அறிஞர் அண்ணாவின் கடிதங்கள்


ஐந்து கால் பசு!
1

காங்கிரஸ் தலைவரும் உத்திரப்பிரதேசத்துக் காரரும்-
மதமும் இராசேந்திரரும்-
காந்தியாரும் மதமும்.


தம்பி!

பந்த பாசங்களால் கட்டுண்டு கிடக்கும் இந்தச் சடலத்தைக் கீழே போட்டுவிட்டு, பரமன் திருவடி சேர்ந்திட வழிகாண்பதே, மானிடரின் பிறவிப் பெருங்கடன் என்று கூறித் தவம் கிடப்போர் தங்கி இருக்கும், ரிμகேசம் - பனிப் படலத்தையே ஆடை அணியாகக் கொண்டுள்ள பத்ரிநாத் - எனும் திருத்தலங்களைத் தரிசித்து வர, இந்தியக் குடி அரசுத் தலைவர் பாபு இராசேந்திர பிரசாத் சென்றிருந்தார்.

அழிவுக் கருவிகளைக் குவித்து வைத்துக் கொண்டு, ஆணவ அரசுகளை அமைத்துக் கொண்டு, அமளி மூட்டிவிட எது தக்க தருணம் என்று ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் வல்லரசுகளை, "காட்டுக் குணத்தை விட்டிடுமின்! மனிதகுல மாண்பினை மதித்து நடந்திடுமின்! இனி ஒரு போர் மூண்டிடின் வென்றவர் எவர், தோற்றவர் எவர் என்று நிலை இராது, உலகமே நாசப் படுகுழியில் வீழ்ந்துபோகும்' என்று எடுத்துரைத்துப் போர் வெறியைப் போக்கிட, நடைபெற்றிடும் ஐக்கிய நாடுகளின் மன்றக் கூட்டத்திலே கலந்துகொண்டு, உலக சமாதானம் குறித்து உரையாற்றிட, நேரு பண்டிதர், நியூயார்க் நகர் சென்றார்.

குத்தும் வெட்டு மிகுந்து, கொள்ளையும் கொலையும் நடமிடும் அசாம், மொழி காரணமாக அமளியில் ஈடுபட்டிருக்கிற இழிநிலையைப் போக்கிடப் பல்வேறு தரப்பினருடன் பேசி வழிகண்டிட, μல்லாங் நகர் சென்றார் கோவிந்த வல்லப பந்த். தொகுதி மூன்று 73 கேரள மாநிலத்தில், சுதந்திரக் கட்சிக்கு வித்தூன்ற, முதுகிழவர் ஆச்சாரியார், திருவனந்தபுரம் சென்றிருந்தார்.

அவர் போன்றே பருவமுடையார் எனினும், அவரைக் காட்டிலும் உழைப்புத் திறனும் நெஞ்சுரமும் கொள்கைப் பற்றும் கொண்ட பெரியார், காமராஜர் ஆட்சியின் சாதனைகளைக் காங்கிரசாரே கேட்டு வியந்திடும் வண்ணம் எடுத்துப் பேசத் தமிழகத்தில், பல்வேறு இடங்களில், உலாவந்து கொண்டி ருக்கிறார்.

காமராஜரோ, "ஏழைகள் நெளிகின்றனர். எனக்குத் தெரியும்; ஏற்பாடுகள் பல செய்கிறோம், எனினும், எல்லாம் பணக்காரருக்கே பலன் தருகின்றன; அதுவும் தெரியும்; விலைவாசிகள் விஷம்போல் ஏறுகின்றன, கட்டுப்படுத்தத்தான் வேண்டும்; ஆனால் முடியவில்லை. நாடு பிரியவேண்டும் என்று பேசுவார்கள், நன்றாகப் பேசுவார்கள், திறமையாக வாதாடுவார்கள்; என்றாலும் நம்பாதீர்கள்' - என்று இந்த முறையில், பேசிவரப் பட்டித் தொட்டிகளெல்லாம் சென்று வருகிறார்.

***

பச்சைப் பயிரை நாசமாக்கும் வெட்டுக்கிளிகள் கோடி கோடியாக இராஜஸ்தானிலிருந்து கிளம்பி, ஆந்திர மாநிலம் வரை படையெடுத்துப், படுநாசத்தை ஏற்படுத்திக் கொண்டு வருகின்றன.

***

என்ன அண்ணா! பத்ரிநாத்தில் துவக்கிப், பயிரை அழிக்கும் வெட்டுக்கிளியின் படை எடுப்பிலே வந்து நிற்கிறாயே! ஒன்றுக் கொன்று, தொடர்பற்றுக் கிடக்கிறதே, என்றுதானே தம்பி! கேட்கத் துடிக்கிறாய். இவைகளுக்குள் தொடர்பு உள்ளன என்பதற்காகக் கூறினேன் என்று எண்ணிக் கொள்ளாதே. நமது மக்களின் கவனத்தை ஈர்த்திடும் மிக முக்கியமான நிகழ்ச்சிகள், நடவடிக்கைகள், நடமாட்டங்கள், நிலைமைகள் பல உள; அவற்றிலே சில, இவை.

திருத்தலங்களைக் காணச் செல்வது தொன்று தொட்டு இருந்துவரும் பழக்கம். இதனை, மகா மேதாவிகள் என்று தங்களை எண்ணிக் கொண்டிருக்கும் இந்தச் "சூனாமானாக்கள்' கண்டிப்பர், கேலி பேசுவர்; ஆனால் பாரதப் பண்பாடு தெரிந்தவர், நமது பாபு இராசேந்திரர், தர்ம நெறி அறிந்தவர், நமது குடிஅரசுத் தலைவர்; குலாச்சாரம், மதாச்சாரம், சதாச்சாரம் வழுவலாகாது என்ற கோட்பாடுடையவர், நமது பாபு; எனவேதான், துரைத்தன அலுவல் ஆயிரத்தெட்டு இருப்பினும், நோய்கொண்ட நிலைபற்றியும் பொருட்படுத்தாது, பத்ரிநாத் சென்றார். இவரன்றோ பாரதப் பண்பாடு தெரிந்தவர்! என்னே அவர் தம் மத உணர்வு! என்று, காங்கிரசார் பலர் பாராட்டுகின்றனர்.

தம்பி! உள்ளபடி, காங்கிரஸ் நண்பரொருவர், என்னிடம், பாபுவின் பக்திப்பிரபாவம் பற்றிப் பெருமிதத்துடன் எடுத்துப் பேசினார். முழு உண்மையைக் கூறிவிடுகிறேன்; பாபு இராஜேந்திரரின் பெருமை பற்றிப் பேசியதுடன், அந்தக் காங்கிரஸ் நண்பர் நிற்கவில்லை; சுற்றுமுற்றும் ஒருமுறை பார்த்துவிட்டு, குரலைத் தாழ்த்திச், சிறிது கடுமையையும் வரவழைத்துக் கொண்டு, நேரு பண்டிதருக்கு, இந்த நேர்த்தியான பண்பு கிடையாது, கண்டகண்ட நாடுகள் செல்வதும், கை குலுக்குகளில் களிப்பதும், அடுக்கடுக்காகச் சிகரெட் புகைப்பதும், அவசியமற்ற அரசியல் பிரச்சினைகளைப் பேசிக் கிடப்பதும், உலா வருவதும், உலகத்தின் தொல்லைகளைத் தாமாகத் தூக்கித் தோளில் போட்டுக்கொண்டு, பாரம் அதிகம்! நேரம் போதாது இவைகளைக் கவனிக்க! - என்று பேசுவதுமாக இருக்கிறார்!! என்ன பயன்! ஆத்மபலம் எங்ஙனம் கிடைக்கும்? ஆத்மபலம் இல்லையேல், அரசு, தர்ம சூன்யமானதாகவன்றோ ஆகிவிடும்; என்றெல்லாம் பேசினார். தம்பி! அவர் ஏசினார், நான், அதனை, பேசினார் என்று சொல்லத்தக்க விதமானதாக்கி இங்குத் தந்திருக்கிறேன்.

காங்கிரஸ்காரரா நேரு பண்டிதரைக் குறித்து ஏசினார் என்று தம்பி! நீ, கேட்கமாட்டாய் என்பதை நான் அறிவேன். - ஆனால் வெளுத்ததெல்லாம் பால் என்று எண்ணிக் கொள்ளும் போக்கினர், கேட்பர் - ஏனெனில், அவர்கட்கு இன்றுள்ள காங்கிரசாரின் "இரட்டை நாக்கு'ப் பற்றித் தெரியாதல்லவா!

ஒரு விஷயம், கவனித்திருக்கிறாயா, தம்பி! நமது கழகத் தோழர்கள், எண்ணுவதைப் பேசுகிறார்கள் - உள்ளொன்று வெளியே ஒன்று என்பது கிடையாது. ஆனால், காங்கிரசார், தனியாக நம்மைச் சந்திக்கும்போது பேசுவது ஒன்று; மேடை ஏறி மக்களைப் பார்த்துப் பேசும்போது, மற்றோர்விதமாக!! இதைத்தான், "இரட்டை நாக்கு' என்கிறோம். இது அந்தக் கட்சி, உள்ளுக்குள்ளே குலைந்து வருகிறது, முறிந்து கொண்டு வருகிறது, என்பதைத்தான் காட்டுகிறது.

***

"மன்னர் மன்னவா! தங்களுடைய அறிவுத் தெளிவு கண்டு, அவையிலே கூடி இருந்த அயல்நாட்டுப் பேரறிவாளர் அனைவரும், வியப்புற்றனர்; வாய்திறந்து பேசிடக்கூட அவர் களால் இயலவில்லை'' - என்று அரசனை அண்டிப் பிழைத்திட வேண்டிய நிலையினன் கூறிடக்கூடும். ஆயின், அவனே தன் ஆருயிர்த் தோழனைக் கண்டு பேசும்போது, உண்மையை உரைத்திடத் துடிக்கிறான். "என்ன செய்வர், வெளிநாட்டு விற்பன்னர்கள்! அரசபீடத்தில் அமர்ந்து கிடக்கும் மாமிசப் பிண்டத்தைக் கண்டனர்! வெறிச்சென்ற பார்வை! காரணமற்ற கண் சிமிட்டல்! பொருளற்ற பேச்சு! கவர்ச்சியற்ற சிரிப்பு! - இவைகளைக் கண்டனர். இந்த உருவாரத்திடம் உரையாடி யாது பயன்? என்றெண்ணினர் - ஏதும் பேசாது எழுந்து சென்றனர்.'' என்று கூறுகிறான்,

அஃதேபோலத்தான், இன்று, காங்கிரஸ் தலைவர்களைக் குறித்து உண்மை ஊழியர்கள், கருதுகின்றனர். வெளியே சொன்னால், வெட்கக்கேடல்லவா!!

அதுபோலவே, ஊழியர்களைப்பற்றிக், காங்கிரஸ் தலைவர் களுக்கும், மிகமிக மட்டமான கருத்துத்தான்.

பெரியார், அடிக்கடி கூறுவார் - முன்பெல்லாம் - இப்போது எப்படியோ தெரியாது - எவன் இருக்கிறான் யோக்யன், நம்முடன்? என்று.

இதை, சொத்து சுகம் இழந்தவன், குடும்பத் தொடர்பினைக் கூட அறுத்துக்கொண்டவன், ஊர்ப்பகை கிளம்பினாலும் கவலைப்படாமல், உண்மையான தொண்டாற்றுபவன், அனைவரும், பதிலேதும் கூறாமல், கேட்டுக்கொள்வர்.

தம்பி! அதுபோலவே, இப்போது, மிகப் பெரிய காங்கிரஸ் தலைவர்கள், தமது தோழர்கள் - துணைப் பணியாளர்கள் - தொண்டர்கள் - ஆகியோர்பற்றி, மிகத் துச்சமாகப் பேசுவதை, நானே கேட்டிருக்கிறேன்.

இருசாராரும், ஒருவரை ஒருவர் மதித்து, நேசித்து, வந்த காலம் போயேவிட்டது.

இப்போது இருப்பது, கூட்டுறவுகூட அல்ல; ஒருவரை ஒருவர் காட்டிக் கொடுக்காமல் இருந்து தீரவேண்டிய நிர்ப்பந்தத்தை இருசாராரும் உணர்ந்துகொண்டு, ஒரே முகாமில் இருக்கிறார்கள் என்றுதான், சொல்ல வேண்டும்.

"தெரியுமா உங்களுக்கு ஒரு விஷயம்'' என்று தோழமை உணர்ச்சி வழிந்திடும் போக்கிலே காங்கிரஸ் வட்டாரத்தினர் ஒருவர் - மிகப்பெரிய நிலையில் உள்ளவர் - அமைச்சர் என்றே வைத்துக் கொள்வேன், தம்பி! என்னிடம் ஒரு நாள் பேசத் தொடங்கினார்.

"என்ன?'' என்று நான் கேட்டேன் - எழுந்த ஆவலை அடக்கியபடி.

"சமுதாய நலத் திட்டத்தின்படி கட்டுகிறார்களே, வீடுகள், அந்த இலட்சணம் எப்படி இருக்கிறது தெரியுமா? நானே அப்படிப்பட்ட வீட்டைப் பார்த்தேன். மகா மட்டம்! உளுத்துப் போன சாமான்கள் போட்டுக் கட்டப்பட்டிருந்தது. சுவரிலே, கைவைத்து அழுத்தினால், பள்ளம் விழுகிறது. பாளம் பாளமாக வெடிப்புகள் உதிருகின்றன. பணம் பாழாகிறது. ஒரே மோசடி, வீண் விளம்பரத்துக்குத்தான் பயன்படுகிறது'' - என்று அவர் கூறினார். - என்னிடம் - தனிமையில் - மெத்த உருக்கத்துடன்!

ஆனால், மேடை மீது நின்று பேசும்போது பார்த்தால், தேன் கலந்த சொற்கள்! தீப்பொறி பறக்கும் முழக்கம்!!

இரட்டை நாக்கு, தம்பி! - ஒன்று, உண்மை பேச! மற்றொன்று, பிழைக்கும் வழி பேச!!

வேறோர் பெரிய காங்கிரஸ் தலைவர் - மிகப் பெரியவர், என்னிடமே சொன்னார்:

"யாரை நம்பினாலும் நம்பலாம், உத்திரப்பிரதேசத்தானை மட்டும் நம்பவே கூடாது. ஏற்படுகிற அரசியல் குழப்பம், சச்சரவு அவ்வளவும், உத்திரப்பிரதேசத்துக்காரரால்தான்! இந்தியாவிலே மட்டுமல்ல, பாகிஸ்தானில் கிளம்பும் சச்சரவுகள் கூட உத்தரப் பிரதேசத்தார் கிளப்பிவிடுவதுதான். நான்கூட ஒரு தடவை சொல்லிவிட்டேன், நாட்டை அண்ணாதுரை அல்ல பிரிக்கப் போவது; உத்திரப்பிரதேசத்துக்காரர்கள் செய்கிற "ரகளை' யால்தான், நாடு பிரியப் போகிறது, என்று சொல்லிவிட்டேன்.''

தம்பி! அச்சம் தயை தாட்சணியமற்ற பேச்சல்லவா இது. ஆனால், சொன்னவர், என்னிடம், தனிமையில் இதைச் சொன்னார் - மேடை ஏறினாலோ தொடை தட்டிக், கழகத்தை வம்புச்சண்டைக்கே இழுக்கிறார். "வடக்காவது தெற்காவது! இதெல்லாம் என்ன பேச்சு! வேண்டியது என்ன இப்போது? வடக்கு, தெற்கா! சோறு வேண்டும் இப்போது - வயிராறச் சோறு!'' - என்று பேசுகிறார்.

இரட்டை நாக்கினர் இதுபோல நிரம்பியுள்ளனர் காங்கிரஸ் கட்சியில்.

இந்த மனப்பான்மையுடன் அவர்களில் பலருக்கு, தமக் கென்று தயாரித்து அளிக்கப்பட்டிருக்கும் கருத்துக்களில், எது உள்ளபடி ஏற்புடையது என்பதிலே ஒரே குழப்பம்.

அவர்களை இன்று ஒரே உருவாக்கிக் காட்டுவது, கொள்கையில் உள்ள ஒருமித்த கருத்துமல்ல, நம்பிக்கையுமல்ல - ஓருருவாக இருந்தால் மட்டுமே பேருருவாகத் தெரிந்திட முடியும் - அந்தப் பேருருக்கண்டுதான், மாற்றுக் கட்சியினர், மருண்டிடவேண்டும் - அவர்களுக்கு அந்த மருட்சி இருக்கிற வரையில்தான், நமக்கு ஆட்சி - இல்லையேல் வீழ்ச்சிதான் - இந்த எண்ணம்தான், இன்று காங்கிரசாரைப் பிணைத்து இருக்கிறது.

ஒரு அரசரிடம் குற்றவேல் புரிந்துகொண்டே, அவரிடம் பற்று இன்றிப், பகையை உள்ளுக்குள் வைத்துக்கொண்டு, பணிந்து கிடப்பதுபோலப் பாவனை காட்டிக்கொண்டு, அதே போது எப்போது வீழ்வான், கைக்கொட்டிச் சிரிக்கலாம் என்று உள்ளூர எதிர்பார்த்துக் கொண்டு இருந்திடும், எடுபிடிகள், எதிரிப்படையினரைவிட, அந்த அரசுக்கு ஆபத்தல்லவா! அது இன்றுள்ள காங்கிரஸ் நிலை. இதேநிலை, பயங்கரமான புரட்சி வெடிக்குமுன்பு, பிரான்சு நாட்டிலே இருந்தது.

காவலனும், அவனுக்குற்ற தோழர்களாக விளங்கிய கனவான்களும் நடாத்திய காமக்களியாட்டங்களைக் கண்டு, வெகுண்டனர், உழைத்தும் பிழைக்க முடியாமல், உழன்று கிடந்த மக்கள்! எனினும், கோபத்தை வெளியே தெரியவிட மாட்டார்கள். அது மட்டுமல்ல, மன்னன் நடத்தும் காமக் களியாட்டத்தை, கலை என்றுகூடக் கூறிப் பாராட்டினர்! காய்ந்து கிடக்கும் இந்தப் பாறை நெருப்பைக் கக்கும் என்று கூறினால், யார் எளிதில் நம்புவர்! குமுறிக் கொதித்து, வெடித்து, நெருப்புக் குழம்பு வேகமாகப் பீறிட்டுக்கொண்டு வெளியே வரும்போதுதான், எரிமலையின் அழிக்கும் சக்தி தெரிகிறது. அதுபோன்றே, இளித்துக் கிடக்கும் இந்த மக்கள், என்ன செய்யவல்லார்! இறையே! எமைக் காத்தருளே! என்று தொழுது கிடக்கும் இந்த எலும்புந் தோலுமாயுள்ளவர்கள், எங்ஙனம் நம்மை எதிர்ப்பர்! நமது மணிமுடி விடு ஒளி கண்டு, ஆச்சரியத்தால், வாய்பிளந்து நிற்கும் இந்தப் பராரிகள், படைபலம்கொண்ட நம்மை எதிர்க்கும் துணிவினை எப்படிப் பெற முடியும்! - என்றெல்லாம் எண்ணியன்றோ வேந்தர்கள் ஏமாந்தனர். அதுபோலவே, காங்கிரஸ் கட்சியின் மூலவர்கள், தம்மை நத்திப் பிழைப்போர், தெந்தினம் பாடி நிற்போர், மாலை அணிவித்து வரவேற்போர், மனுக்கள் கொடுத்து மண்டியிடுவோர், வளைவுகள் அமைத்து வாழ்த்துக் கூறுவோர், ஆகியவர்கள், என்றென்றும் அடிமைகளாய், அறிவாற்றலற்ற வர்களாய் இருப்பர், எதிர்த்திட இயலாது, குனிந்து நிற்க, வளைந்து நிற்க, வீழ்ந்து வணங்க மட்டுமே அறிவர், நிமிர்ந்து நின்று உரிமை கேட்டிடும் வகை அறியார் - என்றுதான் எண்ணிக் கொண்டுள்ளனர்.

அது போலிருப்பதுதான் "பாமரர்' வாடிக்கை! ஆனால், அவர்கள், மிகக் கூர்மையாக, மற்றொன்றைக் கவனித்துக் கொண்டே இருப்பர் - ஆட்டிப் படைப்போர், ஆதிக்கக்காரர் - எப்போது இளைப்பாலோ, களைப்பாலோ, திடமிழந்து தடுமாறப் போகிறார்கள் - அந்தச் சமயம் வந்ததும், பாய்ந்து கீழே சாய்த்து பழிக்குப்பழி வாங்கிடவேண்டும் - என்று காத்துக் கிடப்பர்! வகை அறியாதார் அல்ல, பாமரர் - காலம் வரட்டும் என்று காத்திருக்கும் பொறுமைசாலிகள்! அறிவற்றவர்கள் அல்ல. மக்கள் - ஆத்திரத்தை அடக்கிக்கொள்ளக் கற்றவர்கள்! பிடி சாம்பலாகிப் போனவர்கள் அல்ல, அந்த மக்கள் - நீறுபூத்த நெருப்பாகி நிற்பவர்கள்!

இதை, வீழ்ந்த அரசுகள், விரண்டோடிய மன்னர்கள், வெட்டுண்ட தலைகள், காட்டுகின்றன,

இப்போது படித்தாலும், தம்பி! எப்படி எப்படியோ எண்ணம் செல்கிறது - அப்பாவிகள் என்று ஆணவக்காரர் எண்ணிக்கொண்டிருந்த நிலையில் இருந்த மக்கள், காலம் பிறந்தது என்று தெரிந்ததும், ஆர்த்தெழுந்து ஆணவ அரசு களைத் தூள் தூளாக்கிய வீரக் காரைகளைப் படிக்கும்போது.

பிரான்சு நாட்டிலே, வெட்ட வெளியை விழாப்பந்த லாக்கி, விருந்து ஏற்பாடு செய்வானாம், மன்னன்! அதைக் கட்டணம் கொடுத்துக் கண்டு மகிழ வருவராம், மக்கள்!! ஆரணங்குகள் உண்டு மிச்சமானதை ஆற்றலரசர்கள் உண்பதும், "அதரம் பட்டது எனக்கு! வேண்டாம், அவள் கரம் பட்டதே போதும் எனக்கு'- என்று சீமாட்டி முன் நின்று சல்லாபச் சண்டையிடும் சீமான்கள் களிநடமாடுவது - இவை காட்சிகள் - கட்டணம் கொடுத்துக் காண வேண்டிய காட்சிகள்!!

இதே மக்கள்தான், அதிலும், பெண்கள், படை வரிசை அமைத்துக் கொண்டு, கூட்டுக்கோலும், தட்டு முறங்களும் ஏரோட்டும் கோலும், இன்ன பிறவும் ஆயுதங்களாகக் கொண்டு, படை எடுப்பு நடத்தி, அரண்மனையில் நுழைந்து ஆங்கு காணக்கிடக்கும் போகப் பொருட்களை எல்லாம், தொட்டும் இழுத்தும், உடைத்தும் உருக்குலைத்தும், வேடிக்கை காட்டினர்!!

நல்ல வேளையாகக் காமராஜருக்கு இந்தக் காதைகள் தெரியாது - அவர் பெரிய எழுத்து விக்கிரமாதித்தன் கதையோடு தமது படிப்பை நிறுத்திக்கொண்டவர், என்கிறார்கள். எனவே அவருக்கு, அடங்கிக் கிடக்கும் மக்கள் ஆர்த்தெழக் கூடும், பணிந்து கிடக்கும் பாமரர், பிறிதோர் நாள் பயங்கரப் புரட்சி நடத்திடக்கூடும் என்பதுபற்றியே நினைப்பே எழாது.

இதனை அறிந்துள்ள மற்ற அமைச்சர்களோ, அறிந்ததைக் கூறார் - ஏனோவெனில், அவர்களுக்குப் பாபம், சங்கடமாகத் தானே இருக்கும் - என்ன கற்று என்ன பலன்! நாம் இவருக்குக் கீழ்தானே!! - என்று எண்ணும்போது அவர்களுக்குக் கற்றதை மறந்தால் நல்லது என்றுகூடத் தோன்றக்கூடும்.

***

இந்நிலையில், இன்றுள்ள காங்கிரசில், பாபு பத்ரிநாத் சென்றதைப் பாராட்டி, அது அவருடைய பக்திப் பிரபாவத்தை, பாரதப் பண்பாட்டைக் காட்டுவதாகும் என்று கனிவுடன் கூறி, அதேபோது, நேரு பண்டிதர், உலகிலே பல்வேறு இடங்கட்கு உலாவருதல் குறித்துக், காங்கிரசார் ஒருவர், கேலியாகப் பேசியதிலே வியப்பில்லை அல்லவா? ஆனால், இதிலே வியப்பு இல்லை என்பதை எடுத்துக்காட்ட அல்ல நான் இதனைக் குறிப்பிடுவது, எனக்கு, அந்தக் காங்கிரஸ் நண்பருக்குக் கொள்கையில் பிடித்தமும் அழுத்தமும் எந்த அளவு இருக்கிறது என்று தெரிந்து கொள்ளவேண்டும் என்பதிலே, சுவை கலந்த ஒரு ஆவல். எனவே நான், அவரிடம், பேச்சைத் தொடர்ந்தேன்.

***

"ஆமாம்! திவ்ய க்ஷேத்திரங்களைத் தரிசிப்பது, பாரதப் பண்பாடு என்கிறீர். இருக்கட்டும், இது, பாபு இராஜேந்திரருக்கு இருக்கிறது; ஆனால் நேரு பண்டிதரிடம் இல்லை என்கிறீர். அதுவும் சரி. ஆனால் இந்த விஷயத்தில், காந்தியார் பற்றி உமது கருத்து என்ன?'' - என்று கேட்டேன்.

நண்பருக்கு மெத்த மகிழ்ச்சி.

"உண்மையாகச் சொல்கிறேன் - இப்போது எங்கள் காங்கிரசார், காந்தியாரை அறவே மறந்துவிட்டார்கள் - உங்கள் கழகத்துக்காரர்தான், அவரைப்பற்றி, மக்களிடம் பேசி வருகிறார்கள்'' என்றார் அந்த நண்பர்.

அவருடைய அந்த முன்னுரைக்குப், புன்னகையன்றி வேறென்ன பதிலுரை இருக்க முடியும். தந்தேன் - பெற்றுக் கொண்டார் - பேச்சைத் தொடங்கினார்.

காந்தியார், பாரதப் பண்பாடு தழைக்கவேண்டும், என்பதற்காகவேதான், "ஸ்வராஜ்யம்' கேட்டார் - பெற்றுத் தந்தார்! மகா பக்திமானல்லவோ, அவர்! இராம பக்தர்! திவ்ய க்ஷேத்திரங்களைத் தரிசிப்பது, இந்து தர்மம் என்பதை நன்கு உணர்ந்தவரல்லவா!' - என்று மகிழ்ச்சி பொங்கக் கூறினார்.

"மன்னிக்க வேண்டும்! காந்தியார், திவ்ய க்ஷேத்திரங்களைப் பற்றி, மிகக் கடுமையாகக் கண்டித்திருக்கிறார்'' என்று நான் சொன்னேன்.

"ஆரம்பமாகிவிட்டதா, கழகம்!!' - என்று கோபமும் கேலியும் கலந்த குரலில் பேசலானார்.

"கோபம் கூடாது! காந்தியாருடைய மிக முக்கியமான உபதேசமே அது. நான் கூறுவதைக் கேளும். காந்தியார், திவ்ய க்ஷேத்திரங்களிலே காணப்படும், ஆபாசங்களைப் பார்த்து விட்டு மனம் நொந்து போனவர்'' - என்றேன்.

"உம்மிடம், வந்து சொன்னாராக்கும்'' - என்று குத்தலானார், நண்பர். கோபம் இருக்குமல்லவா, அவருக்கு. "என்னிடம் மட்டுமல்ல - எல்லோரிடமும் சொல்ல வேண்டும் என்பதற்காக, காந்தியார், எழுதியே வைத்துவிட்டார். படிக்கிறேன்; பதறாமல், கேளும்'' - என்று கூறிவிட்டுக் காந்தியாரின் சுயசரிதையை எடுத்தேன்.

"காந்தியார், அரித்துவாரத்தில், நடைபெற்ற கும்பமேளா பார்க்கச் சென்றார்...!'' - என்று நான் துவக்கினேன். நண்பர், "காந்தியாருக்கு, திவ்விய க்ஷேத்திரம் பிடிக்காது என்றல்லவா சொன்னாய்;'' என்றார். "சிறிதளவு பொறுமை காட்டும்'' என்று கூறிவிட்டுச் சுயசரிதையைப் படிக்கலானேன்.

"சுற்றித் திரிந்ததில் பலவிஷயங்களைக் கவனித்தேன். யாத்திரீகர்களிடம் பக்தியைக் காட்டிலும் கவனக் குறைவும், வெளிவேஷமும், துப்புக்கெட்ட தனமுமே அதிகமாக இருந்ததைப் பார்த்தேன். சாதுக்கள் கூட்டம் கூட்டமாக அங்கே வந்திருந்தார்கள். உலக வாழ்க்கையின் இன்பங்களையெல்லாம் அனுபவிப்பதற்கென்று பிறந்திருப்பவர்களாகவே அவர்கள் தோன்றினர்.''

இதை நான் படித்துவிட்டு, நண்பரின் முகத்தைக் கவனித்தேன். வேதனைக் குறிகள் தென்பட்டன.

திவ்ய க்ஷேத்திரங்களிலே, சாதுக்கூட்டம் இருந்து கொண்டு, ஆபாசமாக நடந்துகொள்கிறார்கள் என்பதை காந்தியார், எத்துணை நகைச்சுவையுடன் கூறியிருக்கிறார், கவனித்தீர்களா. . .

"உலக வாழ்க்கையின் இன்பங்களை எல்லாம் அனுபவிப்பதற்கு
என்றே பிறந்திருப்பவர்களாகவே அவர்கள் தோன்றினர்.''

இதை நாம், விரிவாக, விளக்கமாகப் பேசவும் வேண்டுமா...

மும்முலம் நீக்கினோர், ஐம்புலனை அடக்கினோர், உலகைத் துறந்தோர், கனியேனும் செங்காயேனும் கந்தமூலங் களேனும் உண்டு இருப்போர் என்று, நாம் பெருமையாகப் பேசுகிறோம். ஆனால், அரித்துவாரம், ரிμகேசம் ஆகிய இடங்களிலே இருந்துவரும் சாதுக்கள், இன்பங்களை அனுபவிக்கவே பிறந்தவர்கள் என்று காந்தியாருக்குத் தோன்றிற்று! ஐயா! காந்தியார், பக்திமான், சனாதனி, இந்து - எனினும், நேர்மை, தூய்மை, வாய்மை, இவைகளில் அசைக்க முடியாத பற்று வைத்திருந்தவர் - எனவேதான், கட்டியிருப்பது காவி எனினும் உலவுவது கங்கைக் கரை என்றாலும், பெயர் சாது சன்யாசி என்று இருப்பினும், அவர்களுடைய செயல் கண்டு, மனம் வெதும்பி, எழுதினார். இவர்களைத் தரிசிக்கவா, பாபு இராஜேந்திரர் போகவேண்டும்? - என்று நான் கேட்டேன். நண்பருக்குக் கோபம் குறைந்தது; வருத்தம் மேலிட்டது.

காந்தியார், மதத்தை வாணிபச் சரக்காக்கிக்கொள்ள வில்லை. எனவேதான், உள்ளதை உள்ளபடி உரைத்தார் - அதனைக் கேட்டுப் பலருக்கு, திவ்ய க்ஷேத்திரங்களின் மீது வெறுப்பு ஏற்படும் என்பது அவருக்குத் தெரியும் - எனினும், பொய்யும் புனைசுருட்டும் எந்தப் போர்வையிலே இருப்பினும், அதனை வெளிப்படுத்தித் தீரவேண்டும் என்று அந்தத் தூயவர் கருதினார் - எனவேதான், காவி உடையில் உலவியவர்களின் கபடத்தைக் கண்டித்தார்? இன்றோ, கதர் உடையில் இருந்து கொண்டு, எத்துணை அக்ரமம் செய்தாலும், கண்டிக்கப் பலர் கூச்சப்படுகின்றனர், தண்டிக்கச் சில அதிகாரிகள் அச்சப் படுகிறார்கள்!'' என்று நான் கூறினேன். நண்பர், நீண்ட பெருமூச்செறிந்தார்.