ஆப்பக்கடை அன்னம்மாளிடம்
அச்சம் கொள்ளாதவர்கள் அவலூரில் யாரும் இருக்கமுடியாது.
அவ்வளவு துணிச்சல். யாரையும் ஒரு பொருட்டாக மதிக்காத
சுபாவம்.
அப்படிப்பட்ட அன்னம்மாள் சோகமுற்று இருப்பது என்றால்,
ஏதோ பெரிய விபரீதம் நேரிட்டுவிட்டது என்றுதானே பொருள்.
விபரீதம்தான் நேரிட்டுவிட்டது. தன் மகள் காவேரியின் ஜாதகத்தைக்
கேட்க அருணகிரி வருவான் வருவான் என்று எத்தனை நாட்களாகக்
காத்துக் கிடப்பது. வரவேயில்லை.
அத்தே! என்று குளிர்ச்சியாகக் கூப்பிடுவான் சொக்கலிங்கம்
என்று காத்திருந்தாள்; நடக்கவில்லை. கோபம் தலைக்கேறிவிட்டிருந்தது.
அந்த இருவரையும் ஒருபிடி பிடிக்க வேண்டியதுதான் என்று
தீர்மானித்தாள். ஆனால் காவேரி? கண்ணீர் வடிக்கிறாள்! கிணறு
குட்டை அகப்படாமலா போகும் என்கிறாள். நீ வீண் சண்டை போட்டுப்
போட்டு நல்லவர்களையும் விரோதிகளாக்கி விடுகிறாய் என்று
குற்றம் சாட்டியே பேசுகிறாள்.
பக்குவமாகப் பேசிக் காரியத்தை முடிப்பதற்குத் துப்பு இல்லாமல்,
கடும் கோபத்தைக் கக்கிக் கிடப்பது எதற்கு என்று கேட்கிறாள்.
நான் கன்னியாகவே காலந் தள்ளுவேன் என்கிறாள்.
“நான் பெத்த பெண்ணே என்னைக் கெட்டவள், பக்குவம் தெரியாதவள்
என்று பேசுவதையும் கேட்டுக் கொள்ளும் காலம் வந்துவிட்டதே”
என்று நினைத்து அன்னம்மாள் சோகமாக இருந்தாள்.
பக்குவமாகத்தான் பேசிப் பார்ப்போமே என்ற முடிவுக்கு வந்த
அன்னம், சொக்கலிங்கத்தை எதிர்பார்த்துக் கொண்டு புளியங்குட்டை
அருகே நின்று கொண்டிருந்தாள்.
சொக்கலிங்கம் வழக்கமாக அந்த வழியாக டேவிட் வீட்டுக்குச்
சைக்கிளில் போவது அன்னம்மாளுக்குத் தெரியும்.
சைக்கிள் மணிச்சத்தம் கேட்டது. சோகத்தை மறைத்துக் கொண்டு
புன்சிரிப்பை வரவழைத்துக்கொண்டாள். அன்னம்மாளைக் கண்டதும்
சொக்கலிங்கம் சைக்கிளை நிறுத்திவிட்டுக் கீழே இறங்கினான்.
பக்குவமாகப் பேசத் தொடங்கினாள்.
“தொரே உம்பேர்லே இம்மா ஆசையா இருக்கறாரே, அவரோட சொல்லி
ஏதாச்சும் ஒரு நல்ல வேளையைத் தேடிக்கக் கூடாதாடா தம்பி
இன்னும் எவ்வளவுன்னுதான் படிப்பே...”
“என்னோட மாமனார்கூட அதுபோலத்தான் சொல்றாரு... ஆனா எனக்குப்
படிக்கறதுக்குக் குந்தகமில்லாத வேலையா கிடைக்கணும்னு ஆசை...”
“ஏனாம்! நீயும் இந்தத் தொரை மாதிரி எழுதிக்கிட்டே காலத்தை
ஓட்டிடப் போறயா... இவருக்குப் பெண்ஜாதி இல்லே...புள்ளைகுட்டி
இல்லே... ஒண்டிக்கட்டை... நீ அப்படி இருக்க முடியுமா...
இன்னும் எவ்வளவு காலம் காத்துக்கிட்டு இருப்பா உனக்காக...”
“எனக்காகக் காத்துக்கிட்டு இருக்கறாளா... அது எந்தப் பைத்தியக்காரப்
புள்ளே..”
“ஏண்டா தம்பி! என் கிட்டவே ஒண்ணும் தெரியாததுபோல நடிக்கறயா...
என்னா சொக்குப்பெடி போட்டயோ தெரியல்லே, என் மவளோட
கண்ணு உன்னைத்தானே சுத்திச் சுத்தி வளையம் போடுது...காலா
காலத்திலே முடியணுமே...”
“இது என்ன விபரீதம். நான் ஒருவிதமான கெட்ட எண்ணமும் இல்லாமத்தான்
பழகறேன்... காவேரியும் அது போலத்தான்...”
“அடப்பாவி! என்னா இப்படி ஓர் இடியைத் தூக்கிப் போடறே...
அந்தப் பொண்ணு உன்னைப் பார்க்கற பார்வையும் பேசற பேச்சும்
சிரிக்கிற சிரிப்பும் ஊரே தெரிஞ்சிக்கிட்டிருக்குது தொரெக்கே
கூடத் தெரியும்... அப்படித்தான் நான் எண்ணிக்கிட்டு இருக்கறேன்...”
“ரொம்ப தப்பு... நான் அந்த விதமான பேச்சே பேசினது கிடையாது...
சத்தியமா...”
“பேசணுமா... ஏண்டா! ஒரு வயசுப் பொண்ணை எதிரே உட்கார வைச்சிகிட்டு
இளிச்சிக்கிட்டு இருக்கறயே, என்னமோ சித்திரம் தீட்டறேன்னு...
அது எதுக்காம்...”
“காவேரியோட அழகு அக்கா! என்னைப் படம் போடச் சொல்லுது...”
“சொல்லுண்டா சொல்லும்.. உன் கண் அழகு யாருக்கு உண்டு...
உன் கன்னம் மாம்பழம், உடம்பு தங்கம்னு இன்னும் என்னென்ன
இழவோ பேசி அந்தப் பெண்ணோட மனசை மயக்கிவிட்டு, இப்ப இப்படிச்
சொல்றயே... நியாயமா... சொக்கலிங்கம்! நான் இப்பத்தான்
கேட்கறேன். வெட்கத்தை விட்டே கேட்கறேன். என் மகளைக் கட்டிக்கொள்ள
கசக்குதா.. ஆப்பரிக்காரி பொண்ணுன்னு சொல்லுவாங்களேன்னு
தோணுதா நாலு எழுத்துப் படிச்சதாலலேயே என்னைப் பாத்தா
கேவலமாத் தோணுதா...”
“அப்படிப்பட்ட எண்ணமெல்லாம் எனக்குக் கிடையாது. நான் மட்டும்
என்ன பெரிய மிராசுதாரன் பிள்ளையா... வண்டிக்காரன் மகன்தான்...
நான் காவேரியைக் கட்டிக்கொள்ள முடியாதுன்னு சொல்றதுக்குக்
காரணம், நீ நினைக்கிற மாதிரியெல்லாம் இல்லே... எனக்குக்
கல்யாணம் கார்த்தியெல்லாம் இப்போது கிடையாது. எங்க அப்பா
படுகிற கஷ்டத்தைப்போக்கியாகணும், முதலிலே. காலம் முழுவதுமா
வண்டிக்காரராக இருப்பது... நான் ஒரு பிள்ளை பொறந்துதான்
என்ன பயன்.”
“எனக்கு இந்தச் சமாதானமெல்லாம் தேவையில்லே. நானும் காவேரியும்
கோலார் பட்டணம் போறோம், அவளோட பெரியம்மா வீட்டுக்கு.
மூணு மாதத்திலே வந்து சேருவோம். அதுக்குள்ளே ஒரு முடிவுக்கு
வந்தாகணும்; இல்லையானா நான் தொரே கிட்டவே சொல்லிடுவேன்...”
அப்போது ஓர் ஆள் ஓடிவந்து “சொக்கலிங்கம்! ஓடியா, ஓடியா...
உன் மாமனுக்கு மாரடிச்சுட்டுது... கீழே விழுந்துட்டாரு...”
என்று கூவினான்.
ஓடோடிச் சென்ற சொக்கலிங்கம், தன் மாமன் மார்வலியால்
துடிப்பதையும், பக்கத்திலிருந்து கொண்டு டேவிட் துரை
ஏதோ மருந்து கொடுத்துக் கொண்டிருப்பதையும் பார்த்துப்
பதறிப் போனான்.
டேவிட் துரை, கீழ் நாடுகள் பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்த
ஒரு பேரறிவாளர்; தங்கமான மனமுடையவர்; அவரும் அருணகிரியைப்
போலவே மணமாகாதவர்.
அருணகிரி அவரிடம் வேலைக்கு அமர்ந்து முப்பது ஆண்டுகளாகிவிட்டன.
ஒரு நாளாகிலும் முகம் சுளித்துக் கொண்டதில்லை. ஒரு பேதமும்
காட்டாமல், தமது பங்களாவின் பின்புற விடுதியிலேயே அருணகிரியை
இருந்துவரச் செய்தார்.
டேவிட் துரையுடைய வீட்டு விவகாரம் முழுவதையும் கவனித்துக்கொண்டு
வந்தான் அருணகிரி. ஒவ்வொரு வேலைக்கும் ஒவ்வோர் ஆள் இருந்தனர்
– தோட்ட வேலைக்கு – சமையலுக்கு – கணக்கு எழுத – ஆனால்
எல்லாவற்றையும் மேற்பார்வை பார்த்துக்கொள்ள அருணகிரிதான்.
எதையும் அருணகிரியிடம் சொல்லித்தான் செய்து கொள்ளவேண்டும்-;
அவ்வளவு நாணயமாக நடந்து வந்தான்.
அருணகிரி துடிப்பது கண்டு, கதறிய சொக்கலிங்கத்தை டேவிட்
சமாதானப்படுத்திக்கொண்டே, தன் கண்களையும் துடைத்துக்கொண்டார்.
இனி இவனை அவனுடைய அப்பனிடம் சேர்த்து விட வேண்டியதுதான்..
என் காலம் முடிந்துவிட்டது...சார்! இவனுக்கு ஒரு நல்ல
வேலை கிடைக்க உங்களோட உதவிதான்... வேறே யார்.... எனக்குத்
தெய்வம்போல நீங்கதான்” என்று மிகுந்த கஷ்டத்துடன் பேசிய
அருணகிரியை டேவிட் சமாதானப்படுத்தியபடி இருந்தார்.
சொக்கலிங்கத்தின் தகப்பனாருக்குக் கடிதம் போடப்பட்டது;
அவரும் வந்து சேர்ந்தார்.
“சடையப்பா! நாம் எவ்வளவு முயன்றாலும் இனி அருணகிரியைக்
காப்பாற்ற முடியாது. டாக்டர் சொல்லிவிட்டார். மனத்தைத்
திடப்படுத்திக்கொள்ள வேண்டியதுதான்.”
“என் மகன் சொக்கன் பிறந்தானே தவிர, ஐயா! அருணகிரியோட
மகனாகத்தான் வளர்ந்து வந்தான். வருஷத்துக்கு ஒரு தடவையோ,
இரண்டு வருஷத்துக்கு ஒரு தடவையோ, வந்து பார்த்துவிட்டுப்
போகிறோமே, அது தவிர மற்றபடி எங்களோட தொடர்பே அவனுக்குக்
கிடையாது. சொக்கலிங்கத்தை இவ்வளவு நல்லபடியாக வளர்த்த
புண்ணியமூர்த்தி அருணகிரி... அவனோட உதவி கிடைத்திராவிட்டா,
என் மகன் கூலிக்காரனாத்தான் ஆகியிருப்பான்.
“சடையப்பா! உன் மகன் நல்ல படிப்பாளி... அவனாலே உன் குடும்பம்
கட்டாயம் நல்ல நிலை அடையும். என்னோட இருந்துவிடச் சம்மதமானாலும்
சரி... இல்லே, வேறே எங்கேயாவது வேலைக்குப்போக விருப்பம்
இருந்தாலும் சரி, அதற்கு ஏற்பாடு செய்கிறேன். அது என்
பொறுப்பு.” அருணகிரி சில தினங்களில் கண்களை மூடிவிட்டான்.
டேவிட் சொக்கலிங்கத்தைக் கேட்டார், என்னுடன் இருந்து
விடுகிறாயா என்று. அவனுக்கு அதிலே விருப்பம் என்றாலும்,
அந்த ஊரில் இருந்தால் ஆப்பக் கடை அன்னத்தினால் பெருத்த
தொல்லை விளையும் என்ற பயம் அவனை அந்த இடத்தை விட்டுச்
சென்று விடவேண்டும் என்று தூண்டிவிட்டது.
பல ஆண்டுகளாகப் பிரிந்து இருந்தாலும், தகப்பனாரிடம் பாசம்
இல்லாமல் போகுமா. அதிலும் அவர் வாழ்ந்து கெட்டவர் என்பதையும்,
இப்போது வண்டிக்காரராக இருந்து வருகிறார் என்பதையும்
எண்ணும்போது, இனி அவருடன் வாழ்ந்து வரவேண்டும், தான்
ஏதாவது வேலை தேடி அவரை நிம்மதியாக வாழ வைக்க வேண்டும்
என்ற ஆவல் அதிகமாகி விட்டது.
“இனியாகிலும் மகன் வீட்டோடு வந்து சேரட்டுமே.. உள்ளதைக்
கொண்டு குடும்பத்தை நடத்த முடியாதா... அவன் ஒருவன் வந்து
சேருவதாலா, நமக்குப் பளுவு ஏறப்போகுது” என்று சொல்லும்போதே
தன் தாயாரின் கண்கள் குளமானதையும் கண்டான். தகப்பனாருடன்
ஊர் சென்று விடுவது என்று உறுதி பலப்பட்டுவிட்டது.
டேவிட் தடுக்கவில்லை. நீ முன்னுக்கு வரவேண்டியவன், இங்கே
அடைபட்டுக் கிடக்கத்தான் கூடாது. நான் கொடுக்கும் சிபாரிசுக்
கடிதம் போதும். உனக்கு எங்கேயும் நல்ல வேலை கிடைக்கும்.
கணக்குத் துறையில் மேலும் படித்துப் பயிற்சி பெற்றால்,
ஏதாவது பெரிய கம்பெனிகளில் வேலை கிடைக்கும். என்று டேவிட்
உற்சாகமூட்டினார்.
அவருடைய சிபாரிசுக் கடிதத்தையும் வாழ்த்துகளையும் பெற்றுக்கொண்டு,
ஊர் திரும்ப ஏற்பாடு செய்து கொண்டனர்.
* * *
இரவு, சடையப்பன், தயங்கித் தயங்கி மகனிடம் பேசலானான்.
“சொக்கலிங்கம்! நீ இவ்வளவு காலமாக எவ்வளவோ நல்லபடியாக
வாழ்ந்து வந்தாய், உன் மாமன் தயவால். அறிவாளிகளோடு பழகி
வந்தாய். நாம் இனிப் போக வேண்டிய இடமோ, ஜெமீன். அட்டகாசமும்
ஆணவமும் நிரம்பிய இடம்! ஜெமீன்தார் ஜம்புலிங்கபூபதி கொடியவர்
அல்லர்; ஆனால் ஜெமீன்தாரருக்கு இருக்கவேண்டிய முடுக்கு,
கண்டிப்பு எல்லாம் நிரம்பியவர். எனக்கோ அங்கு என்ன வேலை
தெரியுமல்லவா...”
“மாமா இரண்டொரு முறை சொல்லியிருக்கிறாரப்பா”
“வண்டிக்காரன்! குதிரை கொட்டிலுக்குப் பக்கத்திலே குடிசை!
அங்குதான் நீயும் வந்திருக்க வேண்டும். அந்தக் கேவலமான
இடத்திலே நீ இருக்கக் கூடாது என்பதற்காகத்தானடா மகனே!
பெற்ற பாசத்தை எல்லாம் அவளும் நானும் அடக்கிக் கொண்டு
இவ்வளவு காலம் உன்னைப் பிரிந்துஇருந்தோம். இப்போது உன்னை
அந்த நரகத்துக்கு அல்லவா அழைத்துப் போக வேண்டி இருக்கிறது.”
“நீங்கள் அங்கே இருக்கும்போது நான் மட்டும் இருக்கக்
கூடாதா அப்பா! மேலும் எனக்கு ஒரு வேலை கிடைக்கிற வரையில்தானே
இந்தக் கஷ்டமெல்லாம். பிறகு நீங்கள் எதற்காக வண்டிக்காரராக
இருக்கவேண்டும், குடும்பத்தைக் காப்பாற்ற நான் எந்தப்
பாடுபடவும் தயாராக இருக்கிறேனப்பா. வேலையும் கிடைத்துவிடும்,
டேவிட் கொடுத்துள்ள சிபாரிசு போதும் நமக்கு...”
“வேலை தயாராக இருக்கிறது மகனே! கௌரவமான வேலை. ஜெமீனிலேயே!”
“பழம் நழுவிப் பாலில் விழுந்தது போலாயிற்று.”
“அப்படிச் சொல்வதற்கில்லை அப்பா! ஜெமீன்தாரர் தமது பேரப்பிள்ளைகளுக்கு,
படிப்பு சொல்லிக்கொடுக்க ஒரு வாத்தியார் தேடுகிறார்.
படித்திருந்தால் மட்டும் போதாது, வெள்ளைக்காரரிடம் இருந்த
அனுபவம் வேண்டும் என்கிறார். சம்பளம் கேட்ட அளவு. ஜெமீன்
மாளிகையிலே தங்கி இருந்து, குழந்தைகளைக் கவனித்துக் கொள்ளவேண்டும்.”
“எனக்கு மிகவும் பிடித்தமான வேலை அப்பா அது, ஏனென்றால்
நான் மேலும் படித்துக் கொள்ள வசதியாக இருக்கும்...”
“அது மட்டுமா...ஜெமீன் மாளிகையில் இருந்து வந்தால், வேறு
பெரிய பெரிய வேலைகள் கிடைக்கவும் வழி சுலபத்திலே கிடைக்கும்.”
“மகிழ்ச்சியாகச் சொல்ல வேண்டிய இந்த விஷயத்தை ஏனப்பா
சோகத்துடன் சொல்லுகிறீர்.”
“சோகமா... வேதனையே அல்லவாபடுகிறேன்... இத்தனை காலமாகத்தான்
பிரிந்திருந்தோமே இனி ஒன்றாக இருந்து வரலாம் என்று எவ்வளவோ
ஆசை, எனக்கும் உன் தாயாருக்கும்.”
“ஜெமீனில் வேலை கிடைத்துவிடும் என்கிறபோது அந்த ஆசை நிறைவேறுகிறது
என்றுதானே அப்பா பொருள்.”
“இல்லையடா மகனே! இல்லை. ஜெமீன் குழந்தைகளுக்கு வாத்தியாராக
நீ அமர்ந்திட வேண்டுமானால் எங்களோடு இருக்க முடியாது...என்
மகன் என்று கூடச் சொல்லிக் கொள்ளக் கூடாது...”
“இது என்ன விபரீதப் பேச்சப்பா... ஜெமீன்தாரர் இதுபோல
ஒரு நிபந்தனையா போட்டிருக்கிறார்.”
“இல்லை. நான்தான் நிபந்தனை போடுகிறேன். நிலைமை அப்படி.
எனக்கு ஒரு மகன் இருக்கிறான் என்பதுகூட ஜெமீன்தாருக்குத்
தெரியாது. சொல்லவில்லை. தெரிந்தால், உன்னை வேலைக்கு வைத்துக்கொள்ள
மாட்டார் – நம்ம வண்டிக்காரனோட மகன் ஜெமீன் குழந்தைகளுக்கு
வாத்தியாரா? கேவலம் கேவலம் என்று கூறுவார். அவருடைய சுபாவம்
அப்படிப்பட்டது. அதனால் நீ என் மகன் என்பது தெரியவே கூடாது.
அப்போதுதான் ஜெமீன் மாளிகையிலே உனக்கு அந்த வேலை கிடைக்கும்.”
சொக்கலிங்கம் அதிர்ச்சி அடைந்துவிட்டான் இந்த நிபந்தனையைக்
கேட்டு. இதற்கு நான் சம்மதிக்கவே முடியாது, வேண்டுமென்றால்
வேறு வேலை தேடிக் கொள்ளலாம், நீங்கள் என்னோடு வந்துவிடலாம்;
என்று கண்டிப்பாகச் சொல்லிவிட்டான்.
சடையப்பன் துளியும் கோபித்துக் கொள்ளவில்லை; முகத்திலே
துக்கம்தான் தோய்ந்திருந்தது.
மறுபடியும் மறுபடியும் அதனையே வலியுறுத்தலானான். அவனுடைய
தழுதழுத்த குரலைக் கேட்டு சொக்கலிங்கம் உருகிவிட்டான்.
இத்தனை வருஷங்கள் எங்களைப் பிரிந்து இருந்து வந்தாய்.
இன்னும் ஓர் இரண்டு மூன்று வருஷம் இருக்கக் கூடாதா அப்பா!
என்று கேட்டு விட்டுச் சடையப்பன் கண்களைக் கசக்கிக்கொண்டது
கண்டு, சொக்கலிங்கம் திடுக்கிட்டுப்போனான்.
“பிரிந்து இருப்பதைக் காட்டிலும் கொடுமையை அல்லவா அப்பா
அனுபவிக்கச் சொல்லுகிறீர்கள். நீங்கள் என் அருகிலேயே
இருப்பீர்கள்; ஆனால் இவர் என் அப்பா என்று நான் சொல்லக்கூடாது
என்கிறீரே... தட்டு நிறைய தித்திப்புப் பண்டம் அடுக்கி
எதிரே வைத்துவிட்டு, சாப்பிடக்கூடாது, பார்த்துக் கொண்டு
மட்டுந்தான் இருக்கலாம் என்கிறீர்களே!”
“பத்தியம் இருக்கச் சொல்கிறேன் மகனே! நாம் நோயாளிகள்;
தரித்திரம் என்ற நோய்! கேவலமான வேலையைச் செய்து வருகிறேன்.
வண்டி ஓட்டிவிட்டு வீட்டுக்குப் போய் இருக்கும் வேலை
கூட அல்லடா மகனே! குதிரைகளோடு குதிரையாக இருக்கிறேன்.
அவள்தானடா மகனே! குதிரை கட்டியுள்ள இடத்தைச் சுத்தம் செய்பவள்;
உன் தாயார்! நீயே சொல்லு இந்த நிலைமையில் உள்ள எனக்கு
நீ மகன் என்று தெரிந்தால், ஜெமீன்தாரர் உன்னை மனம் ஒப்பித்
தமது பேரக்குழந்தைகளுக்குப் பாடம் சொல்லிக் கொடுக்கச்
சொல்லுவாரா! சீமான்கள் வருகிற இடம்! பெரிய பெரிய அதிகாரிகளுடைய
பழக்கம். துரைமார்களின் கம்பெனியில் தொடர்பு. உள்ளபடி
பெரிய இடம். நாகரிகம் மிகுந்த மாளிகை. அங்கு ஒரு வண்டிக்காரன்
மகன், உள்கூடம் கூடப்போக முடியாது, அவர் விரும்புவதோ,
மாளிகையில் இருந்துகொண்டு, ஜெமீன் குடும்பத்தாருடன் ஒன்றாகச்
சாப்பிட்டுக்கொண்டு, குழந்தைகளுக்குப் பாடம் சொல்லிக்
கொடுக்கும் ஆசிரியர்! டேவிட் துரையிடம் பயிற்சி பெற்றவன்
என்ற பட்டத்தை மதிப்பார். நிரம்ப! இவன் படித்திருக்கிறான்.
ஆனால் இவன் என் மகன்! என்று நான் சொன்னால் என்ன எண்ணிக்கொள்வார்.
ஆயிரம் படிப்பு இருக்கட்டும்; ஊர் என்ன சொல்லும். ஜெமீன்தாரர்
வீட்டுக் குழந்தைகளுக்குப் பாடம் சொல்லிக் கொடுக்க வண்டிக்காரன்
மகன்தானா கிடைத்தான் என்றல்லவா. நம்மாலே அந்தக் கேவலத்தைத்
தாங்கிக் கொள்ள முடியாது என்று கண்டிப்பாகச் சொல்லிவிடுவார்.”
“அப்பா! நான் நாலு எழுத்து கற்றுக்கொண்டதே உன்னை மகிழ்விக்க.
உனக்கு மதிப்புத் தேடிக் கொடுக்க என் மகனைச் சாதாரணமாக
எண்ணிக் கொள்ளாதீர்கள். அவன் படித்தவன், மற்றவர்களுக்குப்
படிப்பு சொல்லிக் கொடுப்பவன், நம்முடைய தமிழ் மட்டுமல்ல,
ஆங்கில பாஷை அறிந்தவன், ஆங்கிலேயர்களே அவன் திறமையைப்
பாõராட்டுகிறார்கள் என்றெல்லாம் நீ பேசிப் பெருமைப்பட
வேண்டும் என்பதற்காகத்தானே. அடிக்கடி மாமா என்னிடம் சொல்லுவார்,
“சொக்கலிங்கம்! நமது குடும்பம் ஓரளவு நிலபுலத்தோடு கிராமத்திலே
மதிப்போடு வாழ்ந்த குடும்பந்தான். வகையில்லாத வாழ்க்கை
நடத்தியதாலே சொத்து போய்விட்டது. கிராமத்திலே பெரிய
தனக்காரக் குடும்பமாக இருந்த நாம், நொடித்துப் போய்விட்டோம்.
ஏதோ நான் ஓடி ஆடிப் பாடுபட்டு, நம்ம துரையிடம் வேலைக்கு
அமர்ந்தேன். உன் அப்பா, படாத பாடுபட்டுக் கடைசியில்....
சொல்லக்கூட எனக்குக் கூச்சமாக இருக்கிறது. நம்ம நாலூரில்
திருவிழாவின்போது அவருக்குத்தான் முதல் மாலை போடுவார்கள்.
அப்படிப்பட்டவர் இன்று...சொக்கலிங்கம்! நீதான் நமது குடும்பத்தை
மறுபடியும் நல்ல நிலைமைக்குக் கொண்டு வரவேண்டும்; நாலுபேர்
மதிக்கத்தக்க நிலைமைக்குக் கொண்டுவரவேண்டும் என்றெல்லாம்
சொல்லுவார். கேட்டுக்கொண்டிருக்கும்போதே என் கண்களில்
நீர் துளிர்க்கும். ஓரளவு படித்தாயிற்று, கணக்கு வழக்குப்
பார்க்கத் தெரிந்து கொண்டேன். நல்ல வேலை மட்டும் கிடைத்துவிட்டால்,
நிம்மதியாக வாழலாம். தலைநிமிர்ந்து நீ நடக்கலாம். என்
மகன் உத்தியோகம் பார்க்கிறான் என்று சொல்லிச் சொல்லி
மகிழலாம்...”
“உத்தியோகம் நீ பார்க்கவேண்டும் என்பதுதானடா சொக்கு!
என் ஆசையும். நான் சொல்லுகிற யோசனையும் அதற்காகத்தான்.
ஜெமீன்தார் வீட்டுக் குழந்தைகளுக்குப் படிப்புச் சொல்லிக்
கொடுக்கும் வேலையிலே நீ சேர்ந்து கொண்டால் போதும்,
– எந்தப் பெரிய உத்தியோகமும் உனக்குக் கிடைத்துவிடும்.
அது சாமான்யமான இடமல்ல; வெறும் ஜெமீன் வீடு அல்ல. ஜம்புலிங்க
பூபதி துரைமார்களுக்கு ரொம்பவும் வேண்டியவர். எந்தப்
பெரியதுரை அந்தப் பக்கத்துக்கு வந்தாலும் பூபதி! பூபதி!
என்று இவரைத்தான் சுற்றிச் சுற்றி வட்டமிடுவார்கள். அவர்
ஒரு வார்த்தை சொன்னால் போதும் வெள்ளைக்கார சர்க்கார்
எந்தப் பெரிய உத்தியோகத்தையும் உனக்குக் கொடுப்பார்கள்...”
“ஜெமீன்தாருடைய தயவு இருந்தால் போதும் என்றுதானே அப்பா
சொல்லுகிறாய்; அவரிடம் மனு செய்துகொள்ளலாம். அதற்கு
நான் முழுச் சம்மதம் தெரிவிக்கிறேன். பெரிய வேலை கிடைக்கிற
வரையில், அவர் வீட்டுக் குழந்தைகளுக்குப் படிப்புச் சொல்லிக்
கொடுக்கவும் ஒப்புக்கொள்கிறேன். ஆனால் நீங்கள் போடுகிற
மற்றொரு நிபந்தனைதானப்பா என் நெஞ்சிலே நெருப்பை அள்ளிப்போடுவதுபோல
இருக்கிறது. எப்படியப்பா மனம் இடம் கொடுக்கும். ஏனப்பா
அப்படி மறைந்து வாழவேண்டும். இவர் என் அப்பா என்று சொல்லிக்
கொள்வதற்கு நான் ஏனப்பா கூச்சப்படவேண்டும்...”
“தம்பி நீயும் கூச்சப்படமாட்டாய். எனக்கும் நீ அப்பா!
அப்பா! என்று கூப்பிடக் கேட்பதைவிட இன்பம் வேறு இருக்க
முடியுமா!