அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


விதவையின் கண்ணீர்!

அந்தோ! அநியாயம்! பார்க்கவே சகிக்கவில்லையே
நாற்றம் அதிகமாக இருக்கிறது

அழுகிவிட்டது! அதனாலேதான் நாற்றம் இப்படி இருக்கிறது

எந்தப் பாவி பெற்றெடுத்தாளோ தெரியவில்லை. கள்ளியின் கருவீலே உதித்தது கோட்டான் போலிருக்கிறது விழி! குழலிபோல் இருக்கிறது கைகால்! அமாவாசை நிறம்! அகன்ற வாய்! பிழைத்திருந்தால் பெரிய தலைக்கிறுக்காக இருந்திருக்கும் போலிருக்கிறது.

குளக்கரையருகே கூட்டம். பிணமாகிக் கிடந்த குழந்தையைக் கண்டு பலர் பல விதமாகப் பேசுகின்றனர். இறந்துபோன குழந்தை பிழைத்திருந்தாலும், காணச் சகியாத உருவம், கண்டவர் ஏசும் ஜடமாய்த்தான் இருந்திருக்கும்! தாலியிழந்த தையல் யாரையோ வேலியோரத்தில் கூடியதன் விளைவு! அடக்க முடியாத உணர்ச்சியின் அறுவறை!

குழந்தை யாருடையது? யாருக்குத் தெரியும்? யாரோ ஓர்பாவி? எவளோ ஒரு காதகி! எந்தச் சனியனோ தெரியவில்லை.

அந்த ஓலைக்குத்துக் குடிசையிலே ஒண்டிக்கிடப்பளே சாந்தி, அவள் பெற்றெடுத்த பிள்ளைதான்! பெற்றுவிட்டுப் பிறகு வளர்க்க வகையறியாது, வம்புவளருமே எனமிரண்டு, குளத்திலே தூக்கி வீசிவிட்டாள் என்று கூறுகின்றனர் சிலர், அந்த விதவையோ விம்முகிறாள்., கைம்பெண்ணின் கண்ணீர் பார்ப்போரின் கருத்தைக் கரையவைக்குமென்று, நான் பெற்ற மகவு அல்ல! என்னை நம்புங்கள் என்று அந்த நாரிகூற ஊரார், சூலுடன் இருந்ததை நாங்கள் அறிவோமே என்றுரைக்கின்றனர். குழந்தைதான் பிணமாகிவிட்டதே, இன்னமும் யாருடையது என்ற கேள்வி ஏன் என்று கேட்கிறாள் சேயைப் பிணமாகக் கண்டதாய்! பிணமோ நாறிக் கிடக்கிறது!

கடைசிப் போராட்டம்
உயிரைத் திரணமாக மதியுங்கள்
வெள்ளையனே, வெளியே, போ

என்ற பல்வேறு முழக்கங்களுடன் ஆகஸ்ட் தீர்மானம் காந்தியாரால் நிறைவேற்றப்பட்டது. சர்க்காருடன் நேரடியான போராட்டத்தைத் துவக்குவது என்ற முடிவுடன், ரயில்கள் கவிழ்ந்தன, தந்திகள் அறுபட்டன, தபாலாபீசுகள் தீக்கிரையாயின, எங்கும் ஒரே அமளி, ஆகஸ்ட் தீர்மானத்தின் விளைவு இங்ஙனமிருந்தது. இன்றோ, காந்தியார், இந்த விபரீத விளைவு, பிறந்ததும் பிணமாக்கப்பட்டது. பிணமான பிள்ளையைப் பெற்றவள், தன்னுடையது நான் என்று கூறிக்கொள்ள முடியாத நிலை, காரணம், விதவையின் விருந்துவெளியே தெரிவது கூடாது என்ற மனப்பான்மைக்குக் கட்டுப்பட்டிருப்பதே, இதுபோல இருக்கிறது காந்தியாரின் பேச்சு, ஆகஸ்ட் தீர்மானத்தின் கர்த்தா, தமது முயற்சி முறியடிக்கப்பட்டு விடவே, பிதவைக் கண்ணீர் வடிப்பது போலக் காட்சி அளிக்கிறார்.

ஆகஸ்ட்டுத் தீர்மானம் அக்ரமம் அல்ல! ஆகஸ்ட தீர்மானத்தை வாபஸ் வாங்க எனக்கு அதிகாரம் இல்லை. ஆகஸ்ட் தீர்மானம் காலாவதியாகிவிட்டது. ஆகவே அதனை எப்படி வாபஸ் வாங்குவது, இருந்தால் நானே வாபஸ் வாங்க!

இவைகள் மகாத்மாக்கள் மட்டுமே பேசக்கூடிய மொழிகள்! மதிகுறைந்த முரண்பாடு மிகுந்த, பொருள்தேய்ந்த இம்மொழி, கூறுபோரைப் பித்தர் என்று கூறஎவரும் தயங்கார். ஆனால், விரிக்க முடியாத அளவு விளம்பரம் பெற்று, கோடீஸ்வரர்களின் முன்னோடுபவராக இருப்பதால் செல்வாக்குப் பெற்றுள்ள காந்தியார் பேசுகிறார், இவைகளை நாடுகேட்டும், நகைத்திடாது உளது.
உண்மையை உணர்வோரின் தொகை குறைவு. அவர்கள் அறிவர், காந்தியாரின் நிலைமை, நாம் முதலிலே தீட்டியுள்ள கதையிலே காணப்படும் கைம்பெண்ணின் நிலைமை போன்றிருக்கும் உண்மை. விதவையின் கண்ணீர், பலருடைய மனத்தை இளகவைக்கும், அதுபோலக், காந்தியாரின் பேச்சு, வைசிராயின் மனப் போக்கை மாற்றும் என்று காந்தியாரும் அவருடைய சீட கோடிகளும் நம்பி ஏமாற்றமடைந்துவிட்டனர். ஆகஸ்ட் தீர்மானத்தின் விளைவான குழப்பம் எனும் குழந்தையோ, பிணமாகிவிட்டது!!

குழந்தையும் இறந்துவிட்டது, கைம்பெண்ணும் கதறுகிறாள், நான்பெற்ற குழநதையல்ல என்று கூறுகிறாள். இந்நிலையிலே, விதவையை மன்னித்துவிடலாமே என்ற கூறுகின்றனர் சிலர், சர்க்காரோ, மீண்டும் இந்த விதவை, வேலி ஓரமோ சாலைப்பக்கமோ சென்று கருவுற்றால் என்ன செய்வது என்று கேட்கின்றனர். சரியான கேள்விதான்!! சோரம் போகும் பேர்வழி என்று தெரிந்தும், அரசியல் விபசாரித்தனத்திலே கை தேர்ந்தவர்கள் என்பதை அறிந்தும், சர்க்கார், மறுபடியும், மறுபடியும், காந்திக் கூட்டத்தாரிடம் பேரம் பேசுவதிலே கவலை செலுத்துகிறதேயொழிய, விம்மிடும் விதவை, வேலியருகே சென்று கூலிக்குக் கலவியைத் தரும் கோணல் நடத்தைக்காரியின் போக்குத் தெரிந்துகொண்ட பிறகாவது, அரசியல் விபசாரம் புரிந்தோருக்கு ஆடசிபுரிய உரிமை இல்லை என்று ஆண்மையுடன் ஏன் கூறலாகாது என்று கேட்கிறோம்.

(திராவிடநாடு - 16.07.1944)