அறிஞர் அண்ணாவின் கடிதங்கள்


அடக்குமுறை - குறள் - சிறை நிலை!
1

தம்பி!

வேலூர் சிறையில் நாங்கள் இருந்த பகுதியில், நூற்றுக்கணக்கான கிளிகள்! பெரிய பெரிய மரங்கள் அங்கு. அவைகளிலே பொந்துகளை அமைத்துக்கொண்டு, ஏராளமான கிளிகள் இருந்து வந்தன. கும்பல் கும்பலாகக் கிளம்பி, கிறீச்சிட்டபடி, அந்தக் கிளிகள் ஒரு இடத்திலிருந்து மற்றோர் இடத்துக்கு பறந்துபோகும் அழகை, நாளெல்லாம் பார்த்துக் கொண்டே இருக்கலாம். மாலை வேளைகளில் நண்பர்கள் வடிவேலு, ராஜகோபால் ஆகியோருடன் உலவும்போது, கிளிகளைக் கண்டு மகிழ்வோம்.

உட்பக்கம் உள்ளனவோ என்னவோ, இங்கு கிளிகளே இல்லை.

இத்தனைக்கும் பெரிய அரசமரமும், வேம்பும் இங்கு உள்ளன; கிளிகளைக் காணோம்!

வேலூர் சிறை, ஊருக்கு வெளியே, ஒரு சிறு குன்றுக்கு அருகே அமைந்திருப்பதால், சிறைக்குள்ளே, நிறைய மரங்கள் உள்ளன. நான்கூட, ஒரு அரசங்கன்று நட்டு வைத்தேன்; அது நன்றாக வளர்ந்திருப்பதாக, பாதுகாப்புச் சட்டப்படி கைது செய்யப்பட்டு, சில மாதங்கள் அதே வேலூர் சிறையில் இருந்துவிட்டு வந்த, கம்யூனிஸ்டு நண்பர் அனந்தநம்பியார் என்னிடம் சொன்னார்.

சென்னைச் சிறை, நெருக்கடி நிரம்பிய ஊர்ப்பகுதியில் இருக்கிறது. ஆகவே, அது ஆட்களை அடைத்துவைக்கும் கிடங்காக மட்டுமே இருக்க முடியும்.

காக்கைகளை மட்டுமே கண்டு சலித்துப்போனேன் - அன்பழகன்தான், ஒரு மாலை, இரண்டு மைனாக்கள் இருப்பதைக் காட்டினார். ஒவ்வொரு மாலையும், அவைகளைக் காண்பதில் சில நிமிடங்களைச் செலவிட்டு, மகிழ்ச்சி அடைகிறேன்.

கிளிகளை வளர்ப்பதில், ஆயுட்கால தண்டனை பெற்ற கைதிகளுக்கு, சிறிது சலுகை காட்டப்படுகிறது என்று தோன்றுகிறது, வேலூரிலும் பார்த்தேன், இங்கேயும் முன்பு பார்த்திருக்கிறேன். நீண்ட காலத் தண்டனை பெற்ற சிலர், கிளிகளை வளர்க்கிறார்கள், வேலூரில் ஒரு கைதி அணில் வளர்த்துக்கொண்டிருந்தார் - மணி! மணி! என்று அந்தக் கைதி குரல் கொடுத்ததும், அந்த அணில் மரத்திலிருந்து வேகமாக இறங்கி ஓடி வந்து, அந்தக் கைதியிடம் விளையாடும் விதமாகப் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது.

இன்று இரவு, இரண்டு துணைகள் - தோழர்கள் பொன்னுவேல் - வெங்கா.

கடந்த பொதுத்தேர்தல், வரப்போகிற பொதுத்தேர்தல், தொகுதிகளின் அமைப்புகள். நிலைமைகள் ஆகியவைபற்றிச் சிறிதுநேரம் பேசிக்கொண்டிருந்தோம்.

பொதுவாக, அரசியல் துறையில் காட்டுத்தனம் மேலோங்கிக் கொண்டு வருவதுபற்றி, காலையில் மதியழகனுடன் பேசிக் கொண்டிருந்தேன். நண்பர் கே. எம். பாலசுப்பிரமணியம் எழுதிய தென்னாட்டுப் பிரமுகர்கள் என்ற ஆங்கிலப் புத்தகத்தை அவர் படித்துக்கொண்டிருந்தார். அதையொட்டி அந்தப் பேச்சு வளர்ந்தது. அந்த நாட்களிலே இருந்த அரசியல் பிரச்சார முறைக்கும் இப்போது அரசியல் பிரச்சாரத்திலே தரம் கெட்டுக்கொண்டு வருவதுபற்றியும் பேசிக்கொண்டிருந்தோம். பொன்னுவேல், அடுத்து வரப்போகும் பொதுத்தேர்தல் குறித்துப் பேசியபோது, தனது பிடியை இழந்துகொண்டுவரும் ஆத்திரத்தில், காங்கிரஸ் கட்சியினர், வரப்போகும் பொதுத் தேர்தலில் என்னென்ன காட்டுமுறைகளைக் கட்டவிழ்த்துவிடப் போகிறார்களோ என்று எண்ணி ஆயாசப்பட்டேன்.

பிறகு, ஆப்பிரிக்க நாட்டு, "ஜுலு' இன மக்களைப்பற்றிய தகவலைப் பின்னணியாகக்கொண்ட ஒரு கதைப் புத்தகத்தைப் படிக்க ஆரம்பித்தேன்.

ஜுலு மக்களுக்குள் மூண்டுவிடும் பகை, நடைபெறும் போர், வெட்டி வீழ்த்துவது, கொளுத்தி நாசமாக்குவது, பெண்களை இழுத்துச் செல்வது, மாடு கன்றுகளை மடக்கிக் கொண்டுபோவது போன்ற சம்பவங்கள் நிரம்பிய புத்தகம் இது. ஒரு அரை மணி நேரத்துக்குள், நிரம்ப இரத்த வெள்ளம்! இன்றைக்கு இதுபோதும் என்று ஆகிவிட்டது - புத்தகத்தை மூடிவைத்துவிட்டு, நண்பர்களைப் பார்த்தேன் - அயர்ந்து தூங்கிக்கொண்டிருக்கிறார்கள்! நானும் முயற்சிக்கப் போகிறேன் - அவர்களுக்குச் சமமாக ஆக முடியவே முடியாது. என்றாலும், ஓரளவுக்காகிலும், பார்க்க வேண்டாமா! இல்லையானால், அவர்கள் என்ன எண்ணிக்கொள்வார்கள்! சே! என்ன அண்ணன் இவன்? ஒழுங்காகத் தூங்கக்கூடத் தெரியவில்லையே என்று எண்ணிக்கொள்வார்களல்லவா. அதனால், தூங்கியாக வேண்டும். மணியும் ஒன்று அடித்துவிட்டது.
5-3-1964

இன்று, ராணி, பரிமளம், அ. க. தங்கவேலர் மூவரும் என்னைக் காணவந்திருந்தனர். பல நாட்களாக பரிமளத்தை எதிர்பார்த்திருந்து ஏமாற்றமடைந்திருந்த எனக்கு, இன்று மூவரையும் கண்டதும், மிக மகிழ்ச்சி ஏற்பட்டது. பரிமளம் வராமலிருந்ததற்குக் காரணம் இடையில் நாவலரும், கருணாநிதி, எம். ஜி. ஆர். ஆகியோரும் வந்துபோனதால், தன்னை அனுமதிக்கமாட்டார்கள் என்று எண்ணிக்கொண்டதுதான் என்று தெரியவந்தது. இனி மாதத்துக்கு ஐந்துமுறை என்னைக் காணவரலாம் என்பதைக் கூறினேன். என் பெரிய மருமகப்பெண் சென்னை வந்திருப்பதை அறிந்தேன், என்னைக் காண்பதற்காக. இன்னும் இரண்டு வாரங்கள் கழித்து வரட்டும் என்று சொல்லி அனுப்பினேன். அல்லி அச்சகம் நடத்த இளங்கோவனுக்கு அனுமதி கிடைத்துவிட்டதாகப் பரிமளம் சொல்லக் கேட்டேன். காஞ்சிபுரம் நகராட்சி மன்றத் தலைவர் தேர்தல் சம்பந்தமான நிலைமைகளை அ. க. தங்கவேலர் கூறினார். என்ன காரணமோ தெரியவில்லை, அ. க. தங்கவேலர் மிக இளைத்து, கருத்து போய்க் காணப்பட்டார். அதுபற்றி அவரிடம் கேட்கலாம் என்று நான் எண்ணிக்கொண்டிருக்கும்போதே, அவர், நான் இளைத்துப் போயிருப்பதாக உணர்ந்து காரணம் கேட்டார். சென்னையில் நாவலர், கருணாநிதி ஆகியோர், மேல் சபைகளுக்கான நியமனம் பற்றிய சிக்கலால் மெத்தத் தொல்லைப்பட்டுக்கொண்டிருப்பதாகப் பரிமளம் கூறக்கேட்டு, மிகவும் கவலைப்பட்டேன். எதிர்க் கட்சிகள் கொடுக்கும் மூர்க்கத்தனமான தொல்லைக்கு ஈடு கொடுத்துக்கொண்டு கழகப் பணியாற்றி வரும் இவர்களுக்கு இந்தத் தொல்லையும் வந்து சேர்ந்திருக்கிறது. எல்லாவற்றையும் அமைதி இழக்காமல், பிரச்சினைகளைப் பல்வேறு கோணங்களிலுமிருந்து ஆராய்ந்து பார்த்து, நல்ல முடிவு எடுப்பார்கள் என்று நம்புகிறேன். அடுத்த வாரம் அநேகமாக என்னைக் காண, கருணாநிதியும் நெடுஞ்செழியனும் வரக்கூடும் என்று நினைக்கிறேன்.

நமது கழகத்துக்காக, சென்னை தேனாம்பேட்டையில் வாங்கியுள்ள புதிய மாடிக் கட்டிடத்தின் படம், "நம் நாடு' இதழில் வெளியிடப்பட்டிருந்தது. அழகிய கட்டிடம் எடுப்பாகவே உள்ளது; கட்டிடம் உள்ள இடமும் நல்ல "மையமான' இடம். என்னுடன் சிறையில் உள்ள நமது தோழர்கள், படத்தைப் பார்த்து, நல்ல கட்டிடம் என்று மதிப்பிட்டுப் பாராட்டினார்கள். நான் "பரோல்' காலம் முடிந்து, மீண்டும் சிறைபுகச் சென்னை வந்த அன்று இந்தக் கட்டிடத்தைப் பார்த்து, வாங்கலாம் என்று இசைவு அளித்திருந்தேன். "நம் நாடு' அலுவலகத்தை ராயபுரம் அறிவகத்திலும், கழகத் தலைமை நிலையத்தை, இந்தப் புதிய கட்டிடத்திலும் வைத்துக்கொள்ளலாம் என்று நினைக்கின்றேன்.

மாநகராட்சி மன்றத்தார், லாரிகள் வாங்கியது முறைகேடானது என்று பழிசுமத்திப் பேசியதோடு மட்டுமின்றி, இந்த ஏற்பாட்டைத் தடுத்திட வேண்டும் என்று கேட்டு, கம்யூனிஸ்டு உறுப்பினர் ஒருவர் சென்னை உயர்நீதிமன்றத்தில், வழக்குத் தொடர்ந்திருந்தார்; பொது உடைமைக் கட்சியினரான பாரிஸ்டர் மோகன் குமாரமங்கலம், டாக்டர் சுப்பராயனார் மகன், கம்யூனிஸ்டு உறுப்பினர் சார்பில் வாதாடினார் - மாநகராட்சி மன்றத்தின் வழக்கறிஞராக உள்ள டி. செங்கல்வராயன், மாநகராட்சிக்காக வாதாடினார். வழக்கை விசாரித்த நீதிபதி வீராசாமி அவர்கள், லாரிகள் வாங்கப்பட்டதில் தவறோ, முறைகேடோ இல்லை என்று தீர்ப்பளித்து, கம்யூனிஸ்டு உறுப்பினர் புகுத்திய வழக்கைத் தள்ளிவிட்டார் என்ற செய்தி, இன்று பல இதழ்களில் வெளியிட்டிருந்தனர். லாரி சம்பந்தமாகப் பழிசுமத்தியே இந்தத் தேர்தலில், தி. மு. கழகத்தை ஒழித்துக் கட்டிவிடலாம் என்று மாற்றுக்கட்சியினர் மனப்பால் குடித்தனர். தேர்தல் முடிவு மட்டுமல்ல, உயர்நீதிமன்றத் தீர்ப்பும், தி. மு. கழக நிர்வாகத்திலே தவறோ முறைகேடோ இல்லை என்பதை எடுத்துக்காட்டிவிட்டது.

தேர்தலுக்கு முன்பே இதுபோன்ற "தீர்ப்பு' கிடைத்திருக்கு மானால், தேர்தல் கூட்டத்திலே வழியவிட்ட ஆபாசம், கொஞ்சம் குறைந்திருக்கக்கூடும்.

இன்று பிற்பகல், கருணாநிதி, நடராஜன் ஆகியோர்மீது "உடந்தை'யாக இருந்ததாகத் தொடரப்பட்டுள்ள வழக்கை யொட்டி, சென்னை உயர்நீதிமன்றத்திலே தொடர்ந்துள்ள வழக்குபற்றி மதியிடம் பேசிக்கொண்டிருந்தேன். 107-வது பிரிவின்படி இருவரும் குற்றம் இழைத்திருக்கிறார்கள் என்பதற்காக, போலீஸ் தரப்பில் என்னென்ன எடுத்துக் கூறப்படும் என்பதுபற்றி, மதி விவரமாகச் சொன்னார். எனக்கென்னமோ, அவர்கள் மதுரை சென்றதும், அறப்போர் வீரர்களைக் கண்டு பேசியதும் மாலை அணிவித்ததும் குற்றமாக முடியாது என்றுபட்டது; அதுபற்றி நான் எடுத்துக் கூறினேன். உயர்நீதிமன்றத் தீர்ப்பு எப்படி இருக்கிறது என்பதை அறிய மிக ஆவலாக இருக்கிறோம்.

புதிதாகச் சிறை புகுந்துள்ள ராமசாமியிடம், இன்று காலை பல்வேறு விஷயங்களைப்பற்றிப் பேசிக்கொண்டிருந்தேன். அவருடைய சிற்றப்பாவும், என் நண்பருமான தக்கோலம் செல்லப்பாவின் நலம்பற்றிக் கேட்டறிந்துகொண்டேன்.

செங்கற்பட்டு மாவட்டத்தில் வரப்போகும் பொதுத் தேர்தலில், நமது கழகத்துக்கு வெற்றிக்கான வாய்ப்பு அதிக அளவிலே இருப்பதாக ராமசாமி கூறினார் - காரணங்களையும் விளக்கினார்.

"கோட்டிக்கொளல்' என்ற சொற்றொடர். "அவை அறிதல்' அதிகாரத்தில் ஒரு குறளில் வருகிறது; நேற்று இரவும், இன்று பகலும் அந்தச் சொற்றொடருக்கான, பொருத்தமான பொருள்பற்றி எண்ணிப் பார்த்துத் தெளிவு பெறுவதிலேயே மும்முரமாக ஈடுபட்டிருந்ததாக அன்பழகன் கூறினார்.

உலவி எனக்கு மகிழ்வளித்த புறாக்களைக் காணோம். சிறை அதிகாரி வீட்டு முற்றத்துக்கு அவை போய்ச் சேர்ந்தன என்கிறார்கள்.

கிளிகளே இங்கு இல்லையே என்பதுபற்றி இன்று அன்பழகனிடம் பேசிக்கொண்டிருந்தபோது, இரண்டு கிளிகள் சில வேளைகளில் பறந்து வருவதாகவும், தான் பார்த்ததாகவும் சொன்னார். அவர் சொன்னபடியே இன்று ஐந்து மணி சுமாருக்கு, இரண்டு கிளிகள் பறந்து சென்றிடக் கண்டேன்.

காஞ்சிபுரம் நகராட்சி மன்றத் தேர்தலில் தோல்வி கண்ட நண்பர் ராஜகோபால், இன்றுவரை, பரிமளத்தைக் காணக்கூட வரவில்லையாம். எங்கள் வீட்டுக்கும் வரவில்லையாம். விந்தையான இயல்பு! தேர்தல் தோல்வியை ஏதோ தன்னுடைய சொந்த மதிப்புக்கு ஏற்பட்டுவிட்ட கேடு என்று எண்ணிக்கொண்டு மனதைக் குழப்பிக்கொள்வதுடன், தோல்வி காரணமாக எழும் எரிச்சலை எவர்மீதாவது காட்டும் இயல்பு சிலருக்கு இருக்கிறது. அந்த இயல்பின்படி ராஜகோபாலின் போக்கு அமைந்திருக்கிறது. மக்களாட்சி முறையிலே நம்பிக்கை உள்ள எவரும் தேர்தலிலே வெற்றி கிடைக்காமற் போய்விடுவதை பெரிய விபத்தாகவோ, தமது சொந்த தன்மானத்துக்கு ஏற்பட்டு விட்ட களங்கமென்றோ எண்ணிக்கொள்வது மிகத் தவறு. அந்தவிதமான எண்ணம் கொண்டு, தமது மனத்துக்குத் தாமே வேதனையைத் தேடிக்கொள்வது மிகமிகத் தவறு.

இன்று, பீடர்பெனின்சன் என்பவர் எழுதிய அடக்குமுறை பற்றிய ஏட்டிலே, ஒரு பகுதியைப் படித்தேன். மனதை உருக்கும் விதமான பிரச்சினை விளக்கம். இரண்டு மூன்று வருடங்களுக்கு முன்பு, உலகிலே, பல நாடுகளில், தாம் இருக்கும் நாட்டு துரைத்தனம் ஏற்றுக்கொள்ளாத சில கருத்துக்களைக் கொண்டிருந்த காரணத்துக்காகக் கொடுமைப்படுத்தப்பட்ட ஒன்பது பேருடைய வரலாற்றுத் தொகுப்பு இந்தப் புத்தகம். பேச்சுச் சுதந்திரம், எழுத்துச் சுதந்திரம் எனும் புனிதமான உரிமைகளை ஆதிக்க அரசுகள் எப்படி அழிக்க முனைகின்றன என்பதை எடுத்துக்காட்டி எழுதப்பட்ட புத்தகம். ஒரு தூய கொள்கைக்காக அறப்போரில் ஈடுபட்டுச் சிறைப்பட்டுள்ள என்போன்றாருக்கு, இத்தகைய ஏடுகளைப் படிக்கும்போது, புதியதோர் உறுதி ஏற்படுவது இயற்கை. கொள்கைக்காக, ஆபத்துக்களைத் துரும்பென மதித்து, வாழ்க்கையிலே பெரும் பெரும் ஆபத்துக்களைத் தாமாக வருவித்துக்கொண்டவர்களைப் பற்றிப் படிக்கும்போது, நான் சிறையிலே அடைக்கப் பட்டிருப்பதால் ஏற்பட்டுள்ள இன்னல்களைப் பெரிதென்று கூற மனம் இடம் தராது. பலர் தமது கருத்துகளுக்காக, நெருப்பாற்றிலே நீந்தி இருக்கிறார்கள். அவர்களின் வரலாறுகளைப் படிக்கப் படிக்க நாம் எத்தகைய இன்னலையும் ஏற்றுக்கொள்ளத் தயாராக இருக்க வேண்டும் என்ற உறுதி ஏற்படத்தான் செய்கிறது. தூய உள்ளத்துடனும், மன உறுதியுடனும் அறப்போரில் ஈடுபட்டபடி இருக்கும். நமது கழகத் தோழர்களைப் பாராட்டியபடி படுக்கச் செல்கிறேன்.