அறிஞர் அண்ணாவின் கடிதங்கள்


ஆணை பிறந்தது...!
1

மொழியும் இனமும், அயர்லாந்தில் -
மொழிப் பற்றும் வெறியும் -
இந்தி வெறி -
நேரு கருத்து

தம்பி!

"தாயகத்தை விட்டுப் பிரியப் போகிறேன், நாளைய தினம் என்று வைத்துக்கொள்ளுவோம். அந்த நேரத்தில், நாட்டு மக்களுக்கு என்ன தந்துவிட்டுச் செல்கிறீர் - நாட்டவருக்குத் தாங்கள் அளித்திட விரும்பும் கடைசிச் செய்தி யாது? என்று என்னை வினவிடின், அயரிஷ் இனத்தவராகத் தொடர்ந்து வாழ விரும்பினால், அயரிஷ் மொழியைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும் - என்றுதான் கூறிச் செல்வேன்.''

பிரிட்டிஷ் பிடியிலிருந்து தாயகத்தை - அயர்லாந்து நாட்டை - மீட்டிட, அரும்பாடுபட்ட வீரன், அகில உலகு பாராட்டத்தக்க ஆற்றல் மிக்கோன், திவேலரா இதுபோலக் கூறினான்.

வல்லமை மிக்கவர்கள் இந்தப் பிரிட்டிஷார்! அவர்களின் படை பலம் பயமூட்டுவதாக இருக்கிறது; எதிர்ப்போரைக் கொன்று குவிக்கின்றனர்; நாடே நாசப் படுகுழியில் தள்ளப் படுவதாயினும் சரி, எங்கள் ஆதிக்கத்தை மட்டும் விட மாட்டோம் என்று கொக்கரிக்கின்றனர்; கொக்கரிப்பது மட்டுமல்ல, கூசாது கொடுமை பல செய்கின்றனர்; இவர்களை எப்படி விரட்டுவது, வீழ்த்துவது? தாயகத்தை எங்ஙனம் விடுவிப்பது என்று மக்கள் மருண்டுகிடந்தபோது, "சாகத்துணிந்திடின், நாட்டினரே! நாடு வாழும்! வாழ வேண்டுமே என்று அலைந்திடின், நாடு சாகும்!'' என்றுரைத்து, வீர உணர்ச்சியை ஊட்டி, மக்களைத் திரட்டி, விடுதலைப்போர் நடாத்தி, வெற்றி பெற்ற மாவீரன், திவேலரா. அந்த விடுதலை வீரன், கூறுகிறான், மொழி காப்பாற்றப்பட வேண்டும் இனம் அழிந்துபடாமலிருக்க வேண்டுமானால் என்று.

ஆமாம்! உண்மைதானே அது. ஒவ்வோர் இனத்துக்கென ஒவ்வோர் மொழி இயற்கையாக அமைந்திருக்கிறது. அந்த மொழி, "வாழ்க்கை வழி'யை அந்த இன மக்களுக்கு, அமைத்துத் தருகிறது, ஒராண்டு ஈராண்டல்ல; பல தலைமுறைகளாகச் சிறுகச் சிறுகச் சமைக்கப்பட்டுக், கூட்டாகி, ஒரு பேருரு ஏற்பட்டுவிடுகிறது. அந்த மக்கள், உலவும் நாடு, வேட்டையாடி மகிழ்ந்திடும் காடு, நீந்தி விளையாடும் ஆறுகள், உழுது பயன்காணும் வயல்கள், உழைப்புடன் மதி நுட்பத்தை இழைத்திடும் தொழிலிடங்கள், குலவி இன்புறும் மனைகள் - இங்கெல்லாம், எண்ணங்களை, எடுத்துக் கூறிக் கூறியும், பிறர் கூறிடக் கேட்டும், கலந்துரையாடியும், கருத்துக்களை உருவாக்கி, பிறகு அதனைக் காப்பாற்றிடவும், வளர்த்திடவும், வழிவகை கண்டறிகின்றனர். இந்தச் சீரிய செல்வத்தை, மக்கள் பெற உறுதுணையாக நிற்பது, அவர்க்கென அமைந்த மொழி. எனவேதான், மொழி என்பது வாழ்க்கை வழியினை அமைத்தளிக்கிறது என்று அறிவாளர் கூறுகின்றனர்.

தட்பவெட்ப நிலைக்கேற்ப, மொழி உருவாக்கப்படுகிறது.

பலப்பல நூற்றாண்டுகளாக, ஒரு குறிப்பிட்ட மக்கட் தொகை, அந்த மொழி மூலம், தங்கள் எண்ணங்களை எடுத்தியம்புவதாலும், கேட்டுப் பயன் பெறுவதாலும், கருத்துக்கள் உருவாகின்றன. அந்தக் கருவூலம், அந்த இனம், தேடிப் பெற்றது, பிறகு உலகுக்கு அளிப்பதுமாகும்.

இதனை அறிந்ததால்தான், மொழி, இனம், பண்பாடு, என்பவைகள் ஒன்றுக்கொன்று தொடர்புடையன என்கின்றனர்.

மொழி உணர்ச்சி ஒரு இன மக்களுக்கு உயிரூட்டம் தருகிறது.

அந்த இனத்துக்கென அமையும், தனி இயல்புகள், சிறப்புகள், அந்த மொழிவழி நின்று பெற்றது. எனவே, அந்த மொழியை இழந்துவிட்டால், அந்தத் தனி இயல்புகள், சிறப்புகள், மங்கி மடிந்துபோகும்; அல்லது வேறு பிறவற்றுடன் கலந்து, உருவம் கெட்டுப், பலன் பாழ்பட்டுப் போய்விடும். இதனை நன்குஆய்ந்தறிந்தவர்களே, எந்த ஒரு இனமும், தன் தாய் மொழியினை அழிந்துபட விடக்கூடாது என்று கூறினர்,

அயர்லாந்து, பிரிட்டிஷ் பிடியில் இருந்தது. கேடு பல சூழ்ந்தன; வறுமை கொட்டிற்று; பஞ்சம் தலைவிரித்தாடிற்று; உழவு அழிந்தது; தொழில் நசிந்தது; வாணிபம் பாழ்பட்டது.

எனின், எமக்குச் சோறு வேண்டும்! வேலை வேண்டும்!! என்று அயர்லாந்து நாட்டு மக்கள், கேட்டனரோ எனின், இல்லை. எமக்கு எமது நாடு வேண்டும்! நாட்டு ஆட்சி எம்மிடம் இருக்க வேண்டும்! என்றுதான் கேட்டனர். ஏனெனில், வேறோர் நாட்டின் பிடியிலிருக்கும்போது, பசியும் பஞ்சமும் பல்வேறுவிதமான கொடுமைகளும் தாக்குவது மட்டுமல்ல, இன இயல்பு அழிக்கப்பட்டுப் போகிறது! அந்த இன இயல்பு அழிந்துவிட்டால், பிறகு என்றென்றும் நிமிர்ந்து நின்று, உரிமையைக் கேட்டிடும் துணிவே அற்றுப்போய்விடும். வயிற்றுக்குச் சோறு மட்டும் கிடைத்தால் போதும் என்ற விதமான நிலை ஏற்பட்டுவிடும்.

தம்பி! கொள்ளும் புல்லும் நிரம்பத் தந்திட்டாலும், காளை கட்டு அவிழ்த்துக்கொண்டு, தன்னிச்சையாக ஓடத்தான் துடிக்கும்; பார்த்திருக்கிறாய் அல்லவா! வயிறு நிரம்பிவிட்டது, இனி நமக்கு என்ன கவலை என்று இருந்துவிடாது; எவனோ கட்டிப் போட்டு வைத்திருக்கிறான்; இந்தக் கயிறு அளவுக்குத்தான், நாம் உலவ முடிகிறது; ஏன், கட்டுண்டு கிடக்க வேண்டும்; நம்மைக் கட்டிப் போட்டுவிட்டு, இவனென்ன நமக்குப் புல்லும் கொள்ளும் தருவது; நமக்கென்ன, நமது தேவைக்குப் போதுமான தீனியைத் தேடிப் பெற்றுக்கொள்ள ஆற்றல் இல்லையா; எவ்வளவு பசுமை நிரம்பிய இடங்கள் உள்ளன; அங்கெல்லாம் ஓடித்திரிந்து, தீனி தின்று மகிழத் தெரியாதா? கட்டிப் போட்டுவிட்டானே! - என்று கூறுவது போலக் காளை துள்ளுகிறது, நெம்புகிறது; வாலால் அடித்துக் காட்டுகிறது, காலால் தரையைக் கிளறுகிறது, கிட்டே சென்றால் முட்டித் தள்ளவே வருகிறது அல்லவா?

அந்தக் காளையே, கிழடு தட்டியதாகிவிட்டால், என்ன செய்யக் காண்கிறாய்? போட்டதைத் தின்றுவிட்டு, அசை போட்டுக்கொண்டு கிடக்கிறது; தட்டித் தட்டித்தான், எழுந்தே நிற்கச் செய்ய முடிகிறது. காளைப் பருவத்து முடுக்கு மடிந்துபோய் விடுகிறது. நமக்கு இனி இதுதான் கதி என்ற தீர்மானத்துக்கு வந்துவிடுகிறது.

ஆதிக்கத்தைப் புகுத்துவோர், விடுதலை உணர்ச்சி வீறுகொண்டு எழுந்திடும் வேளையில், கட்டிப்போட்டோ, வெட்டிச் சிதைத்தோ தடுத்து விட்டால், பிறகு கிழடுதட்டிய மாடு பெற்றிடும் இயல்புபோல், அடிமைப்படுத்தப்பட்ட மக்கள் ஆகிவிடுவர்! போட்டதைத் தின்றுவிட்டு, சொல்வதைச் செய்துகொண்டு கிடப்பர்! - என்று எண்ணுகின்றனர்.

ஆனால், "மொழி' இருப்பதால்தான் எத்தனை எத்தனை காலம், ஆதிக்கக்காரன், தன்னிடம் உள்ள எல்லாவிதமான படைக்கலன்களையும் கொண்டு அடக்கி ஒடுக்கி வைத்தாலும், அடக்கி வைக்கப்பட்ட மக்கள், விடுதலை உணர்ச்சியை அடியோடு இழந்து விடுவதில்லை விடுதலைப் போர் தொடுத்திடும் துணிவு பிறவாமலிருக்கக் கூடும் - ஆனால் அந்த உணர்ச்சி அழிந்துபடுவதில்லை. மொழிதான் அதற்குக் காரணம்.

எண்ணங்களை வெளிப்படுத்திக்கொள்ள, மனதிற் பட்டதை எடுத்தியம்ப, நமது கதி இதுதானா என்றென்றும் என்று கேட்டிட, இவ்விதமா நமது முன்னோர்கள் இருந்தனர் என்று பேச, இடுக்கண் வந்த காலை அவர்கள் யாது செய்து இன்னலைப் போக்கிக்கொண்டனர் என்பது குறித்துக் கலந்துரையாட மொழி பயன்படுகிறது.

அவ்வப்போது தோன்றும், எண்ணங்களைமட்டும் பெறுவது போதும் என்றால், எந்த மொழியைக் கற்றுக்கொண்டாலும், அம் மொழியில் பேசலாம்; போதும். ஆனால், விடுதலை உணர்ச்சிபெற, அவ்வப்போது தோன்றும் உணர்ச்சிமட்டும் போதாது: அடிமைப்படுவதற்கு முன்பு, உரிமை பெற்றவர்களாக இருந்தபோது, உலகம் மெச்ச வாழ்ந்தபோது, அந்த மக்களின் முன்னோர்கள், எங்ஙனம் இருந்தனர் என்பது தெரிய வேண்டும்; அது குறித்துப் பேசவேண்டும்; பாரதியார் கூறியபடி, அப்போதுதான் "எங்கள் தந்தையர் நாடென்ற பேச்சினிலே ஒரு சக்தி பிறக்குது மூச்சினிலே!' என்ற நிலை கிடைக்கும். அந்த நிலையை அவரவர் தத்தமது தாய்மொழி மூலமாகவே பெற முடியும்; எனவே, தாய்மொழி காப்பாற்றப்பட வேண்டும்.

என்ன அண்ணா! இது குறித்து இத்துணை விளக்கம் தேவையா? எவர் அறியார் இதனை! மந்த மதியினனும் மறுத்திடமாட்டானே! மொழியன்றோ, ஒரு இனத்தின் விழி - அதனை இழந்திட, எந்த இழி மகனும் எண்ணங்கொள்ள மாட்டானே! - என்று கேட்பாய்.

கடைசிச் செய்தி தருவதானால், அயர்லாந்து வாழ அயரிஷ் மொழியைக் காத்து நில்லுங்கள் என்று திவேலரா கூறியதை நீ உவகை பொங்கிடும் நிலையில் ஏற்றுக்கொள்ளுவாய், என்பதை நான் நன்கு அறிவேன். தம்பி! அந்த ஆற்றல்மிக்கோன் கூறிய அறிவுரையை, மறுத்திடக்கூடப் போமோ என்று நீ, கேட்பாய் என்பதையும் அறிவேன். ஆனால் மொழியைக் காப்பாற்று, அப்போதுதான், உன் நாடு உன்னுடையதாகவும், உன்னிடமும் இருக்கும் என்று திவேலரா கூறினாரே, அதுபோன்ற உணர்ச்சி மிகு அறிவுரையை எள்ளி நகையாட, எதிர்த்துப் பேசிட, ஒரு மகானுபாவர் இருக்கிறார், நமது மண்ணில். இங்கா? என்கிறாயா? ஆமாம் தம்பி! இங்குதான்! ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இணையற்ற இலக்கியம் சமைத்தனரே, இதே இடத்தில்தான், இதே தமிழகத்தில்தான். இப்போதா? என்கிறாயா? ஆமாம், தம்பி! வேதனை நிரம்பிய உண்மையை நான், உரைக்கிறேன், மொழி, இனம், நாடு, விடுதலை - எனும் உணர்ச்சிகள், உன் உள்ளத்தில் கொழுந்து விட்டெரியும், இப்போதுதான், இருக்கிறார் அந்தப் புண்யவான்!! உன்னையும் என்னையும், நமக்கு உடன் இருந்து பணியாற்றும் பல இலட்சம் பண்பு நிறை வீரர் குழாத்தையும், இளித்தவாயர் என்றும், ஏதும் செய்ய இயலாதார் என்றும், பேசிக்கொண்டும் ஏசிக்கொண்டும் உலா வருகிறார், அந்த உத்தமர்!

திவேலரா சொன்னார், "மொழியை இழந்திடாதீர், பிறகு விடுதலைக்கான வழியே அழிந்துபடும்'' என்று.

இவர் கூறுகிறார், "இதென்ன பித்தம்! என் மொழி! நன் மொழி! என்ற பேச்சு! தாய்மொழி! தந்தை மொழி! என்ற வாதம்! இதுதான் படிப்பேன், இதைப் படிக்க மாட்டேன் என்ற பிடிவாதம்! இந்த மொழிவெறி ஆகாது'' என்கிறார்.

உலகம் மெச்சுகிறது, திவேலராவை!

உடனிருப்போர் மெச்சுகின்றனர், தாய் மொழியையும் இழித்துப் பேசிடும், இந்த மா மேதையை!!

எந்தப் பித்தர் விடுதியில் கண்டாய் அப்படிப்பட்ட சத்தற்ற ஜென்மத்தை என்று கேட்கிறாய், தம்பி! கோபத்துடன்! ஆனால், நான், வருத்தத்துடன் அல்லவோ, பதிலளிக்க வேண்டி இருக்கிறது; இத்தகைய இழிமொழி பேசித் திரிபவர் மேலிடத்தில் அல்லவா இருக்கிறார்! காமராஜர்! தம்பி!முதலமைச்சர்! அவரல்லவா பேசுகிறார், நமக்கு மொழி வெறியாம்! தமிழ்! தமிழ்! என்று கூவித் திரிகிறோமாம்! எந்த மொழியாக இருந்தால் என்ன, என்கிறார்!!

மொழியைக் காத்திடின் உரிமை வாழ்வு நிலைத்திடும் என்று பேசிடும் திவேலரா, அயர்லாந்து நாட்டில்!

மொழி காத்திடப் படை திரண்டு நிற்கும் தமிழ் நாட்டிலே, அரசோச்சுகிறார், மொழிவழி கூடாது என்று பேசிடும் காமராஜர்.

எத்தனை எத்தனையோ இன்னல்களைத் தாங்கிக் கொண்டோம்; கொற்றம் இழந்தோம், கோட்டை இழந்தோம்; வாணிபம் இழந்தோம், விருது பலவற்றை இழந்து நிற்கிறோம்; தொழில் வளம் இழந்தோம், தோழர்களை இழந்தோம்; கலம் இழந்தோம்; காவியம் இயற்றும் திறம் இழந்தோம்; இத்தனை இன்னல்களும் தாங்கிக் கொண்டோம்; ஆனால், தமிழ் மொழி யிடம் தமிழன் காட்டவேண்டிய பற்றினை, தாய்மொழிக்குப் பேராபத்து எனின், துடித்தெழுந்து போரிடும் வீரத்தினை, தாய்மொழியைத் தாழ்த்திப், பேய்மொழி ஒன்றினைப் புகுத்திடும் கொடுமையை எதிர்த்திடும் வீரத்தினை, ஒரு தமிழன் அரசாளும் தமிழன், தமிழ் நாட்டில், நாம் உயிருடன் உலவிக்கொண்டிருக்கும் நாட்களில், மொழி வெறி என்று கேலி பேசி இகழ்வது, அதனை நாம் கேட்டுக்கொண்டு நிற்பது, எனும், இந்தக் கொடுமையையுமா தாங்கிக்கொள்ள வேண்டும்!

"ஏ! ஏ! தாங்கிக்கொள்ளாமல், என்ன, தாவிக் குதிப்பீர்களா?'' - என்று பேசுகிறார், காமராஜர். காவியத் தமிழ் உலவிய தமிழகத்தில், இன்று இந்த "காடி'த் தமிழ் வாடை கிளப்புகிறது. "காடி' என்றுரைத்த காரணம், தம்பி! காமராஜர் கூறிடும் அதி அற்புதமான வாதம் இருக்கிறதே, மொழி வெறி கூடாது என்பது, அது நாம் முன்பே பல முறை வேறு சிலர், பேசிப்பேசி, கேட்டுக்கேட்டுப் புளித்துப் போனது! பழைய சரக்கு! வெறும் காடி!!

எது பற்று, எது வெறி - என்பதைக் கண்டறிய, யார் இந்தக் காமராஜருக்கு, அதிகாரம் அளித்தனர்? ஓட் அளித்தனர், மேலிடம் அமர! மொழிபற்றிய "முடிவுரை' கூறவா!! கன்னித் தமிழ்பற்றி, இன்னும் நடத்தப்படவேண்டிய ஆராய்ச்சி ஏராளம்என்கின்றனர், கற்றறிந்தோர், வித்தகர், புலவர் பெருமக்கள். கானூர் படையாச்சியையும், வானூர் ரெட்டியாரையும், மேனூர் முதலியாரையும், பள்ளப்பட்டி மரக்காயரையும், பாப்பாரப்பட்டி கவுண்டரையும், வாடிப்பட்டியாரையும், வத்தலகுண்டாரையும், தேடித்தேடிப் பிடித்து வைத்துக்கொண்டு, தேர்தல் வேலையைக் கவனிக்கக் கற்றுக்கொண்ட இவர், தமிழ் மொழியின் தொன்மை மென்மை பற்றியும், அதற்கு இன்று உள்ள நிலைபற்றியும், அறிந்திட வாய்ப்பு ஏது? நாலைந்து புலவர்கள், நான் கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வருகிறார்கள் என்பாரேல், நாடாள்கிறார் என்பதால் நாடி வருபவர்களேயன்றி, ஏடாளும் தகுதி பெற்றவர் என்பதால் அல்ல, என்றன்றி, வேறென்ன பதில் அளிப்பது.

பற்று - வெறி - இந்த இரு நிலைகளுக்கும் இலக்கணம் காணல் எளிதல்ல - அளவு காட்டலும் ஆகும் காரியமல்ல.

இவருக்கு, நாம் மொழிக்காக வரிந்துகட்டி நிற்பது, பிடிக்கவில்லை - எனவே, அதனை வெறி என்கிறார். அவ்வளவே தவிர, இவரென்ன, உணர்ச்சிகளை வகைப்படுத்தி, உரைத்துப் பார்க்கவோ, நிறுத்துப் பார்க்கவோ, தனியானதோர் முறை கண்டறிந்த வித்தகரோ? எவரும் கூறார். இவரே கூறிடக் கூசுவார். எனினும், முதலமைச்சர் என்ற நிலைபெற்றதால், எதையும் கூறிடும் வாய்ப்புக் கிடைக்கிறதல்லவா! அதனால் அடித்துப் பேசுகிறார். கடன்பெற ஒரு கனவான் வீட்டுக்குச் சென்றகாலை. பித்துப்பிடித்த அவன் மகன் தாவிவந்து காலையோ, கன்னத்தையோ கடித்தால், ஏழை என்ன செய்ய முடிகிறது? முதலிலேயே வட்டி செலுத்துகிறோம் என்று எண்ணிக் கொண்டு விடுகிறான்.

நாடாள்பவர் எது பேசினாலும், தாங்கிக்கொள்ள வேண்டி ஏற்படுகிறது. பூங்காவில் அமர்ந்திருக்கும்போது, புள்ளினம் எச்சமிட, அது சட்டையில் வீழ்ந்து கெடுக்கிறது - என்ன செய்ய முடிகிறது? எழுந்து செல்கிறோம் வேறிடம் தேடி. எச்சமிட்டு நம்மை வேறிடம் செல்லச் செய்ததால், அந்தப் புள்ளினம், நம்மை விரட்டிய வீராதி வீரன் என்ற விருது பெறவா, தகுதி அடைகிறது!

நாடாளத்தான் நான் வந்தேனேயன்று, நாவாள அல்ல; அது தன்னிச்சையாக, ஏதேதோ செய்யும் என்றுரைப்பது போல, அவர், ஏதேதோ பேசுகிறார்.

பள்ளிக்கூடங்கள் கட்டினேன் என்கிறார் - காலஞ்சென்ற ராஜா சர். அண்ணாமலைச் செட்டியார் ஒரு முறைகூடச்சொன்னதில்லை, நான் ஒரு பல்கலைக் கழகம் அமைத்தேன் என்று - 80 கோடி ரூபாய் பெறுகிறது துரைத்தனம் - ஆனால், ஏதோ, எட்டுத் தலைமுறைக்கு முன்னாலே, இவர் குடும்பத்தார், ஈட்டிய பெரும்பொருளை எடுத்துச் செலவிடும் வள்ளல்போல, பள்ளிக்கூடங்கள் கட்டினேன் என்கிறார்! சரி! என்னமோ, ஒருவிதமான சபலம், பேசி அற்ப சந்தோஷத்தை அனுபவித்து விட்டுப் போகட்டும் என்று கேட்போர் எண்ணிக்கொள் கின்றனர். அந்த அளவோடு நில்லாமல், மொழி குறித்துமா, "கருத்துரை' வழங்க முன்வர வேண்டும்!!

தமிழகத்தில் இன்று காணப்படுவது, மொழி வெறி அல்ல! வெறியரிடமிருந்து மொழியைக் காப்பாற்றும் பணியில், தமிழரில் தகுதி படைத்தோர் ஈடுபட்டுள்ளனர்.

"கடைசிச் செய்தி யாது தருகிறீர்?' என்று கேட்டால், அயர்லாந்து மக்களே! ஒற்றுமையாக இருங்கள்! வல்லமையோடு இருங்கள்! உழைத்துச் செல்வத்தைத் தேடுங்கள்! தேடியதை மற்றையோருக்கும் தாருங்கள்! கல்விச் செல்வத்தை மறவாதீர்கள்! ஒழுக்கத்தை மறவாதீர்கள்! கர்த்தரை வழிபடுங்கள்! - என்ற எத்தனை எத்தனையோ கூறியிருக்கலாம், திவேலரா. ஆனால் அவர், அயரிஷ் மொழியைக் காப்பாற்றிக் கொள்ளுங்கள். அப்போதுதான், அயரிஷ் நாடு நிலைக்கும் என்று கூறினார். நல்லவேளை, அவர் நாட்டிலே ஒரு காமராஜர் கிளம்பவில்லை - மொழிவெறி கூடாது என்று பேச!! ஆனால், அயர்லாந்து நாட்டின்மீது ஆதிக்கம் செலுத்தும் நோக்கம் கொண்ட பிரிட்டிஷ் எதேச்சாதிகாரி, திவேலரா பேச்சினைக் கேட்டு என்ன சொல்லுவான். செச்சே!! இந்தத் திவேலராவுக்கு என்ன புத்தி இப்படிக் கெட்டுவிட்டதே! மொழி வெறியைக் கிளறுகிறாரே!! - என்றுதானே கூறுவான்.

அங்ஙனமெனின், காமராஜர், தமிழரைத் தாசராக்கிடும் எதேச்சாதிகாரியோ, எனில் அல்ல! அல்ல! அவ்வளவு கடினமான வேலையில் அவர் ஈடுபட்டில்லை; தமிழரைத் தாசராக்கத் திட்டமிட்டு, இந்தியைப் புகுத்திடும் வடநாட்டு இந்தி எதேச்சாதிகாரிகளுக்கு, இவர் "எடுபிடி' வேலை பார்த்தால் போதும் என்றிருக்கிறார். இவர் பேசுகிறார், வெறி கூடாது என்று.

ஆனால், உண்மையில் என்ன நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.

ஆதிக்க வெறிபிடித்தவர்கள், இந்தி மொழியை அகில - இந்தியாவுக்கும் ஆட்சி மொழியாக்கிவிட்டதாக அறிவித்து விட்டார்கள்.

பிரிட்டிஷ் ஏகாதிபத்தியப் பிடியிலிருந்து விடுபட்டோம் என்ற களிப்பும், விடுதலை பெற்றதும், செயல் முறைகளை ஒழுங்குபடுத்திக்கொள்ள வேண்டும், அரசியல் சட்ட திட்டத்தை விரைவாகச் சமைத்திடும் திறம் இருப்பதை உலகுக்குக் காட்ட வேண்டும் என்ற ஆர்வமும், ததும்பிக் கொண்டிருந்த நேரத்திலே, மொழிபற்றி முடிவு எடுத்தனர். இந்தியே, ஆட்சி மொழியாக இருத்தல் வேண்டுமென்று தீர்மானித்தனர்.

அப்போதேகூட, குமுறலும், கருத்து வேற்றுமையும் எழுந்தன. ஆனால், விழாக்கோலம், விவாதத்தைக் குறைத்து விட்டது. ஆபத்தின் அளவும் வகையும் பற்றி அன்று அவ்வளவு தெளிவாக அறிந்துகொள்ளப் பலரால் முடியவில்லை. வெள்ளைக்காரன் வெளியேறிவிட்டான்; இனி நாமே வைசிராய், நாமே கவர்னர், நமக்கே மந்திரி வேலைகள் என்ற இந்த எண்ணமே மேலோங்கி நின்றது. அந்த மகிழ்ச்சி, மற்ற எதுபற்றியும் சிந்திக்க இடமளிக்கவில்லை. இந்தி ஆதிக்கக்காரர்கள், தங்கள் காரியத்தைச் சாதித்துக்கொண்டனர்.

ஆனால், அப்போதும்கூட, தமிழகத்திலே, திராவிட இயக்கம் மட்டும் விழிப்புணர்ச்சியுடன் இருந்தது; வர இருக்கும் ஆபத்தை எடுத்துக் காட்டி எச்சரித்தவண்ணமிருந்தது.

"சுதந்திரத்தை'ப் பெறுவதற்கு முன்பே, காங்கிரஸ் கட்சியினர், பதவியைச் சுவைத்தனர்; அந்த நாளில் ஆச்சாரியார் இந்தி மொழியைக் கட்டாய பாடமாக்கியதும், கடும் எதிர்ப்பு மூண்டதும், ஆயிரவர் சிறை சென்றதும், இரு காளையர் சிறையில் மாண்டதும், தமிழகத்தின் வீர வரலாற்றுச் சுவடியிலே இடம் பெற்றுள்ளன.

அன்றெல்லாம் இந்தி எதிர்ப்பு என்பது, ஏமாற்றமடைந்த அரசியல்வாதிகளின் "கைவரிசை' என்று பேசப்பட்டது; ஆச்சாரியார் அப்படிச் சொல்லித்தான், நிலைமையை விளக்கப் பார்த்தார்; இன்றோ, அவரே இந்தி எதிர்ப்பாளராகிவிட்டிருக்கிறார்.

தம்பி! இருபது, பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பெல்லாம், நீ, கேட்டதுண்டோ இல்லையோ, நானறியேன் - இந்தியை இன்று ஆட்சி மொழி என்றல்லவா சொல்கிறார்கள்; அப்போதெல்லாம், இந்தியை தேசிய மொழி என்றுதான் சொல்வார்கள்; தட்டித் தட்டிப் பேசுவார்கள்.

தமிழனுக்கு, இந்தியோ, வெறெந்த மொழியோ, தேசிய மொழியாகாது! - என்பதற்கான காரணங்களைக் காட்டி, தீவிரமான பிரச்சாரம் செய்து, கிளர்ச்சிகளை நடத்தி, சிறை சென்று பல்வேறு தொல்லைகளை நாம் தாங்கிக்கொண்ட பிறகு, இந்தி ஆதரவாளர்களின் தலைக்கனம் குறைந்தது - இப்போது மெத்த நாவடக்கத்துடன், இந்தியாவில் 14 தேசிய மொழிகள் உண்டு, இந்தி அதிலே ஒன்று; ஆனால், மிக அதிகம்பேர் பேசும் மொழி; எனவே, அது பொது மொழி, ஆட்சி மொழி - என்று இப்போது பேசுகிறார்கள்.

இந்தி ஆதிக்க நோக்கத்தை அவர்கள் விட்டுவிடவில்லை; ஆனால் முறையை, பேச்சை மாற்றிக்கொண்டனர்.

தமிழர் தவிர மற்றவர் மொழி - இனம் - பண்பாடு - என்னும் தொடர்புபற்றி அதிகக் கவலையும் பொறுப்பும் காட்டவில்லை. இங்கோ, ஆர்வத்தீ என்றுமே அணைந்ததில்லை, ஆச்சாரியார் முயன்று பார்த்துத் தோற்றார்! ஆள்வது யார் என்று பார்த்துவிடலாம் என்று ஆர்ப்பரித்தார்! நாமல்லவா, வெள்ளைக்காரரை எதிர்த்தவர்கள் - மொழிக்காக வாதிடும் இவர்கள் போரிட வல்லவர்களல்ல; அடக்குமுறையைத் தாங்க மாட்டார்கள், என்று தப்புக் கணக்குப் போட்டார்; தடியடி தந்தார்; மண்டைகள் உடைந்தன, மனம் உடையவில்லை; மருண்டார்; ஓடிவந்த இந்திப் பெண்ணே! கேள்! நீ, தேடிவந்த நாடு இதல்லவே! - என்று பாடினர், களிநடமாடினர், தமிழர் கட்டாய இந்தி ஒழிந்தபோது.

அந்தச் சம்பவத்தை அறியாததால், காமராஜர், இன்று ஆர்ப்பரிக்கிறார்; இந்தி எதிர்ப்புக் கிளர்ச்சியா? செய்யட்டும், பார்க்கலாம்! - என்கிறார்; துப்பாக்கி இருக்கிறது, தோட்டாக்கள் உள்ளன என்று மிரட்டுகிறார்.

இரத்தக் கரைபடிந்த கரம்! ஈரமற்ற நெஞ்சு! விளக்கம்பெற மறுக்கும் இயல்பு! அதிகார போதை! - இவ்வளவு காமராஜர் கட்சியிடம் நிரம்பி இருப்பது தெரியும். தெரிந்தும், குமாரபாளையத்தில், நமது பொதுக்குழுவில், இந்தியை எதிர்ப்பது என்று முடிவு செய்திருக்கிறோம்.

ஆணைக்காகக் காத்திருந்த அருமைத் தம்பி! ஆணை பிறந்து விட்டது - ஆகஸ்ட்டு இறுதியில், உன் ஆற்றலுக்கு விருந்து, வாய்ப்பு!