அறிஞர் அண்ணாவின் கடிதங்கள்


அம்பும் ஏணியும்
1

சோவியத் நாட்டில் மேயர் -
திராவிட நாட்டு விடுதலை -
மாணவ முன்னேற்றக் கழகச் சொற்பொழிவாளர்கள்

தம்பி!

மேயர் முனுசாமி அவர்கள் எழுதிய கடிதம் குறித்துப் பொதுக்கூட்டமொன்றிலே பேசினீர்களே, மேற்கொண்டு விவரம் தரவில்லயே என்று கேட்டிருக்கிறாய். தருகிறேன்.

கீவ்நகரிலுள்ள உக்ரெயின் எனும் விடுதியிலிருந்து, கடிதம் எழுதியிருக்கிறார் மேயர். 16-5-61 மாலை லெனின் கிராடு நகர் சென்றாராம்; விமான நிலையத்தில் நகர சோவியத் பிரதிநிதிகள் - அதிகாரிகள் - வரமேற்று, நகர சோவியத்தின் பிரதிநிதியாக ஏற்று, எல்லா வசதிகளையும் செய்தனர் என்று குறிப்பிட்டுள்ளார்.

"நகரத்தின் சிறப்பிற்குரிய பல இடங்களைச் சென்று பார்த்தேன். யுத்தத்தினால் நாசமடைந்த நகரம், இவ்வளவு குறுகிய காலத்தில் மாற்றியமைத்து இருப்பது பெருமைக்குரிய விஷயம்'' - என்று கடிதத்திலே மேயர் தெரிவித்திருக்கிறார்.

மற்றப்படி, நமது விடுதலை இயக்கம் குறித்துத் தகவல் அறிய விரும்புவோர்களிடம் உரையாடும் வாய்ப்பும், மேயருக்குக் கிடைத்திருக்கிறது.

திராவிட முன்னேற்றக் கழகத்தவர், சென்னை மாநக ராட்சியின் முதல்வராகி, சோவியத் சென்று உலாவருவதும், பல தலைவர்களுடன் உரையாடுவதும், நமக்கெல்லாம் மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது. ஆமாம்! இங்கு நம்முடன் இருந்தவர் களிலே சிலர், "திராவிடம்' என்று கூறுவது தங்கள் "எதிர்காலத்தை'த் தீய்த்துவிடும் என்று எண்ணம்கொண்டு ஏதேதோ பேசிக்கொண்டிருக்கும் நேரத்தில், திராவிட நாடு பற்றியும் திராவிட முன்னேற்றக் கழகம் குறித்தும் அந்தக் கழகத்தின் துணையினால், "மேயர்' எனும் நிலைபெற்ற ஒருவர், சோவியத்திலே எடுத்துரைப்பதறிந்து நமது நெஞ்சம் நெக்குருகத்தான் செய்யும்.

மேயரவர்கள், தமக்கு இத்தகைய நிலை கிடைத்தது, திராவிட முன்னேற்றக் கழகத்தினால்தான் என்பதையும், நன்றியறிதலுடன், குறிப்பிட்டுள்ளார்.

"உன்னாலா, நான் உயர்ந்தேன்?'' - என்று கேட்டிடும் உயர்ந்த பண்பினரையும் பார்க்கிறோம் - ஏற்றம் பெறுவதற்குக் காரணமாக இருந்த கழகத்துக்கு நன்றி காட்டத் தவறாமல், நன்றி மறக்கவில்லை என்று கூறிடும் மேயரையும் காண்கின்றோம். உலகம் பலவிதம்!!

பொதுவாக "இந்தியா'பற்றி, சோவியத் மக்கள் தெரிந்து கொண்டிருக்கும் அளவுக்கு, "திராவிடம்' குறித்து அறிந்து கொண்டில்லை - நான் கூறுவதை ஆவலாகக் கேட்கிறார்கள் என்று மேயர் தெரிவித்திருக்கிறார்.

உண்மைதான்! இந்தப் பதினான்காண்டு காங்கிரசாட்சி, "இந்தியா - இந்தியர்' - "இந்தியப் பேரரசு' - எனும் கருத்துகளை உலகிலே, பரப்பியிருக்கிறது - திட்டமிட்டு, பெரும்பொருள் செலவிட்டு. அதுமட்டுமல்ல, "திராவிட நாடு' என்பதுபற்றிய விவரத்தை, மற்றவர்கள் உலகுக்குத் தெரிவிக்கும் வாய்ப்பினைப் பெறுவதும் எளிதல் நடைபெறக்கூடியதல்ல. எனவே, சோவியத்திலே, திராவிட நாடுபற்றி அதிகம் தெரிந்திருக்கவில்லை என்பதிலே, வியப்பில்லை.

திராவிடத்திலேயே திராவிடத்தைப்பற்றித் தெரிந்து கொள்ளாமலிருக்கிறார்கள் - இன்னமும் - சில பலர். இஃதன்றோ வியப்பு!

அதனினும் வியப்பு, திராவிடம் என்றால் என்ன தெரியுமா என்று விளக்கம் அளித்து வந்தவர்களிலேயே சிலர், திருப்பி நம்மைக் கேட்கிறார்கள், திராவிடம் என்றால் என்ன? அதன் எல்லை யாது என்றெல்லாம், அதுதான்!!

திராவிடம் என்பதற்கு விளக்கம் இல்லை - எல்லை இல்லை - அதிலே உண்மையும் இல்லை - என்று முன்பு கூறிய பலரைச் சாடிய நாவினர், இன்று தமது "திறமையை' திராவிடம் என்றொன்று இல்லை என்று பேசுவதற்குப் பயன்படுத்துவது, விந்தையினும் விந்தை!!

திராவிட நாடு என்பது கைகூட முடியாது ஒன்று என்று முன்பு ஆளும் கட்சியினரும் வேறு இலட்சியம் கொண்டோரும் கூறியபோது, அளித்த மறுப்புரைகள் - தெளிவுரைகள் - விளக்க உரைகள் - முழக்கங்கள் - யாவும் வெறும் ஓசையோ!! அங்ஙனம் கூறிக்கொள்ள, அவர்கட்கே வெட்கமாக இருக்குமன்றோ!

திராவிடம் என்பதற்கு விளக்கமும், அது கைகூடத்தக்கது தான் என்பதற்கு ஆதாரமும் தரச்சொல்லி, முன்பு சிலபலர் கேட்ட காலை, அள்ளித்தந்த, வாரிவீசிய, எடுத்துரைத்தவைகள் அத்தனையும் சொத்தையோ! மெத்தக் கஷ்டப்பட்டு, இத்தனை ஆண்டுகளும், "சொத்தை'களையா, இவர்கள், பேசி வந்தனர்! என்ன பரிதாபம்! என்ன பரிதாபம்!!

அல்லது, அவை இன்று சொத்தை - அன்று அல்ல!! - என்பது வாதமோ!!

எமக்கு அப்போதும் உள்ளூரத் தெரியும், திராவிடம் என்பது அபத்தம் என்று - என்றாலும், கூறிக்கொண்டிருந்தோம் - இப்போது எமது மனம் இடம் தரவில்லை - எனவே உண்மையை உரைத்திடும் உறுதியையும் ஆற்றல்மிகு அஞ்சாமையையும் துணைக்கழைத்துக்கொண்டு, இப்போது பேசுகிறோம் என்றுரைக்கின்றனர்.

இதுகேட்டு, மனமகிழ்ச்சியை வெளியிடும் தாள்களும், காங்கிரசாரும், உள்ளூர என்ன எண்ணிக் கொள்வார்கள்? என்னே அறிவின் மேம்பாடு! எத்துணை சிறப்புமிக்க ஆராய்ச்சித் திறன்! அஞ்சாநெஞ்சின் அருமைதான் என்னே! திராவிடம் என்பது கற்பனை என்று கண்டறிந்து, காரணம் பல தேடிப் பெற்றுத், துணிவுடன் பேசுகின்றனரே தூயவர்கள், என்றா வியந்து பாராட்டுவர்? இல்லையே! இயலாதே! முறையுமாகாதே! மூச்சைப் பிடித்துக்கொண்டு, முரசுபோல் ஒலிக்கவேண்டும், வெண்கலநாதம் கிளம்பவேண்டும், மாற்றார் மருளத்தக்க இடியொலி எழவேண்டும் என்ற நினைப்புடன், நரம்புகள் புடைத்திட, இரத்தம் சூடேறிட, திராவிடம் ! திராவிடம்! என்று இவர்கள் பேசியபோது, எவ்வளவு பக்குவமாக, கனிவுடன், தெளிவளிக்கும் முறையில், திராவிடம் என்பது கற்பனை என்று கூறினோம் - அதற்காகப் பல ஆதாரங்களைக் காட்டினோம் - அத்தனையையும், தூக்கி எறிந்துவிட்டு, துச்சமென்போம் உமது இச்சகப் பேச்சை! தூள் தூளாக்குவோம் உமது வாதத் தொகுப்பை! - என்றெல்லாம் பேசி, நமை இழிமொழி பலகூறி ஏசி, நின்றவர்கள், தெளிவுபெற, அறிவு பெற, இத்தனை ஆண்டுகள் ஆயின! இப்போதல்லவா, நாம் அப்போது கூறியவற்றை, இவர்கள் கூறுகின்றனர். அதிலும், ஏதோ, இவர்கள் கஷ்டப்பட்டு, ஐயந்திரிபற நூற்களைப் படித்து, உட்பொருள் விளங்கத்தக்க முறையில் ஆராய்ச்சிகள் நடாத்தி, புதிய பொலிவும் வலிவும் மிக்க உண்மைகளைக் கண்டறிந்து, முதன்முறையாக எடுத்துக் கூறிடுவதுபோலப் பேசுகிறார்களே - நாம் கொடுத்த அடியால் சுருண்டு கீழே விழுந்தவர்கள், மீசையில் மண் ஒட்டவில்லை என்று பேசும் முறையில், இவர்களே, திராவிடம் கற்பனை என்பதின் "கண்டுபிடிப்பாளர்'போலக் கோலம் காட்டிக் குரலெழுப்பி வருகிறார்களே! நாம் கொடுத்ததைக் கொண்டார்கள்! கொண்டதைக் கொட்டு கிறார்கள்! இதிலே ஒரு "கித்தாப்பும்' தேடுகிறார்களே - என்றுதான் எள்ளி நகையாடுவார்களேயன்றி, போற்றவா செய்வார்கள்?

பழைய சோறு! பழைய சோறு! சுடச்சுடப் பழைய சோறு! பானை அறுவது காசு! கலயம் இருவது காசு! கையளவு ஐந்தே காசு! - என்று கூவி விற்பவனை என்னென்பர்? குறைமதியோ குறும்போ என்பர்!!

திராவிட நாடுபற்றி வாதாடிப் போராடி வந்தவர்கள், திராவிட நாடு கற்பனை என்றுரைக்கக் காட்டும் காரணம் சுடச்சுடப் பழைய சோறு என்பதன்றி, வேறென்னவாக இருக்க முடியும்?

உனது திருநாடதனை விடுவிக்க எழுக! இன்றே!

உலகிலே பான்மைகெட்டு உழலுவது அழகல்லவே!

கொத்தடிமை செய்யாது கொடிகட்டி வாழ்ந்தார்கள் உனது முன்னோர்! குவலயத்தார் பெருமை தந்தார் அதனைக் கண்டு!

ஆண்ட இனம் நாமல்லவோ? அச்சம் ஏனோ? ஆருயிரை இழப்பதேனும், அருமைமிகு திருவிடத்தை அமைப்போம்; காப்போம்!

அகிலொடு சந்தனமிகு அடல்கொண்ட மலைநாட!

ஆழ்கடலின் முத்தெடுத்து அகிலத்துக்கனுப்பியோனே!

நாமணக்கும் பாமலிந்த நாட்டின் நல்லோய்!

பூமணக்கும் பொழில் சூழ்ந்த பொன்னி நாட

புகழ்மணக்கப் பெற்றிடுவோம் புதுமை வாழ்வு!

புறப்படுவாய்! போரிடுவாய்! வெல்வாய்!

தம்பி, நமது கழகம் எழுப்பிய இந்தப் பண் கேட்டுப் பல இலட்சக்கணக்கானோர் புனிதப் பயணத்தில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டுள்ளனர். குழவியின் மழலையும், யாழின் இனிமையும், பொருளின் மயக்கமும், வாழ்வின் சுவையும் அந்தத் தூயவர்களின் பணியினை மாய்த்திட இயலவில்லை. காற்றினிலே கலந்ததோர் இசையைக் கேட்டுக் களிப்புற்று மெய்மறந்து கிளம்பும் திசை நோக்கிச் செல்வார்போலே, இன்பத்திராவிடம் காண நடக்கின்றார், வீரரெல்லாம். அவர் தமக்கு துந்துபியாய், சங்கொலியாய், இருந்தபேர்கள், இன்று, வேறு ஒலி எழுப்பி நின்றால், கைகொட்டிச் சிரிப்பதன்றி, கடமையையும் மறப்பாரோ கழகத் தோழர்!!

அன்று நீர் ஆற்றிய உரைகளெல்லாம், மறந்தீரோ? மறப்போமோ? மறத்தல் நன்றோ! - என்று கேட்டிடும் தோழர்க்கு, இழிமொழியும் பழியும்தானோ, இவர்கள் தரும் பதிலுரை!

உதட்டோசை! உள்ளத்தின் இசை அஃதல்ல! திராவிடம் திராவிடமென்று பேசி நின்றோம்! - உள்ளத்தில் அதனை நாங்கள் கொண்டோமில்லை!! - என்று கூறிடும் விந்தை மனிதரை, எந்த நாட்டிலும், மதித்தவர் இல்லை!

"உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும்' என்பது உத்தமரின் வாக்காகும். உத்தமரின் அந்த மொழி பொய்த்திடாது.

அன்று நாம் பேசியது அத்தனையும் பொய்யேயன்றி, அணுவளவும் உண்மையில்லை! அறிவிக்கின்றோம்!! - என்று இன்று அறைகின்றார், மாறியோர்கள்! நன்று! நன்று!! ஆனால் ஒன்று! இன்று மட்டும் உள்ளத்தில் ஒன்றும் உதட்டில் வேறொன்றும் இல்லை என்று எதைக்கொண்டு நம்புவதோ?

இடித்துப் பேசும் முறை கேட்டா?

தடித்த சொற்கள் வீசக் கண்டா?

வடித்தெடுத்த பொய்யுரையும் விலையாகும் என்று வாணிபம் நடாத்திடும் திறமை கண்டா?

எதைக்கொண்டு நம்புவது, இன்று இவர் பேசுவதே, உள்ளத்துள் உள்ளது என்று?

பல்லாண்டாக, உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசி வந்தோம்; பெரும் பிழையே, பொறுத்திடுவீர் என்று பேசும் பெரியோர்கள், இன்னும் ஓர் ஈராண்டு சென்ற பின்னர், இன்று கூறிடுவது அனைத்தும் தவறய்யா தவறு! மனமருளின் விளைவு! மாச்சரியம் பெற்றெடுத்த நச்சரவு! என்றுரைக்க மாட்டார்கள் என்பதற்கு உறுதி யாதோ? எவரே இவருரையில் உறைவது உண்மை என்று கூறவல்லார்! இவர்தான், உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசிடும் விந்தைதனில் வித்தகராய் இருக்கின்றாரே!

பிடிபட்ட கள்வனிடம் பெரும் பொருளை ஒப்படைப்பார் தாமுமுண்டோ? பேதையரோ, மக்கள் தாமும்! பெரும் பிழைகள் பொறுத்திடுவார் எனினும், ஒன்று, உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசிடுவார் உறவுகொள்ளமாட்டார்! உண்மையிது! உணர்வார் திண்ணம்!!

திராவிட நாடு எனும் திட்டத்தை, எதிர்த்திட, மறுத்திட, காரணம் தேடி அலுத்து, கிடைக்காததால், காங்கிரஸ் கட்சியினர், கைபிசைந்து, கண் கசக்கி ஓய்ந்து உட்கார்ந்துவிட்டதுபோலவும், திராவிட நாடு எனும் திட்டத்தை எதிர்த்திட, தக்க காரணங்களை நூலகமெல்லாம் சென்று கற்று, நுண்ணறிவால் உணர்ந்து, நாத்திறனால் நவில்வார்போல, மாறியோர் இன்று பேசுவது, உள்ளபடி விந்தையினும் விந்தையன்றோ!

அதனினும் விந்தையன்றோ, அவர் பேசும் உரையினாலே அழித்திடும் திராவிடம் என்று, அதே உரையினை ஆண்டு பல பேசிப் பார்த்தும், பலன் காணமுடியாத காங்கிரசார் கொண்டிடும் எண்ணம்!

புட்டுப்புட்டுச் சொன்ன பிறகு, ஒரு முறைக்குப் பலமுறை சொன்னபிறகே, மந்தமதி படைத்த, என் மாணவனுக்கு, பாடம் தெரிந்தது என்று ஆசிரியர் கூறலாம் - பெருமிதத்துடன் - உரிமையுடன்.

நன் மாணவனாக இருப்பின், ஆமய்யா, ஆம்! ஆசிரியர் சொன்னபோது, எனக்குப் புரியவுமில்லை! பிடிக்கவுமில்லை! ஆனால், விடாமல் அவர் பக்குவமாகப் பாடம் போதித்தார் - பிறகே எனக்குப் புரிந்தது! என் ஆசிரியரின் அருந்திறனால், நான் பாடம் பெற்றேன் என்று மகிழ்ந்துகூறி, ஆசிரியருக்கு நன்றி தெரிவிப்பது முறை.

ஆசிரியர், தெளிவுபெற்ற, அறிவுபெற்ற மாணவனை, தன் திறமையின் விளைவு என்று ஊருக்கு, உலகுக்குக் காட்டுவது இயற்கை.

திருந்திய மாணவனுக்கு, மேலும் உற்சாகமூட்ட எண்ணிடும் இயல்பினராக ஆசிரியர் இருப்பரேல், திருந்திய மாணவரைச் சட்டாம்பிள்ளையாக்கிடக்கூடும்!

ஆனால், பல ஆண்டுகள் மிகுந்த கஷ்டப்பட்டுப் பலமுறை பக்குவமாகப் பாடம் போதித்துப் போதித்து, பாடத்தைப் புரிந்துகொள்ளும் நிலையை ஒரு மாணவனுக்கு ஓர் ஆசிரியர் ஏற்படுத்தியானபிறகு, நன்றி காட்டுவதற்குப் பதிலாக, பெருமை அளிப்பதற்குப் பதிலாக, அதே மாணவர், தான் ஆசிரியரிட மிருந்து கற்ற அதே பாடத்தை, ஆசிரியரையே தன் மாணவர் என்று கருதிக்கொள்ளும் மமதை மிகுந்த நிலையில், அவருக்கும் சேர்த்துத் தருகிறேன். புதிய பாடம் என்று, வகுப்பறையில் பேசுதல்போலன்றோ இருக்கிறது, மாறினோர் நீண்டகாலமாகவே திராவிடத்தை எதிர்த்துவந்த காங்கிரசாருக்கும் சேர்த்து, "திராவிடம் தீது! பலிக்காது!'' - என்று பாடம் புகட்டுவது!!

மாறினோர், திராவிட நாடு இலட்சியத்தைத் தாக்கிப் பேசுவதற்குக் காங்கிரஸ் கட்சி மேடைகளும் ஏடுகளும் இன்று அளிக்கும் வரவேற்பு கண்டு, ஆசிரியரை மாணவராக்கிக் கொண்ட (பலகாலும் கேட்ட பிறகே பக்குவம் பெற்ற) மாணவன் போன்ற நிலைகொண்டு நடமாடுகின்றனர் மாறினோர். உண்மை என்னவென்றால், "தம் சரக்கைக் கூவி விற்கும் தரமான ஏஜெண்டு கிடைத்துவிட்டார் - அவருக்கு இனிப்பளிக்கத் தந்திடுவோம் விளம்பரம் என்று, காங்கிரசார் எண்ணு கின்றார்!' எவரே இதனை அறியார்!! மாறினோர், திராவிடம் என்பது கற்பனை என்பதுபற்றிப் பேசவேண்டியதனைப் பேசி, முன்னாள் தோழர்கள்மீது பகை கக்கி, பழிசுமத்தி, இழிவு வீசிடும் கட்டம் முடியுமட்டும், புன்னகை பூத்த முகத்தினராய் இருப்பர், காங்கிரசார்! பிறகோர் நாள், கேட்பர்; "என்னப்பா! இன்று நீ, சொல்வதெல்லாம், முன்பு நாங்கள் சொன்னதே என்பதை, நாடு அறியுமப்பா!!'' என்று. அன்று, அவர்கள் சிரிப்பார்! இவர்கள் சிந்திப்பர்!

சோப்பு விளம்பரக் கடையிலே, சொகுசான சுந்தரியின் படத்தை எடுப்பாகத் தொங்கவிட்டிருப்பது எதற்காக? அந்த ஆரணங்கின் அழகுக்கு மதிப்பளித்தா? அல்ல அல்ல! அந்தப் பாவை, தமது சரக்கு மிக நல்லதென்று கூறுவது காரணம்!!

அஃதேபோல, திராவிடத்தைத் தாக்குவோர் எவரேனும், அவரைத் தூக்கிவிடல், காங்கிரசுக்கு, தன் காரியத்தைச் சாதித்துக் கொள்ளும், வேலை முறையிலே ஒன்று.

தம்பி! கூண்டிலே நிறுத்தப்பட்டு, பாகிஸ்தானுடன் கூடி, இந்தியாவுக்கு எதிராகச் சதிசெய்ய முனைந்தார் என்று குற்றம் சாட்டப்பட்டுக் குமுறிக்கிடக்கும், ஷேக் அப்துல்லாவைத் தெரியுமல்லவா? ஷேரே காஷ்மீர் ஜிந்தாபாத் - காஷ்மீரப்புலி வாழ்க - என்று, காங்கிரஸ் முகாமே முன்பு முழக்கமிட்டது! பாகிஸ்தானைக் கண்டிக்க, ஜனாப் ஜின்னாவைத் தாக்க, பிரிவினைச் சக்திகளை ஒடுக்க ஷேக் அப்துல்லா தேவைப் பட்டார்! எந்தக் காங்கிரஸ் மாநாட்டிலும் காஷ்மீரத்துத் தீரரைக் காணலாம்! அந்த வீரரின் முழக்கத்தைக் கேட்கலாம்! நேரு பெருமானின் பக்கத்திலேயேதான், ஷேக் அப்துல்லா அமருவார்! நேருவின் படத்தை வெளியிடும் அளவிலும், முறையிலும், ஷேக் அப்துல்லாவின் படத்தை இதழ்கள் வெளியிட்டன! இன்று? கூண்டில் குற்றவாளியாக!! தீர்ப்பு என்னவோ என்ற நிலையில்!! ஏன் எமக்கு அம்பு! என்று காங்கிரஸ் கட்சி - எனக்கு ஏணி என்று ஷேக் அப்துல்லா, - ஒருவர்பற்றி மற்றவர் போட்ட கணக்கின் விளைவு!

காங்கிரஸ் கட்சியிலும் பரிபூரண சரணாகதி அடைந்தா லொழியத் தூக்கிலிடுகிறார்களே என்று எண்ணி மகிழ்ச்சி கொள்கின்றவர்களைச் சமயம் பார்த்து, அவர்கள் துளி ஏறுமாறாகப் போவார்கள் என்று தெரிந்ததும், தூக்கி எறிந்துவிடக் காங்கிரஸ் தயங்காது - காங்கிரசுக்கு அதிலே பழக்கமும் உண்டு - திறமையும் மிகுதி.

அந்த ஆபத்து ஏற்படாமலிருக்க வேண்டுமானால், ஒரே அடியாகக் காங்கிரசின் அடிபணிந்தாக வேண்டும்.

தேசிய "பாரம்பரியம்' மறவேன் என்கிறார் ம. பொ. சி.

இன்று பெரிய இடத்தில் அமர்ந்துவிட்ட காங்கிரஸ் தலைவர்கள் சிலரைவிடச் சிறைக் கொடுமையை அதிக அளவு ஏற்றுக்கொண்டவர், ம. பொ. சி.