அறிஞர் அண்ணாவின் கடிதங்கள்


அடக்குமுறை - குறள் - சிறை நிலை!
2

6-3-1964
பறவைகளிலே சில, பொந்துகளிலே அடைபடச் செல்லாமுன்பே, எங்களை அறையில் கொண்டுவந்து அடைத்துவிட்டு, சிறைக்காவலாளிகள், "அப்பா! தொல்லை தீர்ந்தது' என்று எண்ணிக்கொண்டு போய்விட்டனர். காலை முழுவதும் ஒருவரோடொருவர் பேசி, ஒன்றாக உலவிட இருந்த வாய்ப்பு, மாலை 6 மணிக்கெல்லாம் பறிபோய்விடுகிறது. மூன்று நான்கு நாட்களுக்கு முன்பு, சிறை மேலதிகாரியிடம், மதி நாங்கள் உள்ள பகுதியிலே உள்ள தனி இரும்புக் கம்பிக் கதவை பூட்டிவிட்டு, எங்களை அறைகளிலே போட்டுப் பூட்டாமல் விட்டுவைக்கக்கூடாதா? முன்பு அவ்விதம் நிலைமை இருந்ததே என்று கேட்டார். "அது முன்பு!'' என்று கூறிவிட்டுச் சென்றார் சிறை மேலதிகாரி. அந்த சொற்றொடருக்கு எத்தனையோ ஆழ்ந்த பொருள் இருக்கத்தான் செய்கிறது. சிறையின் உட்புறப் பகுதியிலேதான் பெரும்பாலான "கைதிகள்' உள்ளனர். அங்கு இரவு 9, 10 மணிவரையில் பாட்டும் பேச்சும் பலமாக இருக்கும். நாங்கள் இருக்கும் பகுதியில் ஆறுமணிக்கெல்லாம் அடைத்து விடுகிறார்களே, உடனே ஒரு சந்தடியற்ற நிலை ஏற்பட்டுவிடும். பலர், இரவு பத்து மணிக்குள் தூங்கிவிடுகிறார்கள் - எனக்கோ இரவு ஒரு மணியோ, இரண்டு மணியோ!!

வழக்கம்போல, இன்றும் காலையிலே, சிறிதுநேரம், சமையல் காரியத்தில், பார்த்தசாரதிக்குத் துணையாக இருந்தேன். சமையல் பொறுப்பு முழுவதும் பார்த்தசாரதியுடையதுதான். என்றாலும், இதையிதை இப்படி இப்படிச் செய்யலாம் என்று கூறுவதிலே எனக்கு ஒரு மகிழ்ச்சி. சிறையிலே சமையல் செய்வதற்குத் தனித் திறமை வேண்டும். வேக மறுக்கும் அரிசி, பருப்பு, காயாத விறகு, சுவையும் மணமும் பறிமுதல் செய்யப்பட்டுவிட்ட பண்டங்கள், இவைகளைக்கொண்டு, "இன்னமுது'' சமைப்பது என்றால் இலேசான காரியமல்ல. எண்ணெய் போதுமான அளவு இல்லை என்று தெரியவந்ததும், "தாளிப்பு' ஒப்புக்கு என்றாகிவிடும். காய்கள் முற்றிப்போனதாக ஒவ்வொரு நாளைக்குத் தந்துவிடுவார்கள் - அன்று விதைகள் மிதக்கும் குழம்புதான் கிடைக்கும். என்றாலும், நாங்களே சமைத்துச் சாப்பிடுவதிலே ஒரு தனி மகிழ்ச்சி எழத்தான் செய்கிறது.

"நல்ல குடும்பத்திலேதான் பிறந்தேன்; நல்லபடிதான் வளர்த்துப் பெரியவனாக்கினார்கள்; நாலுபேர் என் பேச்சைக் கேட்டு நடக்கக் காத்துக்கொண்டிருக்கிறார்கள் கிராமத்தில்; அந்த நிலையிலுள்ள நான், இங்கு வந்து, கட்டுப்பட்டு, காவலுக்கு உட்பட்டு இருக்கவேண்டி நேரிட்டுவிட்டது'' என்று நண்பர் ராமசாமி, இன்று பார்த்தசாரதியிடம் சொல்லிக் குறைப்பட்டுக்கொண்டதாகக் கேள்விப்பட்டேன். ஒரு பேச்சுக்காக அவர் அவ்விதம் சொன்னாரே தவிர, சிறையிலே ஆர்வம் குன்றாமல்தான் இருக்கிறார்.

சட்டமன்ற அலுவலகத்திலிருந்து, இந்த ஆண்டு நிதிநிலை அறிக்கை சம்பந்தப்பட்ட புத்தகங்களெல்லாம், அவருக்கு அனுப்பப்பட்டுள்ளன. ஒழுங்காகப் படித்து குறிப்புகள் எடுத்து வைத்திருக்கிறார். சிறை நிலைமைகள் பற்றியும், நீதி நிர்வாகத் துறைகளின் நிலைமைகள் குறித்தும், சட்டசபையில் பேசுவதற்கான ஒரு சிறு சொற்பொழிவே தயாரித்து விட்டிருக்கிறார்.

இன்று பிற்பகல், அன்பழகன், சுந்தரம், பொன்னுவேல் ஆகிய மூவருடன், புரசவாக்கம் வட்டத்தின் அரசியல் நிலைமை பற்றியும், கழகத்தின் பிடிப்பு எந்தவிதம் இருக்கிறது என்பது பற்றியும் பேசிக்கொண்டிருந்தேன்.

சிறையில், இதுபோல் பேசுவது உடனடியாகப் பலன் அளிக்காது என்றபோதிலும், ஒவ்வொரு வட்டத்திலும் நிலவும் அரசியல் நிலைமைகள்பற்றி, இதுபோல வெளியிலே கலந்து பேசினால், மெத்தப் பலனளிக்கும் என்பதை உணர முடிந்தது.

பொதுக்கூட்டங்களிலே பேசிவிட்டுச் செல்வதுடன் திருப்தி அடைந்துவிடாமல், அந்தந்த வட்டத்தில் பணியாற்றும் தோழர்களுடன் கலந்து பேசுவது, நிலைமைகளை உணரவும், கழக வெற்றிக்கான வாய்ப்புக்களை உறுதிப்படுத்தவும், மெத்தவும் பயன்படும்.

இன்று மாலை அன்பழகனை, அவருடைய துணைவியார் வெற்றிச்செல்வி காணவந்திருந்தார்கள். அன்பழகனுடைய மகனை, நாய் கவ்விக் கடித்துவிட்டதாகச் செய்தி கூறிக் கவலைப் பட்டிருக்கிறார்கள். அன்பழகனும் மிகுந்த கவலைப்பட்ட போதிலும், தமது உணர்ச்சியை அடக்கிக்கொண்டு, என்னிடம் இந்தச் செய்தியைக் கூறினார். மருத்துவருடைய யோசனை யின்படி தக்கது செய்யும்படி துணைவியாரிடம் கூறி அனுப்பி இருக்கிறார். நாய்க்கடி, கடித்த நாய் வெறிகொண்டதாக இருந்தா லொழிய, ஆபத்தானதாகாது என்றாலும், தக்க மருத்துவ முறைகளை மேற்கொள்வதுதான் நல்லது. அன்பழகனுடைய மைத்துனர் ராஜசுந்தரம், திறமை மிக்க மருத்துவர்; அவர் தக்க முறையை மேற்கொள்வார் என்று நம்புகிறேன்.

நேற்றுப் படித்த "கொள்கைக்காக கொடுமைக்கு ஆளானவர்கள்'' பற்றிய புத்தகத்தை இன்றும் தொடர்ந்து படித்தேன்.

நீக்ரோக்களுக்குச் சம உரிமை அளிக்க வேண்டும் என்பதற்காக அறநெறிக் கிளர்ச்சி நடத்தும் அமெரிக்க வெள்ளையருக்கு, நிறவெறி பிடித்த வெள்ளையர்களால் ஏற்பட்ட கொடுமைகளை நூலாசிரியர் விளக்கி இருந்தார். "நீக்ரோக்களும் அமெரிக்கர்களே! நிறம் காரணமாக அவர்களை ஓதுக்கி வைப்பதும், தாழ்வாக நடத்துவதும் மிகக் கொடுமை! அது மனிதத்தன்மையையே மாய்த்திடும் இழிதன்மையாகும்' என்று அந்த அமெரிக்க வெள்ளையர், பல இன்னல்களுக்கிடையில், எதிர்ப்பு ஏசல் ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல், எடுத்துக் கூறிக்கொண்டு வருகிறாராம். சம உரிமைக்காக நீக்ரோக்கள் மேற்கொள்ளும் அறப்போரில் இவர் பங்கெடுத்துக் கொண்டிருக்கிறார்; கொடுமைகள் பல இவருக்கு இழைக்கப் பட்டபோதிலும், மனம் தளராமல் தொண்டாற்றிக்கொண்டு வருகிறார்; நிறவெறி பிடித்த அமெரிக்க நாட்டு வெள்ளையர், குடியரசுத் தலைவர் கென்னடியைக் கொலை செய்யும் அளவுக்குச் சென்றுவிட்டதைக் கண்ட பிறகு, கருப்பருக்குச் சம உரிமை கேட்டுக் கிளர்ச்சி செய்யும் இந்த வெள்ளையருக்கு இழைக்கப்பட்ட கொடுமைகள் வியப்பளிக்கவில்லை. மோட்டாரில் எப்போதும் பயணம் செய்தபடி இருக்கிறாராம். மோட்டாரில், பிரசாரப் படம் ஒன்று எழுதப்பட்டிருக்கிறதாம். உலகத்தின் படம் போட்டு, அதனை தாங்கிப் பிடித்துக் கொண்டிருப்பதாக இரண்டு கரங்கள் தீட்டப்பட்டிருக்கிறதாம்; ஒரு கரம், கருப்பு நிறமுடையது, மற்றொன்று வெள்ளை!

சிறையில், இந்தச் சீலர் தள்ளப்பட்டார் ஒரு முறை; சிறை அதிகாரிகள், பல்வேறு குற்றங்கள் செய்ததால் சிறையில் இருந்த கயவர்களிடம், இந்த வெள்ளையன் கருப்பருக்குத் துணையாக இருக்கிறான் என்ற செய்தியைக் கூறி, நீக்ரோவுடன் கைகுலுக்கிக் கொண்டிருக்கும் முறையில் இருந்த ஒரு படத்தையும் காட்டினார்களாம். இதைக் கண்ட உடனே அந்தக் கயவர்கள் - கொலை, கொள்ளை, வழிப்பறி, வஞ்சகம், சூது, கற்பழித்தல் போன்ற குற்றங்களைச் செய்த பாதகர்கள், "வெள்ளையரின் புனிதத் தன்மையை, உயர்வை, பாழாக்குபவனா இவன்' என்று உறுமி எழுந்து, பலமாகத் தாக்கிவிட்டார்களாம். இந்தப் பகுதியைப் படிக்கும்போது, உண்மையாகவே, கண்கலங்கும் நிலை ஏற்படுகிறது!

நேற்றும் இன்றும் எழுத்தாளர்கள் பிரச்சினையை மையமாகக்கொண்டு எழுதப்பட்ட, இரண்டு கதைப் புத்தகங்களைப் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. எழுத்தாளர்களை ஏய்த்துக்கொழுத்திடும் புத்தக வெளியீட்டார் பற்றிய கண்டனத்துடன், ஒரு உருக்கமான கதையைப் பின்னி, ஒரு நூல் எழுதப்பட்டிருந்தது. மற்றொன்று, சாமர்செட் மாகாம் எழுதியது; எழுத்தாளர்பற்றி மற்றோர் எழுத்தாளர் கொண்டுள்ள கருத்துக்களையும், அவர்களுக்குள் ஏற்படும் தொடர்புகள் பற்றியும், புகழ்பெறுமுன்பு எழுத்தாளர் எந்த நிலையில் இருக்கிறார் என்பதுபற்றியும், மாகாம் எழுதியிருக்கிறார்.

இன்றைய பத்திரிகையில், சென்னை மேல்சபையில், முன்னாள் முதலமைச்சர் ஓமந்தூர் இராமசாமி ரெட்டியாரும், டாக்டர் இலட்சுமணசாமி முதலியாரும், டில்லி மத்திய சர்க்காரின் போக்கையும், அவர்கள் ஆட்டிப்படைப்பதற்கு ஏற்றபடி கிடக்கும் மாநில சர்க்காருடைய அடிமைப் போக்கையும், மிக வன்மையாகக் கண்டித்துப் பேசியது வெளியிடப்பட்டிருந்தது. ஓமந்தூரார், காங்கிரஸ் ஆட்சியின் போக்கைப் பல முறை கண்டித்திருக்கிறார். என்றாலும், முன்னாள் முதலமைச்சர் தமது தள்ளாமையைக் காரணமாகக் காட்டக் கூடுமென்றாலும், இந்தக் கருத்துக்களை, சட்டசபையில் எடுத்துச் சொல்வதோடு நின்றுவிடுவது, சரியல்ல - அறமுமாகாது - மக்கள் மன்றத்தில் இவைகளை எடுத்துச்சொல்லக் கடமைப் பட்டிருக்கிறார். மக்களிடம் சென்று, அவர் இந்த ஆட்சியின் போக்கைக் கண்டித்துப் பேசினால்தான், ஆட்சியின் போக்கு மாறுவதற்கு ஒரு வழி ஏற்படும். ஏனோ அவர், தம்மால் செய்யக்கூடிய இந்தச் சேவையைச் செய்திடாமல் இருந்து வருகிறார்.

தன்னலமற்றவர் என்று நாடு கொண்டாடும் நிலை பெற்ற ஓமந்தூரார், உண்மையை ஊருக்கு எடுத்துச் சொல்லி, ஊராள்வோரைத் திருத்த ஏன் தயக்கம் காட்டுகிறார் என்று எனக்குப் புரியவில்லை. அனுபவம் பெற்றவர்களும், ஆற்றல் மிக்கவர்களும், இவ்விதம் தயக்கம் காட்டும் போக்கிலே இருப்பது, வேதனை அளிக்கிறது என்றாலும், ஓரோர் சமயம் சட்டமன்றத்திலேயாகிலும் அவர்கள், மனம் திறந்து பேசுவது, நாம் மேற்கொண்டுள்ள பணியினைத் தொடர்ந்து செய்வதற்கான பேரார்வத்தை ஊட்டுகிறது. இந்தி வெறி எந்த அளவுக்குச் சென்றுகொண்டிருக்கிறது என்பதை டாக்டர் இலட்சுமணசாமி முதலியார் மிகத் தெளிவாக - துணிவாகக்கூட - எடுத்துக்காட்டி இருக்கிறார். அவர் காங்கிரசிடமிருந்து பதவியைப் பறித்துக்கொள்ள கட்சி நடத்துபவர் அல்ல; தமது வாழ்நாளில் பெரும் பகுதியைக் கல்வித்துறைக்காகச் செலவிட்டு வரும் அறிவாளர். அவருடைய மேல்சபை பேச்சு, இந்தி ஆதிக்கத்தை எதிர்த்து நாம் நடத்தும் அறப்போர் எத்துணை தேவையானது என்பதை நாடும் நாமும் உணரச் செய்வதாக அமைந்திருக்கிறது. அவருடைய பேச்சைக் கேட்டு காங்கிரஸ் உறுப்பினர்கள்கூட, பாராட்டுக் கை ஒலி எழுப்பினர் என்று பத்திரிகைகள் தெரிவிக்கின்றன. பாராட்டி என்ன பயன்? கையொலி எழுப்பி என்ன காணப்போகிறோம்! இந்தி ஆதிக்கத்தை எதிர்த்து நிற்கும் துணிவு பெறவேண்டும். அவருடைய பேச்சு அமைச்சர் பெருமான்களுக்கு அந்தத் துணிவைக் கொடுத்திட வேண்டும். டாக்டர், நாம் மேற்கொண்டுள்ள போராட்ட முறைகளை ஏற்றுக்கொள்பவர் அல்ல; நாமும் அவரிடமிருந்து அதனை எதிர்பார்க்கவில்லை. ஆனால், அவர் பேசியிருப்பது, இந்தி ஆதிக்க உணர்ச்சி என்பது பொய்யல்ல; இட்டுக் கட்டியது அல்ல; ஏனோதானோ என்று விட்டுவிடத்தக்கது அல்ல; பெரியதோர் ஆபத்து, எதிர்காலத்தில் இருளும் இழிவும் இந்நாட்டுக்கு மூட்டிவிடக்கூடியது என்பதை மெய்ப்பிக்கிறது. எனவே - முறைகள்பற்றிய கருத்து எவ்விதம் இருப்பினும் - பிரச்சினையின் அடிப்படையைப் பொறுத்தவரையில், நமது கருத்து, அறிவாளர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது என்பதனை அறிந்து அக மிக மகிழ முடிகிறது.

கல்வித்துறை வித்தகரும், ஆட்சித்துறை அனுபவம் கொண்டவரும், எந்தக் கேடு போக வேண்டும், கொடுமை நீக்கப்பட வேண்டும் என்று எடுத்துக்கூறி, "வாதாடி' இருக்கிறார்களோ, அதே நோக்கத்துக்காக, நாம் அறப்போரில் ஈடுபட்டு, சிறையில் கிடக்கிறோம் என்பதை எண்ணிப் பெருமகிழ்வு கொள்ளமுடிகிறது.

"துரும்பைத் தூணாக்கிக் காட்டுகிறார்கள்' என்று நம்மீது பழி சுமத்தும் "பரந்த மனப்பான்மை'யினர், ஓமந்தூரார் மனம் நொந்து பேசியிருப்பதையும், டாக்டர் இலட்சுமணசுவாமி மிகக் கண்டிப்பான குரலில் பேசியிருப்பதையும் கூர்ந்து கவனிப்பார்களானால், தமது நிலை எவ்வளவு கேவலமான தாகிறது என்பதை உணருவார்கள். வெளியில் இருந்து படிப்பதைவிட, சிறைக்கு உள்ளே இருந்துகொண்டு, அந்த இரு முதியவர்களின் பேச்சுக்களையும் படிக்கும்போது, தனிச் சுவையும், எழுச்சியும் பெற முடிகிறது.

7-3-1964
பொதுவாழ்க்கைத் துறையில் ஈடுபட்டு, சிறைப்பட நேரிடுபவர்களுக்கெல்லாம், கைதிகளை நல்லவர்களாக்கும் முறை மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற எண்ணம் ஏற்படுகிறது - சிறையில் இருக்கும்போது. சிறையில் பல விதமான குற்றங்களுக்காக அடைக்கப்பட்டிருப்பவர்களிடம், பழக வேண்டிய நிலை இருப்பதும், அந்த நிலை காரணமாக அவர்களுடன் பேசி அவர்கள் "கதை'யைத் தெரிந்துகொள்ளும் வாய்ப்பும், அவர்கள் கூறுவது கேட்டு மனம் இளகுவதும், இங்கு இயற்கையாகவே ஏற்பட்டுவிடுகிறது. சிறையில் சீர்திருத்தம் வேண்டும் என்பதுபற்றி, இன்று மாலை, பொன்னுவேல் மெத்த ஆர்வத்துடன் பேசத் தொடங்கினார். பொன்னுவேல் உட்புறப் பகுதியில் இருந்த நாட்களில், தண்டனை பெற்று உள்ளே உள்ள கைதிகள், தமது தண்டனையைக் குறைக்கவேண்டுமென்றும், விடுதலை அளிக்க வேண்டும் என்றும் துரைத்தனத்துக்கு, "மனு' அனுப்பும் காரியத்தில் தொண்டு புரிந்திருக்கிறார். சட்டக் கல்லூரியில் படித்தவர் - படித்தவர் என்று மட்டும்தான் கூற முடிகிறது - வழக்கறிஞர் என்று சொல்லும் பாக்கியத்தை, நான் பெறவில்லை. வழக்கறிஞர் ஆகாவிட்டாலும் சட்டக்கல்லூரியில் படித்ததாலும், சட்டப் புத்தகங்கள் "கைவசம்' இருப்பதாலும், மனுக்கள் தயாரித்துக் கொடுக்க முடிந்திருக்கிறது. இதன் காரணமாக "கைதிகள்' வெளியே போகும்போது "மனிதர்கள்' ஆக மாற்றி அமைக்கப்பட வேண்டும் என்பதுபற்றி, ஆர்வத்துடன் பேச முடிந்தது. இந்த ஆர்வத்தையோ, சீர்திருத்த வேண்டும் என்ற துடிப்பையோ யாரும் குறைகூற முடியாது - பாராட்டக்கூடச் செய்யலாம். ஆகவே, நானும் அந்த நோக்கத்துக்கு ஆதரவு தெரிவித்துவிட்டு, பிரச்சினையில் உள்ள சிக்கல்கள் பற்றியும் விளக்கிக் கூறினேன்.

சிறையிலிருந்து வெளியே செல்பவர்கள் "நல்லவர்களாக' மாற்றப்பட வேண்டும் என்பது எவ்வளவு முக்கியமோ, அவ்வளவு முக்கியம், வெளியே உள்ளவர்கள் சிறைக்கு வரத்தேவையில்லாத நிலையை ஏற்படுத்துவது - குற்றம் செய்யவேண்டிய நிலையையும் மனப்போக்கையும் மாற்றி அமைக்க, சமூகத்திலே பெரியதோர் முயற்சி மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதுபற்றிக் கூறினேன். சென்ற கிழமை நான் படித்த சட்ட வரலாறுபற்றிய புத்தகத்திலும், குற்றங்களுக்குத் தரப்படும் தண்டனைகள், பயங்கரத்தை ஏற்படுத்தும் விதமாக இருக்க வேண்டுமா வேண்டாமா என்பதுபற்றி, படித்திருந்தேன். அது குறித்துப் பேசிக் கொண்டிருந்தோம்.

தூக்குத் தண்டனையை எடுத்துவிட வேண்டுமா? வேண்டாமா? என்பதுபற்றிக் கருத்து தெரிவிக்கும்படி துரைத்தனம் ஒரு கேள்வித்தாள் தயாரித்து சட்டசபை உறுப்பினர்களுக்கு அனுப்பி இருந்தனர். அது இன்று சட்டசபை உறுப்பினர் ராமசாமிக்குக் கிடைத்திருந்தது. ஆகவே, தூக்குத் தண்டனைபற்றியும், பொதுவாக தண்டனை முறைகள்பற்றியும், இன்று மாலை, நாங்கள் பேசிக்கொண்டிருக்க நேர்ந்தது.

சுந்தரத்தைக் காண, நண்பர் ராதாமணாளன் வந்திருந்தார். நாம் நடத்தும் அறப்போர்பற்றியும், நாமெல்லாம் சிறைப் பட்டிருப்பது குறித்தும், நாட்டிலே ஒருவிதமான பரபரப்பும் எழவில்லை என்று அமைச்சர்கள் பேசிக் கொண்டிருக்கிறார்கள் என்றாலும், உண்மையில் மக்கள் மனதிலே பரபரப்பு உணர்ச்சியும் பரிவும் நிரம்ப இருக்கத்தான் செய்கிறது. சென்னை மாநகராட்சித் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, காங்கிரஸ் வட்டாரத்தினர்கூட இதனை உணர்ந்துவிட்டிருக்கின்றனர் என்று ராதாமணாளன் கூறியதாகச் சுந்தரம் என்னிடம் சொல்லிக் கொண்டிருந்தார்.

தெளிவுள்ள மக்கள் இந்தி ஆதிக்கத்தால் விளையக்கூடிய ஆபத்தை உணர்ந்துகொண்டிருக்கிறார்கள் என்பதுபற்றி எனக்கு ஐயம் எழுந்ததே இல்லை. அதுபோலவே நமது மனதுக்குச் சரி என்று பட்ட முறையில் மக்களுக்கு நலன் கிடைக்க வேண்டுமென்ற நோக்கத்தில், நாம் மேற்கொண்டுள்ள அறப்போர் குறித்து, மனதை அடகுவைத்துவிடாத எவரும், பாராட்டத்தான் செய்வார்கள் என்பதிலேயும் எனக்கு ஐயம் ஏற்பட்டதில்லை. பத்திரிகைத் துறையில் ஈடுபட்டிருப்பவரும், காங்கிரசாரிடம் தொடர்புகொண்டுள்ளவருமான ராதாமணாளன், சுந்தரத்திடம் கூறியது, நான் ஏற்கனவே கொண்டிருந்த எண்ணத்தை உறுதிப்படுத்திற்று.

மதியைக் காண, அவருடைய துணைவியாரும் குழந்தையும் வந்திருந்தனர். மதியின் பெண் குழந்தை, இந்தச் சிறையை "அப்பா வீடு'' என்று எண்ணிக்கொண்டு பேசுகிறதாம்! குழந்தையைப் பார்க்க வேண்டும் என்று ஆசை எழத்தான் செய்கிறது - ஆனால் எங்கே உட்புறம் பார்த்துவிடுகிறார்களோ என்று இரும்புக் கம்பிகளை இரும்புப் பலகை போட்டு வேறு அடைத்துவைத்துவிட்டிருக்கிறார்களே!!

இன்று என்னைக் காண நெடுஞ்செழியன் விரும்பி யிருக்கிறார் - ஆனால் அனுமதி அளிக்கப்படவில்லை. திங்கட்கிழமை வரக்கூடும் என்று சிறை மேலதிகாரி கூறிவிட்டுச் சென்றார்.

புகழ்மிக்க எச். ஜி. வெல்ஸ் எழுதிய நூல் ஒன்று கிடைத்தது. பல ஆண்டுகளுக்கு முன்பு அவர் எழுதியது - பழைய முறைகளும் கொள்கைகளும் முளைவிடும் பருவத்தை விளக்கும் விதமாக அமைந்துள்ள ஏடு - இன்று அந்த ஏடுதான், தூக்கம் வருகிற வரையில்.

காலையில், கலைக்களஞ்சியத்தில் சில பகுதிகளைப் பார்த்துக்கொண்டிருந்தேன். நான் 1938லில் சிறை புகுந்தபோது, தமிழாசிரியர் சிங்காரவேல் முதலியார், தன்னந்தனியாக இருந்து தயாரித்த "அபிதான சிந்தாமணி'யைத் தான் துணைக்குக் கொண்டிருந்தேன். சென்னை, தொண்டைமண்டல துளுவ வேளாளர் பள்ளித் தமிழாசிரியரும், என் நண்பருமான எஸ். எஸ். அருணகிரிநாதர் கொடுத்திருந்தார். கலைக்களஞ்சியம், மிகுந்த பொருட் செலவில், பல விற்பன்னர்களின் கூட்டு முயற்சியில் தயாரிக்கப்படுகிறது - அபிதான சிந்தாமணி, ஒரே ஒரு வித்தகரின் அறிவாற்றலின் விளைவு! கலைக் களஞ்சியத்தைப் பார்த்தபோது, எனக்கு, "அபிதான சிந்தாமணி' பற்றிய எண்ணமும், அதனை ஆக்கித்தந்த சிங்காரவேலர்பற்றிய நினைவுந்தான் மேலோங்கி நின்றது.

அண்ணன்

8-11-1964