அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


வௌவாலின் விசாரம்

வாட்ட வருத்தமின்றி விளையாடிக்கொண்டிருக்கிறீர்களே, உங்கள் தலையில் இடி விழ இருப்பது தெரியவில்லை. கத்துவதும், தலைகீழாகத் தொங்குவதும், மரம் பழுத்தால் சென்று தின்பதும், புழுதி கண்டால் பூரிப்பதும், இன்பமே நிரந்தரம் என்று எண்ணிக்கொண்டுவிட்டீர்கள், ஏமாளிகளே! எனக்கு என்னதான் கோபம் வருகிறது தெரியுமா உங்கள் பேரில். ஒழிக்க வேண்டியது தான் உங்களை! நமது பக்கத்து பசங்களாயிற்றே என்ற பச்சாதாபம் என்னைப் பிய்த்து விடுகிறது. இல்லையானால், நானே போய் அவர்களை அழைத்துக்கொண்டு வருவேன்.” வௌவால் சோகமும் சீற்றமும் கலந்த குரலில் இவ்விதம் கூறியதும், வட்டமிட்டுச் சிறகடித்துச் சுவரில் மோதி தாவி விளையாடிக்கொண்டிருந்த மற்ற வௌவால்கள், கொஞ்சம் சுற்றும் வேகம் குறைந்தது. என்ன இருந்தாலும் நமது வாயிற்றே, கொஞ்சம் அடக்கங்காட்ட வேண்டுமே என்று யோசித்தே, வௌவால்கள் விளையாட்டை நிறுத்திக் கொண்டன. வயோதிக வௌவால் அழவில்லையே யொழிய, முகத்திலே துக்கம் கப்பிக் கொண்டிருந்தது. ஒரு முறை கனைத்துவிட்டுக், கிழ வௌவால் பேச ஆரம்பித்து, பயத்துடன்.

“எத்தனையோ காலமாகத்தான் நாம் இங்கு வாழ்ந்து வருகிறோம், ஒரு தொல்லையுமின்றி, விசாலமான இடம்; விளையாட, உறங்க உலவ எவ்வளவோ சௌகரியம். நமது எதிரிகளோ நுழையவே மாட்டார்கள். நுழைந்தாலும், நாம் பதுங்கிக் கொள்ள எவ்வளவோ இடங்கள். இந்த இருள் நம்மை எவ்வளவோ இரட்சித்தது. இவ்வளவு இன்பமும், பாதுகாப்பும், இருக்கும் வாழ்வுக்கு ஆபத்து வந்து விட்டது, அது தெரியாமல், ஆடிக் கொண்டிருக்கிறீர்கள் அசடுகளே! என்று கிழ வௌவால் கூறிற்று. மற்றவைகள் ஒன்றை ஒன்று மருட்சியுடன் பார்த்து விட்டு, “என்ன ஆபத்து? யாரால் ஆபத்து?” என்று மெதுவாகப் பேசிக் கொண்டன. ஒரு வௌவால் “தாத்தா! ஏன் துயரப்படுகிறீர்? எதற்காகக் கவலை? என்ன ஆபத்து நமக்கு?” என்று கேட்டது. வயோதிக வௌவால், தலையை அசைத்துக் கொண்டே, “துயரமா? உன் பருவம் உன் நிலைமையை நினைப்பூட்டவில்லை! ஆபத் தென்றால், சாமான்யமானதல்லடா குழந்தாய். இதுவரையிலே தப்பினோம், இனி முடியாது” என்று கூறினபோது தான் மற்ற வௌவால்கள், உண்மையிலேயே ஆபத்து வந்துதான் விட்டது என்று எண்ணின, பயந்தன.

“மிருகங்களுக்கும் பறவைகளுக்கும் மீண்டும் சண்டையா? நாம் எந்தக் கட்சி என்ற கேள்வி பிறந்துவிட்டதா?” என்று கேட்டது ஒரு சிறிய வௌவால்.

“மகா புத்திசாலி தாண்டா! வாயை மூடு. அந்தச் சண்டை நடந்தபோது நீ பிறக்கக்கூட இல்லை. உன் அப்பா அம்மாவுக்கே அப்போது சரியாகப் பேசத் தெரியாது. மிருகமா, பட்சியா, எந்த இனம் நாம், என்ற கட்சிச்சண்டை சாதாரணம்... இப்போது” என்று இழுத்தது வயோதிக வௌவால்.

“பழத்தோட்டத்துக்கக் காவல் போட்டுவிட்டார்களோ?”

“வேடர்கள் இந்தப்பக்கம் வருகிறார்களா?”

“புது வியாதி ஏதாகிலும் பரவிக்கொண்டு வருகிறதா?”

“புயல் காற்று அடிக்கப் போகிறதா?”

ஒவ்வொரு வௌவாலும் இதுபோல் ஒவ்வொரு கேள்வி கேட்கலாயிற்று. ஒன்றிற்கொன்று பயத்திலே தோற்கவில்லை. ஒவ்வொரு கேள்விக்கும், வயோதிக வௌவால் இல்லை! இல்லை! என்று தலையை ஆட்டிக்கொண்டே இருந்தது.

“என்ன தான் அது. எங்களுக்கு எப்படித் தெரியும்? சொன்னால் தானே? நாங்கள் ஒன்று மில்லை என்று தான் வழக்கம்போல் விளையாடிக் கொண்டிருந்தோம்” என்று மரியாதையாக ஒரு வௌவால் கூறிற்று. வயோதிக வௌவாலின் முகத்திலே புன்னகை பூத்தது. “தாத்தாவுக்குச் சந்தோஷம் வந்து விட்டது, சிரிக்கிறார்,” என்று கூறிக்கொண்டு, சில வௌவால்கள் கத்திக்கொண்டே கூத்தாடின. “சீ! முட்டாள்களே, கேளுங்கள் சேதியை,” என்று கடிந்துரைத்தது கிழம். கூத்தாடிய குட்டிகள் கிட்ட நெருங்கின. கிழ வௌவால், கேட்டது, மற்றவைகளைப் பார்த்து, “இந்த ராஜ்யம்” யாருடையது தெரியுமா?”

“நமதே ராஜ்யம்.”

உங்கள் அப்பன் பாட்டன் கட்டினதா? இல்லை. இது முன்னோர் காலத்திலே, என் முப்பாட்டன் காலத்துக்கும் முன்னாலே கட்டப்பட்ட ராஜ்யம். இதைக் கட்டினவர்கள், நமது மூதாதையரன்று. இது மனிதர்கள் கட்டிய இடம்.”

மனிதர்கள் கட்டிய இடமா? நமது சாதியார் கட்டியதல்லவா?”

மனித ஜாதி கட்டி, நெடுநாள் வாழ்ந்து, பிறகு தமக்குள் சண்டை போட்டுக்கொண்டு, இந்த ராஜ்யத்தைச் சீர் குலைத்து விட்டபிறகு, நமது சாதி இங்கே குடி ஏறிற்று. இது நமது சரித்திரம். இது தெரியாமல் கத்திக் கூத்தாடுகிறீர்கள்.

“சொன்னால் தானே தாத்தா தெரியும். இது மனித ஜாதி கட்டிய இடமா? அதானே, நாங்கள் யோசித்தோம், எப்படியடா, நம்ம சாதி இப்படிப்பட்ட கட்டடத்தைக் கட்ட முடியும் என்று.” சாதிக்கு, கட்டடம் கட்டவா தெரியும்? யாராவது கட்டி வைத்து, ஆண்டு அனுபவித்துக், கலனாகி விட்டால், விட்டு விட்டுப் போய்விடுவார்கள், பிறகு நாம் அங்கே வசிப்போம். அது நம் குலதர்மம். கட்டடம் கட்டத் தெரிந்தால் நான் கட்டியிருக்க மாட்டேனா ஒரு புதுக்கட்டடம். ஏன் முப்பாட்டன் இங்கே வாழ்ந்தான், பாட்டனும் இங்கே, அப்பா இங்கே இருந்தார், நான் இருக்கிறேன். அவ்வளவு தான். நமக்குக் கட்டடம் கட்டத்தெரியாது. கட்டின இடத்திலே, நுழைந்து கொண்டு வாழத் தெரியும். மரம் பழுத்தது வா என்று யார் நம்மை அழைக்கிறார்கள்? நாமாகப் போகிறோமல்லவா? அதுபோலத்தான், இங்கு வரச் சொல்லியும் யாரும் கூப்பிடவில்லை. நாமாக நுழைந்தோம், வாழ்ந்து வந்தோம், இப்போது, “வா வெளியே” என்று அழைக்கிறார்கள். இடத்தைக் காலி செய்ய வேண்டுமாம்.”

“ஏன்? எதற்கு?”

“இடத்தை இடிக்கப் போகிறார்களாம்.”

“யார்?”

“மனிதர்கள்.”

“நாம் வாழ்ந்து வரும் இடத்தை, மனிதர்கள் இடிக்கப் போகி றார்களா? நமது சுதந்திரம் பாழாவதா? நாம் போரிட வேண்டும்.”

“போதும், போருக்கு நாம் இலாயக்கா? மேலும், இடமோ நம்முடையதல்ல. இடிக்க வருபவர்களோ, எது சொன்னாலும் கேட்கமாட்டார்கள்.”

“ஐயோ! இது என்ன அக்ரமம். இவ்வளவு நாளாக நாம் வாழ்ந்த வாழ்வு பாழாவதா? எதற்காக இதை இடிக்க வேண்டுமாம்?”

“இந்த இடம், அசுத்தமும் அநாதரிகமும் கொண்டதாம், குப்பையும் கூளமும் குவிந்து விட்டதாம். இந்தப் பக்கமாக மனிதர்கள் நடமாடினாலே குடலைப் புரட்டுகிறதாம் கெட்ட வாடை. இருள் சூழ்ந்து கிடக்கிறதாம்.”

“ஆமாம்! இவைகள் இவர்களுக்குப் பிடிக்கவில்லை. நமக்கு இருட்டுத்தான் வேண்டும். குப்பை கூளமின்றி நாம் எப்படிக் குளித்து முழுகுவது. அநாகரீகம் என்று சொன்னால், அதுதானே நமக்கு பூர்வீக சொத்து. அசுத்தம் நமக்குப் பழகி விட்டது. நாம் இருக்கிறோம். மனிதர்களுக்கு இவை பிடிக்கவில்லை என்பது சரி. அவர்கள் இங்கு வரவேண்டாம்.

“இருட்டும் அசுத்தமும், நிரம்பிய இந்த இடம், புராதனமானதென்றாலும், அதிகக் கடனாகி விட்டதாம், சரிந்து விட்டன, சுண்ணாம்பை விட்டது, மாடி இடிந்து விட்டது மேடு குவிந்து விட்டது, கிணறு விட்டது, கூடம் குமுறி விட்டது. மிகப் பழைய கட்டடம், மனிதவளம் இல்லாததால், கலனாகி விட்டது. இதனை இடித்துத் தள்ளி விட்டு, இடத்திலே புதிய மாளிகை நல்ல காற்றோட்டம், விசாலம் மாளிகையைக் கட்டினால், மனிதர்கள் வாழ முடியுமாம். அதற்காகத்தான் இந்த இடத்தை இடிக்கப் போகிறார்களாம்.”

“நம் கதி?”

“அதைப் பற்றிய கவலையால் நான் குமுறுகிறேன்.”

கிழ வௌவாலுக்கும், வாலிப வௌவாலுக்கும் இந்த உரையாடல் நடந்த பிறகு, உண்மையிலே வௌவால்கள் கிலி கொண்டு விட்ட வௌவால்களின் வாட்டம், காண்போரைக் கரையவைக்கும் விதமாகத்தான் இருந்தது. பரிதாபத்துக்குரிய இந்தப் பழைய மாளிகை வாசிகள் ஏதேதோ யோசித்தன.

பல நூற்றாண்டுகளுக்கு முன்பு, ஏராளமான பொருட் செலவிட்டு, திறமையானவர்கள் கட்டின மாளிகை அது. அரண்மனை! அதிலே அரசரும் அரச குமரரும், குமரிகளும் விளையாடிய இடம் அந்தக் காலத்திற்கேற்றபடி, வானளவிய கோபுரம், விசாலமான வாசல், விசித்திர வேலைப்பாடுடைய கூடம். பெரிய பெரிய தூண்கள், தோட்டதது சிங்காரக் குளம், சிலைகள் கொண்ட மாளிகை, அதைக் கட்டியவர், சொந்தக்காரர், அவ்வழி வந்தோர், வாழையடி வாழையாக வாழ்ந்த, ஒவ்வோரு காலத்தில் ஒவ்வோர் புது இடத்து அவரவர்கள் கட்டிக் கொண்டுபோயினர். பழைய மாளிகை அனுபவிப்பார்கள் போயிற்று. ஊர் புதுப்பிக்கப்பட்ட பழைய இடம் காடாகி விட்டது. காட்டிலே இந்தக் கட்டடம் கலனாகிக் கிடந்தது. பார்க்கக் கெம்பீரமாக இருக்கும் விதத்திலே கட்டப்பட்ட இடம், பாழடைந்த மாளிகையாகிப், பாம்பும் வௌவாலும் பிறவும் வாழும் இடமாகிவிட்டது. சரிந்த சுவர்களிலே, பிளவுகளிலே கடுவிஷமும் பாம்புகள் பதுங்கிக் கொண்டிருந்த கூரைமீது செடியும் கொடியும் படர்ந்து விட்டன. குளத்திலே நீர் வந்து நெடுநாட்களாய் விட்டன. அதிலேயிருந்த கிருமிகள் கோடி கோடி, புளுதிக் குவியலிலே உடும்பும் ஓணானும், பல்லியும் பிறவும் ஓடி விளையாடின. உயரமான அந்தக் கட்டடத்திலும் தூண்களிலும், சுவரிலும், தூலத்திலும், மாடியிலும், ஏராளமான வௌவால்கள் வாசம் செய்து வந்தன. புதிய அரண் மனைகளிலே கீதமும், கிண் கிணியோசையும், யாழும் குழலும், மழலையும் காதல் மொழியும், தென்றலும் கதிரோனின் ஒளியும் இருந்தன. இந்தப் பாழடைந்த மாளிகையிலே, வௌவால்களின் சத்தந்தான் கீதம்! பாம்புகள் சீறுவதுதான் கிண்கிணி, பலவகையான நச்சு உருவங்களின் கிரீச்சொலியே யாழ், குழல்! புதிய கட்டடங்களிலே, மக்கள் மகிழ்வோடு வாழ்ந்தனர், இடிந்த சபா மண்டபத்திலே, வௌவால்களே தர்பார் செய்து வந்தன. புதிய இடங்களிலே பூந்தோட்டம், இங்கோ கள்ளி, முள், கசுமலம்!

எனவே தான், சரிந்த உபயோகமற்ற, குட்டிச்சுவராகிக் கொண்டு வரும் அந்த இடத்தை இடித்து விட்டு, புதியதோர் கட்டடம் அமைத்தால், மக்கள் வாழ வசதியாக இருக்கும் என்று மனிதர்கள் தீர்மானித்தனர். இடிக்க ஏற்பாடுகள் செய்யலாயினர், இந்தச் செய்தி தெரிந்ததும், பாழடைந்த இருட்டு மாளிகையில் வாழ்ந்த வந்த வௌவால்கள் தமக்கென இருந்ததும், பிறர் நுழையாததும், தமக்குப் பிடித்தமான பண்டங்கள் வசதிகள் நிரம்பியதுமான இடம் போய்விட்டால் என் செய்வது என்று ஏங்கி, மனம் வீங்கித், தூங்குவதையும் மறந்து, துயரிலே உழன்றன.

“ஆபத்து பிரமாதமானதாகத் தான் இருக்கிறது. நாங்கள் இந்த இடம் என்றென்றும் நமக்கே சொந்தம் என்று இறுமாந்து கிடந்தோம். எமது வாழ்வு நிரந்தரமாக இருக்கும் என்று பூரித்தோம். இப்போது என்ன செய்வது? எங்களுக்கொன்றும் புரியவில்லையே. தாத்தா! நீர்தான் இதற்கு ஓர் வழி சொல்ல வேண்டும்” என்று வயோதிக வௌவாலிடம் மற்றவை முறையிட்டுக் கொண்டன.

“இடிக்க வருபவர்களை, எதிர்க்கக் கிளம்புவோம் என்று சொல்ல வேண்டும்.”

“செய்யக் கூடாது, செய்யவும் முடியாது.”

“ஏன் முடியாது?”

“கட்டடத்தை இடிக்க வேண்டுமென்பதற்கு அவர்கள் கூறும் காரணங்களை நாம் மறுக்க முடியாததே தம்பி! அதைக்கவனி. இருட்டு என்கிறார்கள், இல்லை இது தான் ஒளி என்று எப்படிக் கூறுவது. குப்பை கூள மிருப்பதும் உண்மைதானே, அதை எப்படி மறைப்பது, ஒழிக்கத்தான் முடியுமா? ஒழித்தால், இடமே காலியாக இருக்குமே? கலனாகி விட்டதும் உண்மைதானே. ஆகவே இடம் இடிக்கப்பட வேண்டும் என்பதற்கு மனிதர்கள் கூறிடும் காரணங்களை நாம் மறுக்க முடியாது. நியாயம் நம் பக்கம் இருக்க முடியாதல்லவா? ஆகவேதான், அவர்களுடன் சண்டைக்குப் போகக்கூடாது என்று சொன்னேன். மேலும், சண்டைக்குக் கிளம்பினால், நம்மிடம் இருக்கும் ஆயுதம் என்ன? தலைகீழாகத் தொங்குவோம். சிறகாலடித்துக் கொண்டு, அவர்கள் முகத்திலே மோதுவோம். வேறு என்ன செய்ய முடியும்? அவர்கள் கை தட்டும்போதே நமக்கு உடல் நடுக்கம்!”

“உண்மை தான். பிறகு என்ன தான் வழி?”

“இந்த இடித்த கட்டடம் எமக்கு வேண்டும், இருள் தேவை, அசுத்தம் வேண்டும், என்றும் கூற முடியாது. கூறினால், நம்மைக் கேலி செய்வார்கள். நமக்கோ உள்ளபடி இவைகளின்றி வாழவும் முடியாது.”

“இரு நெருப்புக்கிடையே உள்ள புழுப் போலானோம்.”

“ஆமாம்! குழந்தைகளே. நான் சொன்னேனே முன்பே. எனக்கு இவ்வளவு வயதாயிற்று, இது வரையிலே இத்தகைய ஆபத்து வந்ததில்லை. காலம் கெட்டு விட்டது. ஒரே ஒரு வழி இருக்கிறது.”

“என்ன? தாத்தா அது?”

“மனிதர்களே நீங்கள் எந்தக் கட்டடத்தை இடிக்க வேண்டுமென்று கூறுகிறீர்களோ, இது மகா புனிதமானது, தேவசம்மதமானது, பழமையானது, அருமையான வேலைப் பாடுடையது. உங்கள் முன்னோர்களின் அபாரமான திறமைக்கு இது தானே சாட்சி. இதை அழிக்கலாமா? இதையும் அழித்து விட்டால் ஆன்றோர்களின் ஞாபகப் பொருள் வேறு என்ன இருக்கும்? எதைக் கொண்டு பெருமை பேசிக் கொள்வது? என்று மனிதர்களைக் கேட்க வேண்டும்.”

“ஆமாம்! சரியான யோசனை. அப்படித்தான் கேட்க வேண்டும். இடிக்கக் கிளம்புகிறீர்களே, உங்களால் இதைப்போல ஒரு கட்டடம் கட்ட முடியுமா? என்று கேட்கலாம்.”

“கூடாது, கூடாது! அதைக் கேட்டால் மனிதர்கள், எவனோ கட்டிய கட்டடம் இடிந்த போது உள்ளே புகுந்து கொண்டு முரட்டுப் பிடிவாதம் செய்கிறீர்களே, ஏ! வௌவால்களே! எங்கே ஒரு கட்டடம் நீங்கள் கட்டுங்களேன் பார்ப்போம், என்று சொல்லுவார்கள்.”

“ஆமாம், சொல்லுவார்களப்பா. அது மகாசிரமம். யாரால் ஆகிற காரியம்.”

“மனிதர்களே! இங்கு இருட்டு, அசுத்தம் குப்பை இருப்பது உண்மை தான், ஆனால், அவைகளைப் பார்க்க வேண்டாம், இந்தக் கோபுரத்தின் உயரத்தைப் பாருங்கள், கூடம் எவ்வளவு விசாலம் பார்த்தீர்களா, தூண்கள் எவ்வளவு சித்திர வேலைப்பாடுகளுடன் இருக்கிறது பாருங்கள் கண்ணால். இவ்வளவு அருமையான இடத்தை இடிக்கலாமா? என்று கேட்க வேண்டும்.”

“ரொம்பச் சரியான பேச்சு. அதுதான் திறமானது.”

“இவ்விதம் கேட்டால், இடிக்க வேண்டுமென்று கூறும் மனிதக் கூட்டத்திலே சிலர் “உண்மை தான்! இந்த வௌவால் சொல்வதும் சரிதான். கட்டடம் மிகப் பழையது அருமையானது அது இருக்கட்டும், என்று பேசுவர்.”

“நமக்குப் பலம் கிடைக்கும்.”

“ஆமாம்! மற்றொரு இரகசியம், எங்கேயும் வெளியே சொல்லி விடாதீர்கள். அந்த மனிதக்கூட்டத்திலே, பாழ் மண்டபம், பழைய மாளிகை போன்றவைகள் இருக்க வேண்டும் என்று கூறும் சிறு கூட்டம், இருக்கிறது! அவர்கள் நம் பக்கம் சேருவார்கள்.”

“மனிதர்களே! நீங்களோ இந்தப் பழைய மாளிகையிலே வசிப்பதில்லை. அதைப் பார்க்கவும் வருவதில்லை. வந்தால் தானே அதன் வசீகரம் தெரியும் என்று சொல்லிப் பார்க்கலாம்?”

“அது தப்பு! வந்து பாருங்கள் என்று அழைத்தால், அங்கே தான் பாம்பும் பல்லியும், புழுவும் புழுதியும், இருட்டும் குப்பையும் நிரம்பிக் கிடக்கிறதே அங்கே எப்படி நுழைய முடியும்; நாற்றத்தைச் சகிக்க முடியாது. அதற்காகத்தான் இடிக்கப் போகிறோம் என்று பேசுவார்கள் மனிதர்கள்.”

சரி! சரி! அப்படியானால் அவர்களை அழைக்க வேண்டாம்.

கண்ணீர் விட வேண்டும், கைகளைப் பிசைந்து கொள்ள வேண்டும். நமக்கு நஷ்டமில்லை, உங்களுக்குத் தான் கட்டடத்தை இடிப்பதால் நஷ்டம் என்று உருக்கமாகப் பேச வேண்டும். இவ்
வளவும் பலிக்கவில்லையானால் ஒரு தந்திரம் செய்ய வேண்டும்.

என்ன தந்திரம்?

கொஞ்சம் உறுதியாக இருப்பதாகக் காட்டிக் கொண்டு, ஏதோ, கை வைத்துப்பாருங்கள் கட்டடத்தில். இதைத் தொட்டவன் கெடுவானென்று துவாபரயுகத்திலேயே சாபமிருக்கிறது என்று பயங்காட்ட வேண்டும்.

பயப்படுவார்களா? பலிக்குமா?

பயப்படுகிறவர்கள் சிலர் கிடைக்கமாட்டார்களா? ஆள் குறைகிறது இலாபந்தானே. இடிக்கும் ஆள் குறைவாக இருந்தால், இடிக்கத் தாமதமாகும் அது வரையிலேயாவது தங்கி இருக்கலாமே.

கடைசியில் இடித்துத் தான் விடுவார்களா?

காலம் போகிற போக்கைப் பார்த்தால், அப்படித்தான் தோன்றுகிறது.

நாமும் ஏதாவது புது இடம் போகலாமே.

புது இடத்திலே, நம்மைக் கண்டால் அவர்களுக்குப் பிடிப்பதில்லை. அந்த இடத்து வெளிச்சம் நமக்குப் பிடிப்பதில்லை. என்ன செய்வது.

நமது இனத்தைக் கூட்டி, ஒரு பெரிய மகாநாடு நடத்தி, பழைய கட்டடங்கள் பாதுகாப்புக் கமிட்டி ஏற்படுத்தி, அதற்கு ஒரு தொண்டர் படை ஏற்படுத்தி, பழைய கட்டடத்திலே கை வைத்தால், மகா பாபம் சம்பவிக்கும் என்று பிரகடனம் வெளியிடலாம்.

பழைய கட்டடத்தின் மகிமைகள் பற்றிப் பிரசாரம் செய்ய வேண்டும். புத்தகம் வெளியிட வேண்டும். இருட்டு, குப்பை என்று தூற்றுகிறார்களே இருளில் உள்ள ஒளி குப்பையிலே உள்ள மாணிக்கம், இந்த மனிதர்களின் கண்களில் படுவதில்லை. அதற்கு “அவன் அருள்” வேண்டும், என்று பத்திரிகையிலே எழுத வேண்டும் பழைய கட்டடப் பாதுகாப்புக்காகப் பணம் திரட்ட வேண்டும், சங்கம் வைக்க வேண்டும்.

ஆமாம்! செய்ய வேண்டும்.

யாரைத் தலைவராகப் போடுவது.

ஏதாவது காரியம் செய்ய வேண்டும். அது நம்மைக் கஷ்டப்படுத்தவும் கூடாது என்று எண்ணும் புண்ணியவான் யாராவது ஒருவர் கிடைத்தால், தலைவராக்கலாம்.

வௌவால்களின் மந்திராலோசனை முடியப் போகும் சமயத்தில் திடீரென விழித்துக் கொண்டேன்!!
* * *

அக்ரமம், ஆபாசம், அநீதி, ஆரியம், மூடநம்பிக்கை, குருட்டுக் கொள்கை, கோமாளிக்கூத்து, மன அழுக்கு, மக்களுக்குள் பேதம், ஆகிய இருள், குப்பை கூளம், பாம்பு புழு, நிரம்பியுள்ள புராண இதிகாசாதிகளை உள்ளடக்கிய இலக்கியங்கள் ஆகியவற்றை அழித்துப் பகுத்தறிவு, விஞ்ஞானம், மக்கள் மாட்சி எனும் புதிய அமைப்புகளை ஏற்படுத்த வேண்டுமென்று, சுயமரியாதைக்காரர்கள் கூறுவதையும், கிளர்ச்சி செய்வதையும் கண்டு, ஆரியர், பழைமை விரும்பிகள் புராணப் பண்டிதர்கள், நெரித்த புருவமும், சுளித்த முகமும் காட்டி, கடுகடுத்த பேச்சுப் பேசி, “இலக்கிய மறியாதானே! என்ன காரியம் செய்யத் துணிகிறாய்?” என்று ஆத்திரமும் அழுகுரலும் கிளப்புவதைக் கண்டேன், கேட்டேன், சில ஏடுகளில் எழுத்தையும் படித்தேன், சிரித்தேன், சூடு உரைக்கிறது. எனவேதான் சுருதி ஏறுகிறது என்று மகிழ்ந்தேன், நித்திரை போனேன். பழமை பாழும் மாளிகையாகவும், புராணப் பண்டிதர்கள், வௌவால்களின் மாநாடாகவும், கனவிலே கிளம்பின. பாபம்! பரிதாபந்தான் அவர்கள் நிலை! கனவிலே வௌவால்கள் வாடிக் கூடிப் பேசியது போலத்தான், புராணப் பண்டிதர்களின் வட்டாரம் பேசுகிறது, நம்மைப் பகைக்கிறது. ஆனால் வௌவால்கள் விரும்புகின்றன என்பதற்காகப் பாழடைந்த மாளிகையை இடித்துத் தள்ளாவிட்டால் புது உலகம் தோன்றாதே! ஆகவே தான் இடிக்கிறோம்!!

வயோதிக வௌவால், என்று சொன்னாயே, அது யார் பரதா? என்று என்னைக் கேட்காதீர்கள். கனவு கண்டேன் தோழர்களே; வேறு நீங்களாக புராணப் பண்டிதர்களிலே, வயதானவர்களின் அட்டவணையைத் தயாரித்துப் பரதனின் கனவிலே தோன்றிய கிழ வௌவால், இவராக இருக்குமா, அவராக இருக்குமா என்று ஆராய்ச்சி செய்து கொண்டிராதீர்கள். உண்மையிலே, கனவிலே கண்ட வயோதிக வௌவாலின் முகம் மட்டும், நான் எங்கோ அடிக்கடி பார்த்த முகமாகவே தென்பட்டது. வேண்டாம் பாபம், பெயரைக் கூறமாட்டேன். கூறினால், நீங்கள், “ஆமாம்! அவரேதான்” என்று சொல்லிவிடுவீர்கள். அவர் மிகச்சாது! நாவலர்! காவியங் கற்றவர்! அவர் வருத்தப்படக்கூடாது என்பது என் எண்ணம். ஆனால், இப்போதும் எனக்கு, கனவிலே நான் கண்ட வௌவாலுக்கு அவர் முகமே தான் இருந்ததாக நினைவு! அது கிடக்கட்டும்! யாரா யிருந்தாலென்ன? ஆட்களைப் பற்றியா இப்போது தகராறு? அபிப்பிராயங்களைப் பற்றித் தானே!!

13.12.1942