அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


விழா!
தமிழகம் விழாக்கொண்டாடுகிறது, களிப்புடன், பெருமையுடன், தனது அருமருந்தன்ன புதல்வனின் வெற்றி கண்டு பூரிப்படைகிறது. தமிழர் எங்கும் தலைநிமிர்ந்து நடந்து, எமது கவிஞரின் விழா காண வாரீர் என்று அன்புடன் அழைக்கின்றனர். எந்த நாட்டிலும், இத்தகைய விழாக்கள், அடிக்கடை நடைபெறாது, வாழ் நாளிலே, இவ்விதமான விழா ஒரு முறை, இருமுறை ஏற்படக்கூடும். பல தலைமுறை களுக்கொரு முறை மட்டுமே, இத்தகைய விழாவினைக் காணும், நாடுகளும் உள்ளன. நம்நாடு, மற்ற நாடுகளைவிட, இத்துறையில், முன்னணியிலுள்ளது. எழிலும் திறனும், வளமும் செயலும் நிரம்பிய நாடு. வாழ்வின் அலைகட்கு அஞ்சா நாடு, இயற்கையின் இன்பச் சோலை, வீரர் கோட்டம், கற்புடை மாதரின் பொற்கோட்டை மட்டுமல்ல, நம்நாடு கவிதா மண்டலம் இதன் வனப்பு, கவிதா உள்ளத்தைக் கிளறக் கூடிய விதமாக அமைந்திருக்கிறது. இங்கு வானிடம் உறவு கொண்டாடும் மலை உச்சிகள், தேனிடை தோய்த்தெடுத்த செந்தமிழ் நடையில், பலரைப் பாமாலை தொடுக்கப் பணித்திட்டன. ஆறுகள், கலை உள்ளத்தில் ஊற்றுப் பெருக்கெடுத்தோடும் வண்ணம் செய்தன. சாலையும் சோலையும், அவை தம்மில் உலவும் மாந்தரும் மயிலும், கவிதையை வழங்கும் பண்பினைத் தருபவையாயின. கடலைத் தொட்டு முத்தமிடும் ஊர்களும், ஆறுகளை மாலைகளாகக் கொண்ட அணிபுரிகளும், மலைக்கோட்டை கொண்ட இடங்களும், இங்கெல்லாம் வதியும், ஆற்றல் மறவரும் அவர்தம் அழகு மகளிரும், வீரக் கழலொலியும், மதலையர் குதலையும், மாதரின் மதுர மொழியும் பிறவும், மாண்பினை மீறா மகிழ்ச்சியைத் தந்து, எங்கும் கவிவாணகர்ள் உலவிடும் பெருமைக்குரிய நிலையைத் தந்தது - எனவேதான் வேறு பலநாட்டினர் விழித்தெழா முன்பு இங்கு, சங்கம் நிறுவியிருந்தனர், புவலர்கள் ஆரசோச்சுபவனை ஆள்வோராயினர், அறிவும் அழகும் பின்னிக்கொண்டுள்ள அருக்கவிதைகளை இயற்றினர். தமிழகம், வெண் மணற்பரப்பில் தன் நிலவொளி வீசியது போன்ற கட்சி தந்தது. இது ஓர் நாள்.

இடையே வந்தது இடர். இருள் புகுந்தது, இடரின் துணைக்கொண்டு மனமுரள் மிகுந்தது. மதிமறைந்தது, முகிலிடை மதியென! மன்னர்கள் கோலாகலராயினர்! புலவர்கள் பூஜாரிகளாயினர்! பிறகு மக்கள், மனவளம் கெடாது வேறென்ன விளையும்? பச்சை மாமாலையைக் கண்டு பா பாடியது போயிற்று! பவளவாய்ப் பெண்ணினைப் பாராட்டிய பாடல் குறைந்தது! குழந்தையின் கொஞ்கு மொழியும் குறுநடையும் பிறவும், கவிதைகட்கேற்ற கருத்தாக அமையும் நிலையும் போயிற்று! வீரன் கைவாள், அவன் மார்பின் வடு, இவைபற்றிய நினைப்பு குறைந்துவிட்டது. பச்சைமா மாலைபோல மேனி, பவளவாய்ப் கமலச் செங்கண், அச்சுதா, ஆமரர் ஐறே! என்பனபோன்ற பஜனைப் பாடல்களைப் புலவர்கள் இயற்றலாயினர். தமிழகத்தின் மாண்பு, ஆரியக் கற்பனைக்கு வாழ்க்கைப்பட்டு, வகைகுன்றிப் போயிற்று.

கிழக்க வெளுக்காலாயிற்று! ஒளியின் கீற்றல்கள் மெள்ள மெள்ளத் தலைதூக்கலாயின. தாளச் சத்தமும் மேள முழக்கமும் மிகுந்திருந்த போதிலும், புரட்சிக் குரலொலியும், கிளம்பலாயிற்று. விண்ணை நோக்கி நின்ற கண்கள் மீண்டும் மண்ணை நோக்கலாயின. மக்கள் மீது மீண்டும் சிந்தனை சென்றது. தமிழ் வென்றது!

அந்த வெற்றி விழாவே, நாம் குறிப்பிடுவது, புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அவர்கட்குத் தமிழகம் இதுபோது அளிக்கும் பொற்கிழி ஒரு தனி மனிதருக்குக் காட்டும் அன்பு, ஆதரவு, மதிப்பு மட்டுமல்ல, கலைத்துறையிலே, மீண்டும் மக்களுக்கு மகத்தான வெற்றி கிடைத்துவிட்டது என்பதனை உணர்ந்து உள்ளம் மலர்ந்து, அந்த வெற்றிக்கு அளிக்கும் விழாவாகும். இதனை நாம், “புதிய காலம் பிறந்தது” என்பதைக் காட்டும், களிப்புக்குரிய விழாவாகக் கருதுகிறோம்.

விழா, பலவகை, வீழ்ந்து வணங்கும் விழா, வியந்து வணங்கும் விழா, கூவி மகிழும் விழா, கும்பலில் கூடுவிழா, கொஞ்சி மகிழும் விழா எனப்பல உண்டு. திருவிழா, பலன் கோரிப் பரமனை வேண்டுவதற்குப் பயன்படுத்தப்படுகிறது. மன்னரின் பொருட்டு நடைபெறும் விழாவில், மக்களில் ஒருவன் எனினும் நமக்கெல்லாம் மன்னனானான்! அவன் பொன்னாடையைப் பாரீர்! பட்டத்துக் குதிரையின் புதிய சேணம் காணீர்! பவனி அழகைப் பாரீர், என்று வியந்து கூறி., கோல்கொண்டோனுக்கு மரியாதை காட்டுவது, சட்டதிட்டம் என்பதனால், வணங்குவது நடைபெறுகிறது. வீர்ன, வெற்றிபெற்று நாடு திரும்பும்போது, களம் காணாதருங்கூட, வர இருந்த ஆபத்தை ஒழித்தான், வாகை சூடினான் நாட்டின் பெருமையை நிலைநாட்டினான் என மகிழ்ந்து, அவன் புகழினைக் கூவிடும் விழா நடைபெறுகிறது. மணவினையிலே கும்பலில்கூடி மகிழ்கிறோம். கொஞ்சி மகிழ்கிறோம், காதல் கை கூடியதால் ஏற்படும் விழாவில்! கவிஞருக்குக் காணிக்கை செலுத்தும் விழா, இவை அத்தனையையும் மிஞ்சிடும் அளவுக்கு நெஞ்சில் இடம் பெறுகிறது! வெற்றி களிப்புத் தரும், ஆனால், பல உயர் பறிகொடுத்து, பலர் உறுப்பிழந்து, பிறகு கிடைத்தது வெற்றி என்பதானல், அந்தக் களிப்புக்குப் பிறகு கவலையும் உண்டு! முற்றும் மகிழ்ச்சி என்பதில்லை! உசனைத் தொழுது விழாக் கொண்டாடி, மகிழ்வோம், ஆனால் மோசக்காரன் வாழவும் நல்லவன் நாசமாகவும் காண்கிறோ மானதால், விழாவின் போது, சித்தத்தைச் சிவன்பாலோ அவர் பொருட்டு ஏழும் சத்தத்தின் பாலோ விட்டோமெனினும், பின்னர், மிக விரைவிலே, சித்தத்தைச் சலிப்புச் சிறை கொள்கிறது. மன்னர் பொருட்ùழும் விழாவிலே, மகிழ்ச்சி உண்டு. ஆனால், அதனுடன் அச்சமும் கிளம்பும்! மணவினையிலே, மனத்தாங்கல் ஏழுவதுண்டு, மார்பில் பூசிய சந்தனம் உலராமுன்னம், மனையிலே சினமும் சிறு சச்சரவும் பிறப்பதுண்டு. காதல் வாழ்விலே, கண்மூடித் திறப்பதற்குள் “எடல்” உண்டாகும்! அவ்விழாக்களிலே, மகிழ்ச்சி நிச்சயம் உண்டு, ஆனால் முற்றும் மகிழ்ச்சி என்று துணிந்துரைக்க முடியாது. கவிஞர் விழா, தனி இன்பம் நல்குவது.

கோரிக்கொள்ளாமல் கிடைத்த பலன், கோல் காட்டாது செலுத்தும் அரசு, மனைதோறும் நடைபெறும் மணவிழா, கவலையற்ற காதல் விழா! பலவகை விழாக்களிலே உள்ள இன்பங்கள் இதிலே உண்டு, அவைகளிலே காணப்படும் குறைகள் கிடையாது! மாற்றுக் குறையாத பசும்பொன், மாசு இல்லாத மணி, கவிஞர் விழா!

நமது நாட்களிலே, இத்தகைய விழா நடைபெறுவதும், அதிலே பங்கு கொள்ளும் வாய்ப்புக் கிடைத்திருப்பதும், உண்மையிலேயே ஓர் பேறு.

அறிஞரை மறந்து, வீரரை ஆகழ்ந்து, கவிஞரைக் கவலையில் ஆழ்த்தி, கலையைப் படுகுழியில் வீழ்த்தி, வைதிகத்தை வாழ்க்கைக்குத் துணையாகக் கொண்ட, வாடிய மலரோ, படர்ந்து போகும் விளக்கோ, விழியற்ற வனிதையோ, என்று பலரும் தமிழகத்தைக் கண்டு மனவேதனை அடைந்தனர். இல்லை என்று தமிழ்நாடு கூறுகிறது! துயில் இல்லை! பண்பை இழக்கவில்லை! கவிஞரைக் கைவிடவில்லை! காரிருளைப் போக்கிடக் கலையைப் பணித்திடும் செயலைச் செய்யப் பின்வாங்கப் போவதில்லை! என்று தமிழகம் முழக்கமிடுகிறது. தமிழகம், புரட்சிக் கவிஞர் பாரதிதாசனுக்குத் தரும், இருபதனாயிரம் வெண்பொற்காசுகள், ஒவ்வொன்றும் பாடும் சிந்து இதுவே!

அருள் மழை பொழிபவர், அம்பிகை உபவாசி, ஆறுமுகன்மீது அகவல் இயற்றியவர், நாவிலே திரிசூலக்குறி பொறிக்கப்பட்டவர், நாகத்தைக் காகமாக்கியவர், நரியை நாமாவளி பாடச் செய்தவர், என்பதல்ல, இவருக்கு விழா கொண்டாடுவதற்குக் காரணம்.

தில்லை மூவாயிரவர் திருநீற்று மகிமையோ, எல்லைக் காளிக்கு ஏழுசீரடியில் நூலோ, இயற்றினதற்கல்ல, அவருக்குத் தமிழகம் விழா கொண்டாடுவது.

வட்டிநாட்டு வேந்தரோ, பித்தபுரி பூபதியோ அல்ல, அவருக்கு வெண்பொற்காசுகள் வழங்குவது.

நாட்டு விடுதலைக்கான போர் ஆர்வம் என்ற சூழ்நலையில் உள்ளவர் எனபதல்ல தமிழகம் பாராட்டுவதற்குக் காரணம்.

மக்களில் ஒருவராக இருந்து, மக்கள் புரிந்து கொள்ளக்கூடிய வகையில், மக்கள் முன்னேற்றத்துக்கான கருத்துக்களை, மக்களுக்கு மகிழ்ச்சியும் மனஎழுச்சியும் மலரும் வண்ணம், மக்கள் மன்றத்திலே மக்கள் கவிதையை மழையெனப் பொழிந்ததற்காக, மக்கள் காட்டும் மரியாதை, மக்கள் தெரிவிக்கும் மகிழ்ச்சி, மக்கள் வழங்கும் பொற்காசு! நான்கணா நல்கிய நண்பர்களையே நாம் முதலிலே பாராட்டுகிறோம், நடுக்கடலிலே நாவாயில் பணிபுரியும் ஏழைத் தமிழன் நான், என்று அன்பு மொழியுடன் கலந்து ஒரு ரூபாய் அனுப்பிய நண்பர்கள் பால், நெஞ்சம் நெகிழ்ந்து செல்கிறது, கிடைத்தது எட்டணா, எனினும் பெறுக, என்று கூறி அனுப்பியவர்கள், ஆகியோரை மிகவும் பாராட்டுகிறோம். அவர்களின் தொகையின் அளவு சிறிது ஆனால், எவ்வளவு ஆழ்ந்த அன்பு அவர்களை அதனையேனும் அனுப்பித்தீர வேண்டும் என்று எண்ணச் செய்தது என்பதை நோக்கும்போது, மகிழ்ச்சியால் நமது அகமும் முகமும் மலர்கிறது. வண்டு மலர் தோறும் மொண்டு வரும் தேன், துளித்துளியாகத்தான்! தமிழர் தந்த பணமும் அத்தகைய முறையிலேயே அமைந்திருக்கிறது. பெருமைக்குரிய பொற்கிழி இதுவே.

தமிழகத்திலே, சாதாரணமாக ஒரு பொற்கிழி தயாரிக்கப் படுகிறதென்றால், ராஜா சர் அண்ணாமலையாரின் புன்னகையும், சர். அழகப்பாவின் அருளும், குமாரராஜாவின் குளிர்பார்வையும், கோலாகலச் சிற்றரசர்களின் சிரிப்பும், இருந்தாக வேண்டும் என்று ஓர் நிலை இருந்தது, அது, இதுபோது குலைந்தது. இவர்கள் யாரும் இதிலே பங்கு கொள்ளவில்லை! எதிர்பாராத இன்பம்! வரலாற்றிலே இடம்பெறத் தக்க வெற்றி!

இந்நிதி விஷயத்திலே மற்றுமோர் வெற்றியும் கிட்டியது, இதிலே கட்சிக் கட்டுகள் உடைபட்டுப் போயின!

இந்த மகத்தான வெற்றி, எதனைப்பாடி? ஐத்தி ஐத்தித் தொழுவோம் யாமே! பார்த்திபன் கனவில் பாவையும் நின்றாள்! என்று பஜனை பாடியல்ல! வெள்ளைப் பரங்கியை விரட்டிடக் கூடிடுவீரே! என்று தேசியம் பாடி அல்ல! மக்கள் ஏற்கனவே போற்றி வந்த எண்ணங்களையே ஆதரித்துப்பாடி அல்ல! அவர்களை மூக்கின்மேல் விரல் வைக்கச் செய்த கவிபாடி! யார், இக்கவி? என்று புலவர் குழாம் கோபித்துக் கேட்கும் தன்மை வாய்ந்த பாடல்கள் பாடி! வெற்றியின் முக்யத்துவம் இங்கேதான் அதிகம்! மக்களுக்கு மதி புகட்டினார் கவி! இதற்கு நிதி தந்தனர்! தமிழகத்தில் மட்டுமல்ல, தரணியில் பல்வேறு இடங்களிலேயும், மதிபுகட்டுபவருக்கு மக்கள் நிதி தரும் வழக்கம் கிடையாத. விரட்டி வதைக்கும் வழக்கமே இருந்தது. இவரிடம் முடியவில்லை! இவர் அதற்கு அஞ்சபவரல்ல என்பதை அவரது விழியும் மொழியும் விளக்கமாக்கிவிட்டன. மறைத்துப் பார்த்தனர், முடியவில்லை! மாற்றுத் தேடினர், கிடைக்கவில்லை! காலத்தின் கூற்று என்றும் நேற்று வந்து நாளை போகும் நேர்த்தி என்றும், கீர்த்திக்குக் காவலராகத் தம்மைத் தாமே தகுதிக் கொண்டோர் எண்ணி அவரை, அலட்சியப்படுத்திப் பார்த்தனர், முடியவில்லை. அவர்களையும் அறியாமல், அவர் பக்கம் சென்று நின்றனர்! வீரன், தனது படைவரிசையிலே இருந்த சோர்வைப் போக்கி எதிரிப்படையினை முறியடித்துப் பெற்ற வெற்றி போன்றது, பாரதிதாசன், தமிழகத்தின் பாராட்டுதலைப் பெற்றுள்ள சம்பவம்.

புரட்சிக் கவி பாரதிதாசனுக்கு தமிழகம் தனது அன்பினைத் தெரிவிக்கப் பொற்கிழி அளிக்க முனைந்தது கேட்டு, போரினால் தாக்கப்பட்டு ஜப்பானிய ஆட்சியினால் நசுக்கப்பட்டு பஞ்சமும் பிணியும் வாழ்க்கையை வாட்ட, தாயகத்தைப் பற்றிய ஐக்கம் தூக்கத்தைக் கலைக்கத் துயருற்றுக் கிடந்தநிலையிலும், மலாய் வாழ் தமிழர்கள் தமிழ்க் கவிஞரைத் தாமும் போற்ற, பாராட்டக் கடமைப்பட்டிருப்பதை எண்ணி, துள்ளி எழுந்து, வெண் பொற் காசுகளை முன்வந்து வழங்கினர்.
25-11-45ல் சிங்கப்பூர், கிள்ளாங் வீதியில் உள்ள தமிழ் நூல் நிலையத்தில் தோழர் பழனிவேல் அவர்கள் தலைமையில் நிறுவப்பட்ட வசூல் கமிட்டியார், வாங்கிய அன்பளிப்புக்கு நமது நன்றியதிலை தெரிவித்துக் கொள்கிறோம். குறிப்பிடத்தக்க மற்றோர் உதவி, சக்தி நாடக சபை உரிமையாளர் தோழர் டி.கே. கிருஷ்ணசாமி அவர்கள் மூலம் கிடைத்தது. நாடக வசூல் தொகையாக ஓராயிரத்துக்குமேல் அனுப்பி வைத்த அன்பரை நாம் பாராட்டுகிறோம். காஞ்சி தங்கவேலர், கவிஞருக்குப் பொன்னாடை அளித்திட முன்வந்துள்ளதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்வதுடன், அவருக்கும் நன்றியறிதலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

இத்தகைய வெற்றி விழாவிலே, அவருடைய மாண்புகளையும், அவர் போற்றும் கருத்துகளையும் அது போன்ற கருத்துக்களைப் பரப்பிய பண்பினரைப் பற்றிய குறிப்புகளையும், தொகுத்து இந்த இதழை நமது காணிக்கையாக, விழாக் கொண்டாடும் தமிழ் நாட்டுக்குத் தருகிறோம். வாழ்க பாரதிதாசன்! வாழ்க திராவிடம்!

(திராவிட நாடு - 21.7.46)