அறிஞர் அண்ணாவின் கடிதங்கள்


அகமும் புறமும்
1

உழவர் நாட்டில் அமெரிக்க உணவுப் பொருள் !
புள்ளிமானுக்கு வேங்கையா தோழன் ?
"ஏர்முனைத் திருநாளுக்கு நம் பாராட்டு !
தனி மனித வாழ்க்கை நிலை நமது ஈடுபாடு புதியதோர் விடுதலைப் போரில் !
"விடுதலை'க் கவிதையே நான் தரும் பொங்கல் பரிசு !

தம்பி,

நள்ளிரவு நேரந்தன்னில், உள அமைதி கெடுத்திடும் நோக்குடனோ என்றெவரும் கேட்கும் வண்ணம், மேகக் கூட்டம், கருத்துப் பெருத்து ஒன்றோடொன்று போரிட்டுக் குருதியினைக் கொட்டுதல்போல மழையைப் பொழிந்திட, கருங்காற்று வீசித் தருக்களைச் சாய்த்து எவரையும் வெளியே தலைகாட்டா திருந்திடச் செய்திட ஓயுமோ இன்றேல் ஊர் அழியும் வரையில் பேய்ந்தே தீருமோ என்று பெரியோர் கவலை கொள, வேண்டும் போது எங்கோ சென்று ஒளிந்து கொண்டு வேண்டா வேளையில் வந்து எமை அலைகழிப்பதனையே ஓர் விளையாட்டு ஆக்கிக் கொண்டதோ விண்ணுலவும் மேகக் கூட்டம் என்று உழவர் உளம் நொந்து பேசிட, பெருமழை! பெருமழை! எதை நீவிர் தடுக்கவல்லீரெனினும், இதனைத் தடுத்திட இயலாது உம்மால்! முடியுமெனில், முயன்று பாரீர்!! என்று மாந்தரை அறைகூவிடும் முரசொலி போன்ற இடியோசையும், வருவாரின் தலைதனைக் கொய்திடும் வாள் காண்பீர் என்றதனை வீசுதல் போல் மின்னல் வெட்டும் மிகுந்திருக்கும் வேளை! வயலுக்கும் வாவிக்கும், ஆற்றுக்கும் கரைக்கும், ஊருக்கும் ஏரிக்கும் வித்தியாசம் இல்லை என்றெண் ணத்தக்க விதமாக எங்கும் வெள்ளக்காடாகிக் கிடந்திடும் நிலைமை! படல் கொண்டு பக்குவமாகப் பாதுகாத்துக் கொண்டதனால் அணையாமல் சிறு விளக்கொன்று ஒளியினைச் சிந்திடும் ஓர் இல்லம். ஆங்கு, முற்றத்தில், அகமும் முகமும் கவலை தோய்ந்திடக் குனிந்த தலையுடன் குமுறிடும் ஆடவன், எதையோ விரட்டிடத் துணைதனைத் தேடி இங்கும் அங்கும் உலவு கின்றான். என்னடா! மகனே! ஏதுக்கித்தனை வேதனை கொள்கிறாய்! எல்லாம் நல்லபடியாய்த்தானே நடந்திடுமப்பா! கலக்கம் விட்டொழி! கவலையை விரட்டு! என்றெல்லாம் கூறிட எண்ணிடும் முதியவர் ஏனோ முயன்று பார்க்கிறார், இயலவேயில்லை! அன்று நானும் இவன் போல்தானே நெஞ்சில் நெருப்புடன் நின்றேன், உழன்றேன்! இன்று நான் எப்படி இவனைப் பார்த்து, ஏனடா மகனே! இத்தனைத் திகிலென எங்ஙனம் உரைத்திடுவேன் எவ்விதம் அவன் கவலை துடைத்திடுவேன், இயலாது என்னால் என்றெண்ணிப் பேச்சுக்காக எனப்பிறந்த ஓசையினைப் பெருமூச்சுத் தானாக்கி இருந்தார் ஓர் பக்கம். உள்ளேயோ, ஓ! அப்பா! அம்மம்மா! உயிர் போனால் போதும் இனித்தாளேன் வேதனையை! ஆயிரம்தேள் என்றன் அடிவயிற்றிலே தங்கி, எல்லாம் ஒன்றாகிக் கொட்டினால் நான் என்செய்வேன்! பல்லைக் கடித்துக் கொள் பருவதம்! என்று பாட்டி சொல்கின்றாள், பல்லுடைப்பேன் என்று கூடப் பதறி நான் கூறிவிட்டேன், பல்போன பருவத்தாள் என்பதனை மறந்து எல்லாம் இருண்டு கிடக்கிறதே! ஊரிலுள்ள நெருப்பெல்லாம் ஒன்றாக என் வயிற்றில் கொண்டு வந்து கொட்டினரோ கொடியோர்! - என்று பல எண்ணி, அத்தனையையும் சேர்த்து அம்மம்மா! அப்பப்பா! அய்யய்யோ! என்ற சொற்களாக்கி, அலறுகிறாள். "அம்மா' ஆகின்றாள்! "அவன்' அவளை அவ்வாறாக்கிவிட்டு, அவதிப்படுகின்றான், அனைவ ரையும் பார்க்கின்றான். "அந்த "அவதி'யிலே உருவாகி வளர்ந்ததுவே அவனி முழுதும் என்பது அறிவான் அவன், நம்போல; ஆனால் அறிந்ததத்தனையும் பறந்திடுது "அவள் எழுப்பும் அம்மம்மா ஒலி' கிளம்பு அவன் செவி வீழ்வதாலே, செச்சே! இது என்ன பிழைப்பு! பெண்ணாகப் பிறந்தாலே இதுதானே "எழுத்து' எனப் பெற்றவர்கள், பேசுகின்றார்; பிஞ்சுகள் புரியாமல், "கத்தாதிருக்க மருந்திலையோ?'' என்கின்றார். இந்நிலையில், ஓ! ஓ! என்ற பேரொலி வெளிக்கிளம்பி, மறுகணம் விந்தை அமைதிக்கு இடங்கொடுத்து விரட்டிட, உள்ளே இருந்தோர் "இசை' மெள்ளக் கிளம்பிடுது; உலவியவன் செவியினிலே ஓராயிரம் பண் ஒரே நொடியில்!! ஆண் பிள்ளை! என்பாரும், எல்லாம், "அவன் போலே!'' என்று அடையாளம் கூறுவாரும், "தாத்தா வாயினிலே கொட்டுங்கள் கற்கண்டு'' என்பாரும், "கற்கண்டா! அவருக்கா!!'' எனக்கேட்டுச் சிரிப்பாரும் நடமாட ஒரே நொடியில், வேதனை சூழ்ந்த இல்லம் மகிழ்வெய்தித் துள்ளி நிற்கிறது! "எனக்குத் தெரியும் அப்போதே, இன்று இரவுக்குள் குழந்தை பிறந்திடும் என்பது'' எனச் செப்புகிறார் ஒருவர்: "அவன்' அவரைக் கண்டு சிரிக்கின்றான்! - அடடா! நீ இத்தனை கோழையாகிவிடுவாய் என்று நான் எண்ணிடவேயில்லை! எத்தனை பதறிவிட்டாய்! எதை எண்ணிக் கதறி நின்றாய்! என்று கேட்கின்றார் முதியவர், தந்தை ஆகிவிட்ட தன் தனயன்தனை நோக்கி. "என்னினும் பெரியோர்கள் இருந்த நிலை கண்டே நான் என்ன ஆகிடுமோ என்றஞ்சி இருந்திட் டேன்; எனக்கத் தெரியாதா, மருத்துவரே கூறினாரே!!'' என்றுரைத்தபடி "அவனும்' இன்னும் அனுமதியை வழங்கிட லாகாதா! இத்தனைக்கும் காரணமாம் என் "மன்னவனை' நான் காண!! - என்றெண்ணி உலவுகின்றான். முன்பு உலவியது நெருப்பின் மீது; இப்போதுலாவுவது பூங்காற்றின் மீது! ஏன்? வாழ்வின் பயன் கண்டான்! காதற்கனி பெற்றான்! இன்பப் பெருக்கதுவும் கண்மூக்கு வாய்பெற்று, காலுதைத்துக் கை அசைத்து, "வந்துள்ளேன்! வாழ்வதற்கு! தந்திடுவேன் வாழ்வு உனக்கு'' என்று கூறுகின்றான், பெற்றோர்க்கன்றி மற்றோர்க்குப் புரியாத பேரின்ப மொழியாலே!

பிள்ளைக் கனியமுதைப் பெற்றிடும் வேளையிலே மற்ற நிலையத்தனையும் மறைந்திடுதல் போல எத்தனையோ இன்னலுக்கு ஆளாகியுள்ள இந்த நம் தமிழகத்தில், விந்தையாம் ஓர் மாற்றம் விரைந்திடுதல் காண்கின்றோம், பொங்கற் புதுநாள் பூத்திடும் நந்நாளன்று!

களத்தினிலே கடும் போரிட்டு, ஆற்றல் மறவரவர் விரட்டினர் மாற்றாரை; எனினும், பகை ஒழிந்தபாடில்லை, புகை நின்று போகவில்லை, எப்போது என்ன விபரீதம் வெடித்திடுமோ என்ற நிலையதுவும் கப்பிக் கொண்டே உளது, காரிருள் போலே! போர் கிளம்பி பொல்லாங்கை விளைவிக்கும் முன்பே, பொன்னாடாய் இந்த நாட்டை ஆக்குதற்கே பொறுப்பேற்றோம் என்று கூறி, எந்நாட்டிலும் இல்லை எமக்கு நிகர் நல்லோர்கள் என்று அறைந்து, இறுமாந்து கிடந்திடுவோர், இல்லாமைதனை விரட்ட இயலாத தன்மையினால், இதனை இவன் முடிப்பான் என்றறிந்து அதனை அவன் கண்விடல் எனும் நெறி மறந்த காரணத்தால்,

உறுபசியும் ஓவாப்பிணியும் செறுபகையும்
சேரா தியல்வது நாடு.

குடிதழீஇக் கோலோச்சும் மாநில மன்னன்
அடிதழீஇ நிற்கும் உலகு.

கடுமொழியும் கையிகந்த தண்டமும் வேந்தன்
அடுமுரண் தேய்க்கும் அரம்.

எனும் குறள், ஏட்டிலே இருந்திட மட்டுமன்று, நாட்டிலே நடைமுறையாகிடவே என்பதனை மனத்திற்கொள்ளாத போக்கதனால், பொன் விளையும் பூமியென்றும் புவிக்கே ஓர் பூங்காவென்றும் பொய்யாமொழிப் புலவர் புகழ்ந்திட்ட திருநாட்டில் "திரு ஓட்டுத்'' திட்டத்தால் தீர்த்திடுவோம் "போதாமை' என்று கூறிடுவார் விழிநீர் அடக்கிடும் வழி வகுத்துள்ளார். அவர் படிக்க ஆன்றோர்கள் விட்டுச் சென்ற அருமைமிகு நூற்களிலே உள்ளந்தனைத் தொடும் ஓவியம் காண்கின்றார், நாட்டின் கோலம் நனி சிறந்திருந்ததென உணர்கின்றார். இன்றோ இன்னலும் இழிவும் இடரும் படர்ந்துள்ள பாழ்நிலை காண்கின்றார்; இந்நிலை காண்பதற்கோ மூவாறாண்டாக முடிதரியா மன்னரென இருந்தீர் ஐயா! என்று கேட்டிடினோ, ஆளவந்தார், "அறியாச் சிறுவர்! அன்று இருந்தவர் தம் தொகை என்ன, வகை என்ன? இன்றுள்ள மாந்தர் தொகை பெருகியதை அறியாயோ!'' என்றுரைத்து, அந்த ஓர் விளக்கத்தில் அவனியின் அறிவத்தனையும் அடக்கித் தந்துள்ளோம் என்றெண்ணிக் களித்துக் கிடக்கின்றார்.

காலம் மாறுவதும், அதற்கேற்பக் கோலம் புதிதாகுவதும், புரியாத புதிரன்று; காலம் மாற்றுவது கோலத்தை மட்டுமன்று, முறை பலவும் மாறிடுதல் காண்கின்றோம்; அம்மாற்றம் அனைவருக்கும் நல்வாழ்வு கிடைத்திடும் ஓர் வழியை எத்தனையோ நாடுகளில் ஏற்றமுடன் தந்திருக்க, இந்த நாட்டினிலே மட்டும் ஏன் இந்த நிலை? என்பதே கேள்வி - இதற்கு யாது பதில்? குற்றம் கூறாதீர்! குறை கிளறிக்காட்டாதீர்! கொற்றம் நடத்திடுவோர் அறிந்துள்ளார் அவ்வளவும்! மெள்ள மெள்ளத்தான் மலர்ந்திடும் நலவாழ்வு என்கின்றார். இந்த ஒரு பதிலை, ஐயன்மீர்! எத்தனை முறை நீர் கூறிடுவீர்! ஏழை நாங்கள் எத்தனை முறை இதனை ஏற்றிடுவோம்; என்று கூறுகின்றார் சில பேர்கள்; மற்றையோர் அச்சம் கொண்டு குமுறுகின்றார், நலிவாலே.

உண்ண உணவின்றி ஒரு ஆளும் சாகவிடேன்! உறுதி! உறுதி இது! என்று உரைக்கின்றார் - நமை ஆளும் நல்லோர் அல்ல; எங்கோ நெடுந்தொலைவில் இருக்கும் அமெரிக்க அதிபர்! இந்தத் திருநாடு உழவர் தம் பெருநாடு!! இங்கு அனுப்புகிறார் விந்தைத் தொழில் புரியும் நாட்டினராம் அமெரிக்கர், உணவுப் பொருள் குவியல்!!

காருலாவ, ஏருலாவ, சீருலாவும் நாடு இது என்கின்றார் கவிஞர் இங்கு; இந்நாட்டில் போதும் என்று கூறத்தக்க அளவு விளைவு இல்லை என்கின்றார். ஏனெனிலோ, மெத்த ஆராய்ந்து கண்டறிந்து விட்டோம்! விளைவு மிகுந்திடாத காரணம் விளங்கியது, விளைவு மிகுந்திட வழி கண்டு கொண்டோம் யாம்! என்னை என்பீரேல், கூறிடுவோம், கேட்டிடுவீர், வயலில் வளம் காண உரம் இடுவீர் வகையாக! உரமிடுதல் வயலுக்கு வலிவிடுதல்! வலிவு பெறும் வயல், வழங்கிடும் செந்நெற் குவியல்! என்று உரைக்கின்றார் உணவமைச்சர். இத்தனை நாள் ஈதறியாது இடர்ப்பட்டு வந்தோமே! உரமிடுதல் வேண்டுமாம் வயலுக்கு!8 உரைக்கின்றார் அமைச்சர் என நாடே வாழ்த்திடும் என்று எண்ணுவரோ அமைச்சர்! இருக்கும்! அந்த நம்பிக்கை மிகுதியுடன் பேசுகிறார்; தெரிகிறது இதற்கு இவரை வாழ்த்திட வேண்டுமெனின் வள்ளுவரை அடியோடு நாம் மறந்திட இசைதல் வேண்டும்! அப்போதுதான் இவர் கூறிடும் முறை "கண்டு பிடிப்பு' எனும் நிலை பெற்றிட இயலும் வள்ளுவரோ, ஈராயிரம் ஆண்டுகட்கு முன்னரே இயம்பியுள்ளார்:

ஏரினும் நன்றால் எரு இடுதல், கட்டபின்
நீரினும் நன்று அதன் காப்பு

என்பதாக! இதனையே இவர் கூறுகின்றார் இன்று எனில், எவர் இதனைப் புத்தறிவு என்றோ புதுமை முறை என்றோ கொள்ள இயலும்? ஒரு குறள் தன்னைப் பெறுகிறோம் பெருநிதி கொடுத்து என்றன்றோ எண்ணத் தோன்றும்!

உழவு நிலை இஃதெனில், தொழில் நிலையோ, ஒரு சிலரின் ஆதிக்கத்தில் சிக்கி "ஓடப்பர்' மிகுந்துள்ள கேடு மிகு நாடாக்கி விட்டதின்று.

சட்டம் எதுவெனினும் சாய்த்துவிடும் வல்லமை மிகப் பெற்றோர், சாயாத போக்கினரும் சாய்ந்திடும் விதமான சல்லாபப் பொருள் தந்து அவரைத் தம் "சரக்காக்கிக்' கொள்வோர்கள், மூதறிஞர் பற்பலரும் மூக்கின் மேல் விரல் வைத்து அடடாவோ! இப்படியோ!! என வியக்கும் விதமாக, பொதுப் பணத்தைத் தமதாக்கிக் கொண்டிடும் முந்த்ராக்கள், ஆழ்கடலைத் தாண்டியும் எமது அரசு உண்டு அறிந்திடுக! அரச நடத்திடுவோர் எமது ஆதாயம் தன்னைத் தடுத்திடவோ இயலாது, அவர் அரசின் அடிப்படைக்கே பொற்கட்டி தந்துள்ளோம் எனப் புகலும் டாட்டாக்கள், பிர்லாக்கள், டால்மியாக்கள்; பஞ்சையாய்ப் பாமரரை ஆக்கிவிட்டுப் பருத்தி ஆலையிலே பெரும் பொருள் ஈட்டிடுவோர், குடைந்தெடுத்து வந்திடுவீர், குவலயம் தழைத்திடவே என்றுரைத்து எளியோரை அமர்த்தி, அவர் குவிக்கும் இரும்பாலும் கரியாலும் பொற்கோட்டை கட்டிடுவோர், பொருளாதாரக் கயிற்றில் அரசைப் பிணைத்திடுவோர், பொல்லாத போக்கினராம் முதலாளிகட்கே எல்லாம் என்றாகிவிட்ட இழி நிலையைக் காண்கின்றோம். சோஷியலிசம் பேசுங்கள், சுவை உண்டு, சூடுண்டு; ஆயினும், தனியார் துறை உண்டு மறவாதீர்! என்றுரைத்து, பன்னாள் பாடுபட்டுப் பல பெரியோர் வகுத்தளித்த பாகுபாடு அகற்றும் முறையாம் சமதர்மமதைக் குலைத்திட்ட வன்கணாளர், கொலு வீற்றிருக்கும் நம் குடியாட்சிக் கோமான்கள் தமக்குக் கொஞ்சும் பொருளானார்கள்! உழைக்கின்றான்; உருக்குலைந்து உழல்கின்றான், ஓராயிரம் நோய்க்கிருமி உடலை அரிக்கிறது; உற்பத்தி பெருக்கிடுக! உற்பத்தி பெருக்கிடுக! என்று ஊராள்வோர் உரைக்கின்றார்; உற்பத்தி பெருகுவதும் உழைப்பாளி நொறுங்குவதும் காண்கின்றோம், இந்நிலையில் உள்ளதந்தோ தொழிலுலகம்!

விந்தைத் திட்டம் இதோ, விரட்டிடுவோம் வறுமைதனை, ஐந்து ஆண்டினிலே அமைத்திடுவோம் நல்வாழ்வு என்று அறிவித்து ஆளவந்தார், மூன்று திட்டங்கள் முடித்துவிட்டார்! மக்கள் முதுகெலும்பை நொறுக்கி விட்டார்! திட்டங்கள் நடாத்திப் பின் திரும்பிப் பார்க்கின்றார், தேனாறு எங்கே! பாலாறுதானெங்கே!! என்று கேட்கின்றார்!! ஓடுவதோ உழைப்பாளி உகுத்திட்ட கண்ணீரும் செந்நீரும்! காணுகின்றார்! கண்டு பின்னர்க் கூறுகின்றார், பெருகிய செல்வமது சென்ற இடம் தெரியவில்லை! ஏழைக்கு அச்செல்வம் வாராத காரணமும் எள்ளளவும் புரியவில்லை! எங்கோ ஓர் "மர்மம்' இருக்கிறது, கண்டறிவோம்; எம்மிடம் அவ்வேலைதனை விட்டுவிட்டு, நாட்டினரே! உழைத்திடுவீர்! இந்நாடு பொன்னாடு ஆகிடும் உம் திறத்தாலே!! என்று ஊக்கவிக்கும் பேச்சினை ஊற்றித் தருகின்றார்.

மூன்றடுக்குக்காரன் அவன் எட்டடுக்கு ஏறிவிட்டான்! மூட்டை சுமப்பவனோ, குப்பை அள்ளுகின்றான்; செல்வச் சுமைதாங்கி செருக்குடன் உலவுகிறான், சிவனே உன் பாதம் சேர்த்துக்கொள்! எனை என்று செபிக்கின்றான் உழைப்பாளி. மாளிகையின் மணம் பரவி மயக்கமளிக்கிறது. பாட்டாளி விடுதியிலே வறுமை பாம்பாய்ப் படமெடுக்கிறது, இந்நிலையில் சமுதாயம் இருந்திடின் என்னாகும் என்பதனை எத்தனையோ வித்தகர்கள் எடுத்துரைத்துச் சென்றுள்ளார். அத்தனைக்கும் மாற்று மருந்துண்டு, பெற்றிடப் பொருள் உண்டு என்று இறுமாந்து கிடக்கின்றார் செல்வரானோர். எமக்கு அவர்! அவர்க்கு யாம்! என்றே உள்ள ஓர் எழுதாத ஒப்பந்தம் இயக்கி வருகிறது ஆட்சி முறைதன்னை. இந்நிலையில், இல்லாமை போவதெங்கே! இடுப்பொடிந்ததும் இருமிக் கிடப்பதும், ஓட்டைச் சட்டியும் ஓலமிடுவதும் குப்பைப் கூளமும் எலும்புருவங்களும், இதோ! ஐந்தாண்டுத் திட்டம் பெற்றெடுத்த அழகரசர் யாம்! என்று அறிவிக்கக் காண்கின்றோம்.

தைத் திங்கள் வருகின்ற பொங்கல் நாளில்
தங்கத்தைச் சுமக்கின்ற மகளிர் ஆக்கும்
நெய்ப்பொங்கல் சுவைத்துண்டு மகிழ்ச்சிகொள்வர்
நிதிபடைத்த சீமான்கள்; என்றும் எங்கள்
கைதொட்டு வாய்பட்டதுண்டோ பொங்கல்?
கண்மட்டும் ஓயாமல் பொங்கும்! பொங்கும்!
தெய்வங்கள் திருநாட்கள் எங்கட் கில்லை:
தெருவோரச் சாக்கடையில் வருமா தெப்பம்?

வெட்கமாகக்கூட இருக்கிறது, வேதனை சூழ்நிலையினிலே விழாக் கொண்டாடுக என்று கூறுகிறோமே என்று கவிஞர் இராஜேந்திரன் கவிதையைப் படித்திடும்போது.

ஆயினும், தமிழர்தம் விழாவாம் பொங்கற் புதுநாள் விழாவினைக் கொண்டாடுதல் முறையே என்று கூறிட முற்படல் ஏனோவென்றால், இவ்விழா உண்டு உருசி கண்டு மயங்கிக் கிடந்திடவுமல்ல: பழய கணக்கினைத் துடைத்திடு, படையலிட்டேன்! பரமனே! புதுக் கணக்குப் போட்டிட முனைகின்றேன் நான்! என வேண்டிடும் வகைக்கும் அன்று; சமுதாய நிலைதன்னை உணர்ந்திடவும் திருத்திடவும் உழைப்போர்க்கே இவ்வுலகம் எனும் உயர்நெறி வெற்றிபெற நாம் நம்மாலான அளவு பாடுபடுதல் வேண்டும் என்ற உறுதி பெறவும், நல்லெண்ணம் உள்ளமதில் பொங்கிடுதல் வேண்டும் என்பதற்கே இது விழா மட்டுமன்று விழி திறந்திட ஓர் அழைப்பு என்று கொண்டிட வேண்டும். அக்காரணம் பற்றியே நமது கழகத்தினரும் நற்றமிழை நாடு வாழத்தந்திடும் புலவர் பெருமக்களும், இவ்விழாவினை தமிழ், தமிழகம், தமிழ் நெறி என்பன பற்றிய விளக்கம் அளித்திடும் விரிவுரையாற்றுதற்கும், பண்பு மிகுந்திடும் முறை பற்றிய விளக்க உரை தந்திடுவதற்கும் வாய்ப்பாக்கிக் கொள்கின்றனர். கண்ணுக்கு விருந்து இல்லம் தந்திட, கருத்துக்கு விருந்து கற்றோர் அளித்திட இவ்விழா பாற்பொங்கலாக மட்டுமன்றித் தூய எண்ணப் பொங்கலாகவும் இருந்திடக் காண்கின்றோம். இந்த நற்பயன் பெறவே இந்நாளை விழா நாள் என்கின்றோம். மெய்யான விழாவோ, எல்லார்க்கும் எல்லாம் இனிது உளது என்ற நெறி வெற்றியுடன் அரசோச்சும் நன்னாளே; இன்றல்ல!

இந்நாள், இஞ்சியும் மஞ்சளும், கதலியும் கரும்பும், செந்நெலும் பிறவும் கொஞ்சுமொழி பேசிடும் கோலம்தனைத் தந்திடும் திருநாள்; உழைப்பால் கண்டிடும் "விளைவு'தனைக் கண்டிடச் செய்திடும் உன்னதமிகுநாள்! விதைத்தவர் அறுப்பர்! எனுமொழி தன்னில் தொக்கியுள்ளதத்தனையும் அறிந்து கொள்ளும் நல்வாய்ப்பு அளித்திடும் ஓர் அறுவடைத் திருநாள். இங்கு நாம் வாழப்பிறந்தோம், வாழ்வின் வகை நமது உழைப்பின் வகையையும், உழைப்பின் விளைவைப் பயன்படுத்தும் முறையையும், அம்முறையினைச் சீராக வகுத்திடும் அரசின் திறத்தையும், அந்தத் திறத்தினைப் பெற்றுள்ளோரையே அரசோச்சிடச் செய்திடும் உரிமை பெற்ற மக்களின் அறிவாற்றலையும் பொறுத்துளது.

துள்ளிடும் புள்ளிமான்களுக்குத் தோழன் வேங்கை என்று கண்டிடின், காடும் கெடும்! நாட்டினிலேயே இது போன்ற முறை ஒன்று நீடிக்கவிட்டிடின் என்னாகும்? இப்போதுள்ள நிலையே என்னாகும் என்பதற்குப் பதில், வேறு எதற்கு!

எனவே, தம்பி! வாழ்வின் விளக்கம் பெற்றிடவும், வாழ்வினைச் செம்மையாக்கிடத்தக்க முறைபற்றி அறிந்திடவும், அந்த முறைக்கேற்ற அரசு அமைத்திடவும், உறுதி தேடிப் பெற்றிடவும் இந்நாள் பயன்படுதல் வேண்டும்.

இவ்வாண்டு அரசாள்வோரே, பொங்கற் புதுநாளை ஏர்முனைத் திருநாள் என்று கொண்டாட முன்வந்துள்ளனர்! இது மெத்தவும் பாராட்டி வரவேற்கத்தக்க மாற்றம். ஏர் முனையின் வெற்றியே போர்முனை வெற்றிக்கும் அடிப்படை! ஒரு நாட்டு வாழ்க்கையின் அச்சாணியே உழவு; அதிலும் விரிந்து பரந்துள்ள இந்நாட்டில் இன்றும் நூற்றுக்கு எண்பதின்மர் என்ற அளவுள்ள மக்கள் உழவுத் தொழி-லேயே ஈடுபட்டவர்கள்; இன்று நேற்றல்ல, ஆயிரமாயிரம் ஆண்டுகளாக!