அறிஞர் அண்ணாவின் கவிதைகள்

திருமபிப்பார்

அன்புரைகள் அணியணியாய்
அன்று சொரிந்தவர், யாரறியார்?
இன்று நான்தர இருப்பதென்ன?
ஓடுகிறார், உள்ள இடம்தேடி!
எங்கிருந்து வளர்ந்திடினும்
எந்தன் வாழ்த்துக்கள்! தள்ளிடினும்
என்றே உரைத்திடுக; பண்பு காத்திடுக!

'திருவிட மாயை நீக்கித் திருந்தினேன்'
என்னும் நல்லோய்!
மாமிச மலையே! என்றீர்
மண்டையில் என்ன, என்றீர்,
சோற்றினால் ஆனபிண்டம்!
சொரணையும் உண்டோ, என்றீர்.
எட்டு உருவராம் என்றீர்.
எம்முடை அமைச்சர் தம்மை;
இன்றவர் தாளில் வீழ்ந்து
இறைஞ்சிடா முன்னர், உம்மை
எங்ஙனம் ஏந்போம். ஐயா!
என்றவர் கேட்குங்காலை
என்னதான் பதிலோ?
எண்ணிடின் வியப்பே யன்றோ!!
சிலர், புகழ்வார்!
சிலர் இகழ்வார்!
இவர், புகழ்பெற, நம்மை இகழ்வார்!
இதைப் புரிந்து கொண்டாலே
விளங்கும் தன்னாலே,
உலகும் உண்மையுமே!

தமிழ்நாடு தமிழர்க் கென்றால்
அமிழ்தினும் இனிக்கும், ஆமாம்.
தமிழ்நாடு வடவர்க் காக்கும்
சதியினை எவரே ஏற்பர்?
வடக்கில்லை தெற்குமில்லை
வாழ்வதே கொள்கை என்றால்
வாங்குவீர், கதரும் இன்றே
வளரலாம் 'கனமாய்' நன்றாய்.

மாறுதல் இயற்கை! தேவைங்கூட!
அரும்பு மலரானால், மணமுண்டு, அறிவோம்.
ஆயினும், ஐயகோ!
அழகுடல் தன்னில் அரிப்புடன் வெறுப்பு
பரவிடல் நன்றோ?
திருவிடம் மறப்பர் நிலைஇது அன்றோ!!

(திராவிடநாடு - 04.06.1961)


(குறிப்பு: ஈ.வெ.கி. சம்பத், தி.மு.க.விலிருந்து, கழகத்தலைவர்களைத் தூற்றி மகிழ்ந்த போது எழுதியது. இது என்றும் பொருத்தமாகிறதன்றோ?))