அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


யூதன் துலாக்கோல்!

ஆமாம்! நானோர் யூதன் ஆனால், யூதனுக்குக் கண்களில்லையா! உடலுறுப்புகள், உணர்ச்சி, உள்ளம், இவையில்லா மரக்கட்டையா, யூதன்! பசித்தால் யூதன் புசியானா! அவனை நெருப்பு சுடாதோ! நீர் அவனுக்குக் குளிர்ச்சியூட்டாதோ? கதிரோன் அவனைக் காயானோ, மாரி அவனைத் தாக்காதோ! யூதனானால், என்னய்யா! எம்மைக் குத்தினால், உமது உடலிலிருந்து குருதி வராதா! நஞ்சிட்டால் நாங்கள் சாகமாட்டோமா? கிருஸ்தவருக்குள்ள உடலமைப்பு, உள்ள அமைப்பு, எமக்கு இல்லையோ! யூதன் என்றால், தனிப்பிறவியா? சொரணை கெட்டாகிடப்போம்? வெறும் சோற்றுத் துருத்தியா நாங்கள். சோகம், வீரம், ஹாஸ்யம், கோபம், எனும் உணர்ச்சிகள் யூதர்களை அண்டிடாவோ! என்னதான் யூதனானால் என்னய்யா நாங்களும், மனிதப் பிறவிதானே?

வேனிஸ் நகர யூதன், வியாபாரி, சைலக், யூதரும் மற்ற மக்கள் போன்றாரே, என்பதை உருக்கமாக எடுத்துக் கூறினான், கேட்போர் மலைக்கும்விதமாக, ஐயோ, பாபம்! நாம் அநியாயமாகத்தான் இந்த யூதர்களிடம் வெறுப்புக் காட்டுகிறோம் என்று பலரும் நினைக்கும்படி! இந்த “மனித நீதி” பேசிய ஷைலக், வேறோர் இடத்திலே, நீதிமன்றத்திலே, யூத இயல்பைக் காட்டுகிறான். யூதர் மற்ற மக்கள்போல, மக்களேதான், ஆனால் கனியெல்லாம் சுவை தருவனவுமல்ல, உண்ணக் கூடியனவுமல்ல, எட்டியும் கனி வகையைச் சேர்ந்ததே, பலாக்கனிபோல் அதற்கு முட்போர்வை இல்லை, ஆனால், பசப்பும் பார்வையுடனுள்ள அப்பழமோ, ஒரு பயங்கர உயிர்போக்கி, ஓங்கி வளர்ந்திருப்பினும் ஒதிய மரம் பயன்படாது, என்பதேபோல, யூதரும் மனிதப் பிறவியே என்றாலும், தனியான சில இயல்பு டைத்தோர் என்பதை ஷைலக் தன் செயலால் காட்டியதை, ஆங்கிலக் கவி, ஷேக்ஸ்பியர், வேனிஸ் நகர வர்த்தகன் எனும், நாடகத்திலே அழகுறத் தீட்டியுள்ளார்.

மனிதநீதி பேசிய ஷைலக்கிடம், பணியாள், “ஊர்ச்சேதி” கூறுகிறான். அதுபோது ஷைலக்கின் உள்ளப்பாங்கு, தெளிவாக விளங்குவதைக் கேளீர்!

ஷைலக் : என்னப்பா, டூபால்! ஜினிவா நகரிலிருந்து என்ன சேதி கொண்டு வந்தாய்? என் மகளைக்கண்டு பிடித்தாயோ!

டூபால் : நான் சென்ற இடமெல்லாம், உமது மகள் தங்கியிருந்து விட்டுப் போய்விட்ட இடங்களே! நான் அவளைக் கண்டுபிடிக்க முடியவில்லை.

இந்தப் பதிலைக் கேட்டதும், மகளை இழந்த தகப்பன், மார்பினில் அடித்துக்கொண்டு, “ஆசைக்கோர் மகளே! என் செல்வமே! உன்னை இழந்து நான் எங்ஙனம் வாழ்வேன்! கிளை முறிந்த மரமானேன். பாய்மரம் பாழ்பட்ட மரக்கலமானேன்” என்று கோவெனக் கதறித் தரையிலே கடகடவெனப் புரண்டழுதான், என்றே கேள்விப்படுவோம், அதுவே மனித இயல்பு! ஆனால், மனிதக் கூட்டத்திலே ஒரு பகுதியினராம் யூத இனத்தின் வர்த்தகனின் வாய்மொழி கேண்மின்.

ஷைலக் : ஐயோ, அட, அட, அடா! போச்சே என் அருமையான வைரம்! இரண்டாயிரம் டுகாட் (நாணயம்) போட்டு வாங்கின பொருள் போச்சே வேறுபல ஆபரணங்களும் போயினவே.

அந்த யூதனுக்கு மகள் மீதிருந்த நினைப்புக்குக் காரணமே, அவள் அணிந்திருந்த நகைகள்தான். மகளின் விலை அவனுக்குக் கவலையில்லை, அவள் அணிந்திருந்த வைரம், அணிபணிகளின் விலைமதிப்பே அவனுக்குத் தெரிந்தது. அவன் அழுதது, தன் மகளை இழந்ததற்காக அல்ல! நகைகள் போய்விட்டதே, பொருள் நஷ்டமாகிவிட்டதே என்பதை எண்ணித்தான். ஷைலக் பேசுவதை மேலும் கேளுங்கள்!

ஷைலக் : என் காலடியில் என் மகள் பிணமாகி விழுந்து கிடப்பினும் பரவாயில்லை. அந்த வைரம் மட்டும் அவன் செவியிலே இருந்தால் போதும்.

இதுதான் யூதனின் இயல்பு என்று எண்ணாதீர்கள். பெண் போச்சு, நகை போச்சு, இந்த நஷ்டத்துடன் பறிபோனதைத் தேடப்போனதன் செலவு இருக்கிறதே, அதை நினைத்து வேறு கதறுகிறான்.

ஷைலக் : ஒரு துப்பும் துலங்கவில்லை, குதிரை செத்ததுடன் குழி தோண்டச் செலவு வேறு. பொருள் போச்சு! அதைத்தேட வேறு பணம் செலவாச்சு, அட, அடா, என்ன பொல்லாத வேளை, எவ்வளவு கஷ்ட காலம்.

இந்த இயல்பு கொண்ட ஷைலக், தன்னிடம் கடன்பட்டு, கை முதலை இழந்து கலங்கிய அண்டோனியோ என்பானிடம், கடன் தொகைக்காக, அவன் மார்பிலிருந்து, ஒரு பவுண்டு இறைச்சி அறுத்தெடுத்துக்கொள்ள, பத்திரம் இருந்ததைக் காட்டி நீதிமன்றத்திலே சட்டத்தைத் துணைக்கழைத்தான்.

யூதனானால் என்ன, அவர்கள் மனிதப் பிறவியல்லவா என்று நீதி பேசிய ஷைலக்கின் செயல், அவனை மனிதப் பிறவியிலே நேர்த்திடுவதற்கு, அவனுடைய உடலமைப்பு ஆதாரமாக இருக் கலாமே யொழிய உள்ளப்பாங்கு இடந்தராது என்பதை எடுத்துக்காட்டி விட்டது. நெடுநாட்களாகவே, ஐரோப்பாவிலே, யூத வகுப்பாரின் பணப்பித்து, வியாபார தந்திரம் ஆகிய குணவிசேஷங்களைக் குறித்துக் கண்டித்து கேலி செய்தும், வந்தனர். ஹிட்லரின் காட்டு மிராட்டித்தனமான போக்கின் பயனாக, ஏளனம் செய்யப்பட்டுவந்த யூதருக்குப் புகலிடமும், ஆதரவும் ஓரளவு கிடைத்திருக்கிறது, எனினும், செல்வத்தைச் சேர்ப்பதிலே யூதர் காட்டும் அக்கரை, ஆசை, திறமையை, உலகம் அடியோடு மறந்து விடுமென்று நாம் கருதவில்லை.

இங்கேயும் யூதர்
அன்று ஷைலக் பேசிய நீதிபோல் இந்த உபகண்டத்திலே, சென்ற கிழமை நடைபெற்ற மார்வாரி மாநாட்டிலே மார்வாரி வகுப்பினர் மீது, விணாகக் கோபிப்பதும், அவர்களைக் கண்டிப்பதும் கூடாதென்று, அம்மாநாட்டுத் தலைவர், திருவாய் மலர்ந்தருளியிருக்கிறார். மார்வாரி வகுப்பினர், இந்த உப கண்டத்திலே, எந்தப் பிரதேசத்திலும், வியாபாரக் கோமான் களாகவே இருக்கின்றனர். வங்கத்தார் சிங்கமென்று கர்ஜிப்பர், பரங்கியை விரட்டுவோம் என்றுரைப்பர், “வார்தா தேவனைத் தொழுவர்” ஆனால் தொழிலரசு, மார்வாரிகளிடமே இருக்கும் பஞ்சாபிலே, பட்டாளத்துச் சூரர் உண்டு, உழுது பிழைக்கும் ஜாட் வகுப்பு உண்டு, கூலிகளுண்டு; ஆனால் பஞ்சாபில் வியாபார பீடங் களிலே அமர்ந்திருப்போர், மார்வாரி வகுப்பினரே. அசாமிலே, ஆட்சி மார்வாரியிடமே! சிந்து மாகாணம், இஸ்லாத்தின் முதல் ஜெயஸ்தம்பம் நாட்டப்பட்ட இடம், அங்கே, மார்வாரி வகுப்பினரே வியாபாரத் துறையிலே செல்வாக்குடன் உள்ளனர். சென்னை மாகாணம் என்ற சிறுமைப் பெயருக்கு ஆளாகி விட்ட திராவிட நாட்டின் தகவலோ சொல்லத் தேவையில்லை. ஆமதாபாத், ஷோலாப்பூர், பம்பாய், பூனா, மில்கள், இரவு பகல் ஓய்வின்றி வேலை செய்து கொண்டிருப்பதே, சென்னையின் உல்லாச உலகுக்கு உடை தரும், உத்தம கைங்கரியத்தைச் செய்வதற்குத்தான்! கப்பல் கட்ட ஒரு மார்வாரி, விமானத் தொழில் துவக்க ஒரு மார்வாரி, சுரங்கத் தொழிலுக்கு ஒரு மார்வாரி, சுகந்தச் சாமான்களுக்கு மார்வாரி, வட்டிக்கடைக்கு மார்வாரி, எதற்கும் எங்கும், மார்வாரி மயம்!! இதன்பயனாக, மார்வாரி பிரதேசம் கால் நூற்றாண்டிலே பூந்தோட்டமாகிவிட்டது. தலையிலே பாகையும், உடலிலே நமைச்சலும், உள்ளத்திலே இலாப ஆசை எனும் குடைச்ச லுங் கொண்டு தமிழகத்திலே கால் வைக்கும் மார்வாரி, நம் கண் முன்பாகவே, கடைவைத்து முதலாளியாகி, இலாபத்தைக் குவித்துச் சேட்ஜீயாகி, பணந்திரட்டி, மார்வாரின் மாளிகை கட்டி, ‘மகாத்மாவுக்கு’ காணிக்கை தரும் தேசபக்தனாகி விடுவதைக் காண்கிறோம். “ஆண்டவனே! என்னை அழைத்துக்கொள்ள இன்னமும் மனம் வரவில்லையோ” என்று அண்ணாந்து பார்த்துத் தமிழன் கேட்கிறான். ஏழாவதடுக்கிலே, உறுப்புகளின் அமைப்புகள் கெடும்விதமாக மாமிச மலை போலாகிவிட்ட மார்வாரி சீமான், ஏஜண்ட் தபாலுக்கு ஏங்கி நிற்கிறார், ஆறாவது மாடியிலே, அவருடைய மூன்றாவது மனைவி சிதார் வாசித்து மகிழ்கிறாள், மகன், மாளிகை வாயற்படியிலே நிற்கிறான், ரோல்ஸ் ராய்ஸ் மோட்டாருக்காகக் காத்துக்கொண்டு! பாலைவனம் பழத் தோட்டமாகி விட்டது, பழத்தோட்டமாக இருந்த தமிழகம் பாழ் வெளியாகி விட்டது! இதனை மாற்றி, திருத்தியமைக்க, தமிழர் இயக்கம் தன் வலிவு முழுவதையும் திரட்டும் வேலையில் ஈடுபட்டிருக்கும் வேளை இது.

மார்வாரி வகுப்பினருக்குக் “காந்தி பக்தி” அமோகம். அந்தப் பக்தி, நந்தமிழ் நாட்டுப் பக்தியைப்போல, நஷ்டக் கணக்கில் சேர்க்கப்பட வேண்டிய புள்ளியன்று, இலாபக் கணக்கில் சேரும் புள்ளி. காந்தி பக்தராக இருப்பது, மார்வாரிகளுக்கு மகத்தான இலாபந் தருகிறது. காந்தியாரும், அதே வகுப்புத்தான்! எனவே, தங்கள் “சமூக சிரேஷ்டரும்” தங்கள் “வாழ்வுக்கு இரட்சகரும்” - “இலாபத்தைத்தரும் வழிகண்டு சொன்ன தாதாவுமான” காந்தியாரின் திருப்பெயர் சூட்டப்பட்ட மைதானத்தில், துரைத்தனத் தலைமைக் காரியாலயம் உள்ள டில்லி நகரிலே மே 11ந் தேதி கூடிற்று அகில இந்திய மார்வாரி மாநாடு. சேத்ராமகோபால் தலைமை வகித்தார். அவர் சோகத்தோடு, பேசியிருக்கிறார், இனிவரும் இக்கருத்துக்களை.

1. மாகாணப்பற்று அதிகரிக்கிறது, இது மிகக் கஷ்டங்களைத் தரும்.

2. ஒரு மாகாணத்தவர் மற்றோர் மாகாணத்துக்குத் தேவையில்லை என்று பேசப்படுவது தவறு.

3. மார்வாரிகள் எல்லா மாகாணங்களுக்கும் போய் இலாபமடைவதாகச் சொல்லப்படுவது கேட்டு வருத்தம் பிறக்கிறது.

4. இதனால், அந்தந்த மாகாணத்துக்கு மட்டுமேயன்றி இந்தியா பூராவுக்கும் நஷ்டம்.

5. மார்வாரிகள் தமது சொந்த முயற்சியால், சென்றவிடமெங்கும் முன்னுக்கு வருகிறார்கள்.

6. சென்று தங்கியுள்ள இடங்களில் தர்மம் செய்கிறார்கள்.

ராமகோபாலர் சொற்பொழிவுச் சாரம் இதுவே.

மார்வாரிகளைக் கண்டிக்கிறார்கள், அவர்கள் இந்தியா பூராவிலும் சென்று இலாபமடிக்கிறார்கள் என்ற விஷயத்தையும் மற்றோர் மாகாணத்தான் சுரண்டும் கொடுமை ஒழிய வேண்டும் என்ற உணர்ச்சி பரவிவிட்டது, என்ற உண்மையும், ராமகோபால் ஜீயின் சொற்பொழிவிலிருந்து விளங்குகிறது. அவரது துயரங்கலந்த “தொகையறா” கேட்கும்போது, நமது இயக்கக் கொள்கைகள் எனும் கணைகள், மர்வாரி ஆதிக்கத்தைத் துளைக்கின்றன என்பது தெரிகிறது, எனவே மகிழ்ச்சியே பிறக்கிறது. வீரம், சோகம், சாகசம், பயமுறுத்தல், பரிதாப உணர்ச்சியைத் தட்டிப்பார்த்தல், தானந்தரு வதாகக் கூறி ஆசையூட்டுதல், எனும் பல்வேறு ரசங்கள் ததும்ப, மார்வாரி மாநாட்டுத் தலைவர், பேசி இருப்பதன் காரணம் என்ன? பலவர்ண நச்சரவுபோல் நீண்டு வளைந்த அங்கியைத் தலையிலே பாகையாகச் சுற்றிக்கொண்டு தலையணை போன்ற கணக்கு ஏடுகளை அடுக்கி வைத்துக்கொண்டு, “திண்டு திமாசு” மீது சாய்ந்துகொண்டு, தொழில் நடத்தும், இந்தத் தர்மப்பிரபுக்களின் யோக்யதை இதனை வெளிவந்து விட்டது என்பது தான் மக்கள் உணரும்படி செய்து, வியாபாரத் தொழில் துறையில் அவர்கள், திராவிட நாட்டுச் செல்வத்தை அரிக்கிறார்கள் என்பதை ஆதாரபூர்வமாக எடுத்துக்காட்டி, வாணிப உலகினரின் விழியைத் திறந்த பெருமை, பெரியார் ஈ.வெ. இராமசாமி அவர்கட்கே உண்டு. அவர் வியாபாரத்துறையிலே இருந்தபோதே தமிழ் நாட்டில் பல்வேறு இடங்களில் பொதுவாகவும், கோவை ஜில்லாவிலே குறிப்பாகவும் மார்வாரி படை எடுப்பு ஏற்பட்டு, தென்னாட்டு வியாபாரக் கோமான்களைத் தேயவைத்த வரலாற்றையும், பாடுபட்டுப் பொருள் ஈட்டி, தென்னாட்டு வணிகர், வடநாட்டு மார்வாரியிடம் வாங்கிய கடனுக்கு வட்டி செலுத்திச் செலுத்திக் குட்டிச்சுவரானதும், பலப்பல பிரபல விலாசங்கள், விலாசமிழந்ததும் ஆகிய தகவல்களை நன்கு அறிந்ததால், அவர் இது விஷயமாக எடுத்துரைப்பதை இல்லையென்றுரைக்க ஆச்சாரியாராலும் முடியாது. கடந்த முப்பதாண்டுகளுக்குள், தமிழகத்திலே, மார்வார் படையெடுப்பு எவ்வளவு பலமாகிவிட்டதென்பதைக் கடைவீதிகளைக் காண்போர் நன்கறிவர். சென்னையிலே காணக் கண்ணுள் ளோருக்குப் பாடம் பளிச்சென்றிருக்கிறது. எத்தனை “ஜீ”க்கள், எத்தனை “சேட்ஜீ”க்கள் என்னென்ன விதமான வியாபாரம், உலோகம் முதல் உணவுப் பொருள் வரையிலே, மார்வாரி வகுப்பிடம் சிக்கி விட்டதைக் காணலாம்.

தர்மப்பிரபுவாம்!

“திராவிட நாடு” தனி நாடாக வேண்டும் என்ற கிளர்ச்சியின் வளர்ச்சியே, இன்று ராம கோபால சேட்ஜி மனதில் மருட்சியை உண்டாக்கி விட்டது. ஆழமாக உழுது வருகிறோம், என்ற அக மகிழ்ச்சியே நமக்கு வருகிறது.

சேட்ஜீ! சோகித்துப் பயன் இல்லை, சுடுசொல் பேசி ஆகப்போவதொன்றுமில்லை, சபித்தாலும் பலிக்காது, தர்மம் செய்வதாக உரைத்தாலும் போதாது, நாமறிவோம், தர்மப் பிரபுக்களின் நடவடிக்கைகளை.

பருந்துகளுக்குப் பகலில் மாவுப் பண்டம் அளிக்கும் மார்வாரி பிரபுக்கள், நடத்தும் வியாபாரம், தமிழன்னையின் இரத்தத்தை வற்ற வைப்பதை அறிந்த நமக்கு, வட்டமிடும் வல்லூறுகள் சிறகடித்துக் கொண்டு, இச்சீமான்கள் வீசும் சிற்றுண்டித்துண்டுகளைத் தின்பது கண்டு, திருப்தியா, ஏற்படும்? கண்களிலே நீர் சுரக்கிறது. பசுவுக்குப் புல்லிடுவர், அதன் வாலுக்கு மஞ்சள் பூசி குங்குமமிட்டுத் தொழுவர், கூலிகளான தமிழர் கூடையைத் தலை மீது சுமந்து வீதி வழி வரக்கண்டு, உக்கா பிடித்துக்கொண்டு, உயர்ந்த திண்டின் மீது இந்த உத்தமர்கள் உல்லாசமாக அமர்ந்திருப்பர். எறும்புப்புற்றுக்குக் கோதுமை மாவு போடுவர், எலும்புந் தோலுமான ஏழை மக்கள் தமிழகத்தில் அதிகமாகக் கண்டு, கூலி குறையும், செலவு மட்டாகி விடும் என்று மகிழ்வர் இம்மார்வாரி மகான்கள். இவை நாமறிவோம், எனவே மார்வாரிகள் சென்ற இடமெல்லாம், தர்மம் செய்கின்றனர், என்று நீர் மாநாட்டிலே பேசியிருப்பது கேட்டு, மகிழோம், மயங்கோம், மகானுபாவரே, இன்னும் சில மார்வாரி பிரபுக்களை இங்கே அனுப்பி எம்மை ரட்சியுங்கள் என்று வேண்டிக்கொள்வோம் என்று எண்ணாதீர்.

ஏழ்மை இருக்கும் வரை தர்மம் தேவையாக இருக்கும் நோய் இருக்கும்வரை மருந்து தேவை என்பது போல். மருந்து இருக்கிறது என்ற மகிழ்ச்சியை விட, நோய் வாட்டுகிறதே என்ற வருத்தமே எமக்கு. இங்குள்ள செல்வமும், தொழில் செய்திறனும், தமிழகத்துக்குப் பயன்பட்டு வெளி இடங்கட்குச் செல்வது தடுக்கப்பட்டு விட்டால், இங்கு, தர்மசாலைகள் தேவையிராது, தங்களைப்போன்ற தர்மப் பிரபுக்களும் தேவையிராது என்று தமிழர் சார்பாக, மார்வாரி மாநாட்டுத் தலைவருக்குக் கூற விழைகிறோம்.

முதலாளித்தனம்
மார்வாரி வகுப்பினர், ஒரு முதலாளிக் கூட்டம். அவ்வகுப்பினர் யாவரும் செல்வவான்கள் என்பதன்று அதன் கருத்து. மற்றப் பிரதேசங்களைப் பண்ணைகளாக்கி இவர்கள் மிராசுதாரராக வாழ்வு நடத்துவதிலும், மற்ற மண்டலங்களை மார்க்கட்டாக்கி இவர்கள் தமது தேசச் சரக்குகளை விற்பனை செய்வதிலும், மற்றவரின் கஷ்ட காலத்தைப் பயன்படுத்தி இவர்கள் பணத்தைப் பெருக்குவதிலும், உடலுழைப்பைக் குறைத்துக் கொண்டு, இறகும் ஏடும் கொண்டு இளித்தவாயரிடம் இலாபமடிப்பதிலும், யூதரையும் விஞ்சும் இக்கூட்டம், பாடுபடுவோரின் பலனைப் பல வழிகளாலும் குறுக்கிட்டுப் பெற்றுக் கொழுக்கும் வகை நோக்கியே, இக்கூட்டத்தை நாம் முதலாளிக் கூட்டம் என்று கூறுகிறோம்.

“இந்தியா” ஒரே நாடு என்ற கற்பனை நிலைத்து விட்டால், இந்த மார்வாரி வகுப்புக்கு, பரந்த மார்க்கட் கிடைக்கும், இலாபம் கொழுக்கும். இனவட்டார அரசுகள் ஏற்படின், மார்க்கட் அளவு குறைந்து விடும், இலாபம் குறையும். இதனாலேயே, மார்வாரி பிரபுக்கள் காங்கிரசையும் இந்துமகா சபையையும் தமக்கு “ஜீவாமிருதமாகப்” போற்றி, ஊட்டி வளர்க்கின்றனர், ஊராளும் உரிமையைக் காங்கிரசுக்குத் தாருங்கள் என்ற “தேசபக்தி” பேசுகின்றனர்.

இந்தியா எனும் இந்த உபகண்டம், இனவட்டாரங்களாகப் பிரித்து அமைக்கப்பட்டு விட்டால், ஒவ்வோர் வட்டாரமும், அதனதன் வளப்பத்தை வளர்க்கவும், செல்வத்தைப் பெருக்கவும், தொழில் அபிவிருத்தி உண்டாக்கவும் முனையும். ஒரு மாகாணத்தார் மற்றோர் மாகாணத்தின் செல்வத்தை உறிஞ்ச வேண்டிய அவசியமே இராது. தேவைக்கேற்ற உற்பத்தியும் உழைப்புக்கேற்ற ஊதியமும், ஊதியம், பொருள் செய்வகைச் செலவு ஆகியவைக்கேற்ற அளவு, பண்டங்களின் விலையும் அமைந்து இலாப உணர்ச்சி குன்றி, சேவை உணர்ச்சி வலுப்படும். இது சமதர்ம வாழ்வின் அடிப்படை என்பதை மார்க்சை மனனம் செய்யும் தோழர்கள் அறிவர் என நம்புகிறோம். சில வியாபாரச் சீமான்கள் தரும் பணத்தால் காங்கிரஸ் நடத்தப்படுகிறது என்று முன்பு கூறினார் சர்ச்சில். அவர் இன்னம் சற்றுக்கூர்ந்து நோக்கினால், மார்வாரி சீமான்களின் பணமே காங்கிரசுக்கு இன்று தங்கபஸ்பமாக இருக்கிறதென்பதைத் தெரிந்து கொள்வார்.

மாகாண சுயாட்சி என்ற அரசியல் திட்டம் கிடைத்துப் பயனில்லை. ஒரு மாகாணம், மற்றோர் மாகாணத்தை அரிக்கும் முறையைத் தடுக்கும் உரிமை, மாகாணங்கட்கு வேண்டும். பிரிட்டிஷாரும் காங்கிரசும் சேர்ந்து வற்புறுத்தும் சமஷ்டி திட்டம், இந்த உரிமையை மாகாணங்கட்குத் தராது. எனவேதான், தனிநாடு தனி அரசு தேவை என்று ஜனாப் ஜின்னாவும், பெரியாரும், கேட்கின்றனர். மார்வார் படை எடுப்பைத் தடுக்க இதைத்தவிர வேறு வழி கிடையாது. மாகாண உணர்ச்சி கெடுதி தரும் என்று ராமகோபாலர் எச்சரிக்கிறார். எச்சரிக்கிறார் என்று கூறுவதைவிட ஏங்குகிறார், என்றுரைப்பது பொருத்தமாக இருக்கும், ஏனெனில் மாகாண உணர்ச்சி பரவினால், அது மார்வாரி ஆதிக்கத்துக்கே கேடாக முடியும், இதை உணர்ந்தே மாகாண உணர்ச்சி கூடாது என்று சத்வகுண போதனை புரிகிறார், சேட்ஜீ. இதை இன்று கஷ்டமனு பவிக்கும் மக்கள் ஒப்ப மாட்டார்கள், என்பதைக் கூறுகிறோம்.

இங்குள்ள ஒவ்வோர் மாகாணமும், ஐரோப்பிய நாடுகள் பலவற்றைவிடப் பெரியது. அங்கு ஒவ்வோர் நாடும் தனி அரசும், தனி வாழ்வும் பெற்று, அதனதன் இயற்கை வளத்தைச் செவ்வனே பெருக்கிக்கொண்டு சீர்பெறுகின்றன. அதைவிட, வளமான வாழ்வு கிடைக்கும் இங்கு ஏற்படவேண்டுமென்று நாம் வற்புறுத்தும் இனவட்டாரங்கள் கிடைத்து விட்டால், பாகிஸ்தான் பிரச்னையைத் தீர்க்க முஸ்லீம்கள் பெருவாரியாக உள்ள பிரதேசங்களில், முஸ்லிம் பொதுமக்களின் ஓட் எடுக்க வேண்டுமென்றும், அந்தப் பிரச்னையை தீர்க்கா முன்பு, அரசியல் நெருக்கடி தீராதென்றும், டாக்டர் அம்பேத்கார் கூறுகிறார். ஆகவே, இனவட்டாரமெனும் இலட்சியம், பெரிய இடத்தின் கவனத்தை இழுத்து விட்டதைக்கண்டு கிவி கொண்டே, மாகாணப்பற்று கேடு பயக்கும், இந்தியாவுக்கு அது நஷ்டம் என்றெல்லாம், மார்வாரித் தலைவர் பேசுகிறார். இவருடைய ஜால மொழியை இனி நாடு ஏற்காது என்பதை அவர் உணரட்டும். விளைந்த காட்டுக்குருவிகளாக இனி வட்டமிட்டுக் கொண்டு மார்வாரி கூட்டம், வாழ்வதை இனி நாடு ஒப்பாது என்பதையும், யூதனின் துலாக்கோல் போல மார்வாரித் தலைவரும் நீதி நியாயம், தேசாபிமானம், மனிதாபிமானம் என்று பேசிய போதிலும், மார்வாரி மனப்பான்மை என்ற இயல்பை, மக்கள் அறிவர், அதனை அவர்கள் அழுத்தமாகக் கண்டிக்கின்றனர் என்பதையும் அந்தத் தலைவருக்கு அறிவுறுத்துகிறோம்.

16.5.1943