அறிஞர் அண்ணாவின் கவிதைகள்

கற்பனையூர்; ஆனால் கருத்தூர் காட்சி

மாலைகள் போட்டு வரவேற்றோம்
மந்திரி ஐயா வந்தபோது!

மாரிக்குக் கூடச் செய்யாத
மரியாதைகள் செய்திட்டோம்.

மேளதாளம் பலமாக
ஏராளமான பணச் செலவு

கரகம் காவடி ஆட்டத்துடன்
கவர்ச்சி மிக்க மயிலாட்டம்!

மந்திரி மனது மகிழ்ந்துவிட்டால்
முந்திரிக் கொடியின் பழம்போல

வந்திடும் சுவைதரும் நன்மை என்று
சொன்னான் கதருடைக் கந்தப்பன்.

கஷ்டம் தீரும் என்று எண்ணி
கடனும் பட்டுப் பணம் திரட்டிக்
"கனம்' மந்திரிக்கு விருந்து வைத்தோம்.
வேண்டுவ தென்ன கூறிடுவீர்
வேற்றான் என எண்ணற்க
ஊருக்குழைக்க நான் வந்தேன்
உள்ள குறைகளைக் கூறுமென்றார்!
பாலும் பழமும்
வேண்டாமய்யா,
பட்டுப் பட்டாடை
அது வேண்டாம்,
பழைகால ஏரி இது
ஆழம் இல்லை, தூர்ந்ததனால்;
ஏரி ஆழமாகிவிட்டால்
ஏழைகள் மனது குளிருமய்யா!
எட்டுக் கல்லில் ஊரிருக்கு
எதற்கும் அங்கு போய்வருவோம்
பாதை சரியாய் அமையவில்லை,
பள்ளம் மேடு பயங்கரம்;
பாதை போட்டுக் கொடுத்துவிட்டால்
பாதம் போற்றிக் கிடப்போமய்யா!

பள்ளி ஒன்று இருக்குது
மரத்தடியில் நடக்குது
கட்டிடம் இல்லாக் காரணத்தால்
பிள்ளைகளுக்குப் பெருந்தொல்லை!
ஓலைக்கொத்தோ, ஓடோ, எதுவோ,
கட்டிடமென்று இருந்துவிட்டால்
பிள்ளைகள் படிக்கும்; புண்ணியமுண்டு!

விளைச்சல் இங்கு அதிகம் இல்லை.
மண்ணின் சத்து மிகக் குறைவு.
உரம் போட்டால் உயர்வு வரும்
உரமோ கேட்டால் கிடைப்பதில்லை.
ஒன்றுக்குப் பத்து விலை கொடுத்தால்
கிடைக்குது கள்ளச் சந்தையிலே.
அவ்வளவு பணம் அதற்கழுதால்
கட்டி வருமா, எங்களுக்கு.
கருணைவைத்துக் கஷ்டம் போக்கி
ஏரும் எருதும் உரமதுவும்
மலிவு விலைக்குக் கொடுத்திட்டால்
மன்னா! உம்மை வாழ்த்திடுவோம்!

நோய்நொடி வந்தால் மருந்துதர
வைத்தியசாலை இங்கு இல்லை.
வடக்கே எட்டுக்கல் போனால்
வைத்தியர் உண்டு; மருந்தில்லை!
இந்தக் குறையும் தீர்த்துவைத்தால்
ஏழை பிழைப்போம் சாகாமல்.

ஊரின் கோடி புறம்போக்கு
உருதால் நல்ல பலன் கிடைக்கும்
உழுபவனுக்குக் கொடுத்திட்டால்
ஊருக்கு உணவு கிடைத்துவிடும்
ஏழைக்குப் பிழைப்பும் இருந்துவிடும்.

விதைக்கு நல்ல நெல் இருக்கு
வேணுமட்டும் பெறலா மென்றார்.
நாலைந்து நடை நாங்கள் சென்றோம்
நாளை, நாளை என்று சொல்லிவந்தார்.
கூடை தூக்கி நடந்திருந்தோம்.
பிறகு ஒருநாள் கொடுத்தார்கள்.
செம்பாளை நெல்லு பத்துப்படி.
கேட்டது சம்பா நெல்லய்யா
கிடைத்தது செம்பாளை, என்ன செய்வோம்.

கடன்பட்டுக் கெட்டுப் போகாதீர்
காங்கிரஸ் சர்க்கார் உதவி செய்யும்
வட்டி அதிகம் வாங்காது, வா, வா என்றார்.
சென்று கேட்டோம்;
நடந்தது நாற்பது நாளிருக்கும்,
ஆயிரம் கேள்விகள் கேட்டுவிட்டு,
அப்பன் கையெழுத் தெங்கே என்றார்
அவர் செத்து வருஷம் அஞ்சாச்சி.
அவருடை மகன்தான் நீ என்றால்
ஆதாரம் கொண்டுவா, என்றால்
ஆத்திரம் வராதா, எஜமானே!
அவமானம் ஆகாது, தடுத்திடுங்கள்.

நல்லவர் நம்மவர் மந்திரியார்
உள்ள குறையெலாம் கூறிடுக
கோபம் வராது! குணமுள்ளவர்!
எனக் கூறினான் கந்தப்பன்; அதனாலே
கொட்டினர் குறைகளை மந்திரிமுன்.
மந்திரி, இவைகளைக் கூறச்சொல்லி
அந்த மக்களுக்கு வேலை கொடுத்துவிட்டு,
கந்தனை அருகே தான் அழைத்து
மிகக்கவனமாய்க் கேட்டது
என்னவென்றால்,
எத்தனை ஓட்டுகள் இங்கிருக்கு?
எல்லப்பன் சொன்னால் போடுவரா?
என்ன ஜாதி இங்கு அதிகம்?
எவர் பேச்சுக்கு மதிப்புண்டு?
சொன்னால் சொன்னபடி நடப்பவரா?
இல்லை, மிரட்டினால் மட்டுமே படிவரா?
எப்படி இவர் குணம் சொல்லப்பா?
எல்லாம் எனக்குத் தெரியவேண்டும்!

இப்படி மந்திரி கேட்டிட்டார்
இதமாய்க் கண்ணன் பதிலளித்தான்.

உற்ற குறைகளைக் கூறிவிட்டீர்,
ஊராள்வதிலே உள்ள
குறை, மெத்த உண்டு
அதை அறிந்திடுவீர்!
எல்லாம் செய்து முடித்திடலாம்
எம்மால் ஆகும், பயப்படாதீர்
காலம் அதற்கு வரவேண்டும்
கஷ்டம் பொறுத்திடப் பொறுமை வேண்டும்
வயிற்றை இறுக்கிக் கட்டுங்கள்
வாய்தா பணத்தைச் செலுத்துங்கள்.

குறைசொல்லிக் குமுறிக் கிடக்கவேண்டாம்
குழந்தைகள் அதிகம் பெறவேண்டாம்.
ஓட்டுகள் அத்தனையும் சேர்த்து
போட்டிடுவீர் காளை மாட்டுக்கு!
காளை மாட்டுக்கு ஓட்டளித்தால்
பாலும் தேனும் ஓடிவரும்!
வந்தேமாதரம்! போய்வருவேன்!
வந்துபோனதை மறவாதீர்!

கந்தன் கைதட்டிக் காட்டிடவே
மக்களும் அதுபோல் செய்திட்டார்.
காரில் ஏறி அவர் சென்றார்
கந்தன் அவர்பின் னோடுசென்றான்;
கட்டிய தோரணம் ஆடிற்று
கூடிய மக்கள் வீடு சென்றார்!

ஏரெடுத்துச் சென்ற சின்னானை
எப்படி மந்திரி பேச்சு என்று,
பொன்னன் கேட்டான், சிரிக்காமல்!
மந்திரிப் பேச்சுப் புரியவில்லை.

மக்களுக்கு அவர் வாக்கு அளிக்கவில்லை.
குறைகளைச் சொன்னோம்
கேட்டுக்கொண்டார்
போக்கும் நாளைக் கூறவில்லை - என்றான்.
போடா! நீ, போக்கிரி
பொய் பேசுகின்றாய்,
போகுமுன்னம் மந்திரியார்
சொன்னார், கேட்டாய்!
பாலும் தேனும் ஓடிவரு
மென்றாரே, மறந்தா போனாய்?
என்று கேட்டான் பொன்னன்.
கேட்டேன்; மறக்கவில்லை
சிரிப்பு வந்தது, அடக்கிக்கொண்டேன்;
பால் பெருகும் என்றார், உண்மை!
அதற்கு காளையையா காட்டுவது
செ! சே! என்றான் சின்னான்.

இருவரும் சிரித்தபடி சென்றனர்!
எதிர்ப்புறம் வந்தான் கழகத் தோழன்.

(திராவிடநாடு - 26.11.1961)