அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


யாத்திரை!

யாத்திரை செய்து வருகிறார், கல்கியின் கட்டுரையாளர் ஒருவர்.

வழக்கமான தவ்விய க்ஷேத்திர யாத்திரை அல்ல, நேரு பாண்டிதருடைய கருத்துப்படி எவையெவை திவ்விய க்ஷேத்திரங்களோ, அங்கெல்லாம் யாத்திரை!

அணைகள், தேக்கங்கள், ஆராய்ச்சிக் கழகங்கள், தொழிற்சாலைகள், ஆகியவைகளைக் கண்டுவர யாத்திரை செய்கிறார். பாரதம் பண்டிதருடைய பரிபாலனத்தில் எத்தகைய மகோன்னதமான நிலையை அடைந்திருக்கிறது என்பதை, காங்கிரசாட்சியைக் கண்டித்துப் பேசும் கெடுமதியாளர்களுக்கு, விவரமாக, விளக்கமாக, பாடம் காட்டும் படங்களுடன், பரவசப்படச் செய்யும் புள்ளி விவரங்களுடன் எடுத்துக் கூறி, அவர்களைத் திருத்த வேண்டும், நல்வழிப்படுத்த வேண்டும் என்ற சிலாக்கியமான நோக்கத்துடன் இந்த யாத்திரையை மேற்கொண்டார்.

காடு மலை வனாந்திரங்களைக் கடந்து சென்று, யாத்திரை நடத்தி வருகிறார்.

காணும் காட்சிகளும், கேள்விப்படும் சேதிகளும், இந்தச் தேசிய உள்ளத்தில் என்னென்ன கருத்துரைகளை எட்டுகிறது என்பது விளங்கத்தக்க வகையில் யாத்திரை பற்றித் தொடர்ந்து கட்டுரைகள் வெளியிட்டு வரப்படுகிறது.

ஆச்சாரியாரின் மேற்பார்வையில் நடந்து கொண்டிருக்கும் ஏடு கல்கி எனவே அதிலே வெளியிடப்படும் கருத்துக்கள், காற்றுவாக்கிலே போகக்கூடியவை என்று யாரும் அலட்சியப்படுத்திவிட முடியாது - கூடாது, காற்று எந்தத் திக்கிலே வீசுகிறது என்பதைக் காட்ட இக்கட்டுரைகள் பயன்படுகின்றன என்றும் கூறலாம்.
வடநாடு வாழ்கிறது தென்னாடு தேய்கிறது என்றால், இங்கு தேசியத் தோழர்களின் கண்களிலே தீப்பொறி கிளம்புகிறது.

எல்லா வளமளிக்கும் திட்டமும் வடக்கேதான், தெற்கே இல்லையே என்று கூறும்போது அமைச்சர்களுக்குக் கோபம் கொந்தளிக்கிறது.

இவ்விதம் எண்ணுவதும் எடுத்துரைப்பதும், தேசிய விரோதமான செயலாகும் என்று பேசியவர்கள் - மன்னிக்க வேண்டுகிறோம் - பெரிய இடத்தில் அமர்ந்து கிடப்போர் - பேசுகின்றனர் - மீண்டும் மன்னிக்க வேண்டுகிறோம், பேசுவதில்லை, பேசுவதாக எண்ணிக் கொண்டு ஏசுகின்றனர்.

பண்டிதர், வடக்கு, தெற்கு என்று பேதம் பாராட்டுபவரல்ல, பாருக்கெல்லாம் பஞ்சசீலம் உபதேசிக்கும் எமது பண்டிதருக்கா இத்தகைய குறுகிய நோக்கம் ஏழும், பித்தர்காள்! அவர் ஆட்சியில் ஆநீதி தலைகாட்டாது, வீணுக்குப் பேதம் பேசாதீர் என்று அறிவுரை கூறுவதாகக் கிளம்பி இழிமொழியில் தாக்குகின்றனர்.

இதோ யாத்திரிகள் தமது கருத்துரையை வழங்குகிறார் - தேசியத்தார் சுவைக்க வேண்டுகிறோம்.
குடும்பப் பாசம் இருக்க வேண்டாமோ!

எனக்கு எவ்வளவு? அவனுக்கு எவ்வளவு? என்று வம்புக்கு நிற்பது ஆழகாகுமா?
அவன் உன்னைவிடச் சற்றுச் சௌகரியமாக இருந்தால் வயிற்றெரிச்சல் படுவதா!
என்றùல்லாம் சமரசம் பேசுவோர், யாத்திரையன் பலானகப் பிறந்துள்ள கருத்தினைக் காணவேண்டும் - வெட்கமாகக் கூட இருக்கும் - பரவாயில்லை!!
“பக்ரா அணையில் எவ்வளவு தூரம் தண்ணீர் தேங்கி நிற்கும் தெரியுமா? சென்னையிலிருந்து விழுப்புரம் வரையில் உள்ள தூரத்துக்குத் தண்ணீர் தேங்கி நின்றால் எப்படி இருக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள். சுமார் 100 மைல் தூரத்துக்குச் சமுத்திரம் போலத் தண்ணீர் தேங்கி அலைமோதிக் கொண்டு நிற்கும. இந்த அணையில் தேங்கும் தண்ணீரைக்கொண்டு 1 கோடி ஏக்கர் நிலத்தைத் திருத்திப் பயன்படுத்தலாம்.

இந்தத் தண்ணீரின் சக்தியைப் பிடித்து மின்சாரம் உற்பத்தி செய்வதற்காக அணையின் இருபுறங்களிலும் அருவி மின்சார நிலையங்கள் அமைத்து வருகிறார்கள். பத்துமின்சார இயந்திரங்கள் மின்சாரத்தை உற்பத்தி செய்யப் போகின்றன. ஒரு மின்சார இயந்திரம் மட்டும தொண்ணூறு ஆயிரம் கிலோ வாட் மின்சாரத்தை உற்பத்தி செய்யும்.

ஒரு திடமான மனிதன் ஒய்வு ஒழிவு இன்றி மூன்று நாள் செய்யும் வேலையை ஒரு கிலோ வாட் மின்சாரம் ஒரு மணி நேரத்தில் செய்து விடுமாம்.

அதில் உற்பத்தியாகும் மின்சாரத்தை உபயோகிப்பதற்காக வேண்டி அங்கு பல தொழிற்சாலைகளும் கட்டுவதற்கு ஏற்பாடு செய்திருக்கிறார்கள். ஏரு உற்பத்தித் தொழிற்சாலை, சர்க்கரை உற்பத்தித் தொழிற்சாலை, இன்னும் பலவிதமான சாமான்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள் கட்டுவதற்கு வேண்டிய எல்லாப் பூர்வாங்க ஏற்பாடுகளும் செ
ய்துவிட்டார்கள்.
ராஜஸ்தான பாலைவனத்தைச் சோலைவனமாக்கப் போகிறார்கள்.
பக்ரா கால்வாய்களின் கரையில் பத்து இலட்சம் ஜனத்தொகையுள்ள முப்பது ஆழகான நகரங்கள் உண்டாகுவதற்கு வசதி இருக்கிறதாம்.

பக்ரா அணையைக் கட்டுவதற்காக 40 புகழ்பெற்ற அமெரிக்க என்ஜினியர்கள் வந்திருக்கிறார்கள். அவர்களுடைய இலோச னைகள் பேரிதான் பக்ரா அணை கட்டப்பட்டு வருகிறது.

அமெரிக்கத் தலைமை என்ஜினியருக்கு முப்பது நாளைக்கு, அதாவது மாதம் ஒன்றுக்கு வருமான வரி இல்லாமல் சுளையாகப் 12 ஆயிரம் ரூபாய் தருகிறார்கள்.

பக்ரா நங்கல் திட்டம் பற்றிப் பரவசப்பட்டுத்தானே யாத்திரிகர் எழுதுகிறார் என்று எண்ணுவர், அவர், அவ்விதம் பரவசப்பட்டு விடாதீர்கள், இவைகளெல்லாம் உள்ள இடம் நம் நாடு, அல்ல, வடநாடு! அது நினைப்பிலிருக்கட்டும், நானும் என் நண்பர்களும் இந்த அற்புதமான பக்ராவைப் பார்த்துக் கொண்டிருந்தபோது புன்னகை பிறக்கவில்லை, பெருமூச்செறிந்தோம், பாரதம்! பாரதம்! என்று பேசுகிறார்கள் இந்தத் தலைவர்கள், ஆனால் ஓரவஞ்சனை தான் நடக்கிறது. என்னென்ன திட்டங்கள், எவ்வளவு அருமையான திட்டங்கள், எத்தனை நூறு கோடிகளைக் கொட்டுகிறார்கள், எல்லாம் வடக்கேதான், நமது ஜென்ம பூமியில் இதுபோன்ற ஒரு திட்டமும் கிடையாதே, நாமும் ஓயாமல் சளைக்காமல் பாரதம் ஒரே நாடு, பண்டிதர் அதன் ஒப்பற்ற தலைவர் என்று சிந்து பாடுகிறோம், இங்கே பக்ரா நங்கல் அங்கே..? என்று எண்ணியெண்ணிப் பொருமினோம் என்றெல்லாம், கட்டுரையாளர் நண்பர்களிடம் பேசுவார் - கல்கியில் அதே போலவா எழுத முடியும், மறைதிரை வேண்டாமா, ஆகவேதான், சூட்சம புத்தி உள்ளவர்களுக்கு இவ்வளவு சொன்னாலே போதும் என்ற எண்ணத்துடன் கட்டுரையாளர் குறிப்பிடுகிறார்.

“என்னுடன் வந்த தென்னிந்தியப் பத்திரிகையாளர் மட்டும், எல்லாம் இங்கேதான் செய்கிறார்கள். வட இந்தியாவில் செய்திருப்பதுடன் ஒப்பிட்டால் தென்இந்தியாவில் ஒன்றுமே செய்யவில்லை என்றுதான் தோன்றுகிறது. பணத்தைப் பணம் என்று பார்க்காமல் வாரி இறைக்கிறார்களே என்று ஓயாமல் சொல்லிக் கொண்டே வந்தார்.

இப்படி அவர் குறைப்பட்டதில் ஒன்றும் தவறில்லை என்பதை அங்கு செய்திருக்கும் சாதனைகளைப் பார்க்கும் போதெல்லாம் நினைக்கத்தான் தோன்றுகிறது.

யாத்திரை நல்லறிவு தருகிறது! தேசியத்தையும் துளைத்துக் கொண்டு புகுந்து விடுகிறது நல்லறிவு ஏக இந்தியா என்ற தத்துவம் எவ்வளவு போலித்தன்மை வாய்ந்தது, என்பதைக் கட்டுரையாளரின் ஏக்கமே இடித்துக் காட்டுகிறது.

பாரதத்தில் எந்தப் பகுதியில் திட்டம் இருந்தல் என்ன? எல்லாம் நமது தேசத்தின் ஒரு பகுதிதானே என்று மேடையில் பேச முடிகிறது, பாலைவனத்தைச் சோலை வனமாக்கும் வேலை வடக்கேயும், சோலைவனமாம் திருஇடம் பாலைவனமாவது கண்டு பதைக்காதிருக்கும் போக்கு இங்கேயும் இருப்பது தெரிந்ததும், எத்தனை காலத்துக்குத் தான் உள்ளதை மறைப்பது, உண்மையைக் கூறிவிட வேண்டியதுதான், ஓரளவுக்கேனும், குறிப்பாக வேணும் என்று ஆவல் பிறக்கிறது, ஓரளவுக்கேனும், குறிப்பாக வேணும் என்று ஆவல் பிறக்கிறது. இந்த நல்லறிவு பக்ரா - நங்கல் கால்வாய்ப் பாதையில் யாத்திரை செய்த பிறகாவது உதித்ததே - மகிழ்ச்சி - மிக்க மகிழ்ச்சி என்று கூறத்தோன்றுகிறது.

“வட இந்தியாவில் நான் சென்ற இடங்களில் எல்லாம் ஒரு அதிசயதû;தப் பார்த்தேன். தென் இந்தியாவுக்கும் வட இந்தியாவுக்கும் உள்ள பெரிய வித்தியாசத்தைக் கண்டேன். அங்கு ஏதாவது ஒரு வேலையைத் தொடங்கினால் இரவு பகல் இருபத்துநாலு மணி நேரமும் மூன்று ஷிப்டு முறைகளை வகுத்துக் கொண்டு வேலை செய்து முடித்து விடுகிறார்கள். நம் ஊர்களிலே ஏதாவது பாலம் கட்டப் போவதாக யோசனை செய்வதற்கு ஒரு வருஷம், பிறகு அந்த யோசனையை அமுலுக்குக் கொண்டு வருவதற்கு ஒரு வருஷம் ஆகிறது. பிறகு ஒரு மந்தரியைப் பிடித்து அந்தப் பலத்துக்கு ஆஸ்திவாரம் போட வேண்டியது. பிரமாதமாகப் பத்திரிகைகளில் செய்திகள் வெளிவருதற்கு ஏற்பாடு செய்ய வேண்டியது. அந்தச் செய்தியைப் படித்துவிட்டுக் தமிழ்நாட்டை விட்டு வெளியில் இருப்பவர்கள் சந்தோஷப்பட வேண்டியது. இரண்டாண்டு கழித்து அவர்கள் திரும்பவும், தமிழ்நாட்டுக்கு வரும்போது ஒரு பாலத்துக்கு ஆஸ்திவார விழா நடந்ததாகப் படித்தேனே! அந்தப் பாலம் எங்கே இருக்கிறது? என்று இவலோடு விசாரிப்பார்கள். ஓகோ! அப்படி ஒரு விழா நடைபெற்றதா? என்று நாம் எல்லோரும் வியப்படைந்து போவோம்.

பிறகு விசாரித்தால் பாலத்துக்கு ஆட்ட ஆஸ்திவாரக் கல்லையே காணோம் என்ற விவரம் தெரிய வரும்.
கல்கி (நவம்பர் 20)

மேலே உள்ளதும் கல்கியில் காணக் கிடப்பதுதான் - யாத்திரையின் பலனாகக் கிடைத்த கருத்து, ஆஸ்திவாரக் கல்லே மறைகிறது பாரத்தின் ஒரு பகுதியில் - மற்றோர் பகுதியிலோ ஆழ்கடல் வெட்டுகிறார்கள். மலைகளைக் குடைகிறார்கள், கனிகளைத் தோண்டுகிறார்கள், குபேரபுரி காண்கிறார்கள்.

ஆட்சி அனைவருக்கும் என்றுதான் நாமும் பேசுகிறோம் - அதனை ஆண்டப்புளுகு என்று அறியாமல் சில வேளைகளிலும் அறிந்து, துணிந்து சில வேளைகளிலும், கிடைத்த சுதந்திரத்தின் பலனை அனுபவிப்பவர்கள் நாமல்லவே, நாட்டுக்கு நல்லதுரை வந்தாலும் தோட்டிக்குப் புல்லுச்சுபை போகக் காணோம், நாம் நாடு வெள்ளையன் காலத்தில் இருந்த இன்னலும் இழிவும், இடர்ப்பாடும் நீக்கப்படாமல் ஆலங்கோலமாகவே இருந்து வருகிறது. ஆனால் அங்கே... என்று துவங்கினால், நேரு பண்டிதரை நயவஞ்சகர் என்று கண்டிக்கும் அளவுக்குத்தான் யாத்திரிகர் செல்வார், நண்பர்களிடம் உரையாடும் போது பத்திரிகையிலே சில பண்பு வேண்டுமே அதனால் அவர் இந்த அளவில் கூறுகிறார்.

“இங்கு செய்திருக்கும் வேலைகளைப் பார்த்தால் பணத்தைப் பணமென்று பாராமல் வாரி இறைத்திருக்கிறார்கள் என்பதை நன்றாகத் தெரிந்து கொள்ள முடிகிறது. சுதந்திரம் பெற்ற இந்தியா இல்லையா? அதிலும் வட இந்தியா ஆயிற்றே! சுதந்திரம் பெற்ற பலனை வட இந்தியர்கள் வெகு நன்றாக அனுபவித்துக் கொண்டிருப்பதை உணர முடிந்தது! அவர்களுக்குப் பணத்துக்குப் பஞ்சமா என்ன?”

சுதந்திரம் பெற்ற பலனை வட இந்தியா வெகு நன்றாக அனுபவிக்கிறது.

சுதந்திர ஆட்சியல் இங்கு ஆஸ்திவாரக் கல்லே காணாமற் போகிறது!

இது ஏதோ தலைவர்களுக்குத் தெரியாமல் நடந்து விட்ட ஆநீதி என்று ஏவரேனும் எண்ணிக் கொள்ளக்கூடாது என்பதற்காகவே யாத்திரிகள் விளக்கம்கூட அளிக்கிறார், நிலைமைக்கு அதேபோது, அங்கே கங்கையும் யமுனையும் பிரம்மபுத்திராவும் வேறு பல பிரம்மாண்டமான ஜீவநதிகளும் உள்ளன - வளம் கிடைக்கிறது, இங்கே ஆறுகள் இல்லையே என்று பேசுவோரின் அறிவுச் சூனியத்தையும் தாக்க முற்படுகிறார். அவர் கூறிடும் கருத்தினைக் கேண்மின்.
“சுதந்திரம் பெற்ற பிறகு சர்க்கார் அதிகாரிகளும் பொது ஜனத்தலைவர்களும் வடநாட்டில் ஒவ்வொரு பகுதிகளுக்கும் தாங்களே சென்று, நாட்டு முன்னேற்றத்துக்காகச் செய்துள்ள திட்டங்களுடன் ஒப்பிட்டுப் பார்த்தால் தமிழ்நாட்டில் ஒன்றுமே செய்யவில்லை என்றுதான் சொல்லத் தோன்றுகிறது எனக்கு.

தமிழ்நாட்டில் கங்கை நதியைப் போல் ஜீவநதி இல்லாமல் இருக்கலாம். ஆனால் எத்தனையோ பெரிய ஏரிகளும் சிறு சிறு நதிகளும் இருக்கத்தான் செய்கின்றன. சோழ அரசர்கள் காலத்திலேயே அதிசயமான அணைகளும், அற்புதமான ஏரிகளும் வெட்டியிருக்கிறார்கள். அப்படிப்பட்ட மகா மன்னர்கள் வாழ்ந்த நாடுதான் தமிழ்நாடு. இப்போது அவர்கள் வெட்டிய ஏரிகள் பல கவனிக்கப்படாமல் இருக்கின்றன. அவைகளை எல்லாம் வெட்டி இழப்படுத்தித் தண்ணீரைத் தேக்கி விவசாயத்துக்கு உதவும்படியாகச் செய்யலாமே.”

இவை யாவும் கல்கியில்! காட்டுக் கூச்சல் என்போர் உள்ர் இன்றும், நமது பிரச்சாரத்தை! இவர்களின் கண்கூடத் திறந்துவிடத்தக்க வகையில் யாத்ரீகர் அறிவு கொளுத்த முற்படுவது கண்டு மகிழ்கிறோம்.

காலை அரும்பி மாலை மடியும் அளவுக்குத்தான் இவர் போன்றோரின் இத்தகு கருத்துக்கள் என்று கூறுவர் - இருக்கட்டும் - பூத்ததே ஆஅதே பெருமைக்குரியதுதான் - ஏனெனில் நாம் செல்லும் பாதையும் மேற்கொண்டுள்ள பணியும் தூய்மையானது என்பதை நமக்கும், நாட்டிலுள்ள நல்லோருக்கும் காட்டும் சம்பவமல்லவா, இந்தக் கட்டுரைகள்?

“வடநாட்டுத் தலைவர்களை தமிழ்நாட்டில் கொண்டாடுவதுபோலத் தமிழ்நாட்டுத் தலைவர்களை வடநாட்டில் அவ்வளவாகக் கொண்டாடுவதில்லை. நான் வட நாட்டில் சுற்றிப்பார்த்த இடங்களில் எல்லாம் நம் தமிழ்நாட்டுத் தலைவர்களின் படங்களையே காணவில்லை. அதைப்பற்றி மனதுக்குள்ளாகவே வருத்தப்பட்டுக் கொண்டிருந்தேன். சிலரிடம் வாய்விட்டும் சொல்லிக் கொண்டும் வந்தேன்.”

கழகத்தில் சந்தா தராமலே, கட்டுரையாளர் உறுப்பினராக முயற்சிக்கிறார் என்று குற்றம்சாட்டத் தோன்றுகிறதல்லவா, இந்தக் கருத்தைக் காணும்போது,
வடநாட்டில், தமிழ்நாட்டுத் தலைவர்களை மதிப்பதில்லை என்று பேருண்மையும்.

வளமளிக்கும் திட்டம் எல்லாம் வடநாட்டில்தான் என்ற உண்மையும், கல்கி வாயிலாக நாட்டுக்கு கிடைத்திடப் பயன்பட்டது யாத்திரை மகிழ்கிறோம்.

சிலரிட; வாய்விட்டுச் சொல்லிக் கொண்டும் வந்தேன் என்று கட்டுரையாளர் எழுதும்போது உள்ளபடி பரிதாபமாகவும் இருக்கிறது, அவருடைய குருநாதர் கூறிய கருத்தும் நினைவிற்கு வருகிறது.

வேறோர் பிரச்சனை குறித்து ஆச்சாரியார் கல்கியில் எழுத நேரிட்டபோது யாரோ ஒரு ஆழ்வாருடைய பாகரத்தை மேற்கோள் காட்டினார்.

கொட்டி வைத்திருக்கும் நெல்லை ஒரு கழுதை மேய்ந்து கொண்டிருந்ததாம். உடையவன் அதை விரட்டி அடிக்காமல், கழுதையின் வாய் ஆசைவைப்பார்த்து மகிழ்ந்து கொண்டிருந்தானாம்!

அதுபோல நமது காரியம் கெடுகிறபோது நாம் அக்கரை காட்டாதிருப்பது நல்லதல்ல என்பதை விளக்க, ஆழ்வார் கண்ட கழுதையை அழைத்துக் காட்டினார் ஆச்சாரியார் அவருடைய அனுமதி கிடைக்குமென்ற நம்பிக்கையில், நாமும் அந்தக் கழுதைக் கதையைக் கட்டுரையாளருக்குக் காட்ட விரும்புகிறோம்.

வடக்கு வாழ்கிறது, தெற்குத் தேய்கிறது! உமக்கும் அது தெரிகிறது! உள்ளமும் வேகிறது.

வடக்கே, தெற்கத்தியாரை மதிப்பதில்லை - அதனையும் உணர்ந்தீர், உள்ளம் நோகிறது! ஆனால், சிலரிடம் வாய் விட்டுச் சொல்லிவிட்டால் போதுமா, நாடறியக் கூற வாரும் என்று அழைக்கிறோம், நானா? என்று அச்சத்துடன் அவர் கேட்கும் காட்சியையும் காண முடிகிறது, ஆச்சாரியார் பக்கத்திலே குறும்புப் புன்னகையுடன் அமர்ந்திருப்பதும் தெரிகிறது!

(திராவிட நாடு - 11.12.55)