அறிஞர் அண்ணாவின் குறும்புதினங்கள்

மக்கள் கரமும், மன்னர் சிரமும்
4

ஐந்து திங்கள் இந்த மாளிகையில் அரசன், மாமன்றத்தின் கைதியாக இருந்தான். எந்த மாமன்றத்துக்குள்ளே நுழைந்து ஐவரைக் கைது செய்ய வந்திருக்கிறேன் என்று அதிகாரம் பேசினானோ, அதே மன்னன், அதே மாமன்றத்தில் கைதியானான். வரலாறு இதுபோன்ற சம்பவத்தை அடிக்கடி பொறித்திட முடியும்!

மன்னனிடம் சமரசம் காணவேண்டும் என்ற நோக்கமே மாமன்றத்துக்கு இருந்தது - ஆனால் காட்டுமிருகத்தை வீட்டில் கொண்டுவந்து பழக்கினாலும், அதன் காட்டுக் குணம் போவ தில்லை என்பதுபோல, மன்னன், மாமன்றம் காட்டிய நட்புமூலம், தன் தீய எண்ணத்தை விட்டுவிடவில்லை.

அண்டை அயலில் இருந்த பிரபுக்களின் மாளிகைக்கு மன்னன் செல்லலாம், விருந்து உண்டு மகிழலாம், வேட்டை ஆடிக் களிக்கலாம், தடை ஏதும் இல்லை. ஆனால் இது எதற்குப் பயன்பட்டது? ஒற்றர்களிடம் பேசி, ஓட வழிதேடுவதற்குத்தான்!

மீன் பிடித்துக் கொண்டிருந்தான் ஒருவன்! மன்னன் உலவச் சென்றான்! மீன்பிடித்தவன், மெல்ல மெல்ல மன்னனை அணுகி, இரகசியமாக ஒரு சுருளைத் தருகிறான். பிரான்சிலிருந்து, எனிரிடா அனுப்பிய கடிதம் அது.

இப்படிப்பட்ட சம்பவம் கண்டபிறகே, மாமன்றம், கண்காணிப்புத் தேவை என்ற முடிவுக்கு வந்தது. மன்னனுக்கு ஊழியம் செய்பவர்கள், ஒற்றர்கள் என்பதறிந்து அவர்களை நீக்கி விட்டு, மாமன்றம் வேறு ஆட்களை அமர்த்திற்று.

மன்னன் இவ்விதம்! மாமன்றமோ, பிளவுக்கு இடமளித்து விட்டது. நீண்ட காலமாக ஓயாது உழைத்து வந்தவர்களுக் கிடையே, கருத்து வேற்றுமை, பல பிரச்சனைகளில் முளைத்தன. எதிர்கால ஏற்பாடு பற்றி, முரண்பாடான எண்ணங்கள் உலவின. கேட்டது கிடைத்துவிட்டது என்ற திருப்தி சிலருக்கு; கேடு களையப்படவில்லை என்ற எண்ணம் சிலருக்கு; அரசன் மீண்டும் அரண்மனை புகவேண்டும் என்று எண்ணியவர்களுக்கு, அருமையான வாய்ப்பாக்கி விட்டது, இந்தக் கருத்து வேற்றுமை.

மாமன்றத்திலிருந்து மணி விளக்குகள் அணைந்து விட்டது போல, பிம், ஹாம்டன் மறைந்துவிட்டனர்.

களம் புகுந்து கடும் போரிட்டோருக்கும், கருத்துப் போரில் காலமெல்லாம் செலவிட்டு, மக்களைப் போர் வீரராக்கியோருக்கும் இடையே மனக்கசப்பு வளர்ந்தது.

மாமன்றம் அரசாள விழைந்தது. படையினர், எமது கரம் வலுவுடையது என்று வாதாடினர்.

கிராம்வெல், இதுபோது, கீர்த்திமிக்க நிலைபெற்று மாமன்றத்தை மங்கவைக்கும் மாவீரனானான்.

கனி கிடைத்துவிட்டது. சாறு பிழிந்து பருவகுவதா? துண்டுகளாக்கித் தின்பதா என்பதுபோல, வெற்றி கிடைத்து விட்டது. இனி அதனைப் பயன்படுத்துவது எம் முறையில் என்பது பற்றிக் கருத்து வேற்றுமை முளைத்தது.

அந்த நேரத்தில், குழப்பத்தைத் தவிர்க்கவும், சதிகளைச் சாய்க்கவும், வெளிநாட்டினர் விபரீதப் போக்கு ஏதும் கொள்ளாமலிருக்கச் செய்யவும், மீண்டும் மன்னன் சார்பிலே எத்தகைய இரத்தக்களறியும் ஏற்படாது தடுக்கவும், கிராம் வெல்லுக்குத்தான் ஆற்றலும் வாய்ப்பும் இருந்தது.
கிராமத்துக் கனவான், கடும் உழைப்பால் உயர்ந்தவன். படையினருக்கு நண்பன்; தூய நடத்தையாளன் கிராம்வெல். அவன் களத்திலே காட்டிய வீரமும், படை வரிசைகளிலே புகுத்திய புதுமுறைகளும், தன்னல மறுப்பாளர்களைத் திரட்டிய நேர்த்தியும், தலைமை இடத்துக்கு அவனைத் தகுதியுள்ளவனாக்கிற்று.

சார்லசுக்குத் தீர்ப்பளிக்கும் பொறுப்பை ஏற்க கிராம்வெலே தகுதி வாய்ந்தவன் - மற்றோர் காரணத்தால்.

சார்லஸ், ‘ஆண்டவன் எனக்கு அருள்பாலித்திருக்கிறார். அதனாலேயே நான் மன்னனானேன்’ என்று தத்துவம் பேசினான்.

கிராம்வெல் தான் பெற்ற வெற்றிகள் அனைத்தும், ஆண்டவன் அருளாலே கிடைத்தன என்று நம்பி கூறி வந்தவன்.

“அவன் விட்ட வழிப்படி நடக்கட்டும்!” என்பதும், இருவருக்கும் எப்போதும் எண்ணம்.
‘வெற்றி தருபவன் அவனே! வேந்தனை நம்மிடம் ஒப்படைத்தவனும் அவனே!’ என்று பக்தி மேலிட்டுதான் கிராம்வெல் பேசுவான். களத்திலிருந்து அவன், வெற்றிச் செய்தி களை அனுப்பிய ஓலைகள் முதற்கொண்டு துணைவிக்கு அனுப்பிய காதல் கடிதம் வரையில், இந்த ‘பக்தி’ ததும்பிற்று.

சார்லசும், எந்தக் கஷ்டம் நேரிடுகிறபோதும், எந்தக் கொடுமை செய்கிற சமயத்திலும் ‘அவன்’ பெயர் கூறத் தவறியதில்லை.

எனவே, ‘அவன்’ அருள் பெற்ற அவ்விருவரும்தான், ஒருவருக்கொருவர் கணக்குத் தீர்த்துக்கொள்ள வேண்டியது பொருத்தம்!

பொருத்தம் இருப்பினும், இல்லாது போயினும் நிலைமை, கிராம்வெல் பக்கம் இருந்தது.

மாமன்றத்தில் முணுமுணுத்தவர்களை விரட்டினான்; முன்னின்று காரியமாற்றும் நிலை பெற்றான்.

மாமன்றத்துக்கும் படையினருக்கும் ஏற்பட்ட இந்தப் பிளவு, மன்னனுக்கு வாய்ப்பாகிவிடாமலிருக்க, இரு சாராரும், தனித்தனியே, மன்னனிடம் சமரசம் செய்து கொள்ள முயன்றனர். மன்னனோ, ‘இதைக் காட்டி அதை’ ஏய்க்கும் போக்கில் ஈடுபட்டான்.

படையினர், மன்னனைத் தங்கள் வசம் கொண்டு வந்து வைத்துக் கொள்வதுதான் நலன் பயக்கும் என்றனர்; எனவே மாமன்றத்தாரிடம் சிறைப்பட்டிருந்த மன்னனைத் தங்கள் மேற்பார்வையில் உள்ள சிறைக்குக் கொண்டு வரத் திட்டம் தயாராயிற்று. மன்னன் இப்போது சிறை எடுக்கப்பட வேண்டிய பொருளானான்!

ஜாயிஸ் என்றோர் படைவீரன் - சிறு பிரிவுக்குத் தலைவன். மன்னன் இருக்கும் மாளிகையைச் சுற்றி வளைத்துக் கொண்டான். மாமன்றச் சார்பிலே காவலிருந்தவர்களின் கரம் ஒடுங்கிவிட்டது. கரத்தில் துப்பாக்கியுடன் சென்றான், மன்னனிடம்.

“புறப்படுக!”

“எங்கே?”

“இந்த இடத்தைவிட்டு”

“யார் நீ?”

“ஜாயிஸ்! படைவீரன்!”

“யார் உத்தரவுமீது வந்தாய்?”

“நானே தான்!”

“எங்கே உத்தரவு.”

“உத்தரவைக் காட்டத்தான் வேண்டுமா! சரி, அதோ பாரும், உத்தரவு.”

வெளியே நிற்கும் சிறு படையைக் கண்டான் மன்னன். சீறிப் பயனில்லை. ஜாயிசுடன் கிளம்பினான்.

ஜாயிஸ், இங்ஙனம், மன்னனை முரட்டுத்தனமாக அழைத்துச் செல்ல முற்பட்டாலும், மன்னன் உடன்வர இணங்கிய பிறகு, மரியாதையாக நடந்து கொள்ளலானான் மன்னனுடைய விருப்பப்படியே, நியூமார்க்கட் எனும் இடம் நோக்கிச் சென்றனர். அங்கு போய்ச் சேருமுன், ஓர் இரவு, வழியில் உள்ள கிராமத்தில், ஓர் மாளிகையில் தங்கினர். அந்த மாளிகை முன்னம் கிராம்வெலுக்குச் சொந்தமாக இருந்தது!

பேர்பாக்ஸ், கிராம்வெல் ஆகியோர், மன்னனை மரியாதை யாகவே நடத்தினர் - அவன் விருப்பப்படியே வசதிகள் - உபகாரத்துக்கு ஏற்பாடுகள் - வின்சர் நகரிலே. மன்னன் சிறை வைக்கப்பட்டான்.

மாமன்றம் அனுப்பிய சமரச ஏற்பாடு ஒருபுறம்; படையினர் அனுப்பிய ஏற்பாடு மற்றோர்புறம். மன்னனிடம் வந்தன்.

மக்கள் உரிமையை மதித்து ஆட்சி செய்யவேண்டும். அதற்காக மாமன்றம் இயற்றிய சட்டங்களின்படி ஒழுக வேண்டும். எதேச்சாதிகார ஆட்சிக்குத் துணையாக இருந்த துரோகிகளின் மீது மாமன்றம் நடவடிக்கை எடுக்கும்போது குறுக்கிட்டு, ‘அவர்களை மன்னிக்கக் கூடாது. மாமன்றத் தேர்தலுக்கு, மன்னன் முகாமில் இருந்தவர்கள் நிற்கலாகாது’ என்பன நிபந்தனைகள்.
“மிச்சம் என்ன இருக்கும்? முடிதானே!” என்று அலட்சியமாகக் கூறிய சார்லஸ், உடன்பாட்டுக்கு வர மறுத்தான்.

படை வரிசையினரோ இதனினும் குறைந்த அளவிலேயே நிபந்தனைகள் விதித்தனர். துரோகிகள் பட்டியல் தயாரிக்கப் படும்போது, முக்கியமானவர்கள் வரையிலாவது மன்னன் குறுக்கிடாமலிருக்கவேண்டும் என்று கேட்டனர். இதற்கும் மன்னன் இணங்கவில்லை.

அரியாசனத்தைத் தூசி துடைத்து அலங்காரம் செய்து, மன்னனை அமரச் செய்து, அவன் எதிரில் கைகட்டி வாய் பொத்தி மாமன்றத்தார் குற்றேவல் புரியக் காத்துக் கிடக்க வேண்டும். அக்கிரம ஆட்சிக்குத் துணை நின்றவர்கள் பழையபடி துதிபாடித் தூபமிட்டு, பதவி பெற்றுக் கொழுப்பர் - இதற்கா களம் புகுந்தனர், கஷ்ட நஷ்டம் ஏற்றனர், குருதி கொட்டினர்! மன்னன், எந்தச் சமயத்திலும், இழந்த ஆதிக்கத்தைத் திருப்பிப் பெற ஒரு துரோகக் கும்பலை நம்பி இருந்தான். எனவேதான், துரோகிகள் தண்டிக்கப்பட்டாக வேண்டும் என்ற நிபந்தனையை ஏற்கமறுத்தான்.

ஸ்காட்லாந்திலிருந்தாவது, அயர்லாந்திலிருந்தாவது உதவி கிடைக்கும் என்ற ஆசை அகலவில்லை. இராணி எனிரிடாவும் முயற்சியைக் கைவிடவில்லை. இந்நிலையில் உடன்பாட்டுக்கு வராமல், ஆனால் அதேபோது உடன்பாடு குறித்துப் பேசிக் கொண்டு காலத்தை ஓட்டுவதே சாலச் சிறந்ததென மன்னன் எண்ணினான்.

படையினர் அமைத்திருந்த கட்டுக்காவலை ஏய்த்துவிட்டு மன்னன் வெயிட் தீவு எனும் இடம் சென்றான். இங்குக் கவர்னராக இருந்த இளைஞர், கண்ணியமாக, ஆனால், கண்டிப்புடன் மன்னனை நடத்திவந்தார்.

இராணி எனிரிடாவின் முயற்சியால், கலம் ஒன்று தயாராகி விட்டது. மன்னன் அதிலேறி பிரான்சு செல்லலாம். பிறகு, ஐரோப்பிய நாடுகளிலே, மன்னராட்சியை ஆதரிப்பவர்களின் துணையைத் திரட்டி, பிரிட்டன்மீது பாயலாம். மாமன்றம் அரும்பாடுபட்டுப் பெற்றவெற்றியை அழித்திடலாம். வாய்ப்புக் கிடைக்கிறது. என்று மன்னன் சார்பினர் எண்ணிக் கொண்டனர். ஆனால் மன்னன் உடனடியாக ஓடிவிட விரும்பவில்லை. ஸ்காட்லாந்துக்காரரிடம் ‘பேரம்’ பேசிக் கொண்டிருந்தான்.
இதற்கிடையில், மன்னன் தங்கியிருந்த இடத்திலேயே குழப்பம் உண்டாக்கி, மன்னனைத் தப்பிவிடச் செய்வதற்குச் சிறு சிறு முயற்சிகள் நடைபெற்றவண்ணமிருந்தன. மாமன்றம் அமைக்கும் புதிய அரசியல் திட்டம் தங்கள் சுகபோக வாழ்வைக் குலைக்கும் என்று எண்ணிய சுயநலமிகள், இத்தகைய முயற்சிகளைத் தூண்டிவந்தனர்.

“மன்னனைக் காக்க மாவீரரே வாரீர்!

வேந்தனை விடுவிக்கத் திரண்டு வாரீர்!

புரட்சி பொங்குக! மன்னன் வாழ்க!

மன்னருக்காகப் போரிட வருக!”

முரசறைகிறான் காப்டன் பர்லி என்பான். வெளிப்படையாகவே மன்னனோ, மாமன்றப் படையிடம் தோற்றோடினான் - சரண் புகுந்தான் - சிறைப்படுத்தப்பட்டிருக்கிறான்! எனினும், மன்னனுக்காகப் போரிடக் கிளம்புக என்று முரசு அறைகிறான்.

மக்கள் முரசு கேட்டனர்; கேலி பேசினர்.

பெண்கள் சிலரும், துப்பாக்கி தூக்கிய ஒருவனும் தான், இந்த அறப்போருக்குக் கிளம்பினர்! மன்னனுக்கு இருந்த ஆதரவுக்குத் தக்க எடுத்துக்காட்டு!

கலகம் விளைவித்தவன் கூண்டில் தள்ளப்பட்டான்.

பதினொரு திங்கள் இங்கு இருந்தான் மன்னன் - மனத்திலே, மக்களை மகிழ்விக்கத்தக்க எந்த முடிவும் கொள்ளவில்லை. இப்பக்கமும் அப்பக்கமும் பார்த்தவண்ணம், தப்பி ஓட – துணைதேட.

கலம் கடலில் தயாராக இருக்கிறது! கடற்கரை போகக் குதிரையும் தயாராகிவிட்டது! ஆட்கள் வந்து விட்டனர், துணைநிற்க.

மாளிகை மாடியிலிருந்து, பலகணி வழியாகக் கயிறு கட்டி மன்னன் கீழே இறங்கி, தப்பிச் செல்வதென்று திட்டம். இதனை பயர்பிரேஸ் என்பவன் வகுத்துத் தந்தான். பலகணியின் இரும்புக் கம்பிகளின் இடுக்கிலே புகுந்து செல்ல மன்னன் முயன்றான் - தலை நுழைந்தது. உடல் சிக்கிக் கொண்டது. உடன் இருந்தோர் காப்பாற்றினார்; தப்ப முடியவில்லை.

இலண்டன் நகர் சென்று இரும்பைத் துளைக்கும் கருவி கொண்டுவர ஏற்பாடாயிற்று.

இரகசியம் வெளியாகிவிட்டது; காவல் பலமாகிவிட்டது. மன்னனோ தியானம - தொழுகை, தவறாமல் செய்தவண்ணம் இருக்கிறான்.

எத்தன் ஒருவனுடைய துணைகொண்டு, ஜேன்ஹோர் வுட் எனும் மாது, மன்னன் தப்பிச்செல்ல வழி கண்டாள். இரகசியக் கடிதங்கள் பல மன்னனிடமிருந்து, ஜேன் பெற்றாள். இந்தச் சதியும் அம்பலமாகிவிட்டது - தப்பிச் செல்லும் வழி அடைக்கப்பட்டுவிட்டது.

“மன்னவா! விடைபெற்றுக் கொள்ளட்டுமா! தாங்கள் இங்கிருந்து சென்றுவிடத் திட்டமிட்டிருக்கிறீராமே!” என்று கேலிபேசி எச்சரித்தான். கோட்டைக் கவர்னர்.

மன்னன் சீறவில்லையாம்; சிரித்தானாம்!

மாறுவேடம் புனைந்துகொள்வது, மறைந்திருப்பது, காட்டு வழிகளைக் கண்டறிவது, பலகணிக் கம்பிகளை அகற்றுவது போன்று சாகசச் செயலெல்லாம், மன்னன் செய்து பார்த்தான். திறமையை இந்தத் துறைக்கே செலவிட்டானே தவிர, காலத்தின் குறியை அறிந்து, மக்களிடம் தோழமை கொள்வோம் என்ற எண்ணத்தைப் பெற்றானில்லை.

கரம், எக்காரணத்தாலோ வலுவடைந்துவிட்டது. அதனாலேயே, நாம், இவர்களிடம் சிக்கிவிட்டோம். அவர்கள் தம் வலுவை இழந்துவிடுவர். விரைவில்லாவிட்டாலும் சிலகாலம் சென்றான பிறகு. அப்போது மீண்டும் தர்பார் நடத்த இயலும், புரட்சிக்காரரைப் பொசுக்கிவிடலாம் என்று பகற்கனவு கண்டபடி இருந்தான் மன்னன். கருத்து, சதித்திட்டம், சாகசம் இவற்றிலேயே படிந்திருந்தது.

மன்னன் நிலை இவ்வாறிருக்க, மாவீரன் கிராம்வெல் ஸ்காட்லாந்துக்காரர் எதிர்புரட்சி நடத்தக் கிளம்பியதை அழித்தொழித்து வெற்றி கண்டான்.

மன்னன் எந்தத் திக்கிலெல்லாம், உதவி கிடைக்குமென்று எண்ணிக் கொண்டிருந்தானோ, அங்கெல்லாம் கிராம்வெலின் வெற்றி முரசும் கேட்கலாயிற்று. இடிகேட்ட நாகமாயினர் சதிகாரர்கள். கடைசிக் கட்டம் வந்துவிட்டது; இனி மன்னன் தன் ஆதிக்கத்தை மீட்டுக் கொள்வது இயலாத காரியம் என்பது விளக்கமாகிவிட்டது. நாட்டுக்குத் தக்கதோர் ஏற்பாடு செய்யும் தகுதி படைத்த தலைவன் ஆலிவர் கிராம்வெல் என்பதை அனைவரும் ஏற்றுக் கொள்ள வேண்டியதாகிவிட்டது. படையிலே வீரம், நிர்வாகத் துறையிலே திறம், பொதுவாகவே தன்னலமறுப்பு - இவை, கிராம் வெலின் அரண்களாயின.

மாமன்றத்திலே, முணுமுணுப்பாளர்கள், முன்னை நினைவுகளை விடமறுப்போர் ஆகியவர்கள் விரட்டப் பட்டனர் -மாமன்றம் பணியாற்றவேண்டிய அளவு முடிந்து விட்டது. இனி ஒரு பலம் பொருந்திய அரசு முறை வகுத்தாக வேண்டும். அந்தப் பணிக்காக, கிராம்வெலுடன் ஒத்துழைக்கக் கூடியவர்களுக்கு மட்டுமே, மாமன்றத்தில் இடம்! ஐம்பதின்மரே, இதுபோது மாமன்ற உறுப்பினர்கள்.

மன்னனை என்ன செய்வது? பெரும் பிரச்சனையாகி விட்டது. மறப்போம், மன்னிப்போம்! என்று கூறிட மக்களில் ஒரு பகுதியினர்; மற்றோர் பகுதினரோ, குறிப்பாகப் படையினரே, “மன்னன் மக்கள் துரோகி! ஒழித்துக் கட்டத்தான் வேண்டும்” என்று கூறினர்.

“அவன்” வழி காட்டுவான் என்றான் மன்னன். ‘அவன்’ கட்டளைப்படி நான் நடந்து கொள்வேன் என்றான் கிராம்வெல்.

பிரிட்டனில், சிறையில் மன்னன் - சொந்த அரண்மனையில்தான். ஆனால் பல்லும் நகமும் போன புலி!

விசாரம், வேந்தனைக் கிழவனாக்கிவிட்டது - தலைமயிர் நரைத்துவிட்டது - கண்ணொளி குறையலாயிற்று - அழகழகாகச் சுருளை சுருளையாக இருந்த முடி, பொலிவிழந்து விட்டது. எந்த மன்னனும் பெறத் துணியாத பெருநிலை கேட்டவன் சார்லஸ்! ஆண்டவனுக்குச் சமம் அரசன் என்ற தத்துவம் பேசினவன். மக்களுக்கு, எது உரிமை எது நன்மை என்பதை அறியும் ஆற்றலே மன்னனுக்குத் தான் உண்டு என்று வாதாடியவன். அந்தத் தீதான தத்துவத்துக்காக ஒரு நாட்டையே படுகளமாக்கிவிட்டவன்; பதினோராண்டுகள் மாமன்றம் கூட்டாமல் அரசு புரிந்தவன்; பிரபுக்கள் பலர் பணிவிடை செய்வர்; பிரதாபம் கூறிடுவோர் பலர்! அவனை எதிர்த்தோர் சிறையிலும், தூக்குமேடையிலும் உயிரிழந்தனர்! அப்படிப்பட்ட சார்லஸ் மன்னன் அடைபட்டுக் கிடக்கின்றான்; ஆலிவர் கிராம் வெல்லின் பேனா முனையில், மன்னன் எதிர்காலம் இருக்கிறது.

கணவனுக்கு உற்ற கதியை எண்ணிக் கண்ணீர் வடித்த வண்ணம் எனிரிட்டா அரசி - பிரான்சில்.
இடையே கடல்! ஒருபுறம் மன்னன் சிறையில்; மற்றோர் புறம் சிறையினும் கொடிய நிலையில் ராணி பிரான்சில்.

இளவரசன், தந்தையுடன் இல்லை. கடைமகனும், மகளும் மட்டுமே பிரிட்டனில் உள்ளனர்.

“என் தலையை வெட்டிவிடுவார்கள், மகனே! வெட்டி விடுவார்கள்!” என்று மகனிடம் மன்னன் கூறுகிறான். மன்னனிடம் கடைசி நாள்வரை பணியாளராக இருந்தவர்கள் கசிந்துருகி அழுகிறார்கள். மன்னன் சாகத் துணிந்து விட்டான்; படையினரின் போக்கை ஆதரித்த மாமன்றம் மரண ஓலை தயாரிக்க இணங்கிவிட்டது.

ஜான்பிராட்ஷா என்ற வழக்கறிஞரைத் தலைவராகக் கொண்ட ஒரு விசாரøணைக் குழு அமைக்கப்பட்டது. 133 உறுப்பினர்கள். வெஸ்ட்மினிஸ்டர் மண்டபத்தில் கூடிய இந்த விசாரணைக் குழுவுக்கு, மன்னன் அழைத்துவரப் பட்டான்.

“நான் உங்கள் மன்னன்! என்னை விசாரிக்கும் தகுதி இந்தக் குழுவுக்குக் கிடையாது. எந்த அதிகாரத்தின் பேரில், என்னை விசாரிக்க முற்பட்டீர்கள்?” என்று கேட்டான் மன்னன்.

“மக்கள் தந்த அதிகாரத்தால்!” என்று பதிலிறுத்தார் பிராட்ஷா. மன்னன்தான், மக்களுக்கு அந்தத் தகுதி கிடையாது என்ற தத்துவம் கொண்டவனாயிற்றே! விசாரணைக் குழுவின் தகுதியை ஏற்றுக் கொள்ள மறுத்தான்.

குழுவின் கேள்விகளுக்குப் பதில் தருவதில்லை; குறுக்குக் கேள்விகளும் எழுப்புவதில்லை; “என்னை விசாரிக்கும் தகுதி உங்களுக்கு இல்லை” என்றே கூறிவந்தான் - மூன்று நாட்கள்.

முடிவில், மக்கள் உரிமைகளைப் பறித்து, எதேச்சாதிகார ஆட்சி நடத்தி, இறுதியாக மக்கள்மீதே போர் தொடுத்த மாபெரும் துரோகத்துக்காக, மன்னன் சார்லசைத் தூக்கிலிடுவது என்று தீர்ப்பளிக்கப்பட்டது.

மன்னனைத் தூக்கிலிட மக்கள் தீர்ப்பளிக்கிறார்கள்! மக்கள் - வெடிமருந்துக்கிடங்கோ? பசும் புற்றரை மேலே, கீழே வெடிமருந்துக் கிடங்கு என்பதுபோல, அஞ்சி அஞ்சிச் சாகிறவர் களாக, ஆளடிமை செய்பவர்களாகத் தோற்றமளிக்கும் மக்கள், தாங்கக்கூடிய அளவு தாங்கியான பிறகு வெடிமருந்துச் சாலை போலாகிவிடுகின்றனர் - அரியாசனங்கள் ஆடுகின்றன. மணிமுடிகள் சிதறுகின்றன - முடிமட்டுமா! முடிதரித்த சிரமே, இதோ வெட்டப்படுகிறது!

ஓராண்டு ஈராண்டுகளுக்கு முன்பு கூறியிருந்தால் நம்பி இருக்கமாட்டார்கள் - பத்தாண்டுகளுக்கு முன்பு சொல்பவன் பிணமாக்கப்பட்டிருப்பான் - ஆனால் இதோ 1649ஆம் ஆண்டு ஜனவரித் திங்கள் முப்பதாõம் நாள், மன்னன் சார்லஸ், அவன் அரண்மனைக்கு எதிலே அமைக்கப்பட்ட தூக்குமேடைக்கு அழைத்துக் கொண்டு வரப்படுகிறான்.

எதிரே மக்கள் திரளாக! ஆனால் கண்டனம் இல்லை; கலகம் இல்லை; இந்த நிலைக்குத் தன்னைத்தானே துரத்திக் கொண்டானே மன்னன், என்ற வருத்தம் தோய்ந்த முகத்துடன் உள்ளனர்.

மன்னன் வருகிறான்! படை வீரர்கள், முரசுகளைக் கொட்டுகிறார்கள்.

மன்னன் தூக்குமேடை ஏறுகிறான் - உடன் இருக்கும் உற்ற நண்பர்கள் அழுகிறார்கள் - ஒருவர் மயக்கமுற்றுக் கீழே சாய்கிறார்.

மன்னன் பதறவில்லை, கதறவில்லை, சிரத்தைச் சாய்கிறான் - ஒரு வெட்டு - சிரம் துண்டிக்கப்பட்டுவிட்டது. “இதோ துரோகியின் தலை” என்று ஒருவன் எடுத்துகாட்டுகிறான். தத்துவத்தால் தன்னைத்தானே அழித்து கொண்ட சார்லசின் சிரத்தை!

மக்கள் கரம், மன்னன் சிரத்தையும் கொய்துவிடும் வலுப்பெற்றது.

அது ஏர்பிடிக்கும், துலாக்கோல் பிடிக்கும், கூப்பும், தழுவும், வரி செலுத்தும், வணக்கம் கூறும் - ஆனால் தாங் கொணாத கொடுமைசெய்து, உரிமையைப் பறித்திடக் கொடுங் கோலன் கிளம்பினால், அந்தக் கரம், அவன் சிரம் அறுக்கும். சார்லஸ் சம்பவம் இதைக் காட்டும், பயங்கரப் பாடம்! பாராள்வோர் எப்போதும் நினைவில் வைத்திருக்க வேண்டிய பாடம்.

(திராவிட நாடு - 1955)