அறிஞர் அண்ணாவின் கடிதங்கள்


ஐந்து கால் பசு!
2

"நண்பரே! ஐந்து கால் பசு பார்த்திருக்கிறீரா?'' என்று நான் கேட்டேன். அவர் திடுக்கிட்டுப் போய், "என்னய்யா ஐந்தாண்டுத் திட்டங்களைத்தான் பார்த்துக் கொண்டிருக்கிறோமே. அது போதாதா! ஐந்து கால் பசு வேறு பார்க்கவேண்டுமா?'' என்று கேட்டார்.

"காந்தியார், பார்த்தாராம்'' என்றேன் நான்.
"நல்ல வேளை, ஐந்தாண்டுத் திட்டத்தைப் பார்க்கவில்லை அவர்! ஐந்து கால் பசுவைப் பார்த்தார் போலும். உம்! அது என்ன சொல்லும், கேட்போம்.'' என்றார் ஆயாசத்துடன்.

"சொல்வதாவது! படிக்கிறேன். கேளும்'' என்று கூறிவிட்டு சுயசரிதையைப் பிரித்தேன். "இங்கே ஐந்து கால்களோடு கூடிய ஒரு பசுவையும் பார்த்தேன்.

நான் ஆச்சரியப்பட்டுப் போனேன். ஆனால் விஷயம் தெரிந்தவர்கள் சீக்கிரத்தில் எனக்கு ஏற்பட்டிருந்த பிரமையைப் போக்கிவிட்டனர். அந்தப் பரிதாபகரமான ஐந்து கால் பசு, கொடியவர்களின் பேராசைக்குப் பலியானதேயன்றி, வேறு அல்ல. உயிருடன் இருந்த ஒரு கன்றின் காலைத் துண்டித்து, இப்பசுவின் தோலில் பொருத்தியிருந்தார்கள். அதுதான் இந்த ஐந்தாவது காலே ஒழிய, வேறு ஒன்றும் இல்லை என்பதை அறிந்தேன்! இவ்வித இரட்டைக் கொடுமையின் பயனைக் கொண்டு, ஒன்றும் அறியாதவர்களின் பணத்தைப் பறித்து வந்தார்கள். இந்த ஐந்து கால் பசுவைப் பார்க்க ஆவல் கொள்ளாத இந்துவே இல்லை. இந்த அற்புதப் பசுவிற்குத் தாராளமாகத் தருமம் செய்யாத இந்துவும் இல்லை.''

தம்பி! காங்கிரஸ் நண்பர், வெடுக்கென்று, என் கரத்திலி ருந்து புத்தகத்தைப் பறித்துக்கொண்டார் - கேட்டிருந்தாலே கொடுத்திருப்பேன் - அவருக்கு ஆத்திரம், அவசரம் - ஐயப்பாடு, நான் உண்மையில், புத்தகத்தைத்தான் படிக்கிறேனா, அல்லது இட்டுக்கட்டிப் பேசுகிறேனா, என்று சந்தேகம்.

புத்தகத்தைப் பார்த்தார் - உண்மை அவர் உள்ளத்தை உலுக்கிவிட்டது. வேதனை அடைந்தார்.

"உலக இன்பத்தை அனுபவிக்கும் சாதுக்கள்! அக்ரமமான புரட்டு நடத்திப் பணம் பறிக்கும் எத்தர்கள்! அற்புதம் என்று நம்பி, பணம் பறிகொடுத்து பூஜித்துக் கிடக்கும் அப்பாவிகள்!! - திருத்தலங்களில் காணக்கிடப்பவை இவை!! இங்கு சென்று வருவதால் என்ன பலன்?'' என்று நான் கேட்டேன் - அவர் பதில் கூறுவார், என்ற எண்ணத்துடன் அல்ல! அவர் மனம் மாறுவது நன்கு தெரிந்ததால்.

நண்பரே! புரட்டுக்கும் புனிதத் தன்மைக்கும் வித்தியாசம் தெரியாமல், காவி கட்டியவனைக் கடவுள் அருள் பெற்றோன் என்றெண்ணிக் கருத்திழந்து கிடக்கும், இந்த மக்களுக்கு, மத வெறி எந்த அளவு இருந்ததாம் தெரியுமா?

கல்கத்தாவிலிருந்து அரித்துவாரம் செல்லும் இரயில், மிக நெருக்கடியானதாம் - வெப்பம் கொல்லுமாம். ஆனால் அப்போதும், இந்து, இந்து தரும் தண்ணீரைத்தான் சாப்பிடுவானாம்.

காந்தியார் எழுதுகிறார், இதைக் குறித்து; கேளும்:

"இத்தகைய பிரயாணத்தினால் ஏற்பட்ட நீர் வேட்கையில் கூட, வைதிக இந்துக்கள் முஸ்லீம்களிடமிருந்து தண்ணீர் வாங்கிக் குடிக்க மறுத்தனர். இந்து தண்ணீர் கிடைக்கும் வரையில் அவர்கள் காத்துக் கொண்டுதான் இருந்தார்கள். ஆனால் இதே இந்துக்கள் நோயுற்றுவிடும்போது, டாக்டர் தங்களுக்குக் கொடுக்கும் சாராயத்தையும் மாட்டிறைச்சிச் சூப்பையும் குடிக்கத் தயங்குவதில்லை. தங்களுக்கு மருந்துத் தண்ணீர் கொடுப்பவர் கிருஸ்தவக் கம்பவுண்டரா முஸ்லீம் கம்பவுண்டரா என்பதைக் குறித்து விசாரிப்பதும் இல்லை என்பது கவனிக்க வேண்டியதாகும்.''

நண்பருக்கு, மேலும் விளக்கங்கள் தரத் தேவையில்லை என்று தோன்றிற்று; எனவே, தம்பி, வேறு பகுதிகளை, படித்து மட்டும் காட்டினேன் - விளக்கம் கூறாமல். அந்தப் பகுதிகள் இவை.

"இயற்கைக் காட்சிகள் மிகுந்த இடங்களை மனிதர்கள் உபயோகித்து வந்த விதங்கள் என் மனத்திற்குச் சங்கடத்தை உண்டாக்கின. அரித்துவாரத்தைப் போல, ரிμ கேசத்திலும் மக்கள் ரஸ்தாக்களையும், அழகிய கங்கைக் கரைகளையும் ஆபாசப்படுத்தி வந்தனர். கங்கையின் புனித நீரையும் அசுத்தப் படுத்த அவர்கள் தயங்கவில்லை. கொஞ்சத்தூரம் போனால் ஜன நடமாட்டமில்லாத இடங்களுக்கு எளிதாகப் போயிருக்கக் கூடுமெனினும், அப்படிச் செய்யாமல், பாட்டைகளிலும் நதிக் கரைகளிலும் மக்கள் மலஜலம் கழித்ததைக் கண்டு என் மனம் அதிக வேதனை அடைந்தது.''

தம்பி! காந்தியாருக்கு இருந்துவந்த அழுத்தமான மத நம்பிக்கையை, நான் குறிப்பிட்ட காங்கிரஸ் நண்பர் எடுத்துக் காட்டி, பாபு இராசேந்திர பிரசாத் அத்தகைய பாரதப் பண்பாடு வழி நிற்பவர் என்று பெருமிதத்துடன் பேசினார் - ஆனால், காந்தியார், தமது சுயசரிதையில் ஒளிவு மறைவு இன்றி, மதத்தின் பெயரால் நடத்தப்படும் மோசடிகளையும், பக்தி காரணமாகப் பாமரர், ஐந்து கால் பசுவைப் பூஜிப்பதுபோன்ற அளவு ஏமாளிகளாகிப் போவதையும், எடுத்துக்காட்டியிருப்பதை நான் படித்துக்காட்டவே, என்ன எண்ணிக்கொண்டாரோ தெரிய வில்லை, மேற்கொண்டு பாபுபற்றியோ, பத்ரிநாத்பற்றியோ, பேச்சை எடுக்கவில்லை.

***

மத நம்பிக்கையைக் கைமுதலாக்கிக்கொண்டு, ஆதிக்கம் செலுத்த விரும்புவோர், கொழுக்கத் துடிப்போர் தவிர, மற்ற எவரும், எத்துணை மத நம்பிக்கைக் கொண்டவர்களாக இருப்பினும், பொய்யும் புரட்டும், மூடத்தனமும் ஏமாற்று வித்தையும், திருத்தலங்களில் காணப்படின், மூடிமறைக்காமல், கண்டித்து வந்தனர். அவ்விதம் கண்டித்தவர்களை, வன்கணாளர்கள், விட்டுவைத்ததுமில்லை.

அரித்துவாரம், ரிμகேசம், காசிபோன்ற க்ஷேத்திரங்களில் நடைபெற்ற புரட்டுகளையும், நெளிந்த ஆபாசங்களையும், எடுத்துக் காட்டியதுபோலவே, காந்தியார், காசியிலே உள்ள கண்றாவிக் காட்சியையும், கல்கத்தாவில் காளிமாதாவுக்குத் தரப்படும் உயிர்ப்பலிக் கொடுமையையும், எடுத்துக்காட்டிக் கண்டித்தார்.

***

சுயமரியாதைக்காரரின் கண்டனம் என்றால், வெகு எளிதாக, நாத்திகப் பட்டம் கட்டிப், பொதுமக்களை அவர்களின்மீது ஏவிவிடலாம் என்று, மதத்தால் மந்தகாச வாழ்வு நடாத்துவோர், எண்ணிக்கொள்வர்.

ஆனால், காந்தியாரோ, மதவாதி; சனாதனி; இராம பக்தர்; வைஷ்ணவ ஜனதோ என்று பாடிக் கேட்போர் உள்ளத்தை உருக்கி, அனைவரையும் பக்தர்களாக்கவே பாடுபட்டவர் அவர்; மதத்தைக் காட்டி எத்தர்கள் ஏமாளிகளைச் சுரண்டிக் கொழுத்திடுவதை எடுத்துக்காட்டிக் கண்டிக்கும்போது, என்ன செய்ய முடியும்? நாத்திகம் பேசுகிறார் என்று கூறினால், மக்கள் நம்பமாட்டார்கள். எனவே, அவரை ஒழித்துக்கட்டினால் மட்டுமே, தங்கள் சுறண்டல் தங்கு தடையின்றி நடைபெறும் என்ற முடிவுக்கு வந்தனர். மூன்று முறை சுட்டு அல்லவா மதவெறி, தன் உண்மை வடிவத்தைக் காட்டி அன்புருவாக அண்ணலின் உயிர் குடித்தது.

***

தம்பி! இந்தத் திங்கள் அவருக்கு "ஜெயந்தி' நடத்தினார்கள் காங்கிரஸ் கட்சியினர் - அந்த மேடைகளிலே ரிμகேசிலும் அரித்துவாரத்திலும், காளிகட்டத்திலும் காசியிலும் காணப் பட்ட கபடம், கயமைத்தனம், ஆபாசம், அக்கிரமம், இவைகளைக் கண்டித்த காந்தியாரைக் காட்டி இருக்க மாட்டார்கள். அந்த காந்தியாரைத்தான் கொன்று போட்டாயிற்றே! இப்போது அவர்கள் காட்டும் காந்தியார், இவர்களுக்கு ஓட்டு வாங்கித்தரும் கருவியாக்கப்பட்ட காந்தியார். நான், தம்பி! அந்த காங்கிரஸ் நண்பருக்குக் காட்டிய காந்தியார், காசியைக் கண்டு, மனம் குமுறியதையும் கூறுகிறேன், நாட்டினருக்கு எடுத்துக் கூறும், நல்ல தம்பியாயிற்றே, நீ, அதனால்.

***

காசி! கர்மம் யாவும் தீருமாம், அந்தத் திருத்தலம் சென்றால். புனிதக் கங்கை, பாபம் போக்கும் - காசி விசுவநாதரின் தரிசனம், புண்யம் தரும். காசியைத் தரிசித்த பிறகுதான், ஒருவன், பூரண இந்து ஆகிறான் என்பர், வைதிகர்கள்.

அத்தகைய காசிக்குக் காந்தியார், சென்றார் - பயபக்தி யுடன் - தூய உள்ளத்துடன், என்ன கண்டார்? நான் கூறத் தேவையில்லை, அவரே, விளக்கமாக எழுதிவிட்டிருக்கிறார். துவக்கத்திலேயே, தமது துக்கத்தைக் காட்டுகிறார்.

"நான் சுவாமி தரிசனத்துக்காக, காசி விசுவநாதர் கோயிலுக்குப் போனேன்.

"நான் கண்டவை எனக்கு மனவேதனையைத் தந்தன.

"நான் அடைந்த ஏமாற்றம், நான் எதிர்பார்த்திருந்ததை விடப் பன்மடங்கு அதிகமாக இருந்தது.''

காந்தியார், ஆழ்ந்த நம்பிக்கைக் கொண்ட இந்து. ஆனால் வேறு பலர், மதப்புரட்டுகளைக் கண்டறிந்தவர்கள், திருத்தலங் களிலேயே நடைபெறும் அக்கிரம ஆபாசங்களை அம்பலப் படுத்தி இருந்தனர். எனவே, காந்தியார் காசி செல்லும்போதே, அவர் ஓரளவு, அக்கிரமம் அங்கு இருக்கக்கூடும் என்று எதிர்பார்த்துத் தான் சென்றார்.

ஆனால் அவர் கூறுவதுபோல, அவர் அங்கு கண்டது, எதிர்பார்த்ததைவிடப் பன்மடங்கு அதிகமாக இருந்தது.

மகன், சுயமரியாதை இயக்கம், காசி, இராமேஸ்வரம் போவது, காவடி தூக்குவது, வீதியில் புரள்வது போன்றவைகள், காட்டுமிராண்டித்தனம் என்று ஊருக்குக் கூறுகிறான். நான் மட்டும், அவன் பேச்சைத் துச்சமென்று கருதலாமா? அதனால் தான், காசி போகிறேன் என்று காமாட்சி சொன்னபோது, ஆசையை அடக்கிக் கொண்டு, போய்வாடி அம்மா! என்று சொல்லி அனுப்பினேன். அவள் கொடுத்து வைத்தவள், காசி க்ஷேத்திரம் செல்கிறாள்; நமக்குத்தான் அந்தப் பாக்கியம் இல்லையே, என்று தம்பி! வீட்டிலே பாட்டியோ அத்தையோ, பெரியம்மாவோ பிறரோ, மனச்சங்கடத்தோடு இருப்பார் களானால், அவர்களை ஒருமுறை, காசியைக் காணச் சொல்லு - இங்கு இருந்தபடியே - காந்தியார் கண்ட காசியை - அவர் சுயசரிதையில் சித்தரிக்கப்பட்டுள்ள காசியை.

காந்தியார் அழைக்கிறார், காசியைக் காண!

"குறுகலான வழுக்கும் ஒரு சந்தின் வழியாகவே கோயிலுக்குப் போகவேண்டியிருந்தது.

அங்கோ அமைதி என்பதே இல்லை.

ஈக்கள் ஏகமாக மொய்த்தன.

கடைக்காரர்களும் யாத்திரிகர்களும் போட்ட சப்தம் சகிக்கமுடியாததாக இருந்தது.

நான் கோயிலுக்குள்ளே போனதும், வாசலில் அழுகி நாற்றமெடுத்த பூக்குவியலே எனக்கு வரவேற்பளித்தது.

உயர்ந்த சலவைக் கற்களாலான தரை; ஆனால், அழகு உணர்ச்சியே இல்லாத ஒரு பக்தர், சலவைக் கற்களை ஆங்காங்கே உடைத்து அவற்றில் ரூபாய் நாணயங்களைப் பதித்துவிட்டார். அந்த ரூபாய்கள் அழுக்குச் சேர்வதற்குச் சிறந்த இடங்கள் ஆகிவிட்டன.

ஞானவாவி (ஞானக்கிணறு) பக்கத்தில் போனேன். அங்கே கடவுளைக் காணலாம் என்று தேடினேன்.

ஆனால் நான் காணவில்லை. ஆகையால், எனக்கு மனநிலை நன்றாக இல்லை. ஞான வாவியைச் சுற்றிலும்கூட ஆபாசமாகவே இருப்பதைக் கண்டேன். தட்சணை கொடுக்கவே எனக்கு விருப்பமில்லை. ஆகையால், ஒரு தம்படி கொடுத்தேன்.

அங்கே இருந்த பண்டாவுக்குக் கோபம் வந்து, அந்தத் தம்படியை வீசி எறிந்துவிட்டார்.

"இந்த அவமரியாதை உன்னை நேரே நரகத்திற்குத்தான் கொண்டுபோகும்'' என்று கூறி என்னைச் சபித்தார்.

கவனித்தனையா, தம்பி! நாம் பகுத்தறிவாளர் என்பதனால், பதறிப், பழமையாளர் நம்மீது பாய்கின்றனர், தூற்றுகின்றனர் என்பதைப் பார்க்கும்பொழுது, நம்மிலே துடிப்புள்ளவர்கள் மெத்தக் கோபப்படுகிறார்களல்லவா!

பிரம்மத் துவேஷி!
வேத நிந்தகன்!
நாஸ்திகன்!
நாக்கு அழுகிவிடும்!
ரௌரவாதி நரகம் போவாய்!
கசடன்!
அசடன்!
அற்பாயுசு!

தம்பி! இவை தமிழகத்திலே, இப்பொழுது, சுற்றுமுற்றும் பார்த்துவிட்டுத், துணிவை வரவழைத்துக்கொண்டு, பட்டி தொட்டிகளிலே, குளத்துப் படிக்கட்டுகளிலே, காது கேளாதவன், கண் அவிந்தவன், கதியற்றவன் கிலி கொண்டவன், ஆகியவர்களுக்கு மட்டும் கேட்கும்படி சொல்லப்படும், வார்த்தைகளாகிவிட்டன.

உரத்த குரலில், கோபத்துடன், இந்த வார்த்தைகளை நாடக மேடையில் மட்டுமே கூறிடக் கேட்கலாம்; நாட்டிலே இவை இப்போது நடமாட விடப்படுவதில்லை.

நமது தம்பிகளிலே, பதினைந்து வயதுக்குள் இருப்பவர் களுக்கு இந்த வார்த்தைகள், பொருள் விளங்கா ஓசைகளாகி விட்டன!

ஆனால், தம்பி! என் போன்றோர் இளைஞர்களாக, பள்ளி மாணவர்களாக இருந்தபோது, இந்தச் "சாபம்' நித்த நித்தம் நாடெங்கணும், எவர் செவியிலும் வீழ்ந்து கொண்டிருந்த சங்கீதமாக இருந்தது.

ஐயோ! சாபம் கொடுத்துவிடப் போகிறார் - என்று பாட்டனார் பதறுவார், பாட்டி, பாதம் வீழ்ந்து வணங்குவாள் - அவ்வளவு பயம் பிய்த்துத் தின்னும்.

கட்டுக்காவலை மதியாமல், குலதர்மத்தைக் கவனிக்காமல், மதத்தை அழித்திடும் போக்கிலே, பேசுவோர், செயலில் ஈடுபடுவோர், ஆகியோருக்கு, பூசுரர், அவர்கள் பூஜை செய்வோ ராயினும், பூட்ஸ் அணிந்து பரங்கியனுக்குப் பணிவிடை செய்வோனாயினும், இடும் சாபம்!

அப்படியா சபித்தனர் என்று, இப்போது தம்பிமார்கள், கேட்டுத் துடிக்கின்றனர்.

அப்போதேகூடச் சிறிது கோபமுள்ளவர்கள், எதிர்த்தனர் - தாக்கினர் - பெரும்பாலும் சொல்லால்.

ஆனால், அப்படிச் "சாபம்' பெற்றவர்களில், மதத்திலே அசைக்க முடியாத நம்பிக்கை வைத்து, இராம நாமத்தைப் பூஜித்துக்கொண்டிருந்த, காந்தியாரும் ஒருவர் என்பதை அறியும்போது, வேதனையினூடே சிரிப்பல்லவா வருகிறது.

தட்சணை கொடுத்தார், ஒரு தம்படி!

இது, ஆயிரத்தெட்டு இழிமொழி வீசுவதைக் காட்டிலும், கொடுமையானதாகக், கேவலமானதாகத்தானே தோன்றும் - பண்டாவுக்கு - பூஜாரிக்கு!

இகபரசுகம் இரண்டுக்கும் வழி அருளும் விசுவநாதர் ஆலயம்! காசி க்ஷேத்திரம்! அங்கு, பக்தருக்கும் பரமனுக்கும் இடையிலே, வேதாகமம் தந்த உரிமையின்படி நிற்கிறார், பண்டா! இந்தப் பொல்லாத காந்தியார், ஒரு தம்படியா கொடுப்பது தட்சணை!

பவுன் கொடுத்தனர் - வெள்ளி நாணயம் கொடுத்தனர் - பாதம் தொட்டுக் கும்பிட்டுவிட்டு - பக்தர்கள். இவர், ஒரு தம்படி தருகிறார்!

ஆலயத்திலே அமர்ந்துள்ள தேவனிடம், பக்தன் வந்திருக் கிறான்! அவன் பாபம் போக்கு! புண்ணியம் கிடைத்திடச் செய்! - என்று மன்றாடப் போகிறான் - அதற்கான "மாதவம்' செய்து பண்டாவானான். அவனுக்கு, ஆலயத்தில், பல பக்தர்கள் முன்னிலையில், காந்தியார், தட்சணை தரப் பணம் இல்லை என்று கூடச் சொல்லி விட்டிருக்கலாம் - ஒரு தம்படியா தருவது, தட்சணையாக!

காலமெல்லாம், பண்டாவின் செல்வாக்கைப் பார்த்துப் பார்த்து ஆச்சரியத்தால், அசைவற்று நிற்கும், விசுவநாதர்கூட அல்லவா, ஒரு தம்படி தட்சணை தரப்படுவது கண்டு, விலா நோகச் சிரிப்பார்!

சபித்தார், பண்டா! "நேரே நரகம்தான் போவாய்' - என்று. என்ன செய்தார், காந்தியார்?

இதைக் கேட்டு நான் பரபரப்பு அடைந்துவிடவில்லை. "மகாராஜ்! என் விதி எப்படியானாலும் சரி, ஆனால், இப்படி யெல்லாம் பேசுவது உங்களைப் போன்றதோர் வகுப்பினருக்குத் தகாது. விருப்பமிருந்தால் அந்தத் தம்படியை எடுத்துக் கொள்ளுங்கள். இல்லாவிட்டால், அதையும் நீங்கள் இழந்து விடுவீர்கள்' என்றேன்.

எப்படி, காந்தியாருடைய நெஞ்சழுத்தம் என்று கூற அல்ல, இதை எடுத்துக்காட்டுவது, காந்தியாருடைய சொல்லிலே தொக்கி நிற்கும், நகைச்சுவை இருக்கிறதே அதைக்காட்ட இதைக் கூறினேன்.

தம்பி! கவனித்தாயா? கொடுத்தது தம்படி! பண்டாவுக்கு! ஆனால், பண்டாவைக் கூப்பிடுவதோ, மகராஜ்! - கவனித்தாயா.

திகைத்துப் போயிருக்கவேண்டும், காசிவாசி.

"போய்த்தொலை. உன் தம்படி எனக்கு வேண்டாம்'' என்றார், தொடர்ந்து வசைமாரி பொழிந்தார்!

சரி! பண்டா, வசைமாரி பொழியட்டும் என்று கவலையற்றுக் காந்தியார், தம் வழி நடந்தாரா? அல்லது நின்று, பண்டாவைப் பார்த்து, அளவுக்கு மீறிப் பேசாதே! அவதியைக் கூவி அழைக்காதே! என்று எச்சரித்தாரா? என்ன செய்தார்? அவரே, கூறக் கேள், தம்பி! சுவை காண்பாய்.

"தரையில் கிடந்த தம்படியை எடுத்துக் கொண்டு நான் நடக்க ஆரம்பித்தேன்.

""பிராமணர் ஒரு தம்படியை இழந்தார்.

"எனக்கு ஒரு தம்படி மிச்சம் என்று என்னைப் பாராட்டிக் கொண்டேன்.

ஆனால் மகராஜ் அந்தத் தம்படியையும் விட்டுவிடக் கூடியவர் அல்ல.

என்னைத் திரும்பக் கூப்பிட்டார்.

அது சரி, அந்தத் தம்படியை இங்கே கொடுத்து விட்டுப்போ!

உன் தம்படியை வாங்கிக் கொள்ள நான் மறுத்துவிட்டால், அது உனக்குத் கெடுதல் ஆகிவிடும் என்றார்.

நான் ஒன்றும் சொல்லாமல், அந்தத் தம்படியை அவரிடம் கொடுத்தேன்.

அப்புறம் ஒரு முறை பெருமூச்சுவிட்டுக் கொண்டு அப்பால் போய்விட்டேன்.''

தம்பி! இதைக் கருணாநிதி கதைவடிவாக்கினால், நமது காங்கிரஸ் நண்பர்கள், சீறி விழுவார்கள். கதையாம் கதை! இப்படியா ஒரு சம்பவம் நடக்கும்! அற்பத்தனத்தை அச்சாணியாக வைத்து ஒரு அபத்தக் கதை எழுதிவிடுவதா! இதுதான், தமிழ் வளர்க்கும் வழியா? இதுதான் கலையா? தூ! தூ! சே! சே! என்றெல்லாம் ஏசுவர்.

ஆனால், இது, காந்தியாரின் சுய சரிதையின் இருக்கிறது.

கொடுத்தது தம்படி! கிடைத்தது சாபம்! அந்த தம்படியும் இல்லை என்ற நிலை! உடனே, அதையாவது கொடு என்ற பவதி பிக்ஷாந்தேஹி நிலை!

ஒவ்வொரு மாலையும், காந்தியார் இராமநாமப் பஜனை மட்டும் செய்யாதிருந்திருப்பாரானால், இந்த ஒரு செயலுக்காக மட்டுமே, அவரை, "ஈரோடு' ஆக்கிவிட்டிருப்பார்கள் வைதிகர்கள்.

ஐந்து கால் பசு, இருப்பதைக் காணீர்! என்று காந்தி யாரையே நம்ப வைத்த புரட்டர்களுக்கு முதலிடமாகத் திருத்தலங்கள் உள்ளன என்பது, தெரிந்துதான், பகுத்தறி வாளர்கள், அந்த இடங்களுக்குச் சென்று வருவது நேரக்கேடு, அறிவுக்கேடு என்று கருதுகின்றனர். மெள்ள மெள்ளப் பாமரர் கூடப் புரட்டுகளை வெறுக்கவும், மதத்தைக் காட்டி ஏய்ப்போரின் ஆதிக்கத்தை எதிர்க்கவும் துணிவுபெற்று வருகின்றனர். இந்த நேரத்திலே பாபு இராஜேந்திர பிரசாத் திருத்தல யாத்தைரை ஏற்பது பிற்போக்காளர்களுக்கு ஒரு புதிய வாய்ப்பாகிவிடுமே என்பதுதான், நம் போன்றாருக்கு உள்ள கவலை. அதனால்தான் திருத்தலங்களிலே காந்தியார் கண்டதைக் குறித்தும், கொள்கை கருத்துப்பற்றியும் எழுதினேன்.

நேருப் பண்டிதர், வேறோர் வகையான திருத்தலம் சென்று வந்திருக்கிறார். அது குறித்துப் பிறகு எழுதுகிறேன்.

அண்ணன்,

16-10-60