அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


யோசியுங்கள்!
“முதலாளிகளுக்காக முதலாளிகளால் நடத்தப்படும் இராசாங்கத்தில், தொழிலாளர்கள் என்ன பயனை எதிர்ப்பார்க்க முடியும்? ஏழைத் தொழிலாளருக்கு ஏதாவது நம்மை ஏற்பட வேண்டுமானால், முதலாளித்துவ அரசியல் முறை மாறவேண்டும்; பொதுமக்களின் அன்பையும் ஆதரவையும் பெற்ற சர்க்கார் ஆட்சியில் அமரவேண்டும்; அப்போது தான் ஏழைத் தொழிலாளர்களின் குறைகளைக் கவனிக்கவும், அவற்றிற்குரிய பரிகாரங்களைத் தேடவும் வழி பிறக்கும்; எனவே ‘ஏழை பங்காளர்களாகிய’ எங்களை ஆட்சியில் அமர்த்துங்கள்.”

இந்த வாக்கியங்கள், இன்று ஆட்சிப் பீடத்தில் அமர்ந்து அரசியலை நடத்திவரும் தலைவர்கள் முதல் அக்கட்சியிலுள்ள தொண்டர்கள் ஈறாகவுள்ள அனைவராலும் அன்று (தேர்தல் காலத்தில்) கூறப்பட்டவை. பொதுமக்களும், தங்கள் குறைகள் கவனிக்கப்படும் என்ற நம்பிக்கையோடு, அவர்களையே ஆட்சிப்பீடத்தில் அமர்த்தினர். ஆட்சி நடக்கிறது. ஆனால், ஆட்சி நடப்பதற்கு அடிப்படையாக இருந்தவர்களின் குறைகள் குறையவில்லை; அதிகரித்துக்கொண்டே வருகிறது; காரணம் என்ன?

ஒரு நாட்டை வளமாக்கி நல்ல நிலையில் இருக்கச் செய்வதில், நாலாவிதத்திலும் உயிர்நாடியாக உள்ள ஏழைத் தொழிலாளர்களின் குறைகள் கவினக்கப்படாததேயாகும். ஆடசிக்கு வந்த சர்க்கார், அவசரமாகச் செய்யப்பட்ட வேண்டிய காரியம் எது என்பதைத் தெரிந்து, முதலில் அதனைச் செய்திருந்தால், நாட்டில் இன்று நடக்கும் குமுறல்களும், குழப்பங்களும் ஒருபோதும் ஏற்பட்டிருக்காது. அந்நியனுடைய ஆட்சிக்காலத்தில் கூட நடந்திராத அடக்குமுறைகளும் தடையுத்தரவுகளும், ‘ஜனநாயக சர்க்கார்’ என்று சொல்லப்படும் இன்றைய ஆட்சியில் நடைபெறுகின்றதென்றால், இதனை மக்கள் நலனுக்காக நடத்தப்படும் ஆடசி என்று எவரேனும் கருதமுடியுமா? இந்த விசித்திரமான ஜனநாயக ஆட்சி ஏற்பட்ட பின்னர்தான், எங்கு பார்த்தாலும் வேலை நிறுத்தங்கள் ஜனநாயக ஆட்சிக்கு அளவு கோலாக ஏற்பட்டுள்ளன.

எடுத்துக்காட்டாக, இப்போது சென்னையில் நடைபெற்று வரும் பி. அண்டு சி. மில்தொழிலாளர்களின் வேலை நிறுத்தத் திற்குக் காரணம், மில் முதலாளி அடைந்த அளவு கடந்த லாபத்தில் ஒரு சிறுபகுதியை மட்டும் அதாவது பத்து கோடியே இருபத்தேழு லட்ச லாபத்தில், 27 லட்சத்தை மட்டும், இந்த லாபத்துக்குக் காரணமாய் இருந்த தொழிலாளர்களுக்குப் போனசாகக் கொடுககும்படி கேட்பதுதான். இது, தொழிலாளர்கள் கேட்பதற்கு முன்னரே, சர்க்கார், தெரிந்து செய்திருக்க வேண்டிய ஒருசுலபமான காரியமாகும். சொல்லாமல் செய்வர் - சொல்லிச் செய்வர் - சொல்லியும் செய்யார் என்ற மூன்று பிரிவில், கடைசியாக இருப்பதையே நாஙக்ள் கையாள்வோம் என்ற முறையில் இன்றைய சர்க்கார் காரியங்களை நடத்திக் கொண்டு போகும் வரையில், ஏழைத் தொழிலாளர்களின் குறைகளை எப்படிப் போக்க முடியும்? முதலாளித்துவ முறையையே நாட்டில் நிலைபெறச் செய்யும் தோரணையிலும், தொழிலாளர் குறைகளைக் கண்ணெடுத்தும் பார்க்க விரும்பாத முறையிலும் காரியங்கள் நடத்திச் செல்லும் ஒரு சர்க்காரால் பொது மக்களுக்க - ஏழைத்தொழிலாளர்களுக்கு ஏதாவது நம்மை ஏற்படுமா? இதற்கு ஒரு வழிகோல வேண்டாமா? யோசியுங்கள்!

(திராவிடநாடு - 16.3.1947)