அறிஞர் அண்ணாவின் கவிதைகள்

சீறிடும் சிட்டு

பாரீர் படுத்துறங்கும் பராரியை! எழுப்பிப்
பணக் கோட்டைகளைப் பிடித்துக் குலுக்கு!
அடிமைக் குருதி கொதித்திடும் நம்பிக்கை யூட்டிச்
சிட்டு வல்லூரை எதிர்த்திடும் வகைசெய்!
மக்களாட்சி மலர்ந்த தென மொழிந்து
பழமைப் பாசிப் படத்தைத் துடைத்திடு!
உழவன் வாழ்ந்திட வழிதரா வயலின்,
செந்நெலை மிதித்து மண்ணாகச் செய்திடு!
பட்டிட்டுப் பரமனை மறைத்திடல் ஏனோ?
பக்தர் கண்படாது களித்திடத் தானே!
கோயிற் குருக்கள் கூட்டத்தை விரட்டிடும்.

(திராவிடநாடு-10.10.1942)

(இஸ்லாம் இனத்தன் புத்துணர்ச்சிக்கு வித்தூன்றிய கவி, இக்பாலின் கவிதை ஒன்றின் கருத்துரை)