அறிஞர் அண்ணாவின் கடிதங்கள்


அகமும் புறமும்
2

நிலத்திடை
நீரிடை
கானிடை
மலையிடை

என்று எங்கெங்கு விளைவுபெற முடியுமோ அத்தனையும் பெற்று வாழ்ந்தவர் முன்னோர். அவர்கள் நேர்த்தி மிகு உழவு முறை வகுத்து நடாத்தி வந்த அந்த நாட்களில், இன்றைய நாகரிக நாடுகள் பல, காடும் மேடும் கொண்டதாக, கண்டதைத் தின்றிடும் விலங்குப் போக்கினரின் உறைவிடமாக இருந்து வந்திருக்கின்றன இன்று இத்திருநாடு, அமெரிக்க உணவு பெற "ஆள்' அனுப்பும் நிலைக்கு முன்னேறி விட்டிருக்கிறது. பெற்றோம் பெருவெற்றி! என்கிறார்கள் அரசாள்வோர், ஐயமிட்டிட அயலவர் ஒப்புக் கொண்டது கேட்டு, உளம் பூரித்து!

இந்நாடு தன்னிறைவு பெறவும், இந்நாட்டில் கிடைப்பது இந்நாட்டவரிடையே வஞ்சனையின்றிப் பகிர்ந்தளிக்கப் படவுமான முறை கண்டிட வேண்டும். அதிலே நாம் பெறும் வெற்றியைப் பொறுத்தே எதிர்காலம் வடிவமெடுத்திடும்.

மணமற்ற மலர், சுவையற்ற கனி, வெந்திட மறுத்திடும் காய்கறி, இவைகளைக் கொண்டு விழா கொண்டாடிட முடியுமோ? அஃதே போலத்தான், வாழ்வு விழாவாக அமைய வேண்டிடின், பொருள்கள் பயன் தருவனவாக இருந்திடல் வேண்டும், பெற்றிடும் பயன் அனைவர்க்கும் என்ற நெறி நிலைத்திட வேண்டும்.

பொங்கற் புதுநாள், புத்தாடை அணிந்த பூவையின் புன்னகையைப் பெற்றுக் களித்திட மட்டுமன்று; இன்று போல் இன்பம் என்றும் இருந்திடவும், நமக்குக் கிடைத்ததுபோல் இன்பம் எல்லோருக்கும் கிடைத்திடவும் வழி யாது, அதற்கு நாம் எங்ஙனம் பாடுபட வேண்டும் என்பது பற்றி எண்ணிப் பார்த்திடவும், உறுதி பூண்டிடவும் பயன்படுதல் வேண்டும்.

கண்ணே! கனியமுதே! கற்கண்டே! செந்தேனே! என்று கொஞ்சினால் மட்டும் போதுமா, குழந்தை மகிழ்ச்சி ஒன்றினாலேயே குமரனாகிட முடியுமா? இயலாதல்லவா? அதுபோலவே, இந்நாடு எந்நாடு! பொன்னாடு. புலவர் போற்றிய திருநாடு, வீரம் பொங்கிடும் ஆற்றல் மறவர் நாடு. என்றெல்லாம் புகழ்பாடுவதால் மட்டும் நாட்டினை நன்னிலைக்குக் கொண்டு வந்துவிட முடியுமா? நாட்டை நன்னிலைக்குக் கொண்டு வந்திடும் பொறுப்பினை நாம்ஏற்றுக் கொண்டாக வேண்டும். புதிதாக நாம் எதனையும் ஆக்கக் கூடத் தேவையில்லை; நாட்டிலே உள்ளது என்ன என்று கண்டறிந்து பெற்றாலே போதும்.

எரிமலையும் பாலை நிலமும், சதுப்பும் நிலநடுக்கமும், கடற் கொந்தளிப்பும் பிறவுமான இயற்கையின் கோபம் இந்நாட்டின் மீது அதிக அளவு வீசப்படவில்லை. மாறாக இயற்கை இங்கு பசுமையையும் வளத்தையும் பாங்குடன் அளித்திருக்கக் காண்கின்றோம். வாழ்ந்தே அறியாத மக்களாகவும் இந்நாட்டவர் இல்லை; "மகஞ்சதாரோ, அரப்பா' எனும் நிலைகளை நீண்ட நெடுங்காலத்திற்கு முன்பே பெற்றிருந்த சீர்மிகு வாழ்க்கை நடாத்திய மக்கள் என்று வரலாறு காட்டுகின்றது. இந்நிலையில், இங்குச் சிலர் நச்சுக் காற்றினைப் பரவவிடும் போக்கினை மட்டும் நீக்கிடும் ஆற்றல் நமக்கு இருந்திடின், எக்குறையும் இங்கு இல்லை என்று உலகினை நோக்கித் தலை நிமிர்ந்து கூறிட இயலும். இன்று நிலைமை அதுவோ? இல்லையே! வீட்டிலும் சரி, நாட்டிலும் சரி!

பொங்கற் புதுநாள்! அதோ உன் அங்கயற்கண்ணி அழகுக்கு அழகளிக்கும் புத்தாடை பூண்டு நடக்கின்றாள், உன் இதய மேடையில்! உன் செல்வங்கள் பழத்தைக் குழைத்துக் கொண்டிருக்கக் கண்டு, அடிக்கிறேன் பார்! என்று மிரட்டியபடி அருகே சென்றிடும் அணிமயில், அடிக்கின்றாளா, பார்! இல்லையே! அணைத்துக் கொள்கின்றாள்! முத்தம் அளிக்கின்றாள்! ஏன்? அந்தச் சுட்டிப் பயல், பழம் குழைத்த விரலைத் தாயின் உதட்டருகே கொண்டு சென்று, அம்மா! அம்மா!! என்று கொஞ்சிவிட்டான்; அவ்வளவுதான்! ஒரு பழமா, உள்ள பழம் அத்தனையும், கையால், காலால் அவன் குழைத்துப் போட்டால்கூட அந்தக் காரிகையின் கண்களுக்கு விருந்தாகத் தான் தோன்றும். காணுகின்றாய், கண்கள் களிநடம் புரிந்திடுகின்றன. ஆனால், இந்தப் புத்தெழில் இல்லத்தரசி பெற்றிடக் கடன்பட்டிருப்பாயேல். அந்தக் கண்கள் கவலைக் குறிகளாக அல்லவா மாறிவிடும்!

"ராஜாபோல இல்லே! இந்தப் பட்டுச்சட்டை?'' என்று கேட்கிறாள், உன்னை வென்றாள். ஆம்! என்கிறாய் இழுத்தாற் போல, பட்ட கடனை நினைவுபடுத்திக் கொண்டு; அவள் புரிந்து கொள்கிறாள்; பூத்த மலர் வாடுகிறதே! கண்டனையா?

அந்தக் குடும்பத்தை விட்டுவிடு, பொங்கற் புதுநாள் இன்னின்னது வேண்டும் என்று கேட்டு, ஆகட்டும் என்று தலை அசைத்து, கடைசியில் இல்லை என்று கைவிரித்து விட்ட நிலையில் எத்தனை எத்தனை குடும்பங்கள்! ஆங்கு விழாவின் காரணமாக மகிழ்ச்சியா பிறந்திடும்? விம்மல்; குமுறல், வேதனை.

விழா முழுச்சுவை தந்திடுவதாக இருந்திட வேண்டுமெனில், அது எல்லோர்க்கும் விழாவாக இருத்தல் வேண்டும். அந்த நிலை கண்டிட உழைப்பதிலேயே ஓர் தனி மகிழ்ச்சி பெற்றிடலாம்.

எல்லோரும் ஒன்றுதான், எல்லோரும் வாழப் பிறந்தவர் களே என்று கவிதை மேற்கோள்கள் காட்டி எத்தனை நாளைக்கு நமக்கு நாமே மயக்கமூட்டிக் கொள்வது?

மாரிதான் சிலரை வரைந்து பெய்யுமோ!
காற்றும் சிலரை நீக்கி வீசுமோ?
மாநிலம் சுமக்க மாட்டேன் என்னமோ?
கதிரோன் சிலரைக் காயேன் என்னுமோ?

பொருட்சுவை மிகுந்திருக்கிறது ஏடளிக்கும் இப்பாடல்! குரல் இனிமையும் இசை அறிவும் பெற்றவரிடம் சிக்கிக் கொண்டால் போதும், இப்பாடலைக் கொண்டு "ஒரு மணி நேரச் சொற்சிலம்பம்' நடத்திடுவார்; அவர் நாவிலே சரஸ்வதி தாண்டவமாடுவதாகப் பாராட்டப் பெறுவார். ஆனால், தம்பி! இல்லாமை எனும் கேடு பீடித்துக் கொள்வாரை, மாரி மாய்த்து விடுகிறது, காற்று பிய்த்தெறிகிறது, கதிரவன் சுட்டுப் பொசுக்குகிறான். மாநிலம் மட்டும் சுமக்க மறுப்பதில்லை, ஏனெனில் வறியவன் உடல் தேய்ந்து தேய்ந்து வெறும் எலும்புக் கூடாகிப் போய்விடுவதால்! அவன் இருப்பது மாநிலத்துக்குத் தெரிவதுகூட இல்லை!

அறிநெறிதனை எடுத்தியம்பிடின், நல்லொழுக்கந்தனை உணரச் செய்திடின், மக்களை நன்மக்களாக்கிடின், சமூகத்தில் உள்ள கேடுகள் மாய்ந்தொழிந்து போகும் என்கின்றனர். அதுபோல் அறநெறி கூறிடல் கூடாது என்று கூறுவேன் என்ற எண்ணத் தேவையில்லை, தம்பி! ஆனால், அவையாவும், எரியும் கொப்பரை மீது தெளிக்கப்படும் பன்னீர்த் துளிகளெனப் பொரிந்து போகின்றன.

செய்ந்நன்றி கொல்லன்மின்;
தீநட்பு இகழ்மின்;
பொய்க்கரி புகலன்மின்;
பொருள்மொழி நீங்கன்மின்;
அறவோர் அவைக்களம்
அகலாது அணுகுமின்;
பிறவோர் அவைக்களம்
பிழைத்துப் பெயர்மின்!

என்று சிலம்பு ஒலித்திருக்கிறது! புதிதாக நன்னெறி பற்றி நாம் ஆராய்ந்தறிந்து கூறிடத் தேவையில்லை. சிலப்பதிகாரத் திலேயே "பொய்க்கரி'யால் விளைந்த பொல்லாங்கு விளக்கப் பட்டுமிருக்கிறது. எனினும், சிலப்பதிகார காலத்து இளங்கோ அடிகள் கால முதற்கொண்டு இன்றளவும் செய்யப்பட்டுவரும் நன்னெறி, சமூகத்தின் போக்கை மாற்றி அமைத்திடக் காணோமே, என் செய்வது?

"தனி மனித வாழ்க்கை' என்பதே, தம்பி! இப்போது மிகமிக அரிதாகிக் கொண்டு வருகிறது சுற்றுச் சார்பின் வேகமும் நெருக்கமும், "தனி மனித வாழ்க்கை'யை இயலாததாக்கி விட்டிருக்கிறது.

கேடுசூழ் இவ்வுலகில் நடமாடிடின் கெட்டுப் போவேன் என்று கருதிக் கிரேக்க ஞானி ஒருவர், பீப்பாய்க்குள் ஒளிந்து கொண்டார் என்று கதை கூறுவார்கள்.

இன்று எந்தத் தனி மனிதரும் சமூகத்தைக் கப்பிக் கொண்டுள்ள சூழ்நிலையினின்றும் தம்மை வேறுபடுத்திக் கொள்ள முடிவுதில்லை. நோய் தாக்காதிருக்கத் தடுப்பு ஊசி போட்டுக் கொள்வதுபோல, சூழ்நிலை தம்மைத் தாக்கிடாதபடி சில தடுப்பு முறைகளை வேண்டுமானால் தேடிப் பெற்றிடலாமேயன்றி, பண்டை நாட்களைப் பெற்றிடுதல் தங்கு தடையற்ற தனிமனித வாழ்க்கையைப் போல இதுபோது இயலாது.

மக்கட் தொகை பெருக்கம் மட்டுமல்ல, மக்களுக்குள் ஏற்பட்டுவிட்டுள்ள தொடர்புகள், அவர்கள் ஈடுபடும் அலுவல்கள், அந்த அலுவல்களின்போது கிளம்பிடும் வேகம், புதியதோர் பிரச்சினையாகி விட்டிருக்கிறது.

பண்டை நாட்களைக் காட்டிலும் அதிக அளவிலும் வேகத்திலும் தனி மனிதன், சமுதாயத்திலே ஈடுபட வேண்டியிருக்கிறது.

தம்பி! வேடிக்கையாகவே இருக்கும், நான் கூறுவதனை ஆராய்ந்து பார்த்திடின், ஒரு ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு நகர்களில், இத்தனை மக்கள் "நடமாட்டம்' கண்டதில்லை; இன்றோ எந்த ஒரு காலைப் போதினைக் கணக்குக்காக எடுத்துக் கொண்டாலும், வீட்டினில் உள்ளவர்களைக் காட்டிலும் வெளியே உள்ளவர்களின் தொகையே அதிகம். எந்த நகரத்து நெடுஞ்சாலையினையும் கூர்ந்து பார்த்திடு தம்பி! சாரை சாரையாக மக்கள், ஆடவர் பெண்டிர், இளைஞர், முதியோர், சென்ற வண்ணம் உள்ளனர்! எத்தனை வேகம் கவனித்தனையா! ஓர் வலிவுமிக்கவன் வீசிடும் சவுக்கடிக்குப் பயந்து, இதோ செல்கிறோம்! செல்கிறோம்! தாமதிக்கமாட்டோம்! என்று கூறிக் கொண்டே செல்பவர் போலத் தோற்றமளிக்கிறது, நடை, வேகம், பரபரப்பு. நண்பர்கள் தொலைவிலே இருந்துகொண்டே, புன்னகையை உதிர்த்துவிட்டுச் செல்கின்றனர். வேலை! வேலை! வேலை! ஓயாத வேலை! கடிகார முள் வேலாகிக் குத்துகிறது, விழி! எழு! நட! என்று; சங்கொ- காதைத் துளைக்கிறது, கிளம்பு! கிளம்பு! உருளைகள் அழைக்கின்றன உடனே வந்திடு என்று, இத்தனை பரபரப்புக்கு இடையில், சமுதாயப் பின்னலுக்கு இடையில், தனி மனித வாழ்க்கை எப்படித் தப்பிப் பிழைத்துத் தழைத்திட முடியும்?

தம்பி! இந்தப் பிரச்சினை பற்றி அறிவாளர்கள் மேலும் நல்ல முறையில் தமது கருத்தினைச் செலுத்திட வேண்டும்.

இந்நிலையில், தனி வாழ்க்கை என்பது, அவரவர் தமக்கென அமைத்துக் கொள்ளும் வாழ்க்கை என்ற இலக்கணத்தை இழந்து விடுகிறது. வாழ்க்கையே இன்று பெரிதும், சமூகத்தில் ஏற்படும் பிணைப்பினாலும், பரவி விடும் சூழ்நிலையினாலும், இவைகளை முறைப்படுத்தும் பொறுப் பேற்றுக் கொண்டுள்ள அரசினாலும், அமைத்து அளிக்கப்படுகிறது.

அரசு இன்று மேற்கொண்டுவிட்டுள்ள பொறுப்பின் அளவும் அதிகம்; வகையும் பலப்பல.

இது, பண்டை நாட்கட்கும் இன்றுள்ள நிலைக்கும் இடையில் முளைத்துப் படர்ந்துவிட்டுள்ள மிகப்பெரிய வேறுபாடு, இதன் காரணமாக "தனி மனித வாழ்க்கை'யில் அரசின் வலிவுமிக்க நீண்ட கரம் வெகுவாகப் புகுந்து விட்டது. அரங்கு அமைப்பதும், ஆடும் முறை வகுப்பதும் மட்டுமல்ல, அரசு மேற்கொண்டு விட்டுள்ள அலுவல் ஆட முற்படுவோருக்குக் கயிறு பூட்டி இயக்குவிக்கும் அலுவலையும் அரசு மேற்கொண்டு விட்டிருக்கிறது.

எனவேதான் தம்பி! இன்று வாழ்வு செம்மைப்பட வேண்டுமெனில், அது அவரவர்கள் தத்தமது அறிவாற்றலுக் கேற்றபடி செய்து கொண்டிட இயலும் என்பதிலிருந்து வெகுதூரம் விலகிவிட்டதுடன், வாழ்வின் வகையை ஆக்கித் தந்திடும் பொறுப்பினை அரசு மேற்கொண்டுவிட்ட நிலை உறுதிப்பட்டுப் போய்விட்டிருக்கிறது.

எனவே, சீர்கேடுகள், முறைகேடுகள் நீக்கப்படுவதற்கான பணியினைத் தனி மனிதர்கள் மேற்கொண்டு வெற்றி பெற்றிட வாய்ப்பு பெரிதும் கிடைப்பதில்லை - ஒரு சிலர் அத்தகைய தூய தொண்டாற்றி வருகின்றனர், நன்றி, மகிழ்ச்சி - அரசு மேற்கொண்டிட வேண்டிய அளவுக்குப் பிரச்சினை பெரிதாகிவிட்டிருக்கிறது; சிக்கல் மிகுந்ததாகி விட்டிருக்கிறது.

அத்தனை பொறுப்பினை மேற்கொண்டுவிட்டுள்ள அரசு இருக்கிறதே அதன் பொருள் என்ன? வகை என்ன? தனி மனிதர்கள் தமது வாழ்வை வகைப்படுத்திக் கொள்ளும் வாய்ப்பையும் இழந்திட வேண்டிய விதமாகப் படை எடுத்துள்ள அரசு எனும் அமைப்பின் இலக்கணம் என்ன? விந்தை, தம்பி! மிக விந்தையானது!! அதே தனி மனிதர்கள் ஆக்கித் தந்திடும் அமைப்பே அந்த அரசு!! அதற்கா அத்தனை ஆற்றல்? ஆம்! அதற்கே!! உலைக்கூடத்தான் அமைத்துத் தருவதே வாள்! ஆயின் அந்த வாள் அவன் சிரத்தினையே கொய்திடும் வலிவு பெற்றுக் கொள்கிறதல்லவா? மனிதன் வெட்டுவதே குளம்! ஆயின் இடறி வீழ்ந்திடின் அவன் உயிரையே குடித்துவிடுகிறதல்லவா! பருகிடும் தேன், துளி சில உடலிலே தங்கிடின், சிற்றெறும்பு மொய்த்துக் கடித்திடுகிறதல்லவா, உடலை.

ஆகவே, தம்பி! இற்றை நாட்களில், தனி மனிதர்கள் பெற்றுவிட்ட வேகம் நிறைந்த வாழ்க்கை காரணமாக, சமுதாயப் பின்னலை அரசிடம் ஒப்படைத்துவிட்டிருப்பதாலும், அந்த அரசு தனிமனித வாழ்க்கையின் வடிவத்தையும் வகையையும் உருவாக்கிடும் பொறுப்பினை ஏற்றுக் கொண்டிருப்பதாலும், அத்தகைய அரசு எவ்விதமாக அமைகிறதோ அதைப் பொறுத்தே, தனிமனித வாழ்வின் செம்மையும், சமுதாய வாழ்வின் மாண்பும் இருக்கிறது.

தனிமனித வாழ்க்கை மங்கி மடிந்துகொண்டிருக்கும் இந்த நாளிலேயே இன்னமும் போதுமான தெளிவுடன் உணரப்படா மலிருக்கிற இந்தப் பேருண்மையைத் தமிழர் நீண்ட நெடுங்காலத்திற்கு முன்பே உணர்ந்து நெல்லும் நீரும் அல்ல, மன்னனே நாட்டுக்கு உயிர் அளித்திடுவோன் என்று அரசுக்கு உள்ள வலிமையினை முதன்மையானதாக்கிக் காட்டினர்.

அன்று அது எந்த அளவுக்கு உண்மையாக இருந்ததோ, அதனினும் பன்மடங்கு அதிக அளவுள்ள உண்மை அது இன்று.

மன்னன். . . என்பது அரசு முறையிலே ஒருவகை; எனவே, இன்று மன்னன் என்ற சொல்லுக்கு ஈடாக அரசு என்ற சொல்லினைக் கொண்டிடல், முறையேயாகும்.

தம்பி! மன்னன் பிறக்கிறான்; "அரசு' அமைக்கிறோம் இருவேறு நிலைகள்! இந்த இருவேறு நிலைகளுக்கிடையில், இரத்த ஆறுகள் பெருக்கெடுத்து ஓடியிருக்கின்றன என்பதனை விளக்கிக் காட்டுகிறது வரலாற்றுச் சுவடி.

"அரசு' அமைத்திடும் பொறுப்பு. தனி மனிதரின் உரிமை. அதனை நிறைவேற்றுவதிலே தனி மனிதர் எத்தனைத் திறமை கொள்கின்றனரோ, அதனைப் பொறுத்தே அரசு அமைகிறது; அதன் தொடர்பாகத் தனி மனித வாழ்க்கையின் வாழ்வும் இருக்கிறது.

எனவே, இன்று அரசியல் என்பது, தீண்டத் தகாத ஒன்று என்று எண்ணுவோர், ஏற்பட்டுவிட்டுள்ள மாறுதலை அறிந்து கொள்ளாதவர்கள் என்றுதான் கூற வேண்டும். அரசு அமைத்திடும் உரிமையைச் செவ்வனே நிறைவேற்ற வழி வகுத்திடும் கலையே, அரசியல். பாமர மக்கள் பாராளும் காலமிது என்றும், சிட்டுக்குருவிகள் வல்லூறை விரட்டும் காலமிது என்றும், எடுத்துரைத்து விட்டு, அரசியல் அத்துணை இன்றியமையாத அலுவலல்ல என்றும் பேசுவது, நாம் எவரிடம் எதைப் பறித்துக் கொண்டோம், எவர் நம்மிடம் உள்ளதைப் பறித்துக் கொள்வர் என்று எண்ணிக் கொண்டு, பொருள் எடுத்துக் கொண்டு நெடுவழி போவதற்கு ஒப்பாகும்.

தம்பி! இதனை உணர்ந்தே நாம் அரசியல் பணியினை மேற்கொண்டுள்ளோம்; இந்தப் பணியின் வகை, திறம், இதிலே கிடைத்திடும் வெற்றி என்பதனைப் பொறுத்தே, சமூக இயல், பொருளாதார இயல், கலை இயல், பண்பாட்டு இயல், நெறி இயல் என்பவை அனைத்தும் சீர் பெறுவதற்கான வாய்ப்பு இருக்கிறது.

எனவே, நாம் ஓர் விடுதலைப் போரினில் ஈடுபட்டிருக்கி றோம் என்பதனை மறந்திடலாகாது,

விடுதலை என்றால், ஒரு நாட்டைப் பிறிதோர் நாட்டார் பற்றிக் கொண்டுள்ளதனை நீக்கிடுவது மட்டுமே என்போர் குறையறிவினர்.

நமது நாட்டிலேயே, நமது நாட்டவராலேயே மூட்டி விடப்படுபவை, பூட்டிவிடப்படுபவை ஆகிய தளைகளிலிருந்து மக்களை விடுவிக்கும் போரும் விடுதலைப்போரே.

அந்தப் போரினில் ஈடுபட்டுள்ளோருக்கு, மற்றைய விழாக்களைக் காட்டிலும் இவ்விழா, கருத்துக்கு விருந்தளிக்கும் தன்மையது என்பது பற்றியே, கழகத்தவர் பொங்கற் புதுநாளைப் போற்றுகின்றனர், அதன் பொலிவு பற்றி மகிழ்ந்துரைத்து விழா நடத்துகின்றனர்.

பொங்கற் புதுநாளின் பொலிவு, தம்பி! உன் இல்லத்திலும் இதயத்திலும் ஒளி தந்திடுவதாக! என்ற என் நல்வாழ்த்தை அளிக்கின்றேன். இவ்வளவுதானா என்கின்றாயா?

தம்பி! வில்லியம் கல்லன் பிரயான்ட் எனும் அமெரிக்கக் கவிஞரொருவர் (1794-1878) "விடுதலை' பற்றித் தீட்டிய கவிதையினைப் படித்திடும் பேறு, மொழிக் கிளர்ச்சியின்போது சிறைப்பட்டிருந்தபோது கிடைத்தது.

இத்தனை கூறுகிறானே, அண்ணன் பொங்கற் புதுநாள் பற்றி, என்ன தருகின்றான் என்று எண்ணிக் கொள்வாய், தம்பி! உனக்கு நான் என்ன தந்திட இயலும், பொன்னும் பொருளுமா! சே! உன் வியர்வைத் துளியிலே அஃது விளைந்திடும்! எனவே, எனக்குக் கிடைத்ததை உனக்களிப்பது என்ற முறையிலே அந்தக் கவிதையைத் தந்திடுகின்றேன்;

விடுதலையே! இருண்ட மொய்குழல்
சுருண்டு அழகு தரும்
கொடிபோன்றாள் !
இளமங்கை !
என்று உன்னைக் கூறுகின்றார்.
உண்மை அல்ல அது,
கவிஞர் கனவில் உருவானது.
வாளொடு கரம் !
வந்திடு கேடு தடுத்திடும்,
கேடயம் மறுகரம், படைக்கலன் பலஉள
போரிடும் வீரன் நீ !
களம் பல கண்ட கட்டுடலோன் நீ !
நெறிந்த புருவம் நேர்த்தி அளித்திடும்
முகமெலாம் வடுக்கள் போர்ப்புகழ்க் குறிகள் !
இடிதனை ஏவினர் உனை அழித்திட
இலைஅதற்கு ஆற்றல் உனை வீழ்த்திட !
உலைபல தனிலே உருக்கி வடித்தனர்
உனைப் பிணைத்திடத் தளை பலப்பல
கட்டி அடக்கினோம் என்றவர் களித்தனர்.
பட்டுத் தெறித்திடப் பலமதை ஏவினாய் !
உனை அடைத்திட அமைத்தனர் ஆழ்சிறை !
உதைத்து எழுந்தனை சிறை பொடியாகிட !
கொழுந்துவிட்டெறி தீயென, நீயுமே
எழுந்தனை! எழுப்பினை, எங்குள பேரையும் !
உன்குரல் கேட்டதும் பற்பல நாட்டவர்,
இங்குளோம்! இங்குளோம் !
என்று உடன் முழக்கினர்.
அடக்கிடும் சழக்கர்கள் அரண்டு ஓடிட !

கன்னல் மொழிச் சுவையில், விழி விருந்தில், விழா மகிழ்வில் உள்ள உனக்கு இந்தக் கவிதையைத்தானா நான் அனுப்பித் தருவது என்று எண்ணிக் கொள்ளமாட்டாய்; அறிவாயே தம்பி! நீ, துறை இரண்டு, அகம்; புறம்.

அண்ணன்,

14-1-66