அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


விசித்திர சித்தர்!

அவனியோர் கண்டு அதிசயிக்கத்தக்க அழகு, எழிலுக்கு உறைவிடமான இளமை, வேதாந்திகளை மண அறைக்கு அழைக்கும் புன்னகை, யாவும் கடந்தோர் எனப்படுவோரையும் வசியப்படுத்தும் பார்வை, கலாரசிகர்களின் விருந்தாகும் பாவம், எல்லாம் உண்டு, அதோ, சோலையிலே சொகுசாக சதங்கை கொஞ்ச, பொன் இழைத்த தூசு ஒளிவீச நடக்கும் அந்த ஒய்யார உருவுக்கு - ஆனால் - அது ஆணுமன்று, பெண்ணுமன்று, அலி! உறையிலே உள்ள கட்கமோ, கூர்மையானது! இடையிலே அதனைத் தரித்துள்ள வீரனோ, போருக்கஞ்சாதான்! கத்திச் சண்டையிலே அவன் இட்டதே பிச்சை; ஆனால் பாவம், திடீரென அவனுடைய இரு கரங்களும் செயலாற்றுந் தன்மையை இழந்து விட்டன - பச்சை வாதத்தால்!!

அதோ பாதையோரத்திலே நின்று கொண்டு, பசி, பசி என்று பதைத்து அழுகிறானே, அவனுக்கு இரண்டு நாளில், பாயாசத்துடன் விருந்தளிக்கப் பக்கத்து வீதியிலே பனிரெண்டு பேர் தயாராக இருக்கின்றனர்.

ஆம்! அழகுள்ள அலி, கைவராத வீரன், பசிக்கு உதவாத உணவு, இவை என்ன பயனளிக்கும்! அன்பர் ஆச்சாரியாரின் அறிவுத்திறனும் இவை போன்றே இருக்கக்காண்கிறோம்.

அவருடைய அபூர்வமான மூளைத்திறத்திலே மட்டும், நாம், ஒருநாளும் சந்தேகப்பட்டதே கிடையாது. கூரிய அறிவுதான்! சிலாக்கியமான சிந்தனா சக்தி! மதிக்கத்தக்க மதியூகம்! எல்லாம் சரி. ஆனால், பாபம், இவ்வளவும் சரியான காலத்திலே மட்டும் பயன்படுவதில்லை!! குறைந்தது ஓராண்டுக்குப் பிறகேதான், அவருக்கு அவருடைய அறிவு உதவ முன் வருகிறது. முதலிலே மூடுபனி, பிறகு, மெல்ல மெல்லக் கதிரவனின் ஒளி கிளம்பி, பனியை உருக்கி நீராக்கித் தள்ளுவதுபோல, முக்கியமான சமயத்திலே, அவருடைய அறிவு அவரைக் கைவிட்டு விடுகிறது. பிறகே, அவ்வறிவு அவருக்குத் துணை செய்யத் துணிகிறது, ஆனால் அதற்குள்ளே அலைச்சலும் களைப்பும், தோல்வியும் துயரமும் அவரைத் தழுவிக்கொள்கின்றன, அந்த அணைப்பால் அவர் வதைகிறார். அவருடைய இந்நிலையைக் குறித்து நாம் முன்பு பன்முறை எழுதியுள்ளோம். குதிரை பறிபோனபிறகு கொட்டிலுக்கு இரட்டைத் தாளிட்டுப் பலமான பூட்டிடுவார், படகு கவிழ்ந்தபிறகு, துளையைச் சரிப்படுத்துவார், இது அவருக்குள்ள இயல்பாகி விட்டது.

சட்டசபைப் பிரவேசமே சரியானது என்று சத்தியமூர்த்தியார் சகடமெனச் சுழன்று சண்டமாருதமெனப் பேசியபோதெல்லாம், ஆச்சாரியாருக்கு, மூளையிலே மூடுபனி கிடந்தது, மூர்த்தியின் வார்த்தை குவியக் குவிய, ஆச்சாரியாருக்கு, ஆளப்போகும் காரியமே அறிவின்பாற்பட்ட தென்ற யூகம் முளைக்கலாயிற்று. ஆனால் இதற்குள் ஓராண்டுக்கு மேலாகிவிட்டது. அதுபோலவே போர் துவங்கியதும், இப்போருக்கு ஆதரவு தருவதே முறை, என்று அறிஞர் பலர் கூறினர். ஆச்சாரியாருக்கோ கருத்திலே களை மூடிக் கொண்டிருந்தது. அந்தக் களையை நீக்க ஓராண்டுக்கு மேலாயிற்று, இடையே, திருச்சிச் சிறைவாசமும், தீப்பொறிப் பேச்சும், திக்கெட்டும் சுற்றுவதுமான திருவிளையாடல்களிலே ஈடுபட வேண்டியதாயிற்று.

ஆகவே, ஆச்சாரியாருக்கு ஓராண்டு கழித்தே, உண்மை புலனாவது வழக்கமாகிவிட்டது. மந்தம் மறைய, காலம் பிடிக்கிறது போலும்!

அரசியல் பிரச்னைகளைப் போக்க இங்கு, முன்னம் சர். ஸ்டாபோர்டு கிரிப்ஸ் வந்தார், பலரைக் கண்டார், தமது கருத்தினை விண்டார், அதுகாலை அன்பர் ஆச்சாரியார், யாது செய்தார்? கிரிப்ஸ் திட்டமே சரியானது, அதனை ஏற்றுக்கொள்வதே முறையாகும், என்ற அறவுரை பேசித் தன் கூட்டத்தாரின் குளறலை அடக்கினாரா? இல்லை! நீண்ட அறிக்கைகள் விடுத்தார், நெறித்த புருவத்தைக் காட்டினார், ஏகாதிபத்தியத்தின் ஆணவம் அழிக என சபித்தார். சாந்தமூர்த்தி காந்தியாரின் சம்பந்தி அன்று கிரிப்ஸ் திட்டமே போதும் என்ற திருப்திகொண்டாரில்லை ரூஸ்வெல்டே! சியாங்கே! லண்டன் டைம்சே! என்று வெளிநாட்டவரை வேண்டினார். கட்சியற்றோருடன் கூடினார். கால்கடுக்க ஓடினார்.

கிரிப்ஸ் திட்டம் இப்போது கவைக்குதவாததாகிவிட்டது! சர். ஸ்டாபோர்டு கிரிப்சும், இந்தக் கவைக்குதவாத காரியத்திலே ஈடுபடுவதைவிட, வேறுபணி புரிவோமென்று கருதி, இதுபோது விமான உற்பத்தி இலாக்காவின் தலைவராகிவிட்டார். பல ஆயிரம் மைல் பறந்துவந்து, பலப்பல பேசியும் பயனில்லை என்பதை உணர்ந்து, பழயபடி பிரிட்டன் பறந்து சென்று, சர். கிரிப்ஸ், தமது திட்டத்தை மறந்தும் போனார்! இந்த நேரத்திலே, ஆச்சாரியாருக்கு அறிவு துலங்கலாயிற்று, ஆஹா! தவறிவிட்டோம், பொன்னான சமயத்தை இழந்தே போனோம் என்று புலம்பலானார், கிரிப்ஸ் திட்டத்தை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும், என்று இன்று கூறுகிறார்! இம்முறையும், ஓராண்டு கழித்தே அவருக்கு அறிவு உதயமாகி இருப்பதைக்காணும்போது, நமக்கு நகைப்புடன் திகைப்பும் கலந்து வருகிறது! என்னே இவருடைய நிலை! சட்டசபையாவது சாவடியாவது சர்க்கா சுற்றுவதைவிட வேறு சூத்திரமில்லை என்று சூள் உரைத்தார், பிறகு சட்டசபை புகத்தான் வேண்டுமென்றார், பாகிஸ்தானா மகாபாபக்கிருத்யமல்லவா கோஹத்தி ஸ்திரீஹத்தி, சிசுஹத்தி, போன்றதல்லவா என்று பதைபதைத்தார், பிறகோ, பாகிஸ்தானால் பாதகமில்லை, சாதகமே என்று உபதேசிக்கிறார், போருக்காவது நம் ஆதரவு தருவதாவது, என்று கூவினார், பிறகோ, போருக்கு ஆதரவு தருவதே பொறுப்பு உணர்ந்தோர் கடன் என்று புகன்றார், கிரிப்ஸ் திட்டத்தைக் கதைப்பு என்றார், இன்றோ அதுவே இனிப்பு என்று இயம்புகிறார்! இங்ஙனம் இவருக்கு நற்கருத்து நெடுநாள் கடந்தே வரும், மர்மம் என்ன? இந்த விசித்திரசித்தரா விடுதலைப் போர்வீரராக முடியும் என்று சிந்தனை பிறக்கிறது? ஆச்சாரியாரின் அன்பர்கள் இதனை அவசியம் ஆர அமர யோசிக்க வேண்டுகிறோம்.

நினைப்பிலே தடுமாற்றமோ தாமதமோ, மந்தமோ, இருக்குமானால், அது நரம்பு அமைப்பிலே இருக்கும் கோளாறின் விளைவுதான் என்று சோவியத் மருத்துவர் கூறுகின்றனர், அதற்கென ஒரு சிகிச்சை மனையும் அங்கு உளதாம்! இது போர்க்காலமாக மட்டும் இல்லாமற்போனால், அன்பர் ஆச்சாரியார் அவசியம் ஒருமுறை அங்குச் சென்று வருதல் வேண்டும் என்று நாம் யோசனை கூறுவோம், ஆனால் போரல்லவா நடக்கிறது, எப்படிப் போகமுடியும்!

கிரிப்ஸ் திட்டத்தை ஆதரித்து அன்று ஆச்சாரியார், இன்று செய்வதுபோல அறிக்கை விடுத்திருந்தவாவது, ஓரளவு பயன் விளைந்திருக்கும். இன்றோ பிரச்னை கிரிப்சின் திட்டத்தை ஏற்றுக் கொள்வதா, இல்லையா, என்பதன்று! பாகிஸ்தானை ஏற்றுக் கொள்வது, காங்கிரசின் ஆகஸ்ட்டுத் தீர்மானத்தை வாபஸ் வாங்கிக்கொள்வது, போர் முடியுமட்டும் பொல்லாங்கு பேசோம் என்று உறுதிமொழி தருவது, என்ற முறையிலே பணியாற்றினால் மட்டுமே இப்போது பயனுண்டு. ஓராண்டுக்கு முன்பு உதயமாக வேண்டிய யூகம் இன்று தோன்றிப் பயனில்லை!

10.10.1943