அறிஞர் அண்ணாவின் கவிதைகள்


அவனா இவனா அறிவாளி?

அவனா இவனா அறிவாளி?
ஆரூடத் தின்துணை யின்றி
அனைவரும் அறிந்திட குறிப்புச் சில
அளிப்பேன் அதன்பின் கூறிடுவீர்

அவனும் இவனும் ஒரு வகுப்பு.
ஆமாம், பள்ளிக் குள்ளேதான்
வெளியே ஒருவன் ஆற்காடு,
மற்றவன் பேட்டை பூந்தமல்லி!

ஆர்காட் டான்பேர் அருணகிரி.
பேட்டை யான்பெயர் பெரியண்ணன்.
உன்மகனா பெரியண் ணணன்எனக்
கேட்பார் பெரிய கோயிலாரும்.

சிரித்த முகத்துடன் சின்னத் தம்பி
ஆமாம், பயஎன் மவன்தா னெனக்கூறி,
ஓட்டி டுவான் வண்டி மகிழ்வாகப்
பணம்கூட் டிக்கொடுப் பார்என எண்ணி

அப்பா சௌக்கியமா? என்று
அருண கிரியைக் கேட்டிடுவார்.
அறுபதாண்டு விழா நடத்த
ஆசை கொண்ட ஆசிரியர்.

"ஊரில் இல்லை. ஊட்டி சென்றார்"
"ஆமாம், வெயில் ஆகாது"
"அதற்கு அல்ல, அங்கு மாநாடு
கூடுகிறார் மோடார் மன்ன ரெல்லாம்"

தொழில்கள் பலப்பல நடத்துவதால்
ஏழைகள் பிழைததிட வழிகிடைக்கும்,
அப்பா கோகுல நாதருக்கு
ஆண்டவன் கடாட்சம் உண்டென்பார்.

"செஞ்சிக் கோட்டை ஆண்டதுயார்?"
"யாரதை ஆண்டால் நமக்கென்ன?"
அருணகிரி தரும்பதி லிதுதான்;
அதைப்பொறுத்துக் கொள்வார் ஆசிரியர்.

புத்தகந் தனிலுள்ள அச்சுப்பிழை,
பாபர், புகுந்த ஆண்டினை மாற்றிவிடும்.
அறிந்து கூறுவான் பெரியண்ணன்.
திருத்திக் கொள்வார் ஆசிரியர்.

ஐம்பதுக்கு நாற்பத் தெட்டாடா!
அதிசயமாக இருக்கே டா, எனப்
பேசுவர் மாணவர் பலர்கூடி
தேர்வில் பெரியண்ணன் பெற்ற எண்கண்டு.

நாலு நாளாய்ச் சளிஜுரமாம்,
அவனுக்கல்ல'டைகர்' நாய்க்குத்தான்;
அதனுடன் இருந்தான் அருணகிரி;
தேர்வு எழுத உணர்வு வரவில்லை.

'நந்தி நாரதர் கதைகூறு'
எட்மாஸ்டர் நந்தி அல்லவோ, சார்!
நாரதர் நீங்கள், தப்பா, சார்!
அருணகிரி அருளும் 'ஆஸ்யம்' அது.

வருப்பறை யில்பல மாணவர்கள்
கண்டிடும் ஐயப்பா டுகளைப்
பெரியண்ணன் தான்போக் கிடுவான்;
இதுபள்ளி அறிந்த இரகசியந்தான்.

பத்தாம் படிவத் தேர்வினிலே
வெற்றிப் பாங்காய்ப் பெற்றான் பெரியண்ணன்.
அவனுடன் வரவி்ல்லை அருணகிரி
ஒன்பதி லேயே ஓய்வெடுத்தான்.

அவனா இவனா அறிவாளி?
ஆரூடத் தின்துணை எதற்கு?
அருண கிரிக்கு அறிவிருந்தால்
தேர்வில் தோல்வி காண்பானோ?

பிள்ளை மேலே படிக்கணுமாம்,
பணத்துக் கெங்கே நான்போவேன்?
பிழைத்திட வழிதேடிடச் சொன்னேன்!
கிடைத்திடும் வேலை என்கின்றான்.

சின்னத் தம்பி்யின் மணமகிழ,
சிறப்பாய் தாசில் துரையிடமே;
பெற்றான் இடமும் பெரியண்ணன்.
கணக்குடன் கடிதம் எழுதும் வேலை

ஒழுங்குடன் திறமையாய் வேலை செய்யும்
உத்தமன், சத்தியன் என்றபெயர்
ஒன்பது மணிமுதல் இரவெட்டுவரை
உழைத்து வருவான் பெரியண்ணன்.

பெரியண்ணன் தரும்குறிப் புகளைப்
பெரிதும் புகழ்ந்தார் தாசில்துரை!
எதையும் எளிதில் புரிந்துகொள்ளும்
அறிவு மிககவன் இவன் என்பார்.

யார்இதை எல்லாம் கண்டார்கள்!
எள்ளோ கொள்ளோ சொன்னார்கள்;
மூட்டைகள் கிடங்கில் சேர்ந்திருக்கு
மூவாயிரம், பணம்தந் துவிட்டேன்.

வட்டிக் கணக்கினைத் தான் பார்க்க
வல்லவர் பெரியவர் நல்லப்பர்
கேட்டுப் பணத்தைக் கரப்பதிலே
கிட்டான் இருக்கான் எனக்கென்ன!

அருணகிரி சொல்வான் இதுபோல
அப்பா அரசைப் பெற்றுவிட்டான்
அரிஅரன் திருவடி அவர்இடமாய்
ஆகிவிட்டது 'விதி'வழியே.

மோடார் மன்னன் அருணகிரி
கேட்டால் தருகிறான் கடன்மிகவும்
கோட்டை விட்டுவிடப் போகின்றான்
கொஞ்சமும் புத்தி கிடையாது.

'வட்டி சட்டு', பெற்று வாழ்வட்டம்
வீசி வந்தது வார்த்தை நித்தநித்தம்
தேடிக் கோகுல நாதர் பெற்ற
கோடியும், கரையும் மறையு மென்றார்.

நூறுடன் ஐம்பது சம்பளம் கிடைக்குது,
நோன்பு பலித்த துஎனச் சொல்லித்
திருமணம் செய்திட முனைந் திட்டான்
திருஅருளை நம்பிச் சின்னத் தம்பி.

மாமன் மகள்உண்டு, மரகத வல்லி
சொத்ததிக மில்லை, நம்மைப் போலத்தான்,
ஐந்து பிள்ளை, ஒரேஒரு பொண்ணு
ஆரூ டம்கூ டப்பொருத் தந்தான்.

அப்பா! உன்வார்த்தை தட்ட வில்லை.
ஆயினும் ஒரு சொல்கேட் டிடுவீர்!
தப்பாது பாரம் விழும் தலைமீது
மாமன் மகனை நான்மண முடித்தால்.

கொண்டு குறையைப் பின்கூ றுவது
நன்றல்ல, அதை அறிவீரே!
அங்குக் கன்றுகள் காளைக ளாகட்டும்,
கடிமணம் பிறகு செய்திடலாம்.

பெரியண்ணன் பேசிய பேச்சினிலே
பொருள் நிறைந்திருப்பதை உணர்ந்துமே,
சரிஎன்று கூறினார் சின்னத் தம்பியுந்தான்,
சிரிப்பை முகத்தில் அழைத்தமைத்து.

குடும்பம் நடத்தும் வழியின்றிக்
குதித்துத் திருமணம் செய்பவர்கள்,
பொலபொலவெனப் பிள்ளைதனை உதிர்த்துப்
புலம்புவதுண்டு, கண்டுள்ளோம்.

பெரியண்ணன் பேரறிவாள னன்றோ!
திருமணப் பொறியினில் சிக்கவில்லை;
திருதிருவெனும்விழி கொள்ளவில்லை:
எனநண்பர் நவின்றனர் பாராட்டி

அருண கிரியின் அருந்திரு மணமோ
ஆறு நாட்கள், விழா, ஊர் மெச்ச!
பொருமை மி்க்க வர்பெண் கொடுத்தார்!
பெண்ணும் பொன்தான் அழகினிலே.

ஆனால் அடிக்கடி வலிப்புண் டாகும்
அறிந்தே பலரும் மறுத்தனராம்.
வாழ்வில் சுகமே தரமுடி யாத
இந்த வாட்டத்தை ஏனோ கொள்ள வேண்டும்!

தீரப் பலரைக் கேட்ட றிந்து
திருமணம் முடித்திட வேண்டு மப்பா!
அறிவு அற்றவன் அருணகிரி,
அழைத்துக் கொண்டான் அவதியினை!

பெரியண்ணன் மயங்கிடப் பேசுகிறான்.
'சரி, சரி' என இவன் தலை ஆட்டுகிறான்.
பெண்டு பிள்ளைபற்றி உசாவுகிறான்.
பெரியண்ணன் நிலையினை உணருகிறான்.

சூதுவாது அறியா மல்இவன்
தருகிறான் குறிப்புகளைப் பலவும்.
குலக்கொடி எனும்மங்கை நல்லாளை
மணமுடித்திட இவன்துணை தேவைஎன.

தாசில் துரை அவர் தயவினால்
தலைதுள்ளித் திரிகிறான் பயலிவனும்.
நிலைதடு மாறிஇவன் வீழ்ந்திடவே
நேர்ந்திடும் கார்விரைவினி லென்றார்.

மோடார் வருகுது ஊர்சுற்ற,
நோட்டாய்க் குவியுது இலஞ்சமுந்தான்.
பாட்டாய்ப் படிக்கிறார் உடன்உள்ளார்.
பழிபாவம் கண்டு பயம்கொள்ளார்.

கட்டட ஒப்பந்தக் குறிப்புகளைக்
காக்காய் பிடித்தவன் பெற்றுவிட்டான்.
காரியம் மிஞ்சிவிடு முன்னே.
உசாவிட எவினார் பெரியதுரை.

சிக்கிக் கொண்டது கைக்கடிதம்
பெரியண்ணன் எழுதியதே அதுவும்.
இதற்குப் பெற்றது எவ்வளவுஎன
இடித்துக் கேட்கிறார் அதிகாரி.

ஆயிரம் சத்தியம் கூறுகிறான்,
ஆண்டவனைச் சான்ற ழைக்கிறான்.
புத்தி கெட்டவன் இவன்என்று
பூட்டினார் வழக்கு, மேலதிகாரி.

சீட்டுக் கிழிந்தது வேலைக்கு
சிரிப்பாய்ச் சிரிக்குது அலுவலகம்,
சிறைக்கும் இழுத்துச் சென்றார்கள்.
சின்னத் தம்பியும் கீழே புரண்டழ.

அருணகிரிக்கு வந்ததோர் அழைப்பு
அமெரிக்க தேசந் தன்னிலிருந்து
இந்திய மண்ணதில் மோடார்கள்
இனிமையாய் ஓடிடும் வழிகூற.

விமானம் ஏறிப் பறக்கின் றான்அவன்.
இவன்விழியில் கண்ணீர் வடிக்கின்றான்.
அவனா இவனா அறிவாளி!
ஆய்ந்து கூறுவீர், இனி நன்றாய்.

நாலாறு மாதங்கள் சிறைஇருந்து,
நாரும் நரம்புமாய் வெளிவந்தான்;
நடைப்பிண மாகிப் பெரியண்ணன்,
நகைத்தனர் பலரும் அதுகண்டு.

மூன்று பங்குமணல் கலந்திடும்
முன்னைய நண்பனைப் போய்க்கண்டு
முப்பதோ நாற்பதோ சம்பளம் போட்டுக்
கொடுத்திடும் என்கிறான் ஒருவேலை.

வேலைக்கு நானுன்னைச் சேர்த்துக் கொண்டால்
வீண்விப ரீதம் பேசுவர் பலப்பலரும்.
கைப்பொருள் கொஞ்சம் வந்திடுவேன்,
கடைஒன்று வைத்துப் பிழைத்துக் கொள்

முந்தி ஓடிக் கடைவீதி சென்று,
முழங்கால் மட்டும தொங்கும் விதம்
முதல்தர மான தோர்மலர் மாலை
வாங்கி வந்து கொடுவிரை வாக.

பெரியண்ணன் மாலைவாங்கி வந்து தந்தான்.
மானாய்ப் பறக்குது ஐயா மோடாருநதான்.
விமானக் கூடம் செய்கிறார் அப்பு.
அருண கிரியை வரவேற் கத்தான்.

உருளையில் புதுமுறை கண்டறிந்து,
மோடார் தொழிலில் அதனையுமே புகுத்தி
மிகுதியும் பொருளதையும் குவித்தான்,
மினசார வேகத்தில், வளர்ந்தான் அருணகிரி.

பள்ளியில் முதலாய் உள்ளவர்க்குப்
பரிசுகள் தந்திடப் பணமும் தந்தான்.
பாடல் ஆடல் கூடங்கட்கு
ஆடகப்பொன், பதக்கம் அளித்திட்டான்.

அருணகிரி பேரால் அமைந்தது
ஆசிரியர்தம் பயிற்சிப் பள்ளி,
தொழிலதி பர்களில் இவர்போல,
தொல்பொருள் ஆய்பவர் இல்லைஎன்றார்.

துரைத்தனமே தேடி அழைத்தி்ட்டது,
துளைத்திடும் வறுமையை துரத்திடவே
தொழில்மய மாக நாட்டை ஆக்கிட
வழிவகை கூறிடும் பேரிடமே.

பற்பல ஆண்டுகள் சென்றிடவே,
பயமும், கூச்சமும் நீங்கிடவே,
பற்பொடி விற்றிடச் சுற்றுகிறான்
படித்தவன், பழய பெரியண்ணன்.

ஆங்கோர் பெரிய பொதுக்கூட்டம்
அழகழகான மோடார், அலங்காரம்,
அருணகிரிக்கு ஆங்குப் பாராட்டு,
அவரவர் மனம்போல் வாழ்த்துரைகள்.

பள்ளியில் அவரும் படிக்கும்போதே
பாங்கு தெரிந்து, பளிச்சிட்டே
பயனற்ற கேள்விகள் கேட்டிடுவோம்
பரிகாசம் செய்வார், பதில்கூறார்!

பழைய ஆசிரியர் இதுபோலப் பேசிப்
பற்கள் இழந்ததை அறவே மறந்து,
சிரிப்பென் றெண்ணி எழுப்புகிறார் சத்தம்,
சிரம்தாழ்த் துகிறான் அருணகிரி.

அவனியெல்லாம் சுற்றிவந்தார்.
ஆண்டவர் குலத்தில் பெண்எடுத்தார்,
ஆங்கில மாநினை மணமுடித்தார்,
அம்மையும் அவரும் வாழ்க நீடுழி.

அகவலாக்கினார் வாழ்த்துக்களை!
அம்பலவாணர், பெரும்புலவர்!
அடுத்த மாதம் நூல் வெளியிட
காத்திருக்கின்றார், பணமின்றி.

காதினில் இவைஎல்லாம் வீழ்ந்திடவே
கடுத்துயர் எழுந்தது, அடக்கிக் கொண்டு
தொலைவினில் நிற்கிறான் பெரியண்ணன்:
தொல்லை கொடுக்கிறான் அங்கொருவன்.

அமெரிக்கா தேசம் ரொம்பப் பெரிசா சார்
எந்தத் திசையிலது இருக்குது சார்!
ஏன்சார்! இப்படி உடல்இளைச் சிருக்கு!
என்ன சார் தொழில், வாழ்க்கைக்கு?

விடைகள் யாவும் அவன் அறிவான்.
கொலம்பஸ் கதையும் படித்துள்ளான்.
ஆயினும் அறிந்ததைச் சொல்லாது,
அவ்விடம் விட்டு அகன்றானே.

அவனா இவனா அறிவாளி?
அனைத்தையு்ம் கேட்டீர், அதனாலே
ஆரூடத்தின் துணை எதற்கு?
அளவுகோல் உண்டா? கூறிடுவீர்

(காஞ்சி- 30.08.1964)