அறிஞர் அண்ணாவின் கவிதைகள்


புத்தியில்லா உலகமிது!

மணஅறையில் தலைகவிழ்ந்து
அமர்ந்திருந்த மைவிழியாள்
மாந்தளிர் மேனி அழகுடையாள்!
மணவாளன் தந்த பலஅணி கள்பூண்டு
மயில்கழுத் துநிறச் சேலைஒயி லளிக்க
'மகராசி' போலிருந்தாள் மன்றம் காண!
இவள் 'ராசிக்காரி' அறிவேன் முன்பே!
'ஆசீர்வதி யுங்கள்' அனைவரும் என்றே
மார்புடைய பாடுபட்டு அவளைக் காத்த
மாமனவன் மகிழ்ச்சி பொங்கக் கூறினானே!

•••

வளர்த்துவந்தேன் வண்ணக்கிளியைப் போலே,
எண்ணத்தில் பால்வார்த் தாள், என் அரசி,
இன்றுமுதல் என்பொறுப்பு இல்லை, இல்லை.
ஏற்றவனைப் பெற்றுவிட்டாள் வாழ்நாள் நன்றாய்.
இது அந்த மதியவரின் பேச்சு; மூச்சு,
சின்னாளில் பிரிந்ததய்யோ, வேலை முடிந்ததென்று.

•••

'அப்பா'வாய் இருந்தமாமன் மறைந்த தாலே
அவளுக்கு இனி 'அவரே' அவனி; முற்றும்
அன்பாகத் தான் இருப்பார், அணிகள் தந்தார்;
இருநூறு அறுநூறுவிலை இருக்கும்,
வேலையிலே ஊதியமும் மிகுதி உண்டு,
வேறெந்தத் தொல்லையுமே அவருக் கில்லை.
வேலவன் துணைபுரிவான் என்று வேணி
வேதனையைத் துடைத்துவிட்டாள் வேலன் கா.

இரண்டொருநாள் ஆயிற்று வேலன் வீட்டில்,
வேறெவரோ சிலர்வந்தார், பேசிச் சென்றார்.
வேலை விஷயமது என்றெண்ணி, வேணி
இருக்கின்றாள், தூண்மறைவில் நாணிக் கோணி.

•••

வேலன் மெள்ள வெளியிட்டான் உண்மையினை,
உன்'மாமப்பா' கேட்ட பொருள்யாவும் தந்தேன்!
எல்லாம்என் உடைமை அல்ல; இரவல்;
எடுத்துக் கொடுத்திடு கண்ணே!
அவர் ஏசுமுன்னே!"

•••

ஏனிந்தச் சூதுஇவர்செய்தல் வேண்டும்?
என்னாலே ஆகாதுஎன்று குலைக்கின் றாரே!
இவர்போக்கு எங்கெங்குக் கொண்டு செல்லும்!
எண்ணினாள் இது போ லெல்லாம் வேணி!
எதிர்த்துப் பேசிடும் பெண்அவள் அல்லஅல்ல!
அவர் காணாப் போதுஇரண்டோர் கண்ணீர் சிந்தும்,
அவர்கேட்ட படியே அணிகள் தந்துவிட்டாள்.

•••

நகைபோன தாலே நகைஇழந் தாளில்லை,
நயந்து பேசிஅவன் மகிழ்வித் தானே!
பொய்யான வார்த்தைகளைப் பேச லாமோ
பொல்லா தவர்இந்த ஆண்கள் கூட்டம்!
இல்லாத தெல்லாம்சொல் லிப்பெண்ணைக் கொள்வார்!

இதயத்தை எப்படியோ தமதாக்கிக் கொள்வார்!
வேணி இதுபோலப் பேசவில்லை
வேலன் அறிந்துகொண்டான் வழியே கண்டு!
ஓரா றாண்டு முடிவதற்குள் வேலன்
ஒன்பதிடம் மாறி விட்டான், அய்யோ!
ஒருவேலை போய்மற் றோர்வேலை வந்தால்,
ஒன்பதும் பத்துமாய்க் குறையும் கூலி;
இதுகாணத் தானோ மிகஆர்வம் கொண்டு
பிறந்திட்டான் ஒரு பிள்ளை வேணிக் கென்று
கேட்பானோ வேலன் இதை? கேளான்!
வாரி அணைக்கின்றான் தங்கத்தை, தன்சொத்தை!!

•••

போட்டநகை திருப்பிப் பெற்று விட்டார்
போடடா கண்ணே! முதுகில் மூன்று.
அம்மாவை ஏய்த்திட வேண்டா மென்று
அப்பா விடம்சொல்லு, வழிப்படுத்து!
வாழ்விக்க வந்த எங்கள் கோவே!
வளர்ந்திடுவாய் குலக்கொடியே! என்றாள் மாது.
மூவாண்டு உருண்டதுகாண், வேலன் முகம்இருள,
நாடாண்ட பயலோடா! நடையைக்கட்டு என்றுரைத்து

நாலாறு இடத்தினிலே அவனை விரட்டிவிட்டார்.
தெருக்கூலி ஆகி விட்டான் வேலன்.
வீட்டில் தொட்டி லிலேஒன் றுளது;
தொட்டி ழுக்கும் மற்றொன்று
மூன்றாவது ஒன்று அவள்வலிவை
முறித்த பிறகே வெளிவந்தான்!
தங்கமே! தாலேலோ! என்ற பேச்சில்லை
என்செய்வோம் என்ற பெருமூச்சு!
ஏழைக் குடும்பம் ஏகமாய்ப் பெருத்துவிட்டால்
அச்சுமுறியுமன்றோ, அவதியன்றோ!
அந்தநிலை வந்ததய்யா வேலன் குடும்பம்தன்னில்

•••

வேற்றூர்கள் பலசென்று வேலைதேடி
வேலன் திரும்பிடு வான்வே லையற்று.
கோலம் இழந்த மயில்குமு றிடுவாள்.
குழந்தை களோ கோ வென்ற ஒலிஎழுப்பும்.
குழலப்பா! யாழப்பா! என்று யாரும்.
குழந்தைகளி்ன் ஒலிபற்றிச் சொன்னா ரில்லை,
அவன்செவிக்கு அவ்வொலியே நாராச மாக,
அவன் 'தந்தை' நிலைமறந் தான், தத் தளித்தான்.

•••

வேலையில்லா ஏழை என்ன செய்வான்?
வேதனை போக்கவழி இல்லை கண்டாள்.
வீடுபல கூட்டி மெழுகி யேனும்
பிழைக்கும்வழி தேடிடுவேன் விம்ம வேண்டாம்.
கல்லுக்குள் தேரைக்கும் உணவு உண்டாம், கதை கேட்டேன்.
கலங்காதீர்! என்றவளும் கூறு கின்றாள்.

•••

ஆடவன் நான்எங்கும் அடிமை யாகி
அடிபட்டும்,
உதைபட்டும இருத்தல் ஆகும்.
அய்யோ! உன்னை, நான்இருக்கும் நிலையினாலே
நாலுபேர் பற்பலவும் பேசுவாரே!
வீடுவீ டாகவேலை செய்யச் சென்றால்,
விம்மினான் வேலன், வேதனை யுற்று
வேணுமட்டும் ஆறுதல்கள் வேணி தந்துவந்தாள்.

•••

வேலை செய்யப் பலவீடு போவாள் வேணி!
வேலைதேடி அலைந்துவேலன் வருவான் வீடு!
விபரீத மானபல எண்ணங்க ளோடு!

•••

சோறுகறியுடனே சுவைக்க அளிப் பாள்வேணி!
சொல்லட்டுமா ஒருசேதி என்றுபேச நிற்பாள்
போ!போ! என் எதிரில் நீநில் லாதே!
கல்லும் கரையும் உனைக்காணும் போதே!
கட்டினவன் நான்இன்று கைஏந்து கின்றேன்.
கண்ணாலே உனைக்காணக் கூசுகின்றேன் என்றான்.

•••

வேலைசெய்யும் இல்லத்தில் உள்ளோர் பல்லோர்
வேணியை ஏசுவரோ, வெகுண்டு மேதான்
கெஞ்சிக் கூத்தாடி யன்றோ வேணி
மிஞ்சும் சோறுகறி பெற்றாள் அங்கு,
இந்நிலையில் இவளை இருக்க விட்டு
எனக்கு அவன் கணவன் எனப்பெயரும் ஏனோ!
அவன் 'பிழைக்க' அவள்உழைப்பு திருகின்றாளே.
அவளன்றோ குழந்தைகட்குத் தந்தை யானாள்.
எனக்குஇங்கே இனிஎன்ன வேலை?
இருப்பதுவும் இறப்பதுவும் வெவ்வேறல்ல!

•••

வேலன் மனக்குகையில் வேகமாக
வேறு நச்சரவம் புகுந்து
இடம் பிடித்துக் கொண்டு
இம்சிக்கத் தொடங்கிற்றே மேலும்மேலும்!

•••

கூட்டி மெழுகுகிறாள் அழுக்கெடுக்கத் துவைக்கின்றாள்
மூன்று பிள்ளைகளும் நாளும் உண்டிட
சோறும் கறியதுவும் பெற்று வருகின்றாள்,
வேலைக் காகத்தான் பெறுகின் றாளா?
வேறேதும் விபரீதம் உண்டோ, அய்யோ!
வேலன் இவ்வெண்ணம் கொண்ட பின்னர்
வெறுத்திடவே தலைப்பட்டான் வேணி தன்னை.

•••

மாசற்றவள் வேணி என்பான் ஒர்நாள்,
மனம்குழம்பி வேறோர் நாள் 'கள்ளி' என்பான்,
ஏன்இத்தனை நேரம்? என்ன? என்பான்.
எதுசொன்னால் எனக்கென்ன தெரியும் வேணி!
இழிவாக நடந்தாய்நீ என்றறிந்தால் பின்னர்,
என்பிணமே திருக்குளத்தில் மிதக்கும் என்பான்.

•••

எவனுடனே குலுக்கிப் பேசி நின்றாய்!
ஏடி! நானென்ன குருடா, சொல்லு.
கூட்டுக் கோல்தூக்கி நீ!ஆனால் பாரேன்.
நாட்டுக்கு ராணிபோல் நடைநடக் கின்றாய்!
பார்த்தேன் நீபசப்பி நின்ற கோலம்
பட்டாணிக் கடைஅருகே, வெள்ளிமாலை,
பக்கத்தில் நின்றவன்யார்? மாமன் தானோ!
பதறிப் பொய்யைமெய் ஆக்கிடப் போமோ!
வெடவெடத் துபோய் நின்றாள் வேணி,
வேலவன் இதுபோ லெல்லாம் கேட்டபோது.

•••

வேலைக்கு நான்சென்று விபரீதம் காண்பானேன்.
வீடுதனி லிருப்பேன், சோற்றுக்கு வழிகாட்டு,
வேணி இதுபோலச் சொன்னாள்.
வேலன், வேறாகப் பொருள் கொண்டான்.
வேகம் கொண்டான்.
சோற்றுக்கு வழிகாட்ட மாட்டா தவனே?
உனக்கு,
சொரணையும் ஒருகேடா! சொல்லு, சொல்லு,
சொகுசுகாட்டி, நீவாழ, பிள்ளை குட்டிவாழ
நான்பாடு பட்டுவருகின்றேன். நாய்போல் நித்தம்
ஏசிப் பேசுகிறாய், என்னாலே பிழைப்பவனே
என்றெல்லாம் பேசாமற் பேசுவதே
வேணியின் புதுப்போக்கின் பொருள்
என்றெண் ணுகிறான்.
கண்ணீர் பொழிகின்றான், கரைகிறது அவள்மனமும்,
எண்ணாதே தவறாக! என்மரபு அறிவாயே!
திண்ணமாய் வேலை விரைவில் கிடைத்துவிடும்
வேறுவேறு வீடுகளில் வேலைபல செய்துவரும்
வேணி மறைந்திடுவாள்! உன் 'தாதி' ஆகிடுவாள்!
புன்னகையொன்று வந்தது, போனது;
புள்ளினம் பாலையில் வருவது போலே!
இதழ் சிரித்தது, இதயம் அல்ல!
இம்மியும் வேலன் கொண்ட
வெப்பம் குறைந்திடவில்லை.

•••

மீண்டும் மனக்குழப்பம், நச்சரவு.
மீண்டும் வெகுண்டுரைத்தல், விபரீதம்,
கண்டபடி ஏசுகிறான், வேணி
வேலை செய்யும் இடமெல்லாம் சென்றுசென்று
கண்சிமிட்டிப் பயலெங்கே! காலை உடைத்திடுவேன்!
வேலைசெய்ய வந்தவளை, வேறுபார்வை பார்த்த
வெறிப்பயல் இங்குதானே? வேங்கை வந்திருக்கின்றேன்,
என்றெல்லாம் வேலன் ஏதேதோ பேசுகிறான்.
வேணிக்குப் பேரிடியாய் ஆனது அவன் போக்கு
வேலைக்கு வேண்டாம், வேலனுடன் வீட்டில் இரு.
பழிபோட்டுத் தலைவாங்கும் பாவிப் பயலிருக்க
பல்லை நீகாட்டி இங்குப்பசப்பாதே, போ! போ! போ!
என்றுரைத்து விரட்டிவிட்டார் வேலை தந்தோரெல்லாரும்.
எவரும் இவளுக்கு வேலைதர ஒப்பவில்லை.
வேலன் வெறிபிடித்தோன், வெட்டுவான் தலையை என்று,
வேகமாய்ப் பரப்பினர்காண், விஷவாடை நெடுகலுமே!

•••

அரைவயிற்றுக் கஞ்சிக்கும் விழியில்லை.
பிள்ளைகளோ, பெரும்தொல்லை!
குற்றம் செய்துவிட்டேன், குணவதியே
பொறுத்திடு நீ, என் உள்ளம் உரைத்திடுது.
உதடசைய மறுத்திடுது! புருட னன்றோ!
நானிருக்கும் இடந்தன்னில்
நலிவுதான் முந்திவரும்.
நானெதற்கு, நெடுமரம் போல்!
எப்படியும் பிழைத்திடுவாள்.
எங்கேனும் நெடுந்தெலைவு
சென்றுவிடவேண்டும்நான்.
இங்கே நானிருந்தால் இம்சைதான் வேணிக்கு.
இவ்வாறு எண்ணினான் ஏக்கமுற்ற வேலன்.
காரணம், கோபம்அல்ல! கசப்பெழுந்த தாலும்அல்ல!
காரணம் வேறொன்றுண்டு! கருத்துக் குழம்பிடுது!
பித்தனாகி விடுவோம் என்றபயம்
கொண்டான் வேலன் தானும்.
பித்தனே ஆகிவிட்டான் என்றார் பார்த்தோர்.

•••

எங்கோ சென்றுவட்டான் வேலன்.
எவரும் காணவில்லை.
அவள்தேடா இடமும் இல்லை.
அலைகின்றாள் ஊரூராக!
இன்னவிதம் இருப்பார்! வேணி!
வேணி! என்றழைப்பார்!
இந்தப் பிள்ளைகளின் 'அப்பா' அவர் அம்மா!
கண்டீரா ஐயாவே! கண்டீரோ, பெண்டீர்காள்!!
வேணி, இதுபோலக் கேட்டாள், விடைவருமா!
சேற்றிலே அமிழ்ந்து போன
செங்கல்லாய் ஆனான் வேலன்!

•••

வேலன் கிடைக்கவில்லை. வேணிதுயர் மாளவில்லை.
பிள்ளைகள் வளர்த்திடவும் பிரிந்தவனைத் தேடிடவும்
கெஞ்சிப் பெறுகின்றாள், பழஞ்சோறு எச்சிலிலை!
அங்கம் கழுவிடவே வேறென்ன வழிஉண்டு!!
பெற்றாளே பிள்ளைகளை, காட்டு கின்றாள்;
பிழைத்திடவோ மார்க்க மில்லை, பேசுகிறாள்
பட்டினி யாய்நா னிருக்க ஒப்பினாலும்
பாலகரின் முகம்பார்த்துப் பதறு கின்றேன்,
இவர்க்காக ஏதெனும் தாரு மம்மா
என்றேதான் கேட்கின்றாள், இறைஞ்சு கின்றாள்.

•••

செல்லாத இடமில்லை, வேலைத் தேடிக்
கொல்லாதோ கும்பியதைக் கொடதாம் பசியே!
எங்கே அவர்சென் றார்? என் னானார்?
ஏக்கமது பிய்த்தது அவள் நெஞ்சத்தை.
கண்கள் காட்டினவே, கலக்கம், பீதி,
கையோ, தன்னாலே சென்றதுகாண் கழுத்தின்பக்கம்,
'திருத்தாலி' இருக்கிறது அன்றோ அங்கு!

•••

தெருத் தெருவாய் அலைந்தாலும்
அவளைக் காண்போர், முகம்சுளித்துச்
'சகுனத்தடை' என்று செப்பார்கள்,
அம்மட்டில் இலாபம்!
சாக்காட்டை நோக்கிஅவர் சென்றுவிட்டால்?
ஐயையோ! அதுவேறு வருமோ?
அஞ்சுகிறாள், அலறுகிறாள், நிலையை எண்ணி,
மஞ்சள் கயிறதனைக் கரத்தால் பற்றிக்கொண்டால்
மணவாளன் உயிர்போக முடியாதேன்று
எண்ணமது கொண்டிட்டாள் போலும் மாது!

•••

மலர்கள்தரும் கொடியதுவும் காய்ந்து போனால்,
மணம்விரும்பும் மக்கள் அதைநாடு வாரோ?
இவள் ஏழை அனாதை ஆன பின்னர்
எவருக்கு இவள்பால் பார்வை செல்லும்?
உருகுவார் சிலபேர் கண்டு! உசாவுவார்!
மற்றோர், சேதி! கருகுவாள் மாதுமேலும்.

•••

மக்களைக் காட்டுகின்றாள், மாதா வானாள்,
மணவாளன் எங்கெனவே சொல்கின் றாளா?
மடக்கு கிறாள்இது போலக்கேட் டொருவள்.
மதியற்றார் மற்றவர் கள்எனும் நினைப்பால்,
மாய்மாலம் செய்கின்றாள் மாது என்று
மனதினிலோர் எண்ணமுமே கொண்ட தாலே
மருவியவன் எங்கே என்று கேட்பாய் பெண்ணே!
மணவாளன், இதுகட்கு உண்டோ என்றாள்,
மல்லுக்கு நிற்பதிலே வல்ல பெண்ணாள்.

•••

எத்தனையோ இதுபோல் ஏச்சுப்பேச்சு.
எல்லாம் இப்பாலகரைக் காப்பாற் றத்தான்.
எத்தனைதான் கேட்டிடுவாள் மானம் கெட்டு.
ஏனிந்த வாழ்வுஎன வெறுத்து விட்டாள்.
நெஞ்சிலே பெருநெருப்பு மூட்டி விட்டால்
நேரிழையாள் கருகாமல் இருக்கப் போமோ?
செத்திடுவேன் மானம் காக்க என்றே
செப்பு கின்றாள் பொங்கிவரும கண்ணீராலே!

•••

காப்பாற்ற முடிய வில்லை அதனாலென்ன?
கையேந்தும் நிலை அழிப்பேன், கொல்வேன் என்றாள்,
செத்து நடமாடும் பெண்ணால் சீறி!
பெற்றிட அவள்பட்ட பாடதனை
அவள் அறிவாள், அறியும் அவனி!
பெற்றவளே இப்போது உறுதி கொண்டாள்
மற்றவர்க்குப் பார மாக மக்கள்தம்மை
விட்டு வைத்தல் ஆகாது என்றுதானே
ஊட்டி வளர்த்தவளே உயிர் குடித்தாள்!
ஓர்மடுவில் குழந்தைகளைத் தள்ளி விட்டாள்.
பிணமானார் இருமக்கள், ஒன்று பாக்கி,
தன்னுடனே கொண்டுசெல்லக் குளமே சென்றாள்,
ஈஎறும்பு மொய்த்தி டாமல் காத்தவள்தான்!
எடுத்தணைத்து இன்பமது கொண்டாள் முன்பு.
அணைத்துவிட்டாள் ஆவிதன்னை அன்னை, கையால்,
இந்த அவனிக்கு வேண்டாம்ஓர் தொல்லை என்று

•••

தாயா? பேயா? தங்கத்தை,
அழஅழவா அடித்தாள் என்று,
கேட்காத மாதும் உண்டோ?
அவள்மகவை அவள் அடித்துத் திருத்தும் போது,
இங்கொருதாய், கொன்று விட்டாள் இருவரையும்
இருந்தவர்கள் வயிற்றினிலே பத்துத் திங்கள்!
பெற்றவளே, பிணமாக்கிப் போட்டு விட்டாள்.
பெரும்பாரம் தீர்ந்ததென்றும் எண்ணு கின்றாள்.
மற்றுமோர் மகனையும் முடித்து விட்டு,
மாதவளும் தான்சாக உறுதிகொண்டாள்.
பூவும் பிஞ்சும் போகும் முதலில்
பின்னர் சாயும் கொடியே வேரும் அறுத்து.

•••

இந்நிலையில் எப்படியோ விவரமதை
அறிந்தார், அலறி நின்றார்;
வந்ததுகாண் போலீசும் நீதிக் காக,
வழியெல்லாம் கூடிவிட்டார் விழிபெற் றோர்கள்!

•••

இப்படியும் ஒருத்தியா இருக்கின்றான்?
இவளுக்கென்ன, இதயமே இல்லையா?
பித்தமோதான்?
இவ்வளவு பெரிய உலகந் தன்னில்
இம்மகவுகளைக் காக்க ஆளா இல்லை?
பிடிசோறு போடவா ஆட்கள் இல்லை?
பிணமாக்கி விட்டாளே, பேயுள் ளத்தால்.
பிய்த்தெறிய வேண்டாமோ துண்டு துண்டாய்.
குற்ற மில்லை இக்கொடி யாளைத்தான்
கொதிக்கின்ற கொப்பரையில் தள்ளினாலும்,
என்றெல்லாம் ஆர்ப்பரித்தார்! இதயம்
உள்ளோர் என்றும் விருதுபெற்றோர்!!

•••

கொலைகாரி, கொலைகாரி, ஆமாம், ஆமாம்!
கொலையேதான் செய்துவிட்டேன் மறுக்கவில்லை.
கொடியவள் என்றென்னைக்கூறு கின்றார்.
தாயுள்ளம் படும்பாடு, அறியா தாரே!
மிகப்பெரிய உலகமிது என்கின்றார்கள், ஆமாம் உண்மை!

•••

வாழ்வுக்குப் போராடி வந்தேன் இங்குச்
சாவது தானே! ஏன் இந்தத் தொல்லை
தந்துயிரை வாட்டுகிறாய் என்று கேட்டார்!
ஒருவர் இருவரல்ல, பலரும், நித்தம்,
செத்துவிட்டார் என்மக்கள் என்கையாலே
சாகத்தான் நானும் புறப்பட்டு விட்டேன்.
இந்நிலையில் இவர்கூடிக் கேட்கின் றார்கள்.
இருக்கவா இடமில்லை உலகில் என்று!
உயிரோ டிருந்தால் உருட்டி, மிரட்டுகிறார் சாகச் சொல்லி.

•••

செத்துத் தொலைந்தாலோ வந்து, கண்டு,
வாழவா வழிஇல்லை. எனக்கூறி உருகுகின்றார்!
பொல்லாத உலகமிது என்றுதான்
இதுநாளும் எண்ணி வந்தேன்
புத்திஇலா உலகமிது! இன்றுகண்டேன், என்றாள்.

(திராவிடநாடு, 14.01.1963)