அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


விவேக சிந்தாமணி மட்டும் போதாது!

மண் எங்கும் இரத்தம்! விண் புகை மயம்! வீதிகளில் டாங்கிகள், வீடுகளில் பிணங்கள்! ஸ்டாலின்கிராட், இடிந்த கட்டடங்க்ள், கருகிய இடங்கள், கண்ணை மருட்டும் கோரமும் காதைக் குடையும் வேட்டொலியும் கொண்ட பயங்கர தகராக, பழிவாங்கும் பட்டினமாக, பலிபீடமாக, பசி தீராப் புலியாக இன்று இருக்கிறது. ஒரு தெருவேனும் உருவாக இல்லை. ஒரு வீடேனும் முழுதாகக் கிடையாது. ஒரு நிமிடமாவது போல் நடவாமல் இருப்பதில்லை. ஆயிரம் நாஜி விமானங்கள் அந்த எஃகுக்கோட்டையைத் தாக்கி வருகின்றன; இடிந்த கட்டடங்களிலே ரஜிய வீரர்கள் பதுங்கிக்கொண்டு, நுழையும் நாஜியை நையப் புத்தபடி உள்ளனர். புகை, சுருண்டு சுருண்டு, சுடுநாற்றத்தையும் பிணவாடையையும் எங்கும் பரப்பி, நெஞ்சையும் நாசியையும் பாழாக்குகிறது; நேருக்கு நேரி நின்று, நாஜிகளுடன், நில்லு! என்னைக் கொல்லு! பிறகே இந்த இடம் உனக்கச் சொந்தம்! என்று கூறும் செஞ்சேனைச் சிங்கங்கள், சீறிப் போரிடுகின்றன. ஒரு தெருவைப் பிடிக்க, 200 டாங்கிகளுக்குமேல் தேவைப்படுகிறதாம் நாஜிகளுக்கு; இவ்வளவு பலிகொடுத்துப பெற்றாலும், மறுபடியும், அதே வீதியிலே வீரப்போரிட்டு ரஜியர்கள் வெற்றிக்கொடி நாட்டுகின்றனராம். ஸ்டாலின் கிராட்சமர், சரிதம் இதுவரை காணதவிதமானது. கடந்த ஜெர்மன் சண்டையின்போது, வெர்டூன் போரை, வீரர் செயல் என்று வியந்தனர். ஸ்டாலின் கிராட்சமரைக் கண்டோரும் கேட்டோரும், இனி, வெர்டூன் வெறும் விளையாட்டு என்ற கூறுவர். அத்தகைய உக்கிரப் போர் நடக்கிறது. அங்கு நாஜிகளே எதிர்பார்த்தது இதுவல்லவே! எங்கிருந்தோ இந்தச் செஞ்சேனை கிளம்புகிறதே என்று ஆச்சரியப்படுகின்றனர்.

ஸ்டாலின் கிராட் மக்களே! பணிந்துவிடுங்கள். போரிட்டுப் பயன் இல்லை. பாய்ந்து வருகிறோம் பாரீர் என்று, நாஜி விமானங்கள் குண்டுக் கடிதங்களை வீசி, வாரங்களாகி விட்டன. பின்னர் குண்டும் வீசினர்; கொடுமை புரிந்தனர். ஸ்டாலின்கிராட் சளைக்கவில்லை! நேச நாட்டுப் பொருள், வட ரஜிய துறைமுகத்திலே வந்து சேர்ந்தன. மார்ஷல் டிமோஷெங்கோ, ஸ்டாலின் கிராடைத் தாக்கும் நாஜிப படைகளை விலாப் பக்கமும் தாகுகிறார். உலகமே வியந்து போற்றுகிறது. அந்த வீரர்கள் போரிடும் விதத்தைக் கண்டு. வெண்டல் வில்க்கி கூறியபடி, பல இலட்சம் ரஷியர்கள் படுகளத்தில் மாண்டனர். பல இலட்சம் ரஷியர்கள் நாஜிகளின் கைதிகளாயினர். பொருள் நஷ்டம் அபாரம்! ஆயினும், தன்னந் தனியே நின்று போரிடும் ரஷ்யா தலைகுனியவில்லை! எவ்வளவோ இன்னல்! குளிர்காலம் பிறக்கிறது. நல்ல உணவு, போதுமான உடை குளில் போக்கும் கரி, மரம் முதலியவையும் தேவையான அளவு ரஷியருக்குக் கிடையாது. குளிரையும் கொடுமையையும் சகித்துக்கொண்டு, ஐரோப்பாவின் அடிமை நாடுகள் தரும் பெரும் உதவியைக் கொண்டு, ஹிட்லர் தன் முழு சக்தியுடன் தாகுகுவதையும் தடுத்து நின்று, தன்னிகரற்ற தனிப்பெரும் வீரனாய் விளங்குகிறது ரஷியா! வாழ்க ரஷியா! வெல்க சோவியத்!

ஸ்டாலின் கிராடை நாஜிகள் பிடித்தாலும் பயனில்லை! சுடுகாடுதான் கிடைக்கும். சுந்தரமான நகரம் போய்விட்டது. நாஜிகள் ஆர்ப்பரிப்புச் சுருதியும் குறைந்துவிட்டது. ஹிட்லரின் படையும் அலுத்துவிட்டது. குளிரும் கூத்தாடத் தொடங்கிவிட்டது.

வீர ரஷியரைப் பாரீர்! தீரமிக்க சீனர் புகழ் கேளீர்! சாலமன் தீவிலே அமெரிக்கா பெற்ற வெற்றியைக் காணீர்! மடகாஸ்கரிலே மாற்றான் மண்டியிட்டான் அறிவீர்! ஜெர்மன் நகர் மீது குண்டு சினோம், குதூகலிப்பீர்! ஜெர்மன் நகர் மீது குண்டு வீசினோம், குதூகலிப்பீர்! என்று பிரிட்டிஷ் பிரமுகர்கள் பேசுகின்றனர். பத்திரிகைகள் எழுதுகின்றன. நாஜி பலத்தின் பெரும்பகுதி ரஷிய களத்திலே நசுக்கப்பட்டுவிட்டது என்றுரைக்கின்றனர். நமது பலம் வளர்ந்துகொண்டே வருகிறது. நமது துருப்புகள் துடிக்கின்றன. நமது தலைவர்கள் தயாராக உள்ளனர். நமது கடற்படை கெம்பீரமாகக் கடலிலே உலவுகிறது என்று கூறுகின்றனர். தக்க சமயம் வந்ததும் - அந்தச் சமயம் வந்துகொண்டே இருக்கிறது - நாங்கள் இரண்டாம் போர்முனை துவக்கத்தான் போகிறோம் என்று நம்பிக்கை தருகின்றனர். இங்கு, ஜெனரல் வேவல், இழந்துவிட்ட பர்மாவை மீட்கவேண்டுமென்பது, என் திட்டம் என்று கூறுகிறார். உலகம், அப்படியா! அப்படித்தானா! என்ற கேட்டுக் கேட்டுக் களைத்துவிட்டது. கடும்போர் ஓரிடத்திலே, காகிதக்கணை மற்றோர் புறத்திலே என்று கூறவேண்டிய நிலைமையில் ஒருக்கிறோம். குளிர்காலம் பிறந்ததும், இரண்டாம் போர்முனை ஏற்பட்டால் ஜெனரல் வேவலின் படைகள் பர்மாவுக்குள் புகுந்து, ஜப்பானியப் படைகளைத் தாக்கினால், தினமும் ஆயிரம் விமானங்கள் பெர்லின்முது குண்டு மாரி பொழிந்தால், அமெரிக்க பறக்கும் கோட்டைகள் டோக்கியோவைத் தாக்கினால், உலகம், கேட்டு உவகை கொள்ளும், ரஷிய களத்திலே, வீரர்கள், பன்மடங்கு அதிகரித்த உற்சாகத்துடன் போரிடுவர். ஹிட்லரும், இருமுனைகளிலே படைகளைப் பிரித்து ஏவி, இடையே நின்று, இங்கு என்ன நிலை? அங்கு என்ன நடக்கிறது? என்று கேட்டுக் கேட்டுக் கலங்கி, இரு நெருப்பின் இடையே சிக்கிய ஒநாய்போல் ஓலமிட்டுக் கிடக்க நேரிடும்.

இரண்டாம் போர் முனையைத் துவக்கவேண்டும் என்று எங்களை யாரும் குத்திவிட வேண்டியதில்லை என்று கூறுகிறார் பிரிட்டிஷ் துணை முதலமைச்சர் மிஸ்டர் அட்லி. அவசரப் படேல் என்ற பல்லவியைப் பல பிரிட்டிஷ் பிரமுகர்கள் பாடுகின்றனர். அவசரப்பட்டுக் களத்திலே குதித்து, முன்பு டன்கர்க்கிலே பின்வாங்கி ஓடினதுபோல், நேரிட்டுவிடக்கூடாது. ஆகவேதான் சகல ஏற்பாடுகளையும் சரியாகச் செய்துகொண்டு, சக்தி அத்தனையையும் பூரணமாகத் திரட்டிக்கொண்டு, களத்திலே கால் வைப்போம். புகுந்தால், பெற்றி கிடைக்கம் என்னும் நிலைமை தோன்ற வேண்டுமே என்று விளக்கமுரைக்கின்றனர். போர்முனை துவக்கும் விஷயமாக ராணுவத் தலைவர்கள் கூறுவதையே கேட்கவேண்டும். வெறும் பேச்சு உதவாது என்று விளம்புகின்றனர்.

இவை அத்தனையும் விவேகமாக இருக்கலாம். அதிலே நமக்குச் சந்தேகமில்லை. இந்த விவேகசிந்தாமணியை மட்டும் பிரிட்டிஷார் பதிப்பித்துக் கொண்டிருந்தால், விற்பனை குறையும் என்று மட்டும் கூற ஆசைப்படுகிறோம். வரட்டும், வரட்டும என்று காத்துக்கிடக்கும் போக்குதான், இதுவரை வம்பாக முடிந்ததன் காரணம். வந்து பார்க்கட்டுமே சிங்கப்பூருக்கு. நெருங்கட்டும டோப்ரூக் அருகே என்று கூறிக்கொண்டூ இருந்தது. பின்னர் வேதனையே தந்தது, அச்சு நாட்டினர், அவசரக்காரர். ஆத்திரங்கொண்டோர். கஷ்ட நஷ்டம் பற்றிய கவலையற்றோர். திடீரெனப் பாய்வர். திக்கெட்டும் திரும்புவர். தன்வலி மாற்றான் பலியைத் திராசிட்டுப் பார்த்துவிட்டே துருப்புகளைச் செலுத்தவேண்டும் என்ற திட்டங்கொண்டோரல்ல. அவர்களை அழிக்க, விவேக சிந்தாமணி மட்டுமூ போதாது. இரவு நெடுநேரம் வரையிலே நிபுணர்கள் விழித்திருந்து விவாதிப்பது போதாது. பொருள் உற்பத்திப் பெருக்கம் கண்டு, பெருமைப்படுவது போதாது. பெரிய பெரிய படை புறப்படுகிறது என்று பேசுவது போதாது. இரத்தத்தைச் சிந்தவேண்டும். ஹிட்லரின் கன்னெஞ்சமும் கலங்குமளவு, நாஜிப்படை நடுங்குமளவு, இரத்தத்தைச் சிந்தவேண்டும். அந்த செந்நீரே, பிடிபட்ட நாடுகளுக்கு இன்றுள்ள அடிமை அழுக்கைப் போக்கி, சுதந்திரத்தைத் தரும். அந்த வெள்ளமே, கள்ளச் சிந்தனைகொண்ட சள்ளைக்காரரைச் சாய்க்கும். ஆம்! நாஜியையும் அவனது கிழக்கத்திக் கூட்டாளையையும் நசுக்க, விவேகசிந்தாமணியுடன் வீர வெண்பவும் வேண்டும். பல செபாஸ்டபூல்கள் நேரிட்டும் கவலையில்லை. வெற்றிக்காக அத்தகைய விலை கொடுக்கத் தான் வேண்டும. வேதனையும் நஷ்டமும் பிறக்கட்டும். பீதி கொள்ளத் தேவையில்லை. நந்தவனத்திலே நாரியர் நறுமலர் கொய்வதுபோல், வெற்றியைப் பெற முடியுமா! பல இலட்சம் பேர் பலியாகலாம்! பாதகமில்லை. இருந்தும் இறந்தோராக உலகினரை விட்டுவிடுவதைவிட பல கோடி மக்கள் பதட்டத்தோடு வாழ சில இலட்சம்பேர் மாள்வதிலே, உலகக்கு உண்மையில் நஷ்டமில்லை. உலகம் இதைத்தான் இன்று விரும்புகிறது. நாலாம் ஆண்டு இது! இதுவரை நடந்தவை, நம்மவருக்கு நாக்கில் நீரின்றிச் செய்துவிட்டது. இவ்வாண்டும். விவேக சிந்தாமணியையே வெளியிட்டால், உலகம், உவகையுடன் அதனைக் கேட்டுத் திருப்தி பெறாது.

பிரிட்டிஷ் விவேகசிந்தாமணி இங்ஙனம் இருக்க, அங்கே, அகில உலகும் ஆசசரியப்படும் ரஷியாவிலே, சூரர்கள் வாழும் சோவியத்திலே, ஸ்டாலின் ஆளும் நாட்டிலே, பொதுஉடைமைப் பூமியிலே நாஜியின் நாட்டமத்தனையும் பாய்ந்துள்ள இடத்திலே ஓயாத சண்டை, உக்கிரப்போர், உள்ளம் குலுங்கும் இரத்த வெள்ளம், பிணக்குவியல், போர்ப்புயல்! விவேகம், பிரிட்டனிலே முடிசூட்டிக்கொண்டிருக்கலாம்; சோவியத் நாட்டிலே இத்தகைய விவேகசிந்தாமணி வெளியிட நேரமில்லை! பேச ஆள் இல்லை! விவாதிக்க நிபுணர்கள் இல்லை! பிரமுகர்கள் வேறு வேலை செய்தபடி இருக்கின்றர்! நேரம் பூராவும், நினைப்பு பூராவும், நாள் பூராவும், நாடு பூராவும், போர், போர், போர்! எதிரியைத் தாக்கு! எதிர்த்துப் போரிடு! எங்கும் போர்புரி! இறக்கும்வரை போர்! என்பதே பேச்சாகிவிட்டது. கப்பல் நஷ்டத்துக்கும் கப்பல் உற்பத்திக்கும் உள்ள புள்ளிவிவர பேத விளக்கத்துக்கோ, பிறவற்றுக்கோ சோவியத் நாட்டிலே நேரமில்லை!

ஸ்டாலின் கிராடிலே எத்தனை படை? இன்னம் எவ்வளவு வேண்டும்?

லெனின் கிராடிலே எதிரி எவ்வளவு தூரம் பின் வாங்கினான்?

காகசசிலே கணவாய்களிலும் மலைப் பகுதியிலும் காசாக் வீரர்கள் கண்காணித்து வருகின்றனரா?
காலினின் முனையிலே ஜெர்மன் கடைகள் களைத்துக் கிடைக்கின்றனவா? வாரனேஷில், ரிஜாவில், நமது படைகள் முன்னேறினவா? என்று கேட்டுக் காரியத்தைக் கவனிக்கவே. ஸ்டாலினுக்கு நேரமிருக்கிறது. இவ்வளவு வீர வேகங்கொண்டு, வெறிபிடித்த ஜெரிமனியரை விடாது விலா நொறுக்கிவரும் ரஷியா, நேச நாடுகளிடமிருந்து, எதிர்பார்ப்பது என்ன? நீங்களும் பேரிடுங்கள்! இரண்டாம் போர் முனையைத் துவக்குங்கள். எல்லா பாரத்தையும் எமது தலைமீதே இருக்குமாறு விடாதீர். இந்தச் சமயத்திலே இரண்டாம் போர்முனை ஏற்படுத்தினால், நாஜிகளின் படைபலம் பினவுறும். நாங்கள் அந்தச் சமயத்திலே சரியான சவுக்கடி தந்து. எதிரியைச் சாய்ப்போம் என்றே ரஷிய களத்திலே சாகும் ஒவ்வோர் நாஜியும், உடையும் ஒவ்வோர் விமானமும், ரஷியா மட்டும் ரணகளச் சூரனாக இல்லது போயிருந்தால், நேசநாடுகள் மீது ஏவப்பட்டிருக்கும் என்பதில் சந்தேகமில்லை!

துள்ளிக் குதித்தவனைத் துவள வைத்துவிட்டது ரஷியா! பாந்தோடி வந்தவனைப் பயப்படச் செய்துவிட்டது. கொக்கரித்தவனைக் குமுறச் செய்துவிட்டது. நாஜியை நாணமுறச் செய்துவிட்டது!

இதனை ரஷியா எங்ஙனம் செய்தது? இரத்தத்தால் களத்தை மெழுகி, ரஷியக் காளகைளைக் கழுகு கொத்திட பலி தந்து, ரஷிய செல்வத்தைச் செலபிட்டு, வீரப்போர் புரிந்து! இதுவரை இதனால் ரஷியாவுக்கு எற்பட்ட நஷ்டம், பலப்பல டன்கர்க்குகளுக்குச் சமானமாக இருக்கும். யுக்ரைன் போனாலென்ன? கோதுமை இராது சரி! வேறு இடத்திலே கோதுமை கிடைக்கும். மானம் பறிபோகவிடலாமோ, என்றன்றோ எண்ணினர் சஷியர். செபாஸ்டபூல் போனாலென்ன? அங்கு நாஜி அடைந்த நஷ்டம் போதும்! என்று கூறியன்றோ, வேறு களத்திலே வீரத்துடன் ரஷியர் போரிடுகின்றனர். அவர்கள் சலித்தனரா, இவ்வளவு சமர்கண்டு! களைத்தனரா, இத்தனை கடும் போருக்கும்! இளைத்தனரா, ஏங்கினரா, இவ்வளவு இடம் போயிற்றே. இத்தனை இலட்சம் வீரர் மாண்டனரே என்பதை எண்ணி! போரில் புகுந்தோம், போரிடுவோம்! என்பதன்றி வேறென்ன எண்ணுகின்றனர். ஊருக்கோர் படை வீதம், உலகெங்கும் திரட்டினாலும், இந்த உத்தம வீரர்களுடன் நின்று போரிட்டு, இவர்கள் களத்திலே பிணமாக விழும்போது. கூடக் கீழே வீழ்ந்து இறப்பதைப் பெருமையாகக் கருதும் இளைஞர்கள், எத்தனை எத்தனையோ இலட்சம் உண்டு என்போம். இத்தாலியிலும், ஜெர்மனியிலும் கூட இருப்பர் என்போம்.

வீர ரஷியர்கள், இத்தனையும் கேட்டாரில்லை. ரஷிய மண்ணுக்கு, மற்ற நாட்டாரின் குருதியைக் கொட்டிடக் கூறவில்லை. பொது எதிரியை நீங்களும் ஒரு புறம் தாக்கக் கூடாதா என்று மட்டுமே கேட்கிறது. வீரனின் வேண்டுகோள் அது, கோழையின் கூக்குரல் அல்ல! நேசநாடுகள், இந்த வேண்டுகோளை, எப்போது நிறைவேற்றும்? கேட்டால், குத்தாதீர் என்பார் அட்லி, கேளாவிட்டால் மறவாதீர் என்பார் போலும். ஆனால் ஹிட்லரின் ஆணவப் பேச்சுக்கு 2 ஆம் போர்முனை தவிர வேறு என்ன பதில் உண்டு!

(திராவிடநாடு - 04.10.1942)