அறிஞர் அண்ணாவின் கவிதைகள்

தீமைகளை ஒழித்துக் கட்ட

காங்கிரசுக்கட்சி, அதுயாருக்காக?
கனதனவான், முதலாளிக்காக!
காட்டிலுள்ள புலிகள் எல்லாம்
கடும்தவம் செய்த கதைபோல
காங்கிரஸ் கனவான் பேசுகிறார்,
கதை கதையாக, சமதர்மம்!

கன்னி - பொன்னி உரையாடல்:

கன்னி:
வந்தவர் யார்? பொன்னம்மா?
வளைந்து நெளிந்து நின்றாரே!
பேச்சில் வெல்லம் கலந்தாரே
பேந்தப் பேந்த விழித்தாரே!

பொன்னி:
வாழவிடாமல் வரி போட்டு
வாட்டிய காங்கிரஸ்காரரடி
கேட்டுவிட்டேன் துணிவாக
"ஓட்டு' இல்லை, "போ' என்றேன்.

கன்னி:
காதில் இருந்தது காணோமே
காரணம் என்ன? பொன்னம்மா?

பொன்னி:
காங்கிரசாட்சியில் போட்ட வரி
கட்ட, கம்மலை விற்றுவிட்டேன்.

கன்னி:
வீட்டுக்காரர், சௌக்கியமா?
வேலை கிடைத்துவிட்டதுவா?

பொன்னி:
வேதனை கேளடி, பொன்னம்மா!
வேலை இல்லை! எனும் பலகை
எழுதும் வேலை அவருக்கு!
நாள் முழுதும் பாடுபட்டால்
கிடைப்பது ஒண்ணரை ரூபாய்தான்!

கன்னி:
ஏழைகள் வாழச் சுயராஜ்யம்
என்று பேசினார் இனிப்பாக,
ஏமாந்து போனோம் பொன்னம்மா!
வருகுது தேர்தல் விரைவாக
வாட்டிய காங்கிரசை ஓட்டிடலாம்
ஓட்டுகள் நம்மிடம், பொன்னம்மா!
"உதயசூரியன்' ஒளிவிடவே
உழைப்பவர் வாழ்வு தழைத்திடவே
பாடுபடுவது, தி. மு. க.

பொன்னி:
அண்ணன் அதைத்தான்
சொல்லுகிறார், இருவண்ணக்கொடியை
ஏந்துகிறார், திண்ணம்
வெற்றி என்று கூறிநித்தம் வாழ்த்துகிறார்.

கன்னி:
உண்மை அதுதான், பொன்னம்மா!
"உதயசூரியன்' நம் சின்னம்
"ஓட்டுகள்' அதற்கே, போட்டிடுவோம்.


காசி - மாசி உரையாடல்

காசி:
வளருவது காங்கிரசு ஆட்சியிலே
என்ன அண்ணேன்?
வகையாக எனக்கதனைச் சொல்லு
அண்ணேன்!

மாசி:
எதை என்று நான் உனக்குக்
கூறுவேன், தம்பி!
என் இதயம், குமுறுதே, எண்ணிக்
கொண்டால்;
கள்ள மார்க்கட்டு வளருதப்பா!
கனதனவான் இலாபம் பெருகுதப்பா!
வரிகள் சரமாரி ஏறுதப்பா!
வறுமை பிணிபலவும் ஓங்குதப்பா!
பெர்மிட்டு லைசென்சு பெருத்துப்போச்சு!
பெற்றுத்தரக் கங்காணிக் கூட்டமாச்சு!
ஓட்டுக்குத் தர காசு குவிந்துபோச்சு!
உண்மை, அன்பு, அறம், பண்பு இளைத்துப்போச்சு
ஆட்சியில் ஆணவம் அதிகமப்பா!
அச்சம்கொண்ட மக்கள் தொகை கொஞ்சமல்ல!
அடுத்துவரும் தேர்தலிலே காங்கிரஸ் கெலித்தால்
அடிமைநிலை, தமிழருக்கு, முற்றுமப்பா!!

காசி:
ஐயய்யே! அண்ணேன்! இதற்கு
என்ன செய்யலாம்? அநியாயம் ஒழிய
வழி ஒண்ணுமில்லையா?

மாசி:
கண்ணான என் தம்பி! வழி இருக்குது!
பொன்னான வாய்ப்பும் கிடைத்திருக்குது,
பொதுத் தேர்தல் சமயத்தில் பொறுப்பை
உணர்ந்து,
பொல்லாங்கை ஒழித்திட நாம் எல்லாம்கூடி,
போட்டிடலாம் "ஓட்டுகளை'
கழகச் சின்னம் அதற்கே!!
திக்கற்றோம் என்றே நாம் தேம்ப வேண்டாம்!
தி. மு. க. துணை இருக்கு, பயமே வேண்டாம்!
தி. மு. க. சின்னம்தான், "உதய சூரியன்'
தீமைகளை ஒழித்துக்கட்ட "உதய சூரியன்'

(திராவிடநாடு - 03.12.1961)