைச் சென்னைக்கு அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்துவிட்டு சென்னை சென்றார்.

சென்னை ஸ்டான்லி மெடிகல் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றுக் கொண்டிருக்கும்போது, ஊர் திரும்பிட வேண்டும் என்று பெரியவர் வற்புறுத்தவே, மீண்டும் அவர் சிதம்பரம் கொண்டு போகப்பட்டு, அங்கு காலமானால். சாவின் கோரக் கரங்கள், அந்தப் பெரியவரைக் கொண்டு போய் விட்டனவென்றாலும், அவர் நமது நண்பர்மீதும், நம்மீதும் வைத்திருந்த பாசத்தையும், அவருடன் உரையாடிய நேரங்களையும் நினைக்கும்போது, நம்மால் தாளமுடியாத துக்கம் மோதுகிறது.

நமக்கோர் நல்ல நண்பரையும், திராவிடத்துக்கோர் சிறந்த தொண்டரையும், தந்த அந்தப் பெரியவர், தனது பெயரை, மங்காமல் நிலைநிறுத்திக் கொண்டுவிட்டார் – தனது புதல்வர்கள் மூலம் எனினும்,அவரது பிரிவை நினைக்கும் போது துயரம் படருகிறது. நமக்கே இப்படியென்றால், நண்பர் வில்லாளனுக்கும் அவர்தம் சகோதரர்களுக்கும், அன்னையாருக்கும், குடும்பத்தாருக்கும், வாழ்க்கையின் மேடுபள்ளங்களை அறிந்த நண்பர் வில்லாளனுக்கும் அவரது குடும்பத்தாருக்கும் நமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

திராவிட நாடு – 9-11-52