அறிஞர் அண்ணாவின் கவிதைகள்

நச்சரவு வளர்க்கின்றார்!

காணீர் கண்குளிர காந்திமகான் சீடர் இவர்!
தியாகத் தீயினிலே குளித்தெழுந்து வந்திட்டார்!
தொண்டு செய்வதன்றிக் கொண்டவிரதம் வேறில்லை
பண்டிருந்த பாரதத்தைக் கண்டிடவே உழைக்கின்றார்!
காட்சிக்கு எளியரிவர் கடுஞ்சொல்தனை அறியார்!
ஏழை எளியோர்க்கு ஏற்றமது அளித்திடுவார்!
உழைப்பதற்கே உருவெடுத்தார் ஊதியம் பெறுதற்கல்ல!
தொடமாட்டார் பொன்பொருளைக் கொளமாட்டார் மனமாசு!
பாடுபடும் ஏழைதுயர் பார்த்துப் பதறுகிறார்!
மாடுமனை மக்கள் பெற்று மகிழவழி கண்டிடுவார்!
பாலையெலாம் சோலையாகிப் பைங்கிளிகள் பாடிடவே
செந்நெல் மணிக்குவியல் சேர்த்திடுவார் நாட்டினுக்கு!
உழைப்பை உறிஞ்சிவரும் உலுத்தரை ஒழித்திடுவார்!
மாளிகையின் சீற்றம்கண்டு மன்னர் அஞ்சிடமாட்டார்!
எப்பாடுபட்டேனும் இங்கு இல்லாமை போக்கிடுவேன்!
இதற்கன்றோ இன்னல்பல ஏற்றோம் பல ஆண்டு!
நாட்டினை வாழவைக்க நல் உறுதி கொண்டுவிட்டோம்!
வீட்டை மறந்துவிட்டோம்; பாட்டை வகுத்துவிட்டோம்!
நாட்டினுக்கு நற்செய்தி நவின்றதுடன் நில்லாமல்
நாளும் உழைக்கின்றார் நாம்வாழ, ஆளவந்தார்!

(காஞ்சி - 23.08.1964)


(பாசுரம் இதுபோலப்பாடி பல்லாண்டு கூறி வரவேற்றனர் மக்கள் காங்கிரஸ் அமைச்சர்களை, விடுதலை விழா முடித்து அவர்கள் நாடாளத் தோடங்கியதும், ஏமாற்றமடைந்தவர்கள் கொதிப்புணர்வை விளக்கிட முன்னாள் நிலையை முதலில் தெரிவிக்கிறார் கவிதையாக)