அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


‘விதவையின் வேதனை’

நரம்புகள் தளர்ந்து, நரை வளர்ந்து, தள்ளாடி தத்தளித்து, ஊன்று கோலோடு, உலவ வேண்டிய கிழ விதவையாகி விட்டது காங்கிரஸ். உள்ளுக்குள்ளேயே சண்டையும் ஒருவர்க்கொருவர் கூச்சலும், பதவி வேட்டையும் சுயநலப்போட்டியும் ‘தள்ளாடும் கிழவியை, ‘இப்பொழுதோ இன்னும் கொஞ்ச நேரத்திலோ’ என்கிற கேவல நிலைக்கு இழுத்துச் சென்று கொண்டிருக்கிறது.

ஆர்ப்பரித்து- அரசியல் வெற்றிக்குப் பாடுபட்ட காங்கிரசின் அத்தியாயம் முடிந்துகொண்டிருக்கிறது. நாசிக் மாநாடும், அதற்குப் பின் காரியக் கமிட்டி அமைச்சு தலைவர் தாண்டன் தாண்ட வேண்டியிருந்த நிகழ்ச்சிகளும் இதை விளக்கும், உண்மைக் காட்சிகளாம்!

வலுவிழந்து, மக்களால் மூக்கறுக்கப்படும் ‘முத்தண்ணாக்களின்’ கூட்டு வேட்டை மடமாகிவிட்ட, காங்கிரசைக் கண்டு பரிதாபமே ஏற்படும். இரக்க சிந்தையுள்ளோருக்கு.

கூறிய உறுதிகளை நிறைவேற்றத் தவறியும், ஆட்சி பீட மேறியதும் அட்டகாசப் பாதையில் புகுந்தும், ஏழைகளின் கண்ணீரைத் துடைப்பதற்குப் பதில் இன்னல்களை வீசியும், ‘சித்தன் போக்கு சிவன் போக்கு’ என்று காங்கிரஸ் சென்றதன் விளைவாக செல்வாக்கிழந்து சீரழிந்து வருகிறது!

உள்ளத்தில் தூய்மையும், உணர்ச்சி வேகமும் கொண்டு பணியாற்றும் முற்போக்குக் கட்சிகள் வசம், மக்கள் மனம் திரும்பி வருகிறது. தென்னாட்டைப் பொறுத்தமட்டில், இளைஞர்களின் இதயக் கோட்டையான நமது கழகம் மக்கள் ஆதரவால், புன்சிரிப்போடு, தன் கொள்கை மணம் வீசி வளர்ந்துகொண்டே போகிறது!

இந்த வளர்ச்சியைக் காணும், ‘வக்கிரங்கள், ஆங்காங்கே ஆத்திர மூட்டக்கூடிய நடவடிக்கைகளில் இறங்கி, வருவதாக நமக்குத் தகவல்கள் வந்த வண்ணமேயுள்ளன.

கிழவி சீறுகிறாள்! கிழவிதான் கையிலிருக்கும் ‘ஆட்சி’ என்கிற தடியைத் தூக்கி வீசுகிறாள்!!

நல்லோர் நகைக்கூடிய செயல், எனினும் நாடோறும் நிகழ்கிறது. இங்கு.

நமது கழகப்பணிக்கு குந்தகம் விளைவிக்கும் நோக்குடன் செல்வாக்கிழந்த காங்கிரஸ் கட்சியினர் ‘வேதனைப்பாதை’ நோக்கி விரைகின்றனர்.

ஆட்சி தங்கள் கையிலிருப்பதால், அதிகார ஈட்டியை ஒருபக்கம் வீசுகின்றனர்!

இன்னொரு பக்கம் கூலிகளையும் காலிகளையும் பிடித்து ‘ஆகஸ்டு’ வீரத்தில் இறங்குகின்றனர்!

மதுரையில், இருட்டியநேரத்தில் 14.10.50 அன்று, மேங்காட்டுப் பொட்டலில் இருந்த கழகக்கொடியை இறக்கி, கம்பத்தைத் துண்டாக்கியிருக்கின்றனர்!

மதுரையில் மட்டும் என்றல்ல, திருச்சி தூத்துக்குடி, விருத்தாசலம், அதிராம்பட்டினம், காஞ்சிபுரம் ஆகிய இடங்களில் காங்கிரஸ் கட்சியினர் நடந்து கொள்ளும் போக்கு, வார்த்தைகளால் வர்ணிக்கக் கூடியதல்ல.

‘பொதுக்கூட்டம்’ போட்டு ‘நாற்றத்தை’ வீசுகின்றனர்! ‘தூ.தூ’ என்று, இகழ்ந்துரைக்குமளவு ‘கேவலத்தை’ எட்டிப்பிடிக்கின்றனர்! ‘இரவு நேரத்தில்’ ஏதாவது தங்கள் கூலிகளைக் கொண்டே செய்துவிட்டு நம்மீது பழியைப் போடுகின்றனர்! காஞ்சியில் பெரியார் வந்து பேசிய கூட்டத்துக்கு முதல் நாள் ‘நேரு மார்க்கட்’டில் நிகழ்த்தியிருக்கும் சம்பவம் இந்த வகையைச் சேர்ந்ததுதான்!

வளர்ந்து வரும் நம்மைக்கண்டு, சூரியனைக் கண்டு ஏதோ ‘என்னமோ’ செய்ததாமே அது போல, இறங்குகின்றனர்!

‘சில்லறைகள்’ தானே என்று நாம் இவைகளையெல்லாம் ஒருபுறமொதுக்கிக் கொண்டே சென்று கொண்டிருக்கிறோம். ஆத்திரத்தால் மோதிக்கொண்டேயிருக்கும் ‘ஆடுசுபாவத் தினரையும்! ஆட்சி அகங்காரத்தால் வீண்வம்புக்கிழுக்கும் ‘விதவை’க் கட்சியினரையும் காண நாம் ஆத்திரங்கொள்ள வில்லை! காரணம், நமது பணிமகத்தானது மலையைப் புரட்டிட வேண்டிய நேரத்தில் ‘எலிகளுக்கும் முயல்களுக்கும்’ போராடுவது வீண் வேலை என்பதை நாம் அறிவோம்.

மோத வரும், ‘சில்லறை’ கள் முக்காடிட்டு மூலைக்குச் செல்லும் காலம் நெருங்கிக் கொண்டிருக்கிறது என்பதையும் நாம் அறிவோம்.

எனினும், பொது வாழ்வு என்கிற களங்கமற்ற நீரைக் கலக்கிச் சேறாக்க முனையும் ‘இதுகளை’க் காணும்போதுதான், நமக்கு வேதனை அதிகமாகிறது.

‘நம் வழியில் நாம் போவோம். அவர்கள் வழியில் அவர்கள் செல்லட்டும், மக்கள் இருக்கிறார்கள் உண்மைக்கு மதிப்பளிக்க என்று நினைத்து தங்கள் கட்சிக் கொள்கைகளைப்பற்றி பிரச்சாரம் செய்துகொண்டு போவதைவிட்டு நம்மைப் பார்த்துப் பார்த்துச் சீறுகின்றனர்! நமது வளர்ச்சியைக் கண்டு ‘குறுக்கு வழிகளி’லெல்லாம் பாய்கின்றனர்!

இந்த வழிகள் கேவலமானவை மட்டுமல்ல ஆபத்தையும் தரக்கூடியவைகளாகும். நாட்டு வாழ்வும், பொதுப்பணியும், இது போன்ஒற வைகளால் அலைக்கழிக்கப்படுவது நல்லதல்ல ஒழுங்கையும் நீதியையும் உதவாக்கரை யாக்குவதாகும்.

கட்சி மட்டுமல்ல வாழ்வு-வாழ்வு பெரிது, ஒழுங்கும், மனத்தூய்மையும் முக்கியம். இதை மறந்தால் எதிர்காலம் இருண்டுவிடும்.

வேதனைப் பாதையில் கூத்தாடும் ‘விதவைகள்’ இதனை உணர வேண்டும்! குத்திவிடும் புத்திகொண்டோர், இதனை அறிய வேண்டும்!!

(திராவிடநாடு 22.10.50)